மனித மனம் விசித்திரமானது. எதிரிகளுக்கு கூட இறங்கும். அடித்தவரைக் கூட அணைக்கும். அன்புக்கு அடிமையாக இருக்கும். அப்படி இருக்க மீனா மட்டும் விதி விலக்கா என்ன? கடன் காரனா கூட நீ எனக்கு வேண்டாம் என்று ஒரு நொடியில் சொல்லி விட்டுச் சென்று விடலாம். ஆனால் அவளால் அது முடிய வில்லை. அவனையே பார்த்த படி நின்று விட்டாள்.
அவள் பார்வையில் ஒரு ஆராய்ச்சியுடன் கூடிய நேசம் தெரிய அவனும் அவளை சளைக்காமல் பார்த்தான். இந்த முறை இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் கவ்விக் கொண்டது. அவள் மனதை ஆழம் பார்த்து தான் அந்த வரியை சொன்னான் அவன். அவன் அவளை பார்த்த படியே இருக்க அவள் பார்வையை விலக்கி கொள்ள எல்லாம் இல்லை.
“என்னைக்கு உன்னைப் பார்த்தேனோ அன்னைக்கே நீ என் மனசுல வந்துட்டன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் அழகி. ஏன்னா பல மாசமா நீ என் பஸ்ல வந்துட்டு தான் இருக்க. அப்ப எல்லாம் உன்னை கவனிச்சது கூட இல்லை. உன்னை மட்டும் இல்லை. இது வரை எந்த பெண்ணையும் நான் ஏறெடுத்துப் பார்த்தது இல்லை”, என்று சொல்ல “எனக்கு தெரியும்”, என்றாள் அவள்.
அவளை நோக்கி வியப்பான பார்வையை பார்த்தவன் “அன்னைக்கு உன்னை திட்டினப்ப சிரிச்சிட்டு இருந்த பிள்ளையை கஷ்ட படுத்திட்டேன்னு ஒரு மாறி இருந்துச்சு. மறுபடி உன்னை சிரிக்க வைக்க தோணுச்சு. உன் வாழ்க்கை பத்தி கேட்டப்ப அவ்வளவு கோபம் வந்துச்சு. நீ அன்னைக்கு யாரும் இல்லாம நின்னப்பா என் வீட்டுக்கு தான் கூட்டிட்டு போக தோணுச்சு. ஆனா உரிமை இல்லையே. அதுக்கப்புறம் உன்னைப் பாக்காத இந்த ஒரு வாரம் நான் நானா இல்லை டி. நீ என் வாழ்க்கை முழுமைக்கும் வேணும்னு தோணுது. உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். என் மனசுல பட்டதை சொல்லிட்டேன். இனி நீயா தான் முடிவு எடுக்கணும். உடனே சரின்னு சொல்லனும்ன்னு நானும் எதிர் பாக்க மாட்டேன். வேற யாரையாவது பிடிச்சிருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் முடிவு எடு மா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேற வாழ்க்கைனாலும் தேர்ந்தெடுத்துக்கோ. ஆனா நான் உன் வாழ்க்கைல கடங்காரனா எப்பவும் உன் கூட இருப்பேன். இல்லை அப்படி கூட உனக்கு நான் வேண்டாம்னா அந்த பணத்தை அனுப்பி வச்சிரு. யோசிச்சு முடிவு பண்ணு பை”, என்று சொன்னவன் அவள் மறுப்பாக ஏதாவது சொல்லி விடுவாளோ என்று பயந்து பேருந்தில் டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்து விட்டான்.
அவள் அவனையே பார்த்துக் கொண்டு பாவமாக நிற்க அதைக் கண்டவனுக்கு அப்படியே அவளை தூக்கிச் செல்ல வேண்டும் போல இருந்தது.
அவனுக்கு தயக்கம் தான் அவளிடம் எப்படி காதலைச் சொல்ல என்று. ஏதோ ஒரு படபடப்பில் எப்படியோ சொல்லி விட்டான். இப்போதும் காதலைச் சொன்னானா இல்லையா என்று அவனுக்கே குழப்பம் தான். கூடவே தன்னுடைய வீட்டில் என்ன சொல்வார்கள் என்று பயமும் இருந்தது. அவளும் சரி என்று சொல்லுவாளா என்று நிச்சயமாக தெரியவில்லை.
கதிர் வந்து விசில் ஊதியதும் அவன் அவளை பார்த்த படி பேருந்தை எடுக்க அப்போது தான் மீனா நடப்புக்கு வந்தாள். வதனா அவளுக்கு பாய் சொல்ல இவளும் அவளுக்கு கை ஆட்டி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தாள். மனது ஒரு மாதிரி தடுமாற்றத்தில் எங்கெங்கோ வலம் வந்தது.
பழைய வாழ்க்கையின் சுவடுகள் எதுவும் நினைவில் வராமல் அவனைப் பற்றிய நினைவுகள் மட்டும் மனதில் வந்தது. ஏனோ முதல் முறையாக அவன் முகம் அவன் செய்கை அவன் பேச்சு எல்லாமே நினைவில் படமாக ஓட ஏனோ முதல் முறை காதலிக்கப் படுவதில் இருக்கும் சுகத்தை உணர்ந்தாள். இன்று ஆன்லைன் கிளாஸ் இருப்பதால் கடினப் பட்டு அவனிடம் இருந்து கவனத்தை திசை திருப்பினாள்.
ஆனாலும் அவள் மனது அவன் பக்கம் தான் சென்றது. தாமரை அழகு தான். வேலையும் அரசு உத்தியோகம் தான். உதவுவதில் நல்லவன் தான். ஆனாலும் பயமாக இருக்கிறதே அவளுக்கு. அவள் கணவனும் நல்லவன் போல தான் காட்சி அளித்தான்.
சூடு கண்ட பூனையாக அவள் மனம் அவனை நம்ப மறுத்தது. அதற்காக அவளுக்கு இன்னொரு துணை வேண்டும் என்ற ஆசையும் இல்லாமல் இல்லை. தனக்கென்று ஒரு குடும்பம், கவலையில் சாய்ந்து கொள்ள தோள் என அவளுக்கும் எதிர்பார்ப்பும் ஏக்கங்களும் இருக்கிறது தான்.
அவள் இந்த குழப்பத்தில் இருக்க அப்போது ராஜனிடம் இருந்து அழைப்பு வந்தது. தன்னைப் பற்றி தாமரை ஏதாவது சொல்லியிருப்பானோ என்ற குழப்பத்தில் அதை எடுத்தவள் “சொல்லுங்கண்ணா”, என்றாள்.
“உங்க வீட்ல ஒரு பிரச்சனை மா”
“என்ன ஆச்சு அண்ணா?”, என்று சிறு எரிச்சல் கலந்த பதட்டத்துடன் கேட்டாள். தான் சற்று நிம்மதியாக இருந்தால் இவர்களுக்கு பிடிக்காதே என்று கடுப்பாக வந்தது.
“எங்க அம்மா ரொம்ப நேரமா உங்க வீடு பூட்டியே கிடக்கறதை பாத்துட்டு சந்தேகப் பட்டு என் கிட்ட சொல்லுச்சு. நாங்க எல்லாரும் போய் தட்டிப் பாத்தோம் திறக்கலை. கூப்பிட்டு பாத்தோம். சத்தமே இல்லைன்னதும் பயத்துல கதவை உடைச்சிட்டு தான் உள்ள போனோம். அங்க..”
“என்ன ஆச்சு அண்ணா?”, என்று உண்மையான பயத்தில் தான் கேட்டாள்.
“உங்க அப்பா பேச்சு மூச்சு இல்லாம இருந்தார். உங்க அம்மாவ தேடுனா அதுவும் அப்படி தான் கிடந்துச்சு. பத்தாததுக்கு உங்க அம்மா கையை வேற அறுத்து ரத்தமா கிடந்துச்சு. நாங்க எல்லாரும் சேந்து ஆஸ்பத்திரில சேத்துருக்கோம். தற்கொலைன்னு போலீஸ்க்கு தகவல் கொடுத்துட்டாங்க. நீ இங்க கொஞ்சம் வரியா மா. டீரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு. கொஞ்சம் பொறுமையா வா”, என்று சொல்ல “சரி அண்ணா வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவளுக்கு வாழ்க்கை தனக்கு இன்னும் என்ன எல்லாம் வைத்திருக்கிறதோ என்று பயமாக இருந்தது.
“இப்ப சாகுற அளவுக்கு என்ன நடந்துச்சு ரெண்டு பேருக்கும்?”, என்று குழம்பியவள் உடனே தன்னுடைய சாருக்கு அழைத்து தான் எடுக்க வேண்டிய வகுப்பை வேறு ஆளுக்கு மாற்றி விடச் சொல்லி விட்டு விடுதியிலும் தகவல் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
அவள் போன போது போலீஸ் அங்கு இல்லை. ஆனால் இப்போது வருவார்கள் என்று சொன்னார்கள். என்ன செய்ய என்று தடுமாறி நின்றவளுக்கு அழுகையாக வந்தது.
அங்கிருந்த சேரில் நிலை குழைந்து போய் அமர்ந்திருக்க “மீனா”, என்ற ராஜனின் குரலில் நிமிர்ந்து பார்த்தாள். அவன் அருகே தாமரையும் அவளையே பார்த்த படி நின்றிருக்க ஏனோ ஒரு தைரியம் வருவதை உள்ளுக்குள் உணர்ந்தாள்.
அந்த உணர்வு அவளுக்கே புதியதாக தான் இருந்தது. ராஜனைக் கண்டதும் சந்தோஷம் வந்திருக்கும் தான். ஆனால் அந்த தனிமையும் பயமும் ஓடி இருக்குமா என்று தெரியாதே. ஆனால் தாமரையைக் கண்டு அந்த உணர்வு வருவதை அவளே உணர்ந்தாள். ஏனோ அவன் தன்னுடைய மனதில் ஒரு ஓரத்தில் பதிந்து விட்டான் என்று புரிந்தது.