Advertisement

                   அத்தியாயம்

20

         டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு தட்டப்பட்டது.

ஆரு “எஸ் கம் இன்” என்று உத்தரவு பிறப்பிக்க, அங்கு வந்து நின்றது என்னவோ அவர்கள் நிறுவனத்தின் ப்ரொஜெக்ட் மேனேஜர் கௌதம், இருபத்தியாறு வயது வாலிபன்.

ஆரு இங்கு சேரும் போது தான் அவனும் சேர்ந்திருந்தான், அந்நிறுவனத்தின் அயராத உழைப்பாளிகளில் அவனும் ஒருவன். நேர்மையின் மறு உருவம், எதையும் முகத்திற்கு நேராக கூறிவிடும் குணம் கொண்டவன் மொத்தத்தில் மிஸ்டர் பெர்பெக்ட்.

ஆருவிற்கும் அவனுக்கும் முன்பகை ஏதுமில்லை ஆனால் இருவரும் சற்று சிடுமூஞ்சிகள் தான். முன்னமே இறுகி காணப்படுபவள் கௌதமிடம் இன்னும் காரமாக தான் காணப்பட்டாள் ஆனால் அவனும் அவளுக்கு சலைத்தவன் அல்ல.

ஆராத்யாவின் அறைக்கு வந்த கௌதம் “லாஸ்ட் ப்ரொஜெக்ட் ரெடி.. அதை பைனல் பண்ணிட்டா நான் மேற்கொண்டு அடுத்த வேலைங்கள பார்ப்பேன்” என்றிட

ஆரு அதை வாங்கி “ஓகே நான் பாக்குறேன் ஆனா இப்போ முடியாது.. ஒரு டெண்டருக்கு போகணும்” என்க, கௌதம் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி “இப்போ இதை செக் பண்ணா தான் நான் மேற்கொண்டு தொடர முடியும்” என்று அழுத்தமாக கூற ஆராத்யா திமிராக “அப்போ ஜெபி சாருக்கு கால் பண்ணி டெண்டர் வேலையெல்லாம் ஆராத்யா இப்போ பாக்க மாட்டாங்க ஒரு ப்ரொஜெக்ட் வேலை பாக்குறாங்கனு சொல்லுங்க.. ஓகே சொன்னா பாக்குறேன்” என்றபடி தன் இருக்கையில் சாய கௌதம் அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவன் “ஓகே” என்று வெளியேற, ஆரு ‘இவ்ளோ சீக்கிரம் ஒத்துக்குற ஆள் இல்லையே இவன்’ என நினைத்தவள் பின் தோளை உலுக்கிக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவளை அழைத்த ஜெபி “ஆராத்யா, அந்த ஆழ்வார்பேட் சங்கரோட பில்டிங் அவுட் லைன் செக் பண்ணி முடிங்க.. லேட் தெம் ஸ்டார்ட் தேர் வர்க்.. அவர் ரொம்ப ப்ரெஷர் போடுறாரு” என்க

“ஓகே சார்” என்றவளுக்கோ கௌதமை நினைத்து கடுப்பாக இருந்தது.

தன் வேலைகளை ஒதுக்கிவிட்டு கௌதமின் அறைக்கு செல்ல அங்கு அமர்ந்திருந்தது என்னவோ சித்து தான்.

சித்து, அந்நிறுவனத்தின் HR மேனேஜர், கௌதமின் உற்ற நண்பன் ஆனால் கௌதமை போல் சிடுமூஞ்சி அல்ல. சித்து இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. சித்துவிற்கு ஆரு என்றால் பிடிக்கும் அவள் சிடுசிடுவென எரிந்து விழுந்தாலும் அவன் அதை கண்டுகொள்ள மாட்டான்.

கௌதமின் அறையிலிருந்த சித்து ஆருவை பார்த்து “ஜி.எம். மேடம் குட் மார்னிங்” என்று சல்யூட் அடிக்க அவனை முறைத்தவள் “செம்ம காண்டுல இருக்கேன் வெறுப்பேத்தாத” என்றாள்.

சித்து “நீ வெறுப்புல இல்லாம இருந்தா தான் ஆர்ச்சிர்யம் ஜி.எம்.” என நக்கலடிக்க அதை கண்டுகொள்ளதவள் “கௌதம் எங்க” என்றாள் கேள்வியாக சித்து “ஆரம்பிச்சாச்சா.. அவன் சைட் விசிட் போயிருக்கான்” என்ற தகவலை தெரிவிக்க

ஆரு “அவுட்லைன் எங்க” என்றாள் கடுப்புடன்,

சித்து “நீ வருவேன்னு குடுக்க சொல்லிட்டு தான் போனான்” என்றவன் அந்த கோப்பையை அவளிடம் ஒப்படைக்க அதை அவனிடமிருந்து பிடிங்கியவள் “இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. வேலை இருக்கு இப்போ பண்ண முடியாதுன்னு சொன்னா அந்த ஷங்கர  வச்சு எம்.டி கிட்ட பேச வச்சிருக்கான்” என்று பொரிய சித்து அடக்கமட்டாமல் சிரித்துக்கொண்டே “ஐயோ பாவம்” என்க ஆரு அவனை தீயாய் முறைத்தாள் அதில் சிரிப்பை பெரும் பாடு பட்டு அடக்கியவன்  “சரி சரி முறைக்காத.. நீ மட்டும் அவன்கிட்ட சாதாரணமாவா பேசிருப்ப.. கண்டிப்பா நக்கலா தான் பேசிருப்ப” என்று அவளை பார்க்க அவளோ எதுவும் பேசாது தன் அறைக்கு சென்றாள். அவள் செல்வதை பார்த்தவன் “ஒரு மனுஷன் அதுவும் HR நிக்கிறேன் ஒரு மரியாதை குடுக்குறாளா பாரு.. அதான் டீம்ல இருக்குறவங்க கூட மதிக்க மாட்டேன்கிறாங்க.. சே” என தனக்கு தானே புலம்பியவன் தன் வேலையை காண சென்றான்.

விடுதியில் ரேயன் குளித்து முடித்துவிட்டு மடிகணினியின் முன் அமர்ந்து எதையோ தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கவனத்தை திசை திருப்பியது நிரஞ்சனாவின் அழைப்பு. அதை யோசனையுடனே ஏற்றவன் எதுவும் பேசாது அமைதி காக்க

ஜனா “சென்னை வந்திருக்க போல” என்றாள் எடுத்த எடுப்பிலே

“….”

“உன்னதான் கேட்குறன்” என்று அழுத்தமாக வினவ

“ம்ம் ஆமா.. ஒரு டெண்டர் விஷயமா” என்று தகவல் தெரிவிக்க

ஜனா “ஆபீஸ் வந்துட்டு போ” என்றாள்.

ரேயன் “டைம் இருக்காது” என்று மறுக்க

ஜனா “நான் உன்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணல.. ஆர்டர் பண்றேன்.. வர.. அவ்ளோ தான்” என்க,

ரேயன் “ஏன் வீட்டுக்கு கூப்பிட மாட்டியா” என்று இறுகிய குரலில் கேட்க

ஜனா “கூப்பிட்டா மட்டும் வருவியா.. வீட்டுக்குலா வேண்டாம் ஆபீஸ் வா போதும்” என்றிட

“இப்போமாட்டும் எதுக்கு பார்க்க கூப்பிடுற.. கூப்பிடாமலே இருக்கலாம்லா”

“நான் உன் அளவுக்கு அழுத்தக்காரி இல்ல.. கொஞ்சம் தான்.. அதான் இவ்ளோ தூரம் வந்தவன பார்க்காம இருக்க முடியல.. சோ கிளம்பி வா” என்று உத்தரவிட

ரேயன் “ஹ்ம்ம் சரி” என்று ஒப்புக்கொண்டான்

ஜனா “ஹான் வை” என்க, ரேயன் அழைப்பை துண்டிக்காமல் தயங்கினான்.

ஜனா “என்ன சொல்லு” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க

“இல்ல ஒன்னுமில்ல” என்றான். அவனுடன் பிறந்தவள் அறியமாட்டாளா அவன் கூற வந்ததை உடனே “மித்துவை கூட்டிட்டு வரேன்” என்க, ரேயனின் முகத்தில் கீற்று புன்னகை வந்தமர்ந்தது.

ரேயன் “எனக்கு பத்து மணிக்கு வேலை இருக்கு.. இப்போ டைம் 8.. இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்”

“சரி” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

மித்து, நிரஞ்சனா பிரகாஷ் தம்பதியின் ஒரே செல்ல மகள். நிரஞ்சனா பிரகாஷ் திருமணம் நடந்து ஏழு வருடங்களாகியிருந்து. அவர்களுக்கு நான்கு வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் மித்து, இப்போது மித்துவிற்கு மூன்று வயது.

நிரஞ்சனாவை பார்க்க தயாராகிக்கொண்டிருந்த ரேயனின் அறைக்கு வந்த கிஷோர் “என்ன இப்போவே கிளம்புற” என்று மணி பார்க்க,

ரேயன் “ஜனா கூப்பிட்டா” என்றான் அதில் விழி விரித்தவன் “ப்பா.. போறியா என்ன.. வாவ்” என்க ரேயன் எதுவும் பேசாது கிளம்பினான்.

கிஷோர் “மித்து பாப்பா பிறக்கும் போது கூட பாக்க போல நீ.. அக்கா உன் மூஞ்ச கூட பாக்க மாட்டாங்கனு நினைச்சேன்” என்றான் வேண்டுமென்றே ஆனால் ரேயன் எதுவும் பேசாது அமைதி கத்தான். அப்போதும் கிஷோர் விடாது “இப்போ மட்டும் ஏன் போற.. மித்துக்கு கல்யாணம் ஆகும்ல அப்போ போ.. இல்ல இல்ல அப்போவும் வீடியோ கால்ல பாரு” என்று குத்தலாக கூற ரேயன்  “டேய்” என்றான் உறுமலாக,

கிஷோர் “என்ன.. கத்துனா மட்டும் நீ பண்ணது சரி ஆகிடுமா.. அம்மா எவ்ளோ பீல் பண்றாங்கனு தெரியுமா.. அக்காக்கு எப்படி இருந்திருக்கும், அக்கா எதுவும் காட்டிக்க மாட்டாங்க அதனால ஒன்னும் தெரியல” என்று ரேயனை குற்றம் சாட்ட, ரேயன் அவனை அடிபட்ட பார்வை பார்த்தான். அவர்களுக்கு வலி என்றால் அவனுக்கும் அதே நிலை தானே. இப்போதும் போகாமல் இருந்திருப்பான் தான் ஆனால் ஏனோ நிரஞ்சனாவிடம் மறுத்து பேச அவனுக்கு மனம் வரவில்லை எனவே அவளை காண ஒப்புக்கொண்டான்.

ரேயன் கிளம்பி செல்ல கிஷோரும் அவனுடன் இணைந்துகொண்டான். கிஷோர் ATM சென்றிருக்க அதற்குள் ரேயன் தன் மருமகளிற்காக இனிப்புகள் பொம்மைகள் என்று பலவற்றை வாங்கி குவித்திருந்தான்.

ரேயனின் கார் Nansho நிறுவனத்தின் முன் நின்றது. ரேயன் ஜனாவிற்கு அழைப்பு விடுக்க அவளோ அவர்களை தன் அறைக்கு வரும்படி உத்தரவிட்டாள்.

இருவம் நிரஞ்சனாவின் அறைக்கு செல்ல அவளோ அவர்களை எதிர்பார்த்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தாள். அவள் அறையினுள் நுழைந்த ரேயன் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு அமர கிஷோர் தான் நிரஞ்சனாவை தோளோடு அணைத்து “எப்படி இருக்கீங்க க்கா” என நலம் விசாரித்தான்.

ஜனா “நல்லா இருக்கேன் கிச்சா.. நீ எப்படி இருக்க” என்று அவள் கேள்வியெழுப்ப, ரேயனை ஒரு பார்வை பார்த்தவன் “ஏதோ இருக்கேன்” என்றான். அவன் பாவனையில் சிரித்தவள் “அது உன் விதி டா” என்று கலாய்க்க கிஷோரும் புன்னகைத்தான். ரேயனின் கண்கள் என்னவோ வந்ததிலிருந்து அந்த அறையை தான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அதை கவனிதவள் “ஏன் நான்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா” என்று முறைக்க

“எப்படி இருக்க” என்று வினாவினான் பொறுமையாக,

ஜனா “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று ஒரு மாதிரி குரலில் கூற

ரேயன் “மாமா எப்படி இருக்காங்க” என்று விசாரித்தான்,

“பைன்” என்றவள் அமைதியாக அமர்ந்திருந்தாள், அந்த இடத்தில் பலத்த அமைதி நிலவியது. பின் நிரஞ்சனாவே “எதாச்சு சாப்பிடறீங்களா” என்று கேட்க

கிஷோர் “இப்போதான் சாப்பிட்டோம்க்கா”

“சரி ஜூஸ் குடிங்க” என்றவள் யாருக்கோ அழைத்து “ம்ம் கொடுத்து விடுங்க” என்று உத்தரவிட அடுத்த இரண்டு நிமிடத்தில் கதவு திறக்கப்பட்டது.

ஜனாவின் பி.ஏ கதவை திறக்க கையில் ஒரு ட்ரேயுடன் நுழைந்தாள் மித்து. கிஷோர் “அட ஏன்னக்கா குழந்தைய கொண்டு வர சொன்னிங்க.. கால்ல போட்டுக்க போறா” என்று பதற, ஜனா ஒரு புன்சிரிப்புடன் “இருடா அவளே கொண்டு வருவா” என்று கூறும் முன்னே ரேயனின் முன் நின்றது அந்த சின்ன சிட்டு.

ரேயன் “பாப்பா மாமா கிட்ட கொடுங்க.. போட்டுட போறீங்க” என்று அவள் கையிலிருந்ததை வாங்க முற்பட அவளோ கண்களை சுருக்கி “ஹூ ஆர் யூ.. உன் பெயர் என்ன” என்றாள். என்னதான் குழந்தை என்றாலும் நிரஞ்சனாவின் புதல்வியாயிற்றே.

மித்துவின் கேள்வியில் ரேயனின் முகம் சுருங்கியது ஆனால் அதை நொடி பொழுதில் மறைத்தவன் “நான் உன் ரேயன் மாமா.. நீ என்ன மாமானு கூப்பிடனும் சரியா” என்று கொஞ்ச

குழந்தைக்கோ அவன் பெயர் வாயில் வரவில்லை. அதில் முழித்தவள் “ரே மாமா” என்க அதில் புன்னகைத்தவன் அவள் கையிலிருந்ததை வாங்கி மேசை மீது வைத்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டான்.

ரேயன் “ஆமா.. ரே மாமா தான்” என்று அவள் குண்டு கன்னத்தில் முத்தம் பதித்தவன் அவளை தூக்கிக்கொண்டு அங்கிருந்த நீள்விருக்கையில் அமர அவன் முன் வந்து நின்றனர் மற்ற இருவரும்.

கிஷோர் “மித்து குட்டி.. நான் கிச்சா மாமா.. எங்க சொல்லுங்க” என்று அவள் முகம் பார்க்க அவளோ தன் கருவண்டு விழிகள் இடுங்க அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

கிஷோர் “எக்கோவ்.. ஏன் உன் பொண்ணு இப்படி முறைக்கிறா” என்று அலற அவளோ “தெரியலையே” என்றாள் சிரிப்புடன். அதில் தன்னிசையாய் ரேயனின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

அதன் பிறகு கிஷோர் என்ன பேசியும் அதே முறைப்பு பரிசாக கிடைக்க “அப்படியே மாமன போல” என தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்த்துவிட்டான்.

ஜனா ஆத்ரேயனை பார்த்துக்கொண்டிருக்க அவனோ மித்துவிடம் “மித்து பாப்பா சாப்பிட்டாச்சா” என்று கேட்க

“எஸ் எஸ் ரே மாமா.. நீ” என்றாள், உடனே ஜனா “நீ இல்ல நீங்க சொல்லு மித்து.. கிவ் ரெஸ்பெக்ட்” என்று கண்டிக்க

ரேயன் “அவ எப்படி கூப்பிடனுமோ கூப்பிடட்டும்” என்றவன் அவளுடன் விளையாட தொடங்கினான்.

மித்துவுடன் விளையாடியதில் நேரம் இறக்கை கட்டி பறக்க மணி ஒன்பதை கடந்தது. நேரத்தை பார்த்தவன் ஜனாவிடம் “சரி நாங்க கிளம்புறோம்.. டைம் ஆகுது” என்க ஜனா தலையசைத்தாள்.

ரேயன் “பை பாப்பா” என்று மித்துவிடம் கூற அவளோ அவன் கழுத்தை கட்டிக்கொண்டு “நோ ரே மாமா.. நோ.. டோன்ட் கோ” என்றாள். முன்னமே அங்கிருந்து செல்ல மனமில்லாதவன் அவளின் அக்கூற்றில் நெகிழ்ந்து தான் போனான். அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “ஓகே நான் உங்களுக்கு கிப்ட்ஸ் வச்சிருக்கேன்.. அதை போய் பார்க்கலாமா” என்று ஹை பை அடிக்க கை காட்ட அவனுடன் ஹை பை அடித்தவள் “எஸ்” என்றிட, ஜனாவை பார்த்தவன் “அப்படியே கீழ வாங்க” என்று முன் செல்ல இருவரும் அவனை தொடர்ந்தனர்.

ரேயன் கார் டிக்கியில் வைத்திருந்த பொருட்களை மித்துவிடம் கொடுக்க, ஜனா “ரேயா எதுக்கு இவ்ளோ” என்று கேட்க அவனிடம் பதிலில்லை.

கிஷோர் “atm போன கேப்ல இவ்ளோ வாங்கிருக்கியா” என்று விழி விரிக்க

ஜனா “நீயெல்லாம் எதுக்கு இருக்கியோ” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

கிஷோர் “ரைட்டு விடுங்க.. குழந்தை முன்னாடி மானத்தை வாங்காதீங்க.. ஆல்ரெடி மதிப்பு இல்ல” என தனக்கு தானே பரிதாப பட

ஜனா “மித்து சே தேங்க்ஸ்” என்று சொல்லி கொடுக்க, மித்து அவனை கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் ரே மாமா” என்றாள்.

ரேயன் “பரவால்ல பாப்பா.. மாமா அடிக்கடி உன்ன பார்க்க வரேன்” என்று அவளை ஜனாவிடம் கொடுத்தவன் காரில் ஏறிவிட்டு “வரேன்” என்று ஜனாவை பார்த்துக்கொண்டே கூற

“ம்ம்” என்றாள்.

கிஷோர் “அக்கா அவன் வரலானாலும் நான் வருவேன்” என்று விடைபெற்று காரில் ஏறினான். இருவரும் அங்கிருந்து செல்ல ஜனா பெருமூச்சுடன் திரும்பினாள்.

சரியாக அப்போது போலீஸ் ஜீப் ஒன்று நுழைய நிரஞ்சனா நின்று அதனை கண்டாள். அதிலிருந்து இறங்கியது என்னவோ அவளவன் தான்.

பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்தவளின் அருகில் வரும்போதே அவன் செல்ல மகள் அவனிடம் தாவ, அவளை வாரி அணைத்தவன் நிரஞ்சனாவிடம் “என்ன நிரு.. ஏன் இங்க நிக்குற” என்று புரியாமல் வினவ

அவன் தங்க புதல்வியோ “ரே மாமா” என்றாள் அவன் வண்டி சென்ற திசையை காட்டி அதில் இன்பமாக அதிர்ந்தவன் “ரேயன் வந்தானா” என்று ஆர்ச்சிரிய குரலில் கேட்க, ஜனா சோகமாக தலையாட்டினாள்.

அவள் கசங்கிய முகத்தை கண்டவன் “அப்புறம் ஏன் டல்லா இருக்க” என்று குழம்ப

“ரேயன் இன்னும் மாறல” என்னும் போதே அவள் கண்கள் கலங்கிவிட ஒருகையால் தன் மகளை தூக்கியிருந்தவன் மறு கரத்தால் அவளை அணைத்து “என்ன நிரு நீ.. அவன் மாறுவான்.. அவன் ரொம்ப ஹர்ட் ஆகிருக்கான் அதான் இப்படி நடந்துக்குறான்” என்று சமாதானப்படுத்த அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் “ஐ நோ.. பட் நம்ம என்ன பண்ணோம்.. மித்துவ பார்த்து அவ்ளோ பீல் பண்ணான்.. ஆனா அவ்ளோ பாசம் இருந்தும் அவ பிறந்ததுல இருந்து பாக்க வரல.. அப்படி என்ன பிடிவாதம்” என்று கோபப்பட, பிரகாஷ் அவளை சகஜமாக்கும் பொருட்டு “உன் தம்பில வேற எப்படி இருப்பான்” என்று அவளை சீண்ட அதில் அவனிடமிருந்து விலகி அவனை முறைத்தவள் “உன்கிட்ட சொன்னேன் பாரு” என்று முகத்தை திருப்பிக்கொள்ள, மித்து தன் பெற்றோர்களின்  சண்டையில் கிளுக்கென சிரித்துவிட, பிரகாஷும் புன்னகையுடன் நிரஞ்சனாவின் இடை பற்றி தன்னோடு இழுதணைத்தவன் மித்துவிடம் “பாப்பு ஐஸ் க்ரீம் சாப்பிட போலாமா” என்று கேட்க அதில் அவள் சந்தோசமாக தலையசைக்க தன் வளர்ந்த குழந்தையின் புறம் திரும்பியவன் “சரி வா அப்படியே போயிட்டு வரலாம்” என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

இங்கு இவ்வாறு நடக்க, அங்கு அக்னியின் அலுவலகம் பரபரப்பின்றி அமைதியாக இயங்கிக்கொண்டிருந்தது. நேஹா கடிகாரத்தையும் அக்னியின் அறையையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். மணி ஒன்பதை கடந்து சில நிமிடங்களாகிருக்க “ஒருவேளை மறந்துட்டானோ” என்றெண்ணியவள் அவன் அறை கதவை தட்ட, அக்னி “கம் இன்” என்றான்.

அவன் முன் சென்று நின்றவள் எதுவும் பேசாது அவனையே பார்த்தபடி நிற்க அதில் கடுப்பானவன் “இப்படியே நின்னு என்ன பாக்க போறியா இல்ல எதாச்சும் பேசுவியா” என்று நக்கலாக கேட்க

நேஹா “ஆன் அது” என தயங்க

அக்னி அவளை அளந்தபடி “என்ன” என்றான்.

நேஹா “டெண்டருக்கு போகனும்னு சொன்னீங்க.. டைம் ஆகிடுச்சு அதான்” என்றிழுக்க

அக்னி “ஓ.. நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியாதா.. நீ சொல்லி தந்து தான் நான் பண்ணனுமா” என்று காரமாக கேட்க நேஹா  உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்தாலும் வெளியில் “சாரி சார்” என்றவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு திரும்ப அவளை தடுத்தவன் ஒரு அலமாரியை காட்டி “இதுல நம்ம கம்பெனி டாகுமெண்ட்ஸ் ரெட் பைல்ல வச்சிருக்கேன் அதை எடு” என்று உத்தரவிட அவளும் தலையசைப்புடன் அதை தேடினாள்.

பத்து நிமிடத்திற்கு மேல் தேடியும் அது கிடைக்காமல் இருக்க, நேஹா “சார் ரெட் பைலே இல்ல” என்க அவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ “ரெட் பைல்னு சொன்னா அதை மட்டும் தான் தேடுவியா.. ஒரு டாகுமெண்ட் படிக்க கூடவா தெரியாது.. இரிடேட்டிங்” என்று அவளை வசை பாட பெண்ணவளின் கண்கள் சட்டென கலங்கிவிட்டது. இதுவே வேறு யாரேனும் இருந்திருந்தால் அவர்களை ஒரு வழி செய்துவிடுவாள் ஆனால் அது ஏனோ அக்னியின் வார்த்தைகள் மட்டும் அவளை எளிதாக காயப்படுத்தி விடுகிறது.

கண்ணில் துளிர்த்த நீரை அவனுக்கு தெரியாத வண்ணம் மறைத்தவள் மீண்டும் அந்த கோப்பையை தேடினாள்.

அவள் என்னதான் மறைக்க நினைத்தாலும் அது அக்னியிடம் எடுபடாது என்பதை பெண்ணவள் மறந்துவிட்டாள் போலும். அவள் கண்ணீரை கண்டவனின் மனமும் வலிக்க தான் செய்தது ஆனால் அதை காட்டிக்கொள்ளதாவன் அவள் அருகே சென்றான்.

அவளுக்கு பின் சிறு நூல் இடைவேளை விட்டு நின்றவன் அவள் கையை தட்டிவிட்டு தானே தேடினான். வெகுநாட்களுக்கு பின்னான அவன் பிரத்யேக வாசனை நுகர்ந்தவளின் மனமோ ரணமென வலிக்க தன் குர்தியை அழுத்தமாக பற்றியபடி நின்றிருந்தாள். இது அனைத்தும் அக்னியின் பார்வையிலிருந்து தப்பவில்லை. அந்த கோப்பையை எடுத்தவன் அவளிடமிருந்து விலகி நின்று “உன்ன திட்டுனா இப்படி தான் பேயறஞ்ச மாதிரி நிப்பியா.. இப்படி இருந்தா வேற இடத்துல வேலைக்கு போனா எப்படி சர்வைவ் பண்ணுவ” என்று அவளை கூர்மையாக பார்த்தபடி கேட்க அவளோ மௌனமாக தலை குனிந்தாள்.

அக்னி “உன்கிட்ட தான் பேசுறேன்” என்று சத்தமிட

நேஹா “அது.. நான்.. இல்ல” என்று ஏதோ உளற மீண்டும் அவள் அருகில் வந்தவன் அவள் அணிந்திருந்த துப்பட்டாவை  எடுத்தவன், அதை அவள் கையில் திணித்து “நீதான் உன் கண்ண துடைக்கனும்.. எப்போவும் ஒரு கை வந்து துடைக்காது” என்றவன் மீண்டும் “நான் தேடுறப்போ யாரும் வரல” என்று குத்தலாக கூறிவிட்டு செல்ல  அதில் விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பக்கத்துல வர விட்டா தான் கண்ணை துடைக்க முடியும்.. பக்கத்துல வர விடாம எட்டி நிக்க வச்சுட்டு கண்ண துடைக்க வரலன்னு குத்தம் சொல்ல கூடாது” என்று ஏதோ ஒரு வேகத்தில் கூறியவள் அவன் திட்டுவதற்கு முன் வெளியில் சென்றிட அக்னி தான் அவள் கூற்றில் பேசற்று நின்றான்.

சிறிது நேரம் தனிமையில் நின்றவன் பின் வேக நடையுடன் வெளியில் வர நேஹா அவனுடன் இணைந்தாள். அவளை அழுத்தமான பார்வை பார்த்தவன் “நான் போய்கிறேன்.. நீங்க உங்க வேலைய பாருங்க” என்று காட்டமாக கூறியவன் அங்கிருந்து சென்றுவிட தன் இருக்கைக்கு வந்தமர்ந்தவள் “கூடவாச்சு போயிருக்கலாம்.. தேவை இல்லாம டயலாக் பேசி இப்போ பேசாம போக போறான்” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

வெவ்வேறு திசையிலிருந்து புறப்பட்ட மூவரின் பயணமும் ஒரே புள்ளிக்கு.. ஆறு வருடங்களுக்கு பின்னான இவர்களின் சந்திப்பில் என்ன காத்திருக்கிறது என்பதை காண்போம்.

Advertisement