கண்ணீர் - அத்தியாயம் 35

Advertisement

Nuha Maryam

Active Member
அனுஷியாயின் அணைப்பே பல்லவனுக்கு அவள் தன் மீது வைத்திருந்த காதலை உணர்த்த, பல்லவன் வானில் பறக்காத குறை தான்.

ஏதோ ஒரு நினைவில் பல்லவனை அணைத்துக் கொண்ட அனுஷியா தன்னிலை அடைந்தவளாக சட்டென பல்லவனை விட்டு விலக, இவ்வளவு நேரமும் இருந்த இனிமை நீங்கி அவளைக் குழப்பத்துடன் நோக்கினான் பல்லவன்.

"நா...நான்... இ...இது...‌ இது... வேணாம். சரி வராது. நான் உ... உங்களுக்கு தகுதியானவ கிடையாது." எனும் போதே அனுஷியாவின் குரல் கரகரத்தது.

தன்னவளின் பயம் உணர்ந்த பல்லவன் அனுஷியாவின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "ஷியா..." என்றவாறு அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்க, அக் குரலுக்கு கட்டுப்பட்டவளாக பல்லவனின் விழிகளை சந்தித்த அனுஷியாவிற்கு சுற்றம் மறந்தது.

கண்களிலேயே காதலை தேக்கி வைத்திருந்தான் பல்லவன்.

அனுஷியா விழி அகற்றாமல் பல்லவனையே நோக்க, "ஷியா... இதை நல்லா உன் மனசுல போட்டுக்க. இந்த உலகத்துலயே... ஏன்... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த உலகத்துலயே உன்ன விட எனக்கு தகுதியானவ யாருமே கிடையாது. நீ உன்னையே தாழ்வா நினைச்சிக்காதே. சாக்கடைல விழுந்தாலும் வைரத்தோட மதிப்பு மாறாது. என்னோட ஷியா அந்த வைரத்தையும் மிஞ்சினவள். யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் நான் உன் மேல வெச்ச காதல் ஒரு துளி கூட குறையாது. இப்போ பிடிச்ச இந்த கையை என் கடைசி மூச்சு வரை விட மாட்டேன். புரிஞ்சதா?" எனப் பல்லவன் கேட்கவும் அனுஷியாவின் தானாகவே மேலும் கீழும் ஆடியது.

மறு நொடியே அனுஷியாவின் முகம் முழுவதும் முத்தத்தால் அர்ச்சித்தான் பல்லவன்.

மெதுவாக அனுஷியாவின் இதழ்களை நெருங்கிய பல்லவனின் இதழ்கள் தன்னவளின் சம்மதத்தை வேண்டி அவளின் விழிகளை நோக்க, அதிலிருந்த காதலில் கட்டுண்டவளாக இமைகளை மூடினாள் அனுஷியா.

தன்னவளின் சம்மதம் கிடைத்த மறு நொடியே அனுஷியாவின் இதழ்களை பல்லவனின் இதழ்களுக்குள் சிறைப்பட்டன.

சில நொடிகள் நீடித்த அவ் இதழ்களின் சங்கமம் அனுஷியா மூச்சு வாங்க சிரமப்படவும் மனமேயின்றி அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து முற்றுப் பெற வைத்தான் பல்லவன்.

தன்னவனின் முகம் நோக்க வெட்கித்தவளாக செவ்வானமாய் சிவந்திருந்த முகத்தை பல்லவனின் மார்பில் முகம் புதைத்து மறைத்தாள் அனுஷியா.

பதிலுக்கு தன்னவளை இறுக அணைத்துக் கொண்ட பல்லவன், "ஷியா... ஊரறிய மேள தாளத்தோட உன் கழுத்துல மூணு முடிச்சிட்டு உன்ன என் மனைவியா ஏற்கணும்னு தான் எனக்கு ஆசை. ஆனா இப்போ நிலைமை நமக்கு சாதகமா இல்ல. உன்ன பிரிஞ்சி இருக்குற ஒவ்வொரு நொடியுமே என் மனசு உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தவியாய் தவிக்குது. என்னை சுத்தியும் நிறைய சதி நடக்குது. அதெல்லாம் இப்போ என்னால உன் கிட்ட விளக்கமா சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன். ஆனா எந்த காரணத்துக்கும் நான் உன்ன கை விட மாட்டேன்னு நீ நம்பணும். கேட்குறேன்னு தப்பா நினைக்காதே ஷியா. எனக்கு வேற வழி இல்ல. இப்போவே கோயில்ல சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த பிரச்சினை எல்லாம் முடிஞ்சதும் க்ரேன்டா ரிசப்ஷன் வெச்சு செலிப்ரேட் பண்ணலாம். உனக்கு சம்மதமா?" எனக் கேட்டான்.

"உங்கள நம்பாம நான் யாரை நம்ப போறேன். உங்க கூட இருக்குறதே எனக்கு போதும்." என்றாள் அனுஷியா ஒரு நொடி கூட யோசிக்காது.

உடனே காலம் தாழ்த்தாது தனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் அன்றே கோயிலில் யாருமறியாது ரகசியமாக திருமண ஏற்பாட்டை செய்தான் பல்லவன்.

அனுஷியா மாலதியிடம் மட்டும் நிலைமையை எடுத்துக் கூற, ஏற்கனவே அனுஷியா பல்லவன் பற்றி கூறி இருப்பதாலும் ஊரில் அவனுக்கு இருந்த நற்பெயரை மாலதி ஏற்கனவே அறிந்திருந்ததாலும் முழு மனதாக அவளின் திருமணத்துக்கு சம்மத்தைத் தெரிவித்தாள்.

அனுஷியாவிற்கு நல் வாழ்வு அமைவதில் மாலதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தனக்கு தாயுமானவளாக இருப்பவளின் சம்மதம் கிடைத்த பிறகு அனுஷியா மனதில் இருந்த சிறிய குறையும் நீங்கியது.

அன்றே கோயிலில் எளிமையாக அக்னி சாட்சியாக அனுஷியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான் பல்லவன்.

உடனே திருமணத்தையும் பதிவு செய்தவன் தன்னவளை அழைத்துக் கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

_______________________________________________

பல்லவனின் வீடு கூட்டத்தால் நிரம்பி வழிய, ஹேமாவும் கிஷோருமோ கோபத்தில் கிளம்பிச் சென்ற பல்லவன் திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.

ஹேமாவுக்கு அவ்வளவு நம்பிக்கை தன் சகோதரன் தனக்காக வேண்டி நிச்சயம் வீடு திரும்புவான் என்று.

ஆனால் அவளின் நம்பிக்கையைப் பொய்யாக்குவது போல் தன்னவளின் கரம் பிடித்து மாலையும் கழுத்துமாக பல்லவன் வந்து நிற்கவும் ஹேமாவும் கிஷோரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

பல்லவனின் வீட்டில் கூடியிருந்த சொந்தபந்தங்களைக் காணும் போது அனுஷியாவிற்கு இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷ மனநிலை மாறி ஒரு வித பயம் பீடித்துக் கொண்டது.

தன் கரத்தை சுற்றி வளைத்து பிடித்திருந்தவளின் கரம் தந்த அழுத்தமே பல்லவனுக்கு தன்னவளின் பயத்தை உணர்த்த, அனுஷியாவின் தோளை சுற்றி அணைத்தவாறு அவளுடன் உள்ளே நுழைந்தான்.

சொந்தபந்தங்கள் தமக்குள் ஒவ்வொரு விதமாக முணுமுணுக்க ஆரம்பிக்க, இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஹேமாவும் கிஷோரும் தன்னிலை அடைந்தனர்.

தான் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க, அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் விதமாக பல்லவன் அனுஷியாவைத் திருமணம் செய்து கொண்டு வரவும் இத் திடீர் திருப்பத்தை எதிர்ப்பார்க்காத கிஷோர் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

பல்லவன் அனுஷியாவை விரும்புவதை ஏற்கனவே ஊகித்திருந்த கிஷோர் அவன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் வரை செல்வான் என்பதை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

ஹேமாவோ வேகமாக பல்லவனை நெருங்கி, "அண்ணா... என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?" என பல்லவனின் சட்டையைப் பற்றிக் கேட்டாள் ஆவேசமாக.

பட்டென அவளின் கரங்களை வேகமாகத் தட்டி விட்ட பல்லவன், "இப்போ தான் சரியான காரியம் பண்ணி இருக்கேன்." என்றான் அழுத்தமாக.

தன் சகோதரன் தன்னை எதிர்த்துப் பேசுவான் என்று எதிர்ப்பார்க்காத ஹேமா அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்க, "என் தங்கச்சி வாழ்க்கைய தட்டிப் பறிக்க பார்க்கிறாயா நீ?" என்ற கிஷோரோ ஆவேசமாக அனுஷியாவை நெருங்கி அவளை அறையக் கை ஓங்கினான்.

அனுஷியா பயந்து பல்லவனின் முதுகின் பின்னால் மறைந்துகொள்ள, அதற்குள் கிஷோரை இழுத்து கீழே தள்ளி விட்டான் பல்லவன்.

ஹேமா அவசரமாக கீழே விழுந்து கிடந்த கணவனிடம் ஓட, "ஆம்பளையா இருந்தா என் கிட்ட மோது. என் பொண்டாட்டி மேல கை வைக்க நினைச்ச... தொலைச்சிடுவேன். ஏற்கனவே உன் ஆளுங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு மறந்திருக்க மாட்ட. மைன்ட் இட்.‌‌.." கிஷோரின் முகத்தின் முன் விரல் நீட்டி எச்சரித்தான் பல்லவன்.

கூடியிருந்த கூட்டம் தமக்குள் ஒவ்வொரு விதமாக பேசத் தொடங்க, "இங்க எந்த நிச்சயதார்த்தமும் நடக்கப் போறதில்ல. வந்திருக்குறவங்க எங்கள மனசால ஆசிர்வாதம் பண்ணிட்டு கிளம்புங்க." எனப் பல்லவன் அழுத்தமாகக் கூறவும் ஒவ்வொரு தமக்குள் முணுமுணுத்தவாறு கிளம்பினர்.

பின் மனைவியின் பக்கம் திரும்பிய பல்லவன், "ஷியா.‌‌.. சாரி.‌.‌. முதல் நாளே ஏதேதோ பிரச்சினை. இந்த வீட்டுல நம்மள ஆரத்தி எடுத்து வரவேற்க யாரும் கிடையாது. அதனால் நீயே வலது கால எடுத்து வெச்சி உள்ள வா‌." என்றான் புன்னகையுடன்.

உள்ளுக்குள் எதிர்க்காலத்தை எண்ணி அச்சம் இருந்தாலும் பல்லவனின் துணை இருந்தால் எதனையும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தன்னவனின் கரம் பற்றி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் அனுஷியா.

இருவரும் சேர்ந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்த பின் அங்கிருந்த மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாது தன்னவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் பல்லவன்.

இவ்வளவு நேரமும் நடந்தவற்றை கண்களில் வன்மத்தை தேக்கி வைத்து நோக்கினாள் கிஷோரின் தங்கை வானதி.

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல்லவனின் அழகிலும் அவனின் சொத்திலும் மோகம் அதிகம்.

திடீரென எங்கிருந்தோ வந்த ஒருத்தி தான் கட்டி வைத்திருந்த கனவுக் கோட்டையைத் தகர்த்து எறியவும் அவளின் மீது வஞ்சத்தை வளர்த்தாள் வானதி.

கிஷோரும் ஹேமாவும் அடுத்து என்ன செய்து பல்லவனின் சொத்தை அபகரிக்கலாம் என அப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்தனர்.

இதனை அறியாத பல்லவனோ, "வெல்கம் மை க்வின்." என அறைக் கதவைத் திறந்து மனைவியைப் புன்னகையுடன் வரவேற்றான்.

அனுஷியா முகம்கொள்ளாப் புன்னகையுடன் அறையினுள் நுழைய, கதவைத் தாழிட்ட பல்லவன் அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளை சட்டென தன் கரங்களில் ஏந்தினான்.

"எ...என்ன பண்ணுறீங்க? இ... இறக்கி விடுங்க. ப்ளீஸ்..." என அனுஷியா வெட்கமும் பயமும் கலந்து கூற, "நோ வே... நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா ஷியா? உன்னை இப்படியே என் கைலயே வெச்சி ராணி மாதிரி பார்த்துக்கணும்." என்றான் பல்லவன்.

அனுஷியா கண்கள் கலங்க தன்னவனை விழி அகற்றாது நோக்க, "ஹேய் என்னாச்சுடா?" என அனுஷியாவை அவசரமாக கட்டிலில் அமர்த்தியவாறு கேட்ட பல்லவன் தன் பெருவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

பதிலேதும் கூறாமல் அவனின் மார்பில் முகம் புதைத்த அனுஷியா, "உங்களுக்கு தெரியுமா? என் வாழ்க்கைல காதல், கல்யாணம், கணவன் இதெல்லாம் வரும்னு நான் கனவுல கூட எதிர்ப்பார்க்கல. ஒவ்வொரு நிமிஷமும் என் கற்ப எப்படி என்னை சுத்தி இருந்த காமப் பிசாசுங்க கிட்ட இருந்து காப்பாத்திக்கிறதுன்னு மட்டும் தான் என்னோட எண்ணமா இருந்தது. ஆனா சில சமயம் என்னையும் மீறி என்னால என் வயசு மத்த பொண்ணுங்க போல ஒரு சாதாரண வாழ்க்கைய வாழ முடியாதான்னு ஏக்கம் வரும். அப்புறம் நான் வாழுறதே பெரிய விஷயம் அப்படிங்கிற எண்ணம் வந்து எல்லா ஆசையையும் எனக்குள்ள பூட்டிக்குவேன். ஒன்னு தெரியுமா? எனக்காக மாலதி அக்கா நிறைய பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி கொடுக்கணும்னு மட்டும் தான் எனக்கான ஆசையா இருந்தது. ஆனா நானே எதிர்ப்பார்க்காத விதமா ஆபத்பாந்தவனா என் வாழ்க்கைல நீங்க வந்தீங்க. எனக்கான எல்லாமுமா மாறினீங்க. அன்பு, பாசம், காதல், அரவணைப்பு, பாதுகாப்பு இப்படி எல்லாத்தையும் மொத்தமா கொடுத்தீங்க. நான் உங்களுக்கு தகுதியானவளான்னு எனக்குத் தெரியல. ஆனா என்னோட கடைசி மூச்சு வரைக்கும் என்னைக் கல்யாணம் பண்ணினதுக்காக நீங்க வருத்தப்படும் படி நடக்க மாட்டேன்." என்றவளின் கண்ணீர் பல்லவனின் சட்டையை நனைத்தது.

புன்னகையுடன் தன்னவளை இறுக்கி அணைத்த பல்லவன் சில நொடிகள் அனுஷியாவைத் தன்னை விட்டு விலக்கினான்.

அனுஷியா அவனைக் குழப்பமாக நோக்க, அவளுக்கு வலிக்காதவாறு நெற்றியில் லேசாக இரண்டு விரல்களால் சொட்டியவன், "என் மக்கு பொண்டாட்டி. முதல்ல நீ எனக்கு தகுதியானவ கிடையாதுங்குற எண்ணத்தை உன் மனசுல இருந்து தூக்கி போடு. உன்னை விட எனக்கு தகுதியானவ இந்த உலகத்துல யாரும் கிடையாது. அடுத்த விஷயம் நீ எனக்காக எதுவும் பண்ணவே அவசியம் இல்ல. எப்பவும் போல சாதாரணமா இரு. நீ என் கூட இருந்தாலே எனக்கு அது போதும் கண்மணி. இந்த உலகமே என்னை எதிர்த்தாலும் எனக்கு கவலை இல்ல. நான் மடி சாய நீ இருந்தா போதும். பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்." எனப் பல்லவன் கூறவும், "ஐ லவ் யூ டூ." என்றாள் அனுஷியா புன்னகையுடன்.

"சரி ஷியா... நீ சீக்கிரம் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. கப்போர்ட்ல உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் இருக்கு. நாம டின்னருக்கு வெளிய போகலாம்." எனப் பல்லவன் கூறவும் சரி எனத் தலையசைத்த அனுஷியா எழுந்து செல்ல, பெருமூச்சுடன் விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் தலை சாய்ந்த பல்லவனுக்கு அடுத்து என்ன என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்தது.

இங்கு கிஷோரின் அறையில் கிஷோர் மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து கிஷோரின் மொத்தக் குடும்பமும் குழுமி இருந்தனர்.

"அண்ணா... நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. எனக்கு பல்லவன் வேணும். ஒரு அநாதை தாசி கிட்ட நான் தோத்து போகக் கூடாது." என்றாள் வானதி கோபமாக.

"ஆமா கிஷோர். இத்தனை வருஷமா அவன் உங்க ரெண்டு பேர் பேச்சை மீறி எதுவுமே பண்ணல. முதல் தடவையா நம்மள மீறி ஒரு அநாதைய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். இதை இப்படியே விட்டா அந்த தாசிக்கே மொத்த சொத்தையும் எழுதி வெச்சிடுவான்." என்றார் கிஷோரின் தாய்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top