Advertisement

அத்தியாயம் 12

அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க,
ஜோஷ் ஜீவாவின் செவியில் “சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது” என்க,
ஜீவா “எமோஷன்ஸ் வர டைம் ஆகும்..”
“ஓகே.. சாரி” என்று அவனும் அமைதியானான்.

அக்னி கையிலிருந்த தாளை ஜோஷிடம் கொடுத்துவிட, ஜீவா “ஸ்டார்ட்” என்றான்.
தன் முன் நின்றிருந்த ரம்யாவிடம் வந்தவன் கண்களில் அனல் தெறிக்க, “என்ன பண்ணி வச்சிருக்க கிருத்தி..  இது எவ்ளோ முக்கியமான ப்ரொஜெக்ட் தெரியுமா.. ரொம்ப சாதாரணமா சொல்ற, தெரியாம பண்ணிட்டேன்னு” என காட்டமாக கேட்க,
ரம்யா “சாரி அக்னி.. நீங்க நேத்து என்கிட்ட ஒழுங்கா பேசல.. அந்த நியாபகத்துல..” என்று இழுக்க,
அக்னி “ஜஸ்ட் ஷட் அப் கிருத்தி.. எனக்கு நீ இவ்ளோ முக்கியமோ அதே அளவு என் கம்பெனி முக்கியம்.  இதுல எந்த தப்பு நடந்தாலும் என்னால அதை சாதாரணமா எடுத்துக்க முடியாது.. நான் உன்கிட்ட பேசலனா உன் வேலைய பார்க்காம விட்டுடுவியா.. கொஞ்ச நேரத்துக்கு என் கண் முன்னாடி வந்திராத.. போ” என்றவனின் குரல் கர்ஜனையாக வர, அவன் கண்களோ அனலை கக்கியது.

அக்னி பேசி முடிக்கவும் அங்கு பலத்த கரகோஷம் எழும்ப, ஜீவா “சைலன்ஸ்.. ஸீன் 2” என்று குரல் கொடுக்க,
ரம்யா (இப்போது ஷில்பா) “அக்னி உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க.. அவளை போய் என் மருமகளா கொண்டு வர போறியா..”
அக்னி “மா புரிஞ்சிக்கோங்க.. ஐ லவ் ஹர்.. பிசினஸ் பண்ண தான் ஸ்டேட்டஸ் பார்க்கணும் கல்யாணம் பண்ணிக்க இல்ல”
“ஆனா எனக்கு அது தான் முக்கியம்”
“அது எனக்கு தேவையில்ல மா.. பட் கவலைபடாதீங்க.. உங்களை மீறி எதுவும் நடக்காது.. ஆனா அவளை தவிர வேற யார் கழுத்துலையும் நான் தாலியும் கட்ட மாட்டேன்” என்று அழுத்தமாக கூறிவிட,
“இப்போ என்ன தான் டா சொல்ல வர..” என்றாள் அவளும் சீறலாக.
அக்னி “மாம் இப்போவெனா உங்களுக்கு அவளை பிடிக்காம இருக்கலாம், ஆனா ஒரு நாள் நான் என் காதலை உங்களுக்கு புரியவைப்பேன்..” என்றவனின் கண்கள் கண்ணீரினால் திரையிட்டிருந்தது.

அவன் நடித்து முடித்தவுடன் அங்கு மீண்டும் ஓர் பலத்த கரகோஷம். அக்னி திரும்பி பார்க்க அங்கு அஷ்வின் ஷக்தி ஆரு கதிர் என அனைவரும் நின்றுக்கொண்டிருக்க,
ஆரு “அகிஈஈஈ… மாஸ் மாஸ்.. செம்ம” என்று கத்த,
கதிர் விசிலடித்தான். ஷக்தியும் அஷ்வினும் கைதட்டினர்.
அஷ்வின் ஆருவிடம் “என்ன உங்க பிரெண்டா” என்று கேட்க,
ஆருவும் கதிரும் ஒரே போல் “அதுக்கும் மேல” என்றனர் ஒரு முறுவலோடு.

ஜீவா அமைதியாக நின்றுக்கொண்டிருக்க,
ஜோஷ் “டூ குட் அக்னி.. ரொம்ப நல்லா பண்ண.. ரிசல்ட்க்கு வெயிட் பண்ணு” என்க, அக்னி ஒரு தலையசைப்புடன் திரும்பினான்.
ஜீவா “அக்னி” என்றழைக்க, அக்னி அவனை ஏறிட்டான்.
ஜீவா “யூ ஆர் சேலெக்டட்.. நீ வெயிட் பண்ண தேவையில்ல” என்றிட,
அக்னி “தேங்க்ஸ் ண்ணா” என்றுவிட்டு ஒரு மென்னகையுடன் அங்கிருந்து அகன்றான்.

அடுத்ததாக கிஷோருக்கு தேர்வு நடத்தினர். அவன் நடித்ததை பார்த்து ஜோஷ் “டேய் நீ என்னடா எக்ஸ்பிரெஷன்ல வடிவேல் சாரையே ஓவர் டேக் பண்ணிடுவ போல” என பாராட்ட, கிஷோர் புன்னகைத்தான்.
ஜீவா “நல்லா பண்ற டா..  யூ டூ சேலெக்டட்” என்றான்.

கதிர் நடனத்தில் கலந்துக்கொண்டு தேர்வாகிவிட,
அஷ்வின் “செம்மையா ஆடுற கதிர்.. கீப் இட் அப் டா” என்று பாராட்ட
கதிர் “ஐயோ ஐயோ.. இப்போ நான் என்ன செய்வேன்” என்று ஆர்பரிக்க,
அன்பு “என்னடா கபாலம் கலங்கிடுச்சா.. ஏன் இப்படி குதிக்கிற”
“பர்ஸ்ட் அப்ரிசியேஷன் ண்ணா.. அதான்.. ஸ்கூல்ல பண்ணும்போது கூட பிரெண்ட்ஸ் சொல்றதொட சரி.. வேற யாரும் எதுவும் சொன்னதில்ல.. அதான் கொஞ்சம் குதூகலமாகிட்டேன்” என்க,
அஷ்வின் “ஹாஹா.. நீ ஒரு நல்ல பர்போர்மர்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஆருவின் பாடல் வரிகள் இவர்கள் செவியை தீண்டியது

இங்கு ஷக்தி பாடல் தேர்விற்கு ஆருவை அழைக்க,

ஆரு    “முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்

 ஏனோ தானோ
என்று போன நானும்
எல்லாம் நீயே
என்று மாறுதே

யாரும் இல்லா
நேரம் வந்த பின்னும்.. உனதருகில், காதல் ஒன்று கண்டேன் பெண்ணே..

என்று பாடி முடிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் குரலில் மயங்கி தான் இருந்தனர்.

ஷக்தி “ஹே ஷிவாங்கி லைட்.. இங்க வா இங்க வா” என அவளை அணைத்துக்கொண்டாள், பின் குறும்பாக “ஆனா நீ ஒன்னும் இதை என் அஷ்ஷை பார்த்து பாடலையே” என்று கேட்க,
ஆரு சிரித்துவிட்டு “நான் ஏன் க்கா சீனியரை பார்த்து பாட போறேன்.. அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றிட,
அஷ்வின் “அது நீ வேற ஷிவாங்கி லைட்டா இருக்க, என் பெர் வேற அஷ்வின்னா அதான் மேடம் கேட்குறாங்க” என ஷக்தியை பார்த்து கண்ணடிக்க,

ஆரு “ஹான் என்ன பண்றது.. அதான் நீங்க கமிட் ஆகிட்டிங்களே” என வருந்த,
ஷக்தி “அடிங்கு” என அவளை துரத்தினாள். ஷக்தியின் கையில் அகப்படாமல் கதவின் புறம் ஓடியவள் ஒரு நிமிடம் நின்று “ஆனா சீனியரே.. நீங்களும் அக்காவும் தான் பெஸ்ட் பேர் (pair)” என்றுவிட்டு ஓடிவிட, ஷக்தி மற்றும் அஷ்வினின் முகத்தில் புன்னகை கீற்றுடன் அவள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தனர். கதிரும் இவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு ஆருவின் பின் சென்றுவிட்டான்.

கல்லூரி முடிந்து கிளம்பும் போது கதிரும் அக்னியும் வண்டி எடுக்க சென்றிட, நேஹா  ஆருவிடம் வகுப்பில் நடந்தவற்றை கூறினாள்.
ஆரு அதிர்ந்து “எது ஆத்ரேயன் உனக்கு ஹெல்ப் பண்ணானா”
“ஆமா டி”
“உன்கிட்ட எப்படி பேசுனான்” என்று அதிமுக்கிய கேள்வியை ஆரு கேட்க,
நேஹா “நல்லா தான் பேசுனான்.. சொல்ல போனா எனக்கு ஒரு அண்ணன் பீல் வந்துச்சு” என்க
“வரும் வரும்.. என்ன பார்த்தா மட்டும் தான் ம்ம் மோட் வரும் போல” என முணுமுணுப்பாக புலம்பிட,
நேஹா “என்னடி தனியா புலம்புற”
“என் நிலமை.. என்ன பண்ண.. சரி அதை விடு.. அகி கிட்ட சொல்லுவியா மாட்டியா”
“அதான் கிட்டி தெரியல”
“சொல்லாதா இப்போதைக்கு.. அதுவும் அத்து ஹெல்ப் பண்ணான்னு தெரிஞ்சா அவ்ளோதான்” என்றிட
நேஹா “எதே.. மறுபடியும் அத்துவா” என அதிர
ஆரு “ஈஈஈ.. அவன் நல்ல பையன் தான் கிட்டி”
“ம்ம் எனக்கும் அப்படி தான் கிட்டி தோணுது.. ஆனா இவனுங்களுக்குள்ள என்ன தான் பிரச்சனையோ” என்று அலுத்துக்கொள்ள,
ஆரு “எங்க இந்த எருமை சொல்ல மாட்டிங்குதே”
“சரி இப்போதைக்கு அகிக்கு தெரிய வேண்டாம்”
“ஆமா” என்று இவள் கூறவும் இருவரும் வண்டி எடுத்துக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

ஆரு “கிட்டி நீ அகி கூட போ.. நானும் கதிரும் கொஞ்சம் ஷாப்பிங் போக போறோம்” என்றிட,
நேஹா ‘அய்யோ அவன் கிட்ட ஒரு விஷயம் மறைக்கனும்ன்னு நினைக்கும் போது தான் இப்படி அவன்கிட்டயே கோர்த்து விடுவா… கிராதகி’ என மனதில் அவளை வறுக்க,
அக்னி “என்ன யோசனை.. வண்டில ஏறு” என்றான். எப்போதும் போல் அவன் சொல்லிற்கு கட்டுப்பட்டவள் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

அக்னிக்கு தான் அந்த பயணம் இனிமையான ஒன்றாய் மனதை தாக்கியது. அவன் காதல் கொண்ட மனமோ அவள் அருகாமையில் சற்றே கிறங்கியிருந்ததென்னவோ அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

நேஹாவை வீட்டில் இறக்கி விட்டவன்  அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து “ஹே நில்லு..” என்க,
நேஹா ‘ஆத்தி என்ன கேட்க போறானோ’ என நினைத்துக்கொண்டு திருட்டு முழியுடன் அவள் அவனை ஏறிட
அக்னி “என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி யோசனையிலேயே இருக்க” என்று மென்மையாக கேட்டான்.
“ஆங்.. இல்லையே.. அப்படி ஒன்னுமே இல்லையே” என அவன் கண்களை பாராமல் அவள் கூற,
அக்னி அவள் கை பிடித்து தன் அருகே இழுத்து அவள் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்பியவன் “என்ன பார்த்து சொல்லு” என்று அழுத்தமாக கேட்க, அவள் தான் விட்டால் அழுது விடுவேன் என்ற நிலைக்கு சென்றுவிட்டாள். அவள் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ “சரி எதுவும் போட்டு மனச குழப்பிக்காத.. நீயா சொல்ற வரை நானும் எதுவும் கேட்க போறதில்லை” என்றிட,
நேஹா அவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

நேஹா திரும்பி வீட்டிற்கு நடக்க,
அக்னி “நேஹா” என்றான். அவன் அழைத்ததில் மீண்டும் அவன் அருகில் வந்தவள் “என்னடா” என்று கேட்க,
அக்னி “வீட்டுக்கு வரியா” என்று கேட்டான்.
நேஹா “என்னடா திடீர்ன்னு கூப்பிடுற” என குழம்ப
“வருவியா மாட்டியா”
“வரேன் டா..”
“நைட் 7க்கு வா” என்றவன் சென்றுவிட,
நேஹா தான் ‘நல்லா தயாராகி போகணும்.. இல்ல கண்டிப்பா அவன் கண்டுபிடிச்சிடுவான்’ என நினைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

ஏழு மணிபோல் அக்னியின் வீட்டிற்கு செல்ல, அவனோ அவள் வருகையை எதிர்பார்த்து வரவேற்பறையிலேயே காத்துக்கொண்டிருந்தான்.

அக்னியின் வீட்டினுள் நுழைந்தவள், “என்னடா வீடே அமைதியா இருக்கு.. மிலிட்டரி இருக்காரா” என்று மிரண்டு கேட்க,
அக்னி “இல்ல இல்ல.. ரெண்டு பேரும் வெளிய போயிருக்காங்க” என்றான், அதில் சற்றே நிம்மதி அடைந்தவள்,
“அப்படியா.. ஓகே ஒகே.. சரி எதுக்கு கூப்பிட்ட சொல்லு.. இல்ல என் வீட்டு அலாரம் கிளாக் கூவிடும்” என்று தன் தந்தையை நினைத்து கூற,
“சும்மா தான் கூப்பிட்டேன்” என்றான் அந்த கள்வன்.

நேஹா “எதேஏஏஏஏ.. சும்மா கூப்பிட்டியா.. நல்லா பண்றிங்க மிஸ்டர் அக்னி.. எதுவாக இருந்தாலும் என் பெற்றவர் வரும் முன் கூறிவிடவும், தங்களுக்கு புண்ணியமாக போகும்” என்றவளை முறைத்தவன் “தெரியும் டி.. புலம்பாத”
நேஹா “ரைட்டு.. ஆமா கதிர் ஆரு எங்க.. அவங்க இன்னும் வீட்டுக்கு வரல போலயே” என தானே கேட்டு தானே பதிலுரைக்க, அக்னி அவளை ரசனையாக பார்த்து சிரித்துக்கொண்டான்.

அதன் பின் அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நேஹாவின் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வர, அதை திறந்து பார்த்தவள்,
“ஐயோ அகி.  அசைன்மெண்ட் கொடுத்திருக்காங்க டா.. நான் இப்போதான் பார்க்குறேன்” என கவலைப்பட
அக்னி “நீ அத பண்ணிட்டு வந்திருப்பன்னு நினைச்சேன்”
“இல்லடா.. எனக்கு வேற தூக்கம் வருது…” என்று புலம்ப,
அக்னி “நீ தூங்கு.. நான் முடிச்சிடுறேன்.. சாப்ட் காபியா தான அனுப்பனும் சோ யாருக்கும் தெரியாது” என்றிட
நேஹா “இல்ல டா” என ஆரம்பிக்க,
அக்னி “நான் பண்றேன்னு சொல்லிட்டேன்.. அவ்ளோதான்.. நீ போய் நிம்மதியா தூங்கு.. நாளைக்கு காலைல உன் மெயில்ல இருக்கும்” என்றான்.

நேஹா அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல்,
நேஹா “அகி.. டேய்.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன் ஆனா நீ கோபப்பட கூடாது” என கண்டிஷன் போட,
அக்னி “அப்போ கோபப்படுற மாதிரி மேடம் ஏதோ சொல்ல போறீங்க.. அதான் மதியதுல்ல இருந்து திருட்டு முழி முழிச்சிட்டு இருந்தியா” என்று கேட்க, நேஹா எல்லா பக்கமும் தலையாட்டி வைத்தாள். அதில் மென்னகை புரிந்தவன் “சரி சொல்லு..”
“அது.. இன்னிக்கி” என அவள் தயங்க,
அக்னி “இன்னிக்கு என்ன..”
“இன்னிக்கி.. கிளாஸ்ல” என்று தவணை முறையில் அவள் பேச அதில் கடுப்பானவன் “கிளாஸ்ல என்ன.. ஒழுங்கா சொல்லு” என்று குரலுயர்த்த,
நேஹா கண்களை இறுக மூடிக்கொண்டு “இன்னிக்கி நீங்க ஆடிஷன் போனப்ப சில சீனியர்ஸ் என்கிட்ட வம்பு பண்ண வந்தாங்க, அப்போ ஆத்ரேயன் தான் எனக்கு வந்து ஹெல்ப் பண்ணான்.. நான் தேங்க்ஸ் சொன்னேன் அவ்ளோதான்.. வேற எதுவும் பேசல.. இதான் நடந்துச்சு அக்னி.. சாரி.. அவன் ஹெல்ப் பண்ண வருவான்னு எனக்கு தெரியாது ஆனா அவன் இல்லனா இன்னைக்கு அந்த சீனியர்ஸ் என்னை என்ன பண்ணிருப்பாங்கன்னு தெரியாது.. சாரி அகி” என மனப்பாடம் செய்த்தது போல் ஒப்பித்துவிட்டாள்.

அதன் பிறகு சில நேரம் மௌனமே ஆட்சி செய்ய, ஒரு கண்ணை மட்டும் மெல்ல திறந்து பார்த்தாள்,
அங்கு அக்னி இருக்கையில் கைகட்டி  அவளை பார்த்து சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
நேஹா குழம்பி “ஏன் சிரிக்கிற” என புரியாமல் கேட்க,
அக்னி “ஏன் உனக்கு அவ்ளோ பயம்.. நான் என்ன பண்ணிட போறேன் உன்ன” என சம்மந்தமில்லாமல் கேட்டவனை பார்த்து அசடு வழிந்தவள்,
“உனக்கு அவனை பிடிக்காதுல.. அதான்”
“ஏன்னு கேட்க மாட்டியா” என்றவனின் குரல் இப்போது தாழ்ந்து ஒலிக்க,
நேஹா “உனக்கு சொல்லனும்ன்னு தோணும் போது நீயே சொல்லுவ அப்பறம் நான் எதுக்கு கேட்கனும்” என தலை சாய்த்து கூற, அதில் மொத்தமாக அவளுள் தொலைந்தான் அந்த அழுத்தக்காரன்.

அக்னி, முறுவலுடன் “அந்த சீனியர்ஸ் யாரு” என்று கேட்க,
நேஹா “இதோடா.. நான் சொல்லவே மாட்டேன்.. விருமாண்டி என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும்” என்றவளின் கூற்றில் அவன் வாய்விட்டே சிரித்துவிட,
நேஹா “அப்போ உனக்கு கோபம் இல்ல தான” என்று ஆர்வமாக கேட்டாள், அக்னி ‘இல்லை’ என்பதாய் தலையசைக்க
நேஹா “ஹப்பா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு” என நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டாள் அந்த பாவை.
தொடர்ந்து நேஹாவே “சரி அகி, டைம் ஆகுது நான் கிளம்புறேன் என்று திரும்ப அக்னி அவள் கை பிடித்து “ஒரு நிமிஷம்” என்றான்.
அவள் என்ன என்பது போல் பார்க்க, தன் அறைக்கு சென்றவன் ஜிக்ஸா பஸ்ஸிலின் (Jigsaw puzzle) ஒரு துண்டை அவளிடம் நீட்ட, நேஹா விழி விரித்து “ஹே இது பஸ்ஸில் தானே”
“ம்ம் ஆமா.. உனக்கு இது ரொம்ப பிடிக்கும்ல அதான்”
“தேங்க்ஸ் அகி.. ஆனா இதோட மத்த பீஸஸ் எங்க” என்று கேட்க,
அக்னி “ம்ம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான் ஒரு பீஸ் தரேன்.. நீ அதை ஜாயின் பண்ணு, நம்ம தேர்ட் இயர் முடிக்கிறதுக்குள்ள இது முடிஞ்சிடும்” என்றிட,
நேஹா “ஹை.. செம்ம செம்ம.. தேங்க்ஸ் டா” என்றவள் அவனை அணைத்துக்கொள்ள, அக்னியும் அவளை தோளோடு அணைத்து விடுவித்தான்.
________________________

ஆத்ரேயன் தன் அறையில் அமர்ந்திருக்க, அவனுக்கு நேஹா பேசியவை நினைவு வந்தது. அவன் மனமோ “அவங்க பேசினத வச்சு பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு.. ஆனா எப்படி அவங்க அந்த அக்னி கூட இருக்காங்க” என சிந்திக்க,
அங்கு அக்னியோ “அவன் எதுக்கு ஆரு நேஹா கூட நல்லா பேசணும்.. ஒருவேளை என்ன பழிவாங்க ஏதாவது பண்றானா” என சிந்தித்தான்.

_________________________________

சரியாக ஒரு வருடத்திற்கு முன், ரேயன் மற்றும் அக்னியின் பள்ளி மாணவர்கள் எட்வர்ட் மைதானத்தில் தான் விளையாட்டுக்களை பயின்றுக்கொண்டிருந்தனர்.

அங்கு தான் ஆத்ரேயன் கால் பந்தும் அக்னி  மட்டை பந்தும் பயின்றனர் (ஆனால் அவர்களின் விதி போலும், கிஷோர் மற்றும் கதிர் எந்த ஒரு விளையாட்டிலும் ஈடுபடவில்லை).

அக்னி பல வருடங்களாகவே அங்கு பயின்று வர, ஆத்ரேயனுக்கு அதுவே முதல் வருடமாக இருந்தது.

ரேயனின் கால்பந்து   ஆசிரியர் மைக்கல் மற்றும் அக்னியின் மட்டைபந்து ஆசிரியர் திலீப் நெருங்கிய நண்பர்கள்.

அக்னி மற்றும் ரேயன் ஒரே விளையாட்டில் இருந்திருந்தால் பேசி பழகிருக்க நேர்ந்திருக்குமோ என்னவோ ஆனால் இருவரும் இரு வேறு விளையாட்டில் இருந்ததால் ஒருவர் மற்றவரை பற்றி அறிந்திருக்கவில்லை என்பது நிச்சயமாக விதியின் சதியே.

ஒரு நாள் ரேயன் தன் தந்தையிடம் பேசிவிட்டு நடந்து வர, அங்கு மைதானத்தில் அக்னி காலை பிடித்துக்கொண்டு “கோச்” என்று கத்திக்கொண்டிருந்தான். அந்தோ பாவம் அவர் அங்கு சில மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த திலீப்பின் காதில் அக்னியின் குரல் விழவில்லை.

அக்னி காலை பிடித்து அமர்ந்திருந்ததை கண்ட ரேயன் அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என கணித்து ஐஸ் பேக் மற்றும் ஸ்ப்ரேவுடன் வர, அக்னி தன் காலிலிருந்த பேடை அகற்றினான். ஆத்ரேயன்னும் அதுக்கு உதவி புரிந்தான்.

ரேயன் அக்னியின் அடிபட்ட காலை பிடிக்க போக,
அக்னி “ஐயோ ப்ரோ… பரவால்ல விடுங்க.. கோச்ச கூப்பிடுங்க”
“அட இருங்க ப்ரோ.. இதுல என்ன இருக்கு” என்றவன் அக்னியின் காலிற்கு முதலுதவி செய்தான்.

அக்னி “ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ”
“இட்ஸ் ஓகே.. இப்போ வலி எப்படி இருக்கு”
“இப்போ பெட்டர்..” என்று கூறும்போதே மைக்கலும் திலீப்பும் வந்து சேர்ந்தனர்.

மைக்கல் “ரேயா என்ன ஆச்சு” என்று கேட்க,
ஆத்ரேயன் “sprain சார்.. அதான்”
தீலிப் “அக்னி இப்போ ஓகே தான”
“எஸ் சார்.. இப்போ ஓகே.. ப்ரோ ஹெல்ப் பண்ணாங்க” என்று ஆத்ரேயனை கைக்காட்ட,
மைக்கல் “ரேயன் நல்லா முதலுதவி பண்ணுவான் திலீப்.. சோ சீக்கிரம் சரியாகிடும்”
திலீப் “தெரியும் டா.. நான் அவனை பார்காமலா இருக்கேன்.. ஒன் ஆப் தி பெஸ்ட் பிளேயர்ஸ்..” என்று அவனை பாராட்ட, ஆத்ரேயன் சிறு முறுவலுடன் நன்றி தெரிவித்தான்.

மைக்கல் “அக்னி உன் டிடர்மினேஷனை விட்டுடாத.. அது தான் உன்னோட பலமே..” என்றிட
அக்னி “கண்டிப்பா சார்” என்றான்.
ரேயன் “இன்னிக்கி ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு ஆடு” என்று அறிவுரைக்க,
அக்னியும் புன்னகையுடன் அதை ஒப்புக்கொண்டான்.

________________________________________

ரேயன் அக்னி இருவரும் அவர்களின் முதல் சந்திப்பை நினைத்து உழன்றுக்கொண்டிருந்தனர்.

ரேயன் “நீ எனக்கு எப்போவுமே ஒரு புதிர் தான் அக்னி.. உன்ன மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன்” என்று நினைத்துக்கொண்டிருக்க,

அக்னியோ “நீ எனக்கு நல்லவனா தெரிஞ்சிருக்கலாம் ரேயா… ஆனா நீ பண்ணத நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்” என கண்கள் சிவக்க நினைத்துக்கொண்டான்.

_________________________

தன் படுக்கையில் உருண்டுக்கொண்டிருந்த ஆருவின் மனதில் ஆத்ரேயனின் எண்ணங்களே. தன் அலைபேசியில் அவன் எண்ணை எடுத்தவள் அவனிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசிக்க,
அவள் மனமோ “அக்னிக்கு தெரிஞ்சா நீ மர்கையா தான் டி…” என கூச்சலிட,
“பரவால்ல பண்ணுவோம்.. ஈஈஈ” என்று இளித்துக்கொண்டே அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினாள், “ஹாய்.. ஆராத்யா ஹியர்” என்று.

அப்போது தான் அலைபேசியை வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றவன், தன் அலைபேசி சிணுங்கங்களில் அதை எடுத்து பார்த்தான்.
அதை அப்படியே ஒதுக்க மனம் வராமல் அவனும் “ஹாய்” என்று பதிலனுப்ப, ஆரு தான் குதித்துக்கொண்டிருந்தாள்.

மீண்டும் அவளே “ஹேவ் அ பீஸ்புள் நைட்.. நம்ம வாழ்க்கைல நடக்குற எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்” என்று எதர்ச்சியாக அனுப்ப, ரேயனிற்கு தான் அது அப்போது தேவையாக இருந்தது. அதுவும் அவளினூடு அதை கேட்கும் போது அவன் மனதில் ஒரு இதம் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை, தன் மனநிலையை நினைத்து வியந்தவன்
“தேங்க் யூ” என்று அனுப்ப,
ஆரு ‘இந்த எழவு தேங்க் யூக்காகவா நான் அனுப்புனேன்.. சரி விடு, தெரிஞ்சது தான’ என்று தன் மனதை தேற்றிக்கொண்டவள் அலைபேசியை கீழ வைத்துவிட, மீண்டும் அவனே ஒரு தகவல் அனுப்பியிருந்தான் “நீயும் நல்லா தூங்கு” என்று. அதை படித்தவள் ‘எனக்கிது போதும்.. எனக்கிது போதும்’ என்று குதூகளித்துக்கொண்டே உறங்க சென்றாள்.

ஆத்ரேயனும் சிறு முறுவலுடன் அலைபேசியை அணைக்க, கீழிருந்து ஷோபனாவின் குரல் கேட்டது. அவர் குரலில் இறங்கி வந்தவன் “என்னம்மா ஆச்சு.. ஏன் கத்துறீங்க” என்று வினவ,
ஷோபனா கண்களில் நீர் சொறிய “ரேயா.. ஜனா இன்னும் வீட்டுக்கு வரல டா.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறா” என்று படபடப்பாக பேச,
ரேயன் புருவம் சுருக்கி “எதாச்சு பிரச்சனையா” என்று கேட்க, இருவரிடமும் பலத்த அமைதி.
ரேயன் “சொல்லுங்க..” என்று அழுத்தி கேட்க,
கண்ணன் “எப்பவும் போல தான்.. நான் ஏதோ பேச போய் அவ ஏதோ பேசி.. சண்டைல முடிஞ்சிது.. நீ ஏன் என் பொண்ணா  பிறந்தியோன்னு ஒரு கோபத்துல சொல்லிட்டேன் அதுல கொச்சிக்கிட்டு போயிட்டா.. ஆறு மணிக்கு போனவ இன்னும் வரல, முதல அவ பிரெண்ட் வீட்ல தான் இருந்தா சோ விட்டேன்.. ஒரு எட்டு மணிக்கா கிளம்பிருக்கா ஆனா இன்னும் வீட்டுக்கும் வரல, மணி பத்து ஆகுது” என்று தந்தைக்கே உரிய கவலையில் பேச,
ரேயன் தான் அவர் கூற்றில் பொங்கிவிட்டான்.

ரேயன் “ஏன் பா.. அக்கா என்ன பண்ணிட்டா அப்படி.. அவளை மாதிரி ஒரு பொண்ணு யாருக்கும் கிடைக்காது..  ப்ச்..” என்று தலைக்கோதி தன்னை சமன் செய்தவன் “நான் போய் தேடுறேன்” என்றுவிட்டு தன் காரை எடுத்துக்கொண்டு பறந்தான்.

Advertisement