Advertisement

                 அத்தியாயம் 18

         ஏ.ஆர் நிறுவனத்தின் பலகையை பார்த்த அக்னியின் மனம் சில வருடங்களுக்கு முன் பயணித்தது.

அன்று விளையாட்டு மைதானத்தில் அக்னிக்கு அடிபட்ட நிகழ்வு நடந்து சில நாட்கள் கழிந்திருந்தது. அந்த நாளுக்கு பின் அக்னியும் ஆத்ரேயனும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடவில்லை ஆனால் சந்திக்கவேண்டிய நாளும் வந்தது.

எப்போதும் போல் தன் மைதானத்திற்கு சென்று கொண்டிருந்த அக்னிக்கு கால் பந்து மைதானத்தில் சிலர் கத்தி பேசும் சத்தம் கேட்க புருவம் சுருக்கி அவ்விடத்திற்கு சென்றான். அங்கு ஆத்ரேயன் சுற்றி நால்வர் கையில் ஹாக்கி ஸ்டிக்குடன் நின்றுகொண்டிருக்க அக்னி அங்கு நின்று அவர்கள் பேசுவதை கேட்க தொடங்கினான்.

அந்த நால்வரில் ஒருவன் “நான் அவளை லவ் பண்றேன் அதனால அவ பின்னாடி போறேன்.. உனக்கு என்னடா பிரச்சனை அதுல” என்று முறைக்க

இரண்டாமவன் “டேய் அவன் தான்டா கிளாஸ்ல ஹீரோ.. அதான் வந்து சீன் போடுறான்” என்று நக்கலாக கூற ஆத்ரேயனோ மார்புக்கு குறுக்கே கை கட்டி அவர்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். அக்னி ‘இவன் ஏன் இப்படி அமைதியா நிக்குறான்.. என்னதான் நடக்குது’ என்று குழம்பி நின்றுக்கொண்டிருந்தான். யார் மீது தவறுள்ளது என்பதை அறியாமல் அவர்களிடையே புக அவனுக்கு விருப்பமில்லை எனவே யார் மீது தவறு இருக்கிறது என்பதை அறிய அங்கு நின்றான்.

முதலாமாவன் “இங்க பாரு ஆத்ரேயன், நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இருந்துட்டு போ ஆனா என்கிட்ட வச்சுக்காத. என் அப்பாக்குலாம் இதை சொன்னா சீனே வேற.. அதனால அவகிட்ட இதெல்லாம் எடுத்து சொல்லி அவளை நீயே எனக்கு கரெக்ட் பண்ணி கொடுக்குற.. என்ன புரிதா” என்று கையிலிருந்த ஹாக்கி ஸ்டிக்கை உருட்டியபடி கேட்க, ஆத்ரேயன் “ஆன்.. சொல்லுறேன் உன் போனை கொடு” என்றான்.

முதலாமாவன் “பாத்தியாடா.. பச்சை புள்ளடா.. இந்தா பேசு” என்று தன் நண்பர்களிடம் தொடங்கியவன் ஆத்ரேய்னிடம் தன் அலைபேசியை நீட்ட அதை வாங்கி அப்பெண்ணிற்கு அழைத்தவன் “நான் ஆத்ரேயன் பேசுறேன்.. உன் பின்னாடி சுத்துனா பைத்தியக்காரன் என்கிட்ட அடி வாங்கி கிடக்குறான். இதுக்கு மேலையும் பொறுமையா இருக்க வேண்டாம்.. நான் என் நம்பர்ல இருந்து ஒரு கால் கொடுக்குறேன் நீ போலீஸ்ல என் கிளாஸ் பையன்கிட்ட இவன் வம்பு பண்றான்னு சொல்லி கம்பலைன் கொடுக்க சொன்னேன்னு சொல்லு” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு தன் அலைபேசியிலிருந்து அவளுக்கு அழைப்பை விடுத்துவிட்டு கையிலிருந்த அவன் அலைபேசியை தரையில் போட்டு தன் காலினால் மிதித்தான்.

எதிரிலில் நின்ற நால்வரும் அவனை தீயாய் முறைத்துக்கொண்டு நின்றனர். முதலாமாவன் “டேய் இவனை சும்மா விட கூடாது” என்று அடிக்க வர அவனை இலவகமாக தடுத்தவன் அவன் கையிலிருந்த ஸ்டிக்கை பிடுங்கி அவன் நெஞ்சில் உதைக்க அவனோ சில அடி நகர்ந்து விழுந்தான்.

இவர்கள் சண்டையிட தொடங்கிய போது அவர்களுக்கு உதவி செய்யலாம் என்றெண்ணிய அக்னி இப்போது தானும் அவனுடன் சண்டையிட்டால் பயிற்சியாளர்களுக்கு உண்மை தெரிய வராது என்பதை உணர்ந்தவன் முதலில் அவர்களிடம் தகவல் கொடுக்க வேண்டும் என்று அங்கு சென்றான்.

மைக்கேலும் திலீப்பும் பேசிக்கொண்டிருக்க அங்கு விறைந்தவன் மைதானத்தில் நடந்துகொண்டிருப்பவற்றை கூற, பயிற்சியாளர்கள் இருவரும் அங்கு விரைந்தனர்.

பயிற்சியாளர்கள் அங்கு செல்வதற்கும் காவல் துறையினர் நுழைவதற்கும் சரியாக இருந்தது. அதிகாரி ஒருவர் “இங்க யாரு ஆத்ரேயன்” என்று விசாரிக்க ரேயன் கை தூக்கினான்

அதிகாரி “தம்பி உனக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்” என்று கேட்க,

ரேயன் “சார் சும்மா வம்பிழுத்துட்டு இருக்கான்.. என்னன்னு கேட்டதுக்கு அப்பா ஆட்டுக்குட்டின்னு சொல்லி சீன் காட்டினான்.. நான் மதிக்கிலன்னு தெரிஞ்சதும் ஆளுங்கள கூட்டிட்டு அடிக்க வந்துட்டான்” என்றான். ஆத்ரேயனுக்கு தன் வகுப்பு மாணவியின் பெயரை இதில் இழுக்க துளியும் விருப்பமில்லை.

காவல் அதிகாரி “சரி தம்பி.. ஸ்டேஷன் வந்து ஒரு கேஸ் பைல் பண்ணிடு” என்றழைக்க உடனே அங்கு வந்த மைக்கல் “சார் அவன் வேண்டாம்.. நான் வரேன், படிக்கிற பையன் அங்கயெல்லாம் வர வேண்டாம்” என்றிட அந்த அதிகாரிக்கும் அதுவே சரியென பட அந்த நால்வரை மட்டும் இழுத்துக்கொண்டு சென்றார். அவர் பெரிய விசாரணை நடத்தாமல் அந்த நால்வரை அழைத்து செல்ல மற்றொரு காரணம் அந்த நால்வரின் மீது இதற்கு முன்பே பல வழக்குகள் வந்திருந்தது.

மைக்கல் செல்வதை பார்த்த ரேயனுக்கு குழப்பமே மிஞ்சியது, எப்போதும் ஒழுக்கம் கடமை என்று பார்ப்பவர் இன்று தனக்காக செல்வதை பார்த்தபடி நிற்க அவன் அருகே வந்த திலீப் “என்ன ஆத்ரேயன் ஏன் இங்கயே நிக்கிற.. போ போய் ப்ராக்டிஸ் பண்ணு” என்க

ரேயன் “அது சார்.. உங்களுக்கு எப்படி தெரியும்.. இங்க என்ன நடந்துச்சுன்னு கூட அவர் கேட்கலயே” என்று குழம்ப

திலீப் “ஏன் கேட்கனும்.. அதான் அவன் எல்லாத்தையும் சொல்லிட்டானே” என்றிட அவரை கேள்வியாய் பார்த்தவன் “சொல்லிட்டானா.. யாரு” என்று வினவ

திலீப் “அக்னி” என்றழைத்தான். அவ்வளவு நேரம் வெளியில் நின்றவன் திலீப்பின் குரல் கேட்டு உள்ளே நுழைய ஆத்ரேயன் அப்போதும் குழப்பமாக தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அக்னி அவன் பார்வையை உணர்ந்து “தாண்டி போறப்ப சத்தம் கேட்டுச்சு அதான் என்னனு பார்த்தேன்.. ஹெல்ப் பண்ண தான் வந்தேன் ஆனா கோச்க்கு தெளிவா சொல்லவேண்டி வந்திருக்கும் அதான் முதல அவங்ககிட்ட சொன்னேன்” என்ற விளக்கத்தை அளிக்க, ரேயன் இளமுறுவலுடன் “தேங்க்ஸ்.. என்ன நடந்தா என்னன்னு தாண்டி போகாம இருந்தீங்களே” என்று கூற

திலீப் “அப்படி போனா அது அக்னி இல்லையே” என்றவர் “சரி போங்க.. போய் ப்ராக்டிஸ் பண்ணுங்க” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.

ரேயன் “தேங்க்ஸ் அகைன்.. மைக்கல் சார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் வேற” என்க அக்னியும் முறுவலுடன் தலையசைத்து விடைபெற்றான். முதல் இரண்டு சந்திப்புகள் நன்றாக தான் நிகழ்ந்தது ஆனால் அவர்களிடையே தோன்றிய அந்த மெல்லிய நட்பை புரட்டிபோடும் படியாக நிகழ்ந்தது அந்த நிகழ்வு.

    மாவட்ட அளவிலான கால் பந்து மற்றும் மட்டை பந்து போட்டிகள் அந்த மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணமது. மாலை ஆறு மணியளவில் ரேயன் தன் குழுவுடன் பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது அவன் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்றவன் “சொல்லுங்க பா” என்க

கண்ணன் “ரேயா, இந்துக்கு இன்னிக்கி ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருந்துச்சாம்.. நீ இன்னிக்கி பைக்ல தான் போனன்னு ஷோபா சொன்னா அப்படியே அவளை போய் கூட்டிட்டு வந்திடு.. இங்க நானும் சுரேஷும் கொஞ்சம் வெளியே இருக்கோம்” என்றிட

ரேயன் “ப்ராக்டிஸ் இருக்கேபா”

“அவ அங்க தனியா இருக்க வேண்டாம் ரேயா.. நீ கிரவுண்ட்க்கு கூட்டிட்டு போயிடு.. வரும்போது ரெண்டு பேரும் ஒன்னா வந்திடுங்க” என்று ஒரு திட்டம் கூற அதற்கு அமோதித்தவன் மைக்கலிடம் பேச சென்றான்.

அவன் கூறியதை கேட்க மைக்கல் “இன்னிக்கி இங்க நிறைய பேர் இருக்காங்களே.. பேசமா வீட்டுக்கு போய் விட்டுட்டு வா” என்றார் ஆனால் ரேயனோ “போயிட்டு வர டைம் ஆகும் சார்” என்றிட

மைக்கல் “அப்போ இன்னிக்கி ப்ராக்டிஸ் போதும் கிளம்பு.. நானும் கொஞ்ச நேரத்துல கிளம்புறேன்” என்றார்.

ரேயன் “என் கண்ணு முன்னாடி தான் சார் வச்சிருப்பேன்.. நான் பார்த்துக்குறேன்” என்று வாக்களிக்க மைக்கல் யோசனையுடன் தலையசைத்தார் பின் “பார்த்து ரேயா.. இன்னிக்கி எனக்கு தெரியாதா பசங்களும் இருக்காங்க..” என்று எச்சரிக்க “ஓகே சார்” என்றவன் இந்துவை அழைத்து வர சென்றான்.

இந்துவின் பள்ளி வாயிலில் வண்டியில் காத்துக்கொண்டிருந்த ரேயனின் அருகே குஷியாக வந்தவள் “ரேயன்ணா.. நீயா..  என்ன நீ வந்திருக்க” என்று எதுவும் தெரியாதது போல் கேட்டவளை கேலியகா பார்த்தவன் “அதாவது நான் வந்தது உனக்கு தெரியாது.. அப்படி தான” என்று கேட்க

இந்து “தெரியாதுடா அண்ணா” என்றவள் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள அவள் பையை பிடித்து இழுதவன் “ஹே பிராடு.. அப்பா வரேன்னு சொல்லிருப்பாங்க, நீ தான் முடியாது ரேயன் தான் வரனும்னு சொல்லிருப்ப.. என்ன கரெக்ட்டா” என்று புருவமுயர்த்த அதில் அசடு வழிந்தவள் “பைய விடுண்ணா.. ஆமா ஆமா நான் தான் சொன்னேன்.. போதுமா.. விடு” என்று வெள்ளை கொடியை பறக்க விட

ரேயன் “ஆன்.. அப்படி ஒத்துக்கோ.. வா ஏறு” என்க அவன் வண்டியில் ஏறியவள் “எங்க போறோம்.. உன் கிரவுண்ட்கு தான… ஜாலி” என்று குதூகளிக்க அவளை திரும்பி பார்த்தவன் “உன் ஆர்வத்தை பார்த்தா சரியா இல்லையே.. எவனை சைட் அடிக்க இந்த ஆர்வம்” என்றவனை பார்த்தவள் “ஆமா அப்படியே நீ விட்டுட்டாலும்.. போ வண்டிய எடு” என்று சலிப்பாக கூற

ரேயன் “கொழுப்பு ஓவர் ஆகிடுச்சு” என்றபடி மைதானத்திற்கு சென்றான்.

மைதானத்திற்கு சென்றவன் அவளை அங்கிருந்த ஒரு கல் இருக்கையில் அமர வைத்துவிட்டு “இந்துமா.. இங்கயே இரு எங்கயும் போயிடாத ஒரு அரை மணி நேரத்துல போயிடலாம் புரியுதா” என்றவனை பார்த்து தலையசைத்தவள் “ரைட்டு” என்க அவளுக்காக அவன் வாங்கி வைத்த கப் கேக்கை எடுத்து கொடுத்தவன் “இந்தா சாப்பிடு.. என் பேக்ல தண்ணி இருக்கு” என்றிட

“பெஸ்ட்டு ணா நீ.. எங்கயோ போயிட்ட.. இதுக்கு தான் உன்ன கூப்பிட்டது” என்று சிலாகிக்க அவள் தலையில் தட்டியவன் “இங்கயே இரு” என்று புன்னகையுடன் சென்றான்.

இந்து நுழைந்ததிலிருந்து ஒரு ஜோடி கண்கள் அவளையே தான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

கையிலிருந்த கப் கேக்கை கோரித்துக்கொண்டு ரேயன் ஆடுவதை பார்த்துக்கொண்டிருந்த இந்துவின் அடி வயிறு வலிக்க அப்போது தான் பெண்ணவளுக்கு அன்றைய தேதி நியாபகத்திற்கு வந்தது “ஐயோ வாஷ்ரூம் போனுமே” என்றெண்ணியவள் “ரேயா.. ரேயா ண்ணா” என்று குரல் கொடுக்க, மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்தவனின் காதிலோ அவள் குரல் விழாமல் போனது.

கண்களை சுழலவிட்டவளுக்கு கழிப்பறைக்கு செல்லும் வழி பலகை கண்ணில் பட ‘சரி டக்குன்னு போயிட்டு வந்திடுவோம்’ என்று எழுந்து சென்றாள்.

அவள் செல்வதை பார்த்து குரூர புன்னகை உதிர்த்த அந்த கண்களின் சொந்தக்காரன் அவளை தொடர்ந்து எழ, அவன் அருகே இருந்த நண்பனோ “மச்சா எங்க போற” என்று கேட்க, அவனோ செல்லும் இந்துவை கண்ஜாடையால் காட்ட

அவன் நண்பனோ “வேண்டாம் டா.. ஆத்ரேயன் தங்கச்சி அது.. அவனுக்கு தெரிஞ்சா உன்ன சும்மா விட மாட்டான்” என்று எச்சரிக்க அவனோ அதையெல்லாம் கண்டுக்கொண்டதாய் இல்லை.

இந்து கழிப்பறை சென்று வெளியே வந்த சமயம் அந்த கதவுகளின் மறைவில் நின்றுகொண்டிருந்த அந்த அந்நியனோ பின்னிலிருந்து அவள் வாயை பொத்தி பக்கத்திலிருந்த அறைக்கு இழுத்து சென்றான்

பழைய பொருட்கள் போடப்பட்டிருந்த அந்த அறை சிறு விளக்கு கூட இல்லாமல் இருள் கவ்வியிருக்க இந்துக்கோ பயத்தில் வியர்த்து வழிந்தது. அவன் முகம் கூட காண முடியாத அளவிற்கு இருட்டாக இருக்க இந்து “ஹெல்ப்” என்று கத்தினாள். அவனோ அவளை கத்த விடாத படி அவள் போட்டிருந்த துப்பட்டாவை வைத்தே அவள் வாயை கட்டினான். அவள் இரு கைகளையும் ஒரு கையால் வளைத்து பிடித்தவன் மற்றொரு கையால் பெண்ணவளின் மேனியில் எல்லை மீற இந்துவோ காலால் அருகிலிருந்த பெட்டியை தள்ளினாள். அதில் அந்த பெட்டிகள் சிறு சத்தத்தோடு விழ அது முகம் கழுவ வந்த அக்னியின் காதுகளில் விழுந்துவிட்டது.

சத்தம் வந்த திசை நோக்கி சென்றவனுக்கு அங்கு யாரும் தென்படவில்லை அந்த இடத்தையே சுத்தி வந்துக்கொண்டிருந்தான். அக்னியின் காலடி சத்தத்தில் அந்த ஆண் அவளை அங்கிருந்த கயிற்றால் கட்டிவிட்டு வெளியில் வந்து எட்டி பார்க்க, மறுகொடியில் நின்ற அக்னிக்கு யாரோ ஒருவன் செல்வது மட்டும் கண்ணில் பட்டது. உடனே அங்கு விரைந்தவன் அந்த இடத்தை ஆராய அங்கு ஒரு அறை இருந்தது. அதனுள் நுழைந்தவன் அந்த மெல்லிய வெளிச்சத்தில் பெண் ஒருவேளை கண்டவன் அவசரமாக அவள் அருகில் சென்றான்.

கால் பந்து ஆடிக்கொண்டிருந்த ஆத்ரேயன் சிறிது நேரம் கழித்து இந்து அமர்ந்திருந்த இருக்கையை பார்க்க அதுவோ காலியாக இருந்தது.

அவள் இல்லாததை கண்டவன் அவளை தேட விரைந்தான். அப்போது தான் தூரத்தில் கழிப்பறையின் அருகே இருந்த அறைக்குள் அக்னி நுழைவதை கண்டவன் அங்கு விரைந்தான்.

அக்னி இந்துவின் வாயிலிருந்த துணியை எடுக்கும் போது நுழைந்த ரேயன் “இந்து” என்று பதற, ரேயனை கண்டவள் “ரேயா ண்ணா” என்று அழ அவள் கட்டை அவிழ்த்தவன் அக்னியின் சட்டையை பிடித்து “டேய்” என்று அடிக்க ஆரம்பிக்க அக்னி தான் அவன் செய்கையில் ஒன்றும் புரியாமல் நின்றான்.

அக்னி, ரேயன் தன்னை நோக்கி அடிக்க ஓங்கிய கையை பிடித்தவன் “ஆத்ரேயன் வெயிட்.. என்ன பண்ணுற நீ.. என்மேல ஏன் கை வைக்கிற.. நான் இங்கே சத்தம் கேட்டு தான் வந்தேன்” என்க

ரேயன் “டேய்.. என்ன மாட்டிக்கிட்ட அப்பறம் பொய் சொல்லுறியா.. என்ன பண்ண நினைச்ச டா என் தங்கச்சிய” என்று அவன் முகத்தில் குத்த அக்னியின் பொறுமையும் பறந்து போனது.

அக்னி தன் பங்கிற்கு அவனை அடிக்க சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களம் ஆனது.

அக்னி “என்ன நடந்ததுன்னு தெரியாம என்ன பத்தி தப்பா பேசுன மரியாதை கெட்டுடும்”

ரேயன் “டேய் உனக்கெல்லாம் மரியாதை ஒரு கேடா..” என்க, அக்னியோ தன் பலம் கொண்டு அவனை தள்ளிவிட்டு “டேய் என்ன.. நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு அமைதியா போவேனு பார்த்தியா” என்று மல்லுக்கு நிற்க

ரேயன் “இப்படி கேவலமா பண்றதெல்லாம் பண்ணிட்டு திமிரா வேற பேசுறியா”

“டேய் முதல என்ன நடந்ததுன்னு கேளு” என்று அக்னி கத்த, ரேயன் இந்துவிடம் விசாரிக்க சென்றான். இங்கு கேட்டால் அவள் பெயர் அடிபடும் என்ற நல்லெண்ணத்தில் அக்னி “ஹே உள்ள கூட்டிட்டு போய் கேளு” என்றிட அதையும் தவறாக புரிந்துகொண்ட ரேயன் “ஏன் உன் மானம் போகுதா” என்று ஏளனமாக கேட்க, அக்னியோ வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்டான்.

இந்து நடந்தவற்றை கூறி அழ ரேயன் அவளை தோளோடு அணைத்து சமாதானம் செய்தான். அவர்கள் வீட்டு இளவரசிக்கு இப்படி ஒரு நிலை வருமென அவன் நினைத்து கூட பார்த்ததில்லை அவள் அழுகையை பார்த்த ரேயனுக்கு அக்னியை வெட்டி வீழ்த்தும் அளவிற்கு ஆத்திரம் வந்தது. ரேயன் அக்னியை அனல் தெறிக்க பார்க்க அவனும் சளைக்காமல் அதை எதிர்கொண்டான்.

ரேயன் “உன்ன கம்பி எண்ண விடாம விட மாட்டேன்” என்றவன் காவல் துறைக்கு அழைப்பு விடுத்தான். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட அவ்விடத்திற்கு வந்த மைக்கல் “ரேயா என்ன நடக்குது இங்க..” என்று விசாரிக்க அக்னியை முறைத்துக்கொண்டே அவரிடம் “இந்த பொறுக்கி என் தங்கச்சிகிட்ட தப்பா நடந்துக்க பார்திருக்கான் சார்.. அதுவும் பீல்ட்ல என்ன வர விடாம டைவர்ட் பண்ணி விட்டுட்டு வந்திருக்கான் சீப்” என்று வார்த்தைகளை விட, அக்னியா சிறிதும் பயமின்றி இறுகி நின்றிருந்தான். அவன் கெட்ட நேரம் போலும் அன்று அவன் பயிற்சியாளர் திலீப்பும் வந்திருக்கவில்லை.

ரேயன் கூறியதை கேட்ட மைக்கல் அக்னியிடம் என்ன நடந்தது என்று வினவ, அக்னி “நான் பேஸ் வாஷ் பண்ண வந்தேன் அந்த டைம் ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வெளிய வந்து பார்த்தேன்.. அப்போதான் இந்த ரூம்ல அந்த பொண்ணை பார்த்தேன்” என்று தன் தரப்பை விளக்க

ரேயன் “போதும்டா.. இப்போ உண்மைய வர வைக்கிறேன் இரு” என்றவன் அங்கிருந்த பணியாளிடம் “அண்ணா இங்க இவனை தவிர வேற யாராவது வர்ரத நீங்க பார்த்தீங்களா” என்று வினவ அந்தோ பாவம் அந்த பணியாளுக்கு தூர பார்வை பிரச்சனை இருந்தது.

அந்த பணியாளரோ “இந்த பாப்பா போச்சு.. பின்னாடியே சிவப்பு சட்ட போட்டு ஒருத்தன் போனான்” என்று தனக்கு தெரிந்தவற்றை கூற

ரேயன் “ஒருத்தன் பின்னாடியே போறான் அதை என்னனு பாக்க மாட்டீங்களா” என்று அவரிடமும் எகிறினான்.

அந்த பணியாளரோ “நான் என்ன தம்பி பண்ண.. அதுக்குள்ள பசங்க என்ன பந்து எடுக்க கூப்பிட்டாங்க.. அது பண்ணுலனா என் வேலையே போயிடும்” என்றார் ஆனால் இதில் யாரும் அறியாத ஒன்று என்னவென்றால் இந்துவிடம் தவறாக நடக்க முயற்சித்த அதே ஆண் தான் ரேயனை வர முடியாதபடி செய்துவிட்டு அந்த பணியாளருக்கும் வேலை பணித்திருந்தான்.

இப்போது அக்னியிடம் வந்த ரேயன் “இப்போ என்ன கதை சொல்ல போற” என்று கைகட்டி நிற்க, அக்னியோ நக்கலாக “இங்க நான் மட்டுமா சிவப்பு சட்ட போட்டிருக்கேன்னா” என கேட்டிட

ரேயன் “நீ மட்டும் தான் அங்கிருந்து வெளிய வந்திருக்க” என்றான் வார்த்தைகளை பற்களுக்கு இடையே கடித்து துப்பியபடி.

இவர்கள் சண்டையிடுவதை கண்ட மைக்கல் “ரேயா வெயிட்.. அக்னி கூட ப்ராக்டிஸ் பண்ணவங்க வாங்க” என்று அழைக்க, சிலர் முன் வந்தனர்.

மைக்கல் “அக்னி அங்கிருந்து வந்து எவ்ளோ நேரம் ஆகுது” என்று கேள்வியெழுப்ப

ஒருவனோ “ஒரு பத்து நிமிஷம் இருக்கும் சார்” என்றான். உடனே ரேயன் “ஓ பத்து நிமிஷமா இங்கிருக்க ஆனா நான் வந்தப்ப தான் உனக்கு ஏதோ சத்தம் கேட்டிருக்கு.. அப்படி தான” என்றான் நக்கலாக.

முகம் கழுவிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்துக்கொண்டே வந்த அக்னிக்கு யாரோ அழைத்திருக்க, அதை ஏற்று பேசியவன் பேசி முடித்த பின்னே முகம் கழுவ சென்றான். நடந்தவற்றை அக்னி கூற, ரேயன் “டேய் எவ்ளோ பொய் தான் சொல்லுவ.. முதல சத்தம் கேட்டு பாத்தேன்னு சொன்ன.. இப்போ போன் பேசுனேன்னு சொல்லுற அடுத்து என்ன சொல்ல போற” என்று கோபம் குறையாமல் கத்த

அக்னி “நான் சொல்லுறது உண்மை தான்.. நீ நம்புலனா நடந்ததெல்லாம் பொய் ஆகிடாது” என்று அழுத்தமாக கூறியவன் அதே அழுத்தத்துடன் நிற்க மைக்கலுக்கு அக்னி பொய் உரைப்பதை போல் தெரியவில்லை.

இங்கு ரேயனும் அக்னியும் மாறி மாறி சண்டையிட சிலர் அவர்களை விளக்கினர் அப்போது இந்துவிடம் தவறாக நடக்க முயற்சித்தவன் அக்னியின் ஷாட்ஸ்ஸில் இந்துவின் ப்ரேஸ்லெட்டை வெளியில் தெரியும் படி போட்டுவிட்டான்.

அக்னியிடமிருந்து விலகிய ரேயனின் கண்களில் அது சரியாக பட்டுவிட அதை கையில் எடுத்தவன் “இதுக்கு என்னடா கதை சொல்ல போற” என்று முறைக்க, அக்னியும் அது எப்படி தன்னிடம் வந்தது என்று புரியாமல் குழம்பி போனான். இதற்கிடையே காவல் துறையினரும் அங்கு வந்துவிட மைக்கல் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரேயன் அக்னியை பிடித்து கொடுத்தான்.

அதன் பின் வழக்கு பதிவு செய்ய ரேயனும் அங்கு சென்றான். அந்த காவல் நிலையத்தின் மேலதிகாரி அக்னிக்கு தெரிந்தவர் தான் எனினும் அக்னி அவரை தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை.

இவர்கள் காவல்நிலையம் செல்லும் போதே நடந்தவை அனைத்தும் கண்ணன் மற்றும் ஜெகதீசன் காதை அடைந்திருந்தது.

சரியாக அக்னியின் பெயரில் வழக்கு பதிவு செய்யும் போது அங்கு வந்த கண்ணன் ரேயனிடம் “ரேயா எதுக்கு கேஸ் பைல் பண்ணுற.. இதுல இந்து பெயர் தான் அடிபடும்” என்று கடிய, ரேயன் “அப்போ அவனை சும்மா விட சொல்லுறீங்களா”

“ப்ச் அப்படி இல்ல.. அவனை போலீஸ் பார்த்துக்குவாங்க.. நீ வா” என்றவர் காவல் அதிகாரியிடம் “சார் கேஸ் வேண்டாம் ஜஸ்ட் வார்ன் பண்ணிடுங்க” என்றுவிட்டு ரேயனை அழைத்துக்கொண்டு சென்றார்.

அங்கு அக்னி தான் ஜெகதீசனை காண முடியாமல் கூனி குறுகினான் போனான்.

காவல் அதிகாரி “அக்னி நீ வீட்டுக்கு கிளம்பு” என்க,

அக்னி “அங்கிள்” என்று ஏதோ கூற வரும் முன் அவரே “ஏதோ மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்ன்னு புரியுது.. நல்ல வேளை கேஸ் கொடுக்கல.. உன்ன பத்தி எனக்கு தெரியும் நீ போ” என்றார். அவரிடம் தலையசைத்துவிட்டு வெளிய வந்த போது கூட ஜெகதீஷ் எதுவும் பேசவில்லை.

அங்கிருந்த காவல் அதிகாரிகள் அனைவரும் ஒரு மாதிரி பேச அது அனைத்தையும் கேட்டு பல்லை கடித்துக்கொண்டு வெளியில் வந்தவன் “அப்பா” என்றழைத்து மறு நொடி அவன் கன்னத்தில் இடியென இறங்கியது ஜெகதீஷனின் கை.

அந்த நிகழ்விற்கு பின் ஜெகதீஷ் அவனிடம் பேசுவதில்லை அதே போல் தன்னை நம்பாது அடித்துவிட்டாரே என்ற காரணத்தினால் அக்னியும் அவரிடம் பேசுவதில்லை. பிறர் பேசியதை உண்மை என்று கூறும் வகையில் இருந்த ஜெகதீஷின் செயலில் அடிபட்டு தான் போனான் அந்த காளை.

அந்த நிகழ்வு நடந்து இரண்டு மாதம் கடந்திருந்தும் அக்னி இறுகியே காணப்பட்டான். நண்பர்கள் எவ்வளவு கேட்டும் அவனிடம் பதிலில்லை அதே போல் அந்த நிகழ்விற்கு பின் இந்து சிறு சிறு விஷயத்திற்கும் பயந்து அலற தொடங்கிருந்தாள். அதற்கு பின் கண்ணன் அவளை தனியே எங்கும் அனுமதிப்பதில்லை.

தொடரும்

Advertisement