அத்தியாயம் – 38

அன்றைய தினம் பிருந்தா, பிறந்த வீடு வந்திருந்தாள். தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருவதால், வினோதனும் அவளும் ஊருக்கு வந்திருக்க, முதல் நாள் புகுந்த  வீட்டினில் இருந்தவள், பின்னே இங்கே வந்துவிட்டாள்.

வினோதனும் அவளோடு வந்தவன், சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டான்.  மகளும், மருமகனும் வரும்நேரம் போஸ்ராஜன் வீட்டினில் இருக்க, மருமகனிடம் பொதுப்படையாய் ஓரிரு வார்த்தைகள் பேசினார் போஸ்ராஜன். வினோதனும் மரியாதைக்கு பேசினான் தான்.  ஆனால் முன்பிருந்த இலக்கம் இப்போதில்லை.

மாமனார் என்கிற மரியாதைக்கும், பிருந்தாவின் மனம் நோகக் கூடாது என்கிற கரிசனைக்குமே தான் வினோதன் இங்கே வந்து செல்வது. இல்லை எனில் போஸ்ராஜன் அன்று நடந்துகொண்ட முறைக்கு, அவன் மனதில் எழுந்த கோபத்திற்கு இங்கு வந்து போவதையே நிறுத்தியிருப்பான்.

விஷயமறிந்து கணேசனும், லட்சுமியும் கூட ‘என்ன இது  இப்படியா நடந்துக்கிறது?’ என்று கடிந்துகொள்ள,

லட்சுமியோ “வினோ.. நீ இனி அங்க போகவே வேணாம்..” என்றிருந்தார்.

வினோதன் மனதிலும் அப்போதைக்கு அதே எண்ணம் தான்.  

காசிராஜன் வினோதனிடமும், கணேசனிடமும் “இந்த பிரச்சனைக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க சம்பந்தி, நாளைக்கு எல்லாத்துக்கும் ஒண்ணா இருக்கணும். வினோதன் நீ இதை மனசுல வச்சுட்டு பிருந்தா மேல கோவம் காட்ட கூடாது. ஆசைப்பட்ட வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நல்லபடியா வாழணும்..” என்று சொல்லிவிட்டார். 

பிருந்தாவிற்குமே உள்ளுக்குள்ளே பயம் தான். எங்கே வினோதன் அப்பாவின் இந்த செயலால் தன்னிடம் முகம் திருப்புவானோ என்று. நல்லவேளை அப்படி எதுவும் அவன் செய்திடவில்லை.

மாறாக “யாருக்கிட்ட எப்படி நடக்கணும்னு எங்களுக்கு நல்லாவே இங்கிதம்  தெரியும்.” என்று பதில் வந்திருக்க, பிருந்தா தான் உள்ளுக்குள்ளே கூனிக்குறுகி போனாள்.

 ஆனால் இதெல்லாம் எங்கே போஸ்ராஜன் உணர்வது. அவரைப் பொறுத்த மட்டில் இப்போதும் கூட அன்று அவரது  கோபம் நியாயமே. கேட்டால் இப்போதும் என்ன சொல்வார் ‘நான் அவங்க லவ் பண்றதை பத்தியே பேசலை. தெரிஞ்சு எப்படி சும்மா இருந்தான்னு காசியை தான் பேசினேன். அந்த பொண்ணு அவசரப்பட்டு ப்ரித்வியை வேணாம்னு சொன்னா, நான் என்ன செய்றது..’ என்று தான்.

வினோதனின் அன்னியத்தன்மை கொஞ்சம் புரிந்தாலும், மருமகன்       கிளம்பியதுமே மகளோடு சிறிது நேரம் பேசியவர் அடுத்து செங்கல் சூளைக்கு கிளம்பிவிட்டார்.    

அப்பா கிளம்பியதுமே “ம்மா எங்க வீட்ல என் மாமியார் கேட்கிற கேள்விக்கு என்னால பதிலே சொல்ல முடியலைம்மா..” என்று ஆரம்பித்துவிட்டாள்.

“என்னாச்சு?” என்று ராதா கொஞ்சம் பதறியே கேட்க,

“எல்லாம் அப்பா அன்னிக்கு பண்ண விஷயம் தான். இப்போ வரைக்கும் பேசுறாங்க. மீனாவ விட வேற நல்ல பொண்ணா நீங்க பார்த்து மருமகளா கொண்டு வந்திடுவீங்களான்னு நேருக்கு நேரா கேக்குறாங்க ம்மா. வினோதன் எதுவுமே பேசலைன்னாலும், நீங்களே பாக்குறீங்க தானே.. பட்டும் படாம இருக்கிறதை..” என்று சொன்ன மகளை, வருத்தம் தோய்ந்த முகத்தோடு தான் பார்த்தார் ராதா.

“வினோதனும் கேட்டுட்டே இருக்கார். அண்ணன் கிட்ட பேசவா, இல்லை உங்கப்பாக்கிட்டயே பேசவான்னு கேக்குறார். சங்கடமா இருக்கும்மா. மீனாவையும் அண்ணனையும் நினைச்சு ரொம்பவே கஷ்டமா இருக்கு. எனக்கு அத்தனை ஹெல்ப் பண்ணாங்க. இப்போ அவங்களுக்கு பிரச்சனை, என்னால ஒண்ணுமே பண்ண முடியாத நிலைல இருக்கேன்..” என்றிட,

“நானும் உங்கப்பாக்கிட்ட அப்பப்போ சொல்லிட்டு தான் இருக்கேன். அவரோட பதில் இப்போ வரைக்கும் மாறல..” என்று ராதா பெருமூச்சு விட,

“அப்பா பேசினதும் தப்புதானே ம்மா. யாருக்கா இருந்தாலும் அந்த இடத்துல கோபம் வரும்..” என்று பிருந்தா மீனாவைத் தாங்கியே பேச,

“உங்கப்பா என்னிக்கு எல்லாரும் யோசிக்கிறது போல யோசிச்சு இருக்கார். அவர் வழி தனி வழின்னு தான் இருப்பார். எங்க இந்த யாமினிய பேசணும்னு சொல்லிடுவாரோன்னு நானும் ஒவ்வொரு நிமிசமும் பயந்துட்டே இருக்கேன்..“ என்று ராதா தன் பயத்தை சொல்ல,

“என்னது யாமினியா?!” என்றாள் பிருந்தா அதிர்ந்து.

“ஆமா பிருந்தா. ஏற்கனவே அந்த ராஜீவன் இதை பேசினார். அப்பா ப்ரித்விக்கிட்ட கேட்கவும் அவன் முடியாதுன்னு சொல்லிட்டான். நானும் அந்த நேரத்துல உன்னோட கல்யாணம் முடியவும், மீனாவை மனசுல வச்சுட்டு இந்த பக்கம் தான் பொண்ணு பார்ப்பேன்னு சொல்லிட்டேன்.. அப்போதைக்கு உங்கப்பா எதுவும் பேசல. ஆனா இப்போ திரும்ப யாமினியை பார்ப்போம்னு சொல்லிட்டா என்ன செய்றது?” என்று மகளிடம் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் பேசிட,

“அண்ணன் வேணாம்னு சொன்ன பிறகுமா ம்மா?!” என்றாள் பிருந்தாவும்.

“அட போ பிருந்தா. ப்ரித்வி உங்கப்பாக்கு மேல பிடிவாதமா இருப்பான் போல. நேத்து கூட கேட்டுட்டேன், மீனாக்கிட்ட நாங்க எல்லாம் பேசுறோம். நீ வர்றப்போ கல்யாணம் ஏற்பாடு பண்றோம்னு. அவனை மீறி எதுவும் செய்யக் கூடாதாம். அவனை வேணாம்னு தூக்கிப் போட்டவ அவனுக்கும் வேணாமாம்..” என்றிட,

“அதெல்லாம் கோவத்துல சொல்றது தான்ம்மா. ஆனா அண்ணன் மனசு நமக்குத் தெரியாதா..” என்றாள்.

“என்ன சொல்லு.. ஆயிரம் பிரச்சனை வந்தாலும், மீனாவும் இப்படி எடுத்தெரிஞ்சு பேசிருக்க கூடாது தானே..” என்றார் ராதா மனம் கேளாமல்.

 “மீனா இடத்துல நான் இருந்தாலும் அப்படித்தான் ம்மா ரியாக்ட் பண்ணிருப்பேன்…” என்று பிருந்தா பட்டென்று சொல்ல, ராதாவால் பதிலே சொல்ல முடியவில்லை.

ஆனாலும் மகள் பேச்சில் இருக்கும் நியாயம் உணர்ந்தவர் “யாருக்கு சொல்றதுன்னே தெரியலை பிருந்தா. ஆனா மனசு நிம்மதியே இல்லாம இருக்கு. இந்த ராஜீவன் தினமும் கால் பண்ணி பேசுறார். முதல்ல உங்கப்பா அத்தனை இன்வால்வ் ஆகல. இப்போ என்னவோ பிஸ்னஸ் ஐடியா எல்லாம் கொடுக்கிறார். நீயும் இல்லை. ப்ரித்வியும் இல்லை.. தனியே வந்திருக்கவே கூடாதோன்னு இருக்கு..” என்றவர் “வா பாட்டி தாத்தாவை பார்த்துட்டு வரலாம்..” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அழகரசியோ பிருந்தாவைக் கண்டதும் “பிருந்தா.. வா வா..” என்று ஆசையாய் அரவணைத்துக் கொண்டவர் “லீவுக்கு வந்தியா?” என்று கேட்க,

“ஆமா பாட்டி..” என்றவள் அவரின் அருகேயே அமர்ந்துகொள்ள,

“உன் புருஷன் எங்க?” என்றார் அடுத்து.

“வந்து விட்டுட்டு, வேலை இருக்குன்னு கிளம்பிட்டார். நான் நாளைக்கு வர இங்கதான் இருப்பேன்..” என்று பிருந்தா சொல்லவும்,

“நல்லது டி. இப்படி ஏதாவது லீவுக்கு வந்தாதான் ஆச்சு. உனக்கும் எல்லாம் அங்க சரியா போகுதா? வினோதன் நல்லபடியா உன்னை வச்சுக்கிறானா?” என்று விசாரிக்க,

“நாங்க நல்லாருக்கோம் பாட்டி. அவரும் நல்லா பார்த்துக்கிறார். அப்பப்போ வினோதன் அம்மாதான் ஏதாவது சொல்றாங்க..” என,

“பெருசா எடுத்துக்காத. லட்சுமி நல்ல மனுஷி தான். சின்னதுல இருந்து மீனா மேல கொஞ்சம் பாசம் அதிகம். மத்தபடி உன்னை நல்லா வச்சிருக்காங்க தானே.. அதைமட்டும் நினை..” என்றவர் ஒரு பெருமூச்சினை விட்டு “மீனாள போய் பார்த்துட்டு வந்தியா?” என்று கேட்டார்.

“எங்க அவதான் நான் போன் பண்ணா கூட உருப்படியா பேசுறது இல்லையே..” என்று பிருந்தா வருந்த ,

“அதுக்குன்னு நீயும் அப்படியே விட்டுடுவியா? நீயும் வினோதனும் போனா என்ன சொல்லப் போறா..“ என்று ஆச்சி சொல்ல,

“எனக்குமே போய் பார்க்கணும் போலத்தான் இருக்கு அத்தை..” என்றார் ராதா.

“அது நீ என்னிக்கோ போயிருக்கணும். ஆம்பளைங்க சண்டை அவங்களோட, லவ் பண்றவங்க சண்டை அவங்களோட, நான் என்ன பண்ணேன்  இப்படித்தான் வந்து போவேன்னு நீ இருந்திருந்தா, இந்நேரம் இத்தனை விரிசல் வந்திருக்காது. காலம் போன கடைசியில நாங்களும் இப்படி தவிக்க வேண்டியது இல்லை..” என்று அழகரசி படபடக்க, அதிலேயே புரிந்தது அவரின் மனதிலும் கோபமும் வருத்தமும் இருக்கிறது என்று.

ராதா பேசாமல் திகைத்து நிற்க, அழகரசியோ “கற்பகம்..” என்று அழைக்க, அவர் வந்து நிற்கவும் “உளுந்தவடைக்கு ஊற போடு. பிருந்தா பொண்ணு வந்திருக்கு.. வீட்ல பதமா செஞ்சு குடு..” என்றவர்,

“நாங்க வளர்ந்த பசங்க, எங்களோட கடைசி காலத்துல ரெண்டுமே குடும்பமா எங்க கண்ணு முன்னாடி வாழுறாங்கன்னு அத்தனை சந்தோசப்பட்டோம். கடைசியா அவரும் கூட பிருந்தா கல்யாணம் முடியவுமே, ப்ரித்விக்கு மீனாள கேட்போம். போஸ், காசி ரெண்டு பேர்கிட்டயும் நம்ம பேசுவோம்னு இருந்தார்…” என்று அழகரசி பெருமூச்சு விட்டு சொல்ல, இச்செய்தி அனைவருக்கும் புதிது.

“என்ன அத்தை சொல்றீங்க?“ என்று ராதா விழி விரித்து கேட்க,

“என்னத்தை சொல்ல.. அதைவிடு..” என்றவர்  “இப்போ நீ என்ன முடிவுல இருக்க ராதா?” என்று கேட்டார்.

“எ.. என்ன என்ன அத்தை?!” என்று ராதா விளங்காமல் கேட்க,

“ப்ரித்வி மீனா விசயத்துல நீ என்ன முடிவுல இருக்க?” என்று மீண்டும் கேட்க,

“அது.. அ.. அது எனக்கு ஆரம்பத்துல இருந்தே மீனாவ ப்ரித்விக்கு பேசணும்னு ஆசைதான். நீங்கதான் அவங்க வெளிய பார்ப்பாங்கன்னு சொல்லிட்டீங்க. இல்லைன்னா வந்தப்போவே பேசி ப்ரித்விக்கு முதல்லயே முடிச்சிருக்கலாம்..” என்றிட,

“அதுசரி இதெல்லாம் இப்போ சொல்லு..” என்றார் பெரிய மனுஷி.

“நா.. நான் அப்பப்போ ஜாடையா கூட கேட்டிருக்கேன்..” என்று ராதா வேகமாய் சொல்ல,

“ஏன் நேராவே உங்க பேத்தியை மருமகளா கொண்டு வரணும்னு எடுத்துப் பேசுறது. யார் வேணாம்னா. புள்ளைங்க என்ன செய்றாங்க, யாரோட பேசுறாங்க, பழகறாங்கன்னு கூட தெரியாம என்னத்தான் செஞ்சியோ நீ? உன் மகன் மனசும் பார்வையும் எங்க போகுதுன்னு கூடவா தெரியலை..” என்று கடிய, ராதா ஒன்றும் பேசாமல் தலைகுனிய,

“உன்னை மட்டும் வைய்யல நானு. சந்திராவுக்கும் தான் நல்லா நாலு குடுத்தேன். அவளுக்கு ஏற்கனவே மனசுல உறுத்திட்டு தான் இருந்திருக்கும் போல. ஆனா எல்லாம் ஒரே குடும்பமா பழகறோம், அவசரப்பட்டு கேட்டுட்டா, சங்கடமாகிடுமேன்னு தான் அமைதியா இருந்திருக்கா..” என்றவர்

“போஸ் இதுக்கு சம்மதிப்பானா?!” என்று கேட்க, அடுத்த நொடி மௌனம் மட்டும் தான் அங்கே.

ஆனால் பிருந்தாவோ “பாட்டி அப்பா ஓகே சொல்றது எல்லாம் இருக்கட்டும். முதல்ல மீனா சரின்னு சொல்லணுமே..” என்றிட,

“அது நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டார் அழகரசி.

தான் பேசினால் நிச்சயம் தன் ஆசை பேத்தி கேட்பாள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்க, ராதாவோ “நீங்க இப்படிச் சொல்லவும் தான் அத்தை மனசுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கு. அவர் பேசுறதைப் பார்த்தா மீனா ப்ரித்வி ரெண்டுபேரும் சமாதானம் ஆனா கூட சரின்னு சொல்லிடுவார் போல..” என்றிட,

“ஓ.. அப்படி அவங்க காதல் பண்றது பிரச்சனை இல்லைன்னு நினைச்சவன், அதை இப்படித்தான் சபைல போட்டு உடைச்சு, சும்மா இருந்த காசியை பேசுறதா…” என்று மனம் பொறுக்காமல் கேட்டேவிட்டார் அழகரசி.

பிருந்தாவும், ராதாவும் பாவமாய் அமர்ந்திருக்க, இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர் “நீங்க முதல்ல எப்பவும் போல அங்க போக வர இருங்க.. ஆரம்பத்துல எல்லாம் சங்கடமா தான் இருக்கும். ஆனா போஸ் பேசினதும் தப்புதான். சிலது நாசூக்கா பேசிருக்கணும். இல்லையா பெரியவங்க எங்க காதுக்கு கொண்டு வந்திருக்கணும். சின்ன வயசுல பேசினது போலவே இப்பவும் நடந்தா ஆகுமா?