அத்தியாயம் – 8 

ஜிங்டெஜென் (Jing De Zhen) மலைக் காடுகளுக்கிடையில் இருக்கும் ஒரு சிறு ஊர். பல நூறு ஆண்டுகளாக வெங்களிப் பொருட்கள் செய்வதில் சீனா முழுவதும் பிரபலமாக இருந்தது. அங்கிருந்த வெங்களிச் சூளைகளை அரசாங்க கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு பிரசித்தி பெற்றதாக இருந்தது. அங்கே உற்பத்தியாகும் மிகச் சிறந்தவை நேரடியாக மன்னர் மாளிகையின் உபயோகத்திற்காக கொள்முதல் செய்யப்படும். 

கெளலின்(Kaolin) எனப்படும் வெண்களி மண் வெங்களிப் பொருட்கள் செய்ய தேவைப்படும் மூலப் பொருள். இதனோடு இன்ன பிற பொருட்கள் சேர்த்து சூளையில் உயர் வெப்பத்தில் உரிய காலம் வைத்து எடுக்கும்போது, ஒளி கசியும் தன்மையோடு மெருகேறி வெண்மை நிறத்தோடு வெளிவரும். ஒரு முறை சுட்டெடுத்து ஆறிய பின், அரபு நாடுகளிலிருந்து வரும் வான் நீல வேதி பொருள் தண்ணீரில் கலந்து மெல்லிய தூரிகைகள் கொண்டு ஓவியங்கள், மலர் கொடிகள், முகமதியர்கள் விரும்பும் முத்திரைகள் போன்றவை தீட்டப்பட்டு அலங்கரிக்கப்படும். இது மீண்டும் ஒரு முறை சூளையில் வைத்து எடுக்கப்படும்போது கண்கவர் உயர் ரக சீன வெங்களி பொருட்கள் உருவாகும். பல ஆயிரம் ஆண்டுகளாக செப்பனிடப்பட்டு வந்த கலை  யூவான் பேரரசின் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது எனலாம். 

உற்பத்திப் பொருட்கள் மெல்ல மற்ற இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே சாலைகள் தோன்றின. குவான்சாவ் துறைமுகம் வந்து, அங்கிருந்து பல தூர தேசங்களுக்கு நாவாய்களில் பயணிக்கும் வெங்களிப் பொருட்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையுடையது. அதனால், துறைமுகம் அருகேயே உற்பத்தி இருந்தால் சேதம் குறைவு என முளைத்த சாலைகளில் ஒன்று ஷீ அமைத்தது. கௌலின் மண் ஆறுகள், பட்டுப்பாதை என்று ஜிங்டெஜெனிலிருந்து பயணப்பட்டு வந்து சேரும்.  

வெங்களிச் சாலையில் அதி முக்கியமானது சூளை.  மரக் கட்டைகளை   நெருப்பிலிட்டு உயர் வெப்பம் உருவாக்கி, அதை குறையாது குறிப்பிட்ட கால அளவு பாதுகாத்து, படிப்படியாக குளிர்வித்து பொருட்களை சுட்டெடுப்பதில் பலவித சூட்சுமங்கள். அதை சரியாக செய்யாவிட்டால், சூளையில் வைத்த பொருட்கள் அதிக சூட்டில் உடைந்தும் போகலாம், போதிய வெப்பம் சீராக பரவாததில் வெங்களி சரியாக வேகாது அதன் தன்மையையும், வெண்மையையும் கிட்டாது போகலாம். அப்படி ஆகும் பட்சத்தில்  நட்டமே மிஞ்சும். 

மெய் லிங்கின் தந்தை இளமை பருவத்தில் பல ஆண்டுகள் ஜிங்டெஜென்னில் வெங்களி ஆலைகளில் பணிபுரிந்து அதன் பல பரிமாணங்களையும் கற்று தேர்ந்து வந்தவர். அதை மகன்களுக்கும் மருமகன் ஷீக்கும் பயிற்றுவித்தார். அவரது செல்வப் பிள்ளைகளுக்கு அனல் ஆகாததில், செய்முறையில் ஆர்வம் இல்லை. வேலை ஆட்களைக் கொண்டு செய்துவிடலாம் என்ற அளவில் நின்றுவிட்டனர்.  

ஷீ மட்டுமே ஆர்வத்தோடு  நெருப்பின் தன்மையும் அனலை ஓரளவேனும் கட்டுப்படுத்தும் நுட்பத்தையும் மாமனாரின் தோளோடு தோள் நின்று கற்றதோடு மட்டுமன்றி அதில் அவனது அறிவையும், கற்றவர்களின் அனுபவத்தைக் கொண்டும் பரீட்சித்து மெருகேற்றினான். 

அவனது ஆர்வம் ரூயூனிடமும் இருந்தது. எப்போது நெருப்பின் அளவை ஏற்ற வேண்டும், எப்போது குறைக்க வேண்டும் என்ற நுண்ணுர்வும் இயற்கையாகவே இருந்தது. 

டாங்ஜின்னில் ஷீக்கு  சொந்தமான வெங்களிச் சாலையில் மூன்று மிதமான அளவு சூளைகள் இருந்தன. மூன்றுமே வேறு வேறு வெப்ப நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும். 

அதில்லாது, நீலமும்,  சமீப காலமாக ரூயூன்  நீலம் மட்டுமன்றி மஞ்சள், சிகப்பு வர்ணங்களையும் வெங்களிப் பொருட்களில் வரைந்து உருவாக்க முயன்று வருகிறாள். ஒரு முறை சுட்டெடுத்த வெங்களியில் இருபது பேர்  தாராளமாக அமர்ந்து பொருட்களில் வரைவதற்கு தோதான காற்றும், வெளிச்சமும் நன்கு வரும்படியான ஒரு பெரிய கொட்டில்.  சற்றே தள்ளி தனித்து ஒரு அழகிய குடில். பொருள் வாங்க வருபவர்களை வரவேற்று பேசி, அங்க உற்பத்தி செய்யப்படும் பொருட்களை காண்பித்து விலை பேச, விருந்தோம்ப அமைக்கப்பட்டிருக்கும். 

இவையல்லாது கண் மறைவில் உற்பத்திக்குத் தேவையான பொருட்கள், எரிபொருள், மரக்கட்டைகள் வைக்க என்று தனித் தனியாக கிடங்குகள் இருந்தன.  

உற்பத்தி செய்யப்பட்ட வெங்களிப் பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், ஏற்றுமதி செய்ய உடையாது  முறையாக வைக்கோல் சுற்றி கட்டிவைக்க என்று மேலும் இரு கொட்டடிகள் இருந்தன. 

அனேக வெங்களிச் சாலைகளில் இவை அனைத்தும் இருக்கும். அளவுகள் மாறுபடலாம், தனித் தனியாக இல்லாது ஒரே கொட்டடி பலவற்றுக்கு உபயோகப்படலாம். 

மாமன்கள் புடை சூழ வந்த ரூயூனை சாலை மெய்க்காவலனும், மேற்பார்வை அதிகாரியும் வரவேற்று அழைத்துச் செல்ல,  

“ரூயூன், நீ வணிகர் குடிலில் ஓய்வெடு. நாங்கள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வருகிறோம். உனக்கு சிரமம் வேண்டாம்”, என்று மிங் அவளை அனுப்பிவிட்டார். மறு பேச்சு பேசாது ரூயூனும் குடிலுக்கு வந்து அமர்ந்து கண்களை மூடி ஓய்வெடுக்கத் தொடங்கினாள். 

இரண்டு நாழிகைகள் கடந்திருக்க, வெளியில் அரவம் கேட்டு எழுந்து அமர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மாமன்கள் உள்ளே நுழைந்தனர். 

“மாமா…தே நீர் எடுத்து…”, ரூயூன் ஆரம்பிக்க, 

“ஓன்றும் வேண்டாம். சாலை என்ன நிலையில் இருக்கிறது என்றாவது தெரியுமா உனக்கு? உன் தந்தை ஈட்டிய பணத்தை தொலைத்து நிற்கிறான். இந்த சாலை மூழ்கிக்கொண்டிருக்கிறது!”, என்று இரைந்தான் மிங். 

கவலையும் ஆச்சரியமும் கலவையாக முகத்தில் தெரிய, “என்ன மாமா சொல்கிறீர்கள்? தந்தை என்னிடம் எதுவும் கூறவில்லையே?”, என்று மேற்பார்வை அதிகாரி ஆன் ரென்னிடம் பார்வையால் வினவினாள். 

 நரையோடிய மெல்லிய தாடியை வருடியவர், “மகளே உன்னை கலவரப்படுத்த வேண்டாம் என்று ஷீ சான் கூறியாதால் நான் எதுவும் சொல்லவில்லை.  இந்த ஆண்டு தொடக்கத்தில் நாம் அரபு நாட்டுக்கு சரக்கு ஏற்றி அனுப்பிய மரக்கலன் புயலில் மூழ்கிவிட்டதென தகவல் வந்ததல்லவா? அதில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீள முடியவில்லை.”, என்றார் வருத்தமாக. 

புருவம் சுருக்கி யோசித்த ரூயூன், “ஆனால், திரும்பவும் நாம் அவர்களுக்கு அனுப்பினோமே?”, என்று கேட்டாள். 

“ஆம், ஆனால் அதற்கு மீண்டும் நாம்தானே செலவு செய்தோம்? இழந்த சரக்கிற்கு வரவு இல்லையே மகளே”, என்றார் அவளுக்குப் புரியும்படியாக. 

இந்த விளக்கமெல்லாம் மீண்டும் கேட்கப் பிடிக்காதவனாக டாங், “இவளுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியாது. இப்போது ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்”, என்று இடைபுகுந்தான். 

“அதைத்தான் பார்த்தோமே! ஏற்றுமதிக்கென வெங்களிப் பொருட்கள்  சொற்பமாகத்தான் இருக்கிறது. புதிதாக செய்ய வெங்களிமண் கையிருப்பும் குறைவாக இருக்கிறது. வேலையாட்களுக்கு கூலி தர காசும் குறைவு. சாலையை யாரிடமாவது விற்றால்தான் ஏதாவது தேறும்!”, என்றான் செங். 

“நலிந்து போன இந்த சாலையை நடத்துவதற்கு நம் சாலையை நடத்திவிட்டுப் போகலாம்”, என்று முணுமுணுத்தான் டாங். 

அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் ரூயூன். 

“உன் திருமணத்திற்கென்று உனக்கு ஆபரணங்கள் , பொன் எதுவும் வாங்கியிருப்பானே. அதெல்லாம் எங்கே வைத்துள்ளாய்? எத்தனை இருக்கும்?”, மிங் கேட்கவும், 

“அது தந்தையின் பாதுகாப்பில்தான் இருக்கும் மாமா. நான் வேண்டும்போது என்னிடம் தருவார், பின் வாங்கி பத்திரப்படுத்திவிடுவார்”, அச்சம் தோய்ந்த குரலில் பதில் வந்தது. 

“இத்தனை விஸ்தாரமாக சாலையை அமைத்துவிட்டு, இப்படியா கோட்டைவிடுவான் ஷீ? மரக்கலன் ஏற்றியபின் பொறுப்பை வாங்குபவனிடமல்லா தந்திருக்க வேண்டும்? என்ன ஒரு மடத்தனம்? இதில் சாலையின் வரவு செலவு கணக்கும் அவனிடம், மகளின் திருமண செல்வமும் அவனிடம். சே!”, என்று அலுத்துக்கொண்ட மிங், 

“ஷீயின் அறையில் சென்று தேடுவோம். சாலையை நடத்த உன் நகைகள் வேண்டும் ரூயூன். போகலாம் வா”, என்று கிளம்பினான். 

அமைதியாக சென்று பல்லக்கில் ஏறிக்கொண்டாள். இல்லம் திரும்புகையில் வழியிலேயே அவர்களை புரவியில் எதிர்கொண்டான் மாறன். நேராக பல்லக்கின் அருகில் வந்தவன், “உன் தந்தையின் உடல் சற்று கவலைக்கிடமாக இருப்பதாக சொல்கிறார் மருத்துவர்.  விரைவாக வரவேண்டும் தேவி!” எனவும், அடுத்த சில நிமிடங்களில் இடம் பரபரப்பானது. மாறன் வந்த புரவியில் அவனுடன் ஏறியவள் தான் வேகமாக முதலில் செல்வதாக சொல்லி அவர்கள் எதுவும் பேசும் முன்னர் பறந்துவிட்டாள். 

“என்ன நடந்தது சாலையில்?”, என்று மாறன் கேட்க, “எதிர்பார்த்தபடியே சென்றது”, என்பதோடு முடித்துக் கொண்டாள். 

இணக்கமாக, நெருக்கமாக ரூயூனுடன் வருவது இதமாக இருந்தும் சூழல் கருதி மனதை இறுக்கினான் மாறன். 

ரூயூனின் மாளிகையை அடைந்தது, இறங்கி சிட்டாய் பறந்துவிட்டாள். மாறன் மெதுவாக புரவியை  வீட்டின் பின்புற லாயத்தில் விட்டு வரும் நேரம் ரூயூனின் மாமன்கள் வந்து சேர்ந்தனர். 

வந்து இறங்கியதும் மிங் கோவத்தோடு அங்கிருந்த சேவகனை வினவ, அவன் கூறிய பதிலில் மாறனை முறைத்துவிட்டு உள்ளே சென்றான். 

சாலைக்கு வருவதை தவிர்த்து ஸீ சாயை வீட்டிலேயே விட்டுச் சென்றதில் முறைத்துக்கொண்டு அமர்ந்திருதவனை  வல்லபன்  நெருங்கி பேச்சுக் கொடுத்தான். 

முதலில் அலட்சியம் செய்தவன், வல்லபன் பேசியதை கேட்டு சற்று இணக்கமானான். வல்லபன் மாறனைத்தான் குறை கூறிக்கொண்டிருந்தான்.  

“இவன் இப்படி கல்யாண நோக்கோடு வந்திருப்பதே தெரியாது ஸீசாய். என்னிடம் வெங்களி பொருட்கள் கொள்முதல் செய்து  செல்வோம், அதை விற்று செல்வம் ஈட்டுவோம் என்றதாலேயே வந்தேன்”, என்று புலம்புவதைப் போல ஆரம்பித்து,  

“அங்கே அவனுக்காக ஒருத்தி காத்திருக்கிறாள். அதை விடுத்து இவன் இங்கிருக்கும் வளத்தைக் கண்டு மனதை மாற்றிக்கொண்டு இருக்கிறான். ரூயூன் இவனோடு வரமுடியுமா, அல்லது அவன் குடும்பத்தை விட்டு இவந்தான் இங்கேயே இருந்துவிட முடியுமா?” 

“…” 

“நான் அவனிடம் பேசிக் களைத்துவிட்டேன். நீங்களாக அனுப்பிவைத்தால் பலரது வாழ்வு வளப்படும்”, என்று சீனத்தில் வார்த்தைகளை தேடித் தேடிப் பேசி முடிக்க, ஸீசாய் முகத்தில் பெரியதொரு புன்னகை. 

“ஆம். அவன் மணமுடிப்பதென்பது ஆகாத விஷயம்.  ரூயூனிடம் நீயும் பேசு. நானும் கூறுகிறேன். அவளால்தான் இவனை விட்டு வைத்திருக்கிறோம். இந்த மாமா வேறு தேவையின்றி அதாரம் கேட்டு, அவன் அந்த கழுத்தணியைக் காட்டியதுதான் ரூயூனை மேலும் நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது”, ஸீசாய் வல்லபனுக்கு புரியும் வகையில் நிறுத்தி நிதானமாகப் பேசினான். 

“நீ ரூயூன் குடும்பத்திற்கு உறவா ஸீ?”, நட்புக்கொடியை படரவிட்டு ஸீசாயின் வாயைக் கிளறினான். 

பேச்சோடு பேச்சாக, கள் அருந்தி எத்தனை நாளாகிவிட்டது. இங்கே கிடைக்குமா என்று கேட்டு, ஸீயுடன் கிளம்பி கள்ளருந்தச் சென்றுவிட்டான் வல்லபன். 

ரூயூன் பரபரப்பாக உள்ளே வரவும், “ஆயி? எல்லாம் முடித்துவிட்டீர்களா?”, என்று கேட்க, 

“நீ சொன்னபடி எல்லாம் செய்தாகிவிட்டது ரூ”, என்றார் மிமி.