“உன்னோட அழுக்கு துண்டை யாரும் தொடக்க கூட மாட்டாங்க அண்ணா. கண்டிப்பா அது அந்த சீட்ல தான் கிடக்கும்”, என்றாள் கலை.
“ஆமா ஆமா, அதை துவைச்சா தான் என்னவாம்?”, என்று வதனாவும் கேட்க அவன் அவர்களை முறைத்துப் பார்த்தான்.
பதிலுக்கு அவனை ஒரு பார்வை பார்த்தவர்கள் “வறோம் அக்கா”, என்று சொல்லி விட்டு பேருந்தில் ஏறி விட்டார்கள். அவர்கள் போன பின்னும் இருவரும் அமைதியாக இருக்க “மாப்பிள்ளை இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. நான் டீ குடிச்சிட்டு வரேன்”, என்றவன் அவளிடமும் “வரேன் மா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
இப்போது இருவர் மட்டும் தனித்திருக்க தாமரை அவளைப் பார்த்த படியே இருந்தான். கதிர் போன பக்கம் பார்த்த மீனா அவன் புறம் திரும்ப அவன் பார்வையில் ஒரு மாதிரி மூச்சடைத்துப் போனது.
அவள் பார்க்கிறாள் என்று தெரிந்த பிறகும் அவன் ரசனைப் பார்வையை மாற்றிக் கொள்ள வில்லை. சாதரணமாக பேச முயன்றவளுக்கு அந்த பார்வை எதுவோ செய்ய தலையை உதறிக் கொண்டவள் “உங்களுக்கு பணம் கொடுக்கணும்னு தான் வந்தேன். ஜிபே இருக்கு தானே? அனுப்பிறவா?”, என்று கேட்டாள்.
“எதுக்கு?”, என்று பதில் கேள்வி கேட்ட அவனை திகைத்து பார்த்தாள்.
“எனக்கு புரியலை. உங்களுக்கு கொடுக்கணும் தானே? ஆஸ்பத்திரிக்கு கொடுத்தீங்க. ஹாஸ்டல்க்கு கொடுத்தீங்க? அது தான். எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா அனுப்பிருவேன்”
“அது வேண்டாம், உன் கிட்டயே இருக்கட்டும். சரி நல்லா இருக்க தானே?”, என்று கேட்க அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று கூட தெரிய வில்லை.
அவள் திகைத்த படி அமைதியாக இருக்க “சரி நீ போ. ரொம்ப நேரம் நின்னா எல்லாரும் ஒரு மாதிரி பாப்பாங்க”, என்றான்.
மேலும் திகைத்துப் பார்த்தவள் “நான் பணம் அனுப்பிறேன். கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தாள்.
அடுத்த நொடி “ஏய் அழகி”, என்ற அவன் குரல் ஆர்ப்பாட்டமாக கேட்க அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்த படி சிரித்துக் கொண்டிருந்த தாமரை மெதுவாக அவள் அருகே வந்தான்.
“இவன் தன்னையா அப்படி அழைத்தான்?”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “உன்னை தான் கூப்பிட்டேன். மீனாவை விட என்னமோ உனக்கு அழகி தான் நல்லா இருக்குன்னு தோணுது”, என்று சொல்ல திகைப்பாக அவனைப் பார்த்தவள் “அப்படி எல்லாம் கூப்பிட வேண்டாம்”, என்றாள்.
“நான் கூப்பிடுவேன். எனக்கு இனி அழகி தான். அப்புறம் பணமும் கொடுக்க கூடாது. கொடுத்தேன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்”
“என்ன விளையாடுறீங்களா? எனக்கு யார் கிட்டயும் கடன் வைக்கிறது பிடிக்காது”
“அப்படின்னா எனக்கு வரதட்சணை வாங்குறது பிடிக்காது”, என்று சொல்ல நே என்று விழித்தாள்,.
ஏனோ அவன் உரிமையான பேச்சு அப்போது தான் அவளுக்கு புரிய ஆரம்பிக்க அவனைப் முறைத்துப் பார்த்த படி நின்றாள்.
“என்ன டி பார்வை இது? அப்பா ஒரு மாறி ஜிவ்வுன்னு இருக்கு. இப்படி எல்லாம் பாத்தா உன் விருப்பம் எல்லாம் பாக்க மாட்டேன். அப்படியே தூக்கிட்டு போயிருவேன்”, என்றான்.
“இவன் இப்படி எல்லாம் பேசுவானா?”, என்று அவள் அதிர்ந்து பார்க்க அது புரிந்தோ என்னவோ “உன் கிட்ட இப்படி தான் பேச வருது. ஓவரா போறேனோ?”, என்றான்.
அவள் அமைதியாக இருக்க “அழகி ஏதாவது பேசு டி”, என்றான்.
“உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?”, என்று சத்தமாக கேட்டவள் “இருக்குற பிரச்சனைல இவன் வேற?”, என்று முணுமுணுத்தாள்.
“பிரச்சனைனையை ரொம்ப நாள் தூக்கி சுமக்க கூடாது அழகி. அங்க அங்க இறக்கி வச்சிட்டு நிம்மதியா இருக்கணும். இனி நான் உனக்கு இருக்கேன். உன் பிரச்சனை எதுவா இருந்தாலும் அதை என் மேல இறக்கி வச்சிரு”
“என்ன வாழ்க்கை பிச்சை போட நினைக்கிறீங்களா? பரிதாபாமா என் மேல?”
“நினைக்கலை முடிவே பண்ணிட்டேன். எனக்கு நீ தான் வேணும். என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோ”
“பைத்தியமா நீங்க? உங்க பேச்சுல மயங்கி பின்னாடி வர நான் ஒண்ணும் டீனேஜ் பொண்ணு கிடையாது. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு இருக்கா”
“அந்த குழந்தை உனக்கு வேணுமா? நாம அவன் கிட்ட இருந்து வாங்கிறலாம்? இனி அது நம்ம குழந்தையா வளரட்டும்”, என்று அவன் சொன்னதும் அது கற்பனைக் காட்சியாக அவள் கண்ணில் விரிய ஒரு நொடி அவள் முகம் மலர்ந்தது.
அதை கவனித்தவன் “ரொம்ப அவசர படுறேனு நினைக்காத அழகி. நானும் இப்பவே இதை எல்லாம் பேசணும்னு நினைக்கலை. என்னை மீறி சொல்லிட்டேன் தான். இது சாதாரண விஷயம் இல்லை தான்”, என்றான்.
அவன் பேச்சில் சுதாரித்தவள் “நமக்குள்ள எதுவும் இல்லை. எதுவும் ஒத்தும் வராது. உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணா கிடைப்பா. நான் இங்க நடந்ததை மறந்துறேன். நீங்களும் மறந்துருங்க”, என்றாள்.
“இங்க நடந்ததை உன்னால எப்பவும் மறக்க முடியாது அழகி. அவ்வளவு ஈஸியா மறந்து போற விஷயத்தை நான் பேசலை. உன்னால அவசரப் பட்டு எதையும் முடிவு பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியும். இப்ப நீ யாரையும் நம்புற மனநிலைல இல்லை. உன்னை நம்ப வைக்க எனக்கு சில நாட்கள் ஆகலாம். ஆனா பேசுறப்ப எல்லாம் என் மனசை உன் கிட்ட சொல்லிக்கிட்டு தான் இருப்பேன். இவ்வளவு நாள் நமக்குள்ள ஒண்ணும் இல்லை தான். ஆனா இனி நமக்குள்ள ஏதோ ஒண்ணு இருந்துட்டே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் உன் மனசை விட்டு போக மாட்டேன். என்னை நீ மறக்கணும்னு நினைச்சாலும் நீ என்னை நினைச்சிட்டு தான் இருப்ப”
“ஐயோ டா, இவர் பேசிய அப்பாட்டக்கர். இவரை நினைச்சிட்டே இருக்க போறாங்க”, என்று நக்கலாக கேட்டாள். இப்படி சாதாரணமாக பேசுவது தான் அவள் இயல்பு என்றும் தனக்குள் ஒரு வேலி கட்டிக் கொண்டு அவள் அமைதியாக வலம் வருகிறாள் என்றும் அவனுக்கு புரிந்தது.
“பாக்கலாம் நீ என்னை நினைக்காம இருக்கியான்னு. புரோபோஸ் பண்ணிருக்கேன் மா. அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்ட. எனக்கு தெரிஞ்சு உன் முதல் காதல் கூட நானா இருக்கலாம்”
“அப்படியா?”, என்று அவளுக்கே கேள்வி எழ தலையை உதறிக் கொண்டவள் “தேவையில்லாதது எதுவும் பேச வேண்டாம், நான் பணம் கொடுக்க தான் வந்தேன்,. அதை அனுப்பிறேன்”, என்றவள் போனை எடுக்க “அந்த பணத்தை நீ எப்பவும் அனுப்ப கூடாது அழகி”, என்று கட்டளையாக வந்தது அவன் குரல்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க “சாரி, என் மனசை உன் கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன். அதுக்கு நீ உடனே சம்மதம் சொல்லணும்னு எதிர் பாத்திருக்க கூடாது. இனி இப்படி பேச மாட்டேன். உன்னை தொல்லை பண்ணக் கூடாதுன்னா இனி பண்ண மாட்டேன். உண்மைலே உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா நான் எங்க வீட்ல பேசலாம்னு நினைச்சேன். உனக்கு விருப்பம் இல்லைன்னா உன்னை தொல்லை பண்ண மாட்டேன். நானும் ரெண்டு தங்கச்சிங்க கூட பிறந்தவன் தான். ஆனா ஏதாவது ஒரு விதத்துல நான் உன் லைப்ல இருக்கணும்னு ஆசைப் படுறேன். அட்லீஸ்ட் கடன் காரனாவது உன் லைப்ல நான் இருந்துக்குறேன். உனக்கு யாருமே இல்லைன்னு தோணுறப்ப எல்லாம் ஒரு கடன்காரன் உனக்குன்னு இருக்கான்னு நினைச்சிக்கோயேன்”, என்று சொல்ல அவள் அவனை அவ்வளவு திகைப்பாக பார்த்தாள்.
பாசம் காட்ட, தன்னை நேசிக்க, தனக்காக உருக ஒரு ஜீவானாவது தனக்கென்று இருக்காதா என்று ஏங்கும் அவளிடம் இப்படிச் சொன்னால் அவளால் எப்படி சாதாரணமாக அவனை கடக்க முடியுமாம்?