Advertisement

                அத்தியாயம் 21

நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான்.

ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர்.

ரேயன் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த
கிஷோர் “மச்சா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறேன்” என்றவாறு கிளம்பிவிட ரேயன் அலுவலகத்தினுள் நுழைந்தான்.

தன் அறைக்கு சென்றவன் ராகுலுக்கு அழைப்பு விடுத்து “ராகுல் கம் இன் வித் தி டாகுமெண்ட்ஸ்” என்றவன் சுஷ்மிதாவையும் அழைத்திருந்தான்.

வேறு ஒரு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த இருவரும் அந்த டெண்டரை பற்றி முற்றிலுமாக மறந்திருக்க இப்போ ரேயன் கேட்கவும் தான் அவனுக்கு அதன் நினைவே வந்தது.

பேயறைந்தார் போல் அமர்ந்திருந்த ராகுலிடம் வந்த சுஷ்மி “டேய் ஏன்டா இப்படி இருக்க.. யார்கூட பேசுன” என்று வினவியபடி அவன் அருகே அமர
ராகுல் “டா.. டெ.. டா” என்று உலறியவனாய் புரியாமல் பார்த்தவள் “என்னடா ஏதோ ஊமை படத்துக்கு டப்பிங் கொடுக்குற மாதிரி பேசுற.. என்னனு சொல்லு” என்று அவன் முகம் பார்க்க,
ராகுல் “ஐயோ இனி சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறேன்னு தெரியலயே” என்று புலம்ப அவனை வேற்று கிரகவாசி போல் பார்த்தவள் “லன்ச் கொண்டு வரலன்னு சொன்னா நான் தர போறேன் அதுக்கு ஏன்டா இப்படி புலம்பி சாகுற” என தலையில் அடித்துக்கொள்ள, ராகுலும் தலையில் அடித்துக்கொண்டு “அடியே நான் என் வேலையே.. இல்ல இல்ல நம்ம வேலையே போக போகுதுன்னு சொல்லுறேன்” என்று குண்டை தூக்கி போட அதில் அவன் முதுகில் மொத்தியவள் “எருமை எருமை.. கலங்காத்தால இப்படி பேசுற.. அபாசகுணத்துக்கு பொறந்தவனே” என வசை பாடினாள்.

ராகுல் “அடியே அந்த”
“அந்த”
“டெண்டர்” என்று ராகுல் கூறும்போதே சுஷ்மி விழி விரித்து “டாகுக்மெண்ட்ஸ்” என்று தொடர அடுத்து இருவரும் கோரசாக “டைப் பண்ணலேயே” என்று அலற மீண்டும் ராகுலின் டெலிபோன் அதிர்ந்தது.

மறுமுனையில் இருந்த ரேயன் “மிஸ்டர் ராகுல், என்ன தூங்குறீங்களா.. சீக்கிரம் கொண்டு வாங்க.. ஐ டோன்ட் ஹேவ் அ ஹோல் டே” என்று சீறிவிட்டு அழைப்பை துண்டிக்க இருவரும் எச்சிலை விழுங்கியபடி இருக்கையிலிருந்து எழுந்தனர்.

சுஷ்மி “போச்சு.. யூ ஆர் பையர்ட்.. அதுதானே” என்று பாவமாக கேட்க மேலும் கீழும் மண்டையாட்டிய ராகுல் “எப்படியும் வேலை போயிடும் சீக்கிரம் வா, கேட்டுட்டு போய் வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போடுவோம்” என்று முன்னே செல்ல அவன் ஷர்ட் காலரை பற்றி இழுத்தவள் “டேய் எப்படியோ போக போறோம் போறதுக்கு முன்னாடி கேன்டீன் போய் தஹி பூரி சாப்பிடிட்டு போவோம்டா” என்று முகத்தை பாவமாக வைக்க
ராகுல் “அட சே.. வா” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு ரேயனின் அறை வாசல் முன் சென்றான்.

ராகுல் கதவை தட்டாமல்  கையை பிசைந்தபடி நிற்க சுஷ்மி “அதான் இவ்ளோ தூரம் வந்துட்டோமே.. வா போவோம்” என்றழைக்க
“கதவ தட்ட பயமா இருக்கு டி” என்றான் பாவமாக.

இவர்கள் நிற்பதை பார்த்து அங்கு வந்த விஷ்ணு “எதுக்கு இங்க நிக்குறீங்க” என்று கேட்க
ராகுல் “கதவ எப்படி தட்டுறது” என சுஷ்மி முகம் பார்க்க, விஷ்ணுவோ கதவை தட்டிவிட்டு “இப்படி தான் ப்ரோ” என்றுவிட்டு செல்ல ராகுல் “அட குற மாசத்துல பிறந்த குரங்கே.. உனக்கு தட்டி பாத்து விளையாட நாங்களா கிடைச்சோம்” என்று அவனை அர்ச்சிக்க
சுஷ்மி “அதானா.. இருடா அவனை ஒரு வழி பண்ணிடுறேன்” என்று முன்னே செல்ல அவள் முடியை பிடித்து தடுத்தவன் “பிராடு பக்கி.. எங்க ஓட பார்க்குற.. வா ஒன்னா போலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

கணினியில் முகம் பதித்திருந்த ரேயன் “டாகுமெண்ட் கொடுங்க.. செக் பண்ணிட்டு தரேன்.. அதோட ஹார்ட் காபி ரெண்டு பிரிண்ட் எடுங்க அண்ட் சாப்ட் காபி மெயில் பண்ணுங்க” என்றபடி கை நீட்ட இருவரும் பேந்த பேந்த விழித்தனர்.

இருவரும் அமைதியாக இருப்பதை உணர்ந்த ரேயன் இப்போது அவர்களை நிமிர்ந்து பார்த்து “வாட்” என்க
ராகுல் “சார் அது.. டாகுமெண்ட்ஸ்” என்றிழுக்க ரேயன் அவனை தான் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ராகுலின் கையை பிடித்து சுஷ்மி கண்களை இறுக மூடியபடி “சார் எக்ஸ்ட்ரீம்லி சாரி..  நாங்க அந்த டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணல.. வேற ஒரு ப்ரொஜெக்ட் பார்த்திட்டு இதை விட்டுட்டோம்.. சாரி சார்.. எங்கள எப்படியும் வேலைய விட்டு தூக்க போறீங்க.. அதை எங்கள திட்டாம அப்படியே போயிர சொல்லுங்க அப்படியே போயிடுறோம்” என்று கூற அவர்கள் கூறிய செய்தியில் கோபம் வந்தாலும் அவர்களின் பாவனையில் சிரிப்பும் பீறிட்டது ஆனால் அதை அடக்கியவன் முகத்தை இறுக்கமாக வைத்தபடி ஏதோ பேச வருவதற்குள் அவனுக்கு கிஷோரிடமிருந்து அழைப்பு வந்தது.

அவர்களிடமிருந்து சற்று தள்ளி சென்றவன் “சொல்லுடா” என்க மறுமுனையில் இருந்தவன் “ரேயா டெண்டர் ஒரு ஒரு மணி நேரம் டிலே ஆகுமாம் சோ நீ பொறுமையாவே கிளம்பு” என்றான்.

இங்கு ராகுல் “எருமை மாடே அவரு வேலைய விட்டு தூக்குறதாவே சொல்லல.  நீயா ஏன் ஐடியா கொடுக்குற” என்று அவள் தலையில் கொட்ட அவளோ “அட போடா.. எப்படியும் அதான் நடக்க போகுது” என்றாள் சலிப்பாக.

கிஷோர் கூறிய செய்தியை நினைத்த ரேயனின் “சிட்டுவேஷன் எப்போவும் போலா இதுங்களுக்கு சாதகமாக இருக்கு” என்று தனக்குள் சிரித்தபடி அவர்கள் முன் சென்றான்.

கோபமாக இருக்கையில் அமர்ந்தவன் “சோ கொடுத்த ஒரு சின்ன வேலைய கூட உங்களால செய்ய முடியல அப்படி தான” என்று கோபக்குரலில் கேட்க இருவரும் முடிந்தமட்டும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டனர்.
ரேயன் “நான் என்ன செவித்துக்கிட்டாயா பேசுறேன்” என்று கோபமாக மேசையை தட்ட அதில் திடுகிட்டவர்கள்
“சாரி சார்” என்று கோரஸ் பாட
ரேயன் “ஆன் சாரி சொன்ன உடனே நெக்ஸ்ட் டைம் இப்படி பண்ணாதீங்கன்னு சொல்லுவேன்னு பார்க்குறீங்களா” என்று அவர்களை கூர்மையாய் பார்த்தபடி கேட்க இருவரும் மறுப்பாக தலையசைத்தனர்.

ரேயன் “எனிவேஸ்.. மிஸ் சுஷ்மிதா சொன்ன மாதிரி நீங்க பையர்ட்” என்று அவர்களை வெறுப்பேத்த கூற இருவர் முகத்தில் அதிர்வில்லை மாறாக இருவரும் இதை எதிர்பார்த்ததே என்பது போல் நின்றிருந்தனர். ரேயன் ‘அனுப்பிடுவேன்னு அவ்ளோ நம்பிக்கை’ என்று தனக்குள் கூறிக்கொண்டவனுக்கு அவர்களை பார்க்க பாவமாக தான் இருந்தது.

ராகுல் சுஷ்மி “சாரி சார்” என்று மீண்டும் மன்னிப்பு வேண்ட
ரேயன் “ஓகே.. எப்படியோ இந்த மாசம் முடியுது சோ போகும் போது உங்க செலரிய வாங்கிட்டு போங்க” என்றிட இருவரும் தலையாட்டினர்.
ரேயனே மீண்டும் “அதுக்கு முன்னாடி முடிகாத வேலைய முடிச்சிட்டு போங்க.. அந்த டெண்டர் டாகுமெண்ட்ஸ் இன்னும் அரை மணி நேரத்துல என் கைல இருக்கனும்” என்று கட்டளையிட இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.

வெளியில் வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாய் தங்கள் சோக கீதத்தை வாசித்துவிட்ட பின்னே வேலையை பார்க்க சென்றனர்.

தன் வேலையை முடித்துக்கொண்டு வந்த கிஷோர் இவர்களின் அலப்பறையை பார்த்து ராகுலிடம் “டேய் என்ன.. ரெண்டு பேரும் எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்குறீங்க” என்று கேட்க
ராகுல் “அண்ணே” என்று வராத கண்ணீரை துடைக்க
கிஷோர் “அட சீ.. என்னனு சொல்லு” என்று முறைக்க
சுஷ்மி “அண்ணா இனி உங்களால எங்களை பார்க்க முடியாது” என்று சோகமாக சொல்ல
கிஷோர் “ஏன் ஜோடியா சேர்ந்து சூசைட் எதாச்சு பண்ண போறீங்களா” என்று நக்கலாக கேட்க, ராகுல் நடந்தவற்றை கூறினான். அதில் கிஷோருக்கு கோபம் வந்துவிட அவர்களை பற்றி ரேயனிடம் பேச வேண்டும் என்று நினைத்த போது ரேயனே அங்கு வந்தான்.

ரேயன் “டாகுமெண்ட்” என்று கேட்க ராகுல் அவனிடம் அதை ஒப்படைத்தான். கிஷோர் ரேயனை முறைத்துக்கொண்டு “சார் இவங்க இனி வேலைல இல்லையா.. தே ஆர் பையர்ட் இட் சீம்ஸ்” என்று அவனை ஆழ்ந்து பார்த்தபடி கூற, கிஷோரை பார்த்து கண்ணடித்தவன் “யார் சொன்னா அப்படி.. போங்க போய் வேலைய பாருங்க” என்று ராகுலிடமும் சுஷ்மியிடமும் கூறியவன் வெளியேறிவிட, கிஷோர் “ஏதோ நல்ல மூட்ல இருக்காரு போல.. போங்க போய் வேலைய பாருங்க” என்று அவர்களை விரட்டிவிட்டு அவனும் வெளியேறினான்.

கிஷோர் காரை செலுத்த ரேயன் வழக்கத்திற்கு மாறாக சிறு புன்னகையுடன் அமர்ந்திருந்தான். வெகு நாட்களுக்கு பிறகு கிஷோருக்கு ரேயனை நினைத்து நிம்மதியாக இருந்தது. ஆனால் அதுவும் சில நிமிடங்களே. ரேயனின் முகம் யோசனையில் சுருங்கியதை கண்ட கிஷோர் “என்ன ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று விசாரிக்க
ரேயன் “தெரியல டா ஏதோ ஒரு மாதிரி இருக்கு” என்று கூற, கிஷோரின் முகத்தில் விஷம புன்னகை குடியேறியது அதை உடனே மறைத்தவன் “தண்ணி குடி” என்று கொடுக்க ரேயனும் குடித்தான்.

அவர்கள் சேர வேண்டிய இடம் வந்தவுடன் ரேயன் இறங்கிவிட, கிஷோர் “நீ உள்ள போ.. நான் பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்” என்றான்.

உள்ளே செல்ல செல்ல ஏதோ இனம் புரியாத உணர்வு மனதை தாக்க இதழ் குவித்து ஊதியவன் ஒரு இருக்கையில் சென்றமர்ந்தான்.

இங்கு யாருக்கோ அழைத்த கிஷோர் “ஹே என்ன எல்லாம் ஓகே தான”
“…”
“இன்னிக்கே ஆரம்பிக்கனும் எல்லாத்தையும்.. எவன் என்ன பண்ணாலும் சரி.. அது ரேயனா இருந்தாலும் சரி” என்றவன் மேலும் ஏதோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

கிஷோர் ரேயனின் அருகில் வந்து அமர்ந்த சமயம் ரேயன் “எந்த கம்பெனிலாம் வருது” என்று வினவ
“ஷிகர், வேந்தர் குரூப்ஸ், வெற்றி அண்ட் சன்ஸ் அப்பறம் இன்னும் சிலதுன்னு கேள்விப்பட்டேன்” என்ற தகவலை தெரிவிக்க
“ம்ம்” என்றவன் தன் அலைபேசியை நொடிக்கொண்டிருந்தான்.

நேஹாவின் மீதிருந்த கோபத்தை தன் வண்டியில் காட்டிக்கொண்டிருந்த அக்னி அதே சீற்றத்துடன் டெண்டர் நடக்கும் இடத்தினுள் நுழைந்தான். கார் சத்தம் கேட்டு கிஷோர் அவனை பார்த்தான் பின் ரேயனை பார்க்க அவன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.

டெண்டர் நடத்தும் நிறுவனம் அக்னியை  வரவேற்று ஆத்ரேயனிற்க்கு பக்கத்து வரிசையில் அவனை அமர வைக்க கிஷோர் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

கிஷோரின் பார்வையை கவனித்த ஆத்ரேயன் “என்னடா” என்று அவன் பார்வை சென்ற திசையை பார்க்க அவன் இரத்த அழுத்தமோ விண்ணை தொட்டது.
இனி தன் வாழ்வில் யாரை காணவே கூடாது என்றெண்ணினானோ அவனே தன் கண் முன் அமர்ந்திருப்பதை பார்த்து   கையை இருக்கையில் குத்தியவன் “இவன் அவ்ளோ வளர்ந்துட்டானா.. சீப்.. இவன் வந்த டெண்டரருக்கு நான் வரனும்ன்னு எந்த அவசியமும் இல்ல” என்று எழ முயற்சிக்க அவன் கை பிடித்து தடுத்த கிஷோர் “டேய் அவன் வந்தா நீ போயிடுவியா.. அவனுக்கு பயந்து போறியா என்ன” என வேண்டுமென்றே கேட்க அவனை தீயாய் முறைத்தவன் அதே முறைப்போடு “பல்ல பேத்திருவேன்.. அவனுக்கு நான் ஏன் பயப்படனும்.. அவனை இனி பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேன் (மீ :நான் இருக்குற வர அது நடக்காது?).. ஷீட்” என்று அடிக்குரலில் சீறிக்கொண்டிருந்தான். முன்னரே அவன் மீது நல்லெண்ணம் இல்லாமல் இருக்க இப்போது தன்னவள் தன்னிடமிருந்து பிரிய முழுமுதற் காரணம் அவன் தான் என்ற வெறுப்பும் சேர்ந்து அவன் மீது தீரா பகையாய் வளர்ந்தது.

கிஷோர் “ரிலாக்ஸ்.. இங்க நீ உன் வேலைக்கு வந்திருக்க அவ்ளோதான்.. சோ பிஹேவ்” என்று அவனை நிலைப்படுத்தினான்.

அக்னியின் அருகில் அமர்ந்த வேந்தர் குரூப்ஸ் முதலாளி வேந்தர் “ஹலோ மிஸ்டர் அக்னி பிரதாப்” என்று கை நீட்ட
அக்னி “ஹலோ” என்றான்.
வேந்தர் “நைஸ் டு மீட் யூ” என்று கூற
அக்னி “செம் ஹியர்” என்றான்.

வேந்தர் “இன்னிக்கி டெண்டர் ரொம்ப டஃப்பா இருக்கும் போல.. நீங்க ஆத்யன்லாம் வந்திருக்கீங்க” என்று ரேயனின் வருகையை பதிவு செய்ய, அக்னி அவரை புரியாமல் பார்த்துவிட்டு “ஆத்யான் யாரு” என்று வினவ
வேந்தர் “என்ன இப்படி கேட்டுடீங்க.. ஆத்யான் தி டேஸ்ட்ராயர் அவார்ட் வாங்குன ஏ.ஆர் குரூப்ஸ் எம்.டி. ஆத்ரேயன்.. அவரை தான் சொன்னேன்.. அதோ இருக்காரே” என்று காட்ட, அக்னி அங்கு திரும்பியும் பாராது அமர்ந்திருந்தான். அக்னியின் மனம் முழுவதும் ரேயனின் மீது வெறுப்பை உமிழ்ந்தது. உறவுகளின் நடுவே வாழ வேண்டியவனை அனாதையாக நிற்க வைத்தவன் அவனே என்ற கோபம் தனலாக தகித்து.

அவன் மனமோ “ஓ அவனும் இருக்கானா.. இன்னிக்கி நான் உன்னை ஜெயிக்க விட மாட்டேன் ஆத்ரேயன்” என்று நினைக்க, வேந்தரை பார்த்தவன் “இன்னிக்கி இதை ஜெயிக்க போறது நான்தான்.. எந்த கொம்பன் வந்தா எனக்கு என்ன” என்று திமாரக கூற, வேந்தன் அவனின் அழுத்தத்தில் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

ஆண்கள் இருவரும் வெறுப்பில் அமர்ந்திருந்தனர். ரேயன் “ஹெலோ சார்.. எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுறது.. எங்களுக்கு வேற வேலை இல்லன்னு நினைக்கிறீங்களா” என்று சத்தமிட
அக்னி தெனாவட்டாக அமர்ந்திருந்தான்.

டெண்டர் நடத்தும் நிறுவனம் “சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஒரு முக்கியமான கம்பெனி வரனும்.. அவங்க வந்துட்டா ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்னும் போதே மற்ற நிறுவனங்களும் ஆத்ரேயனிற்கு சாதகமாக பேச, அக்னி  “வேற வேலை இருந்தா கிளம்பிட்டே இருங்க.. வெட்டி ஸீன் வேண்டாம். எல்லா கம்பெனிஸ் வந்த அப்பறம் தான் ஸ்டார்ட் பண்ணனும்ங்கிற பேசிக் சென்ஸ் கூட இல்ல” என ஏகத்தாளமாக கூற, ரேயன் கோபமாக பேச வாயெடுக்க கிஷோர் அவனை தடுத்தான்.

கிஷோர் “ப்ளீஸ் ரேயா நோ” என்று கூற, ரேயனும் தேவையில்லாத பேச்சு வேண்டாம் என்று அமைதியாக அமர்ந்தான். ரேயன் அமைதியானவுடன் அந்த இடமும் அமைதியாகி விட அந்த நிசப்தத்தை கலைத்தது அவளின் காலடியோசை.

அவளை கண்ட அந்நிறுவன இயக்குனர் “ஓகே, அவங்களும் வந்துட்டாங்க சோ லெட்ஸ் ஸ்டார்ட் தி டெண்டர்.. பிபோர் தட் ஐ கார்டியலி வெல்கம் மிஸ் ஆராத்யா சிவகுமார், ஜி எம் ஆப் ஜெபி கன்ஸ்ட்ரக்ஷன்” என்று கூறிய நொடி ஆண்கள் இருவரின் இதயமும் தாறுமாறாக துடித்தது.

ஆறு நெடிய வருடங்கள் கழித்து தன்னவளை சந்திக்க போகும் படபடப்பு ஒருபுறமிருந்த போதிலும் அதை வெளியே காட்டிக்கொள்ளமல் அமர்ந்திருந்தான். அவன் அவள் மீது அலாதி பிரியம் வைத்திருந்த போதிலும் இறுக்கமெனும் போர்வையில் தன்னை மறைந்துக்கொண்டான் மன்னவன் அவன்.

ஆத்ரேயன் திரும்பி அவளை காண கூட முடியாமல் அமர்ந்திருக்க அக்னி தான் அவளை கண்டான். பேஸ்டல் பிங்க் சட்டை மேல் சாம்பல் நிற ப்ளேசர் அணிந்து அதற்கு ஏற்றார் போல் ஷு அணிந்திருந்தாள். முடியை தூக்கி ஹை போனி போட்டிருந்தவள் நிமிர் நடையுடன் முன்னிருக்கையில் அமர்ந்தாள்.

அக்னிக்கு அவன் கண்களையே நம்ப முடியாத நிலை, எப்போதும் துறுதுறுவென அலைபாயும் கண்கள் இன்று அழுத்தத்தை காட்டியது. படபடவென பேசுபவள் இன்று தேவைக்கு கூட பேசாத அளவிற்கு இறுகியிருந்தாள். இவள் தான் தங்கள் ஆரு என்று சத்தியம் செய்து கூறினால் கூட நம்ப முடியாத அளவிற்கு இறுகியிருந்தாள்.

தன் உடன்பிறவா சகோதரியாய் தான் அக்னி அவளை கண்டான் ஆனால் அவள் செய்த ஒற்றை தவறு அவர்களுக்கிடையே இருந்த அழகிய நட்பை வலியோடு முறித்துவிட்டதல்லவா.

அதுவரை ஆருவை கண்டுகொண்டிருந்தவனுக்கு அன்று நடந்த நிகழ்வு நினைவிற்கு வர அவன் முகம் இறுகிவிட்டது. என்னதான் கோபமாக இருந்தாலும் அவனால் அதற்கு மேல் இயல்பாக இருக்க முடியவில்லை என்ன தான் இருந்தாலும் அத்தனையாண்டு நட்பாயிற்றே..

இங்கு இவ்வாறிருக்க அங்கு ஆத்ரேயனிற்கோ இதயம் ரயில் வண்டியை போல் தடதடத்தது. அதற்கு மேல் முடியாது அவன் ஆருவை பார்க்க அவளோ வெகு இயல்பாக மேடையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நான் மட்டும் தான் இன்னும் இப்படி முட்டாளா இருக்கேன்னா.. இவளுக்கு எதுவும் இல்லையா.. ஒருவேளை நம்ம இங்க இருக்குறது அவளுக்கு தெரியாதோ’ என்று எண்ணியவனுக்கு சுர்ரென கோபம் எழுந்தது.

ரேயனின் முகத்தை ஆராய்ந்தபடி கிஷோர் அவன் முகம்  காண, ரேயன் “என்ன எதுக்கு அப்படி பாக்குற” என்று சீற
கிஷோர் “ஒன்னுமில்ல டா” என்றான்.
ரேயன் “இவ வரான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா தெரியாதா” என்று துளைத்தெடுக்கும் பார்வையுடன் கேள்வியெழுப்ப
கிஷோர் “அவனும் சரி இவளும் சரி.. வராங்கன்னு எனக்கு தெரியாது டா” என்று உடனே பதிலளிக்க
ரேயன் “ஓ ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டு வந்திருக்காங்க.. அதான் அவன் அவ வர வரைக்கும் வெயிட் பண்ண வச்சிருக்கான்.. அவன் பேசுனதுலயே தெரிஞ்சிது” என கொதித்துக்கொண்டிருந்தான்.

அதே போல் அக்னி “ஜோடியா வந்திருக்காங்க போல.. இவங்க வராங்கன்னு தெரிஞ்சிருந்தா டெண்டராவது ம****ன்னு வந்திருக்கவே மாட்டேன்” என்றபடி பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரும் இப்படி முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருக்க ஆருவோ இருவரையும் கண்டுகொள்ளது அமர்ந்திருந்தாள்.

டெண்டரும் தொடங்கியது, முதல் சுற்றில் 7 முக்கிய நிறுவங்கள் முதன்மை வகித்தது. அடுத்த சுற்றில் ஐந்து நிறுவங்கள் முதன்மை வகித்தது. இறுதி சுற்றில் ரேயன் அக்னி மற்றும் ஆருவின் நிறுவங்கள் மட்டுமே எஞ்சியிருந்தது.

இறுதி சுற்றில் பேசிக்கொண்டிருக்கும் போது ஆத்ரேயன் மற்றும் அக்னி ஒரே சமயம் ஆருவை காண ஆருவின் தரப்பு இறுதியானது.

கிஷோர் “டேய் என்னடா விட்டுட்ட” என்று தெரியாதது போல் கேட்க
ரேயன் “ஆன் வேண்டுதல்.. ஜஸ்ட் கெட் லாஸ்ட்” என்றான் சீறலாக, கிஷோரும் அதற்கு மேல் எதுவும் பேசாது அமைதியாகினான்.

டெண்டரில் ஜெபி நிறுவனம் வெற்றி கனியை பறித்திட ஆரு மேடையேறி தேவையான கோப்பைகளில் கையெழுத்திட்டாள்.

ஆருவின் கையில் மைக்கை கொடுக்க அதை பெற்றவள் “குட் மார்னிங், இட்ஸ் பீன் இம்மென்ஸ் ப்ளெஷார் டூ ரிஸீவ் இட்.. தேங்க் யூ”  என்றவள் மேடையை விட்டு இறங்க எத்தனிக்க அதற்குள் பத்திரிகையாளர் ஒருவர் “மேம் ஒரு நிமிஷம்.. ஏ. ஆர் அப்பறம் Buro போன்ற பெரிய கம்பெனிஸ் பங்குபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது உங்களுக்கு எப்படி இருக்கு” என்று கேட்க, ஆண்கள் இருவரும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் அப்போதும் அவர்களை காணாமல் கேள்வி கேட்டவரை அழுத்தமாக பார்த்தவள் “அவங்க பெரிய கம்பெனினா அப்போ நாங்க.. என்ன சொல்ல வரீங்க மிஸ்டர்” என்று அழுத்தமாக கேட்க அவரோ “ஐயோ அப்படி இல்ல மேம்.. தப்பா நினைச்சிக்காதீங்க” என்று சிறு குரலில் கூற
ஆரு “இட்ஸ் ஆல் அபௌட் ஹார்டவர்க் அண்ட் டெடிக்கேஷன்” என்றவள் மேடையிலிருந்து இறங்கினாள்.

அக்னியின் அருகிலிருந்த ஒருவன் அவள் பேசியதை கேட்டு “என்ன திமிரு பார்த்தியா.. இவளும் கௌதமும் இல்லனா அவ எம்.டி. ஒன்னுமேயில்ல அதான் இந்த திமிரு” என்று தன் நண்பனிடம் கூற அக்னி அவர்களை அனல் தெறிக்க பார்த்தான். அக்னியின் பார்வையில் அவர்கள் கப்சிப்பென அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

ஆத்ரேயனின் அருகிலிருந்த ஒருவன் “என்ன தான் திமிரா பேசினாலும் ஆள் பாக்க செம்மையா இருக்கா.. நான் கூட மூன்னு வாட்டி பேச ட்ரை பண்ணேன் ஆனா அவ கிட்ட கூட விடல.. எப்படியாவது அவளை கரெக்ட் பண்ணனும்.. என் அப்பாமூலயுமாச்சு கரெக்ட் பண்ணனும்” என்று பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகே சென்ற ரேயன் அவன் காதருகே குனிந்து “இதே மாதிரி பேசிட்டு இருந்த உன் அப்பன்கிட்ட நீ போறதுக்கு முன்னாடி உன் பாடி தான் போகும்” என்று வார்த்தைகளை கடித்து துப்ப ரேயனை பற்றி அறிந்தவர்களோ அதற்கு மேல் வாயே திறக்கவில்லை.

கிஷோர் “சரி வா போலாம்” என்றழைக்க ரேயன் அசையாது நின்றான்.
கிஷோர் “சார் போலாம்” என்று அழுத்தி கூற அப்போதும் அசையாது நின்றவனுக்கு அவள் அக்னியுடன் பேசுகிறாளா என்பதை நோட்டமிட  அக்னியும் அதே காரணத்திற்காக வெளியேறாமல் காத்துக்கொண்டிருந்தான்.

மேடையிலிருந்து இறங்கியவள் வாசலை நோக்கி நடக்க அதற்குள் அவளை சூழ்ந்த பத்திரிக்கையாட்கள் ஏதேதோ கேள்வி கேட்க அவளும் பொறுமையாக பதிலளித்தாள். இறுதியாக ஒருவர் “மேம் ஒரு ரிசர்ச் படி மிஸ்டர் ஆத்ரேயன் அப்பறம் மிஸ்டர் அக்னி உங்க காலேஜ்ன்னு தெரியவந்தது.. உங்களுக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா” என்று கேள்வியெழுப்ப, அக்னியும் ஆத்ரேயனும் அவளை பார்த்தபடி நின்றனர்.

ஆராத்யா “சாரி அப்படி யாரையும் எனக்கு அப்போ தெரியாது..  இப்போவும் தெரியாது” என்று அழுத்தமாக கூறிவிட்டு செல்ல அக்னியும் ஆத்ரேயனும் அதிர்ந்து நின்றனர்.

அவள் ஆத்ரேயனுடன் பேசுகிறாள் என்று அக்னி நினைத்திருக்க, அவள் அக்னியுடன் பேசுகிறாள் என்று ரேயன் நினைத்திருக்க அவளோ இருவருடனும் பேசவில்லை என்பது அவர்கள் எதிர்பாரா ஒன்று.

அலுவலகம் செல்லும் வழியில் ரேயன் அவளை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான்.
ரேயன் “டேம்.. எவ்ளோ திமிரு இருந்தா தெரியாதுன்னு சொல்லிருப்பா.. என்ன தெரியாதா.. நான் தான் அப்படி சொல்லனும்” என்று அர்ச்சித்துக்கொண்டே வர கிஷோர் அமைதியாக கார் ஓட்டிக்கொண்டிருந்தான்.

அலுவலகம் வந்தவன் தன் பிரத்யேக இழுப்பறையில் இருந்த புகைப்படத்தை கையில் எடுத்தான். அதில் ரேயன் அமர்ந்திருக்க ஆரு அவனுக்கு பின் நின்று அவள் தோள் மீது கை போட்டு
நிற்பது போல் இருந்தது. அதை பார்த்தவன் “நான் இன்னிக்கி வர உன்ன மறக்கமுடியாம கஷ்டப்படுறேன் ஆனா நீ.. மாட்டேன்.. இனி உன்ன பத்தி நினைக்கவே மாட்டேன்” என்றவன் அந்த புகைப்பதை அதே இடத்தில் வைத்துவிட்டு தன் கணினியை இயக்கினான்.

டெண்டரிலிருந்து அலுவலகம் சென்ற அக்னி கோபத்தின் உச்சியில் இருந்தான். அலுவலகத்தினுள் நுழையும் போதே ஏதோ பிரச்சனை என்பதை கண்டுகொண்டவன் நேஹாவை சுற்றி நின்றுகொண்டிருந்த ஆட்களை ஒதுக்கிவிட்டு சென்றான். அங்கு அக்னியின் க்ளையண்ட் கைலாஷ் நின்றுகொண்டிருந்தார் அவருக்கு.

கைலாஷின் பி.ஏ. சசி நேஹாவிடம் எகிறிக்கொண்டிருந்தான்.
சசி “என்ன நீ சொல்லுறத நாங்க நம்பனுமா.. எவ்ளோ தைரியமிருந்தா எங்க பாஸ அடிச்சிருப்ப.. உனக்கு இருக்கு” என்று மிரட்டிக்கொண்டிருக்க அங்கு சென்ற அக்னி நேஹாவை பார்க்க அதுவரை அழுத்தமாக நின்றுக்கொண்டிருந்தவள் தன்னவனை பார்த்ததும் கலங்கிவிட ஆனால் அதை பெரும்பாடுப்பட்டு அடக்கியவள் அமைதியாக நின்றாள்.

அக்னி “என்ன ஆச்சு மிஸ்டர் கைலாஷ்” என்று விசாரிக்க, அவருக்கும் முன் அவரின் பி.ஏ சசி “என்ன ஆச்சா.. சார் உங்க பி.ஏ எங்க எம்.டிய கை நீட்டி அடிச்சிருக்கா” என்று குற்றம்சாட்ட அக்னி அவனை முறைத்துவிட்டு “நான் கேட்டது மிஸ்டர் கைலாஷ் கிட்ட.. அண்ட் என் ஸ்டாப்பை மரியாதை இல்லாம பேசுனா எனக்கு பிடிக்காது” என்று அழுத்தம் திருத்தமாக கூற சசி அமைதியானான்.

கைலாஷ் “நான் உங்களை மீட் பண்ண வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மிஸ்டர் பிரதாப், அப்போ இந்த பொண்ணு உங்க பர்மிஷன் இல்லாம உங்க கபோர்ட்ல இருந்த பைலை எடுத்தா அதை என்னனு கேட்டதுக்கு அடிச்சிட்டா அதை என் பி.ஏ பார்த்திட்டாரு” என்று நடந்தவற்றை தனக்கு ஏற்றார் போல் கூற
சசி “சொல்லுங்க பிரதாப் சார்.. இப்போ என்ன சொல்ல போறீங்க.. பையர் ஹர், அதுக்கு முன்னாடி சார்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க” என்று கூற, அக்னி மார்பிற்கு குறுக்கே கைகட்டி “நான் மறுபடியும் சொல்லுறேன் நான் உங்ககிட்ட பேசல மிஸ்டர் சசி.. சோ” என்றவன் வாயில் கைவைக்க சசியும் அவனை மனதில் அர்ச்சித்தபடி நின்றான்.

அக்னி “நேஹா ஆஸ்க் சாரி” என்று உத்தரவிட அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள். அக்னி “என்ன பார்வை.. மன்னிப்பு கேளுங்க” என்று அழுத்தமாக கூற
நேஹா “நோ சார்.. நான் எந்த தப்பும் பண்ணல, நான் யாருக்கிட்டயும் மன்னிப்பு கேட்கமாட்டேன்.. நீங்க என்ன வேலைய விட்டு அனுப்புனாலும் சரி” என்றாள் உறுதியாக.

அவள் உறுதியை கண்டு புருவம் சுருக்கியவன் “நீங்க அவரை அடிச்சது உண்மையா இல்லயா”
“உண்மை தான்”
“ஏன்” என்று அக்னி கூர்மையாக கேட்க
கைலாஷ் “அதான் சொன்னேன்ல பிரதாப்” என்று கூற அவனை ஒரு கரம் நீட்டி தடுத்தவன் “சொல்லுங்க” என்று நேஹாவை பார்க்க அவளோ அதை கூற முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

அக்னி “கைலாஷ் உங்களுக்கு தெரியாதா என்ன என் ரூம்ல கேமரா இருக்கு” என்று நக்கலாக கூற அதில் அவர் முகம் வெளிறி போனது. அக்னியை பார்க்க அவர் காத்துக்கொண்டிருந்த போது ஏதோ கோப்பையை எடுக்க நேஹா அங்கு சென்றாள் அப்போது அவர் அவளிடம் அத்துமீற பார்க்க அவளோ அவரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாள்.

அக்னி கூறியதை கேட்ட கைலாஷ் “என்ன சொல்லுறீங்க மிஸ்டர் பிரதாப்” என்று அதிர்ந்து கேட்ட மறுநொடி அக்னியின் கரம் அவர் கன்னத்தை பதம் பார்த்தது.

அக்னி “எங்க வந்து யார்மேல கை வைக்கிற.. உனக்கும் ஒரு பொண்ணு இருக்கு” என்றவன் “என் கண்ணுல இருந்து எதுவும் தப்பாது.. ஒழுங்கா அவ கால்ல விழு” என்று மிரட்ட
அவரோ “வாட்” என்று அலற
அக்னி “விழிறியா இல்ல விழ வைக்கிட்டா” என்று புருவமுயர்த்த கைலாஷ் அவள் காலில் விழுந்தார் ஆனால் அதற்கு முன் நேஹா அங்கிருந்து சென்றிருந்தாள்.

அக்னி காவல்துறைக்கு  அழைத்து அவரை ஒப்படைத்துவிட்டு  நேஹாவை பார்க்க அவளோ அப்போது தான் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்.

தன் அறைக்கு சென்ற அக்னிக்கு டெண்டரில் தோற்றத்தை விட ஆருவின் வார்த்தைகளை நினைத்து தான் மனம் பிசைந்தது. அவனுக்கு கோபத்தை விட வருத்தமே அதிகமாக இருந்தது. தான் கூறும் போது எதுவும் தெரியாத வார்த்தைகளை அவளின் வழி கேட்டவனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆருவின் நினைவில் இருந்தவன் இங்கு நடந்த கலவரத்தில் அதை மறந்திருந்தான். இப்போது அவன் சிந்தையில் இருந்தது என்னவோ அவனவள் மட்டுமே.

நேஹாவை உள்ளே அழைத்தவன் அவள் அருகே இருந்த அலமாரியில் ஏதோ கோப்பையை தேடியபடி “அந்த பெண்டிங் ட்ரான்சகஷன்லாம் என்ன ஆச்சு” என்று கேட்க
“முடிய போகுது சார்” என்றவளின் குரலே உள்சென்றியிருக்க
“ம்ம்.. நீங்க போகலாம்” என்றான்.

அவளோ அங்கிருந்து நகராமல் இருக்க “என்ன” என்றான் அவளை பார்த்தபடி
நேஹா “இந்த ரூம்ல cctv கிடையாதே..  அப்போ ஏன் அப்படி சொன்னீங்க” என்று கேட்க
அவனோ “உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியமில்ல” என்றான்
நேஹா “நான்தான் இதுல சம்மந்தப்பட்டிருக்கேன்” என்று கூற
அக்னி “ஆமா.. ஆனா நான் சொல்லனும்னு நினைச்சாதான் சொல்லுவேன்.. என்ன பண்ணுவ” என்று மார்பிற்கு குறுக்கே கை கட்டி திமிராக சொல்ல, அவனை பார்த்து முறைத்தவள் கதவருகே சென்றாள். பின் என்ன நினைத்தாளோ மீண்டும் அவனருகே சென்றவள் அவன் கரத்தை எடுத்துவிட்டு அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் அழவில்லை இதற்கெல்லாம் அழுபவலும் இல்லை அவளை அழ வைக்கும் சக்தி கொண்டவன் அவள் மன்னவன் ஒருவனே. நேஹா அக்னியை அணைத்துக்கொண்டிருக்க அவனோ அவளை அணைக்கவும் இல்லை விலக்கவுமில்லை, அவளுக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.

நேஹா அவனை அணைத்தவண்ணம் “தேங்க்ஸ்.. புரிஞ்சிகிட்டதுக்கு” என்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட அவளை பார்த்தவன் ஒரு பெருமூச்சோடு தன் இருக்கைக்கு சென்றான்.

அலுவலகம் செல்லும் வரை எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்த ஆராத்யா தன் அறைக்கு சென்றபின் தலையில் கைவைத்தபடி அமர்ந்துக்கொண்டாள். என்னதான் அவர்கள் முன் இறுக்கமாக காட்டிக்கொண்டாலும் அவளின் இரு கண்கள் அல்லவா அவர்கள்.

ஆரு தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருக்க அவள் அறையை கடந்து சென்ற கௌதம் அவள் அப்படி இருப்பதை பார்த்து அவள் அறை கதவை தட்டினான்.
ஆரு “கம் இன்” என்று குரல் கொடுக்க அங்கு சென்றவன் “பைனல் லிஸ்ட் வேணும்” என்று கேட்க
ஆரு “ப்ளீஸ்.. நான் இப்போ அதை பார்க்குற மூட்ல இல்ல.. அப்பறமா வா” என்று கேட்டுக்கொள்ள
கௌதம் “டெண்டர் முடிச்சிட்டு வீட்டுக்கு போகலாம்னு இருக்கீங்களா.. வேற வேலையும் இருக்கு பாக்க” என்று கூற
ஆரு “இவ்ளோ நேரம் எனக்கு இது தோணால.. பட் தேங்க்ஸ் பார் தி ஐடியா” என்றவள் ஜெபிக்கு அழைத்து
தகவலை தெரிவித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள். இங்கிருந்தால் அவள் எதையாவது போட்டு குழப்பிகொள்வாள் என்பதை அறிந்தவன் அவளை வீட்டுக்கு அனுப்ப எண்ணி தான் அவள் அறைக்குள் நுழைந்தான். தான் எது கூறினாலும் அவள் நேர்மறையாக தான் செய்வாள் என்பதை உணர்ந்து தான் அவன் அவளை வேலையை பார்க்கும்படி கேட்டுக்கொண்டான் ஆனால் அவன் நினைத்தபடி அவள் அதற்கு மேல் அங்கிருக்காமல் வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். அவள் செல்வதை பார்த்து கௌதமும் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.

அக்னிக்கு இரவு வீட்டிற்கு செல்லவே மனமில்லை அங்கு சென்றாலும் தனிமையில் தான் பொழுதை கழிக்க வேண்டும் என்றெண்ணியவன் இரவு வெகுநேரமாகியும் அலுவலகத்தில் தான் இருந்தான். எப்போதும் நேஹா அக்னி கிளம்பும் போது தான் கிளம்புவாள் ஆனால் இன்று தாமதமாகியும் அவன் கிளம்பாமல் இருப்பதை கண்டு யோசனையில் இருந்தவள் அவன் அறைக்கு சென்றாள்.

நேஹா அவன் அறைக்கதவை தட்டிவிட்டு நிற்க, அவள் தான் என்றறிந்து அக்னி அமைதியாக இருக்க உள்ளே நுழைந்திருந்தவள் இருக்கையில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தவனின் முன் நின்றாள்.
அக்னி ” இன்னும் வீட்டுக்கு போகாம என்ன பண்ணுற” என்று கேள்வியெழுப்ப
“போகணும்” என்றாள்.
அக்னி “கிளம்பு” என்று உத்தரவிட சிறிது தயங்கியவள் “நீங்க போகல” என்று அவனை பார்க்க
“எனக்கு போக தெரியும், நீ போ” என்றான்
“இல்ல அது” என்று அவள் ஏதோ கூற வர “அவுட்” என்றான் சீறலாக, அதில் பெண்ணவளின் முகம் வாடிவிட அவனுக்காக வாங்கி வந்த சப்பாத்தி ரோல்லை அவன் முன் வைத்துவிட்டு அங்கிருந்து கோபமாக வெளியேறினாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் அவனும் கிளம்பினான் அவள் வைத்துவிட்டு சென்ற உணவை பார்த்தவன் ஒரு பெருமூச்சோடு அதை எடுத்துக்கொண்டு சென்றான்.

அக்னி காரை எடுத்துக்கொண்டு செல்ல நேஹாவும் திருட்டுத்தனமாக அவன் பின் சென்றாள். ஏதோ யோசனையில் காரை செலுத்தியவனும் அவளை கவனிக்க தவறினான்.

அக்னி வீட்டினுள் சென்றிட நேஹா வாயிலில் நின்றாள். கேட்டை மூட வந்த வேதாச்சலம் நேஹாவை பார்த்து “நேஹா மா” என்றழைக்க, அதில் தன் யோசனையில் இருந்து மீண்டவள் “வேதா ண்ணா” என்று வண்டியிலிருந்து இறங்கினாள்.

இங்கு வருவது அவளுக்கு முதல் முறையல்ல, அக்னி இல்லாத பொழுதில் அவனுக்கு பிடித்தவை பிடிக்காதவை பற்றி வேதாச்சலத்திடம் கூறுபவள் அவளே. அடிக்கடி இங்கு வந்துள்ளால் தான் ஆனால் என்றும் வீட்டினுள் நுழைந்ததில்லை.

அடிக்கடி வீட்டிற்கு வருபவள் ஜாக்கியுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு வேதவிடம் பேசிவிட்டு செல்வது வழக்கமே. ஜாகிக்கும் அவளை பிடித்து போனது தான் அதிசயமான ஒன்றாயிற்று.

வேதாச்சலம் “என்ன மா இப்போ வந்திருக்கீங்க” என்று அக்கறையாய் வினவ
நேஹா “அது அவன் கொஞ்சம் சரியில்ல ண்ணா.. அதான்” என்று இழுக்க
வேதாச்சலம் “தம்பி திட்டுவாரே மா.. இப்போ வந்திருக்கீங்களே மணிய பார்த்தீங்களா” என்று கேட்க
“அவனை அப்படியே விட்டு போக மனசு கேட்கல ண்ணா அதான் வந்துட்டேன்” என்றாள் சிறுகுரலில்.

நேஹாவின் மூலம் அக்னியை பற்றி அறிந்தவர் அதை என்றுமே அவனிடம் காட்டிக்கொண்டதில்லை அதே சமயம் அக்னியின் மீது உயிரேவைத்திருக்கும் நேஹாவின் மீது அவருக்கு தனி மதிப்பு இருக்க தான் செய்தது.

வேதா “சரி உள்ள வாங்க மா” என்றழைக்க
“பயமா இருக்கு ண்ணா.. அவன் திட்டுவான்” என்று முகத்தை சுருக்கினாள்.
வேதா “அதான் வந்துடீங்களே.. இனி என்ன பயம்.. எப்போவும் இங்க நின்னே பேசிட்டு போயிடுவீங்க.. இனிக்காச்சு உள்ள வாங்க” என்றழைக்க அவளும் தயங்கியபடி உள்ளே நுழைந்தாள்.

நேஹா நுழைந்தவுடன் ஜாக்கி அவள் மீது தாவ அதன் தலையை வருடிகொடுத்தவள் “டேய் ஜாக்கி பையா” என்று அதனுடன் விளையாட
வேதா “மேல போங்கமா” என்று அவளை அனுப்பி வைத்தார்.

வீட்டிற்க்கு அழைத்து ஏதேதோ கூறி சமாளித்தவள் அக்னியின் அறை முன் நின்றாள்.

கதவை தட்ட கையெடுத்தவளிடன் இதயமோ வெளியே விழுந்து விடும் அளவிற்கு துடித்துக்கொண்டிருந்தது.

நேஹா பேந்த பேந்த விழித்தபடி நிற்க, ஏதோ தோன்ற அக்னி தன் அறை கதவை திறந்தான். வாயிலில் நின்ற நேஹாவை பார்த்து விழி உயர்த்த அவளோ “ஆ.. அது.. ஒரு பைல்..” என்று ஏதேதோ கூற அவளை சில வினாடிகள் கூர்ந்து நோக்கினான்.

அவளுக்கு அவன் பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட அவனோ எதுவும் பேசாது அவளை இறுக அணைத்திருந்தான். அவன் அணைப்பில் பெண்ணவள் பாகாய் கரைந்திருக்க அவனோ எலும்புகள் நொறுங்கிவிடும் அளவிற்கு அவளை இறுக அணைத்திருந்தான்.

அங்கு ஆராத்யாவின் அறையில் அனைத்து பொருளும் கீழே விழுந்து உடைந்திருக்க ஆத்ரேயனின் இறுகிய அணைப்பில் நின்றிருந்தாள் பெண்ணவள். ஆனால் இரு ஆண்களும் பழைய ரேயனோ அக்னியா அல்ல..

Advertisement