Advertisement

அத்தியாயம் 32

ரேயனின் பையிலிருந்து விழுந்த ஆருவின் புகைப்படத்தை பார்த்தப்பின் கௌதம் மற்றும் சித்து வெகுவாய் குழம்பி இருந்தனர். புகைப்படம் விழுந்ததை கவனிக்காது ரேயனும் கிஷோரும் சென்றுவிட, அப்புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தான் கௌதம்.

ஏ.ஆர். குரூப்ஸின் வாகனம் நிறுத்துமிடத்தில் தங்கள் பைக்கின் பக்கவாட்டில் சாய்ந்தபடி சித்து நிற்க, அதன் மேல் அமர்ந்திருந்தான் கெளதம்.
சித்து “டேய் என்னடா படத்துல காட்டுற மாதிரி ஆகிடுச்சு… அப்போ நீ சொன்ன மாதிரி அவங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் முன்னாடியே தெரிஞ்சிருக்குடா” என்று உச்சபட்ச்ச அதிர்ச்சியில் கூற,
கெளதம் “தெரிஞ்சிருக்கு மட்டும் இல்ல, ஒன்னா இருந்திருக்காங்க…இந்த போட்டோ பாத்தாலே தெரியுது” என்று தன் கையில் வைத்திருந்த போட்டோவை பார்த்தான்,
சித்து “லவர்ஸ்னு சொல்லுறியா மச்சான்” என கண்களை சுருக்கி வினவ
“ஹ்ம்ம் ஆமா அப்படிதான் இருக்கு பாக்க, ஆனா நம்மளால எந்த முடிவும் எடுக்க முடியாது” என்றான்.

சித்து “ஆமா டா.. என்ன பண்ண” என்று தாடையை தட்டி யோசிக்க
கெளதம் “இவன் யாரு அவளுக்குன்னு தெரியல, ஆனா இவ இப்படி இருக்க காரணம் இவனா தான் இருப்பான்னு எனக்கு தோணுது” என்று யூகிக்க
சித்துவும் ஆமோதிப்பாய் தலையசைத்தான். அவனுக்கும் அப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருக்க தான் செய்தது. அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம், தாமாகவே கண்டுபிடிப்போம் என்று பேசிக்கொண்டு வீடு திரும்பினர் இருவரும்.

கிஷோர் மற்றும் ரேயன் காரில் தங்களின்  எஸ்டேட்டை பார்க்க சென்றனர், ரேயன் எஸ்டேட் வாசலில் இறங்கிவிட, கிஷோர் இது தான் ஆருவை சந்திக்க சரியான வாய்ப்பு என்றெண்ணி அங்கிருந்து கிளம்ப திட்டம் போட்டான்.

கிஷோர் “மச்சா நீ போ.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு” என்று நழுவ எத்தனிக்க,
ரேயன் “என்ன வேலை எனக்கு தெரியாம” என்று சந்தேக பார்வை பார்த்தான். கிஷோர் ‘ஐயோ முழிக்கிறானே சைக்கோ.. என்ன சொல்லி எஸ் ஆகுறது தெரியலயே’ என்று யோசித்து கொண்டு நிற்க, அவன் தோளை பற்றி உலுக்கிய ரேயன் “டேய் லூசு என்ன… அப்படியே நிக்குற மரம் மாதிரி” என்று கேட்க
கிச்சா “ஹான் அதே தான்…மரம் வாங்க போறேன்” என்று வாய்க்கு வந்ததை உளற, ரேயன் “எதே… மரம் வாங்க போறியா.. எப்படி ஹனுமான் மலையை பேத்து எடுத்த மாதிரி மரத்த பேத்தெடுத்துட்டு வருவியோ” என்று கையை கட்டிக்கொண்டு கேட்க,
கிஷோர் “ஹாஹா நல்ல நகைச்சுவை… ஆனால் நான் மரம் என்று கூறியது மரக்கன்றை..  மரக்கன்று வாங்க போகிறேன்” என்று நாடக பாணியில் சமாளித்தான்.

ரேயன் “என்ன திடீருன்னு” என்று புருவம் சுருக்க, கிஷோர் “நீதான தூசி தட்ட போறேன்னு சொன்ன, அதான் எல்லாம் சரி ஆனா அப்பறம் கிப்ட் குடுக்க வாங்க போறேன்.. ‘மரம் நடுங்கள் மக்களே’ தெரியாதா உனக்கு” என்று மட்டமாக சமாளிக்க,
ரேயன் “டேய் பைத்தியமா நீ.. எங்க போற” என்றான் அதட்டலாக.

கிஷோர் இப்போது ரேயனை போலவே கைகட்டிக்கொண்டு “இங்க பாரு ரேயா எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கமுடியாது.. ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கூற ரேயனிற்கு சிரிப்பு வந்துவிட்டது, “எங்கயோ போய் தொல” என்றவன் உள்ளே சென்றுவிட
கிஷோர் “ஹப்பா தப்பிச்சோம்” என்று ஓடிவிட்டான்.

ஆரு இப்போது எங்கிருப்பாள் என்று யோசித்துக்கொண்டே வண்டியை செலுத்திக்கொண்டிருந்த கிஷோருக்கு கும்மிட போன தெய்வம் குறுக்கே வந்ததை போல் ஆரு அங்கிருந்த பூங்கா ஒன்றினுள் நுழைவது கண்ணில் பட்டது.

“அட என்னடா இது.. நம்ம எதையும் செட் பண்ண வேண்டாம் போல, ஆண்டவனே பாத்து எல்லாம் செட் பண்றான்” என்று  வானத்தை பார்த்து கூறிக்கொண்டே பூங்காவினுள் நுழைந்தான். வீட்டிலே அமர்ந்திருப்பது அலுப்பாக இருந்ததால் பூங்காவிற்கு சென்று வரலாம் என்றெண்ணி ஆரு வந்த போது தான் கிஷோர் அவளை கண்டது.

“ஐயோ இவகிட்ட என்ன பேசன்னு தெரியலயே..” என்று புலம்பி கொண்டு அவள் அமர்திருந்த பெஞ்சில் அவனும் அமர்த்தான். கிஷோரை அங்கு எதிர்பாராது  திகைத்த ஆரு உடனே எழ, கிஷோர் “பார்ட்னர் ஒரு நிமிஷம்” என்றான்.

ஆரு “ப்ளீஸ் எதுவும் பேசாதிங்க.. நான் எதுவும் பேச கூட தயாரா இல்ல” என்று எங்கோ பார்த்தபடி கமறிய குரலில் கூற,
கிஷோர் “நான் உன் வாழ்க்கைய பத்தியோ, இல்ல உன் கடந்த காலத்தை பத்தியோ பேச வரல பார்ட்னர்” என்றான்.
ஆரு அவனை நம்பாத பார்வை பார்க்க,
கிஷோர் “அட பிலீவ் மீ.. நிஜமா தான்.. என் வருங்கால மாமியார் மேல ப்ரோமிஸ்” என்று முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு கூற, ஆருவிற்கு  லேசாக சிரிப்பு எட்டி பாத்தது. கிஷோருக்கு அதை பார்க்க நிம்மதியாக இருந்தது, அவனே தொடர்ந்து “உன்ன இன்வைட் பண்ணதான் வந்தேன் பார்ட்னர்” என்றிட
ஆரு “எதுக்கு” என்றாள் புருவம் சுருக்கி,
கிச்சா “எனக்கு என்கேஜ்மெண்ட் பார்ட்னர்” என்று எடுத்து விட,
ஆரு “வாவ் நிஜமாவா.. யாரு பொண்ணு” என்று ஆர்வமாக கேட்டாள்.

அவளுடைய பார்ட்னர் அல்லவா அவன், அதுவும் கிஷோரின் மீது அவளுக்கு  எவ்வித கோபமும் இல்லை, அதனால் தான் அவன் பேசவேண்டும் என்றவுடன் அமைதியாக கேட்டாள். கிஷோர் “என் மாமா பொண்ணு தான்.. வீட்ல கேட்டாங்க ஓகே சொல்லிட்டேன்” என்று கூறியவன் அவளுக்கு உண்மை தெரிந்தால் தன்னுடன் பேசாமல் போய்விடுவாளே என்று யோசித்தான், ஆனால் அவளை அழைத்தே ஆகா வேண்டும் என்று மனதில் நினைத்தவன் வேறு வழியின்றி பொய் கூற வேண்டியதாயிற்று.

ஆரு “சூப்பர்.. காங்கிரேட்ஸ்” என்று மென் புன்னகையுடன் வாழ்த்த
கிஷோர் “அதெல்லாம் இருக்கட்டும்.. நீ கண்டிப்பா வரனும்” என்றழைத்தான். அவன் அவ்வாறு அழைத்தவுடன் ஆருவின் முகம் மாறியது, கிஷோரின் நிச்சயத்தில் ரேயன் இல்லாமலா இருப்பான் என்றெண்ணியவள், “நான் வரல.. சாரி” என்று பட்டென்று கூறிவிட,
கிஷோர் “நீ ஏன் சொல்றனு எனக்கு தெரியும்.. அவன் வரல” என்றான்.

ஆரு “நீங்க என்ன சொன்னாலும் நான் நம்பனும் அதான” என்று ஏளன புன்னகையுடன் கேட்க, மறுப்பாக தலையசைத்த கிஷோர் “உண்மையா தான் சொல்றேன்.. அவனுக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு, சோ இன்னொரு நாள் வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டான் வெறும் நிச்சயம் தானேன்னு.. உன்ன இங்க பாத்த உடனே கூப்பிடனும்னு தோனுச்சு அதான் கிளம்பினேன், பாத்தா வழிலயே உன்ன பாத்துட்டேன்” என்று பெருசாக ஒரு பொய்யை அளந்து விட,
ஆரு இன்னும் சந்தேகமாக  தான் பார்த்தாள்.

கிஷோர் “நான் உன்ன எனக்கு ஒரு நல்ல பிரண்ட்டா தான் பாக்குறேன் பார்ட்னர்.. ப்ளீஸ் வா” என்றழைக்க அவளோ பதிலேதுமின்றி அமைதி காத்தாள்.

கிஷோர் “சரி நான் உன்ன கட்டாயப்படுத்தல, எனிவேஸ் நான் உனக்கு இப்போ யாரோ தான” என்று சென்ட்டிமெண்ட்டாக டயலாக் அடிக்க,
ஆருவிற்கு தான் மனம் பிசைந்தது. கிஷோர் “சரி நான் கிளம்புறேன் ஆரு” என்று திரும்ப,
ஆரு “பார்ட்னர்” என்றாள்.

கிஷோர் ‘வர்க் அவுட் ஆகுது’ என மனதினுள் துள்ளிக்கொண்டு, வெளியில் “சொல்லு பார்ட்னர்” என்று உற்சாகமாக கேட்க, ஆரு “உங்களை நம்புறேன்.. வரேன்” என்றிட, உடனே அவள் அருகே வந்தவன் “நிஜமா தான” என்று கண்ணில் மின்னல் வெட்ட கேட்க, அவளும் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்தாள். கிஷோர் “தேங்க் யு சோ மச்… சீக்கிரம் பாக்கலாம் சென்னைல” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான். இதற்கு மேல் அங்கிருந்தால் நிச்சயமாக எதையாவது உளறிவிடுவோம் என்றெண்ணி.

அவன் இப்படி ஒரு நாடகம் ஆடியது எங்கே கதிர் வீடு அதே காலனி என்று கூறினால் அவள் வரமாட்டேன் என்று கூறிவிடுவாளோ என்ற பயத்தில் தான். அதன் பிறகு நடந்த அனைத்தையும் கதிரின் காதில் போட்டுவிட்டான்.

சென்னையில் அக்னி தனது வீட்டில் ஜாக்கியுடன் விளையாடி கொண்டிருந்தான், வேதா அங்கு சமையல் அறையில் தனது வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார். அக்னி “அண்ணா, கொஞ்சம் இவனுக்கு பிஸ்கட் கொண்டு வரிங்களா” என்று குரல் கொடுக்க, “இதோ வரேன் தம்பி” என்று கூறிக்கொண்டே பிஸ்கெட்டை எடுத்து வந்து ஜாக்கிக்கு போட்டார்.

வெகு நாட்களாகவே அக்னியிடம் அவன் கடந்த காலத்தை பற்றி பேச நினைத்தவர் இன்று கேட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டு “தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்று தயங்க, அக்னி “சொல்லுங்க அண்ணா, நான் என்ன நினைக்கப்போறேன்” என்றான் கனிவாக.

வேதா “ஏன் தம்பி நேஹா புள்ளைய ஒதுக்குறீங்க… ரொம்ப தங்கமான புள்ள தம்பி” என்னும் போதே அக்னியின் முகம் கருத்துவிட்டது. அக்னி அவரை அமைதியாக பார்க்க, வேதா “ரொம்ப நாளாக கேக்கணும்னு நினச்சேன் தம்பி அதான் கேட்டுட்டேன்.. தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் இறைஞ்சலாக.

அக்னி “இல்ல ண்ணா.. அப்படிலாம் இல்ல” என்றிட, வேதா அவன் ஏதாவது கூறுவான் என்று அவன் முகம் பார்க்க அவர் எதிர்பார்த்ததை போல் அக்னி ஒரு சிறு இடைவெளிக்கு பின் “உங்களுக்கு எல்லாம் தெரியும்னு எனக்கு தெரியும்.. நான் எதாச்சு தப்பு பண்ணேன்னா  சொல்லுங்க” என்று நேரடியாக கேட்டுவிட,
வேதா “நான் எனக்கு தோனுறத சொல்றேன் அப்பறம் உங்க இஷ்டம் தம்பி” என்றிட, அவன் சரி என்பதாய் தலையசைத்தான்.

வேதா “அந்த இன்னொரு புள்ள பெரு என்ன ஆராத்யா தான, அந்த புள்ள உங்ககிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான் தம்பி, ஆனா அந்த புள்ள இடத்துல இருந்து யோசிச்சா அதுவும் பாவம் தான தம்பி, ஒரு பக்கம் நீங்க இன்னொரு பக்கம் அந்த புள்ள காதலிச்ச பையன், அதுவும் என்னதான் பண்ணும், பயத்துல தான் சொல்லுறத தள்ளி போட்டிருக்கும் தம்பி, சொல்ல கூடாதுனு இருக்காது…
அது மட்டுமில்ல, அந்த பையன் உங்க மேல பொய் பழி போட்டிருக்கலாம் ஆனா நேஹா புள்ள சொல்றத வச்சு பாத்தா அந்த பையன் கெட்டவனா இருப்பான்னு எனக்கு தோணால, ஏதோ சூழ்நிலையில அப்படி பண்ணிருப்பாறோன்னு தான்  தோணுது.. உங்க பக்கம் தப்பு இருக்குனு சொல்லல தம்பி.. அந்த பையனை கூட விடுங்க ஆனா நம்ம நேஹா பாப்பாவும், அந்த ஆரு பாப்பாவும் ஏதும் தெரிஞ்சு பண்ணிருக்காதுங்க பாவம்” என்று கூறி முடிக்க, அவர் கூறியதை எல்லாம்  அமைதியாக கேட்டுகொண்ட அக்னி, மெலிதாக புன்னகைத்துவிட்டு “அப்போ சுத்தி வளச்சு நான் தான் தப்பு பண்ணிருக்கேன்னு சொல்றிங்க அப்படிதான” என்று கேட்க, அவருக்கோ ஐயோ  என்றாகிவிட்டது.

“ஐயோ இல்ல தம்பி என்ன இப்படி சொல்லுறீங்க… நான் அப்படி சொல்லலயே… நான் போய் என் வேலைய பாக்குறேன்… மன்னிச்சிருங்க தம்பி” என்று பதறி நகர்ந்தவரை, “வேதா ண்ணா” என்று அழைத்தான். அவர் என்னவென்று திரும்ப, “இனி என்னால முடிஞ்சத நான் செய்றேன்” என்று கூற அவர் தான் கேட்டது உண்மையா  என்ற ரீதியில் அவனை பார்க்க, மெலிதாக தலையசைத்தவன் தன் அறைக்கு சென்றான்.

ஏனோ வேதாச்சலம் பேசிய வார்த்தைகள் அவன் மனதை பாரமேற்ற அப்படியே கட்டிலில் சரிந்தான். வேதாச்சலம் கூறிய வார்தைகளிள் உழன்று கொண்டிருந்தவன் வெகு விரைவில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அங்கு ரேயன் ஊட்டியில் தனது வேலைகளை முடித்துவிட்டு சென்னை திரும்ப தயாரானான். எஸ்டேட்டில் வேலை முடிந்து திரும்பும் வேளையில் ராகுலிடம் இருந்து அழைப்பு வர, அதை ஏற்றவன் “சொல்லு எதாச்சு டீடெயில்ஸ் கிடைச்சிதா” என்று தீவிரமாக கேட்க,
ராகுல் “சார் நீங்க சொன்ன ஆள் இப்போ ஊட்டில தான் இருக்காராம் சார்.. நான் உங்களுக்கு அட்ரஸ் அனுப்பிருக்கேன்” என்று தகவல் தர
“வெரி குட்” என்றவன் அழைப்பை துண்டிக்க, அங்கு ராகுலோ குதித்து கொண்டு இருந்தான் ரேயனின் பாராட்டில்.

ரேயன் அவன் அனுப்பிய முகவரியை பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு விரைந்தான். அவன் கூறிய விலாசத்தில் ஒரு சிறிய வீடு தெரிந்தது, அதன் அருகில்  ஒரு பெரிய மைதானம் இருந்தது. அங்கு சிலர் விளையாடிக்கொண்டிருக்க, சிலர் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அதை பார்க்கும் போதே ரேயனிற்கு விளங்கியது இது திலீப் குமாருடைய வீடு தான் என்று. ஆம் ரேயன் காண வந்தது அவரை தான், அந்த சம்பவத்திற்கு பிறகு அக்னியை பற்றி கூறவேண்டும் என்று எண்ணி அவர் ரேயனை பார்க்க வந்த போது அவன் அவர் கூற வரும் எதையும்  கேட்கமாட்டேன் என்று கூறி அனுப்பிவிட்டான், அதன் பிறகு அவரும் அவனை பார்க்க எண்ணவில்லை.

ரேயனிற்கு தான் தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் எழுந்தவுடன் அவரை  சந்தித்து பேச வேண்டும் என்று தான் நினைத்தான். அவர் சென்னையில் இல்லை என்று தெரிய வந்ததால்  ராகுலிடம் கூறி அவர் எங்கே என்று கண்டறிய கட்டளையிட்டிருந்தான், இதோ இப்போது அவர் வீட்டு வாசலில் அவன்.

காலிங் பெல்லை அழுத்தியவுடன் திலீப் குமாரின் மனைவி சுசீலா கதவை திறந்தார், ரேயன் ஒரு சாதாரண ஹூடியில் இருந்ததால் சுசீலா ரேயன் அவருடைய மாணவன் என்று நினைத்துக்கொண்டு “என்ன தம்பி ப்ராக்டிஸ் முடிஞ்சிதா, சார் கிட்ட ரிப்போர்ட் பண்ணனுமா” என்று கேட்க, எங்கு தான் என்று உண்மை கூறினால் அவர் பார்க்க மறுத்து விடுவாரோ என்றெண்ணியவன் ஆம் என்று தலையாட்டினான்.

சுசீலா “வா உள்ள உட்காரு பா, அவரு குளிச்சிட்டு இருக்காரு, இப்போ வந்துருவாரு ” என்றிட
“சரி மா” என்றான்.
சுசீலா “பிளாக் டீ கொண்டு வரவா குடிக்கிறியா” என்று பாசமாக கேட்க,  அவரின் கனிவான பார்வையில் தானாக  சரி என்று தலையாட்டினான்.

சுசீலா திலீப் தம்பதியருக்கு மகப்பேறு இல்லை அதனாலே என்னவோ சுசீலா யாரையும் அதட்டி பேசுவது இல்லை, அனைவரின் மீதும் அத்தனை அக்கறை மற்றும் பாசத்துடன் நடந்துகொள்ளும் ஜீவன் அவர்.

சுசிலா அடுக்களைகுள் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு வந்த திலீப்  கண்டது என்னவோ ரேயனை தான். அவனை முறைத்துக்கொண்டே “சுசி” என்று கத்த, அதில் பதறி ஓடி வந்த சுசீலா “என்னங்க என்னாச்சு ஏன் கத்துறீங்க இப்படி” என்று பதற,
“இப்படிதான் யார் வந்தாலும் உள்ள கூப்பிட்டு உக்காரவச்சிருவியா” என்று  எகிற, அவர் பேசியதை கேட்டு விழி விரித்து நின்றார் சுசீலா, இதுவரை திலீப் இவ்வளவு கோபப்பட்டு அவர் கண்டதில்லை என்பதே அதன் காரணம்.

சுசீலா “இல்லைங்க உங்க ஸ்டுடெண்ட்னு சொன்னாங்க” என்றிழுக்க,
ரேயன் அமைதியாக முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் நின்றுக்கொண்டிருந்தான்.

திலீப் “யாரு இவன் என் ஸ்டுடெண்ட்டா.. இப்படி ஒருத்தன் இருந்தா நான் முதல வெளிய துரத்திருப்பேன்” என்று ஆவேசமாக பேச, சுசீலா ரேயனை ஏறிட்டார். அவனோ என்மேல் எந்தவித தவறுமில்லை என்பதுபோல் நின்றிருக்க, அதை பார்த்த சுசீலாக்கோ “இந்த புள்ள என்ன இப்படி நிக்குது” என்றிருந்தது.

ரேயன் “சார் நான் உங்ககிட்ட ஒரு 10 நிமிஷம் பேசணும்” என்றிட, அவனை ஏளனமாக பார்த்தவர் “என்கிட்ட அன்னிக்கு நீங்க பேசுனீங்களா மிஸ்டர் ஆத்ரேயன்” என்று கேட்டதும் தான் சுசீலாவிற்கும் தெரிந்தது இவன் அக்னியின் மேல் பழி போட்டவன் என்று.

அக்னியை அவர் தன் சொந்த மகன் போல தான் பார்த்தார் அவ்வளவு ஏன் அவனும் அவர்களிடம் அப்படி தான் பழகுவான், அவன்மேல் இப்படி ஒரு பழி போட்டு விட்டான் என்று திலீப் சுசீலாவிடம் கூறியது இப்போது அவர் நினைவுக்கு வர இப்போது சுசீலாவிற்கும் ரேயனை நினைத்து கோபம் வந்தது.

ரேயன் “சார் நீங்க இப்படி பேசுறதுலயே எனக்கு புரியுது நான் தப்பு பண்ணிருக்கேன்னு, சரி பண்ணனும்னு நினைக்கிறேன்.. அதுக்கு ஐ நீட் யுவர் ஹெல்ப்” என்று அழுத்தமாக கூறினாலும் அவன் குரலில் பணிவிருந்தது.

அவன் கூறியதை கேட்டு சற்று தனிந்த திலீப் “உட்காரு” என்று கூறிவிட்டு தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
ரேயன் சுசீலாவை பார்த்து “மா நீங்க போய் எங்களுக்கு பிளாக் டீ கொண்டு வாங்க” என்று மென்னகையுடன் கூற, அதில் அவருக்கு அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த கோபம் பறந்தது, ஏனோ அவன் அறியாமல் தான் செய்திருக்கிறான் என்று தோன்ற, சரி என்று சென்றுவிட்டார்.

திலீப் “என்ன வேணும் உனக்கு” என்று கேட்க
ரேயன் “எனக்கு அக்னி பத்தி தெரியனும்” என்றான் நேரடியாக. திலீப் “ஏன் இப்போ எதுல மாட்டிவிட போற.. ஓ, யா ரெண்டு பேரும் சேம் பிசினஸ் தான்ல.. அதுனாலயா” என்று ஏளனமாக வினவ,
ரேயனோ “சார்.. நான் நடந்தது ஒருவேளை தப்பா இருந்தா அதை சரி பண்ணதான் நினைக்குறேன்.. நீங்க சொல்ல முடிஞ்சா சொல்லுங்க இல்லனா நானே பாத்துக்குறேன்” என்றவனுக்கு அதற்கு மேல் பொருமை இல்லை,  இதற்கு மேல் கெஞ்சினால் அது ஆத்ரேயனும் அல்லவே.

திலீப் “சரி என்ன தெரியணும் சொல்லு” என்று இறங்கி வர, சுசீலாவும் பிளாக் டீயுடன் வந்தமார்ந்தார். ரேயன் “அக்னி ஏன் அப்படி பண்ணிருக்க மாட்டான்னு நீங்க நினைக்குறீங்க” என்று கேட்க,
திலிப் “ரேயன் யூ காண்ட் பைண்ட் அ பெர்ஸன் லைக் அக்னி” என்றார். இப்போது ரேயனுக்கு ஆருவினுடைய வார்த்தைகள் தான் எதிரொலித்தது.

திலீப் தொடர்ந்து “நான் அவன் கோச்னு சொல்லல, அவன் இருக்குறதுலயே ரொம்ப நல்ல பையன்.. அவனால கற்பனையில கூட இதை நினைக்க முடியாது, அவன் நேரம் நான் அன்னிக்கு அங்க இல்லாம போயிட்டேன்.. எங்க புள்ள மாதிரி அவன், ஆனா அன்னிக்கு என்னால ஏதும் பண்ண முடியாம போயிடுச்சு ” என்றவர் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.

ரேயனுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை, இப்போது சுசீலா அவனை பார்த்து, “நீ ஏன் எதுவும்  விசாரிக்காம அவன்தான்னு நினைச்ச?” என்று அமைதியாக வினவ,
ரேயன் அவரை பாவமாக பார்த்து “நான் என்ன மா பண்றது, ஒரு பக்கம் என் தங்கச்சி அழுதுட்டு நிக்குறா, இன்னொரு பக்கம் அக்னிதான் எல்லாம் செஞ்சான்னு  சாட்சிங்க, என் மூளை அப்போ வேலை செய்யல.. அக்னி தான் காரணம்னு முழுசா நம்பிட்டேன்”என்றான் கமறிய குரலில்.

இப்போது திலீபிற்கு அவனது நிலைமை நன்றாக புரிந்தது,
திலீப் “அக்னி உங்க டீம்ல யாரோ ஒருத்தன் தான் பண்ணிருக்கான்னு சொன்னான்” என்று கூற ரேயன் அதிர்ந்து விழித்தான்.
ரேயன் “அப்போ அவனுக்கு யாருன்னு தெரியுமா” என்று அதிர்ச்சியாக கேட்க, மறுப்பாக தலையசைத்த திலீப் “இல்ல, போலீஸ் ஸ்டேஷன்ல அவனப்பத்தி தெரிஞ்சதுனால விட்டாங்க, அதுக்கு அப்பறம் அவன் விசாரிச்சுருக்கான், அப்போ தான் அது உன் டீம்ல யாரோனு அவனுக்கு தெரிஞ்சிருக்கு, எல்லாத்தையும் என்கிட்ட வந்து சொன்னான், ஆனா அவன் அப்பா அவன இந்த விஷயத்தை விடலான வீட்ல இருக்காத சொன்னதால அவனும் அவன் அம்மாக்காக விட்டுட்டான், நான் முயற்சி செஞ்சேன் ஆனா கண்டுபிடிக்க முடில” என்று முடிக்க, இப்படி ஒருவனின் மீது பழி சூட்டிவிட்டோமே என்று குற்றவுணர்வில் உள்ளுக்குள் மருகிக்கொண்டிருந்தான், ஆத்ரேயன்.

இந்த ஒரு முட்டாள்தனம் தானே எல்லாவற்றிக்கும் காரணமாகி போனது. தன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டவனை பாவமாக பார்த்தார் சுசீலா. தான் தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்தவுடன் வருந்துபவன் தவறாக இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணி அவனின் புறம் சென்று அமர்ந்து அவன் தலையை கோதியவர் “விடு பா.. நீ இனி முடிஞ்சா சரி பண்ணு, இல்லனா எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான்” என்றார் கனிவாக.

ரேயன் அவர் கைகளை பிடித்துக்கொண்டு, “மா நான் எல்லாத்தையும் சரி பண்றேன், பண்ணிதான் ஆகணும்.. உங்க புள்ள மேல போட்ட பழிய நானே அழிக்குறேன்” என்று அவர் கைகளை ஆதரவாக பற்ற, அவர் முகமும் மலர்ந்தது.

ரேயன் “சாரி சார்.. நான் உங்ககிட்டயும் ஒழுங்கா நடந்துக்கல” என்று மன்னிப்பு வேண்ட,
திலீப் “பார்டா.. ஆத்ரேயன் சாரிலாம் சொல்லுவாரா.. உங்கள பத்தி நான் அப்படி கேள்வி படலயே.. யார் கிட்டயும் இறங்கி போக மாட்டீங்கலாமே மிஸ்டர் ஆத்யன்.. அதான உன் பெரு பிசினஸ் சர்கில்ல” என்று கேட்க, அதில் புன்னகைத்தவன் “தப்பு செஞ்சா சாரி கேக்கணும் சார்.. அந்த மேனர்ஸ் கூட எனக்கு இல்லன்னு நினச்சுடீங்களா” என்றிட
திலீப் “விடு ரேயா.. நீ புரிஞ்சிக்கிட்டல அது போதும்.. எனக்கு தெரியும் நீயும் உன் ஸ்போர்ட்ஸ் கரியர்ரை ஸ்பாயில் பண்ணிக்கிட்டனு.. இனி இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்காத.. எல்லாம் சரி ஆகிடும்” என்றார்.

ரேயன் “சரி சார்.. நான் கிளம்புறேன்” என்று கூறி வாசல் வரை சென்றவன், சுசீலாவிடம்  “அவன் மட்டும் இல்ல, நானும் உங்க பையன் தான் இனி.. எப்போ வேணா கால் பண்ணுங்க உடனே வருவேன்” என்று கூறி மென்னகை புரிந்தான், அவர் கண்களில் தெரிந்த தவிப்பு அவனை அப்படி பேச வைத்தது.

ரேயனின் கூற்றில் முகம் மலர்ந்த சுசீலா “சரி டா தங்கம்.. பாத்து போ” என்று அவனை வழியனுப்பி வைத்தார் ஆனால் காரில் ஏறிய ரேயனிற்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று மருகினான்.

அதைப்பற்றி நினைக்க நினைக்க தலையில் யாரோ சுத்தியல் வைத்து அடிப்பது போல் இருந்தது. இந்த மடத்தனத்தினால் அக்னியின் மேல் அவன் வளர்த்த வன்மம் எப்படி ஆராவுடனான வாழ்க்கையை பறித்தது என்று நினைக்கையில் அவன் மனம் வெந்து தான் போனது.

மணி இரவு ஏழை கடந்திருக்க, அந்த ஊட்டி குளிரை கூட பொருட்படுத்தாமல் ஒரு பூங்காவில் வண்டியை நிருத்தியவனனின் மனம் அனலில் இட்ட புழுவாய் துடித்தது. அங்கு புல்வெளியில் அப்படியே அமர்ந்தவன் “ச்ச நீயெல்லாம் ஒரு மனுஷனா.. ஒருத்தன் மேல இவ்ளோ கேவலமான பழியை போடுவியா, அவன் வாழ்க்கையே போயிருக்குமே அந்த போலீஸ் மட்டும் ஹெல்ப் பண்ணலனா.. காட்…. ஆ..” என்று கத்தியவனுக்கு தன் மீதே கோபம் வந்தது.

அங்கிருந்த இரும்பு பெஞ்சில் குத்தியவனின் மனதில் ஆருவின் முகம் வர, “ஐ அம் சோ சாரி தியா.. லவ் யூ, லவ் யூ சோ மச்… சீக்கிரம் உன்கிட்ட வருவேன்.. உன் அகியயும் உன்கிட்ட கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று முடிவெடுத்தவன் அதற்கான வேலைகளிலும் இறங்கினான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல,
கதிர் வீட்டு கிரகப்பிரவேசமும் வந்தது. கிஷோர் மற்றும் கதிருக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றால் மறுபக்கம் என்னென்ன பிரச்சனைகள் கிளம்புமோ என்ற பயமும் இருக்க தான் செய்தது ஆனால் எது வந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றிருக்க அன்றைய விடியலை இனிதே வரவேற்றனர்.

நேஹா காலையிலேயே வந்துவிட  அனைத்து வேலைகளும் அவளின் மேற்பார்வையில் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நேஹா “டேய் கதிரு.. இங்க வா” என்றழைக்க
கதிர் “சொல்லு டி…என்ன….” என்றான்.
நேஹா “உன் ஆள் எங்க மேன்.. இன்னும் காணும்” என்று புருவமுயர்த்த,
கதிர் “ஐயோ ஆமா நேஹா.. அவ அப்போத்துல இருந்து கால் அடிக்கிறா.. இதோ போய் கூப்பிட்டு வரேன்” என்க
நேஹா “ம்ம் ம்ம் சீக்கிரம்” என்றவள் அவன் தயங்கி நிற்பதை கண்டு “ஏன் நிக்குற” என்று வினவ
கதிர் “இல்ல உன் ஆள் வருவானே.. அதான்.. சமாளிக்கணுமே..” என்றிழுக்க
நேஹா “ஹலோ அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்… நீ போ” என்க
கதிர் “சரி சரி..5 மினிட்ஸ்ல வருவேன்னு சொன்னான்.. பாத்துக்கோ… மூஞ்ச திருப்பிட்டு போயிட போது லூசு..” என்றுவிட்டு செல்ல
நேஹா “ஆமா ஆமா…சேப் அஹ் ஹண்ட்ல் பண்ணனும்” என்று நினைத்துக்கொண்டாள்.

கதிர் சென்ற அடுத்த  இரண்டு நிமிடத்தில் அக்னி அங்கு வந்து சேர்ந்தான். காலனி தாண்டி வந்தவனுக்கு நடந்த அனைத்தும் ஒரு படம் போல்   ஓடிக்கொண்டே இருந்தது ஆனால் முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

வீட்டினுள் நுழைந்தவன் முதலில் தேடியது என்னவோ நேஹாவை தான் ஆனால் அவள் அப்போது தான் ஏதோ வேலையாக  பின்கட்டிற்கு சென்றிருந்தாள்.

அக்னியை கண்ட கதிரின் அன்னை தேன்மொழி அவனிடம் ஓடி வந்து “ராசா.. அக்னி.. எப்படி பா இருக்க” என்று வாஞ்சையாக வினவ,
அவரை அணைத்துக்கொண்டவன் “நல்லா இருக்கேன் மா.. நீங்க எப்படி இருக்கீங்க..” என்றான் கேள்வியாக,
தேன் மொழி “நல்லா இருக்கேன் ராசா.. உனக்கு தான் எங்களயெல்லாம் பாக்க பிடிக்கல” என்றவரின் கண்கள் கலங்கி விட அதில் பதறியவன் “ஐயோ என்னமா இப்படி பேசறீங்க.. அப்படியெல்லாம் இல்ல மா.. இனி கண்டிப்பா அடிக்கடி வருவேன் சரியா” என்று சமாதானம் செய்ய, “அப்போ அப்படியே முடிஞ்சா எங்க வீட்டுக்கும் வாங்க தம்பி” என்று பின்னில் இருந்து ஒரு குரல் வந்தது. அது வேறு யாருமல்ல கல்பனா தான்(அக்னியின் அன்னை).

அவரை பார்த்து சிரித்தவன் அவரை  தோளோடு அணைத்துக்கொண்டு “ஹ்ம்ம் ட்ரை பண்றேன்” என்று கூற,
கல்பனா “ராஸ்கல்…கொழுப்ப பாத்தியா தேனு.. திமிரு எல்லாம்.. வளந்தா இப்படிதான் விட்டு போயிடுவானுங்க” என்று கூற,
அக்னி “மா.. என்ன நீங்க.. சரி போங்க உள்ள” என்றவன் அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு  வலது புறம் திரும்ப அங்கு  நேஹா நடந்தவற்றை மென் புன்னகையுடன்  பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளை கண்ட அக்னிக்கு  மூச்சே நின்றுவிட்டது, அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். வெங்காய தோல் நிற பட்டு புடவைய அணிந்திருந்தவள் வேலைகள் செய்து கொண்டிருந்ததால் சேலையின் தலைப்பை இடையில் சொருகி இருந்தாள். அந்த களைத்த தோற்றத்தில் கூட பேரழகியாக தெரிந்தவளை தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தான் அந்த கள்வன்.

அக்னி நேஹாவை பார்த்துக்கொண்டு இருக்க, டமால் என்று ஒரு குண்டாவை  தரையில் எறிந்தாள் அக்னியின் உடன்பிறவா சகோதரி ஸ்மிருதி. அங்கு இடையில் கைவைத்து அவனை முறைத்துக்கொண்டிருந்த ஸ்மிருதியை கண்டு அக்னிக்கு சிரிப்பு தான் வந்தது ஆனால் சிரித்தாள் சாமி ஆடி விடுவாள் என்று அமைதி காத்தான்.
தேன்மொழி “ஹே ஏன் டி போட்டு உடைக்குற” என்று கத்த,
ஸ்மிருதி “எதுக்கு இப்போ யாரெல்லாமோ இங்க வந்திருக்காங்க” என்று அவனை பார்த்துக்கொண்டு கேட்க, தேன்மொழி ஏதோ கூற வரும் முன் அவரை தடுத்த அக்னி ‘நான் பாத்துக்கொள்கிறேன்’ என்று சைகை செய்ததில் அவர் உள்ளே சென்று விட்டார்.

அக்னி ஸ்மிருதியின் அருகில் வர,  தூரத்தில் இருந்த நேஹாவை பார்த்த ஸ்மிருதி “நேஹா இங்க பாரு எவனாவது என்கிட்ட வந்து இப்போ பேசுனான், புதுசா வாங்கிருக்க கிரைண்டர் கல்ல தலையில போட்டுடுவேன்.. அப்பறம் கோமா ஸ்டேஜ் போகவேண்டி வரும்.. இல்லனா கஜினி சூர்யா ஆகிடுவான்.. பாத்து இருக்க சொல்லு..” என்று விரல் நீட்டி எச்சரிக்க
நேஹாவோ வாயை பொத்தி சிரித்துக்கொண்டாள்.

அக்னி “எங்க தூக்கி போடு பாப்போம்” என்று கைகட்டி நிற்க,
ஸ்மிருதி “ஒருத்தன் செத்தான் இன்னிக்கு” என்று சுற்றும் முற்றும் ஏதாவது அடிக்க கிடைக்குமா என்று தேட
அக்னி “கிரைண்டர் கிச்சன்ல இருக்கும் செல்லம் இங்க என்ன தேடுற…” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,
ஸ்மிருதி “இந்த செல்லம் வெல்லம்னுலாம் கூப்பிட்ட மரியாதை கெட்டுடும்” என்றாள் முறைப்பாக.

அக்னி “இப்போ மட்டும் அது எங்க இருக்குடா தங்கோ..” என்று வம்பிழுக்க
ஸ்மிருதி “கிளம்புங்க சார்.. உங்களுக்கு எங்களயெல்லாம் ஞாபகம் இருக்கா என்ன.. எதுக்கு இப்போ வந்து பேசறீங்க” என்று ஆதங்கமாக கேட்க, அக்னி அவள் கையை பிடித்தான். அதை உதறியவள் அங்கிருந்து திரும்ப, அவள் கையை பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பியவன், “என் மேல கோவமா இருக்கனு தெரியும்” என்றிட
ஸ்மிருதி “கொஞ்சம் இல்ல ரொம்ப” என்றாள். அக்னி சிரித்து விட்டு “சரி ரொம்ப.. ஆனா யோசிச்சு பாத்தியா அண்ணன் மட்டும் எப்படி பேசாம இருப்பான்னு.. அவனுக்கும் கஷ்டமா தான் இருக்கும்னு உனக்கு தெரியாதா.. உனக்கு தெரியும்ல அண்ணன்ன பத்தி” என்றிட
ஸ்மிருதி “அப்போ ஏன் பாக்கல… ஏன் பேசல” என்று பாவமாக கேட்க,
அக்னி “நான் பண்ணது தப்பு தான் இல்ல சொல்லல.. ஆனா என்னால வரமுடில.. உனக்கு தெரியாதது இல்ல.. ஆனா நான் ஒன்னும் இந்த குட்டிய பாக்கமலாம் இல்ல” என்றான் ரகசிய குரலில்.

ஸ்மிருதி “எது நிஜமாவா” என்று வாயை பிளக்க
அக்னி “ஷு… சீக்ரெட்.. யார் கிட்டயும் சொல்லக்கூடாது..” என்றான்.
ஸ்மிருதி “சரி சரி.. உன்ன லைட்டா மன்னிக்குறேன்.. என்னால உன்கிட்ட பேசாம இருக்க முடியாது” என்று கூறும்போதே அவள் கண் கலங்கிவிட,
அக்னி “அச்சோ.. ஏன் டா அழற…” என்று அவளை அணைத்துக்கொண்டவன் “சரி இனி வருவேன்… ஓகே?” என்று சமாதானம் செய்ய,
ஸ்ம்ரிதி “நிஜமா வருவியா.. ஏமாத்தமாட்டல…”
அக்னி “ப்ரோமிஸ்…”என்று கூற ஸ்மிருதியும் சமாதானமாகி அவனிடம் பேசினாள்.

இதை பார்த்தக்கொண்டிருந்த நேஹாவிற்கு தன்னிடம் எப்போது இவன் இப்படி பேசுவான் என்று மனம் ஏங்க அதை மறைக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள், அதை கவனித்த அக்னியும் ஸ்மிருதியிடம் கூறிவிட்டு அவள் பின் சென்றான்.

நேஹா இரண்டாம் தளத்தில் இருக்கும் பால்கனியில் பூ தோரணம் கட்டிக்கொண்டிருக்க, அக்னி சத்தமேயில்லாமல்  அவள் பின் நின்றான். எதர்ச்சியாக திரும்பியவள் அவனை இடித்துவிட்டு தடுமாறி விழ பார்க்க, அவள் விழாதவண்ணம் தாங்கி பிடித்தவன் அவளை நிற்க வைத்துவிட்டு விலக, அவன் ஏதேனும் பேசுவான் என்றெண்ணியவள் அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, அவனோ வாயே திறக்கவில்லை.

நேஹா ஒரு பெருசமூச்சுடன் மீண்டும் வேலைகளை செய்ய தொடங்கினாள்.
சுவரோடு ஒரு பூ மாலையில் முடிச்சு போட இயலாமல் நேஹா திணறி கொண்டிருக்க, அதை கவனித்த அக்னி அவளிடம் அதை வாங்க போனான்.

ஸ்மிருதியுடன் மட்டும் நன்றாக பேசியவன் இப்போது வாயை மூடிக்கொண்டு நிற்பதில் கடுப்பானவள்  “இல்ல நானே பண்றேன்” என்று கூறி விட்டாள். அவள் கூறியதை கேட்டு அக்னி கை கட்டி கொண்டு நிற்க, அவள் எவ்வளவு முயற்சி செய்தும் அவளால் அந்த முடிச்சை போட முடியவில்லை.

முடிச்சிட முடியாமல் தவித்தவள் அதை
வேகமாக பற்றி இழுக்க, அவள் கையோ அருகிலிருந்த சுவற்றில்  நன்றாக இடித்துவிட “ஆ….”என்று அலறினாள். அவள் அலறலில் பதறிய
அக்னி “ஹே அறிவிருக்கா.. நான் தான் பண்றேன் சொன்னேன்ல.. கைய காட்டு” என்று அவள் கையை பிடிக்க போக
நேஹா கையை பின்னிழுத்துக்கொண்டு “விடுங்க.. நான் பாத்துக்குறேன்” என்றாள்.
அக்னி “காட்டுன்னு சொன்னேன்” என்று முறைக்க,  நேஹா கோபமாக அவனை பார்த்து “எதுக்கு காட்டனும்.. எனக்கு என்ன ஆனா உனக்கு என்ன… நான் யாரு உனக்கு” என்று கத்தினாள்.

அக்னி அவள் கையை பார்க்க அதுவோ வீங்க ஆரம்பித்தது, “நேஹா சொல்றத கேளு, கை வீங்குது.. ரத்தம் கட்டிக்க போகுது டி… கைய காட்டு” என்று பதற,
நேஹாவால் கோபத்தை அடக்க முடியவில்லை, தான் அப்படி என்ன செய்துவிட்டோம் என்ற கோபம் தலைத்தூக்க அடங்கமாட்டாமால் பேசினாள், “கட்டுனா கட்டிட்டு போட்டும்.. என்ன இப்போ.. எனக்காகலாம் யோசிக்க டைம் இருக்கா உனக்கு.. என்ன திட்ட மட்டும் தான் டைம் இருக்கு நினச்சேன்” என்றவளின் வார்த்தைகளில் ஏளனமிருக்க அவனோ ஒரு வார்த்தை பேசவில்லை

நேஹா “பேசிடாத, நான் என்ன பண்னேன் அகி.. பேசுனான் அவ்ளோதான்.. அதுக்கு என்ன ஒதுக்கி வச்சிடுவியா.. அவ்ளோதானா நான் உனக்கு.. யாரோ ஒருத்தி ரித்து.. அவளையெல்லாம் கார்ல கூட்டிட்டு போற.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. இதோ இப்ப கூட நீ ஸ்மிருதி கிட்ட மட்டும் சிரிச்சு பேசிட்டு என்கிட்ட யாரோ மாதிரி நடந்துகிட்டதால வந்த  கோவத்துல தான் கத்துறேன்.. நாளைக்கு திருப்பி உன்கிட்டதான் வந்து நிப்பேன்.. என்னால உன்ன விட்டு இருக்க முடியாது அகி.. என்னலா விட்டு போகவும் முடியாது.. நீ என்னவெனாலும் பண்ணிக்கோ போ..” என்று கத்திவிட,
அக்னி “பேசி முடிச்சிட்டியா” என்றான் கேள்வியாக, அவளோ அவனை தீயாய் முறைத்துக்கொண்டிருந்தாள்.

அக்னி “முடிச்சிட்ட போல, இப்போ கை காட்டு” என்றவன் அவள் கையை பிடித்து நன்றாக தேய்த்துவிட, அவளோ வலியில் கத்தினாள்.

“இரு கொஞ்சம் வலிக்க தான் செய்யும்” என்க, அவன் கையிலிருந்து தன் கையை உருவியவள் “ஆமா வலிக்க தான் செய்யுது, ஆனாலும் இந்த மானம்கெட்ட மனசு புரிஞ்சிக்க மாட்டேங்கிது.. என்ன பண்ண முடியும்….” என்றவள் கீழே சென்று விட, அவள் கூறிய வார்த்தைகளில் திகைத்து நின்றவன், அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தான்.

என்னவோ நேஹாவின் இந்த கூற்றில் அவனுக்கு கோபம் வரவில்லை, மாறாக தான் சிரிப்பு வந்தது. “லூசு.. ஒழுங்கா திட்ட கூட தெரியல.. நீ இப்படி திட்டுவனா, நான் கோவமாவே இருந்துடுவேன்டி” என்று நினைத்து சிரித்துக்கொண்டவன் அவள் பின்னே இறங்கினான்.
.
.
.
.
அக்னி எரிச்சலுடன் சாப்பாடு பந்தியில் அமர்ந்திருக்க, அங்கு வந்த ரேயன், “டேய் கதிரு.. இங்க வந்து அக்னிக்கு தோசை வை டா” என்று மேலும் எல்லாரையும் அதிர வைக்க, எதையும் யாரையும் கண்டுகொள்ளாத ஆருவும் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
அக்னி “டேய் என்ன சீன் போடுறியா” என்று அடி குரலில் கேட்க,
ரேயனோ “இது சீன் போடுற மாதிரி உனக்கு தெரிஞ்சா அப்போ இனி டெய்லி நீ இதை தான் பாக்க போற மாப்ஸ்” என்று கூறி கண்ணடிக்க, அக்னியோ அவனை தீயாய் முறைத்துக்கொண்டிருந்தான்.
.
.
.
.
கிச்சா “மச்சா என்ன டா நடக்குது.. என்ன டா பண்ற” என்றவனுக்கு ரேயன் செய்த செயல்களின் தாக்கத்திலிருந்து இன்னும் வெளி வந்திருக்கவில்லை.
கிஷோரின் தோள் மீது கை போட்டவன் “இனி இங்க நடக்க போறதே வேற.. கூடிய சீக்கிரம் எல்லாரும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லாலலா’ னு பாட போறோம்” என்று சிரித்து கொண்டு கூற,
கிஷோருக்கு தலை சுற்றியது.
“இது என்னடா புது அவதாரமா இருக்கு” என்று கூறியவன் ரேயனின் அதிரடியில் அதிர்ந்து நின்றான்.

தொடரும்…

 

Advertisement