Advertisement

                 அத்தியாயம் 22

அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை கதவை திறந்தான்.

அவன் இப்படி கதவை திறப்பான் என்று எதிர்பாராதவள் பேந்த பேந்த முழிக்க அக்னியோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

எப்போதும் கோபத்தை மட்டும் வெளிப்படுத்தும் கண்கள் இன்று அவளை நிதானமாக அளவிட்டது.

அவனின் கோப பார்வையை கூட சகித்துக்கொள்ள முடிந்தவளுக்கு இந்த நிதான பார்வை கிலியை பரப்ப அவனிடம் சமாளிக்கும் விதமாக பேசினாள் இல்லை இல்லை உலறினாள்.

அவளின் உலறல் மொழிகளை கண்டுகொள்ளாமல் அக்னி அவளை அழுத்தமாக பார்த்தான்.

நேஹா “ஒரு சந்தேகம் கேட்க தான்” என்றிழுத்தவளின் சொற்கள் அவன் இறுகிய அணைப்பில் காற்றில் கரைந்தது. ஆம் அவன் தான் அவளை அணைத்திருந்தான், ஆறு வருடங்களுக்கு பிறகான இறுகிய அணைப்பு. காலையிலிருந்து அவன் மனதை அழுத்திய பாரத்தை அவள் தோள்வளைவில் முகம் புதைத்து கரைத்துக்கொண்டிருந்தான் அவளவன்.

அக்னியின் இறுகியே அணைப்பே அவன் மனநிலையை எடுத்துக்காட்டியது. நேஹா ஆதரவாக தடவி கொடுக்க அவன் அணைப்பு இன்னும் இறுகியது. காற்று கூட புக முடியாத அளவிற்கு அவளை அணைத்திருந்தான்.

அவன் மன அழுத்தத்தில் தான் இவ்வாறு நடந்துகொள்கிறான் சிறிது நேரத்தில் அவன் மீண்டும் மலையேறுவான் என்பதை பெண்ணவள் அறிந்த ஒன்று ஆனால் இன்றாவது தன்னிடம் ஆறுதல் தேடுகிறானே என நினைத்தவளின் கண்கள் கலங்கி போனது.

அதுவரை அவளை அணைத்திருந்த அக்னிக்கு அப்போது தான் தான் செய்துகொண்டிருக்கும் செயல் மூளைக்கு எட்ட உடனே அவளிடமிருந்து விலகினான்.

நேஹா ‘ரைட்டு.. தெளிஞ்சிடுச்சு.. இப்போ வேதாளம் மறுபடியும் மரம் ஏற போகுது’ என நினைத்துக்கொண்டு அக்னியை ஏறிட்டாள். பல ஆண்டுகள் கழித்து கிடைத்த அவன் அருகாமையின் ஆனந்தத்தால் கலங்கியிருந்த அவள் கண்ணை பார்த்து தடுமாறியவன் “சாரி.. ஏதோ தெரியாம.. சாரி” என்று நெற்றியை நீவ அப்போதும் அவள் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அக்னி அறையினுள் சென்று கட்டிலில் அமர நேஹா தான் உள்ளே செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்றாள்.

நியாயமாக பார்த்தால் தான் செய்த காரியத்திற்கு அவள் தான் தன்னை திட்ட வேண்டும் என்று அக்னிக்கு தெரியும் ஆனால் அவள் அவனை பாவமாக பார்ப்பதை பார்த்தவன் அவளிடம் எதுவும் பேச விரும்பவில்லை. ஆறாண்டுகளுக்கு முன் அவள் எப்படி இருந்தாளோ இன்றும் அவள் அதே போல் தான் இருக்கிறாள் என்ற நினைவு மனதில் ஓட அவளை மட்டுமே பார்த்துகொண்டிருந்தான் வெறுமையாக.

அக்னியின் பார்வைக்கு அர்த்தம் தெரியாது குழம்பியவள் அறிவாள் இது நிச்சயம் வேலை சம்மந்தப்பட்டது அல்ல என்று ஆனால் இவன் ஏன் இப்படி வெறுமையாக அமர்ந்திருக்கிறான் என்று குழம்பிக்கொண்டிருந்தவளுக்கு விடையளிக்கும் வண்ணம் வந்தது கதிரின் அழைப்பு.

அக்னி அவளை உள்ளே அழைக்கலாம் என்று வாயெடுக்கும் போது அவளுக்கு அழைப்பு வர “அங்க கிளாஸ் டோர் ஓப்பன் பண்ணா பால்கனி” என்று இடதுபக்கமாக கண் காட்ட ஒரு தலையசைப்புடன் சென்றாள்.

அழைப்பை ஏற்றவள் சிறு குரலில் “கதிரு டேய்” என்று ஆர்பரிக்க, மற்றுபக்கமிருந்த கதிர் “என்னடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல கால் பண்ணா நீ என்கிட்ட ஏதோ சொல்லுவ போல” என்று புன்னகையுடன் கேட்க “ம்ம்” என்றாள்.

கதிர் “சரி சொல்லு.. என்ன” என்று வினவ
நேஹா “நீ சொல்லு” என்றாள். கதிர் “அட சொல்லு டி தெய்வமே.. அப்பறம் நான் சொல்லுறேன்” என்க, நேஹா “அது.. நான்..” என்றிழுக்க
கதிர் “என்ன ஓடி போயிட்டியா” என்றான் நக்கலாக
நேஹா “ப்ச்.. ஒழுங்கா கேளு”
“சரி சரி சொல்லு” என்றான் சமாதானமாக.
நேஹா “நான் இப்போ அகி வீட்ல இருக்கேன்” என்று குண்டை தூக்கி போட முதலில் “ஓ” என்றவன் அவள் கூறியது புரியவும் “ஏதே..” என்று அலறினான்.

நேஹா  “டேய் குரங்கே.. காதுல கத்தாத” என்று காதை குடைய, வெகு நாட்களுக்கு பின்னான அவளின் குரங்கு என்ற அழைப்பில் நெகிழ்ந்து தான் போனான்.

பின் நேரத்தை கண்டவன் “அடியே சண்டாளி.. பதினொன்றை ஆகுது.. இந்த நேரத்துல அங்க என்ன பண்ணுற.. ஆபிஸ்ல உன்ன படுத்துனது பத்தாம கையோட வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டானா” என்று கேலி குரலில் கேட்க
நேஹா “இல்ல டா.. நானா தான் வந்தேன்” என்றாள்.

கதிர் “பைத்தியமே.. இந்த நேரத்துல அங்க என்ன டி பண்ற” என்று தலையில் அடித்துக்கொள்ள
நேஹா “என்ன இந்த நேரம்.. இந்த நேரம்.. நம்ம அக்னி தான” என்று கடுப்பாக கூற
“அடிங்கு.. இப்போ அக்னிய யாரு என்ன சொன்னா.. அவன் தான் ஒரு டை போட்ட ரோபோன்னு ஊருக்கே தெரியுமே.. என் மச்சான் தங்கம் டி.. நீ அவனை வெறுப்பேத்த போயிருக்கியேன்னு பீல் பண்ணேன்” என்றபடி அவளை வம்பிழுக்க
“வாய மூடு”
“இங்க பாரு நேஹா.. அவன் பழைய அக்னி இல்ல.. அவன் ஏதோ கிறுக்கு பிடிச்ச மாதிரி நடத்துகிறான்.. இப்போ நீ ஆகிருந்தா ரெண்டு பேருக்கும் தேவையில்லாத மனஸ்தாபங்கள் தான் வரும்” என்று அவளை கிளப்ப முயற்சிக்க
“அதெல்லாம் எனக்கு தெரியாது கதிர்.. அவன் ஏதோ சரியில்ல.. முகமே வாடிப்போய் இருக்கு.. இப்போ கூட அவன் முன்னாடி போய் நின்னேன்” என்க
கதிர் “என்ன காச்சு மூச்சுன்னு கத்துனான” என்றான் சலிப்பாக, நேஹா மறுப்பாக “அது” என்றிழுக்க
“தூய தமிழ்ல திட்டிட்டானா” என்று கேலியாக கேட்க
“ஹக் பண்ணிட்டான்” என்றாள் வெட்கம் கலந்த சிறுகுரலில்.
“ஹக்கா.. ஏதே.. ஏன்டி ஒரு நாள்ல எத்தனை வாட்டி என் நெஞ்சு வெடிக்கனும்” என்று நெஞ்சை பிடித்தபடி கேட்க,
நேஹா “என்ன ஆச்சுன்னு தெரியல கதிர்.. ஒரு மாதிரி இருக்கான்” என்று கவலை தேய்ந்த குரலில் கூற,
கதிர் “ஏன்னு எனக்கு தெரியும்” என்றான்.

நேஹா “தெரியுமா.. முதல்லயே சொல்லமாட்டியா.. வெட்டியா பேசிட்டு இருக்க” என்று கடுப்பாக கேட்க
“உடனே குதிக்காத சொல்றத அமைதியா கேளு” என்க அவளும் அமைதியாக அவன் சொல்லவிருப்பதை கேட்டாள்.

கதிர் “அவன் இன்னிக்கி ஆத்ரேயன் அப்பறம் ஆருவை பார்த்திருக்கான்” என்ற தகவலை தர, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவள் “கதிர் நீ சொல்லுறது” என்று சந்தோசமாக வினவ
“நீ ஏன் நேஹா சந்தோஷமா கேட்குற.. நம்ம இருக்கோமா செத்தோமான்னு கூட தெரிஞ்சிக்க வேணாம்னு இருக்குறவள பாத்ததுக்கு ஏன் இவ்ளோ சந்தோஷ படுற” என்று புரியாமல் கேட்க
“என்னடா இப்படி சொல்லுற.. பாவம்டா அவ, நானாவது உன்கிட்ட பேசுறேன், அக்னி கண்ணு முன்னாடி இருக்கேன் ஆனா அவளுக்கு யோசி” என்று தன் தோழிக்காக வருந்த,
கதிர் “யார் அவளை அப்படி இருக்க சொன்னது” என்று நக்கலாக வினாவியனுக்கும் அவளை குறித்த வருத்தம் இருக்க தான் செய்தது.

நேஹா “நம்மகிட்ட பேசிட்டு அக்னிய எதிரியா அவ பார்க்க மாட்டா அதான் ஒதுங்கிட்டா, எல்லாம் நம்ம விதி கதிர்.  சீக்கிரம் சரி ஆகிடும்” என்று பெருமூச்சுடன் கூற
கதிர் “அக்னிய யாருனே தெரியாதுன்னு சொல்லிருக்கா டி” என்று ஆதங்கப்பட, நேஹா “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” என்றாள் சந்தேகமாக.

‘ஐயோ உலறிட்டோம்’ என்று மனதில் நினைத்தவன் “இன்னிக்கு ஒரு டெண்டர்ல தான் மீட் பண்ணிருக்காங்க அங்க ரெப்ரெஷ்மெண்ட்ஸ் என் ஹோட்டல்ல இருந்து தான் சப்ளை பண்ணோம் அப்போ அங்க வேலை பார்த்த பையன்.. அதான் நம்ம கதையெல்லாம் தெரிஞ்சவன், அவன் தான் சொன்னான்” என்று சமாளிக்க அவளும் நம்பிவிட்டாள்.

கதிர் “சரி அவனை பார்த்துக்கோ.. நான் அப்பறம் பேசுறேன்” என்று வைத்துவிட நேஹாவும் அலைபேசியை அணைத்துவிட்டாள். கதிர் கூறியதை கேட்டு நேஹாவிற்கு குற்றவுணர்வாக இருந்தது அவன் அறைக்கு செல்லாமல் அவள் இருளை வெறித்தபடி நிற்க அவள் சென்று வெகு நேரமானதை உணர்ந்த அக்னி அவளை தேடி வந்தான்.

மெல்லிய விளக்கொளியில் அழகோவியமாய் நின்றவளை பார்த்து தடுமாறிய மனதை கடிவாளமிட்டு அடக்கி “இவ எதுக்கு பனில நிக்கிறா” என்று நினைத்தவன் அவள் பின்னிலிருந்து “ஏன் இங்க பனில நிக்குற.. உள்ள வா” என்றழைக்க இதே போல் முன்னர் ஒரு நாள் அவன் அழைத்தது அவள் நினைவில் வந்தது. அவனும் அதே நினைவில் கண் மூடி திறந்தவன் அங்கேயே நிற்க அதற்கு மேல் அவனை வருந்துவிடாமல் அவன் அறைக்கு சென்றாள் அவனவள்.

அவள் பின்னே அறைக்கு சென்றவன் “நீ ஏன் இங்க வந்த” என்று கடினமான குரலில் கேட்க
‘ஐயோ கேட்குறானே’ என மனதினுள் பதறியவள் அவனை திரும்பி பார்க்க அவளை கூர்மையாக பார்த்தவன் “உண்மைய மட்டும் சொல்லு” என்று இறுகிய குரலில் வினவ, விழிகளை நிலம் நோக்கி தாழ்த்தியவள் “அது உன் முகமே சரியில்ல அதான்” என்று தயக்கமாக கூறியவளுக்கு பயமாக இருந்தது அவன் தன்னை வருத்தும்படி பேசிவிட கூடாதென்று.

நேஹாவிற்கு அன்று நல்ல நேரமோ என்னவோ அக்னி அவளிடம் எதுவும் பேசவில்லை. அக்னி “வீட்ல விடுறேன் வா” என்றழைக்க அதில் அவன் முகம் பார்த்தவள் மீண்டும் விழி தாழ்த்தி “அது.. நான் பிரெண்ட் வீட்ல இருக்கேன்னு சொல்லிட்டேன்” என்றாள். அவள் கூறிய பாவனையில் அவன் இறுக்கம் சற்று தளர்ந்தது. மனதில் கடலளவு காதலை வைத்திருந்தாலும் அதை மனதினுள்ளே புதைத்தவன் அவளை வெறுமையாக பார்த்தான்.

நேஹா “சாப்பிடலயா அக்.. சார் நீங்க” என்று கேட்க அவள் கொடுத்த ரோல்லின் கவரை காட்டினான். பின் அக்னியே “பக்கத்து ரூம்ல படுத்துக்கோ” என்று கூறியவனை பேயறைந்தார் போல் அவள் பார்க்க, அக்னி “என்ன” என்றான் புருவமுயர்த்தி.

நேஹா “அது.. நான் வேதா அண்ணா கூட படுத்துக்குறேன்.. எனக்கு தனியா படுத்தா தூக்கம் வராது” என்று மெல்லிய குரலில் கூற,
‘பேச்செல்லாம் நல்லா பேசுவா ஆனா இன்னும் மாறவே இல்ல.. வேதா அண்ணா கூட படுக்க போறாலாம்’ என மனதினுள் முணுமுணுதவன் “இங்கயே படு” என்றான். நேஹா தயங்கி “இல்ல நான்” என்று ஏதோ கூற வரும் முன் அக்னி அவளை முறைக்க அதில் தன் வாயிற்கு ஒரு பூட்டை போட்டவள் அவன் பின் சென்றாள்.

அவளை தன் அறையினுள் இருக்க சொன்னவன் கீழே செல்ல, நேஹா தான் ‘அடியே வசமா வந்து சிக்கிட்ட.  வீட்டுக்குள்ள வந்ததுக்கே நாளிக்கு ஒரு அர்ச்சனை இருக்கு.. இதுல அவன் ரூம் வேற.. அவ்ளோ தான்’ என்று நினைத்தவள் அப்போது அவன் அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள்.

பத்து நிமிடத்தில் அங்கு வந்தவன் அவள் அருந்துவதற்கு உணவை எடுத்துக்கொண்டு வந்திருக்க நேஹா கண்ணிமைக்காமல் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அக்னி “சாப்பிட்டு பெட்ல படு.. நான் சோபால படுத்துக்குறேன்.. கீழலாம் போக வேண்டாம்” என்றவன் இறுதியாக கூறியதை அழுத்தமாக கூற,
நேஹா “இல்ல நான்” என்று அவள் கூறும் முன்பே அவன் சோபாவில் படுத்துவிட அவளும் உணவை அருந்திவிட்டு கட்டிலில் சரிந்தாள்.

கட்டிலின் பக்கவாட்டில் சோபா போடப்பட்டிருக்க முகத்தை மூடியபடி படுத்துக்கொண்டிருந்தவனை பார்த்தவண்ணம் படுத்தவள் ‘சாரி அகி.. என்னால தான் நீ அங்க படுத்திருக்க’ என நினைத்து வருந்த அதற்கு மாறாக அக்னியின் மனம் அவளுக்கு நன்றியுரைத்தது. சிறிது  நேரத்தில் நேஹா உறங்கிவிட இப்போது அவளை ரசிப்பது அவன் முறையாயிற்று. (மீ : நீ ரசிச்சிட்டு இரு.. அங்க அவங்க என்ன பண்றாங்கன்னு நாங்க பார்த்திட்டு வந்திடுறோம்??‍♀️??‍♀️)

டெண்டரிலிருந்தது விடுதிக்கு சென்ற ஆத்ரேயனோ கடுப்பின் உச்சத்தில் இருந்தான். அவளிடமிருந்து அப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே அவன் கோபத்தின் காரணம்.

இரவு வெகு நேரமாகியும் அவன் அதே கடுப்பில் அமர்ந்திருக்க, அவன் உடைமைகளை எடுத்து வைத்த கிஷோர் “டேய் நைட் ஒரு மணிக்கு பிளைட்.. இப்போவே பதினொன்னு ஆகுது, கிளம்புடா” என்று கிளப்ப ரேயனோ அமைதியாக அமர்ந்திருந்தான்.

கிஷோர் “உன்கிட்ட தான் பேசுறேன்.. சிலை மாதிரி இருந்தா என்ன அர்த்தம்” என்று அவன் தோளை உலுக்க
“எனக்கு அவளை பார்க்கனும்” என்றான் மொட்டையாக. கிஷோர் “யாரை” என்று புருவம் சுருக்க “மிஸ் ஆராத்யா சிவகுமார்.. அவளை பார்த்தே ஆகனும்” என்று அழுத்தமாக கூற கிஷோர் அதிர்ந்து “அடேய்.. பரம்பரை பைத்தியமே.. என்னடா சொல்லுற” என்று கேட்டவனுக்கு தான் கேட்டது நிஜமாக இருக்க கூடாது என்றே தோன்றியது. ஆனால் ரேயனோ கிஷோரை சிறிதும் கண்டுக்கொள்ளாது டெண்டர் வைத்த நிறுவனத்திடம் பேசி அவள் வீட்டு இலக்கை வாங்கியிருந்தான்.

ஆத்ரேயன் அறையிலிருந்து வெளியே செல்ல அவன் பின் ஓடிய கிஷோர் அவன் வழியை மறித்து “டேய் டேய்.. நீ எதுக்கு அவளை பார்க்கனும்” என்று வினவ அவனை முறைத்த ரேயன் “கெட்ட கோபத்துல இருக்கேன் வழிய விடு” என்றவன் அவனை தள்ளிவிட்டு செல்ல, கிஷோர் “ரேயா ப்ளீஸ்டா..” என்றான் கெஞ்சலாக.

கிஷோரின் வார்த்தையில் ஒரு நிமிடம் நின்றவன் அவனை திரும்பி பார்த்து “பாத்தல.. இதான்.. உன்னையே என்ன அத்துன்னு கூப்பிட விடாம பண்ணிட்டு.. என் கிட்ட இருந்த எல்லா சந்தோஷத்தையும் பறிச்சி என்ன பாதில விட்டுட்டு போனதுமில்லாம என்னையே யாருன்னு கேட்குறா.. அவளை சும்மா விட சொல்லுறியா.. இந்த ஆத்ரேயன் யாருன்னு அவளுக்கு காட்டுறேன்” என்றவன் விறுவிறுவென வெளியேறினான்.

நேரம் பதினொன்னை தாண்டியிருக்க கிஷோர் தன்னை நொந்தபடி அவன் பின் சென்றான். கார் வரை சென்ற ஆத்ரேயன் கிஷோரிடம் “இனி நான் ஊட்டிக்கு போக போறதில்ல.. அந்த சீனியர் மூர்த்தியையே பார்த்துக்க சொல்லிடு.. ராகுல் சுஷ்மிய சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணிடு” என்று சில அவசர கட்டளைகளை பிறப்பித்தவன் அவன் பதிலுக்கு காத்திருக்காமல் அங்கிருந்து நகர்ந்தான்.

ரேயன் சென்னையில் இருக்க போவதை நினைத்து மகிழ்ந்தாலும் இப்போ அவன் அவளிடம் என்ன பிரச்சனையை கிளப்ப போகிறானோ என்ற பயம் அவனிடம் அதிகமாகவே இருந்தது.  உடனே தன் அலைபேசியை எடுத்தவன் ஒருவனுக்கு அழைத்து “டேய் நம்ம பிளான் ரணகலமாக போகுது” என தெரிவித்தது வேறு யாருக்கோ அல்ல கதிருக்கு தான். கல்லூரியில் அக்னி மற்றும் ரேயனின் சண்டைக்கு பின் அவர்களை மீண்டும் பழையபடி ஒன்று சேர்க்க கதிர் மற்றும் கிஷோர் செய்யாத திருட்டுத்தனமில்லை ஆனால் இந்த ஆறு வருடத்தில் அவர்கள் இருவரின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியது அப்போது இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பே இந்த டெண்டர். மூன்று கம்பெனிக்கு இந்த டெண்டர் பற்றிய தகவல்களை தந்ததும் இவர்களே.

கிஷோர் கூறியதை கேட்டு அதிர்ந்த கதிர் “என்ன கிச்சா.. எல்லாம் ஓகே தான” என்று கேட்டவனுக்கு இதற்கு மேல் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்ப கூடாது என்று எண்ணம் இருக்க தான் செய்தது.

கிஷோர் “இல்ல கதிர்.. இந்த கிறுக்கன் ஆராவோட அட்ரெஸ் வாங்கி அவளை பார்க்க போயிருக்கான்” என்று இங்கு நடந்த கலவரத்தை கூற மறுபக்கமிருந்த கதிரோ  நெஞ்சில் கை வைத்து “என்னடா சொல்லுற” என்று அதிர
கிஷோர் “ஆமாடா.. கண்டிப்பா பிரச்சனை பண்ண போறான்” என்று கூற
கதிர் “அவ யாருன்னு தெரியாதுன்னு சொன்னதாலயா” என்று கடுப்பாக கேட்க
கிஷோர் “அதே தான்.. தாத்து பூத்துன்னு குதிச்சிட்டு போயிருக்கான்” என்று வருந்த
கதிர் “போச்சா.. அங்க நேஹா அந்த கிறுக்கன் கிட்ட மாடிக்கிட்டா.. இங்க இவளா” என தலையில் அடித்துக்கொள்ள,
கிஷோர் “எல்லா கிறுக்கனுங்களும் நம்மகிட்ட தான் இருக்கானுங்க” என்றான் சலிப்பாக.

கதிர் “சரி வா.. நம்மலும் பாளோ பண்ணுவோம்.. நான் உன்ன பிக் பண்ணிக்கிறேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

காரை புயல் வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்த ஆத்ரேயனின் மனமோ அவள் வார்த்தைகளை எண்ணி உலைகலம் போல் கொதித்துக்கொண்டிருந்தது ஆனால் இப்போது எதற்காக அவளை சந்திக்க போகிறோம்.. சந்தித்து என்ன பேச போகிறோம் என்பது அவன் மனமே அறியாத ஒன்று.

அங்கு ஆரத்யாவின் அறையில் சிவகுமார் “எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க ஆரு நீ.. அம்மா என்ன சாப்பிடுறன்னு தான கேட்டா” என்று கத்திக்கொண்டிருக்க
நிலா “என்னங்க விடுங்க.. நீங்களும் கத்தாதீங்க” என்று சமாதானம் செய்ய முயல, சிவகுமார் “இல்ல நிலா.. எவ்ளோ நாள் நம்மலும் பொறுக்குறது.. நம்ம பேசுற எதையும் கேட்க கூடாதுன்னு இருக்கா” என்று இயலாமையில் கத்த, ஆரு “நான் ஆல்ரெடி என்ன பண்ணனு தெரியாம இருக்கேன்.. ப்ளீஸ் விடுங்க.. எனக்கு பசிக்கில” என்று தலையை பிடித்துக்கொண்டு உரக்க கூறினாள்.

சிவகுமார் “சாப்பிடாம இரு பரவால்ல ஆனா நிலா கிட்ட கத்தாத.. நீ பண்ற எதுவும் எனக்கு பிடிக்கில” என்று அவளை கடுமையாக சாடியவர் அவர் அறைக்கு சென்றிட நிலாவும் அவர் பின் சென்றார். அறைக்குள் சென்ற நிலா “ஏங்க.. ஏன் இப்படி திட்டுனீங்க” என்று வருத்தப்பட
சிவகுமார் “இல்ல நிலா.. அவளுக்கு இப்போ புரியாம இருக்கலாம் ஆனா அமைதியா இருக்குறப்ப யோசிப்பா” என்று கூற அவருக்கும் அதுவே சரியென பட அவரும் அதற்கு பின் எதுவம் பேசவில்லை.

ஆராத்யா கோபத்தில் தன் அறையில் இருந்தவற்றை போட்டு உடைத்துக்கொண்டிருந்தாள். கண்ணாடி முன் நின்றவள் “உன்னால தான் எல்லா பிரச்சனையும்.. அப்பறம் ஏன் அதை மத்தவங்க கிட்ட காட்டுற” என்று தன் பின்பத்தை பார்த்து கத்தியவளுக்கு அந்த அறையில் இருப்பதே மூச்சு முட்டுவதை போலிருக்க அதற்கு மேல் அந்த அறையில் நிற்காமல் தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

அவள் வெளியேறுவதை பார்த்த நிலா “என்னங்க அவ எங்கயோ போறா” என்று பதற
சிவா “அவ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக பக்கத்துல இருக்க பீச்க்கு போயிருப்பா” என்றவர் மகளை பற்றி நன்கறிந்திருந்தார்.

காரை எடுத்துக்கொண்டு ஆரு வெளியேறியதை அவள் வீட்டு வாசலில் நின்று கண்டுக்கொண்ட ரேயன் அவளை தொடர்ந்து சென்றான். ஆரு காரை அதிவேகத்தில் செலுத்திக்கொண்டிருந்ததை பார்த்து ரேயனுக்கு தான் பதட்டமாக இருந்தது “ராட்சசி, எப்படி ஓட்டுறா பாரு.. மனசுல ரேசர்னு நினைப்பு” என மனதில் அவளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அவன்.

காரை கடற்கரை சாலையில் நிறுத்தியவள் சிறிது தூரம் சென்று கடலை வெறித்தபடி நிற்க ஆத்ரேயனுக்கு தான் இப்போ இதயம் தாறுமாறாக துடித்தது.

அவளிடம் என்ன பேசவேண்டும் என்று எண்ணியவனுக்கு அனைத்தும் மறந்து விட அவளை மட்டுமே தன் கண்களில் நிரப்பிக்கொண்டிருந்தான். காலையில் அவள் பேசியது சட்டென நியாபகம் வர அதில் இறுகிய முகத்துடன் அவளை நோக்கி நடந்து வந்தான்.

இருளை வெறித்துக்கொண்டிருந்தவளின் கையை பற்றி தன் பக்கமிழுக்க அதில் அதிர்ந்து திரும்பியவள் அவனை அந்நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை.

அவன் கையில் சிக்கியிருந்த தன் கையை உருவ முயற்சித்தவள் “டோன்ட் டச் மீ” என்று கத்த, ரேயன் “ஓ.. ஹலோ மேடம், உங்களுக்கு என்ன தெரியுதா.. நான் ஏதோ உங்களுக்கு தலைல அடிபட்டு அம்னிஷியாவோன்னு நினைச்சேன்” என்று அடக்கப்பட்ட கோபக்குரலில் கேலியாக கூறினான்.

தன் கையை உருவியவள் அங்கிருந்து நகர மீண்டும் அவள் கையை பிடித்து திருப்பியவன் “நான் பேசிட்டு இருக்கேன்” என்று அழுத்தமான குரலில் கூற ஆரு கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.

அவனை வெறுப்பது போலும் கண்டுகொள்ளாதது போலும் அவள் எங்கனம் நடிப்பாள். அவள் கலங்கிய கண்கள் அவன் மனதின் சீறல்களை நிலைப்படுத்த அவள் கையை விட்டவன் ஆழ்ந்து மூச்செடுத்தான். ஆரு அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவனுக்கோ அழையா விருந்தாளியாய் வந்தது காலை அவள் பேசி சென்ற வார்த்தைகள். அடங்கிய கோபம் கிளிர்ந்தெழ அவள் இடை பற்றி தன்னோடு இறுக அணைத்தவன் அவள் மெல்லிடையை பற்றியிருந்த கையில் அழுத்தம் கூட்டி அவள் செவிகளில் இதழ் உரச “என்ன யாருன்னு தெரியல சொன்னல.. இனி நியாபாகமிருக்கும்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவளை விலகினான்.

அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன் “கவலை படாத இந்த தெரியாதவன் உன்ன லவ் பண்ணுன்னு கெஞ்ச வரல. நான் உன் முன்னாடி இல்லாததால தான உனக்கு என்ன நியாபகம் இல்ல, இனி உன் கண்ணு முன்னாடி தான் இருப்பேன்.. ஒவ்வொரு நிமிஷமும் நீ என்ன மட்டுமே நினைக்கிற அளவுக்கு உனக்கு எல்லாத்தையும் நியாபகப்படுத்துவேன்” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக கூறினான்.

ஆருவின் கண்களோ அவன் அருகாமையிலும் அவன் வார்த்தையிலும் கலங்கி தான் போனது. என்னதான் அவள் மீது கோபமாக இருப்பது போல் அவன் காட்டிக்கொண்டாலும் இப்போதும் அவள் கண்கள் கலங்குவதை பார்க்கும் சக்தி அவனுக்கில்லை என்பது அவன் அறிந்த உண்மை.

வந்தது முதல் ஆத்ரேயன் பேசினானே ஒழிய அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் பேசியிருந்தாள் கூட அவன் மனம் சமாதானம் அடைந்திருக்கும் ஆனால் அவளின் மௌனம் அவனை இன்னும் சோதிக்க தான் செய்தது.

அவனை உறுத்து விழித்தவள் அங்கிருந்து தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட ஆத்ரேயன் தான் அவள் செல்வதை பார்த்து உணர்ச்சிகலற்று நின்றான். அவள் மீது அவன் கொண்ட காதலின் அளவை அவனை விட நன்கறிந்தவளாயிற்றே அவள்.

வீட்டிற்கு வந்தவள் மாடிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள். அவள் மனதில் கோபத்தை தாண்டி வலியே மிஞ்சியிருந்தது.
“எதுக்கு அவன் முன்னாடி அழுத.. எப்போவுமே அவன் தான் உன் வீக்னஸ்.. எதுக்கு அழுத” என வாய்விட்டு கத்தியவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்துக்கொண்டு “இப்போ மட்டும் எதுக்கு வந்தாங்க.. ஒருத்தன் அங்க இன்னொருத்தன் இங்க.. ஆஆஆ” என்று ஊஞ்சல் கம்பிகளை இறுக பற்றிக்கொண்டு கத்தினாள்.

“நோ நோ நோ.. அழ கூடாது.. என்ன புரிஞ்சிக்காம போனவங்களுக்காக என்ன புரிஞ்சிக்காம நடந்துகிட்டவங்களுக்காகவும் நான் ஏன் அழனும்” என்று கூறியவள் வெகு நேரம் அழுதுகொண்டு தான் இருந்தாள்.
அவன் கைவளைவில் நின்ற இனிமையான நினைவுகள் அவளுள் அணையா தனலாய் தகிக்க அடர்ந்த அம்மாவாசை இரவில் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தாள் பாவையவள்.

ஆருவின் நிலையை பார்த்த சிவகுமாரின் இதழில் புன்முறுவல் பூக்க, நிலா “அங்க புள்ள அப்படி அழுறா நீங்க சிரிக்குறீங்க.. வாங்க போய் சமாதானப்படுத்தலாம்” என்று கூற அவரை தடுத்த சிவகுமார் “வேண்டாம் நிலா, இனி அவளே சரியாகிடுவா” என்று கூற அவரை புரியாமல் பார்த்தவர் “எப்படி சொல்லுறீங்க” என்று வினவ சிவகுமார் அதே மாறா முறுவலோடு “உன் கண்ணனும் மாப்பிள்ளையும் திரும்ப வந்துட்டாங்க.. இனி அவங்க பார்த்துக்குவாங்க” என்றவருக்கு நம்பிக்கை இருந்தது அவர்களின் ஊடல் வெகு விரைவில் சரியாகும் என்பதில். சிவகுமார் கூறியதை கேட்ட நிலாவுக்கு அவள் மீண்டும் பழையபடி மாறினால் போதும் என்றிருந்தது.

இவ்வளவு நாள் இறுகி இருந்த ஆருவின் மனதை கரைத்து அவளின் உயிர்ப்பை மீட்டெடுக்க அவளவன் வந்துவிட்டான் என்பதை அக்கணம் அவள் அறியவில்லை.

***********

அக்னியின் அறையில் நேஹா உறங்கிக்கொண்டிருக்க அக்னி அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் மனமோ “எதுக்கு இங்க வந்த.. இன்னிக்கி அவளை பார்த்து உடஞ்சு போய் வந்தேன்னு தெரிஞ்சு தான் வந்தியா இல்ல நீ சொன்ன மாதிரி என் முகம் சரியில்லாததால வந்தியா.. ஏன் வந்த.. இப்படி, என் முன்னாடி.. என் பெட்ல நீ இருந்தும் மூணாவது மனுஷன் மாதிரி இப்படி இருக்க வச்சிட்டியே.. ஏன்டி இப்படி பண்ண” என மானசீகமாக அவள் மனதுடன் உரையாடிக்கொண்டிருந்தான்.

சோபாவிலிருந்து எழுந்தவன் அவள் முன் சென்று மண்டியிட்டு “உனக்கு தெரியாது நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேனு.. உனக்கு ஒன்னு தெரியுமா, எதாவது அதிசயம் நடந்து நம்ம எல்லாரும் பழையபடி ஆகிட மாட்டோமான்னு தினமும் யோசிப்பேன் டி.. என் மனசும் சரி மூளையும் சரி உன்ன சுத்தி மட்டும் தான் இருக்கு.. எப்போவும் உன்ன சுத்தி மட்டும் தான் இருக்கு.. எங்க உன்ன காயப்படுத்திடுவேனோனு பயந்து தான்டி ஒதுங்கி போறேன், கோபத்தை காட்டுறேன் மத்தபடி நான் உன்னை வெறுக்கலடி.. என்னால உன்ன வெறுக்கவும் முடியாது அந்த அளவுக்கு உன்ன விரும்புறேன்.. என்னிக்கி என்னால நடந்ததை ஏத்துக்க முடியுதோ, என்னிக்கி நீ பண்ணத மறக்க முடியுதோ அப்போ வரேன்.. அதுவரை இப்படியே இருப்போம்.. ஐ அம் சாரி அண்ட்.. ஐ லவ் யூ” என்றவன் அவள் நெற்றியில் புரண்ட கூந்தல் கற்றைகளை ஒதுக்கிவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவன் இதழின் இனிமையை தூக்கத்திலும் உணர்ந்தார் போல் அவள் “சாரி அக்னி.. நான் வேணும்னு பண்ணல” என்று இதோடு இந்த ஆறாண்டுகளில் ஆயிரமாவது முறையாக அவள் கூற அதில் நெகிழ்ந்தவன் அவள் தலையை தடவி தூங்க வைக்க அவளும் இனிமையாக கண்ணயர்ந்தாள். அவள் நன்றாக உறங்கிவிட்டதை உணர்ந்தவன் அவள் கன்னங்களில் அழுத்தமாக தன் இதழ் பதித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான். (அவ முழிச்சிட்டு இருக்கும் போது ஒன்னும் சொல்லிடாத இப்போ மட்டும் பக்கம் பக்கமா பேசு ??‍♀️)

Advertisement