Advertisement

அத்தியாயம் 13

நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தாள். அப்போது தான் ஆத்ரேயனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவன் பெயரை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் முழித்தவன் இறுதியில் அவள் அலுவலகம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றான்.

அங்கு மேலாளர் விகாஸ் நின்றுகொண்டிருக்க அவன் அருகே சென்ற ரேயன், “விகாஸ் அக்கா எப்போ இங்கிருந்து கிளம்புனா” என்று கேட்க,

விகாஸ் “அவங்க எப்பயோ கிளம்பிட்டாங்க சார்.. அப்பறமா வரேன்னு சொன்னாங்க ஆனா வரல”

“ஓ அப்படியா… சரி அக்காவ பார்க்க இங்க அவர் வருவாரா” என்று புருவம் சுருக்கி கேட்க,

விகாஸ் திருதிருவென முழித்தான்.

அவன் திருட்டு முழி சிரிப்பை வரவைக்க அதை இதழ்களுக்கிடையே அடக்கியவன் “சொல்லுங்க விகாஸ்” என்று கேட்க,

விகாஸ் மிரண்டு “யார சார் கேட்குறீங்க” என்று தெரியாதது போல் கேட்க

ரேயன் “அக்கா எல்லாம் சொல்லிட்டா சோ பயப்படாம சொல்லுங்க”

“ஹப்பா அப்படியா.. அப்போ ஓகே.. அவர் பெயர் பிரகாஷ், ஏ. சியா இருக்காரு” என்க,

ரேயன் சிறிது யோசித்துவிட்டு “அப்போ அக்கா அவர் கூட தான் போயிருக்காளா”

“இல்ல சார்.. அவர் அடிக்கடியெல்லாம் வர மாட்டார்.. எப்போவாச்சு தான் பார்க்க வருவாரு.. ரொம்ப டீசண்டானவர்”

“ஓகே ஓகே விகாஸ், நான் கிளம்புறேன்” என்றவனிடம் “மேமை காணுமா” என்று விகாஸ் கேட்க,

ரேயன் ஆம் என்று தலையசைத்தான்.

“ஒரு பதட்டமே இல்லாம கூல்லா  இருக்கீங்க.. எப்படி சார்” என்று ஆச்சிர்யப்பட்டவனிடம்

ரேயன், “உங்க மேம்.. ஒரு வகையில் உங்க பிரெண்ட காணும்.. நீங்க ஏன் பயப்படமா, படத்தப்படாமா பேசுறீங்க சொல்லுங்க” என்று கேள்வியெழுப்ப,

விகாஸ் “ஏன்னா அவங்க செம்ம போல்ட்.. அவங்களா தான் எங்கயாச்சு போயிருப்பாங்க.. வந்திடுவாங்க” என்றிட,

ரேயன் “ஹான்.. அதான்.. என் அக்கா பத்தி எனக்கு தெரியாதா, ஆனா என்ன.. போன் பண்ணா எடுக்க மாட்றா.. கோவமா இருந்தாலும் கத்திட்டு போன் வைப்பா, ஆனா இன்னிக்கு எடுக்காதது தான் யோசனையா இருக்கு” என்றவன் விகாஸிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

கூகுள் ஆண்டவரின் உதவியுடன் பிரகாஷின் எண்ணை எடுத்தவன், அவனுக்கு முயற்சி செய்ய அதுவோ

அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

இங்கு பிரகாஷும் ஜனாவை தான் தேடிக்கொண்டிருந்தான். எப்போதும் வீட்டிற்கு சென்றவுடன் அழைப்பு விடுபவள் இன்று அழைக்கவில்லை என்றவுடன் அவன் அவளுக்கு அழைப்பு விடுக்க அதுவோ எடுக்கப்படவில்லை. அதில் குழம்பியவன் கவிக்கு அழைப்பு விடுக்க, அவளோ ஆத்ரேயன் கூறியதை கூற, அடுத்த நொடியே அவளை தேடி கிளம்பினான்.

ஜனா எப்போது கோபமாக இருந்தாலும் அவள் காரை எடுத்துக்கொண்டு நெடுந்தூரம் சென்றுவிடுவாள். அதை வைத்து இருவரும், நெடுஞ்சாலையில் தங்கள் தேடல் பணியை தொங்கினர்.

நெடுஞ்சாலையின் வழி தன் வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ஆத்ரேயனை நிறுத்தினார் ஒரு முதியவர். அவர் பக்கம் வண்டியை நிறுத்தியவன்,

“என்னங்க தாத்தா.. என்ன ஆச்சு”

“தம்பி இந்த வழியா ஒரு பொண்ணு கார்ல வந்துது.. நான் கை காட்டின உடனே இறங்கி வந்து பழம் வாங்கி சாப்பிடுகிட்டே என்கிட்ட பேசிட்டு இருந்துச்சு.. அப்போ சில ரௌடி பயலுங்க வந்து வம்பு பண்ண . அந்த புள்ள அவனுங்கள திட்டிட்டு போயிடுச்சு ஆனா அவனுங்க விடாம அந்த பொண்ணு பின்னாடியே போனானுங்க.. என்னால வண்டி இல்லாம போக முடியல.. கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி” என்று அந்த பெரியவர் கை கூப்ப,

ரேயன் “வெள்ளை காரா தாத்தா” என்று கேட்க,

“ஆமா தம்பி..” என்றார்.

ரேயன் “இது எப்போ நடந்தது”

அப்பெரியவர் “ஒரு பத்து நிமிஷம் இருக்கோம் தம்பி” என்றார் பதட்டமான குரலில்.

ரேயன் “சரிங்க ரொம்ப நன்றி”

“உனக்கு தெரிஞ்ச புள்ளையா பா”

“ஆமாங்க என் அக்கா” என்றவன் அவர் பதிலை எதிர்பாராது தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

சிறிது தூரத்தில் நிரஞ்சனாவின் கார் நின்றிருக்க, அதன் அருகே தன் காரை நிறுத்திய ரேயன் அவளை தேடி அந்த சாலையோரம் இருந்த பாதையில் செல்ல அங்கு பிரகாஷ் சிலரை அடித்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்தவுடன் அது தான் பிரகாஷ் என்று அவனுக்கு விளங்கிவிட்டது.

அங்கு அடி வாங்கிக்கொண்டிருந்த நால்வரில் ஒருவன் தப்பித்து ரேயனிடம் வந்து “சார் சார் காப்பாத்துங்க சார்” என்று கெஞ்ச,

ரேயன் “யாரு அவர்கிட்ட இருந்தா” என்று பிரகாஷை கை காட்ட,

அந்த ரௌடியோ “ஐயோ இல்ல சார்.. அந்த பொண்ணுகிட்ட இருந்து.. இவரு பரவால்ல அந்த பெண்ணுக்கு” என்று மிரண்ட குரலில் கூற,

ரேயன் சிரித்துவிட்டு “ஏன் அப்படி சொல்லுற” என கேட்க,

“சாரே நாங்க அவ்ளோ வர்த்தே இல்ல.. சும்மா போர் அடிக்கிதுன்னு அந்த பொண்ணுகிட்ட வம்பிழுத்தோம் ஆனா அதுக்கே அந்த பொண்ணு அடி அடின்னு அடிச்சிருச்சு.. அவர் வந்து தான் தடுத்து விடுராரு.. நீங்களே பாருங்க” என்க, அப்போது தான் ஆத்ரேயன் அவர்களை கவனித்தான். அந்த ரௌடி கூறியதை போல் தான் அங்கு நடந்துக்கொண்டிருந்தது.

பிரகாஷ் “டேய் கிருக்கனுங்களா.. போயும் போயும் இவகிட்டயா மாட்டுவீங்க அதுவும் இன்னிக்கி” என தலையில் அடித்துக்கொள்ள,

ஜனா “டேய் என்ன.. அவங்களுக்கு சப்போர்ட் பண்ற.. என்ன பார்த்து பாப்பான்னு சொல்லிட்டான் டா அவன்” என்று எகிற, பிரகாஷ் அவளை தன் கைவளைவிற்குள் அடக்கியபடி அவர்களை விடுவிக்க, அதற்குள் பிரகாஷின் கட்டளைக்கிணங்க சில காவல் அதிகாரிகள் அங்கு வந்து அவர்களை பிடித்துக்கொண்டனர்.

அங்கு இவர்கள் கூத்தை பார்த்தபடி நின்றுக்கொண்டிருந்த ரேயனின் அருகே வந்த காவல் அதிகாரி, “சார் இவனையுமா” என்று ரேயனை காட்டி கேட்க, இது தான் அவனை நேரில் சந்திப்பது முதல் முறை என்பதால் பிரகாஷ் அவனிடம் “ஹே யாருடா நீ” என புருவம் சுருக்கி கேட்க,

அதற்குள் நிரஞ்சனா “ரேயா நீ இங்க என்னடா பண்ற” என்று கேட்டாள்.

பிரகாஷ் மனதில் ‘அட நம்ம மச்சான்’ என நினைத்துக்கொள்ள,

ரேயன் “ஹான் என் ஆளு இங்க வர சொன்னா அதான் வந்தேன்” என்றான் தன் தமக்கையிடம் கடுப்பாக,

நிரஞ்சனா “கொஞ்சம் நம்புற மாதிரி பொய் சொல்லிருக்கலாம்” என உதட்டை பிதுக்க, ரேயன் அவளை கண்டுக்கொள்ளாமல் பிரகாஷிடம் “அப்பறம் மாமா எப்படி இருக்கீங்க” என்று கேட்டு வைக்க, பிரகாஷ் நிரஞ்சனா இருவரும் அவன் விளிப்பில் அதிர்ந்து நின்றனர்.

ரேயன் “என்ன ரெண்டு பேரும் இப்படி பார்க்குறீங்க.. கண்டுப்பிடிக்கிறது என்ன அவ்ளோ கஷ்டமா” என்று சிறுநகையுடன் கேட்க,

நிரஞ்சனா “விகாஸ்கிட்ட கேட்ட அப்படி தான” என்று நக்கலாக வினவ,

ரேயன் “ஆமா ஆனா இவர் தான் அவருன்னு இங்க வந்து பார்த்து தான் தெரிஞ்சிக்கிட்டேன்” என்று தோளை உலுக்க,

பிரகாஷ் “ஹாய் ரேயா.. எப்படி இருக்க” என்று கேட்டான்.

ரேயன் “நல்லா இருக்கேன்.. நீங்க”

“இவளை வச்சுக்கிட்டு எப்படி இருப்பேன்.. ஏதோ பரவால்ல” என்று போலியாக வருந்த,

ஜனா “ஓய்.. என்ன” என்று அதட்ட,

பிரகாஷ்  அவளை நன்றாக முறைத்துவிட்டு “நீ பேசாத…  கொலை வெறில இருக்கேன்” என்றிட,

ஜனா “நான் என்ன பண்ணேன்.. இப்போ எதுக்கு கத்துற” என்று அவளும் மல்லுக்கு நிற்க,

ரேயன் “பின்ன கொஞ்சுவாங்களா.. எதுக்கு இப்படி யார்கிட்டயும் சொல்லாம போன.. மாமா பேசுறத பார்த்தா அவர்கிட்ட கூட சொல்லல போல” என்று முறைக்க,

பிரகாஷ் “ஆமா டா..என்கிட்ட கூட மேடம் சொல்லல.. கவி கிட்ட கேட்டு தான் எனக்கே தெரியும்” என்று ஜனாவை முறைத்துக்கொண்டே வார்த்தைகளை கடித்து துப்ப,

ஜனா “இப்போ எதுக்கு ரெண்டு பேரும் கத்துறீங்க.. நான் சீக்கிரம் வரலாம்ன்னு தான் சொல்லல, அதுக்குள்ள அந்த தடியனுங்க வேற என் பின்னாடி வந்து டென்ஷன் பண்ணிட்டானுங்க.. போன் வேற ஆப் ஆகிடுச்சு.. இதுல என் தப்பு என்ன இருக்கு” என்று திமிராக கேட்க, பிரகாஷ் எதுவும் பேசாது அவளை அழுத்தமான பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

ரேயன் “சரி விடுங்க மாமா பொழச்சு போறா” என்று தமக்கைக்கு சாதகமாக பேச

நிரு “அப்படியெல்லாம் ஒன்னும் பரிதாபம் பார்க்கவேண்டாம் ரெண்டு பேரும்” என முறுக்கிக்கொள்ள, பிரகாஷ் அவளை கண்டுக்கொள்ளவில்லை.

பிரகாஷ் ரேயனிடம் “நம்மள எப்படி மீட் பண்ண வச்சிருக்கான்னு பாரு” என அலுத்துக்கொள்ள,

ரேயன் “ஹாஹா.. இப்போவச்சு சந்திக்க முடிஞ்சிதே” என்று பேசிக்கொண்டிருக்க,

நிரு “ஆமா ரேயா.. நீ இப்படி மாமான்னுலாம் கூப்பிட மாட்டியே.. எப்படி இதெல்லாம்” என்று அதிசயமாக கேட்க,

ரேயன் “தெரியல.. பார்த்தவுடனே அப்படி தான் கூப்பிட தோனுச்சு.. சோ கூப்பிட்டேன்” என்க,

பிரகாஷ் “அது தான் மாமா மச்சான் உறவு… உனக்கெல்லாம் புரியாது” என்று ஜனாவை வார,

ஜனா “எனக்கு ஒன்னும் புரிய தேவையில்ல.. டைம் ஆகுது நான் கிளம்புறேன்.. ரேயா நான் கவி வீட்டுக்கு போறேன்.. நான் இன்னிக்கி அங்க வர மாட்டேன்” என்றிட, அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பதை அறிந்தும் ரேயன் அவளிடம் “ஏன் இப்படி பண்ற.. இப்போ அங்க வரதுல உனக்கென்ன” என்று பொறுமையாகவே கேட்க,

ஜனா “நோ.. இன்னிக்கி அங்க வந்தா கடுப்பாயிருக்கும்” என்று மறுக்க,

பிரகாஷ் “நிரு.. எதுக்கு இப்போ ஓவரா ரியாக்ட் பண்ற.. வீட்டுக்கு போ”

“முடியாது”

“கேளுடா.. அப்பா ஏதோ கோபத்துல பேசிருப்பாங்க.. இப்போ கண்டிப்பா பீல் பண்ணிட்டு தான் இருப்பாங்க.. நீ எதுவும் பேச வேண்டாம்.. அமைதியா உன் ரூம்க்கு போய் படுத்துக்கோ.. கவி வீட்ல தூங்குறத உன் ரூம்ல தூங்கு.. அவ்ளோ தான்.. டோன்ட் காம்ப்ளிகேட்” என சிறுபிள்ளைக்கு கூறுவது போல் பொறுமையாக கூற, ஜனா சிறிது யோசித்துவிட்டு “ஓகே போறேன்.. ஆனா ரேயா என்ன எதாச்சு பேச சொன்னா அவ்ளோதான்” என்று தன் தமையனை எச்சரிக்க, ரேயன் தான் பிரகாஷின் ஒற்றை வரியில் அவள் அடங்கியதை கண்டு ஆச்சிர்யமாக நின்றுக்கொண்டிருந்தான். பின் “நான் என்னிக்கு உன்ன கம்பெல் பண்ணிருக்கேன்.. நீ வா அது போதும்” என்றவன் பிரகாஷிடம் விடைபெற்று முன்னே நடக்க,

ஜனா “பை ஏ.சி.பி” என்றுவிட்டு நடந்தாள். முன்னே செல்பவளை பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன் தானும் அங்கிருந்து கிளம்பினான்.

ரேயனும் ஜனாவும் தனி தனி காரில் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். வண்டியை விட்டு இறங்கிய ஜனாவிடம் வந்த ரேயன் “அக்கா உங்க ரெண்டு பேரையும் பார்க்கவே நல்லா இருக்கு.. ரொம்ப maturedடா.. எந்த டிராமாவும் இல்லாம இருக்கீங்க” என்றிட, அவள் சிரித்துவிட்டு “உன் அக்காகும் சரி மாமாக்கும் சரி.. இந்த கொஞ்சல்ஸ் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது.. அண்ட் உனக்கு அவரை பிடிச்சிருக்குறதே எனக்கு ரொம்ப சந்தோசம்” என்று கூற,

ரேயன் கேலியாக “பார்ரா.. நிரஞ்சனா புருஷன்னா உடனே மரியாதை எல்லாம் தாரங்க” என்றபடி அவளை வார,

நிரஞ்சனாவும் அதே கேலி குரலில் “இப்போ யாரோ என்ன அக்கான்னு கூப்பிட்டாங்க” என்றிட, ரேயன் சிரித்துக்கொண்டே உள்ள சென்றான்.

நிரஞ்சனாவும் உள்ளே செல்ல, அங்கு வரவேற்பறையில் கண்ணனும் ஷோபனாவும் நின்றுக்கொண்டிருந்தனர். முன்னரே ஆத்ரேயன் அவர்களிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று கூறியிருக்க, இருவரும் அமைதியாகவே நின்றனர். நிரஞ்சனாவும் அவர்களை கண்டுக்கொள்ளாது தன் அறைக்கு சென்றுவிட,

ஆத்ரேயன் தான் தன் பெற்றோர்களை சமாதானம் செய்து உறங்க அனுப்பிவைத்தான்.

மறுநாள் காலை கல்லூரிக்கு தயாராகிக்கொண்டிருந்த ரேயனின் முன் வந்த இந்து “ஹாய் பாய் (bhai).. என்ன இன்னும் கிளம்பல” என்று கேட்க, ரேயன் ஏதோ கூற வரும் முன் அங்கு வந்த கண்ணன் “குட் மார்னிங் இந்து” என்று குரல் கொடுக்க, அவர் குரலில் திடுகிட்டவள் கையிலிருந்த புத்தகங்களை தவற விட, ஆத்ரேயன் சிரித்துவிட்டான்.

இந்து அவனை முறைத்துவிட்டு, “குட் மார்னிங் பெரியப்பா”

“என்ன கிளம்பிட்டியா.. ரேயங்க கூட தான போற.. ஆமா சாப்டியா” என்று கேள்விகளை அடுக்க, இப்போது எந்த கேள்விக்கு விடையளிப்பது என்று தெரியாமல் அவள் முழித்துக்கொண்டிருந்தாள்.

மீண்டும் கண்ணனே “சொல்லு.. ரேயன் கூட தான போற” என்று கேட்க,

இந்து “இல்ல பெரியப்பா கார்ல போனா கை வலிக்கிது.. அதான் ஸ்கூட்டில போறேன்” என்று திக்கி திணறி உளறிக்கொட்ட

கண்ணன் “கார்ல போனா கை கால் வலிக்கிது ஆனா ஸ்கூட்டில போனா நல்லா இருக்கா.. ஒழுங்கா ரேயன் கூட போ இல்ல சுரேஷ் கூட போ.. தனியாலாம் போக வேண்டாம்.. புரியுதா” என்றிட, இந்து எல்லா பக்கமும் மண்டையை உருட்டினாள்.

அவள் மனசாட்சியோ “மூடிக்கிட்டு வீட்ல இருந்திருக்கலாம்.. தேவையா இது” என கலாய்க்க, அவளை பார்த்து சிரித்துக்கொண்டே வந்த ரேயன் “சரிப்பா கிளம்புறோம்”

“ம்ம் பை டா”

“ஹான் அப்பறம் அக்கா உங்ககிட்ட பேசுறேன்னு சொல்லிருக்கா.. அவளுக்கு கோபம் போய்டுச்சாம்.. உங்களை மன்னிச்சுட்டாலாம்” என்றிட, கண்ணன் சிரித்தார். இது தான் நிரஞ்சனா மனதில் உள்ளதை எப்போதும் இப்படி வெளிப்படையாக கூறிவிடுவாள்.

கண்ணன் “ஓகே டா” என்றுவிட்டு சென்றார். கண்ணனுக்கு நிரஞ்சனா என்றால் பயம் தான் ஆனால் எப்போதும் பொறுமையாக முடிவெடுக்கும் ரேயனின் மீது தனி மரியாதை இருந்தது. அவர்கள் இருவர் மீதும் அவருக்கு கர்வம் அதிகம் ஆனால் அதை காட்டிக்கொள்ள மாட்டார்.

இந்துவின் வாடிய முகத்தை கண்டு சிரித்த ரேயன், “தேவையா உனக்கு” என்று கேட்க,

இந்து “டேய் அண்ணா.. உன்ன பார்க்க வந்தது ஒரு குத்தமா.. ஆபீசர் வேற இப்படி சொல்லிட்டாரு” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொள்ள,

ரேயன் “சரி புலம்பாத நீ உன் வண்டிலயே வா.. நான் பார்த்துக்குறேன்”

“நிஜமாவா” என்று இந்து விழி விழிக்க, ஆம் என்று தலையசைத்தவன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றிட, இவளும் துள்ளல் நடையுடன் தன் வண்டியை கல்லூரி நோக்கி செலுத்தினாள்.

கல்லூரிக்கு செல்லும் வழியில் இந்துவின் வண்டி சதி செய்துவிட, வண்டியை விட்டு இறங்கியவள் “ஐயோ ஆபீசர் சொன்னத கேட்டிருக்கனுமோ.. இப்படி ஆகிடுச்சே.. தள்ளிட்டும் போக முடியாத.. வீட்டுக்கு போன் பண்ணா கழுவி ஊத்துவாங்க.. என்ன பண்ணலாம்” என புலம்பிக்கொண்டு நின்றிருந்தாள்.

அன்று நேஹா விடுமுறை எடுத்திருக்க,  தன் தந்தை கொடுத்த வேலையை செய்துவிட்டு கல்லூரி சென்றுக்கொண்டிருந்த கதிர் வழியில் நின்றுக்கொண்டிருந்த இந்துவை கவனித்து வண்டியை நிறுத்தினான். முதலில் யாரோ என்று நினைத்தவன் அவள் அருகே வந்தபின் அவளும் தன் கல்லூரி தான் என்பதை அவள் ஐடி கார்டை வைத்து கண்டுக்கொண்டான்.

கதிர் “என்ன ஆச்சுங்க.. பஞ்சர்ரா” என்று கேட்க, அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, பயத்தில் கை கால்கள் வேறு ஆட்டம் கண்டிட, உலகிலுள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

தன் கேள்விக்கு பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றவளின் எண்ணவோட்டத்தை புரிந்தார் போல்,
கதிர் “நீங்க என் காலேஜ்ன்னு உங்க ஐடி பார்த்து தான் கேட்டேன்.. வேற எந்த நோக்கமும் இல்ல.. என் பெயர் கதிர்.. பர்ஸ்ட் இயர் சிவில் ஜி” என்று அவன் தன் ஐடியை காட்டினான். அவன் ரேயனின் வகுப்பு மாணவன் என்ற எண்ணமும் அவன் பேசிய முறையும் அவள் பயத்தை குறைக்க,

இந்து சிறுகுரலில் “வண்டி பஞ்சர்” என்றாள்.

“சரி என் வண்டிய பார்த்துக்கோங்க.. நான் வேணும்னா உங்க வண்டிய ரெடி பண்ணிட்டு வரேன்” என்றிட,

இந்து “பர்ஸ்ட் ஹார் போய்டுமே” என்று பரிதாபமாக கேட்டாள்.

கதிர் “அப்போ நான் மெக்கானிக் அண்ணாவை கூப்பிடுறேன்.. அவர் வண்டிய எடுத்துக்கிட்டு போகட்டும்.. நீங்க என்கூட வாங்க” என்றிட, இந்து அவனை முறைத்தாள்.

கதிர் “ஏங்க எனக்கு மட்டும் ஆசையா என்ன.. இதுவும் ஒரு வழின்னு சொன்னேன் அவ்ளோதான்” என்க, அவள் மௌனமாகவே நின்றுக்கொண்டிருந்தாள்.

கதிர் “இந்த வழில அவ்ளோவா வண்டிங்க கூட வராதே.. இல்லனா இருங்க நான் போய் ஏதாவது வண்டிய கூட்டிட்டு வரேன்” என்றவன் வண்டியை கிளப்ப, எங்கு அவன் சென்றுவிட்டால் மீண்டும் தனியாக நிற்க நேரிடுமோ என்ற பயத்தில் “இல்ல இல்ல.. நீங்க மெக்கானிக்கை கூப்பிடுங்க.. நான் உங்க கூடவே வரேன்” என்று அவசரமாக கூற, கதிரும் சரி என்று மெக்கானிக்கை அழைத்தான். அவர் வந்தவுடன் வண்டியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

கதிர் “ஆமா இப்போ மட்டும் எப்படி என்கூட வர ஓகே சொன்னீங்க”

“அது என் அண்ணாவும் உங்க கிளாஸ் தான் அதான்” என்றாள்.

“பர்ஸ்ட் இயர்ன்னா என்ன அண்ணா.. கசின் தான”

“இல்லங்க.. அவன் என்னைவிட கொஞ்ச மாசம் பெரியவன் அதான் அப்படியே கூப்பிட்டு பழக்கமாகிடுச்சு” என்க,

கதிர் “அது சரி பெயர் என்ன” என்று கேட்க,

இந்து “என் பெயர் தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க” என்றால் கோபமாக,

“ஹலோ.. நான் கேட்டது உங்க அண்ணா பெயரை” என்றிட, இந்து அசடு வழிந்துக்கொண்டே “ஆத்ரேயன்” என்றாள்.

ஆத்ரேயன் என்ற பெயரை கேட்டவுடன் கதிர் சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்த,

“எப்பா.. ஏன்.. எதுக்கு இப்படி பிரேக் அடிச்சிங்க” என்று கேட்டவளை பார்த்து திருட்டு முழி முழித்தவன் மனதில் ‘ஆத்தி.. அக்னி பிழம்புக்கு தெரிஞ்சா இன்னிக்கே எனக்கு மில்க் ஊத்திடுவானே.. ஐயோ.. வாயே திறந்திடாத டா கதிரே’ என தனக்கு தானே நினைத்தவன் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் வர, இந்து “உங்களுக்கு என் அண்ணாவை தெரியும் தான”

“ம்ம்”

“பின்ன எப்படி தெரியாம இருக்கோம்.. அவன் தான் பெஸ்ட்” என்று இந்து அவன் புகழ் பாட, கதிர் ‘ம்ம்’ தவிர வேறெதுவும் பேசவில்லை.

கதிர் கல்லூரியில் அவளை இறக்கிவிட,

இந்து “ஓகே ஜி.. தேங்க் யூ.. கண்டிப்பா என் அண்ணா கிட்ட உங்களை பத்தி பெருமையா சொல்லுறேன்” என்க, அதில் மிரண்டவன் “இல்ல இல்ல.. வேண்டாம் சொல்லாதீங்க” என்று கூற,

இந்து “ஏன்” என்றாள்.

கதிர் ‘நீ அவன்கிட்ட சொன்னாலே போர் தான்.. இதுல பெருமையா வேறயா’ என மனதில் நினைத்தவன்,

வெளியில் “இல்லங்க சொன்னா உங்களை தனியா விட மாட்டாங்க.. அதான்” என வாய்க்கு வந்ததை உளற

இந்து “அட ஆமா.. நான் கூட மறந்துட்டேன்.. நல்லவேளை நியாபகம் படுத்துனீங்க.. ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ்” என்றுவிட்டு அவள் சென்றிட, கதிரும் தப்பித்தோம் பிழைத்தோம் என சென்றுவிட்டான்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், கல்லூரியே ஜேஜேவென ஜொலித்தது. ஆண்டுதோறும் நடைபெறும் கலை விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. உணவு உடை கலை பொருட்கள் என்று பல கடைகள் போடப்பட்டிருந்தது. அந்த இரண்டு நாட்கள் வகுப்புகள் ஏதும் நடைபெறாது.

ஆரு நேஹா கதிர் அக்னி நால்வரும் அப்படியே சுற்றிக்கொண்டிருக்க,

ஆரு “சரி இருங்க நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்”

நேஹா “நானும் வரேன்”

ஆரு “இரு இரு.. நான் என்ன ஊர் சுத்தி பார்க்கவா போறேன்.. வாஷ்ரூம் தான போறேன்.. போய்ட்டு வந்திடுறேன்.. இரு” என்றிட,

அக்னி “ஹே எல்லாம் ஒரு வைப்ல (vibe) இருக்கானுங்க.. பார்த்து போ.. சும்மா யாராச்சு எதாச்சு சொன்னாங்கன்னு சண்டைக்கு நிக்காத”

“சே சே.. அதான் எனக்கு அவசர உதவி இருக்கே” என்க, அக்னி புரியாமல் பார்த்தான்.

ஆரு “அக்னி 007… 24/7 சர்விஸ்” என்று கண்ணடிக்க,

அக்னி “சொல்லுவ சொல்லுவ.. ஏன் சொல்ல மாட்டா” என்று முறைக்க, ஆரு சிரித்துக்கொண்டே சென்றாள்.

இங்கு கதிர் இந்துவை பற்றி கூறலாமா வேண்டாமா என குழம்பியிருக்க,

அக்னி “என்னடா” என்றான் அவன் சிந்தனையை கலைக்கும் வண்ணம்.

கதிர் “என்ன மச்சான்”

“இல்ல.. இப்போ என்ன ராக்கெட் லான்ச் பண்ண போற.. இப்படி யோசிக்கிற”

நேஹா “அதானா.. உனக்கு தான் மூளையே இல்லையே… அப்பறம் என்னடா” என்று கேலி செய்ய,

கதிர் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு “உன்கூட இருந்தா எப்படிடா மா எனக்கு இருக்கும்” என்று நேஹாவை வார, அக்னி சிரித்துவிட்டான்.

பின் அக்னியே “என்ன உனக்கும் என்கிட்ட எதுனா சொல்லனுமா.. ஏன் என்னமோ வில்லனை பார்க்குற மாதிரி பில்ட் அப் கொடுக்குறீங்க” என்று நேஹாவை ஓர கண்ணால் அளந்தபடி கூற,

கதிர் மனதில் ‘எல்லாம் வந்து சேருறது அப்படி’ என நொந்துக்கொண்டான், ஆனால் அக்னியிடம் “இல்ல இல்ல டா.. ஆனா ஆமா மச்சா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டுகுழப்ப, அக்னி “டேய்” என்று அவனை முறைத்தான்.

ஆராத்யா கழிவறை சென்ற இடத்தின் பக்கத்தில் மதில் ஒன்று இருந்தது, மதிலின் மறுபக்கம் நின்றிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்க, ஆரு கைகழுவி விட்டு வரும் போது அவர்கள் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றாள்.

Advertisement