அத்தியாயம் 59
நடு இரவில் ஸ்ரீ மெதுவாக வெளியே வந்தாள். அர்ஜூன் சோபாவில் தூங்கிக் கொண்டிருக்க அவனருகே சென்று அவனை பார்த்து விட்டு, வெளியே செல்ல நினைத்த போது முன்னிருந்த கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது.
அர்ஜூன் கண்ணை திறந்து, இவள் இந்நேரத்தில் என்ன செய்கிறாள்? என்று பார்த்தான்.
அச்சச்சோ..இப்பொழுது எப்படி வெளியே செல்வது? இந்த ஆடையில் செல்ல முடியாதே என்று அர்ஜூன் பக்கம் திரும்ப, அவன் தூங்குவதை போல் நடித்தான்.
அவன் கழற்றி வைத்திருந்த ஓவர் கோர்ட்டை எடுத்து மேலே போட்டுக் கொண்டாள். குனிந்து பார்த்தாள். அவள் ஆடை கால் முட்டிக்கு மேல் இருக்க,அவள் அதை கீழே இழுத்து பார்த்தாள். அது இறங்குவதாக இல்லை. அங்கே அமர்ந்தாள். அவள் போன் அதிர,.
இப்ப வந்திருவேன். ப்ளீஸ் போயிடாதீங்க என்று போனை அணைத்து விட்டு அர்ஜூனை பார்த்தாள். அவன் ஆடையும் அவள் இருந்த அறையில் இருக்கும். ஓடிச் சென்று அவனது பார்மல் சர்ட்டை எடுத்து வந்து அவனது சட்டையை அவள் இடுப்பில் கட்டி விட்டு கண்ணாடியை பார்த்து,
அப்பாடா..இப்ப ஓ.கே..எதுவும் தெரியாது என்று கூறி விட்டு மெதுவாக பூனை நடையில் வெளியே வந்தாள். அர்ஜூன் அங்கிருந்த ஜன்னலை திறந்து பார்த்தான்.
அங்கே ஒருவன் ஸ்ரீ கையில் எதையோ கொடுத்தான். அவள் அதை வாங்கி விட்டு, ஒரு நிமிஷம் சார் என்று உள்ளே வந்து அந்த “பைல்”லை வைத்து விட்டு அர்ஜூன் வாலட்டை எடுத்து பார்த்தாள்.
எல்லாமே கார்டா வைச்சிருக்கியேடா? இப்ப எப்படி கொடுப்பது? என்று வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே நின்றவனோ வீட்டை பார்த்துக் கொண்டிருக்க,
அர்ஜூன் அருகே வந்து உற்று பார்த்தாள். அவன் கஷ்டப்பட்டு தூங்குவது போல் நடிக்க, அவனது பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தாள். ஒன்றுமேயில்லை.
அச்சோ..ஸ்ரீ உனக்கு மூளையே இல்லை. முன்னாடியே ஏற்பாடு செய்து விட்டு அவரை வர வைத்திருக்கலாம் என்று புலம்பிக் கொண்டு கையை பிசைந்து நின்றாள்.
அர்ஜூன் வேண்டுமென்றே இரும, அய்யோ..இவன் வேற என்று மறைந்து கொள்ள, அவன் அவனுடையை சட்டையை கழற்றி வைத்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.
ஏன்டா, இந்த குளுருல சட்டையை கழற்றி விட்டு தூங்குகிறான். எப்படி உன்னால தூங்க முடியுது? அவள் மீண்டும் புலம்ப,
அவன் சட்டையை பார்த்து எடுத்தாள். அதிலும் பணம் இல்லை. பின் பக்கம் திருப்பி பார்த்தாள். அதில் வைத்திருந்தான் அர்ஜூன்.
அர்ஜூன் “தேங்க்ஸ்” டா. என்னை காப்பாத்திட்ட. இல்ல அவன் என் மானத்தை வாங்கி இருப்பான் என்று அர்ஜூனிடம் வந்து அவசரமாக நெற்றியில் மெதுவாக முத்தம் கொடுத்து விட்டு வெளியே ஓடினாள்.
அர்ஜூன் எழுந்து நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு அந்த பைல் லை பார்த்தான். ஆனால் எடுக்காமல் ஸ்ரீயை பார்க்க சென்றான்.
அவள் அந்த ஆளிடம் பணத்தை கொடுக்க, அவன் வாங்கி விட்டு, மேடம்..உங்க ஆடை புது மாடலா என்ன? அழகா இருக்கே? என்று அவளை உற்று பார்க்க,
உன் வேலை முடிஞ்சது. உன்னோட பாஸ் இதையுமா பார்க்க சொன்னார்?
இல்ல மேடம். ஆனா எங்க பாஸ்க்கு உங்களை பிடிக்குமாம். நீங்க அழகா இருக்கீங்க? என்றவுடன் ஸ்ரீக்கு அர்ஜூன் நினைவு வர, அவள் ஜன்னல் பக்கம் பார்த்தாள். அவன் மறைந்து கொள்ள..
மேடம்..உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கவா?
ஓய்..என்ன? என்று அங்கிருந்த கல்லை எடுத்து அவன் மீது தூக்கி போட்டாள்.
ஓடி போயிரு. இல்ல கொன்றுவேன்.
மேடம்..நீங்க தேவதைன்னு நினைச்சேன். ஆனா நீங்க டெவிலும் தேவதையும் கலந்த கலவை.
அடிங்கோ..ஓடி போ..என்று அவனை திட்டிக் கொண்டே உள்ளே வந்தாள் ஸ்ரீ. அர்ஜூன் சிரித்துக் கொண்டே மீண்டும் பழைய இடத்திலே படுத்துக் கொண்டான்.
அர்ஜூனை பார்த்ததும் புலம்பலை நிறுத்தி, சோபாவை சுற்றி வந்து நின்று அவனை பார்த்தாள். மீண்டும் அவனருகே வந்து அர்ஜூன் அருகே அமர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
உன்னை பார்த்துக்கிட்டே இருந்தா இப்படியே உட்கார்ந்திருக்க வேண்டியது தான் என்று எழுந்து அவனது சட்டையை எடுத்து அவன் மீது போர்த்தினாள். பின் அவனுடைய ஓவர் கோர்ட்டை கழற்றி அவனுக்கு அனுவித்து விட்டு, அவனது சட்டையை இடுப்பிலிருந்து எடுத்தாள்.
அர்ஜூன் பின் படுத்திருக்க, ஸ்ரீ அவனது சட்டையை முகர்ந்து பார்த்து சிரித்தாள். அவன் அவளை பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்.
அவன் சட்டையை தோளில் போட்டுக் கொண்டு “பைல்” லை எடுத்து அறைக்குள் செல்ல,அர்ஜூன் அவள் கதவை மூடுவதற்குள் கதவை தள்ளி உள்ளே நுழைந்தான். ஸ்ரீ பயந்து போக அர்ஜூன் கதவை தாழிட்டான்.
ஸ்ரீ கொடு..என்று கேட்டான்.
அ..அ..அர்ஜூன்..அர்ஜூன்..நீ தூங்கலையா?
நான் தூங்குவது இருக்கட்டும். அதை கொடு என்று பைல்லை வாங்க வந்தான்.
அவள் அணிந்திருந்த ஆடை வேற மேற்பகுதி இறங்கியும்..கால் பகுதியில் ஏறியும் இருக்க அவள் சட்டையை வைத்து மறைத்துக் கொண்டு அர்ஜூன்..வெளிய போ. என் பக்கம் வராதே என்றாள்.
நீ பைல் லை கொடு. சென்று விடுகிறேன் என்றான்.
என்னால அதை யாரிடமும் தர முடியாது. உனக்கு மற்ற வேலைகள் நிறைய இருக்கு. நீ ஓய்வெடுத்து விட்டு அதை பாரு.
அவளை நெருங்கியவன் “பைல்”லை அவள் கையிலிருந்து பிடுங்கினான். அர்ஜூன் என்று அதை எடுக்கிறேன் என்று அவள் அவனிடம் வர, அவள் வைத்திருந்த சட்டை கீழே விழுந்தது. அவள் காலில் சட்டை மாட்டி அவன் மீதே சாய்ந்தாள்.
அவன் படுத்திருக்கும் போது ஆடை சரியாக தெரிந்திருக்காது. இப்பொழுது அர்ஜூன் அவளை பார்க்க,
அர்ஜூன் என்று அவன் மார்பில் கை வைத்து அவள் குனிந்து காலில் மாட்டிய சட்டையை எடுத்தாள். ஆனால் அர்ஜூனுக்கு அவளது அங்கங்கள் தெரிய ஏஞ்சல்..என்று கிரங்கி அழைத்தான்.
அவள் அவனை பார்க்க, அவன் கவனம் அவளது மேனியில் இருக்க, கையை இடையிட்டு மறைத்து திரும்பி அவன் சட்டையை அணிந்து கொண்டு திரும்பி அவனை பார்த்தாள். அர்ஜூன் பார்வை சரியில்லாது இருக்க, விலக எண்ணினாள். ஆனால் அவன் கையிலிருந்த பைல் லை வாங்க எண்ணி அவனிடம் சென்றாள். அவன் அவளது இடையில் கையிட்டு அவன் பக்கம் இழுத்தான்.
அர்ஜூன்..நோ..சாரி..ப்ளீஸ் விட்டுரு என்றாள். கையணைப்பில் இருந்த ஸ்ரீயை பார்த்துக் கொண்டு அவளது நெற்றி, கண்கள், மூக்கின் நுனியில் முத்தமிட, அவள் மெய் மறந்து அவனை பார்த்தாள். அவன் உதட்டை அருகே கொண்டு வந்தவன் வேகமாக அவளை கட்டிலில் தள்ளி அவள் எழாதவாறு ஒரு கையால் பிடித்தான்.
அர்ஜூன் என்ன செய்ற? விடு என்று கண்ணீர் வடித்தாள். அவளை பார்க்காது அர்ஜூன் அந்த “பைல்” லை திறந்து பார்த்தான்.
ராஜவேல் அனுப்பிய மாத்திரையின் விவரம் இருந்தது.
மாத்திரையா? அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான்.
அவள் கண்ணீருடன் இருக்க, அவளை மெதுவாக தளர்த்தினான். ஆனால் அவளை விடவில்லை. மறதிக்கான மருந்து. இதை தொடர்ந்து ஒரு வருடங்கள் எடுத்துக் கொண்டால் மறதி நோயே காணாமல் போய் விடும்.
இதனோடு சில வேதிய திரவத்தை சேர்த்தால் கிடைக்கும் போதை ஒருவன் உடல், மனம் இரண்டையும் ஆயுள் முழுவதையும் ஆட்கொண்டிருக்கும் என்று எதிரான புள்ளிகளாகவும் சேகரித்து வைத்திருந்தார் சிதம்பரம். நம் அகிலின் அப்பா. முழுவதையும் வாசித்த அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். அதனோட ஒரு பாக்சில் மாத்திரையும் இருந்தது.
ஸ்ரீயை விடுவித்த அர்ஜூன்..அந்த மாத்திரையை நுனி நாக்கில் வைத்தான். போதை மருந்து கலந்துள்ளது. அகில் அப்பா தயாரித்து இருக்கிறார்.
ஸ்ரீ இதை யாரிடமிருந்து வாங்கினாய்? அர்ஜூன் கேட்டான். ஸ்ரீயும் “பைல்”லை பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. அர்ஜூன் அதை எடுத்து பார்த்தான்.
“நான் கேட்டதற்கான நல்ல பதிலை கூறும்மா” என்று எழுதி இருந்தது.
ஸ்ரீ இது என்ன? என்று காகிதத்தை அவளிடம் காட்டினான். வாங்கி பார்த்த ஸ்ரீ அர்ஜூனை பார்த்து தயங்கினாள்.
அர்ஜூன் அது ஏதோ எழுதி இருக்காங்க. தெரியல அர்ஜூன் என்று மறைத்தாள்.
அமர்ந்து இருந்தவளை பிடித்து இழுத்த அர்ஜூன், யார் அனுப்பியது? கேட்டான்.
அன்று அவர் கூறியதை சொல்லி..அவர் தான் அனுப்பினார் என்றாள்.
அப்படியா? இதற்கு என்ன அர்த்தம்? என்று அவளது கையிலிருந்த காகிதத்தை பிடுங்கினான்.
அர்ஜூன்..ஒன்றுமில்லை. விடேன்.
சொல்ல போகிறாயா? இல்லை நான் அவரிடம் கேட்டுக் கொள்ளவா? கேட்டான்.
வேண்டாம் அர்ஜூன். அவரிடம் வேண்டாம் என்று பதறினாள் ஸ்ரீ.
அது வந்து..நீ எல்லார் முன்னும் “என் விருப்பமிருந்தால் என்னை திருமணம் செய்து கொள்ளவதாக சொன்னாயே?” உன்னை நான் வேண்டாமென்று நினைத்தால்..என்று நிறுத்தினாள்.
என்னை வேண்டாமென்று அவரை பண்ணிக்க சொல்லி கேட்டாரா?
இல்ல அர்ஜூன். அவர் மகனை பற்றி சொல்லி அவரை திருமணம் செய்ய சொல்லி கேட்டார்.
அர்ஜூன்..நான்..என்று தயங்கினாள்.
என்னை வேண்டாம்ன்னு அவர் மகனை கட்டிக்க போற..அதை வைத்து தான் இந்த விசயத்தை அவரிடமிருந்து வாங்கி இருக்க என்று கேட்டான்.
அர்ஜூன்..அப்படி எந்த டீலும் இல்லை. முடிந்தால் உதவ சொல்லி தான் கேட்டேன். அவர் அனுப்புகிறேன்னு சொன்னார். அதான் வாங்கினேன்.
அப்புறம்..உனக்கு சும்மா அவர் இவ்வளவு பெரிய விசயத்தை அனுப்புவாராம். ஆனால் எந்த டீலும் இருக்காதாம். இதை நம்ப நான் என்ன முட்டாளா?
அர்ஜூன்..நீ என்ன சொல்ல வர்ற? நான் அவர் மகனை திருமணம் செய்து கொள்கிறேன்னு சொன்னதால அவர் அனுப்பினார்ன்னு நினைக்கிறியா? என்னை வைத்து நான் இந்த விசயத்தை வாங்கினேன்னு சொல்றியா? ஸ்ரீ கண்கள் “பொலபொல” வென கண்ணீரை உதிர்க்க,
அவளை குளியலறையில் இழுத்து சென்று அவளை நெருங்கிய அர்ஜூன்..நீ நடந்ததை ஒன்று விடாமல் சொல்லணும் என்று அவளது கழுத்தை பிடித்தான். அவளால் ஆடையை சரி செய்ய முடியாமல் அழுது கொண்டே நடந்ததை அழுது கொண்டே சொன்னாள். நீ சொல்றத இப்பொழுது நம்புகிறேன். இப்ப செய்த திருட்டு வேலை போல் இருக்காதுல? கேட்டான்.
இல்லை என்று தலையசைத்தாள். அவளது கழுத்தை விடுவித்த அர்ஜூன் அவளது கை வலிக்கும்படி பிடித்து, மீண்டும் என்னை விட்டு செல்ல நினைச்ச..உன்னை காயப்படுத்தக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன் என்று மிரட்டல் விடுத்தான்.
அவள் விழிக்க, என்ன? அதட்டினான்.
அர்ஜூன்..என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றாள்.
ஸ்ரீ..ஸ்ரீ..என்று கோபப்பட்டான்.
அர்ஜூன்..என்று அவன் வாயில் கை வைத்து, பாப்பா தூங்குறா அர்ஜூன்.
ஸ்ரீ..ஏன் என்னை இப்படி வதைக்கிறாய்? என்னை ஏற்றுக் கொள்வதால் உனக்கு என்ன தான் பிரச்சனை?
நான் உன்னை காதலிக்கவில்லை என்று அழுதாள்.
வேண்டாம் ஸ்ரீ. என்னை சோதிக்காதே.
ப்ளீஸ் அர்ஜூன். இதை பற்றி இனி பேச வேண்டாமே?
அவளை கூர்ந்து பார்த்த அர்ஜூன், இனி உன்னிடம் எதையும் கேட்கவே கூடாது. என்னை மன்னிச்சிரு ஸ்ரீ என்று அவளை இழுத்து சவரின் கீழ் நிற்க வைத்து ஆன் செய்தான். அவள் ஆடையோ மிகச் சிறியது. ஆடை நனைய நனைய ஸ்ரீயை பயம் பிடித்துக் கொண்டது. அர்ஜூனும் நெருங்கி இருக்க கண்ணீருடன் நின்றாள்.
அர்ஜூன் அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான். அவள் கண்ணை மூடி அழுது கொண்டே நின்றிருக்க அவனால் அவளை கஷ்டப்படுத்த முடியலை. அவள் கண்ணீர் அவனை கலங்க வைத்தது. ஆனால் அர்ஜூன் அவளை விடவேயில்லை.
நீ சொல்லு ஸ்ரீ. உன் மனசுல இருக்கிறதை சொல்லு என்றான். அவள் மேலும் அழ,
அழுறத நிறுத்து. நான் உன்னுடன் பேசணும்ன்னு நினைச்சேனா சொல்லு. இல்ல வேண்டாம் என்று அவள் இதழ் தேனை பருகினான். அவள் கண்ணீர் நிற்க அவள் எதிர்ப்பும் காட்டாமல், முன்னும் வராமல் இருக்க அர்ஜூனிற்கு சினம் ஏறியது.
ஸ்ரீ திருமணம் வேண்டாம்னா? நாம “லிவ்விங் டூ கெதரில்” இருப்போமா? கேட்டான்.
அர்ஜூன்..என்று நகர்ந்தாள். அவளை இழுத்து, எது என்று முடிவெடு? என்று அவளை முத்தமிட தொடங்கினான். அசையாத பொம்மையாக நின்றாள் ஸ்ரீ. அவளை பார்த்து அவளை விட்டு விலகினான்.
அவள் பதில் கூறாமலிருக்க, அர்ஜூன் வெளியே வந்து ஆடையை எடுத்து வெளியே சென்றான். ஸ்ரீ அங்கேயே அமர்ந்து அழுதாள்.
என்னோட அர்ஜூன்? என்ன கேட்டு விட்டான்?
என்னால் அவன் வாழ்க்கை என்னாவது? இல்லை அர்ஜூன். உன் கோபம் வளரட்டும் என்று மனதினுள் நினைத்த ஸ்ரீ அழுது விட்டு வெளியே வந்து ஆடையை மாற்றி மருந்தை அவளாகவே போட்டுக் கொண்டாள். பின் வெளியே எட்டிப் பார்த்தாள். அர்ஜூன் அதே சோபாவில் கண்ணீருடன் படுத்திருந்தான்.
அவன் தலை ஈரமாக இருக்க, துவாலை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். சினத்துடன் தூக்கி எறிந்தான். அவள் எடுத்து வந்து அவன் தலையை துவட்ட அமைதியாக இருந்தான். அவள் கூந்தலின் நறுமணம் அவனை அழைக்க, அவளை பார்த்தான். அவனை பார்த்துக் கொண்டே கண்ணீருடன் துவட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் கையிலிருந்து துவாலையை வெடுக்கென பிடுங்கி, அவனாகவே துவட்டிக் கொண்டான். அவள் உள்ளே சென்று படுக்க, அர்ஜூன் உள்ளே சென்று அனு பக்கம் படுத்து அவளை கண்டுகொள்ளாமல் தூங்கினான். அவர்கள் அறைக்கதவு திறந்திருந்தது. ஸ்ரீ அவனை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள்.
ஹாஸ்பிட்டலில் தீனா அனைவரும் பேசியதை தூங்குவது போல் கேட்டுக் கொண்டிருப்பான். அவனை பற்றி யாரை எதையோ கூறி இருக்கிறார்கள். அதான் பேச்சு வேற மாதிரி போகிறது என்று அசையாமல் கவனித்துக் கொண்டிருந்தான். புவனாவின் நம்பிக்கை அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் அம்மாவும் துளசியும் நம்பவில்லை என்று புரிந்தது. அப்படி யார் என்ன தான் கூறி இருப்பார்கள்? என்று சிந்தனையுடன் இருந்தான்.
துருவனும் துளசியும் சென்ற பின் காவேரி..உள்ளிருந்த அறைக்குள் செல்ல, தீனாவை பார்த்துக் கொண்டிருந்த புவனா அவனை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள். பின் அவனை நிமிர்ந்து பார்த்து,
நான் உங்களை நம்புவேன். ஆனால் தயவு செய்து என் கண்முன்னே மட்டும் யாரிடமும் தவறாக நீங்கள் பேச கூட கூடாது என்று சொல்லி அவன் இதழ்களை ஒற்றி எடுத்தாள். பின் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் முகம் சுளிக்க, அவனது சட்டையை விலக்கி அவனுக்கு அடிபட்ட மார்பிற்கு கீழே அவளது கையை வைத்து கண்ணீர் வடித்தாள். அவள் கண்ணீர் அவன் மீது பட, கண்ணை திறந்து அவளை பார்த்தான்.
புவிம்மா..என்று அவன் அழைக்க கண்ணீருடன் அவனை பார்த்தாள்.
எதுக்கு அழுறம்மா?
ரொம்ப வலிக்குதா? என்று மீண்டும் அவன் மார்பில் கை வைத்தாள்.
உன்னோட வலிய விட இல்லம்மா என்று அவள் நெற்றி முட்டினான். அவள் அவனையே பார்க்க, என்னாச்சும்மா? கேட்டான்.
நான் உங்க பக்கத்துலயே இருக்கலாமா? கேட்டாள்.
இருக்கலாம். ஆனால் இப்ப முடியாதே. நான் கிளம்பணும். சில வேலைகள் உள்ளது என்று எழுந்து அமர்ந்தான். அவள் அவன் கையை கோர்த்துக் கொண்டு, நீங்க நாளைக்கு போறீங்களா? எனக்கு மனசே சரியில்லை.
இல்லம்மா..அர்தீஸை கண்டுபிடிச்சுட்டாங்களான்னு பார்க்கணும். இல்ல இன்னும் பிரச்சனை அதிகமாகும்.
மணிய பாருங்க ஒன்பதாகிறது. இந்த இரவிலா தேடப் போறீங்க?
ஆமாம். அவன் எவ்வளவு சீக்கிரம் பிடிபடுகிறானோ? அவ்வளவு நல்லது. நான் இங்க சில ஆட்களை விட்டு போகிறேன். நீயும் அம்மாவும் பத்திரமா இருங்க. கதவை நல்லா பூட்டிக்கோங்க. யாரென்று கேட்டு கதவை திறங்க..என்று நிறைய அறிவுரை கூற, புவனா தலையாட்டிக் கொண்டே இருந்தான்.
அவன் சிரித்து விட்டு, போதும் தலையாட்டுவதை நிறுத்து. பொம்மை தலையாட்டுவதை போல் உள்ளது என்று தீனா கேலி செய்தான்.
ஆமாடா. பொம்மை மாதிரி தலையாட்டுவா? பிரதீப் என்ன பண்றான்? போன் பண்ணல? அவன் வரவும் இல்லை கேட்டார் காவேரி.
பிரதீப் அம்மாவை நினைத்து அழுதது நினைவிற்கு வர, அம்மா..அவன் என்று தயங்கிய தீனா, அவனும் என்னை போல் ஓய்வெடுக்க தான் சென்றான். சாப்பாடு வாங்கிட்டு வாரேன் என்று அவன் வெளியே செல்ல,
காவேரி புவனாவிடம், அவன் ஏதோ மறைப்பது போல் தெரியுதுல? கேட்டான்.
இல்ல அத்தை. எனக்கு அப்படி எதுவும் தெரியல என்ற புவனா மனதிலும் அவன் தயக்கம் என்னவாக இருக்கும்? என்று சிந்தித்தாள்.
காவேரிக்கு பிரதீப் அம்மாவிடம் வெற்றி நடந்து கொண்டதது தெரிந்தால் என்னவாகும்? என்று தீனா மனதினுள் சினத்தை வைத்துக் கொண்டு, சாப்பாடு வாங்கி கொடுத்தான்.
காவேரி வாங்கி விட்டு, உனக்குடா? கேட்டார்.
இல்லம்மா. எனக்கு பசிக்கலை.
ஏன் பசிக்கலை? நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று தீனா கொடுத்த சாப்பாட்டை கீழே வைத்தாள் புவனா.
புவி..நீ சாப்பிடு என்றான் அதட்டலுடன்.
எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க என்று அவனிடம் தள்ளி வைத்தாள்.
நோ..நீ தான் சாப்பிடணும்ன்னு அவன் அவள் பக்கம் தள்ள, ரெண்டு பேருமே சாப்பிடுங்க என்று காவேரி பிரித்து தீனா கையில் கொடுத்து விட்டு, அவர் சாப்பாடு பாதியை எடுத்து அவர்களுடையதில் வைத்தார்.
அம்மா..அவன் அழைக்க, அத்தை..என்று புவனா அழைத்தாள்.
அவளுடைய அத்தையை கவலையில் முன் கவனித்திருக்க மாட்டான். இப்பொழுது தீனா புவனாவை பார்க்க, அத்தை நீங்க சாப்பிடாம எங்களுக்கு எதுக்கு வைக்கிறீங்க? நீங்க சாப்பிடுங்க என்று தீனா கையிலிருந்த சாப்பாட்டை வாங்கி காவேரி பங்கை கொடுக்க,
உங்க இருவருக்கும் இந்த சாப்பாடு பத்தாதும்மா. அதான் கொடுத்தேன் காவேரி கூற, அத்தை அவங்க இன்னொன்று வாங்கிட்டு வருவாங்க புவனா கூறி விட்டு, வாங்கிட்டு வாங்க என்று தீனாவை பார்த்தாள்.
அவன் இருவரையும் அதிசயித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன அப்படி பாக்குறீங்க? புவனா கேட்டாள்.
ஒன்றுமில்லை.
சீக்கிரம் போய் வாங்கிட்டு வாங்க.
தீனா புன்னகையுடன் வெளியே வந்து வாங்கினான். பின் புவனாவும் தீனாவும் ஒருவர் மாற்றி ஒருவர் ஊட்டி விட, காவேரி மகிழ்வுடன் அவர்களை பார்த்துக் கொண்டு..ஆவுடையப்பா..இந்த புள்ளைங்க பிரச்சனை ஏதுமில்லாமல் சந்தோசமா இருக்கணும் என்று வேண்டினார்.
பின் தீனா கிளம்பி பிரதீப் வீட்டிற்கு சற்று தொலைவிலிருந்து அவனுக்கு போன் செய்ய, பிரதீப்பை அணைத்து தூங்கிக் கொண்டிருந்த துகிராவை விலக்கி விட்டு வெளியே வந்து, அவன் ஆட்களை நிற்க வைத்து தீனாவிடம் சென்றான்.
பிரதீப் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது துருவன் அங்கே வந்து, செய்தியை பற்றி கூறி கேட்டான். அவனையும் அப்பத்தா அங்கேயே சாப்பிட வைத்து விட, சாப்பிட்ட பின் இருவரும் பேசினார்கள்.
துருவா..இதுல நீ தலையிட வேண்டாம்னு பிரதீப் கூற,
அண்ணா..அம்மா அர்ஜூன் அண்ணாவிடம் பேசியே ஆகணும்ன்னு பிடிவாதமா இருக்காங்க. அவங்க எதை பத்தி பேசப் போறாங்கன்னு தெரியல. ஆனால் அண்ணா..இப்ப பிரச்சனை நேரத்தில் அம்மா பேசுவதை நிராகரித்தால் அவங்க நேரா சென்னைக்கே கிளம்பிடுவாங்க.
அண்ணா..அப்புறம் ஸ்ரீ அக்கா அம்மா, அப்பாவை கொன்னுட்டாங்களா? அவன் கேட்க, அப்பத்தா அதிர்ந்து
என்னப்பா கேட்குற?
ஆமா..அவங்கள கொன்னுட்டாங்க. ஸ்ரீ தான் எப்படியோ தப்பிச்சிருக்கா. அவளையும் கொல்ல தான் பாக்குறாங்க. அவ நம்ம ஸ்ரீ மாதிரி இல்லை. ரொம்ப வீக்கா இருக்கா. அர்ஜூன் தான் எல்லாத்தையும் பார்க்கிறான் பிரதீப் கூற, நெஞ்சில் அடித்துக் கொண்டு அப்பத்தா அழ, துளசியும் துகிராவும் அவரிடம் வந்தனர்.
அண்ணா..அந்த கொலைகாரன் யாருன்னு? ஏதாவது தெரியுமா?
இல்ல துருவா. நான் சொல்றேன்ல. பிரச்சனைய நாங்க பார்த்துக்கிறோம். நீ அம்மாவ பார்த்துக்கோ.
அண்ணா..அர்தீஸ் கிடைச்சுட்டானா? ஜானு எப்படி இருக்கான்னு பேசுனீங்களா? துருவன் கேட்டான்.
ஜானுவா..ஜானுவுக்கு என்ன? பிரதீப் பதறினான்.
அண்ணா..என்று தயங்கி அப்பத்தா, துளசி, துகிராவை பார்த்தான். பின் நடந்ததை கூறினான்.