புதிய வீட்டின் கட்டிடம் உயர உயர, இரு ஜோடிகளின் காதலும் வளர்ந்துகொண்டே தான் போனது. ஆம்! காதல் என்றே இரண்டு ஜோடிகளும் முடிவிற்கு வந்து கூட மாதம் ஒன்றை கடந்துபோனது.
ப்ரித்வியும் – மீனாளும், இருவரின் மனதில் இருக்கும் நேசத்தை, காதல் தான் என்று வெளிப்படையாய் கூறவில்லை என்றாலும், தன் இணைக்கு பார்வையாலும், பேச்சாலும், செயல்களாலும் அதனை வெளிப்படுத்துவதில் எவ்வித தயக்கமோ, மாற்று யோசனையோ இல்லை.
அதிலும் மீனாள், திருமண வாழ்வின் மீது தான் கொண்ட லட்சியங்களை எல்லாம், இப்போது அவளின் வசதிக்கு ஒரு ஓரமாய் வைத்திருந்தாள். அவளைப் பொறுத்தவரைக்கும் காதல் திருமணம் செய்து, எப்படி அப்பாவும் அம்மாவும் மனமொத்த தம்பதியினராய் வாழ்கிறார்களோ, அதுபோல தானும் ப்ரித்வியோடும், தங்களின் உறவுகளோடும் சேர்ந்து வாழ வேண்டும்.
அதாவது தனக்கான துணையை அப்பா அம்மா ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்கிற சிந்தனை எல்லாம் மறைந்து போய், ப்ரித்வியை தனக்கு பிடித்தது போல, மகளுடைய வாழ்க்கை துணையாக நிச்சயமாக அவர்களுக்கும் அவனைப் பிடிக்கும் என்பதில் அபரிமிதமான நம்பிக்கை.
என்ன வேலையாய் இருந்தாலும், அவள் மனதில் ப்ரித்வி பற்றிய எண்ணங்கள் தனியொரு உலகில் அவளை சஞ்சரிக்க வைத்துக்கொண்டே இருந்தது மட்டும்தான் நிஜம். ப்ரித்வி வந்ததில் இருந்து சின்னமகாராஜா என்று அவளால் எப்போதுமே கடிந்துகொள்ளப்படும், அவனின் மீது அப்படியென்ன திடீர் பற்றுதலும், நேசமும், பிடித்தமும், பாசமும் என்று எல்லாம் எங்கிருந்து பிறந்ததோ. மற்றது எல்லாம் எங்கோ மறைந்து இப்போதெல்லாம் அவனது எண்ணங்களே.
அவனுக்கும் அப்படித்தான் என்பதனை அவளைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவன் உணர்த்தவும் தவறவில்லை.
இருந்தும் இதோ மாதங்கள் கடந்தும் கூட இருவரும் தனிமையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆனாலும் பேசாமல் எல்லாம் இல்லை. ஜாடை மாடையான பேச்சுக்களும், பார்வைகளுமாகவே பொழுதுகள் அவ்வப்போது நகர்கிறது. அதாவது சூழல்கள் அமைந்தும் கூட அவர்கள் தனிமையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இவர்கள் ஒருப்பக்கம் இப்படி எனில், பிருந்தா மற்றும் வினோதன் நிலைதான் கொஞ்சம் பாவமாய் இருந்தது. தனிமைக்கான வழியே இல்லை. காதல் என்று இருவரின் மனதிலும் முடிவாகிய பிறகு, அதனை வெளிப்படுத்தவோ, தனிப்பட்டு பேசவோ இருவருக்கும் எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்கவே இல்லை.
இதற்கும் வினோதன் வாரா வாரம் மதுராபுரிக்கு வந்துகொண்டே தான் இருந்தான். அப்படி வரும் நாட்களில் எல்லாம் அவனின் அப்பாவோடு சேர்ந்தோ, இல்லை தனியே கூட வந்தோ கட்டிட வேலைகளை வந்து பார்த்துவிட்டு போவான். அப்படியேனும் பிருந்தா அவன் பார்வையில் படுவாளா என்றுதான்.
அந்தோ பரிதாபம் முதலில் இது பிருந்தாவிற்கு தெரியவே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரமும் வினோதன் வந்து வந்து பார்த்துவிட்டு சென்றிருக்க, ப்ரித்வியைதான் அவனால் பார்க்க முடிந்ததே தவற, பிருந்தாவை கண்ணிலும் காண முடியவில்லை.
‘முதல்ல போன் நம்பர் எப்படியும் வாங்கிடணும்..’ என்று முடிவு செய்துகொண்டவனுக்கு, அதனை எப்படி வாங்குவது என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.
மீனாவிடம் கேட்டு வாங்கிவிடலாம் தான். பிருந்தாவை பிடித்திருக்கிறது அவளோடு பேசி, பழக மனம் ஆவலும் ஆசையும் கொள்கிறது என்று நிஜத்தை சொல்லிடலாம் தான். மீனாவும் சொன்னால் நிச்சயம் புரிந்துகொள்ளும் பெண் தான். தனக்கு உதவிடவும் செய்வாள் என்பதில் வினோதனுக்கு கடுகளவும் ஐயமில்லை.
ஆனாலும் கூட, தான் கொண்ட நேசத்திற்காக தானே மெனக்கெடவேண்டும் என்பதில் அவனுக்கு கொஞ்சம் விருப்பம். எல்லாம் உடனே உடனே நடந்துவிட்டால், பிறகு அதிலென்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது. காத்திருந்து.. ஏங்கி தவித்து.. நெஞ்சம் சோகத்தில் புடைத்து.. சிறு ஏமாற்றமும் கோபமுமாய் ஒரு உணர்வு வந்து தாக்கிச் சென்று என்று இப்படி ஏகப்பட்ட எண்ண குவியல் அவனுக்குள்.
‘இப்படித்தானே அவளுக்கும் இருக்கும்..’ என்று நினைக்கும்போதே உள்ளுக்குள்ளே ஒரு ஜிவ்வென்ற உணர்வு.
இன்னும் கொஞ்சம் இந்த தவிப்புகள் எல்லாம் வேண்டும்போலவே இருக்க, வினோதன் மனதோ ‘எத்தனை நாள் ஆனாலும் சரி. பிருந்தாக்கிட்ட தான் அவளோட போன் நம்பர் வாங்குவேன்..’ என்று பிடிவாதமாய் நின்றுகொண்டது.
அன்றைய தினம் மூன்றாவது வாரம். வழக்கம் போல ஊருக்கு வந்தவன் சனிக்கிழமை காலையில் கட்டிடத்தை பார்ப்பதற்கு வந்திருந்தான். அங்கே பெரிய வீட்டின் பின்புற பக்கவாட்டில் ஒரு பெரிய வேப்பமரம் உண்டு. அதன் கீழே சிறியதாய் ஒரு வீட்டினையே கட்டிவிடலாம். அத்தனை பெரிது அந்த மரம்.
அந்த மரத்தின் கீழே வேம்பரசனும், அழகரசியும் ஒரு கயிற்ருக்கட்டில் போட்டு, அடிக்கடி அமர்ந்து பேசிக்கொள்வது வழக்கம். இப்போது அந்த மரமும், கட்டிலும் ப்ரித்விக்கு சொந்தமாகி இருந்தது. இப்போது அவனுக்கு இரவு நேர பணி என்பதால், பகல் நேரத்தில் கட்டிட வேலைகளை பார்த்தபடி இங்கேதான் அமர்ந்திருப்பான்.
அதுபோக, தனியாக வேறு சில ப்ராஜக்ட் வேலைகளை ஒப்புக்கொண்டு இருக்கிறான். எல்லாம் வருமானத்தை பெருக்கும் வழிதான். அறைக்குள்ளேயே அடைந்து கிடைந்து வேலைப் பார்ப்பதற்கு, இங்கே மரத்திற்கு கீழே இயற்கை காற்றும் வெளிச்சமும் பட்டுக்கொண்டு சொகுசாய் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி வேலை செய்வது அவனுக்கு சுகமாய் இருந்தது போல.
அப்படி ப்ரித்வி அங்கே அமர்ந்து வேலை செய்வதைக் கண்ட வேம்பரசன் கூட “நீ இங்கன வந்து எப்படி பொருந்திப் போவியோன்னு நானும் அரசியும் ரொம்ப கவலைப்பட்டோம் ப்ரித்வி. ஆனா நீ நல்லாவே செட்டாகிட்ட..” என்று பேசியிருந்தார்.
“வர்றதுக்கு முன்ன, வந்த பிறகும் கூட நான் அப்படித்தான் தாத்தா நினைச்சு இருந்தேன். எனக்கு கண்டிப்பா இங்க செட்டாகதுன்னு நானே முடிவும் பண்ணிட்டேன். ஆனா நிஜம் அப்படியில்லைன்னு தோணுது தாத்தா. எனக்கு இங்க எதுவுமே சௌகர்ய குறைச்சலா இல்லவே இல்லை. புதுசா ஒரு அமைதி கிடைக்கிது இங்க…” என்று அவனும் தன் உள்ளத்து உணர்வை சொல்லியிருந்தான்.
அப்படித்தான் வெள்ளி இரவு வேலைக்கு அமர்ந்தவனுக்கு அது முடியவே சனிக்கிழமை காலை ஆறுமணி வரைக்கும் ஆகிட. எழுந்து முறித்தவன் சின்னதாய் ஒரு குளியலையும் போட்டுவிட்டு நேராய் கயிற்றுக்கட்டிலுக்கு சென்றுவிட்டான்.
அந்த காலை நேர சிலு சிலு காற்றும், அந்த காற்றோடு கலந்து வந்த இள வெயிலின் கதகதப்பும், வேப்பமரத்து பறவைகளின் ஒலியும் என்று எல்லாம் சேர்த்து அவனுக்கு கண்களை சொருக வைக்க, எப்படி உறங்கினான் என்றே தெரியவில்லை. அப்படியே அயர்ந்து உறங்கியும் போனான். இதுவும் அடிக்கடி நடக்கும் ஒன்றாகவே மாறியிருக்க வீட்டினர் யாரும் அதனை பெரிதாய் எடுக்கவில்லை.
அன்றும் அப்படி உறங்கிக்கொண்டு இருக்க, வினோதன் வந்து தான் அங்கே வேப்பரத்தின் அடியில் ஒருபக்கத்தில் அவனது பைக்கினை நிறுத்திவிட்டு, உறங்கும் ப்ரித்வியைப் பார்த்தவன் “ஹ்ம்ம் வாரம் தவறாம நானும் வர்றேன்.. இவனும் தூங்குறான். அவ வீட்டுக்குள்ளயேருப்பா போல..” என்று கிண்டலாய் எண்ணிக்கொண்டவன், பெரிய வீட்டினை ஒரு பார்வை பார்க்க, அவன் தேடிய எதுவும் அவன் கண்ணில் அகப்படவில்லை.
ஆனால் அவன் வந்து பைக் நிறுத்திய சத்ததிலேயே ப்ரித்வி கண் விழித்துவிட்டவன் “ஹாய் குட் மார்னிங் வினோதன்…” என்று சோம்பலாய் புன்னகைத்தவன், எழுந்தமர்ந்தான்.
“குட் மார்னிங் ப்ரித்வி. எழுப்பிவிட்டுட்டேனா…” என்றவன் அதே கயிற்றுக் கட்டிலில் அமர,
“இல்லல்ல.. சும்மா வந்து படுத்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல..” என்றவன் ராதாவிற்கு அழைத்து “ம்மா ரெண்டு காபி..” என்று சொல்ல,
“யாருக்கு ரெண்டு?!” என்று கேட்டார் ராதா.
“வினோதன் வந்திருக்கார் ம்மா..” என்று ப்ரித்வி சொல்லவும்,
“அட அங்கேயே உக்கார வச்சு பேசுவியா ப்ரித்வி. வீட்டுக்கு கூட்டிட்டு வா..” என்றார் வேகமாய். அம்மாவின் அருகினில் இருந்த பிருந்தாவிற்கும் இவர்களின் பேச்சு தெளிவாய் கேட்டது.
பிருந்தாவிற்க உள்ளுக்குள்ளே சட்டென்று ஒரு மலர்ச்சியும் படபடப்பும். ஆனால் அதை வெளிப்படுத்த முடியாதே. என்ன செய்வது என்று புரியாமல் மெல்ல எழுந்துகொண்டவளை, ராதா நிறுத்தியவர் “ரெண்டு காபி கலந்து கொண்டு போய் குடு பிருந்தா…” என்று சொல்ல, அம்மாவை இருக்கமாய் கட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது பிருந்தாவிற்கு.
வேகமாய் அடுப்படிக்குள் நுழைந்தவள் தானே காபி கலந்து அதில் கொஞ்சமாய் குடித்தும் பார்த்துக்கொண்டாள்.
“ப்பா பிருந்தா நீ கூட சூப்பரா காபி போடுற..” என்று தன்னை தானே மெச்சிக்கொண்டவள், அண்ணனுக்கும் வினோதனுக்கும் காபி கலந்து எடுத்துக்கொண்டு செல்ல, வினோதனுக்கோ பிருந்தா வருவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.
அவளைக் கண்டதுமே பூரித்துப்போன முகத்தை வெகு சிரமப்பட்டு அமைதியாய் வைத்துக்கொண்டவன், நடந்து வரும் அவள் மீதுதான் தன் மொத்த பார்வையும் வைத்திருந்தான்.
பிருந்தாவிற்கும் அப்படிதான். அண்ணனின் முன்னிலையில் எதையும் காட்டிக்கொள்ளவும் முடியாமல், அதேநேரம் வினோதனை தவிர்க்கவும் முடியாமல், அவர்களிடம் சென்றவள் “வாங்க..” என்றுமட்டும் அவனிடம் பேசியவள், காபியை முதலில் ப்ரித்விக்கு தான் கொடுத்தாள்.
“எடுத்துக்கோங்க வினோதன்..” என்று ப்ரித்வி அவனிடம் சொல்ல, வினோதனோ அடக்கப்பட்ட சிரிப்பினோடு பிருந்தா கொடுத்த காபியை வாங்கிக்கொள்ள, ப்ரித்வியோ அமைதியாய் பருகிக்கொண்டு இருந்தான்.
பிருந்தாவிற்கோ அங்கேயே நிற்கவும் சங்கடம், ஆனால் திரும்பச் செல்லவும் மனதில்லை. பேசாமல் அப்படியே நிற்க, வினோதனோ அவளை ஒரு பார்வை பார்ப்பதும், பின் காபி குடிப்பதுமாய் இருந்தான்.
ப்ரித்வி காபியை குடித்துமுடித்துவிட்டு, பிருந்தாவிடம் “என்ன பிருந்தா..?” என்று கேட்க,
“அது.. அ.. டம்பளர்..” என்று சொல்ல,
ப்ரித்வியோ “நாங்களே உள்ளதான் வர்றோம்..”
என்றவன் “வாங்க வினோதன்.. உள்ள வரலைன்னா, பாட்டி பின்ன என்னை தான் பேசுவாங்க…” என்று அழைக்க,
“ஓ! அப்போ பாட்டி பேசுவாங்கன்னு தான் இன்வைட் பண்றீங்களா ப்ரித்வி..” என்றவனும், தான் குடித்த காபி டம்ப்ளரை பிருந்தாவிடம் கொடுக்கவில்லை.
ப்ரித்வி வினோதனோடு பேசிக்கொண்டே நடக்க, அவனது அலைபேசி சிணுங்கவும் “உள்ள போங்க வினோதன். பிருந்தா கூட்டிட்டு போ. பேசிட்டு வந்திடுறேன்..” என்று சொல்லி, பக்கவாட்டில் நடந்துவிட, இருவருக்குமே ஒரே நேரத்தில் ‘அப்பாடி…’ என்ற பெருமூச்சு.
தன்னை போலவே மற்றவரிடமும் அதே பெருமூச்சு வெளிப்பட்டதும், இருவருக்குமே ஒரே நேரத்தில் சிரிப்பு வந்திட, ஒருவரை ஒருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
‘ஆண்டவா குறுக்கால எங்க கௌசிக்கும் வந்துடக் கூடாது..’ என்று நினைத்த வினோதன் வேகமாய் “பிருந்தா..” என்று அழைத்து அவளின் அலைபேசி எண்ணை கேட்க விளைய,
“அடடே வா வினோதா..” என்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான் வினோதன்.
வேம்பரசன் தான் வந்துகொண்டு இருந்தார்.
மனதோ ‘போச்சுடா..’ என்று எண்ணிக்கொண்டு “தாத்தா..” என்று சொல்லி நிற்க, பிருந்தாவின் முகமோ பாவமாய் மாறிப்போனது.
“வா ப்பா எப்போ வந்த? என்ன இங்க நிக்கிற?” என்றவரின் பார்வை பேத்தியை கேள்வியாய் தொட,
“வீடு வேலை எப்படி போகுதுன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன் தாத்தா. ப்ரித்வி ஒரு போன் வந்ததுன்னு போயிருக்கார்..” என்றவன், வேறு வழியில்லாமல் பெரியவரோடு பேசிக்கொண்டு நிற்க, பிருந்தாவும் வேறு வழியில்லாமல் வீட்டினுள்ளே செல்லும் நிலை.
ஆனாலும், இருவரும் ஒன்றாய் ஒரே நேரதில் கண்ணோடு கண்ணோக்கி முகம் மலர்ந்து பார்த்து சிரித்தது மனதிற்குள் பொக்கிஷமாய் பதிந்து போனது.
ப்ரித்விக்கு அலுவலக நண்பன் ஒருவனிடம் இருந்து அழைப்பு. அவனும் இரவு நேர பணியாளன் தான். இரவு இவர்கள் செய்திருந்த வேலையில் எதோ சந்தேகம் என்று கேட்டு அழைத்திருக்க, ப்ரித்விக்கு மீண்டும் அவனது மடிக்கணினியோடு அமரும் நிலை.
வினோதனோ பெரியவரோடு பேசிக்கொண்டே வீட்டினுள் வந்தவன், சம்பிரதாயமாய் அழகரசியோடும் பேசிவிட்டு, ராதா வந்து பேசியதற்கும் மரியாதைக்கு பதில் பேசி, யாரும் அறியாமல் பார்வையால் பிருந்தாவை தேடி அலசி, பின் அவள் எதோ வேலை செய்வதுபோல அங்கே வந்து நிற்கையில், கிளம்புகிறேன் என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு, அவளுக்குமட்டுமே சிறு தலையசைப்பை தனியாய் கொடுத்துவிட்டு சென்றான்.
பிருந்தாவும் போகும் அவனையே விழியகலாமல் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். மனது அவனை கண்டத்தில் மகிழ்ச்சி கொண்டாலும், ஒருவித கனம் உணர்வதாய் இருந்தது.
அழகரசி பிருந்தாவிடம் என்னவோ கேட்டதற்கு கூட “ என்ன பாட்டி..?” என்று இரண்டுமுறை புரியாமல் கேட்டு விழிக்க,
“சரிதான் போ.. என்னாச்சு உனக்கு? ராதா உன் பொண்ணுக்கு என்னவோ ஆச்சு கோவிலுக்கு கூட்டிட்டு போய் மந்திரிச்சு கூட்டிட்டு வரணும் போல..” என்று கேலி செய்ய,
“பாட்டி..” என்று சிணுங்கியவள், அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.
உள்ளிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் வினோதன் சென்றுவிட்டானா இல்லையா என்பது தெரியுமே. அவன் செல்லவில்லை, அங்கே செங்கல் அடுக்கிக்கொண்டு இருந்த ஒருவரோடு நின்று பேசிக்கொண்டு இருந்தவனும், அடிக்கடி வீட்டின் பக்கம் தான் பார்க்க, கண்டுகொண்டான் பிருந்தா ஜன்னல் பக்கம் நிற்பதை.
‘எப்படியாவது மொபைல் நம்பர் வாங்கிடு..’ என்பதுதான் இருவரின் எண்ணமாய் இருக்க, அதற்கான வழி தான் காணவே இல்லை.
இருவருக்குமே ஒரு ஏக்கப் பெருமூச்சு மட்டுமே விட முடிய, அங்கே மீனாளோ ப்ரித்வியை காண வேண்டும் என்று தவியாய் தவித்துக்கொண்டு இருந்தவளின் மனதினை எதை சொல்லி சமன் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
வார விடுமுறைதான். முதலில் எல்லாம் தயங்காமல் அவள் சொந்த வீடுபோல ஆச்சியைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பிச் செல்வாள். ஆனால் இப்போது அப்படிச் செல்லவே அவளால் முடியவில்லை.
தானாய் வந்து ஒரு துடிதுடிப்பு அவளுள் அமர்ந்து கொள்கிறது. அங்கே சென்றாலும் கூட யாரோடும் இயல்பாய் பேசவும் முடியவில்லை. அதைக்காட்டிலும் அவளைத் தொட்டுத் தொடரும் ப்ரித்வியின் பார்வையும், அப்பார்வை கேட்கும் கேள்வியும் அவளை தன்னிலை மறக்கவே செய்கிறதே.
‘ச்சே ஆனாலும் இந்த ப்ரித்வி மாமாக்கு இத்தனை இருக்கக் கூடாது. அன்னிக்கு போட்டோ அனுப்பினதும் அனுப்பிட்டு அடுத்து என்னன்னு கூட கேட்கலை..’ என்று வழக்கம் போல குறைப்பட்டுக் கொண்டவள்
‘ஆச்சியை பார்த்தும் நாளாச்சு. போய் பார்த்துட்டு வரலாமா?!’ என்றும் யோசிக்க,
சந்திரா அங்கே வந்தவர் “மீனா ஆச்சிக்கிட்ட போய் இந்த வெந்தய களி குடுத்துட்டு வர்றியா?” என்று கேட்க,
“அ.. என்னம்மா?!” என்றாள் திகைத்து.
“என்னடி?!” என்று மகளின் முகத்தினைப் பார்த்தவர் “ஆச்சிக்கிட்ட போய் இந்த வெந்தய களி குடுத்துட்டு வரச் சொன்னேன்..” என,
‘ஆகா..!’ என்று பொங்கி பூரித்த மனதினை ‘அடங்கு..’ என்று அடக்கிவிட்டு “இதே வேலையா போச்சு உங்களுக்கு..” என்று சொல்லிக்கொண்டே, அவர் கொடுத்த வயர் பையை வாங்கிக்கொண்டு வேகமாய் நடையை கட்டினாள்.
வினோதனோ பிருந்தா ஜன்னல் விட்டு நகரும்வரைக்கும் தானும் நகரப் போவதில்லை என்பதுபோல அங்கேயே நிற்க, அதே நேரதில் மீனாளும் களி கொண்டுவரும் சாக்கில் அவளின் மாமனைக் காண வர, ப்ரித்விக்கோ வேலையில் தன் நண்பன் கேட்ட சந்தேகத்தை தெளிவுபடுத்தியவனுக்கு உள்ளூர சட்டென்று ஒரு உணர்வு.
ஐம்புலனும் அட்டன்சனில் நிற்க ‘செல்லம்…’ என்று மனது முணுமுணுத்து அவனின் தங்காவின் வருகையை உள்ளுணர்வு காட்டி கொடுத்துவிட்டது.