Advertisement


                   அத்தியாயம் 16

எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா….

மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு  வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக கட்டிடம்.

AR குரூப்ஸ் என்று வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அத்தனை தனித்துவமாய் கம்பீரமாய் காட்சியளித்தது.

அங்கு வேலை செய்பவர்களின் உடை முதல் பழக்கவழக்கம் வரை அனைத்துமே ஒரு வரைமுறையோடு இருந்தது.

அவ்வலுவலகத்தின் ஊழியர்களின் கண்ணில் அப்படி ஒரு பதட்டம். அவர்களின் பதட்டத்திற்கு காரணமானவன் அவர்களின் முதலாளி,  ஆம் அவர்களின் முதலாளி வரும் நாள் அன்று. இதுவரை வெளிநாட்டிலிருந்து அவர்களை அலறவிட்டவன் இனி அங்கு தன் செங்கோலை நாட்ட வந்துக்கொண்டிருந்தான்.

மற்ற முதலாளிகளை போல் கோட் சூட் என்றில்லாமல் வெள்ளை நிற மேல் சட்டையும் சாம்பல் நிற கால் சட்டை அணிந்து தன் மேலசட்டையினை இன் செய்து அக்மார்க் பார்மல் லுக்கில் தன் கையிலிருந்த கடிகாரத்தை பார்த்து யாருடனோ அலைபேசியில் பேசியபடி இல்லை இல்லை கத்தியபடி உள்ளே நுழைந்தான்.

அவன் அலுவலகத்தில் நுழைந்த மறுநொடி அங்கிருந்த சலசலப்பு அப்படியே நிசப்தமாகி போனது. அவனோ அலைபேசியில் “நீ என்ன பண்ணுவியா எனக்கு தெரியாது இப்போ நீ இங்க இருக்கனும்.. ரைட் நவ்.. ஐ டோன்ட் கேர் வாட் ஆர் யூ டூயிங்..” என்றவன் காட்டு கத்தல் கத்திவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவன் கத்தியதை கண்டு மிரண்ட சுஷ்மிதா (அங்கு வேலை செய்யும் பெண்)  தன் உயிர் தோழன் ராகுலிடம் “போச்சு.. பாஸ் இன்னிக்கு என்ட்ரி அப்போவே டெரர் மூட்ல வராருடா.. செத்தோம்” என்று முணுமுணுக்க

ராகுல் “ஆத்யன் சார் சும்மாவே டெரர் தான்.. இதுல ஏதோ கார சட்னிய வேற சாப்பிட்டு வந்திருக்காரு போலயே”

சுஷ்மி “ஐயோ அந்த ஒரு தெய்வம் மட்டும் வரலனா நம்ம நிலமை ரொம்ப கவலைகிடம் ஆகிடுமேடா சோனமுத்தா” என்று மிரண்ட குரலில் புலம்ப, அந்த நிசப்தத்தில் அவர்களின் கூற்று மிக தெளிவாக ஆத்யன் காதில் விழுந்தது.

ஆத்யன் அவர்களை ஒரு பார்வை பார்க்க அடுத்த நிமிடம் இருவரின் வாயும் தானாக மூடியாது. அந்த அலுவலகத்திலேயே அவனுக்கு பிடித்த இருவர் அவர்கள் தான் எனினும் அதை அவன் என்றும் காட்டிக்கொண்டதில்லை.

தலைமை ஊழியர்களை மீட்டிங்கிற்கு வரும்படி கட்டளையிட்டவன் தன் அறைக்குள் நுழைந்தான்.

அவன் அறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடம் அங்கு வந்து சேர்ந்தான் அவனின் பி.ஏ. அவனை கண்ட சுஷ்மி “அண்ணா.. சே.. சார் வந்துடீங்களா” என்று நிம்மதி பெருமூச்சு விட,

அப்புதியவனோ “அண்ணானே கூப்பிடு பரவால்ல” என்றான் அதற்குள் ராகுல் “நல்லவேளை வந்துடீங்க ண்ணா.. சார் ஆரம்பமே இன்னிக்கு கொடூரமா இருக்கு” என்க அதனை ஆமோதித்த புதியவன் “ஆமா டா.. இன்னிக்கு கொஞ்சம் டென்ஷனா தான் இருக்காரு, என்ன ஆக போகுதோ” என்னும் போதே சுஷ்மி “ஆமாண்ணா வரும்போதே போன்ல யாருக்கோ செம்ம கத்து” என்று கண்களை உருட்ட,

அப்புதியவனோ “அந்த கத்தே எனக்கு தான்” என்றான் தன்னை நொந்து. ராகுல் சுஷ்மிதா இருவரும் அவனை வாயை பிளந்து பார்க்க,

புதியவனோ “சரி ரொம்ப பொலக்காதீங்க.. நான் போய் பாக்குறேன் அவரை” என்று முன்னே செல்ல, அந்த இரண்டு வானரமும் அவனை பின் தொடர்ந்தது.

அவர்களை திரும்பி பார்த்தவன் “எங்க வரீங்க பின்னாடி” என்று மார்புக்கு குறுக்கே கைகட்டி விசாரிக்க,

சுஷ்மி “எல்லாம் ஒரு ஆர்வம் தான்” என அசடு வழிய,

“எனக்கு அங்க என்ன அர்ச்சனை நடக்குதுன்னு பார்த்து போட்டோ எடுத்து மீம் போட்டு அதை எனக்கே அனுப்புவீங்க அப்படி தான” என்று புருவமுயர்த்த,

ராகுல் “நாங்க போய் அப்படி பண்ணுவோமா” என்று வராத கண்ணீரை துடைக்க,

“அடிங்கு.. ரெண்டு பேரை பத்தி எனக்கு தெரியாதா.. இப்போ ஒழுங்கா போறீங்களா இல்ல அவர்கிட்ட போட்டு கொடுக்கவா” என்று மிரட்ட அது சரியாக வேலை செய்தது.

அவர்களை நினைத்து சிரித்துக்கொண்டே தலையாட்டியவன் ஆத்யனின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

“குட் மார்னிங் சார்” என்று பவ்வியமாக நுழைந்தவனை பார்வையால் பஸ்பமாக்கிய ஆத்யன்

“வாங்க சார்.. இப்போ எதுக்கு அந்த டெண்டர் எடுக்க வரதா சொல்லி மெயில் அனுப்பிருக்கீங்க.. அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம” என்று அழுத்தமாக கேட்க,

“இல்ல சார்.. இது ஒரு பெரிய ப்ரொஜெக்ட்.. இதுக்கு நிறைய போட்டி இருக்கும் அதான் இது நமக்கு கிடைச்சா நம்ம கம்பெனி இன்னும் விரியும்” என்று புரியவைக்க முயல,

“ஏன் நம்ம கம்பெனி இப்போ பாதளத்துல இருக்கா.. அந்த ப்ரொஜெக்ட் வாங்கி தான் நான் மேல வரனுமா” என ஆத்யன் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக கேட்க

“அப்படி இல்ல சார்” என்று அப்புதியவன் ஏதோ விளக்கம் கொடுக்க வர, ஒரு கரம் நீட்டி அவனை தடுத்தவன் “இப்போ எனக்கு அது முக்கியமில்ல.. நான் இனி சென்னை போறதா இல்ல.. காட் இட்” என்று தன் கூர் பார்வையை அவன் மீது செலுத்த, மறுபுறம் பலத்த அமைதி நிலவியது. அதில் கடுப்பானவன் “உன்கிட்ட தான் பேசுறேன் கிச்சா” என்று குரலை உயர்த்த,

கிஷோரோ “கிஷோர் சார்” என்றான் தன் பெயரை. அதில் அமைதியாவது ஆத்யனின் முறையாயிற்று.

கிஷோர் “இங்க பாரு ரேயா.. உன்னோட பாஸ்ட் அப்பறம் உன்ன பத்தி யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்ன்னு நீ சொன்னதால தான் நான் இப்போவரை உன் பெயர் சொல்லி கூப்பிடாம.. உன் பிரெண்ட்ன்னு கூட சொல்லாம இருக்கேன். அப்படி இருக்குறப்போ நான் ஏன் உனக்கு பிடிக்காததை பண்ண போறேன்.. நிஜமாவே அந்த டெண்டர் ரொம்பம் முக்கியமான ஒன்னு” என்று ஆத்யனாகிய ஆத்ரேயனுக்கு புரிய வைக்க, அவனோ தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம் பிடித்தான்.

கிஷோருக்கு தான் அவனை சம்மதிக்க வைக்க மலைப்பாக இருந்தது.

கிஷோர் “குடும்பத்தை விட்டுட்டு வந்த சரி.. யார்க்குடையும் தொடர்புல இல்ல சரி.. ஆனா வேலை விஷயமா கூட போக மாட்டேன்ற அளவுக்கு அப்படி என்ன பயம் உனக்கு” என்று கேட்க, அவனை ஏகத்துக்கும் முறைத்தவன் “நான் யாருக்கும் பயப்படல.. போக கூடாதுன்னு இருக்கேன் அவ்ளோ தான்.. ஆனா இப்போ சொல்லுறேன்.. நம்ம சென்னை போறோம்” என்றிட, கிஷோரின் முகத்தில் வெற்றி களிப்பு. சரியாக அந்நேரம் அங்கு வந்த உணவாளார் ஆத்ரேயனுக்கு செண்டவிச்சும் பழரசமும் எடுத்துக்கொண்டு வர,

ஆத்ரேயன் “யாரு எடுத்துட்டு வர சொன்னா” என்று சீறினான். கிஷோர் அந்த உணவாளரை அனுப்பிவிட்டு “மிஸ்டர் ஆத்யன் தி டெஸ்ட்ராயர், நான்தான் இதை கொண்டுவர சொன்னேன்.. சாப்பிடுங்க பேசாம..அப்பறம் மீட்டிங்க்கு வரலாம்” என்க,

ரேயன் “நீயும் என்ன அப்படி கூப்பிடாத” என்றான் எரிச்சலாக

கிஷோர் “ஹெலோ.. நீ தான அந்த அவார்ட் வாங்குன.. ஆத்யன் தி டெஸ்ட்ராயர் ஆப் தி இயர்.. அதான் எல்லாரும் அப்படி கூப்பிடுறாங்க” என்று தோளை உலுக்க,

ரேயன் “அது மத்தவங்களுக்கு.. நீ அப்படி கூப்பிட தேவையில்ல” என்றிட

“ஓகே சார்” என்று கிஷோர் சிரிக்க, ரேயன் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.

கிஷோருக்கு அவன் எப்போது தன்னிடம் மீண்டும் பழைய அத்துவாக மாறுவான் என்ற கவலை பெரிதாக இருந்தது. ஆறு வருடங்களாகிவிட்டது கிஷோர் அவனை அத்து என்றழைத்து. அவனை அத்து என்றழைக்கும் இரு ஜீவன்கள் இவனும் ஆருவும் மட்டுமே அல்லவா.. என்னதான் முதலாளி என்ற முகமூடியில் இறுக்கத்தை இழுத்து பிடித்து அவன் வைத்திருந்தாலும் மனதில் இன்றளவும் அவன் மாறவில்லை என்பதை கிஷோர் நன்கறிவான்.

எத்தனை அழகாய் தொடங்கிய கல்லூரி வாழ்க்கை அப்படி சுன்னியமாகி போகும் என்று அவனும் அறியவில்லை தானே. ரேயனை நினைத்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் “நீ சாப்பிட்டு வா.. நான் மத்ததை அரேஞ் பண்ணுறேன்” என்று வெளியேற கதவை திறக்க, சுஷ்மியும் ராகுலும் அவன் மேல் விழ வந்து பின் சுதாரித்து நின்றனர்.

ஆம் கதவில் காதை வைத்து கேட்டுக்கொண்டிருந்தவர் அறியவில்லை கிஷோர் சட்டென கதவை திறப்பானென்று.

அவர்களை அங்கு எதிர்பாராதவன் கதவை மூடிவிட்டு “டேய் ட்வின் குரங்குங்களா.. என்ன பண்ணுறீங்க” என்று பல்லை கடிக்க, இருவரும் அசடு வழிந்தபடி நின்றனர்.

எங்கு தாங்கள் பேசியதை இவர்கள் கேட்டுவிட்டார்களோ என்ற பயம் வேறு அவனை ஆட்கொண்டது.

சுஷ்மி “ண்ணா உள்ள என்ன நடந்துச்சு” என்று ஆர்வமாக வினவ,

கிஷோர் சந்தேக பார்வையுடன் “ஏன் நீங்க கேட்களையா” என்று அழுத்தமாக வினவ

ராகுல் “இல்லையே.. நாங்க வந்து கதவுகிட்ட காதை வைக்கும் போதே நீங்க தான் கதவ திறந்துடீங்களே” என்று வருந்த, அதில் நிம்மதியடைந்தவன் “ஒன்னுமில்ல.. ஹீ இஸ் நார்மல் நவ்” என்றிட

சுஷ்மி “அப்போ ஆங்கிரி மோட் லைட்டா” என்று கலாய்க்க

ராகுலோ “அடியே லூசு.. நம்ம பாஸ் ஹல்க் மாதிரி.. ஆல்வேஸ் ஆங்கிரி மோட்” என்று பெருமைபட

கிஷோர் தலையில் அடித்துக்கொண்டான்.

பின் கிஷோரே “இப்படியே நின்னு பேசுங்க.. அவன் வந்து.. ஐ மீன் அவரு வந்து நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி வைப்பாரு.. அப்போ அழுதுட்டே வாங்க” என்று முன்னே நடக்க, சுஷ்மியும் ராகுலும் ஒருவரை இருவர் பார்த்துக்கொண்டே அவன் பின்னே ஓடினர்.

மீட்டிங் அறையினுள் நுழைந்த ஆத்யன் என்று இவர்களால் அழைக்கப்படும் ஆத்ரேயன் அவர்களுக்கான சில விதிமுறைகளை கூறிவிட்டு இறுதியாக “என்னோட திறமையினால மட்டுமில்ல.. உங்களோட உழைப்பாலையும் தான் இந்த கம்பெனி இவ்ளோ பெருசா வளர்ந்து நிக்கிது.. இதே போல நீங்க உங்க கடமையை சிறப்பா செய்வீங்கன்னு நம்புறேன்.. ஆண்ட் ஐ நீட் எவ்ரிதிங் டூ பி பர்பெக்ட்.. தேங்க் யூ” என்றவன் குறுநகையோடு ஒரு தலையசைப்பை வழங்கிவிட்டு செல்ல, அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஷர்மிளா அவனிடம் “சார் கடைசியா இரு ஸ்மைல் பண்ணிங்களே அது எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா.. இப்படியே சிரிச்சிட்டே இருங்களேன்” என்றுரைக்க, அவனுக்கோ அந்த கலவரத்திற்கு முன் ஆரு பேசியது நினைவிற்கு வந்தது. அதில் கண்களை மூடி திறந்தவனின் அவன் கண்களோ கோபத்தில் சிவந்திருக்க ஷர்மிளாவை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு “பீ இன் யூர் லிமிட்ஸ்.. கெட் லாஸ்ட்” என்று சீறியவன் தனதறைக்கு சென்றான்.

புயலாய் தன் அறைக்குள் நுழைந்து மேசையிலிருந்த கோப்பைகைளை பறக்கவிட்டவன் அங்குமிங்கும் நடந்து தன் கோபத்தை கட்டுப்படுத்த முயல, அங்கு வந்த கிஷோர் கதவை தாழிட்டு “ரேயா என்ன ஆச்சு இப்போ.. எதுக்கு அப்படி கத்திட்டு வந்த.. என்னதான் பிரச்சனை உனக்கு” என்று அதட்டலாக கேட்க

ரேயன் “ஒன்னுமில்ல நீ போ” என்றான்.

கிஷோர் “இல்ல தெரியாம தான் கேட்குறேன்.. என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ.. எது கேட்டலும் கத்துற.. நீ கத்துன உடனே நாங்க அடங்கிடனுமா” என்று முறைக்க,

“ஐ ஆஸ்க்ட் யூ டூ கெட் அவுட்.. வெளிய போ.. நீ கேட்குறதுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்ல” என்று வார்த்தைகளை கடித்து துப்ப

கிஷோர் “தப்பு பண்ற ரேயா.. உன்ன ஒருத்தங்க ஹர்ட் பண்ணிட்டாங்கன்னு உன்ன நினைக்கிறா எல்லாரையும் நீ ஹர்ட் பண்ணுற” என்றவன் கதவை அடித்து சாத்திவிட்டு வெளியில் சென்றிட, தன் தலையை பற்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தான் ஆத்ரேயன்.

அவன் மனமோ “இனி ஒரு துரோகத்தை தாங்க எனக்கு சக்தியில்ல கிச்சா.. ஐ கான்ட் பேர் எனிமோர்” என்றது.

ஒரு பக்கம் ஆருவை நினைத்து அவன் மனம் ரணாமாய் கதற, மறுபக்கம் தன் தந்தையின் துரோகம். உயிருக்கும் மேலாக அவன் நினைத்திருந்த இருவரின் துரோகமும் அவனை மிருகமாய் மாற்றியிருந்தது.

இங்கு இப்படியென்றால்

சென்னையில்..

சென்னையின் பிரதான சாலையில்   காண்போரை கவர்ந்திழுக்கும்படி நளினமான கட்டிடமைப்பை கொண்டு கம்பீரமாய் வீற்றிருந்து ஒரு கட்டிடம். அதன் வாயிலோ “Buro Engineers” என்ற பெயர் பலகையை தாங்கி நின்றது. அந்த கட்டிட வடிவமைப்பே அதை அமைத்தவரின் திறனை பறைசாற்றும்படி இருந்தது.

அந்த கட்டிடத்தின் இறுதி தளத்தில் தன் அறையில் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டு இருந்த நேஹாவிற்கு கழுத்து கை எல்லாம் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது, “ஐயோ இன்னும் எத்தனை தடவை டைப் பண்ண வைக்க போறாங்கன்னு தெரியல” என்று முணுமுணுக்க காரணம் அவள் இது வரை ஒரு பத்து தடவையாவது தட்டச்சு செய்திருப்பாள் எல்லாவற்றையும் ரீஜெட் செய்து விட்டான் அவளின் M.D பிரதாப், “இப்போ என்ன சொல்ல போறாரோ” என்று நினைத்து கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவள் அவனின் அறை நோக்கி சென்றாள்.(நேஹா அவனின் பி.ஏ.)

அந்த அறை வாயிலில் “அக்னி பிரதாப் மேனேஜிங் டைரக்டர்” என்று போட்டிருக்க  அந்த அறை கதவை மெதுவாக தட்டினாள்.

“கம் இன்” உள்ளிருந்து கம்பீரமான குரல் ஒலிக்க, மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள் அங்கு பாறை போல் இறுகிய முகத்தோடு அக்னி அமர்ந்திருந்தான்.

அவனிடம் பயந்து கொண்டே தான் தட்டச்சு செய்ததை நீட்ட அதை வங்கியவன் அதை பார்க்காமலே  அவளை நோக்கி வீசி விட்டு “டூ இட் அகேயென்” என்றுரைக்க,

“ஆனா அகி”என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் அவன் அனல் திரிக்கும் பார்வையில், “ஆனா சார் நீங்க பார்க்கவே இல்லையே” என்றுரைக்க,

“ஆமா பார்க்கல தான் அதுக்கு” என்று அவளை பார்த்து நக்கலாய் சிரித்தவன் தொடர்ந்து, “எனக்கு எப்போ பார்க்கணும் தோணுதோ அப்போ தான் பார்ப்பேன் அது வரைக்கும் நீ டைப் பண்ணி தான் ஆகணும்” என்றவன் “சோ”என்று விட்டு வாசலை நோக்கி கை காண்பிக்க, அவளும் வேறு வழியின்றி அந்த பைலை எடுத்து கொண்டு சென்றாள்.

ஒரு மணி நேரம் திருப்பி கஷ்டப்பட்டு டைப் செய்தவள் அதை எடுத்து கொண்டு மீண்டும் அவன் அறைக்கு செல்ல அங்கு கண்ட காட்சி அவளை வயிறு எரிய வைத்தது. ஏனென்றால் எல்லாரிடமும் கடுகடுவேன இருக்கும் அக்னி, அவன் கம்பெனி மேலாளர் ரித்துவிடம் மட்டும் சிரித்து பேசி கொண்டு இருந்தான்.

நேஹா அந்த ரித்துவை முறைத்து கொண்டே உள்ளே நுழைய, ரித்துவோ, “ஒகே அக்னி சார் நீங்க சொன்னதை பத்தி நம்ம நைட் பேசலாம் நான் நைட் கால் பண்றேன்” என்க, அதற்கு அவனும் சிரித்து கொண்டே,”sure கண்டிப்பா” என்றான். ரித்து அவனிடம் விடை பெற்று வெளியேற இதையெல்லாம் எல்லாம் பார்த்து கொண்டு இருந்த நேஹாவிற்கு கோவம் கூரையை பிய்த்து கொண்டு வந்தது இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு நின்று இருந்தாள்.(இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் அலுவலகத்தில்   யாரும் அவனை அக்னி சார் என்றழைக்க கூடாது பிரதாப் சார் என்று தான் அழைக்க வேண்டும் நேஹா உட்பட ஆனால் ரித்து மட்டும் அக்னி சார் என்றழைப்பாள் அதற்கு இவனும் ஒன்றும் மறுப்பு தெரிவிக்கவில்லை….இதுவும் ஒரு additional காண்டு நம்ம நேஹாவிற்கு)

தான் கொண்டு வந்திருந்த பைலை அவனிடம் நீட்ட, அதை வாங்கியவன் ஒரு முறை பார்த்து விட்டு சைன் செய்தான். ‘ஹப்பா நல்ல வேலை சைன் பண்ணிட்டான் இப்போவாவது வீட்டுக்கு போலாம் அல்ரெடி 7 மணி ஆயிடுச்சு’ என்று நினைத்தவள், அவனிடம் “ஒகே சார் அப்போ நான் கிளம்புறேன்” என்று அவள் கிளம்ப பார்க்க,

“நான் இன்னும் உங்கள கிளம்ப சொல்லவே இல்லை மிஸ்.நேஹா உட்காருங்க நாளைக்கு மீட்டிங்க்கு சில நோட்ஸ் எடுக்கணும்” என்று கூற,

அவளோ தயங்கி கொண்டே,”சார் அல்ரெடி என் ஒர்க் டைம் ஓவர்” என்றிட

அவளை முறைத்தவன் “நீங்க என்னோட P.A. நான் எப்போ வேலை சொன்னாலும் என்ன வேலை சொன்னாலும் செய்ய வேண்டியது உங்க கடமை.. ஒருவேளை உங்காளால உங்க கடமையை செய்ய முடியலனா யூ மே கெட் லாஸ்ட்”என்று அவளை பார்த்து அழுத்தமாக சொல்ல, அவளும் வேறு வழியின்றி அவன் சொன்னதை எல்லாம் குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். இதில் ஒரு மணி நேரம் கழிய அவர்கள் வேலையை முடிக்கும் பொழுது மணி எட்டு.

அக்னி

“யு மே லீவ்” என்க, அவனிடம் விடை பெற்று வெளிய வந்தவள் வீட்டுக்கு செல்ல ஆட்டோ புக் பண்ண போனை எடுத்தாள். ஏனென்றால் அன்று தான் அவள் தன் ஸ்கூட்டியை சர்வீஸ்க்கு விட்டிருந்தாள்.

ஆட்டோ புக் செய்துவிட்டு அது வர காத்துக்கொண்டிருந்தாள், அப்பொழுது தான் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்த ரித்துவை கவனித்தவள், “இவ இன்னும் வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்றா இவளுக்கு தான் அப்போவே ஒர்க் முடிஞ்சுருச்சே” என்று பார்த்து கொண்டு இருக்க.

அப்பொழுது தான் வீட்டுக்கு செல்ல வெளிய வந்த அக்னி, நேஹா அங்கு நிறுப்பதை கண்டும் காணாதது போல்  கடந்து சென்றவன் அங்கு நின்றுக்கொண்டிருந்த ரித்துவை பார்த்து, “என்னாச்சு ரித்து இன்னும் கிளம்பல” என்று கேட்க,

“இல்ல சார் ரொம்ப நேரமா cab புக் பண்ணிட்டு இருக்கேன் எல்லாம் cancel ஆகுது”என்றாள் சலிப்பாக,

அக்னி “சரி வா நான் ட்ரோப் பண்றேன்” என்று தன் காரை நோக்கி அழைத்து செல்ல, இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த நேஹாவிற்கு கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது தன்னை அவன் ஒரு முறை கூட திரும்பி பார்க்கவில்லையே என்று.

அவர்கள் இருவரும் காரில் ஏறி ஏதோ பேசி சிரித்து கொண்டே செல்வதை கண்டு அத்தனை நேரம் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

எவ்ளோ நேரம் அப்படியே நின்றாளோ அவள் புக் செய்த ஆட்டோ வரவே தன் கண்ணீர் துடைத்து கொண்டு ஆட்டோவில்  ஏறினாள்.

நால்வரின் வாழ்வை மாற்றிய தருணத்தை இனிவரும் அத்தியாயங்களில் காண்போம்….

கல்லுரியில் கலவரம் நடந்து ஒருவாரம் கடந்திருந்தது. அன்று வழமை போல் கிஷோரும் ரேயனும் காரில் கல்லூரிக்கு செல்ல,

கிஷோர் “என்னடா ஒரே அதிசயமா நடக்குது”

“என்னடா” என்று ரேயன் புரியாமல் கேட்க,

கிஷோர் “என்னடாவா.. புது பிரெண்டெல்லாம் பிடிச்சிருக்க போல” என நக்கலாக புருவமுயர்த்த

ரேயன் “என்ன கேட்க வரியோ அதை நேரடியா  கேளுடா” என்றான்.

கிஷோர் “ஆரா கூட பிரெண்ட் ஆகிட்ட போல”

“ம்ம்” என்றவன் காரை ஓட்ட

கிஷோர் “என்ன திடீர் மாற்றம்.. ஒருவேளை அது வந்திடுசோ” என்று சந்தேகமாக கேட்க

ரேயன்

“எது வந்திடுச்சோ.. கொரோனாவா” என கடிக்க,

கிஷோர் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “இதுக்கெல்லாம் மதுர வீரன் தானே கூட போட முடியாது.. அவ்ளோ மட்டமா இருக்கு” என கடுப்பாக கூற, ரேயன் சிறு புன்னகையுடன்

“சரி.. என்ன சொல்லனும் இப்போ” என்று கேட்டான்.

கிஷோர் “இருக்கா இல்லையா.. இருக்கு ஆனா இல்லையா” என கேள்வியையே குழப்பி கேட்க,

ரேயன் “எதுவும் வேண்டாம்னு தான் பிரெண்ட் ஆகிட்டேன்” என அசட்டையாக கூற, கிஷோர் உறைந்து போய் பார்த்தான்.

ரேயன் “இப்போ எதுக்கு இவ்ளோ கேவலமா ப்ரீஸ் ஆகுற”

“பின்ன என்னடா.. புரியும்படி சொல்லு” என  ஆர்வமாக கேட்க,

ரேயன் “பேசாமயிருந்தா தான் எதாச்சு யோசிக்க தோணும்.. அதான் பிரெண்ட் ஆகிடலாம்னு ஆகிட்டேன்” என்று வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்த

கிஷோர் நக்கலாக “அதாவது கத்தில தற்கொலை பணிக்க பயமா இருக்குன்னு ஒருத்தன் பிரியாணில விஷம் கலந்து சாப்பிட்டானாம்” என்று நக்கலடிக்க,

ரேயன் “என்னடா உளறுற”

“அதெல்லாம் புரியிரவங்களுக்கு புரியும் நீ வண்டிய ஓட்டு” (நம்மள தான் சொல்றான் மக்களே)

ரேயன் “அடிங்கு.. என்ன மக்களுக்கு மெஸ்ஸேஜ்ஜா… மூடிட்டு வாடா” என்க,

கிஷோர் “ச்ச.. ஒரு நல்லவன் பேசுனாலே இந்த உலகத்துக்கு பிடிக்க மாட்டிங்கிது” என புலம்ப, அவன் தலையில் கொட்டிய ரேயன் ஒரு விரல் நீட்டி அவனை மிரட்டிவிட்டு வண்டியை செலுத்தினான்.

ரேயன் மனதினுள் ‘நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்.. தேவையில்லாம எதுவும் யோசிக்க கூடாது.. பேசுனாலும் அதை கேசுவலா எடுத்துக்கிட்டு போயிடனும்’ என நினைத்துக்கொண்டு வண்டியை கல்லூரியினுள் நிறுத்தினான்.

அன்று முழுவதும் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டி மாணவர்கள் அனைவரும் ட்ராயிங் அறையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அக்னியும் ஆருவும் தத்தமது வரைபடத்தில் கவனம் செலுத்த நேஹா தன் வேலையை முடித்துவிட்டு இருவருக்கும் உதவி புரிந்தாள் என்றால் கதிர் அவர்களை வம்பிழுத்தபடி அமர்ந்திருந்தான்.

அக்னி “டேய் நீ முடிச்சியா இல்லையா.. நாளைக்கு டிசைன் சப்மிட் பண்ணனும்”

கதிர் “அதெல்லாம் பார்த்துக்கலாம் மச்சான்” என அசட்டையாக அமர்ந்திருக்க

நேஹா “என்னடா நீ அவனை போய் கேட்குற.. அவனுக்கு தியரி தான் பிடிக்காது இதெல்லாம் எப்பயோ பண்ணிருப்பான்.. நடிக்கிறான் எருமை மாடு” என அவனை வார,

ஆரு “ஆமா ஆமா.. சரியான பிராடு” என முணுமுணுத்தபடி வரைய கதிர் அசடு வழிந்தான்.

அக்னி “நீ எவ்ளோக்கு எவ்ளோ வாய் அடிக்கிறியோ அதே மாதிரி வேலையும் முடிச்சிடுவன்னு தெரியும்.. இன்னும் சிலரும் அப்படி பண்ணா நல்லா இருக்கும்” என ஓரக்கண்ணால் ஆருவை பார்த்தபடி கூறி முடிக்க,

ஆரு “ஹே என்ன நக்கலா.. அதெல்லாம் நான் முடிச்சிடுவேன்.. நீ முடிச்சிட்டு பேசுடா” என சிலுப்பிக்கொள்ள

அக்னி “வாயாடாம முடி முதல.. அப்பறம் பேசலாம்”

ஆரு “ஏன் மௌன விரதம் இருந்தா டிசைன் தானா வந்திடுமா” என நக்கலாக கேட்க, நேஹா சிரித்துவிட்டாள்.

நேஹாவை முறைத்த அக்னி “அவ சொல்ற மொக்கைக்கு எல்லாம் நீ தான் சிரிச்சு என்கரேஜ் பண்ணுற.. வாய மூடு” என்க அவளும் சிரிப்பை அடக்க முயன்றாள் ஆனால் பாவம் அவளால் அது முடியவில்லை.

சரியாக அப்போது கிஷோரும் ரேயனும் நுழைந்தனர். ஆரு எதார்த்தமாக கிஷோருடன் பேச அக்னி அவளை கண்டும் காணாது போல் அமர்ந்திருந்தான்.

ஆரு “பார்ட்னர் டிசைன் முடிச்சிட்டீங்களா”

கிச்சா “வா வா பார்ட்னர்.. ச்ச சாரி.. சிலரோட பிரெண்ட்டே.. வா வா” என்று வரவேற்க, ஆரு சிரித்துக்கொண்டே ரேயனை நோட்டமிட்டாள் அவனோ கிஷோரை முறைத்துவிட்டு அவளை பார்க்க,

ஆரு “சரி சொல்லுங்க.. முடிச்சாச்சா ரெண்டு பேரும்” என்று காரியத்தில் கண்ணாக இருக்க

கிஷோர் “எனக்கு இன்னும் கொஞ்சம் தான் இருக்கு ஆனா பாஸ் தான் முடிக்கல இன்னும்.. சொல்ல போனா ஆரம்பிக்கவே இல்ல” என்று உதட்டை பிதுக்கினான்.

ஆரு அதிர்ந்து அவனை பார்த்து “நாளைக்கு சப்மிட் பண்ணனும்” என்று நினைவூட்ட

கிஷோர் “அவன் ஒன்னும் பண்ணாம இல்ல பார்ட்னர்.. நாலு டிசைன் பண்ணான் ஆனா பிடிக்கிலன்னு கிழிச்சி போட்டுட்டான்.. சைக்கோ” என்க

ஆரு “எது நாலா.. ஏன் அத்து ஒன்னு பண்ணவே நாக்கு தள்ளுது இதுல நீ ஏன் நாலு பண்ணி கிழிச்ச.. டைம் வேஸ்ட் தான” என அக்கறையாய் வினவ

ரேயன் “இல்ல ஆரா எனக்கு பிடிச்சா தான் அதை சப்மிட் பண்ணுவேன்.. இதுவும் நான் எதிர்காலத்துல பண்ண போற ப்ரொஜெட் மாதிரி தான்” என்றிட, ஆரு அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கிஷோர் “பார்ட்னர் இதுக்கே வாய பொலக்குறயே அவன் இன்னும் ஞானி மாதிரி பேசுவானே அதெல்லாம் கேட்டா என்னாவ” என்று நகைக்க, ஆரு “அதான் பார்ட்னர்” என்றவள் ரேயனின் தோளை தட்டி “மாஸ் அத்து மாஸ்.. சரி நான் போய் பண்றேன்.. நீயும் சீக்கிரம் பண்ணு.. எதாச்சு ஹெல்ப் வேணும்னா கேளு ஓகே” என்றவள் துள்ளல் நடையுடன் தன் இருக்கைக்கு சென்றாள்.

கிஷோர் அவள் செல்வதை பார்த்து “குட்டி பயபுள்ள.. அது முடிக்காம உனக்கு ஹெல்ப் வேணும்ன்னா கேக்க சொல்லுது பார்த்தியா” என்று நக்கலடிக்க,

“அவ கேட்டா பண்ணுவா.. அதான் சொல்லிட்டு போறா” என்றவன் தன் இருக்கையில் அமர

கிஷோர் “ஓ ஓ பிரெண்ட்ஸ்னா அப்படி தான்ல… சரி சரி பிரெண்ட்ட்ட்” என்றவன் அந்த பிரெண்ட்டில் அழுத்தம் கொடுக்க, ஆத்ரேயன் முறைத்த பின்னே  அமைதியானான்.

அன்றே முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் கல்லூரி நேரம் முடிந்தும் வரைந்துக்கொண்டிருக்க, அவர்களுக்காக சிற்றூண்டியை வரவைத்திருந்தார் அவர்கள் துறை தலைவர் ராம் குமார்.

கதிர் “என்னதான் விறப்பா சுத்துனாலும் நல்ல மனுஷன் டா ஆர்.கே.” என்று அவர் புகழ் பாட அக்னியும் அதை ஆமோதித்தான்.

ஆரு “டேய் நீ தான் முடிச்சிட்டல.. வீட்டுக்கு போக வேண்டியது தான.. நேஹா கூட முடிச்சிட்டா” என்று கதிரிடம் கூற, அக்னி அவளை எட்டி பார்த்தான். அக்னியின் பார்வையை கண்டுகொள்ளாது ஆரு கதிரிடம் பேச

நேஹா “வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம்.. போர் தான்.. அதுக்கு இங்கயே இருக்கலாம்.. இருடா குரங்கே” என்றாள். அக்னிக்கு அப்போது தான் நிம்மதியாக ஆரு அவனை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

ஆரு “காஃபி குடிச்சிட்டு வரேன்” என்றவள் இரண்டு கப் எடுத்துக்கொண்டு ஆத்ரேயனின் மேசைக்கு சென்றாள்.

அவள் செல்வதை பார்த்து அக்னியின் முகம் மாற, அவன் அருகே நின்ற நேஹா “என்னன்னு சொல்லனும்.. முறைச்சா மட்டும் பத்தாது” என உதட்டை சுழிக்க அக்னி அவளை அமைதியாய் பார்த்தான்.

நேஹா “இங்க பாரு அகி.. அவளுக்கு பிடிச்சா அவ பேசலாம்.. நீ அவளை தடுக்கவோ அடக்கவோ கூடாது” என பாடம் எடுக்க,

அக்னி “நான் ஒன்னும் அவளை தடுக்கல.. நான் அப்படி பட்ட ஆளும் இல்ல” என்றிட

நேஹா “அதான் தெரியுமே.. சாருக்கு பொஸ்ஸசிவ்நெஸ்” என்று கண்ணடிக்க,

அக்னி “தெரிஞ்சிகிட்டே பேசுவியா”

“கண்டிப்பா” என தோளை உலுக்கினாள்.

அக்னி பெருமூச்சோடு “நானும் என்ன கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறேன்… ஆனா முடியல” என்க, அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள் அவன் கை பிடித்து “தெரியும் அகி.. விடு.. எல்லாமே நல்லதுக்கு தான்.. எதுவா இருந்தாலும் அவ சொல்ல தான் போறா அதனால நீ இது எதையும் பெருசா எடுத்துக்காத” என்று அவனுக்கு புரியவைக்க முயல அவனோ அவள் நெருங்கி அமர்ந்ததிலேயே தன் வசம் இழந்திருந்தன்.

இங்கு காஃபி எடுத்துக்கொண்டு வந்த ஆருவை பார்த்த கிஷோர் “அட பார்ட்னர் இப்போதான் போய் குடிக்கலாம்ன்னு நினைச்சேன் நீயே கொண்டு வந்துட்ட.. மிக்க நன்றி.. ஆனா இவன் டீ தான குடிப்பான்” என்றிட

ஆரு “ஐயோ அப்படியா.. சரி இரு நான் போய் டீ கொண்டு வரேன்” என்று திரும்ப

ரேயன் “ஹே நீ போய் டிசைன்ன பாரு.. நான் எடுத்துக்குறேன்” என்றான். அதில் பெண்ணவளின் மலர்முகம் வாடிவிட, ஆரு “இல்ல நான் எடுக்க போனேன் அதான் உங்களுக்கும் எடுத்துட்டு வந்தேன்.. எப்படியும் திரும்ப எடுக்க போவேன் அதான் கொண்டு வரேன்னு சொன்னேன்” என்றவளின் குரலும் வாடியே வர

ஆத்ரேயன் “நான் பார்த்துக்குறேன்.. நீ போய் உன் வேலைய முடி” என்றான்.

ஆரு அமைதியாக திரும்ப அதை காண சகிக்கதவன் “கொடு.. எனக்கு காஃபியே போதும்” என்றான்.

ஆரு “இல்ல நீ போய் டீ எடுத்துக்கோ” என்று சிறுகுரலில் கூற

ரேயன் “இல்ல வர்க் இருக்கு.. இதுவே போதும்” என்று அதை அவள் கையிலிருந்து வாங்க ஆருவும் எதுவும் பேசாது அவனிடம் அதை நீட்டினாள்.

ஆத்ரேயன் “அதான் வாங்கிட்டேன்ல.. ஏன் முகத்தை அப்படி வச்சிருக்க” என்று கேட்க, ஆரு புன்னகைத்துவிட்டு “அதெல்லாம் ஒன்னுமில்ல.. சரி நீங்க பண்ணுங்க.. பை” என்று தன் இருக்கைக்கு செல்ல, அவள் புன்னகை அவனுக்கும் ஒட்டிக்கொண்டது.

கிஷோர் “மச்சா எனக்கு என்னமோ எல்லாம் ரிவர்ஸ் அடிக்குமோன்னு தோணுது என்ன சொல்லுற” என்க அவனை முறைத்த ரேயன் “எனக்கு என்னவோ நான் தான் உன்னை அடிப்பேனோன்னு தோணுது” என்றபடி சட்டையின் கையை மடித்துவிட

கிஷோர் “உண்மைய மட்டும் ஒத்துக்காதீங்க.. கேட்டா கெத்து ஹீரோவாம்..” என தலையில் அடித்துக்கொண்டான்.

ஆரு தன் மேசைக்கு வர, நேஹா தான் அக்னி என்ன கூறுவானோ என்று அவனை பார்க்க அவனோ ஆருவிடம் எப்போதும் போல் தான் பேசினான். அதில் அவனை பார்த்து அவள் மென்னகை புரிய அதை பார்த்தவன் ‘என்ன’ என புருவமுயர்த்த, மறுப்பாக தலையசைத்தவள் அதே புன்னகையுடன் திரும்பினாள். இவர்களின் கண்ஜாடைகளை ஆருவும் கவனித்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

ஒருவழியாக வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது ஆரு “டேய் அகி” என்று அவன் கவனத்தை கலைக்க, அக்னி அவளை பார்த்தான்.

ஆரு “எப்போ சொல்ல போற” என்று மொட்டையாக கேட்க, அவளை பார்த்து திருட்டு முழி முழித்தவன் “என்ன சொல்லனும்” என்று அப்பாவியாக கேட்க,

ஆரு “டேய் டேய் போதும் டா.. எவ்ளோ நாள் தான் என்கிட்டயே நடிப்ப” என தலையில் அடித்துக்கொள்ள

அக்னி “நான் என்ன நடிச்சேன்” என்று எங்கோ பார்த்தபடி உரைக்க,

ஆரு “எப்பா டேய் ரீல் அந்து ரொம்ப நாள் ஆச்சுடா.. சொல்லு எப்போ நேஹாட்ட சொல்ல போற” என்று புருவமுயர்த்த

அக்னி “தெரியல” என்று உதட்டை பிதுக்கினான்.

ஆரு “அடேய் சீக்கிரம் சொல்லு.. அப்போதான் ஓகே பண்ண வைக்கலாம்”

“அதெல்லாம் அவ ஓகே சொல்லிடுவா” என்று மெச்சிக்கொள்ள,

ஆரு “எப்பா முடியலடா சாமி” என அலுத்துக்கொண்டாள்.

அக்னி “ஹாஹா.. எனக்கு தான் கை கால்ல விழுந்து ஓகே சொல்ல வைக்க தான் ஆள் இருக்கே” என்று தோளை உலுக்க

ஆரு “யாருடா அந்த பிச்சைக்கார பசங்க” என்று யோசனையாய் கேட்க

அக்னி “நீங்க தான் செல்லங்களா.. போயிட்டு வரவா” என கண்ணடித்துவிட்டு செல்ல

“அட பக்கி பயலே.. போ போய் தொலை” என்றிட, அக்னி சிரித்துக்கொண்டே வண்டியை திருப்பினான்.

இப்படியே நாட்கள் நகர அன்று ஆத்ரேயன் ஆரத்யாவை தவிர்த்து மற்ற மூவரும் ஒரு போட்டிக்காக வேறு கல்லூரி சென்றிருக்க கிஷோர் அன்று விடுப்பு எடுத்திருந்தான்.

ஆராத்யா தன் இடத்தில் அமர்ந்திருக்க, ரேயன் அவளிடம் பேசலாமா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தான்.

இப்படியே மணித்துளிகள் கரைய, மதிய இடைவேளையும் வந்தது. ரேயனின் இடத்திற்கு வந்த ஆரு “ஒருத்தி தனியா இருக்காளே அவக்கூட உட்காருவோம் அட்லீஸ்ட் ஒரு ஹாய் சொல்லுவோம் அதெல்லாம் இல்லல” என்று இடுப்பில் கைவைத்து முறைக்க

ரேயன் “ஹான் அது” என்று ஏதோ கூற விழையும் முன் “சரி என்ன லன்ச்.. லன்ச் இருக்கா இல்ல கேன்டீன் போகனுமா”

“கேன்” என்று அவன் தொடங்கும் முன்பே

“இல்ல வேண்டாம் என்கிட்டயே நிறைய இருக்கு.. இதையே சாப்பிடு” என்று அவன் அருகே அமர, ரேயன் அவளை முறைத்துவிட்டு “ஒரு மனுஷன பதில் சொல்ல விடனும் முதல” என்க,

ஆரு “ஆமா எப்படியும் ஒரு வார்த்தை ஒரு லட்சம் தான.. அது எதுக்கு வந்துகிட்டு அதான் நானே சொல்லிட்டேன்” என்றவள் உணவை பிரிக்க, அவள் கூற்றில் அவன் தான் அடக்கமட்டாமல் சிரித்தான்.

ஆரு “அட அட சிரிப்பு வருது சிட்டிக்கு.. சிரிப்பு வருது” என கேலி செய்ய, ரேயன் அவளையே பார்வையால் அளந்துக்கொண்டிருந்தான். ஆரு தன் நெற்றில் புரண்ட கூந்தலை காதோரம் ஒதுக்க அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி அங்குமிங்கும் ஆடி மன்னவனின் சிந்தையை கவர்ந்தது.

‘உன் கன்னங்களை உரசி உறவாடும் காதணியாய் நான் வரவா’ என ரேயனின் மனம் நேரம் காலம் இல்லாமல் கவிதை தொகுக்க, ரேயன் தான் அதிர்த்துவிட்டான்.

தன் மனம் போன போக்கை கண்டு தன்னை தானே கடிந்தவன் தலையை உலுக்கிவிட்டு அமர,

ஆரு அவன் முன் உணவை வைத்தாள்.

ஆத்ரேயன் “எல்லாரும் ஷேர் பண்ணா பிளேட்ல தான கொடுப்பாங்க.. நீ என்ன பாக்ஸை என்கிட்ட கொடுக்குற” என்று கேள்வியெழுப்ப,

ஆரு “அதுவா.. இது உனக்கு கம்பர்ட்டா இருக்குமான்னு தெரியல அதான்”

ரேயன் “இல்ல பரவால்ல.. நீ கொடு” என்று அவன் அந்த டப்பாவை அவள் புறம் தள்ள, அவனை முறைத்தவள் “நான் ஒன்னும் உன்கிட்ட பர்மிஷன் கேட்கல.. சாப்பிடுன்னு சொன்னேன் அவ்ளோ தான்” என்றுவிட்டு உணவுண்ண, அதில் மெலிதாக புன்னகைத்தவன் தானும் உணவை உண்டான்.

உண்டு முடித்தவன் “தேங்க்ஸ் மா” என்க

ஆருவோ “ஆன்.. கேட்கல” என்றாள் குறும்பு மின்ன. ஆத்ரேயன் புன்னகைத்துவிட்டு “தேங்க்ஸ்ன்னு சொன்னேன்” என்று உரக்க சொல்ல

ஆரு “இருக்கட்டும் இருக்கட்டும்” என தலையை உருட்டினாள்.

ரேயன் “அவங்க எப்போ வருவாங்க” என்று கேட்க,

ஆரு “அதெல்லாம் ஏழு ஆகிடும்.. அப்படியே வீட்டுக்கு வந்திடுவாங்க” என்றாள்.

ரேயன் “நீ எப்படி போவ” என்று அடுத்த கேள்வியை முன் வைக்க,
ஆரு “பஸ்ல தான்” என்றாள்.

ரேயன் “ஓகே” என்றிட,

“இந்த ஓகேக்கு தான் இவ்ளோ கேள்வியா” என்று முணுமுணுப்பாக புலம்பியபடி அவள் எழுந்து செல்ல, அவள் கூற்றில் அவன் தான் மென்னகையுடன் அமர்ந்திருந்தான்.

ஆரு “சரி நான் அங்க போய் உட்காருட்டா” என்று வேண்டுமென்றே கேட்க, ரேயன் ” ஏன் அங்க தான் யாருமே இல்லையே..இங்கயே இரு” என்றான், ஏனோ அவனுக்கும் அவளை தனியாய் அமர வைக்க மனம் வரவில்லை.

ஆரு வகுப்பை சுற்றி கண்களை சுழலவிட்டவள் “இல்ல பரவால்ல” என்று மறுக்க,

ரேயன் “உனக்கு ஓகேன்னா இரு.. மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்காத” என்றவன் ரெகார்ட் எழுத தொடங்கினான். சிறிது யோசித்துவிட்டு ஆருவும் அவன் அருகே அமர்ந்துவிட்டாள்.

அவனுடன் அமர்ந்ததிலிருந்து ஆரு வளவளத்துக்கொண்டிருக்க அவனும் தலையாட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தான்.

ஆரு ரேயனை குறுகுறுவென பார்த்தபடி “நீ எப்போவுமே இப்படி ஹாஃப் ரோபோ தானா.. பேசவே மாட்டியா” என கேட்க,

அவனும்

அவளை அதே போல் பார்த்துக்கொண்டே “நீ எப்போகுமே இப்படி தான் பேசிட்டே இருப்பியா” என்று பதில் கேள்வி கேட்க

ஆரு “அட அட கௌன்டர் பா கெளன்டர் பா” என சிரிக்க அவனும் அவளோடு இணைந்துக்கொண்டான்.

ஆரு “நல்லவேளை நீ போல, இன்னிக்கி யாரும் இருக்க மாட்டாங்க.. நான் காலின்னு நினைச்சேன்” என்று புலம்ப, ரேயன் தலையசைத்தான்.

மதியம் வகுப்பெடுக்க மாணிக்கம் வருகை புரிந்தார். அவரை பார்த்த ஆரு ‘ஆத்தி இவரா.. கேள்வி கேட்டே கொல்லுவாறே’ என்று நினைத்துக்கொண்டு “போச்சு போச்சு..” என்க,

ரேயன் “என்ன.. என்ன ஆச்சு இப்போ”

ஆரு “உனக்கென்ன பா.. உனக்கு எல்லாத்துக்கும் பதில் தெரியும் எனக்கு அப்படியா” என்று முகத்தை சுருக்க

ரேயன் “விடு நான் இருக்கேன்ல” என்று தைரியமூட்ட ஆரு அவனை பார்த்தாள்.

ரேயன் “பதில் நான் சொல்லுறேன்.. சில்” என்றிட அவளும் சரியென்று அமர்ந்தாள்.

ஆரு நினைத்ததை போல் ஒரு கணக்கை போட்டவர் “கம் ஆன் ஆராத்யா இந்த ஸ்டெப்பை எக்ஸ்பிலைன் பண்ணு” என்று வழமை போல் கேள்வியெழுப்ப, ஆரு எப்போதும் போல் திருதிருவென முழித்தாள்.

அவள் விழிப்பதை பார்த்து இதழ் விரித்தவன் அவளுக்கு அதை சொல்லிக்கொடுக்க, அவளும் அதே போல் ஒப்பித்தாள்.

மாணிக்கம் “ஓகே குட் சிட்” என்றவர் “ஆத்ரேயன் நல்லா சொன்ன” என்றார்.

ஆரு “சார்.. நான்தான் சொன்னேன்” என்று சண்டைக்கு நிக்க, மாணிக்கம் சிரித்துவிட்டு “சொன்னது நீ ஆனா சொல்லி கொடுத்தது அவன் தான” என்று கூற

ஆரு “எப்படி சார்” என்று வாயை பிளக்க

மாணிக்கம் “பின்ன.. அவன் எனக்கே புரியாத மாதிரி தான் சொல்லுவான்.. அதை வச்சு தான்” என்றுவிட

ஆரு “அதுவும் சரிதான்” என்று இருக்கையில் அமர்ந்தாள்.

இருக்கையில் அமர்ந்தவள் “பெரிய ஆளு தான் குருவே நீங்க” என்று ஆத்ரேயனை பார்த்து கைகூப்ப,

ரேயன் “உங்க அளவுக்கு இல்ல மேடம்” என்றவன் புன்னகையுடனே அமர்ந்திருந்தான்.

இவர்கள் ஒருபுறமிருக்க, அங்கு போட்டிக்கு சென்ற அக்னியும் நேஹாவும் வினாடி வினா போட்டிக்காக பெயர் கொடுத்திருக்க, கதிர் நடன போட்டிக்கு பெயர் கொடுத்திருந்தான்.

போட்டி ஆரம்பிக்க கால்மணி நேரம் இருந்த போது நேஹா தான் பதட்டமாக அமர்ந்திருந்தாள்.

நேஹா “அகி நம்மபாட்டுக்கு வந்துட்டோம்.. பயமா இருக்கே” என்று கையை பிசைய,

அக்னி “ஏன்.. உனக்கு தான் இந்த டாபிக் நல்லா தெரியுமே.. அப்பறம் என்ன” என்று அவள் முகம் பார்க்க

நேஹா “என்ன விட உனக்கு தான் நல்லா தெரியும்” என்றாள். அவள் கூறியதை கேட்டு சிரித்தவன் “அதான் ரெண்டு பேரும் வந்திருக்கோம்”

“ம்ம் ஓகே” என்றவள் அப்போதும் பதட்டம் குறையாமல் அமர்ந்திருந்தாள். அவள் எப்போதுமே அப்படி தான் சிறு விஷயத்திற்கும் வெகுவாக பதட்டப்படுபவள் அவளின் பயத்தை போக்கவே அக்னி அவளை இங்கு அழைத்து வந்திருந்தான்.

அக்னி மேடையில் பார்வை பதித்தபடி

அவளின் கையை தன் கைக்குள் அடக்கிக்கொள்ள, நேஹா அதிர்ந்து “அகி ஐ அம் ஓகே.. விடு” என்க

அக்னி “எங்க என்ன பார்த்து சொல்லு” என்று அவளை அழுத்தமாக பார்க்க,

நேஹா “அட ஓகே தான் டா.. கைய விடு யாராச்சு பார்க்க போறாங்க” என்றிட அதில் அக்னி அவள் கையை பட்டென விட்டுவிட்டு “யார் என்ன நினைச்சா என்ன இப்போ.. அதுவும் தப்பா நினைப்பாங்கன்னு சொல்லுற.. அப்படியே பார்த்து கேட்டா என்ன சொல்லுவ” என்று அவள் முகம் பார்க்க, அவன் கோபத்தில் மிரண்டவள் “பிரெண்ட்ஸ்ன்னு சொல்லுவேன்”

“ஆன் அது தப்பா” என்று அக்னி கேட்க அவள் தலை தானாகவே மறுப்பாய் அசைந்தது.

அக்னி “அப்போ பிரெண்டா இல்லாம வேற எதாச்சு நினைச்சா தான் அப்படி பயப்படனும்.. நீ அப்படி எதாச்சு நினைக்கிறியா என்ன” என்றவன் வேண்டுமென்றே தான் அதை கேட்டான். பாவம் பெண்ணவளுக்கு அவன் எண்ணம் புரியாமல் போனது.

நேஹா “ஐயோ இல்ல அகி.. நான் அப்படி எதுவும் சொல்ல நினைக்கல” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற,

அக்னி “நான் எதுவும் கோவமா கேட்கல.. ஏன் பயப்படுறா”

“இல்ல அது” என்று நேஹா தடுமாற,

அக்னி விஷம புன்னகையுடன் “அப்போ இருக்கா” என்று எதிர்பார்ப்போடு கேட்க, அவளோ “ஐயோ அகி.. போதும்.. கை தான பிடிச்சிக்கோ.. ஆமா ஐ ஆம் டென்ஸ்ட்” என்றவள் தானே அவன் கை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அக்னியின் மனமோ ‘அப்படி வா வழிக்கு’ என உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டது.

வினாடி வினா போட்டிக்கான தொகுப்பாளர் போட்டியாளர்களை மேடைக்கு அழைத்தார். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு இருக்கையை

காட்டி அமரவைத்தார்.

தொகுப்பாளர் “ஹே ஸ்டுடெண்ட்ஸ்.. இந்த quiz ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ட்விஸ்ட்.. இது சாதாரண  வினாடி வினா போட்டி மட்டுமில்ல இது உங்க கூட இருக்குறவங்க உங்களை எவ்ளோ புரிஞ்சிவச்சிருக்காங்க அப்படின்றதுக்கான ஒரு போட்டியும் கூட.. என்னடா இவன் இப்படி குழப்புறான்னு உங்களுக்கு தோணும்.. குழப்பமே வேண்டாம், ஒருத்தர் எங்களை பார்த்த மாதிரி உட்கார போறீங்க இன்னொருதங்க ஆடியன்ஸை பார்த்த மாதிரி உட்கார போறீங்க அண்ட் ஆடியன்ஸை பார்த்த மாதிரி உட்கார்ந்திருக்குறவங்க கிட்ட தான் பஸ்ஸர் இருக்கும்.. நான் கேட்குற கேள்விக்கு உங்க பார்ட்னருக்கு பதில் தெரியும்ன்னு உங்களுக்கு தெரிஞ்சா நீங்க அந்த பஸ்ஸர அடிக்கலாம்.. ஒருவேளை நீங்க பஸ்ஸர் பிரெஸ் பண்ண கேள்விக்கு உங்க பார்ட்னர் சரியான பதில் கொடுத்திட்டா உங்களுக்கு 20 பயின்ட்ஸ்.. அப்படி உங்க பார்ட்னருக்கு பதில் தெரியல அப்படின்னா மைனஸ் 10 பாயிண்ட்.. சோ கவனமா ஆடுங்க” என்றவர் அவர்கள் அமர்வதற்கு மேடையை அமைக்க கட்டளையிட்டார்.

நேஹா “அகி என்னடா இப்படி பண்ணிட்டாங்க.. எனக்கு தெரியுமான்னு உனக்கு தெரியுமா தெரியாதான்னு எப்படி நமக்கு தெரியும்.. இது நியாயமே இல்ல” என்று புலம்ப

அக்னி “பாத்துக்கலாம்” என்று கண் மூடி திறக்க,

நேஹா “அவ்ளோதான் முடிஞ்சிது” என்று தொடங்கியவள் அக்னியின் தீப்பார்வையில் தன் வாயை மூடிக்கொண்டாள்.

ஒருவழியாக அனைவரும் அமர்ந்துவிட, நேஹா அக்னியின் மீது சாய்ந்து “அகி மா எது கேட்டாலும் பஸ்ஸர் அடிச்சிடாதடா.. கொஞ்சம் என் குருவி மூளைக்கு ஏத்தது மட்டும் சொல்லுமா” என்க, அவனோ அவளின் ஸ்பரிசத்திலும் பேச்சிலும் தன்னை தொலைத்திருந்தான்.

நேஹா “அகி தங்கம்.. நான் சொன்னது புரிஞ்சிதா” என்று சந்தேகமாக கேட்க

அக்னி “ஆன் ஆன்” என்றான் கரகரப்பான குரலில்.

நேஹா “ஆன்னு சொல்றான்.. ஒரு முடிவுல தான் இருக்கான் போல” என நினைத்தவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.

முதல் சுற்று முடிந்த நிலையில் அக்னி நேஹாவே முதலிடத்தில் இருந்தனர். அவளின் சிறு அசைவிற்கும் அர்த்தம் கண்டுக்கொள்பவனுக்கு தெரியாத அவளுக்கு எந்த கேள்விக்கு விடை தெரியும் என்று. இருபது கேள்வியில் அக்னி பதினெட்டு கேள்விகளுக்கு பஸ்ஸர் அடிக்க நேஹா அவன் பஸ்ஸர் அடித்த அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்திருந்தாள்.

இரண்டாம் சுற்றில் நேஹா பஸ்ஸர் அடிக்க அக்னி பதிலளித்தான். மூன்றாம் சுற்று தொடங்க ஐந்து நிமிடங்கள் இருந்த நிலையில் அக்னியின் அருகே அமர்ந்த நேஹா “எப்படி அகி எப்படி” என்று மெச்சும் பார்வை பார்க்க, அக்னியும் அவளை ரசனையான பார்த்தபடி “அதான் நானும் கேட்குறேன்.. எப்படி” என்று கேட்க,

நேஹா “மாஸ் அகி நீ.. செம்ம போ” என்று ஆர்பரித்தாள்.

தொகுப்பாளர் “மூன்றாவது சுற்று தொடங்குறதுக்கு முன்னாடி நான் இதை சொல்லியே ஆகணும்.. அக்னி அண்ட் நேஹா.. ப்பா என்ன ஒரு புரிதல் என்ன ஒரு ஒற்றுமை.. இது தான்யா நட்பு.. ரெண்டு பேருமே பஸ்ஸர் அடிச்ச ஒரு கேள்வியையும் விடல.. உங்க நட்பை கண்டு நான் வியக்குறேன்” என்று பாராட்ட, நேஹா கைதட்டி ஆர்பரித்தாள். அக்னி ‘இப்போ அந்த நட்புன்னு சுட்டிக்காட்டுறது ரொம்ப முக்கியமா’ என மனதில் நினைத்துக்கொண்டு நேஹாவுடன் ஹை பை அடித்துக்கொண்டான்.

மூன்றாம் சுற்றிலும் முன்னிலை வகித்து அக்னி நேஹாவே அந்த போட்டியை வென்றனர். நேஹாவிற்கோ ஆனந்தத்தில் தலை கால் புரியவில்லை.

அக்னி லேசாக இதழ் விரித்தான். அவனுக்கு போட்டியில் வென்றதை விட அவளுடன் வென்றது தான் உவகையான ஒன்றாய் இருந்தது.

அக்னி “காலைல இருந்து நீ சாப்பிடவே இல்ல.. வா சாப்பிடலாம்” என்றழைக்க, அவளோ “நீ மனுஷன் பீஸ் தான” என்று இடுப்பில் கைவைத்து அவனை பார்க்க, அக்னி “அதெல்லாம் மனுஷன் தான். .வா” என்றான்.

நேஹா அவனுடன் செல்லாமல் அப்படியே நிற்க, அக்னி “சரி நீ இங்கயே இரு.. இந்த ஸ்வேதா பொண்ணு இங்க தான் இருந்தா நான் அவக்கூட போய் சாப்பிடுறேன்” என்று தோளை உலுக்க, அவனை தீயாய் முறைத்தவள் அவன் மண்டையில் கொட்டிவிட்டு அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

நேஹா

“கூப்பிடுறது கதிரை கூப்பிட மாட்டாராம் அவள தான் கூப்பிடுவாராம்” என முணுமுணுப்பாக அவனை அர்ச்சனை செய்துக்கொண்டே நடக்க அக்னியும் புன்னகையுடன் அவள் பின் சென்றான்.

கதிர் நடன போட்டிக்காக அமர்ந்திருக்க, அவன் பின் வந்த இந்து “ஹே ஜி.. ஹாய்” என்று கதிரின் முன் வர, கதிருக்கு தான் பக்கென ஆனது. ஒருமுறை கண்களை சுழவிட்டவன் அங்கு ஆத்ரேயன் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு “ஹாய் ஜி” என்றான்.

இந்து “நீங்களும் டான்ஸ்க்கு வந்தீங்களா.. நானும் டான்ஸ்க்கு தான் வந்தேன்” என்றாள். கதிர் அவள் பேசியதை கேட்டு தலையை மட்டும் ஆட்ட,

இந்து “உங்க லாட் நம்பர் என்ன” என்று கேட்க

கதிர் “12.. உன்னோடது”

“15 ஜி..”

கதிர் “சரி ஜி.. ஆல் தி பெஸ்ட்” என்றுவிட்டு மேடைக்கு பின் பக்கம் சென்றான். அவனுக்கு சற்று தள்ளி இந்து நின்றுக்கொண்டிருந்தாள். சரியாக கதிரின் முறை வரும் போது கதிர் திரும்பி பார்க்க அங்கு இந்து இல்லை. அதில் புருவம் சுருக்கியவன் அவளை தேடி சென்றான்.

முதல் நாள் கல்லூரின் போது இந்துவிடம் வம்பிழுத்த அதே மாணவர்கள் தான் அவளை அந்த அரங்கத்தின் பின் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றனர்.

மதன் “என்ன பாப்பா உன் அண்ணன விட்டு அடிக்க வச்சா பயந்திடுவோமா” என்று நக்கலாக கேட்க,

விஷ்ணு என்பவனோ “பாவம்டா பொண்ணுக்கு நம்மள பத்தி தெரியல” என்று சிரிக்க

இந்து “யாரு அண்ணா.. எனக்கு அண்ணாலாம் கிடையாது.. என்ன விடுங்க” என்று கையை உருவ முயல,

மதன் “அட அட நல்ல நடிக்கிற பேபி.. இரு எங்களுக்கும் மேல ஒருத்தன் நீயும் உன் அண்ணனும் பண்ணத கேட்டு உன்ன பாத்தே ஆகணும்ன்னு கூட்டிட்டு வர சொன்னான்.. வா போலாம்” என்று அவள் கையை பிடித்து இழுக்க,

இந்து “கைய விடுங்க.. ஹெல்ப்.. யாராவது இருக்கீங்களா..” என்று கத்த, அவள் குரல் கேட்டு அப்பக்கம் சென்ற கதிர் அக்னிக்கு அழைப்பு விடுத்து நடப்பவற்றை கூறி அங்கு விரைந்தான். கதிரின் பதட்டத்தில் அக்னியும் அவ்விடத்தை நோக்கி விரைந்தான்.

இந்துவை தேடி வந்தவன் இருவர் அவளை பிடித்து இழுத்துக்கொண்டு செல்வதை பார்த்து அவர்களின் அடிவயிற்றில் மிதிக்க, அந்த எதிர்பாரா தாக்குதலில் ஆண்கள் இருவரும் தரையில் வீழ்ந்தனர்.

கதிர் “ஹே யாருடா நீங்க.. என்ன பண்றீங்க”  என்று முறைக்க,

மதன் நக்கலாக “தோடா.. ஹீரோ வந்துட்டாரு” என்க

கதிரும் நக்கலாக “இந்த மூஞ்சிங்க வில்லன்னா இருக்கும் போது நான் ஹீரோவா இருக்கலாம் தப்பில்ல” என்று தோளை உலுக்க,

விஷ்ணு “$&#&# மரியாதையா போய்டு.. உனக்கும் இதுக்கும் சம்மதமில்ல” என்று எகிற அவன் முகத்தில் ஆக்ரோஷமாக குத்தியவன் ஒரு பொண்ணுகிட்ட உன் வீரத்தை காட்டுறியா.. முடிஞ்சா என்கிட்ட மோதுடா” என்று அவன் வலது கையை முறிக்க, மதன் அவனை தாக்க நெருங்கினான் அதற்குள் அக்னி அவன் கையை பற்றி தடுத்துவிட்டு கதிரிடம் கண் காட்ட, கதிர் இந்துவிடம் “ஜி நீங்க கிளம்புங்க.. நாங்க பார்த்துக்குறோம்” என்க அவளும் நடுக்கத்துடனே அங்கிருந்து அகன்றாள்.

இந்து திரும்பி நின்றிருந்ததாள் அவளால் அக்னியின் முகத்தை சரியாக பார்க்க  முடியவில்லை. இங்கு இவர்கள் அடித்துக்கொண்டிருக்க அங்கு வந்த பேராசரியர் ஒருவர் “என்ன சண்டை இங்க” என்று அவர்களை நோக்கி வர,

மதன் “ஒன்னுமில்ல சார்” என்றான்.

பேராசிரியர் “பேக் ஸ்டேஜ்ல என்ன வேலை உங்களுக்கு.. முதல இங்கிருந்த் போங்க” என்று துரத்திவிட அக்னியும் அதை பெரிது படுத்த வேண்டாம் என்ற  நோக்கத்தில் கதிரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.

மேடையின் அருகே வந்தவன் “சரி நீ போய் டான்ஸ்ல கலந்துக்கோ” என்க,

கதிர் “இல்ல மச்சா.. என் சான்ஸ் முடிஞ்சிது.. இங்க திரும்ப சான்ஸ் கொடுக்க மட்டங்கன்னு ரூல்ஸ்ல சொன்னாங்க” என்று உதட்டை பிதுக்க,

அக்னி “டேய்.. ஏன்டா.. ரெண்டு வாரம் ப்ராக்டிஸ் பண்ணியே” என்று வினவ

கதிர் “விடுடா.. இது இல்லனா அடுத்த ஸ்டேஜ் அவ்ளோதான்.. ஆனா அந்த பொண்ணுக்கு எதாச்சு ஆகிருந்தா பாவம்ல” என்க, அக்னி அவனை அணைத்துக்கொண்டு “பெரிய மனுஷனா பேசுறியே கதிரு”

“எனக்கும் வரும் எனக்கும் வரும்” என்று கதிர் பெருமைப்பட்டுக்கொண்டான். அக்னிக்கும் கதிரின் செயல் பெருமையாக இருந்தது.

அக்னி “சரி மூடு.. போ அந்த பொண்ண பார்த்து சொல்லிட்டு வா” என்க, கதிரோ நெஞ்சில் கைவைத்து “மச்சா.. நீயா பேசுற.. நீ ஒரு மௌனம் பேசியதே சூர்யான்னு நினைச்சோம்.. பார்த்தா  வாரணம் ஆயிரமா” என்று கலாய்க்க,

“எப்பா.. அந்த பெண்ணே பயந்துபோய் இருந்தது.. அதுக்கு தான் சொன்னேன்” என்க, கதிரும் “ஆமாடா.. இரு நான் பார்த்துட்டு வரேன்” என்று சென்றான்.

இந்து ஒரு இருக்கையில் கையை பிசைந்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவள் பின்னின்ற கதிர் “நல்லா பண்ணுங்க ஜி” என்று வாழ்த்து தெரிவிக்க,

இந்துவோ விழி நீர் எட்டி பார்க்க “ஐயோ கதிர் ஐ அம் சாரி.. என்னால தான் உங்க சான்ஸ் மிஸ் ஆச்சு.. நானும் போக போறது இல்ல” என்று மறுக்க

கதிர் “அட என்ன ஜி.. இதெல்லாம் ஒரு விஷயமா.. நான் ப்ராக்டீஸ் கூட பண்ணல ஆனா நீங்க கண்டிப்பா பண்ணிருப்பீங்க சோ இதை மிஸ் பண்ணாம போய் கலந்துக்கோங்க” என்றான்.

இந்து “நிஜமாவா”

“அட உண்மையா ஜி.. நீங்க போய் கலந்துக்கோங்க.. நான் கீழ இருந்து சியர் பண்ணுறேன்” என்றவன் அவளை மேடைக்கு அனுப்பிவிட்டு கீழிருந்து அவளை ஊக்குவித்துக்கொண்டிருந்தான்.

ஆடி முடித்து வந்த இந்து “ரொம்ப தேங்க்ஸ் ஜி.. நீங்க இல்லனா இன்னிக்கி என்ன நடந்திருக்குமோ” என்று மிரண்ட விழியுடன் கூறினாள்.

கதிர் “இருக்கட்டும்ங்க” என்றிட

இந்து “ஆமா உங்கக்கூட ஒருத்தர் வந்தாரே அவரு யாரு”

“அவன் என் பிரெண்ட்”

“உங்க டிப்பார்ட்மெண்ட்டா”

“இல்லங்க வேற டிபார்மெண்ட்” என்றான் உண்மையை மறைத்து.

இந்து “அவருக்கும் பெரிய தேங்க்ஸ் சொல்லிடுங்க.. ஒரு நிமிஷம்” என்றுவிட்டு தன் பையிலிருந்து இரண்டு பெரிய சாக்லேட்டை அவனிடம் நீட்டினாள்.

கதிர் “பார்றா..” என்றவன் அதை புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.

கதிர் “சரிங்க பார்த்து போங்க” என்று அவளிடம் கூறிவிட்டு அக்னியிருந்த இடம் நோக்கி சென்றான்.

கதிரின் கையிலிருந்த சாக்லேட்டை பார்த்த நேஹா “யாரு கொடுத்தா” என்று கேட்க, கதிர் நடந்தவற்றை கூறினான் ஆனால் நேஹா அது எதையும் காதில் வாங்காமல் “அப்போ எனக்கு சாக்லேட்” என்று தலை சாய்த்து கேட்க,

கதிர் “அப்போ நான் மூச்சு பிடிக்க சொன்னதுல உனக்கு இது மட்டும் தான் தெரியுது” என்று நக்கலாக கேட்க

நேஹா “அதான் நீங்க பிரச்சனையா சால்வ் பண்ணிட்டீங்களே அப்பறம் என்ன.. எனக்கு சாக்கி” என்று மீண்டும் அவள் கேட்க, அக்னி புன்னகையுடன் கதிரின் கையிலிருந்த இரண்டையும் அவளிடம் கொடுக்க

கதிர் “உன்னோடத கொடு பரவால்ல எந்து ஏன் கொடுத்த” என்று முறைக்க

நேஹா “என்ன கதிர் அவ்ளோதானா.. எனக்கு கொடுக்க மாட்டியா” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க

கதிர் “போதும் போதும் நடிக்காத.. நீ கேட்டு கொடுக்காம இருக்கமாட்டேன்னு தெரிஞ்சே பண்ற அப்பறம் என்ன.. போ” என்று சிரித்துக்கொண்டே கூறினான். போட்டிகளும் முடித்துவிட அவர்களும் நிறைவுடனே அங்கிருந்து சென்றனர்.

அன்றைய தினம் அவ்வாறே கழிய, மாலை வீட்டிற்கு செல்லும் நேரம் ஆரு “சரி ஓகே அத்து பை” என்க, அவனும் தலையசைப்புடன் வண்டி எடுக்க சென்றான்.

ஆரு பேருந்திற்காக நின்றுக்கொண்டிருக்க, ஆத்ரேயன் அவள் அருகே தன் வண்டியை நிறுத்தினான்.

ஆரு “என்ன அத்து.. எதாச்சு மறந்துட்டியா” என்று புரியாமல் கேட்க,

அத்து “ஆமா” என்றான்.

ஆரு “என்ன மறந்த” என்று கேட்க

ரேயன் “உன்ன தான்.. வா உன்ன வீட்ல விட்டுடுறேன்”,

ஆரு உள்ளுக்குள் குதித்தாலும் வெளியில் எதுவும் கட்டிக்கொள்ளாமல் “இல்ல பரவால்ல” என்று மறுக்க,

ரேயன் “கிச்சா கூட வரல.. எனக்கு போர் அடிக்கும்.. நீ வா” என்றான். அதில் ஆரு தயங்க ரேயனோ அவள் கைபிடித்து காரில் அமர வைத்தான்.

ஆருவின் மனம் படபடவென அடித்துக்கொள்ள, கையை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள். ரேயன் வண்டியில் கவனமாயிருக்க,

ஆரு “பாட்டு வைக்கவா” என்று கேட்டாள். அவனுக்கு அது பிடிக்காத போதிலும் அவளிடம் அவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

ஆரு பாடலை ஹம் செய்தபடி வர, ஆத்ரேயனும் அதை ரசித்தபடி வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.

ஆரு “ஆமா.. உனக்கு யார்மேலயாச்சு க்ரஷ் லவ் ஏதாவது இருக்கா” என்று விழிவிரித்து கேட்க, ஆத்ரேயனோ அவளை அதிர்ந்து பார்த்தபடி “அதெல்லாம் எதுவுமில்ல” என்று மறுக்க

ஆரு “அதுசரி.. ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற.. அதெல்லாம் ஒன்னும் தப்பேயில்ல” என்று தோளை உலுக்கினாள்.

ரேயன் “ஓ.. உனக்கு நிறைய இருக்கோ” என்று ஒரு மாதிரி கேட்க

ஆரு “லவ்வெல்லாம் இல்ல க்ரஷ் நிறைய இருக்கு.. அதுவும் என் ஸ்கூல் சீனியர் ஆதி.. ப்பா… என்ன மனுஷன் பா” என்று சிலாகிக்க

ரேயன் “ஓ” என்றான் உணர்ச்சிகளற்ற குரலில். அதன் பிறகு ஆருவும் ஏதேதோ பேசிக்கொண்டு வர ரேயனும் அவள் பேசியதை கேட்டுக்கொண்டும் சிலவற்றிற்கு பதிலுறைத்துக்கொண்டும் வந்தான்.

ஆருவின் வீட்டில் வண்டியை நிறுத்தியவன் “படபடன்னு எப்படி தான் பேசுரியோ” என்று அதிசயித்து பார்க்க

“Obviously வாயில தான்” என்றவள் கண்ணடித்துவிட்டு இறங்கி சென்றாள்.

சிறிது தூரம் சென்றவள் மீண்டும் அவன் அருகே வந்து “உண்மையா கிச்சா இல்ல போர் அடிக்கிதுன்னு தான் என்ன கூட்டிட்டு வந்தியா” என்று பாவமாக கேட்க, அவள் பாவனையில் சிரித்தவன் “கிச்சா நிறைய நாள் வராமா இருப்பான் தெரியும்ல” என்று புருவமுயர்த்த, ஆரு புரிந்துக்கொண்டு தலையசைத்தாள்.

ஆத்ரேயன் “தியா ஒரு நிமிஷம்” என்றழைக்க,

ஆரு “சொல்லு அத்து” என்றாள் அவன் முகம் பார்த்து

ரேயன் “இல்ல அது வந்து.. அந்த ஆதின்னு சொன்னியே.. அவனை ஏன் உனக்கு அவ்ளோ பிடிக்கும்” என்று தயங்கியபடி கேட்க

ஆரு “அவர் செம்மையா பேசுவார்.. எப்போவும் ஒரு ஸ்மைலோட இருப்பாரு அதான்” என்று தோளை உலுக்க

“ஓ” என்றவனின் முகமும் சுருங்கி தான் போனது அவளின் பதிலில்.

ஆரு அத்தோடு நிறுத்தாமல் “ஆனா இப்போலாம் உன்ன மாதிரி இருக்குறவங்கள தான் எனக்கு பிடிச்சிருக்கு.. நான் பேசுறதுக்கெல்லாம் தலையாட்டி சிரிச்சு கேட்குறாங்கல அப்படி” என்று இதழில் தவழ்ந்த நகையுடன் கூற, அதில் அவன் இதழும் தன்னிசையாய் விரிந்தது.

ரேயன் “நீ மட்டுமே பேசுனா உனக்கு வெறுப்பாகாது” என்று அவள் முகம் பார்க்க, அவளோ அதே புன்னகையுடன் “எதிர்ல உன்ன மாதிரி சிரிச்சிட்டே கேட்டா எவ்ளோ நேரம் வேணாலும் பேசுவேன்” என்றிட ரேயனும் தலையாடிக்கொண்டே அவளிடம் விடைபெற்றான்.

நேற்றும் இன்றும்

வேறா
இன்று காணும்

நானும் நானா
உன் பேச்சில்

என்னை வீழ்த்தி செல்லாதே?❤️

தொடரும்……

Advertisement