பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை செய்தால் சட்டம் கடுமையாக பாயும் என்பதால் அந்த கயவனும் அவளிடம் நெருங்க வில்லை. ஆனாலும் அவன் எதிரே வர அவளுக்கு பயம் தான்.
சில நேரம் அவளுக்கு தன்னையே புழுவை பார்ப்பது போல தான் தோன்றியது. ஒரு மாதிரி அருவெறுப்பும் அவமானமும் அவள் மனதில் அப்படியே பதிந்து கிடந்தது.
வசுந்தரா வேறு ஒடிப் போய் விட அதற்கு பிறகு வடிவு அந்த கோபத்தை எல்லாம் காட்டியது அழகு மீனாவிடம் மட்டுமே. அனைத்தையும் தாங்கிக் கொண்டாள். வேறு வழியும் அவளுக்கு இருக்க வில்லை.
ஒரு வழியாக முட்டி மோதி கல்லூரி முடித்து வேலை சரியாக அமையாததால் ஒரு இசேவை மையத்தில் தற்காலிகமாக பணி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு தேடி வந்த வரன் தான் மகேஷ்.
எந்த உறவும் சரியாக அமையாத அழகு மீனா தனக்கு வரும் கணவனை ஒரு ஆண் தேவதையாக தான் பார்த்தாள். அவன் பிடித்திருக்கிறது என்று சொன்னது தான் தாமதம் அவன் மேல் உயிரையே வைத்து விட்டாள்.
இயல்பாக பெண் பார்க்கும் படலம் நிச்சயதார்த்தம் திருமணம் என அனைத்தும் நல்ல படியாகவே நடந்தது. வசுந்தராவுக்கு பெரிய அளவில் திருமணம் செய்ய முடியாத வருத்தம் இருந்தாலும் ஊரார் வாய்க்காக இதை நல்ல படியாகவே செய்தார்கள். அவளுக்கு என நகை கூட சிறிது போட்டாள் வடிவு. அதுவும் அவளது இறந்து போன தாய்மாமன் அவளுக்கு வாங்கிக் கொடுத்தது தான். ஆனால் அதை எப்படி வசுந்தராவுக்கு கொடுக்காமல் தனக்கு கொடுக்கிறாள் என்று குழப்பம் இருந்தது தான். ஆனால் விடை தான் கிடைக்க வில்லை. ஒரு வேளை ஊருக்காக கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.
மகேஷ் குடும்பமும் நல்லவர்களாக தான் முதலில் தெரிந்தார்கள். அவனுடன் பிறந்தது ஒரு தம்பி தங்கை. மகேஷை தவிர வேறு யாரும் மீனாவிடம் அவ்வளவு ஒட்டுதல் எல்லாம் காட்ட வில்லை. அவன் மேல் இருந்த பிடித்தத்தால் அவள் அதை பெரிதாக நினைக்கவும் இல்லை.
திருமணம் என்றதும் இயல்பாக ஒரு பெண்ணுக்கு வரும் உணர்வுகள் அனைத்தும் இப்போது அவளிடம். தன்னுடைய வாழ்வில் நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லி அழ வேண்டும் என்று ஒரு நொடி நினைத்தாள் தான். ஆனால் அதுவே அவள் வாழ்வை திசை திருப்பி விடக் கூடாது என்று எண்ணி அமைதியாக இருக்க முடிவு எடுத்தாள்.
மகேஷின் அன்னை கல்யாணி, அவன் தந்தை சோமசுந்தரம் இருவரையும் தான் இனி தன்னுடைய தாய் தந்தையாக பார்க்க வேண்டும் என்ற நினைப்பும் இனி வாழ்வு நன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்போடும் தான் புகுந்த வீட்டில் கால் வைத்தாள் அழகு மீனா.
ஆனால் அதுவும் அவள் குடியிருக்க போகும் சவக்குழி என்று அப்போது தெரியாமல் தான் போனது. திருமணம் முடிந்த முதல் நாள் இரவு, அவள் கனவுகளுடன் சேலை கட்டி தயாராக இருக்க அறைக்குள் வந்த மகேஷ் இயல்பாக தான் பேசினான்.
பின் “முதல் நாளே எதுவும் வேண்டாம் மீனா. ரொம்ப டயர்டா இருக்கு டா. தூங்கலாம்”, என்று சொல்ல சிறு ஏமாற்றம் வந்தாலும் சரி என்று தலையசைத்து விட்டு படுத்தாள்.
ஆனாலும் ஒரு சின்ன தொடுகை கூட இல்லாமல் இருப்பது ஒரு மாதிரி கஷ்டமாக தான் இருந்தது. உனக்காக நான் இருக்கேன் எப்பவும் நான் இருப்பேன் என்று அவன் சொல்ல வேண்டும் என்றும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட கானல் நீராக தான் போனது.
காலையில் அவள் எழுந்து குளித்து முடித்து வெளியே வர “உன் அத்தை எந்திக்க நேரம் ஆகும் மா. ஒரு காப்பி போட்டு தரியா?”, என்று கேட்டார் சோமசுந்தரம்.
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.
அன்றைய நாள் அப்படி ஆரம்பிக்க சிறிது நேரம் கழித்து தூங்கி எழுந்த மகேசும் அவளிடம் நன்கு பேசினான். கல்யாணியும் நன்கு பேசினாள் தான். ஆனால் சமையல் அறையில் நின்று கதை பேசினாளே தவிர மீனாவுக்கு சிறு உதவி கூட செய்ய வில்லை.
இட்லி, சட்னி, சாம்பார் என்று செய்து முடிக்க “சின்னவனுக்கு இட்லி பிடிக்காது மா. பூரி கிழங்கு வச்சிரு. அப்புறம் பெரியவனுக்கு தோசை சுட்டுக்கலாம்”, என்றாள்.
“இது வேறயா?”, என்று எண்ணம் வந்தாலும் “சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு இன்முகமாவே செய்தாள். (கல்யாணம் ஆகாதவங்க இருந்தா ஒரு வேண்டுகோள். என்ன தான் சமையல் தெரிஞ்சாலும் கல்யாணம் முடிஞ்சு போனதும் சத்தியமா சமையலே தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சிக்கோங்க. பொய்மையும் வாய்மை இடத்து)
அன்றைய நாள் இரவில் அவன் அவளிடம் நெருக்கம் காட்ட அவள் கேட்க வந்த கேள்விகள் கூட அவன் தொடுகையில் மறைந்து தான் போனது. நாட்கள் வாரங்களாக கடக்க கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருக்கும் அனைவரின் குணநலன்களை எல்லாம் உள்வாங்க ஆரம்பித்தாள்.
சோமசுந்தரம் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிந்து ரிட்டயர்ட் ஆனவர். அதனால் அவர் எப்போதும் வீட்டில் தான் இருப்பார். அவருக்கு என பன்னிரெண்டாயிரம் பென்ஷன் வருகிறது. கல்யாணியும் இல்லத்தரசி தான்.
மகேஷ் ஒரு பிரைவேட் பேங்கில் பணிபுரிகிறான். அவனது தம்பி கிஷோர் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கிறான். தங்கை வினோதா இப்போது தான் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறாள்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து கோலம் போட்டு என ஆறு மணிக்கு சமையல் அறையில் வேலை துவங்கும் மீனாவுக்கு.
அனைவருக்கும் டிபன் செய்வது மதியம் லஞ்ச் செய்வது அதை அவர்களுக்கான தனித் தனி டப்பாக்களில் அடைப்பது எழுந்து வரும் ஒவ்வொருவருக்கும் காப்பி கொடுப்பது என நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
இத்தனை நாள் கல்யாணி இவ்வளவு வேலைகளை செய்திருக்கிறாள் என்று அவளை எண்ணி ஆச்சர்யமாக இருந்தது மீனாவுக்கு. ஆனால் அவளுக்கு தெரியாத உண்மை அங்கிருக்கும் அனைவரும் முக்கால்வாசி நேரம் தங்கள் உணவை ஹோட்டலில் தான் உண்பார்கள். அடிமை போல ஒரு மருமகள் கிடைத்தால் அதுவும் பணமும் செலவழியாமல் என்றால் சும்மா இருப்பார்களா?
அனைவரும் கிளம்பிச் சென்றதும் காலை பதினொரு மணிக்கு தான் ஓய்வு என்பதே கிடைக்கும் மீனாவுக்கு. அதுவும் பன்னிரெண்டு மணி வரை தான். அதற்கு பின் துணி ஒரு மூட்டை இருக்கும்.
அவர்கள் வீட்டிலும் வேலை, சமையல் எல்லாம் செய்வாள் தான். ஆனால் இங்கோ ஆட்கள் அதிகம், வேலையும் அதிகம். சில நேரம் கல்யாணி மற்றும் வினோதா இருவரும் சிறு உதவியாவது செய்யலாமே என்று தோன்றும் மீனாவுக்கு. ஆனால் அவளே கேட்க முடியாதே. அவளுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் கிஷோர் மற்றும் சோமசுந்தரத்தின் உள்ளாடைகளைக் கூட துவைப்பது. என்ன தான் தந்தை போன்று தம்பி போன்று அவள் நினைத்தாலும் அந்த மரியாதையை அவர்கள் கொடுத்தால் தானே அவளால் செய்ய முடியும்?
முதல் நாள் சோமசுந்தரம் நன்றாக பேசியதோடு சரி அதற்கு பிறகு எல்லாம் ஏய் அதை செய், ஏய் இதை செய் என்று மட்டும் தான் அவர் பேச்சு இருக்கும். கிஷோர் அவளை அண்ணி என்று கூட அழைக்க மாட்டான்.
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எனக்கு வாழைக்காய் பிடிக்காதுன்னு தெரியாது. அதை போய் அடைச்சு வச்சிருக்கீங்க?”, என்று சத்தம் போடுவான். இப்படி இருக்க அவர்கள் மீது பாசம் எப்படி வரும்?
முதல் மாதம் மாதவிலக்கு வந்த போது கல்யாணி அவளிடம் “ரொம்ப எதிர் பாத்தேன். போச்சா”, என்று கேட்டாள்.
“ஒரு மாசம் தானே அத்தை ஆகி இருக்கு”, என்று சொல்ல வாய் வந்தாலும் அதை அவள் கேட்க வில்லை. அவள் கேட்டாலும் எதிர்த்து பேசாதே என்ற கமெண்ட் வரும் என்பதால் வாயை மூடிக் கொண்டாள்.