Advertisement

ஓம் நமச்சிவாய..

 வீணை 11

 பாரதிக்கோ வீட்டில் அவனுடைய லோட்டஸின் பாரா முகத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. வருடக்கணக்காக ஒருவரையொருவர் பார்த்து காதலித்து கட்டிப்புரண்டு பீச் பார்க் போன்ற இடங்களுக்கு சுற்றி திரிந்து மணி நேர கணக்காக கைபேசியில் கடலை போட்டு.. அலுத்து சலித்த காதலில்லை அவர்களது பந்தம்..

அது புனிதமான ஒன்று அவர்கள் இருவருக்குமே தனிபட்ட அழகிய பூந்தோட்டம் போன்றது அவர்களின் பந்தம்..

 எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் குழந்தையை அவள் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொல்லாமல்.. அவர்கள் அவளின் தாயை அவளுக்கு மீண்டும் திருப்பி தந்த அந்த நன்றியை மறக்காமல் அவளே பொறுப்பெடுத்துக் கொண்ட அவளது உயர்ந்த குணமாகவும் இருக்கலாம்.. அவளைப் பார்த்தவுடன் அவளது வசீகரமான சிரிப்பாவும் இருக்கலாம்.. அல்லது அவனுடைய தாயை மதிக்கும் பெண்ணை திருமணம் செய்ய நினைத்திருந்தான் பாரதி..

அதே போன்று செல்வி அவளின் தாயின் உடல் நலத்திற்காக அவளது எதிர்கால வாழ்க்கையின் பாதிப்பை நினைக்காமல் இவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுத்த அவளுடைய அன்பு, துணிச்சல் போன்ற குணங்களும் அவன் நினைத்தது போன்று அவள் இருந்ததாகவும் இருக்கலாம் அவனை இவளின் பக்கம் திருப்புவதற்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம் ….

 அவனுடைய எதிர்பார்ப்பற்ற ஆத்மார்த்தமான காதலும் அன்பும் அவளிடம் வைத்திருக்கிறான்..

 அப்படியாப்பட்ட அவனை நம்பாமலும் புரிந்து கொள்ளாமலும் அவனுக்கு முகம் காட்ட மறுக்கும் அவளது கோபத்தை தாங்க முடியாமல் மனது வலித்தாலும் அதையும் மதித்தான் பாரதி…

 அவனுக்கே தெரியாத விஷயத்தை அவள் அவனிடம் கேட்டு சண்டையிட்டாலும் அதை அவன் தவறாக நினைக்கவில்லை.. ஏனென்றால் அவனுக்கு தெரியும் அவளின் தற்போதைய மனநிலை..

அவள் வாடகைதாயாக குழந்தையை சுமக்க ஒத்துக்கொண்டபோது.. யாருடைய குழந்தை என்ன ஏது என்கின்ற எந்த தகவலும் அவளுக்கு சொல்லப்படவில்லை… நாமும் இதை கேட்கவேண்டுமா? என்றும் செல்விக்கு தோன்றவில்லை.. அவளுக்கு தெரிந்தது ” நாம அவங்களுக்கு குழந்தை பெத்துக்கொடுத்தால் அவங்க நம்ம அம்மாவை காப்பாத்துவாங்க.. அப்போ சரி..” என்று நினைத்து முடிவெடுத்து சம்மதித்தாள்..

அப்படி இருக்கும் போது குழந்தை உருவாக காரணமாக இருந்தவர்கள் விமான விபத்தில் இறந்துவிட்டார்கள்.. என்று டாக்டர் கூறியதும்.. இனி குழந்தை அவளின் பொறுப்பு என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் செல்வி..

அதன் பின் யாரென்று தெரியாத அவன் அவளின் இந்த நிலையிலும் பெண்பார்க்க வந்தது.. திடீர் திருமணம்.. இரட்டை குழந்தை.. பிறந்த குழந்தை அவனைபோன்று இருந்தது.. என அவளுக்கு பல குழப்பங்கள்.. இறுதியில் அவன் உட்பட யாருமே அவளுக்கு நியாயம் செய்யவில்லை…

அப்படி இருக்கும் போது அவளின் கோபத்தை அவன் மதிக்காமலோ..! அல்லது கோபமே அவளுக்கு வராமல் இருந்திருந்தாலோ!.. அது தான் தவறு..

அவளின் கோபம் தவறே இல்லை பாரதிக்கு.. அதனால் அதை மதித்து உண்மையை தேடி அலைகிறான் பாரதி…

 வேலையில் எவ்வளவு நேர்மையாகவும் துணிச்சலோடு கராராக குற்றவாளியை கோபத்தோடு பந்தாடுவனோ!.. அந்த அளவிற்கு வீடு என்று வந்தால் அர்ச்சனாவின்செல்லம் கொஞ்சும் குழந்தை ஆகிவிடுவான் பாரதி கிருஷ்ணா..

 அவனது லோட்டஸின் இந்த கோபத்தை உண்மையை கண்டுபிடித்து அவளுக்கு அவனின் மீது தவறு இல்லை என உணர்த்தி அவளோடு நெருங்கும் இந்த தருணத்தை அந்த கேடுகெட்ட அமைச்சர் கோதண்டத்தின் கேஸ் அவனை தடுத்து நிறுத்திய கோபத்தில் கோதண்டத்தை வெட்டி புதைக்கும் ஆத்திரத்தில் மீண்டும் காக்கிச்சட்டையை போட்டுக்கொண்டு டிசிபி- யாக கம்பிரத்தோடு வேட்டையாடச்சென்றான் பாரதிகிருஷ்ணா..

கோதண்டம் அந்த கட்சியிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவன்.. அவனது ஆதரவும் வாக்கும் அந்த கட்சிக்கு கட்டாயம் தேவைபட்டதால் அவனது ஊழல்களை கட்சித் தலைவரும் ஏனையவர்களும் கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்கள்..

 அந்த துணிவே அவனின் பலம் ஆகியது.. முதலமைச்சரே அவனின் கையில்.. யார் அவனை கேள்வி கேட்கவோ தடுக்கவோ முடியும் என்ற ஆணவத்தில் அதிகமாக ஆடினான்..

 ராமு பாரதிக்கு பணம்கொடுத்து அவனை விலைக்கு வாங்கிவிட்டோம்.. அவனும் இனி நம் கையில் பயம் இல்லாமல் தொழில் செய்யலாம் என்று கோதண்டத்தை ஏற்றிவிட்டான்..

 இது அனைத்தும் சேர்ந்து தோண்டத்தை திமிரில் ஆட்டம் போட வைத்தது.. அதை அடக்க பாரதி அவனை தேடிச்செல்கின்றான்..

பாரதி நினைத்திருந்தால் ஆதரத்தோடு அனைத்தும் ரெடிபண்ணி ஐஜியிடம் ஒப்படைத்து விட்டுத்தான் ஐந்து நாள் மனைவியின் முதல் பிரசவத்திற்கு லீவ் வேண்டும் என்று கேட்டு லீவில் சென்றான்..

அதை பதமாகவும் பக்குவமாகவும் ஹேன்டில் பண்ணலாமல் எடுத்தோம் கவுத்தோமென டீல் பண்ணி அவனை உசார்படுத்தி தப்பிக்கவைத்துவிட்டார்கள்.. இதை காரணம் காட்டி அவன் இந்த கேஸை மீண்டும் கையில் எடுக்காமல் விடலாம்.. அவனை யாரும் கேள்வி கேட்டமுடியாது.. ஏனென்றால் அவனின் வேலை முடித்துவிட்டு ஐஜியின் அனுமதி கிடைத்தபின் தான் லீவ் அப்ளே பண்ணினான்.. தற்போது என்னவென்றால் லீவை கேன்ஷல் பண்ணி இரண்டே நாளில் மீண்டும் அதே கேஸை கையில் கொடுத்து டியூட்டியில் ஜாயின்ட் பண்ணச்சொன்னால்.. அவன் முடியாது என மறுக்கலாம்.. ஆனால் பாரதி அவ்வாறு பொறுப்பற்ற செயலை பண்ணவில்லை… கடமை அழைக்கவும் மீண்டும் இதோ ஐஜி-யை சந்திக்கச்செல்கிறான் பாரதிகிருஷ்ணா..

பாரதி அங்கு சென்றதும் ” சாரி மிஸ்டர் பாரதி.. உங்களை டிஸ்ட்ரப் பண்ணிட்டோம்.. இனி இப்படி தவறு நடக்காது.. இந்த முறை நீங்க இந்த கேஸை என்னோட ரிக்வெஸ்ட்டாக எடுத்து முடிச்சி தர வேணும்..” என்றார் ஐஜி.

” ஐயோ சாரி எல்லாம் வேணாம் சார்.. நான் கண்டுபிடிக்கிறேன்.. ” என்று கூறி நேரத்தை கடத்தாமல் ஐஜி-க்கு சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் பாரதி..

அதிரடி போலீஸ் அவதாரம் எடுத்து மூர்த்திக்கு அழைத்து ” இன்னும் பத்து நிமிசத்தில் கேஸ் விசயமாக வெளியே போகவேண்டும் டீமை ரெடி பண்ணு..” என்றான்..

அவனோ மகிழ்ந்து ” ஸார் திரும்ப வந்துட்டீங்களா?.. சூப்பர்.. ஓகே சார் ரெடி பண்ணுறேன்..” என்று உற்சாகமாக கூறி வைத்துவிட்டான்..

அதன் பின் அங்கிருந்து கிரைம் பிரான்ச் சென்றான்பாரதி..

 அங்கு அவனுக்கு தெரிந்த ஒருவரை வைத்து கோதண்டத்தின் அனைத்து நெட்வொர்க் கைபேசி அழைப்புகளையும் சேர்ச் பண்ணினான்…

 அதில் அவன் இன்று காலை 4 மணியளவில் ஒரு நம்பருக்கு அழைத்து பேசியிருக்கிறான் என்ற அந்த தகவல் கிடைத்தது.. அதனைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்..

 அவனின் கைபேசி இறுதியில் காட்டிய சிக்னலுக்கு பாரதி அவனது டீமை அழைத்துக்கொண்டு சென்றான்..

கோதண்டம் கிருமினல்களுக்கும் அப்பன்.. இப்படி ஒரு இல்லிகல் வேலையை செய்பவன் ஒரு கைபேசி மட்டுமே வைத்திருப்பானா?.. என்று நினைக்காமல் பாரதி அவனை தேடி அங்கு சென்றான்..

 ஆனால் அவனோ கைபேசி கடையே வைத்து இருந்தான்..

 வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளுக்கான பால்மா மற்றும் சாக்லேட்.. அவர்கள் அருந்தும் கூல் ட்ரிங் வகைகள்.. என குழந்தைகள் சம்மந்தமான உணவு பொருட்களை

தரம் குறைவான கலப்படம் நிறைந்த உணவு வகைகளை இறக்குமதி செய்திருக்கிறான்..

அதை கிரமபுற ஊரில் உள்ள சின்ன பெட்டிக்கடைகளுக்கு அதிகம் சப்ளை பண்ணியிருக்கிறான்.. பாமர ஏழை மக்கள் உணவின் தரம் காலவரையறை அப்படி எதுவும் பார்க்காமல் அங்கு கிடைப்பதை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.. அதைப் பயன்படுத்தி கோதண்டம் நன்கு பணம் சம்பாதித்து கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்துள்ளான் ..

 சிலகாலமாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் வாந்தி சோர்வு தன்மை. மயங்கி விழுவது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை அழைத்து வருகிறார்கள்..

 இது தொடரவும் அவர்களை பரிசோதித்த மருத்துவர் எதனால் இவ்வாறு நடக்கிறது என ஆராய்ந்தார்..

 ஆராய்ச்சியின் முடிவில் அதிர்ச்சியாகி விட்டார்.. இந்த கலப்பட உணவு வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் சேர்ந்து நஞ்சாக மாறி குழந்தைகளின் வளர்ச்சி தன்மையை குறைத்து பாரிய பக்கவிளைவை ஏற்படுத்தும் என தெரிந்துகொண்டார்..

 இதை உடனே தடுக்காவிட்டால் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை பாரிய இழப்பை சந்திக்க நேரிடும் என உணர்ந்து அந்த ரிப்போர்ட்டை யும் குழந்தைகளின் பாதிக்கப்பட்டோரின் இரத்த மாதிரி அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவரே நேரடியாக ஐஜி யை சந்தித்தார்..

 அவரும் அதைப்பார்த்து அரசு மருத்துவர் ஒருவரிடம் அதை பரிசோதிக்கச் சொன்னார்… அவரின் முடிவும் இந்த டாக்டரின் முடிவும் ஒன்றாக இருப்பதால் அவரே கமிஷனரிடம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்..

 அந்த நேரம் கமிஷனரும் கோதண்டத்திடம் பணம் வாங்கும் கையாளாக இருந்தார்.. அதனால் அவர் இந்த கேஷில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை..

ஐஜி கேட்டால் முதல் அமைச்சரின் தலையீடு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி தப்பித்து விடுவார்.. சென்னை ஐஜி -யின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் டெல்லி ஐஜி பாரதியை சென்னை அனுப்பினார்…

 இதோ அவனிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்றாவது கேஸ் இது.. பாரதி அனைத்தையும் ஆதாரத்தோடு மிகவும் கவனத்துடனும் கோதண்டத்தின் ஏற்றுமதி-இறக்குமதி களை கண்காணித்து கண்டுபிடித்துள்ளான்..

 இது அனைத்தும் உண்மை என்று அடித்து சொல்லும் படி இருந்தது ஆதாரம்.. அதை கண்டுபிடித்ததும் பாரதி இந்த கேஸில் இருந்து விலகிவிட்டான்.. என தெரிந்ததும் அந்த இன்ஸ்பெக்டருக்கு பணம் கொடுத்து கோதண்டம் அவனைத் தாக்குவது போன்று நாடகமாடி தப்பித்து சென்று விட்டான்…

 அன்று மதியம் வீட்டிற்கு வந்தான்

 அவன் வந்தபோது குழந்தைகள் ஹாலில் உள்ள தொட்டிலில் இருவரும் அருகே படுத்து இமைமூடி செப்பு வாய் திறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்… தொட்டிலை சுற்றி கொசு வலை போட்டிருந்தார்கள்..

 அவர்களுக்கு காவலாக அர்ச்சனாவும் யசோதாவும் இருந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்..

அப்போது தான் உள்ளே வந்தான்..

 சோர்ந்து களைத்து வந்த மகனை பார்த்து ” வா கண்ணா சாப்பிட்டியா?.. ” என்றார் அர்ச்சனா அக்கறையோடு..

” இல்ல அச்சும்மா ரொம்ப பசிக்குது பக்கத்துல தான் வேலையா இருந்தேன் அது தான் வீட்டுக்கு வந்தேன்.. சாப்பாடு தாங்க.. ” என்று கூறிவிட்டு கை கால் கழுவ சென்று விட்டான்..

 அர்ச்சனாவும் மகனின் பசி என்ற ஒரு வார்த்தையில் துரிதகதியில் உணவோடு அவனுக்காக சாப்பாட்டு மேசையின் முன் காத்திருந்தார்..

 அவனும் தாயின் அருகில் வந்து அமர்ந்து இருந்தான்.. மகன் இருந்த விதத்தைப் பார்த்து அர்ச்சனா புரிந்து கொண்டார்.. ” அச்சும்மா ஊட்டி ஆ ஆ” என்று வாயை திறந்தான்..

 இதை யாசோதா பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்..

 அவரை திரும்பி பார்த்தவன். ” என்ன அத்தை அப்படி பார்க்கிறீங்க எங்க அம்மா கைபக்குவம் ஆளை தூக்கும்.. எனக்கு இப்படி சாப்பிடத்தான் ரொம்ப பிடிக்கும்.. ” என்று கூறி அர்ச்சனாவின் கையால் வாங்கி சாப்பிட்டேன்..

 அவன் சாப்பிட்டு எழுந்த சற்று நேரத்தில்.. அவர்களின் தந்தையின் சத்தம் கேட்டு அவன் குழந்தைச் செல்வங்கள் அவர்களின் மொழியில் கத்தி அவர்களின் இருப்பை தெரியப்படுத்தினார்கள்..

 அதை உணர்ந்து அவர்களிடம் சென்று இருவருக்கும் நெற்றி முத்தம் வைத்துவிட்டு அர்ச்சனாவிடமும் யசோதா விடமும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்…

க்ரைம் பிராஞ்ச் இருந்து வந்த தகவல்களின்படி தேடி அலைந்தான்..

 நேரத்திற்கு ஒரு நம்பரில் இருந்து விதம்விதமாக அழைத்து பேசி அவர்களை திசை திருப்பி போக்கு காட்டினான் கோதண்டம்..

சற்றுத் தாமதமாகத்தான் பாரதியே அதை உணர்ந்தான்.. உணர்ந்ததும் கொலைவெறியின் உச்சத்திற்கே சென்றான்..

 இம்முறை கையும் களவுமாக கோதண்டம் ஆதாரத்தோடு சிக்கிகொண்டதால் முதலமைச்சரோ வேறு யாருமே அவனுக்கு ஆதரவளிக்கவில்லை…

 அவர்களுக்கு தெரியும் பாரதி கேஸை கையில் எடுத்துவிட்டான் இனி கோதண்டம் பிடிபட்டால் கேள்வி அவர்கள் பக்கமும் திரும்பும் என்று தெரிந்ததும்… அவன் ஒருவனுக்காக பார்த்து அவர்களின் ஆட்சியை கலைக்க அவர்கள் விரும்பவில்லை… அதனால் இந்த முறை விட்டுவிட்டார்கள்..

 சற்று நேரம் நிதானமாக யோசித்து நுணுக்கமாக அவன் எங்கு இருக்கக் கூடும் என தேடினான்..

 தமிழ்நாட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை என ஆதாரத்தை திரட்டி விட்டடான்.. பாரதி அவனின் கேஸ் ஆரம்பித்ததுமே நீதிபதியிடம் கூறி அவனது பாஸ்போர்ட் மற்றும் பேங்க் பாஸ்புக் கிரடிட் காட் என அனைத்தையும் முடக்கி விட்டான்..

 உள்ளூரில் எங்கோ பதுங்கி இருக்கிறான்.. என தெரிந்து கொண்டான்.. ஒரு நாள் முழுவதும் அவன் தேடிய தேடல் தோற்றுப் போனது.. ஆனாலும் வீட்டிற்குள் வராமல் அப்பொழுதும் இரவு முழுவதும் தேடிக்கொண்டு தான் இருந்தான்..

 மூர்த்தி ” என்ன பாடா படுத்துறான் இந்த தண்டம் புடிச்சவன்… சார் கையில மாட்டினா சிக்கன் பிரியாணி தான் அவன் இன்னைக்கு .. சார் இருக்குற வெறில கொத்து பரோட்டா பண்ணிட்டுவார் அவனை..” என்று முர்த்தி அருகிலிருந்த எஸ்பியிடம் கூறினார்..

 ரொம்பவும் தேடி அலைந்து சோர்ந்து போய் கண்மூடி ஜீப் இருக்கையில் அமர்ந்திருந்தான் பாரதி.. அப்பொழுது அவனில் கைப்பேசிக்கு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது..

அதை எடுத்து காதுக்குக் கொடுத்தான் பாரதி.. அந்தப் பக்கம் ” என்ன டிசிபி உனக்கே தண்ணி காட்டிட்டனா? அந்த கோதண்டம்… ஆனா பாரு அவன் எங்க இருக்கான்னு என் கண்ணல பட்டு தொலைச்சிட்டான்… இது எனக்கு நல்ல நேரமா இல்ல அவனோட கெட்ட நேரமோ எனக்கு தெரியல?.. உன்னால் எனக்கு சில காரியம் ஆகணும் நீ எனக்கு சாதகமா நடந்து காட்டுவேன்னு பிராமிஸ் பண்ணு நான் உனக்கு அந்த இடத்தை சொல்லுறேன்.. ” என்றான் எஸ் கே..

” முதல் நீ யாரு?.. “

” நான் யாருன்னு உனக்கு தெரியதா?… டி சி பி.. உன்னோட கண்ட்ரோலில் இருக்கும் சிட்டிக்கு புதுசா யார் வர்றாங்கனு தெரிஞ்சு வச்சுயிருக்கணும்… நான் உன்னை மீட் பண்ணனும்னு சொல்லி அனுப்பியும் நீ என்ன வந்து பார்க்கல சரி போகட்டும் விடு… அது பரவாயில்லை நீ எனக்கு சாதகமாய் இருப்பியா?.. நான் உனக்கு அந்த கோதண்டம் எங்க இருக்கான்னு சொல்லுறேன்.. ” என்றான் எஸ் கே…

” இல்ல எனக்கு தெரியவேணாம்.. இப்ப நீ யாருன்னு தான் எனக்கு தெரியணும்?.. ஒருவேளை நீயும் அவனோட ஆளா இருக்க மாட்ட அப்படின்னு என்ன நிச்சயம்?.. ” என்றான் பாரதி..

அதை கேட்ட எஸ் கே சிரித்தான்..

” என்ன சிரிப்பு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?.. ” என்றான் பாரதி கறாராக..

” ஹலோ மிஸ்டர் டிசிபி. நான் எஸ் கே அதாவது சர்வேஷ் கபூர்.. பிஸ்னஸ் மேன்.. இப்போ சென்னையில என்னோட புது ப்ரொஜெக்ட் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்.. இந்த தகவல் போதுமா?.. இல்ல இன்னும் என்னோட ஜாதகமே வேணுமா?..” என்றான் எஸ்கே..

” ஓகே எனக்கு கோதண்டம் எங்க இருக்கான்னு நீ சொல்லி தெரிய வேண்டாம்.. நானே கண்டுபிடிப்பேன்.. என்னோட திறமையை மேல எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு.. என்னால உனக்கு சாதகமா எதுவும் பண்ண முடியாது.. இந்த கேஸ் முடிய நாம சந்திப்போம்.. ” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டான்..

பாரதி வேண்டும் என்றால் எஸ் கே-யின் அழைப்பை துண்டித்து இருக்கலாம்.. ஆனால் எஸ் கே-க்கு பாரதியின் தேவை இருந்தது.. அதனால் மீண்டும் அழைத்தான்.. ” ஹலோ மிஸ்டர் பாரதி கோபம் வேண்டாம்.. போனாப்போகுதே குற்றவாளியை தேடி அலைந்து ரொம்ப சோர்வா இருக்கிறானே டிசிபி.. நாம உதவி பண்ணலாமேனு வந்தா இப்படியா பொதுமக்களின் உதவியை நிராகரிப்பீங்க போலீஸ்… அப்புறம் பொதுமக்கள் போலீஸிற்கு உதவி பண்ணுவதில்லை அப்படினு தப்பாவே பேசிகிட்டு சுத்தி திரியுவீங்க.. இதெல்லாம் ஏன்?.. எனக்கு அவன் எங்க இருக்கிறான்னு தெரியும் அட்ரஸ் அனுப்பி வைக்கிறேன் வாட்சப்பில்.. விரும்பினா போய் பிடிங்க.. இல்லைனா அவன் விடிஞ்சதும் வேற எங்கயாவது ஓடிடுவான் அப்புறம் திரும்பவும் தேடி அலைங்க.. அது உங்க விருப்பம் மிஸ்டர் டிசிபி சார்.. ஓகே குட் நைட் ஸ்வீட் ட்ரிம்ஸ்.. பாய்..” என்று பாரதியின் பதிலை எதிர்பாராமல் அழைப்பை வைத்துவிட்டான் எஸ் கே..

அவன் சொன்னது போன்றே அடுத்த நொடி கோதண்டம் இருந்த அவனின் சின்னவீட்டு அட்ரஸ் பாரதிக்கு வந்தது..

பாரதியும் தேடி அலைந்து சோர்ந்து தெரிந்தான்.. சீக்கிரமாக அவனை பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டு டெல்லி போகவேண்டும் அவனது தனிப்பட்ட வேலைக்காக… குழந்தைகள் பிறந்த அன்றில் இருந்து செல்வி அவனுடன் பேசாமல் முகத்தை திருப்பி வைத்திருப்பதால்.. அதை கண்டுபிடிக்க அலைந்து திரிந்ததாலும் அவனுக்கு தூக்கம் பசி என அனைத்தும் மறந்துவிட்டது..

நேரம் தற்போது இரவு 11 மணி இன்னும் சாப்பிடவில்லை..

எஸ் கே என்பவனும் கோதண்டத்தின் ஆளாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது பாரதிக்கு துளியும் இல்லை..

ஏனென்றால் அவனின் பேச்சில் ஒரு தெளிவிருந்தது.. தற்போது கோதண்டத்தை பிடிப்பதுதான் அவனின் முதல் வேலை அதனால் எஸ் கே அனுப்பிய இடத்திற்கு செல்ல முடிவு பண்ணிவிட்டான்..

முடிவு பண்ணியபடி ” மூர்த்தி ரெடியாகுங்க போகணும் அவனை பற்றி ஒரு தகவல் கிடைச்சிருக்கு..” என்று கூறினான்..

மேலும் அரைமணி நேரத்தில் அவன் இருந்த இடத்தில் இருந்து அங்கு சென்றுவிட்டான்.. அவன் அங்கு சென்றதும் அவனின் பார்வையில் படும்படி சில ஆண்கள் நின்றார்கள்..

பாரதியை பார்த்ததும் அதில் ஒருவன் வந்து ” வணக்கம் சார்.. எங்க பாஸ் நீங்க வரும் வரை இவனுகளுக்கு காவல் இருக்கச்சொன்னார்.. இப்ப நீங்க வந்துட்டீங்க.. நாங்க போகலாமா?.. இல்ல இருக்கணுமா?..” என்றான்..

இவர்களை வைத்துதான் பிடிக்கவேண்டும் என நினைத்து போய் கதவை தட்டும் படி கூறினான்..

அவனது டீமை ரெடியா சுற்றிவளைக்கச்சொன்னான்..

அனைத்தும் ரெடியாகியதும் அவன் போய் கதவை தட்டினான்..

உள்ளே இருந்தவனோ ” இந்த நேரத்துல யாரா இருக்கும்?.. ஒருவேளை டிசிபி மோப்பம் பிடிச்சிட்டானா?.. சே இருக்காது அவனைதான் நாம சுத்தல்ல விட்டுடமே.. ” என நினைத்து கதவை திறந்தான் கோதண்டம்..

” அவன் நினைத்தது போன்றே போலீஸ் போன்று இல்லாமல் வேறு ஒருவன் நின்றிருந்தான்..

” யாரு நீ என்ன வேணும் உனக்கு?.. நான் யார்னு தெரியுமா?..” என்றான் திமிராக..

” சார் நானும் இந்த தெருவிலதான் குடி இருக்கிறேன்… என் பொண்டாட்டிக்கு வலி வந்திடுச்சிங்க இந்நேரம் எந்த ஆட்டோ காரனும் வரமாட்டாங்க.. இதோ நிக்கிதே உங்க கார் அதை குடுத்தா நான் என் பொண்டாட்டியை ஜீ எச் ல சேர்த்துட்டு வந்து திரும்ப தந்துடுவேன்..” என்றான் அவன் சொல்வது நம்பும்படியாக பதட்டமாக பேசினான் பாரதி சொன்னது போன்று..

கோதண்டமும் பாவப்பட்டு சாவி எடுக்க உள்ளே சென்றான்..

பாரதி வீட்டினுள் புகுந்தான்.. அவனும் சாவி எடுத்துவிட்டு திரும்பியதும் அவனின் கண்முன் பாரதி நின்றான்..

சற்று நேரம் பயந்த கோதண்டம்.. பின் எகத்தாளமாக சிரித்தான்.. ” என்ன டிசிபி என்னை அரெஸ்ட் பண்ணிடுவியா?.. இந்தா பண்ணு பண்ணேன் டா வெத்துபயலே.. நீ அரெஸ்ட் பண்ணின பத்து நிமிசத்துல உனக்கு எத்தனை கால் வரும் தெரியுமா?.. பெரிய இடத்துல மோதினா என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்கனும்..” என்றான்..

அவனின் மேல் கொலை வெறியில் இருந்த பாரதி அடித்த ஒரே அடியில் வாய் கிழிந்து இரத்தம் கொட்டியது..

” ஓசி பணத்துல நல்ல சத்தானதா திண்ணு உடம்பை வளர்த்து வச்சிருக்கியா? நீ.. எடுபட்ட நாயே என்ன தைரியம் இருந்தா போலீஸ் மேலையே கை வைப்ப?..” என்று கோபம் முழுவதும் அவனின் மேல் காட்டி இழுத்துச்சென்றான் பாரதி..

அதன் பின் அவனை அடித்து ஸ்டேஷன் இழுத்து சென்று ராமு கேஸ் போன்று அவனே உடனிருந்து அடுத்த நாள் கோர்ட்டில் அவனை ஆஜர் படுத்தி சரவணன் வாதாடி அவனுக்கு தண்டனை வழங்கியதுமே நிம்மதியாக மூச்சுவிட்டான் பாரதி..

அவனது பதவியும் போய் சொத்து முழுவதும் ஜப்தி பண்ணிவிட்டார் நீதிபதி.. அவன் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் அவ்வளவும் வெளியே எடுக்க உத்தரவிட்டார்..

அதன்பின் அவனுக்கு எந்த நாட்டில் இருந்து இந்த கலப்பட உணவு வகைகள் வருகிறது என தெரிந்து அதை நிறுத்தி அந்த நாட்டு ஜனாதிபதி க்கு இதை தெரியப்படுத்தும் படி ஐஜி-யிடம் கூறினார்..

நீதிபதி முதலமைச்சருக்கும் எச்சரிக்கை விடுத்தார்.. ஒரு நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்துகொண்டு இப்படி அயோக்கியன்களை இன்னும் கட்சியில் வைத்து ஆதரவளிப்பதற்காகவும்.. இந்த கேஸ் பற்றி தெரிந்தும் அதை தடுத்து மக்களுக்கு நன்மை செய்யாமல்.. குழந்தைகளை பாதிக்கபட வைத்ததற்கும் அவரையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அபராதம் கட்டி இனி பொறுப்புடன் இருக்கும் படி கூறினார்..

கோதண்டத்தை சிறைக்கு அழைத்து சென்றார்கள்..

அத்தோடு இந்த கேஸ் முடிந்து பாரதி சரவணன் இருவரும் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார்கள்..

அதன் பின் பாரதி கையோடு சரவணனை அழைத்துக்கொண்டு இன்றே இருவருக்கும் விமான டிக்கெட் பதிவு செய்யும் படி கூறிவிட்டு ஐஜியிடம் கட்டாய விடுப்பு வேண்டும் என லெட்டர் கொடுத்து அதை அவர் ஓகே பண்ணியதும் நேரடியாக வீட்டிற்கு வந்தான்..

சரவணனோ ” டேய் மச்சான் நீ ரொம்ப சோர்வா தெரியுறடா இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு மார்னிங் போகலாம்..” என்றான்..

” இனியும் காலம் கடத்தவேண்டாம் இதுக்கு எனக்கு சரியான பதில் கிடைச்சே ஆகணும் இன்னைக்கே மதியமே போறோம்.. இதுதான் பைனல்.. நீ வரலயா?.. அப்போ இங்கையே இரு..” என்றான் பாரதி..

” நான் அதுக்கு சொல்லலை மச்சி உனக்கு இவ்வளவு பெரிய உதவி இரண்டு கேஸ்லையும் பண்ணியிருக்கானே அந்த எஸ் கே அவனை போய் பார்த்து ஒரு நன்றி சொல்லிட்டு அப்படியே அவன் யாரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமே!..” என்றான் சரவணன்..

” போகணும் தான் ஆனா இப்ப நேரம் இல்லை இந்த பிரச்சினையை முடிச்சிட்டு வந்து போகலாம்.. இப்ப நீ ரெடியாகு..” என்றான்..

சரவணனின் பேச்சை கேட்டு அடுத்துவரப்போகும் பிரச்சினைக்கு அன்றே அந்த எஸ் கே யாரென்று பார்த்திருக்கலாமோ என நினைப்பான் பாரதி.. ஆனால் அப்போது காலம் கடந்து விடும்..

வீட்டிற்கு வந்து அர்ச்சனாவிடம் விசயத்தை சொல்லிவிட்டு அறைக்கு சென்றான்..

நேற்று வந்த மகன் அதன்பின் இன்றுதான் வருகிறான்.. அவனையே பார்த்திருந்தார் அர்ச்சனா…

அங்கு செல்வி குழந்தைகளை அருகில் அணைவைத்து படுக்கவைத்துவிட்டு அவளும் ஒரு கையால் அவர்களை அணைத்தபடி தூங்கிப்போனாள்.. அவளை சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு ” எந்த வேற்றுமையும் இல்லாம அவளோட சொந்த பிள்ளைகள் மாதிரி அக்கறையா பார்த்துக்கிறாளே.. இதுதான் அவளிடம் என்னை இன்னும் அதிகமாக இழுக்குதா?.. அதை கண்டுபிடிச்சிட்டு இதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கணும்..” என நினைத்தபடி உடைகளை எடுத்துக்கொண்டு கீழே சென்றான்..

பின் வேகமாக குளித்து சாப்பிட்டு யசோதா வைதேகி அர்ச்சனா மூவரிடமும் கூறிவிட்டு டெல்லி சென்றான்..

இரவு முழுவதும் குழந்தைகள் படுத்திய பாட்டில் செல்வி கண்மூடவில்லை.. இதோ பாரதி வந்ததோ மீண்டும் சென்றதோ எதுவும் தெரியாமல் அசந்து தூங்குகிறாள் செல்வி..

டெல்லி சென்றதும் தாமதிக்காமல் அந்த அட்ரஸிற்கு சென்றார்கள் இருவரும்..

பாரதி அங்கே வேலை செய்தபடியால் அவனுக்கு இடங்கள் தெரியும்..

அங்கு சென்றதும் அவனை பார்த்தவர்கள் ” வாங்க பாரதி சார்.. சொந்த ஊருக்கே மாற்றம் கிடைத்து போயிட்டீங்கனு சொன்னாங்களே..” என்றான் அங்கிருந்தவன்..

தலையை ஆட்டி அந்த பேச்சை தடுத்துவிட்டு அவன் கொண்டுவந்த டெல்லியில் இருந்து வரவலைத்த உயிரணுவிற்க்கான ஆதர படிவத்தை காட்டி ” இது யாரோடதுனு தெரியுமா?.. எனக்கு கேஸ் விசயமா தேவைபடுது என்றான் பாரதி..

அதை பார்த்த அவன் ” சார் உயிரணு தானம் ஒரு இடத்துலயே நடக்கிறது இல்ல.. பொதுவா உயிரணு தானம் ஒருவர் எங்க பண்ணினாரோ கட்டாயம் அந்த இடத்துல அதை வாச்சிருக்கமாட்டோம்.. அது முறையும் இல்லை.. நாளைக்கு அதனால குடும்பத்தில் பிரச்சினை வருமே அதனால.. இருங்க இது எங்க இருந்து எங்களுக்கு கிடைச்சதுனு தேடி சொல்லுறேன்..” என்றான்..

அதை கேட்டதும் சரவணன் ” இப்படியே இந்தியாவை சுத்தி பார்த்திடலம் மச்சி.. இப்ப இவன் எந்த ஊர் அல்லது எந்த நாட்டு அட்ரஸ் தரப்போறானோ தெரியலயே..” என்றான்..

” டேய் கொஞ்சம் பொறுடா என்னன்னு பார்ப்போம்…” என்றான் பாரதி..

சரவணனோ ” நீ ரொம்ப பொறுமைசாலியா? மச்சி என்னால நம்பவேமுடியலடா!..” என்றான் ஆச்சிரியமாக வாயில் கைவைத்து..

அதன் பின் இவர்களின் பேச்சின் இடையில் அவன் வந்தான்..

” சார் இந்தாங்க இங்க இருந்துதான் எங்களுக்கு கிடைச்சது.. இங்க போய் பாருங்க ஒருவேளை அவங்ககிட்ட அந்த ஆளோட அட்ரெஸ் கிடைக்கலாம்.. நீங்க போலீஸ்னு சொன்னா காட்டாயம் குடுப்பாங்க.. போய் பாருங்க..” என்றான் அவன்..

அவனுக்கு நன்றி தெரிவித்து பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்த ஹோட்டலில் இரவு தங்கினார்கள்..

அதுவும் சரவணனிற்காகதான் அவன் மிகவும் களைப்பாக தெரிந்தான்..

இருவரும் உணவு உண்டுவிட்டு பாரதி அர்ச்சனாவிடம் பேசிவிட்டு சற்று நேரத்தில் அறைக்கு வந்தான்.. அதற்குள் சரவணன் உறங்கி விட்டான்..

அதை பார்த்து பாரதியும் சிரித்துவிட்டு படுத்து தூங்கினான்..

காலையில் எழுந்து சரவணனையும் எழுப்பி அங்கு புறப்பட்டார்கள்..

அன்று மதியம் அந்த அட்ரெஸிற்கு வந்து சேர்ந்தார்கள்..

உள்ளே சென்றதும் எதிர்பட்டவன் பாரதியை பார்த்து ” அடடே வா சார்.. என்ன திரும்பவும் வரமாட்டேன்னு சொன்ன.. ஆனா இப்ப வந்திருக்க என்ன டொனேட் பண்ணப்போறியா?.. இரு சார் ஆபீசரை கூட்டிட்டு வர்றேன்..” என்று அவன் உள்ளே சென்றான்..

அதை பார்த்த சரவணன் ” டேய் மச்சி அவன் உன்னை தெரிஞ்சவன் மாதிரி பேசுறான்.. நீ எதுவும் காட்டிக்கமாட்டேங்கிற.. என்னடா நடக்குது?.. இங்க இதுக்கு முன்ன நீ வந்ததா சொல்லுறான்.. தலையே வெடிச்சிடும் போலயே எனக்கு..” என்று கூறி சரவணன் ஒன்றும் புரியாத கடுப்பில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தான்..

பாரதிக்கோ ஏதோ புரிவது போன்று இருந்தது.. ” இப்படியும் இருக்குமோ!..” என்றான்..

சரவணனோ ” எப்படிடா இனியாவது உண்மையை சொல்லித்தொலை உயிரை வாங்காம.. ஏதோ திரில் படம் பார்க்கிற எபெக்ட்ல போகுது என் வாழ்க்கை.. நல்லா வந்து சேர்ந்தீங்க எனக்கு பிரண்டா இரண்டு பேரும்.. ஒருத்தன் செத்து என்னை சாவடிக்கிறான்.. இன்னொருத்தன் உயிரோட இருந்து என்னை கொல்லுறான்.. எங்க அம்மா எந்த நேரத்துல என்னை பெத்தாவோ!?.. தெரியலயே ஆண்டவா.. இவன்கிட்ட இருந்து நீதான் என்னை காப்பத்தனும்” என்றான் சரவணன் கையை மேலே தூக்கி வணங்கி..

பாரதி அவனின் கையை கீழே இறக்கி அவனை பார்த்து சிரித்தபடி இருந்தான்…

பாரதியின் சிரிப்பை பார்த்து சரவணன் முறைத்தான் என்றால்..

வேறு இரண்டு கண்கள் பாரதியை குரோதத்தோடு பார்த்தது..

வீணை இசைக்கும்…

Advertisement