Advertisement

அத்தியாயம் – 11

நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது, வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அகிலனிடம் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள் புவனா. இத்தனைக்கும் அவன் பேசாமல் எல்லாம் இல்லை. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசினான் தான், ஆனால் புவனா அழைத்தால் பேசுவான் அவ்வளவே..

என்னவென்றால் என்ன, வேறு விஷயம் ஏதாவதா, அப்படியா சரி, இதற்குமேல் அவனிடமிருந்து எதுவும் வராது.. சரியாக பேசவில்லை என்று இவள் அழைக்காமல் இருந்தாலோ இதை விட பிகு காட்டினான்.

புவனாவிற்கு அப்படியே தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அழகாய் சலசலத்து சென்றுகொண்டிருந்த இவர்களின் காதல் நீரோடையை இவள்தானே கல் எறிந்து கலக்கிவிட்டது.

எறிந்தவளோ தெளிந்துவிட்டாள், அகிலனோ முறுக்கிக்கொண்டான்.

அன்றும் அப்படிதான் புவனா எத்தனை எடுத்து சொல்லியும், திருமணத்தை தள்ளிவைப்பது தான் சரி என்றே அகிலன் சொல்ல, புவனாவிற்கு  கடுப்பாகிவிட்டது. அலைபேசியையே அன்றைய நாளில் தொடாமல் இருக்க அதுவோ விடாமல் அழைத்துக்கொண்டு இருந்தது.

நிலா தான் அழைத்தாள். ஆனால் முதல் முறை. புவனாவிடம் அலைபேசியின் எண்ணை கொடுத்திருந்தாள் தான், இவளும் பதிந்திருந்தாள் தான் ஆனால் இப்போதிருக்கும் சூழலில் அதுவே புவனாவிற்கு ஒரு திகிலை கொடுத்தது.   

“ஹலோ புவனா… நான் நிலா பேசுறேன்….” என்றதுமே, முதல் முறையாய் நிலா அழைப்பதால், புவனாவிற்கு என்னவோ ஏதோ என்றானது.

ஒருவேலை சொன்னது போலவே அகிலன் நிஜமாகவே திருமணத்தை தள்ளிப்போட்டு விட்டானோ. அப்படியிருக்க நம் வீட்டில் ஏன் இத்தனை அமைதி என்று யோசனையில் மூழ்க,

அந்தபக்கம் நிலாவோ “ஹலோ… ஹலோ…” என்று கத்திக்கொண்டு இருந்தாள்..

புவனாவிடம் சமத்தாய் உண்டுகொண்டு இருந்த பூர்வி தான், “ம்மா… ம்மா…” என்று அவளை உசுப்ப, அதன் பிறகே சுயநினைவு வந்தது புவனாவிற்கு..

இவனிடம் எத்தனை முறை எடுத்துச் சொன்னேன்.. எத்தனை முறை மன்னிப்பு கேட்டேன்.. பிடிவாதம் உடம்பெல்லாம் பிடிவாதம்.. கடைசியில் சொன்னதை செய்துவிட்டானே என்ற இதயத்தின் கூப்பாடோடு “ஹ… ஹலோ அக்கா சொல்லுங்க..” என்றாள் பதற்றமாய்.

“ஹே..!!! புவனா பிசியா இருந்தியா…?”என்று சாவகாசமாய் நிலா கதையளக்க, இவளுக்கோ ஐயோ என்றிருந்தது..

இதற்கிடையில் பூர்வி வேறு “ம்மா.. ஆ..” என்று வாய் திறக்க, பாடாய் பட்டுவிட்டாள் புவனா..

நல்லவேளை கோமதி வந்து பூர்வியை தூக்கிக்கொண்டு அவளுக்கு ஊட்ட, “இல்லக்கா.. அது.. அது பூர்விக்கு ஊட்டிட்டு இருந்தேன்…” என்றாள்.

“ம்ம் சரிம்மா… ப்ரீயா இருந்தா கொஞ்சம் டிவி ஆன் பண்ணி பாரேன்..”

“ஏன்?? ஏன் க்கா…”

“நம்ம அகில் லாஸ்ட் வீக் பார்ட்டிசிபேட் பண்ண கேம் ஷோ போகுது அதான்….” என்று நிலா சொல்ல,

“ஹப்பா…. இவ்வளோதானா… கொஞ்ச நேரத்துல என்ன மாதிரி பயந்திட்டேன்…” என்று எண்ணிக்கொண்டு

“எந்த சேனல் க்கா..” என்று கேட்டு தெரிந்துகொண்டு டிவி முன் அமர, அடுத்து அப்படியே தனசேகர், கோமதி, பூர்வி என எல்லாரும் வந்துவிட்டனர்.

அகிலன் ஒரு கேம் ஷோவில் பங்குபெற போகிறான் என்பது முன்னமே  தெரியும் அவளுக்கு. ஊட்டியில் இருந்து வந்ததுமே அவன் பங்குபெற்ற நிகழ்ச்சி. இவளிடமும் சொன்னான் தான்.

எங்கே நிச்சயதார்த்த வேலை, அதன் பிறகான குழப்பம் வேறு என்று மறந்துவிட்டாள். நல்ல வேலை நிலா சொன்னாள் என்று எண்ணும் பொழுதே, ‘ஏன் இவன் சொல்லமாட்டனோ.. ரொம்பத்தான்..’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

பூர்விக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை அகிலனை டிவியில் கண்டதும்..

“ப்பா ப்பா…” என்று ஆர்ப்பரித்தாள்.

புவனாவிற்குமே கூட சற்று பெருமையாய் தான் இருந்தது. பலமுறை அகிலனை டிவியில் கண்டிருக்கிறாள் தான். ஆனால் இப்பொழுதோ உரிமையுள்ளவன் என்ற முறையில் கண்ணுறும் போது அதன் உணர்வே வேறாய் இருந்தது.

இதழில் தானாய் வந்து புன்னகை ஒட்டிக்கொள்ள, தனக்குள்ளே அவனை காணும் போது ஏற்படும் மாறுதல்கள் நன்றாய் புரிய, அவளுக்கே தான் அகிலன் மீது எத்தனை காதல் கொண்டுள்ளோம் என்பது மிக நன்றாகவே விளங்கியது.

அந்த கேம் ஷோவில் அகிலனுக்கு கொடுக்கப்படும் மரியாதை, முக்கியத்துவம் ஒவ்வொன்றும் அவள் கண்களுக்கு தெரியாமல் இல்லை. போட்டியினூடே, தொகுப்பாளர்,

“தென்… அகிலன் சொல்லுங்க…. இண்டஸ்ட்ரில இருக்க எளிஜிபில் பேச்சிலர்ல நீங்களும் ஒருத்தர்.. டாப் ஹீரோவும் கூட உங்க லைப் ஓட அடுத்த பிளான் என்ன… எத்தனை ப்ராஜக்ட்ஸ் கமிட் ஆகியிருக்கீங்க….” என்று கேட்க,

புன்னகையோடு கேட்டுகொண்டிருந்த அகிலனோ, சற்றும் யோசிக்காமல்

“எஸ் ஐம் கமிட்டட்…. இன் லவ்….” என்று அழகாய் கூற, ஒரு நொடி அந்த அரங்கமே அமைதியை சூடியது.. கேள்வி கேட்ட தொகுப்பாளருக்கோ அதிர்ச்சி, ஆச்சரியம் மகிழ்ச்சி எல்லாம்..

சட்டென்று என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அகிலனை நோக்கி வந்து கை குலுக்க, அவனோடு பங்குபெற்ற மற்ற நடிகர்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துக்களை கூறினர். 

கேமராவின் கண்கள் அகிலனையே நோக்க, புவனாவிற்கு வீட்டிலிருந்து இதை காணும் பொழுது மெய் சிலிர்த்துவிட்டது..

அவன் நடிகன் தான் இதை சொல்வதில் அவனுக்கு எந்த தயக்கமும் வெட்கமும் இருக்க போவதில்லை தான். இருந்தாலும் உலகமே காணும் தொலைகாட்சியில் உறுதியுடன் அவன் ‘எஸ் ஐம் கமிட்டட்… இன் லவ்…’ என்று கூறும் பொழுது அப்படியே புவனாவிற்கும் கூட மூச்சு நின்றுதான் வந்தது.

சிலர் வாய்ப்புக்காக  திருமணம் ஆகி, குடும்பம் இருப்பதை கூட மறைக்கும் இந்த காலத்தில், காதலிப்பதை எத்தனை பெருமையாய் சொல்கிறான் என்று நினைக்கும் பொழுது இவனையா நாம் ஒருநொடி சந்தேகித்தோம் என்று இருந்தது.

மீண்டும் தன் கவனத்தை டிவி பக்கம் திருப்ப, அந்த கேம் ஷோவோ அகிலனை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியாய் மாறியிருந்தது..

“வாவ்… அகிலன்…. கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணாத ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க… பாவம் இனி எத்தனை இளம் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வர போகுதோ தெரியலை… ஓகே…. உங்களோட ஹார்ட்ட திருடின அந்த ரியல் ஹீரோயின் யாரு….?? உங்க காதல் கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்…” என்று அகிலனிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்க,

அகிலனோ சிரித்தபடியே, கண்களிலும் முகத்திலும் காதல் ஜொலிக்க, “ஷி இஸ் புவனா… இப்போதைக்கு இது மட்டும் போதும்… இந்த ஷோ டெலிகாஸ்ட் ஆகும் போது எங்களுக்கு எங்கேஜ்மென்ட் முடிஞ்சிருக்கும்…” என்று சொல்ல, மீண்டும் கரகோஷம் காதை கிழித்தது…

அவனது உறுதி கண்டு வியந்து தான் போனாள் புவனா.. அவன் கண்களில் இருக்கும் காதல், அகிலனை காணும் போதெல்லாம் நொடிக்கு நொடி இவள் மனதில் உணர்வது..

‘புவன்…’ என்று அழைக்கும் பொழுதே அத்தனை பிரேமம் இருக்கும்..

ஏனோ நெஞ்சம் விம்மியது… உடனே அகிலனை காண வேண்டும் போல்.. பேசவேண்டும் போல்.. அவன் மார்பில் சாய வேண்டும் போல்.. இருக்க, கண்களில் அவளையும் அறியாது கண்ணீர்.

அருகினில் பெற்றோர் இருக்க, சட்டென்று எழுந்தும் செல்ல முடியவில்லை அவளாள், கண்கள் அகிலனையே கண்டிருக்க,

அங்கே நிகழ்ச்சியிலோ, “வாவ்… ரியல்லி ஹாப்பி… இப்படி ஒரு ஹான்சம்  ஹீரோ கிடைக்க ரியலி உங்க ரியல் ஹீரோயின் ரொம்ப லக்கின்னு தான் சொல்லணும்…” என்று தொகுப்பாளர் சொல்ல, அவனோ மறுப்பாய் தலையசைத்தான்.

“நோ… நோ…. நான் தான் லக்கி.. ஒரு க்ரிடிக்கல் சிச்சுவேஷன்ல நான் இருந்தப்போ தான் ஷி கேம் டு மை லைப்… அண்ட் சடன்லி ஷி சேஞ் மீ அண்ட் மை லைப்… நவ் ஷி இஸ் மை லைப்..” என்று வார்த்தைக்கு வார்த்தை புவனாவை பற்றி பெருமையாய் கூற, இவளுக்கோ இதயம் நின்றது..

தன்னை எத்தனை உயர்வாய் நினைக்கிறான், உண்மையாய் நேசிக்கிறான், ஆனால் நான்… என்று எண்ணம் போக, சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது கூட மறந்துவிட்டது.

மறந்துவிட்டது என்பதைவிட, இதயம் அகிலனிடமே நிலைத்துவிட்டது…

“ஐ… ப்பா….” என்ற பூர்வியின் கூச்சல் தான் புவனாவை இவ்வுலகிற்கு திருப்ப, “ப்பாவா… என்ன சொல்கிறாள் இவள்….” என்பது போல பார்க்க, அகிலனே தான் அங்கே நின்றிருந்தான்.

தனசேகர் எதோ சொல்ல, “மாமா ஷோ எப்படியிருந்தது…” என்று அகிலன் கேட்டபடி இவளருகில் வர, புவனாவிற்கு அவன் மீது படர்ந்த பார்வையை அகற்ற முடியவில்லை.

‘வா..’ என்று வரவேற்கவும் தோணாமல் அப்படியே அமர்ந்திருக்க, இவளது இத்தனை மாற்றத்திற்கும் காரணமானவனோ ஒன்றுமே நடவாதது போல் இருந்தான்..

புவனாவின் கண்கள் அகிலனை தவிர வேறெங்கிலும் காணவில்லை. அவன் என்ன பேசுகிறான், ஏன் வந்தான், எதுவும் அறியவவில்லை. அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.

கோமதி வந்து அவனுக்கு எதுவோ பருக குடுத்தது, பூர்வி அவன் மடியில் அமர்ந்து கொஞ்சியது எதுவுமே அவள் புத்திக்கு எட்டவில்லை.. தனசேகரிடம் என்ன கேட்டானோ, அவரும் சம்மதமாய் தலையாட்ட, புவனாவை நோக்கி, “கிளம்பலாமா..” என்க, இவளோ திரு திருவென முழித்தாள்.

என்ன?? எங்கே?? எதற்கு?? எதுவும் தெரியாமல் அவன் எதுவோ கேட்கிறானே என்று தலையை உருட்டினாள். அகிலனுக்கு இவள் நிலை நன்றாய் புரிந்தது. ஆனாலும் வெளிக்காட்டாமல், “என்ன புவன் கிளம்பு…” என்று உசுப்ப,

“சரி…” என்று எழுந்தாள்.

அவள் இருந்த கோலம் அவளை தவிர அனைவரின் கண்களிலும் பட, கோமதி தான் மகளை தடுத்து, “இப்படியேவா கிளம்புற.. போ… ட்ரெஸ் மாத்து… தலை சீவு…” என்று சிரித்தபடி கூற, அசடு வழிந்தாள் புவனா.

“பைவ் மினிட்ஸ்….” என்று சொல்லி செல்ல, பூர்வி, “நா… நானு… ம்மா நானு…” என்று அவளோடு ஒட்ட,

“பேபி நீ என்கிட்டே இரு..” என்று அகிலன் தூக்கிக்கொள்ள, சொன்னது போலவே ஐந்தே நிமிடத்தில் தயாராகி வந்துவிட்டாள்.

ஆனால் வெளியே கிளம்பும் நேரம் பூர்வி தானும் வருவேன் என்று அடம் செய்யவில்லை. அகிலன் எதுவோ சொல்லியிருக்கிறான் என்று மட்டும் தெரிந்தது.

“ப்பாய்….” என்று சமத்தாய் கை காட்டினாள்.

காரில் ஏறியபின்னும் கூட எங்கே செல்கிறோம் என்று அகிலன் சொல்லவில்லை.

ஒன்று சிரித்தே சாய்க்கிறான்.. இல்லை மௌனித்தே வதைக்கிறான் என்று தோன்ற,  தானும் இப்படியே இருந்தால் நன்றாக இருக்காது என்றெண்ணி,

“எங்க போறோம்…” என்று கேட்டாள்..

“இப்போவாது கேட்கணும் தோணிச்சே…”

“அப்போவே தோணிச்சு.. ஆனா கேட்கல…”

“ஏன்…???” என்று அகிலன் லேசாய் புருவம் உயர்த்தி பக்கவாட்டில் திரும்பி கேட்க, புவனாவிற்கோ அவனது தோற்றம் இதயத்தில் ஆதிக்கம் செலுத்த என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை.

“என்ன புவன்..??”  என்று இடக்கரம் கொண்டு அவள் வலக்கரம் பற்ற,

“ஹா.. என்… என்ன கேட்டீங்க…??” என்றாள் மீண்டும்..

“ஹ்ம்ம் சரிதான்… முத்திடுச்சு..” என்று சொல்லி சிரிக்க,

“என்ன முத்திடுச்சு..??” என்றாள்..

“உனக்கு தான்… லவ்…. காதல்… பிரேமம்… பியார்…. முத்திடுச்சு…” என்று கிண்டல் பேச, அவளுக்கே தன்னிலை எண்ணி சிரிப்பு தான் வந்தது.

“ச்சு… அங்க மட்டும் என்னவாம்…” என்று சலுகையாய் அவனை அடிக்க, அடித்த கைகளை பற்றிக்கொண்டான்..

“எங்க போறோம்னு சொல்லவேயில்லையே…”

“கிளம்பும் போதே கேட்டிருக்கணும்… சோ இப்போ சொல்ல முடியாது…” என்றவனின் கவனம் சாலையில் இருக்க, பழைய அகிலன் திரும்பிவிட்டான் என்று உணர்ந்தாள் புவனா.

எப்படியோ அவன் கோவம் போனதே என்று நினைக்கும் நேரம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் கார் செல்ல, ‘இங்கே எதற்கு…’ என்பது போல பார்த்தாள்.

காரை பார்க் செய்துவிட்டு, லிப்டினுள் நுழைத்து ஐந்தாம் தளம் சென்று ஒரு புதியா பிளாட்டிற்குள் சென்றபின்னும் கூட ஏன் இங்கு வந்தோம் என்று அகிலன் சொல்லவில்லை.

நல்ல விசாலமான மூன்று பெட் ரூம்கள் கொண்ட வீடு தான். காற்றோட்டமாய் நன்றாகவே இருந்தது.. வீட்டிற்குள் இவர்களை தவிர வேறெந்த பொருளும் இல்லை. ஆனாலும் சுத்தமாய் இருந்தது.

“பாரு புவன்… வீடு பிடிச்சிருக்கா…” என்று அகிலன் கேட்க, அவளோ அதற்கு பதில் சொல்லாமல்,

“இது யாரு வீடு..??” என்று கேட்டாள்.

“ஓ… உனக்கு தெரியாதுல்ல… நம்ம வீடுதான் புவன்… நாம வாழ போற வீடு…” என்று அகிலன் சொல்ல,

“அப்போ… அங்க…” என்றாள்..

“ஹ்ம்ம் இது நான் முன்னமே முடிவு பண்ணது புவன்… கல்யாணத்துக்கு அப்புறம் தனியா வந்திடனும்னு…” என்றவன் அப்படியே தரையில் அமர, புவனாவும் அமர்ந்துகொண்டாள்..

“ஏன்…?? எதுவும் பிராப்ளமா???” என்று கைகள் பற்ற,

“நோ.. நோ… பிராப்ளம் ஆகிட கூடாதுன்னு தான் இந்த முடிவு..” என்றவனின் முகம் சற்று தீவிர பாவம் காட்ட, புவனாவோ நிஜமாகவே குழம்பிவிட்டாள்.

“ஷி புவன்.. நான் செலிப்ரட்டியா இருக்கலாம்.. பட் நான் மனசளவுல ரொம்ப ரொம்ப நார்மல் மென்.. வீடுன்னா அதுல சிரிப்பு சந்தோசம், அழுகை, சண்டை கோவம், புரிதல் எல்லாம் இருக்கணும்னு நினைக்கிறவன்.. ஆனா எங்கபுவனாவிற்கு வீட்ல அப்படி இல்ல.. கௌரவம்… ஸ்டேட்டஸ்… இது மட்டும் தான் முக்கியம்.. எனக்கு பீலிங்க்ஸ கண்ட்ரோல் பண்ண தெரியாது.. இத்தனை நாள் அங்க இருந்தது வேற.. மேரேஜுக்கு அப்புறமும் அப்படி இருக்கிறது வேற… முக்கியமே என்னை நானே ஸ்ட்ரெஸ் பண்ணிக்க விரும்பல.. நான் நல்ல இருந்தா தான் உன்னையும் பேபியும் நல்லா பார்த்துக்க முடியும்…” என்றவனை பார்க்கும் பொழுது, சாதாரணா குடும்ப சூழலுக்கு ஏங்கும் குழந்தையாய் தான் தெரிந்தான்.

இவன் மனதில் இருப்பது என்னவென்று புரியாமல் தானும் அகிலனை நோகடித்தோமே என்று தோன்ற, அன்று அம்பிகா எந்த விதத்தில் அப்படி பேசினார் என்றும் நன்றாகவே புரிந்தது.

“ம்ம் சாரி அகிலன்….” என்றாள் உணர்ந்து…

“ம்ம் விடு புவன்… நமக்குள்ள சண்டை வந்ததுகூட நல்லதுதான்.. ஹ்ம்ம் இனிக்கு ஷோ பார்த்த தானே… நான் க்ரிடிக்கல் சிச்சுவேஷன்னு சொன்னது நிஜம் தான் புவன்… நிஜமாவே அப்போ என்னோட சிச்சுவேஷன் அப்படிதான் இருந்தது.. எங்கேஜ்மென்ட் ப்ரேக் ஆனது மீடியாக்கு தெரியாம இருக்கவே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்..

அந்த நேரத்துல எனக்கு ஒரு மாரல் சப்போர்ட் கூட கிடைக்கல வீட்ல இருந்து..  ஆனா என்னோட பீலிங்க்ஸ் பத்தி யாரும் கவலைப்படலை… எங்கம்மா பண்ண ஒரே நல்ல விஷயம் உன்னை எனக்கு பார்த்தது தான் புவன்.. சோ நம்ம வாழ போற லைப் நமக்கு சந்தோசத்தை கொடுக்கணும் புவன்.. அங்க இருந்தா அது முடியாது.. உன்னால என்கிட்டே நார்மலா சிரிச்சு கூட பேச முடியாது..

நான் ஷூட்டிங் முடிஞ்சு வந்ததுமே, உன் மடியில இப்படி படுக்கனும்னு நினைப்பேன்…” என்றவன் சொன்னது போல் படுக்க, அவளையும் அறியாது புவனாவின் கரங்கள் அவன் முடியை கோதியது..

“இதான் புவன்… இது தான் நான் எக்ஸ்பெக்ட் பண்றது…. ஒரு நார்மல் லைப்… அதுவும் உன்கூட… நமக்கே நமக்குன்னு… என் முடிவு செல்பிஷா கூட இருக்கலாம்.. ஆனா மனசுல ஆயிரம் கஷ்டத்தை வச்சுகிட்டு ஒண்ணா இருக்க, தள்ளி இருந்து எல்லாருமே சந்தோசமா இருக்கலாமே..” என்றவனின் குரல் கனிந்திருந்தது

அகிலனின் இதயத்தில் தேடல்கள் பல இருந்தாலும், அத்தனை தேடல்களுக்கும் ஒரே பதிலாய் அவன் நாடியது புவனாவை மட்டுமே. இந்த நொடி அது நன்றாகவே புவனாவிற்கு புரிந்தது. இனி என்ன நடந்தாலும் சரி, யார் என்ன சொன்னாலும் சரி அகிலன் பக்கம் நிற்பதாய் முடிவெடுத்துக்கொண்டாள்.

அகிலன் இதயத்தின் தேடல் அவளாய் இருக்க, அவளுக்கோ அகிலனே இதயமானான்.. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement