ஹாஸ்டல் அறையில் அவளுக்கு கொடுத்திருந்த கட்டிலில் படுத்திருந்தாள் அழகுமீனா. புது இடம் என்பதால் அவளுக்கு தூக்கம் வர வில்லை.
இன்று நடந்தது மட்டும் அல்ல. அவள் வாழ்வு முழுமையும் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே அவள் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது. கடந்து வந்த அத்தனை பாதையிலும் அவள் கண்டது முட்கள் மட்டுமே.
சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் சாதாரண வாழ்க்கை அவள் வாழ வில்லை. விவரம் தெரிந்ததில் இருந்து அவள் சந்தோஷமாக எல்லாம் இருந்தது இல்லை. அந்த அளவுக்கு அவள் குடும்பத்தில் டார்ச்சல் மட்டுமே அனுபவித்திருக்கிறாள்.
வீட்டில் அவளது பெற்றவர்கள் அவளை ஒரு மாதிரியும் அவளுடைய அக்காவை ஒரு மாதிரியும் தான் கவனித்தார்கள். வசுந்தரவுக்கு எல்லாமே கிடைக்கும். ஆனால் இவளுக்கு எதுவுமே கிடைக்காது.
உரிமையாக எனக்கு வேண்டும் என்று கேட்ட போதும் அவளுடைய அம்மாவும் சரி அப்பாவும் சரி அவளை அடிக்க ஆரம்பிக்க அதற்கு பின் உரிமையாக கேட்பதையே குறைத்துக் கொண்டாள்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போதே அவளை ஒரு பேன்சி ஸ்டோரில் வேலைக்கு சேர்த்து விட்டாள் வடிவு. பள்ளி முடிந்து வந்ததும் லீவ் நாளும் அங்கே சென்று விடுவாள். விளையாடும் ஆசையில் அவள் போக மாட்டேன் என்று சொன்னால் அந்த அளவுக்கு அடிப்பாள் வடிவு. உடலில் அவ்வளவு காயம் அவள் அன்னையால் வாங்கியது.
அடிக்கு பயந்து வேறு வழி இல்லாமல் பள்ளி விட்டு வந்ததும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். லீவ் நாளும் விளையாடும் ஆசையை அடக்கி அங்கே சென்று விடுவாள்.
வடிவும் அடிக்கும் போதெல்லாம் அவளுக்கு ஆதரவாக இருந்தது அவளது அன்னையின் அப்பாவும் அன்னையின் அண்ணனும் தான். தாத்தாவும் மாமாவும் மட்டும் இல்லை என்றால் அழகு மீனா என்ற ஒருத்தி இந்த உலகத்தில் இல்லாமலே போயிருப்பாள்.
வயதுக்கு வந்த போது கூட வடிவு அவளை அந்த அளவுக்கு பார்த்துக் கொள்ள வில்லை. ஆனால் வசுந்தராவுக்கு அவர்கள் செய்ததை பார்த்திருந்தவளுக்கு அவ்வளவு ஏக்கமாக இருந்தது,
தோழி சங்கரியிடம் மட்டுமே எல்லா தகவலையும் கேட்டுக் கொண்டாள். கவலைகளையும் அவளிடமே சொல்லுவாள். ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவளது தோழியும் அவளை விட்டு சென்றது தான் பெரும் வருத்தம்.
அதுவும் பிரிந்து செல்ல வில்லை. உயிரையே விட்டு விட்டாள். அதிலும் ஒரு குற்ற உணர்வு இப்போது வரை அழகு மீனாவுக்கு உண்டு,
ஒரு நாள் மாலை “மீனா உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று சொன்னாள் சங்கரி.
“இன்னைக்கு அந்த ஆள் வேற வீட்டுக்கு வறான் டி. நானே அந்த பயத்துல இருக்கேன். நாளைக்கு என்னன்னு கேக்குறேன்”, என்று சொன்ன அழகு மீனாவின் உடல் அந்த ஆளை எண்ணி நடுங்கியது.
ஆனால் அடுத்த நாள் சங்கரி இறந்த செய்தி தான் கிடைத்தது மீனாவுக்கு. அதுவும் அவள் ஒருவனை விரும்பி அவன் மூலம் குழந்தை உண்டாகி இருந்த விஷயம் தெரிந்து அதிர்ந்து போனாள்.
தனக்கு தோழி உண்மையாக இருக்க வில்லை என்று கோபப் படக் கூட அவள் உயிருடன் இல்லையே. வேதனை அதை சொல்லவே முடியாது. தான் ஒரு வார்த்தை அவளிடம் என்ன என்று கேட்டிருந்தால் அவள் தவறான முடிவு எடுத்திருக்க மாட்டாளோ என்று இப்போது வரை அந்த குற்ற உணர்ச்சி அவளுக்கு உண்டு. ஆனால் அவளைச் சொல்லியும் குற்றம் இல்லையே. அவளை அந்த அளவுக்கு பயப்படுத்தி வைத்திருந்தான் காசி. அவன் வேறு யாரும் அல்ல துரைசாமியின் தம்பி. சொந்த சித்தப்பா தான். ஆனால் அவனைக் கண்டாலே நடுங்குவாள். அவன் திருமணம் எதுவும் செய்ய வில்லை. அவனுக்கு என்று குடும்பம் கிடையாது.
தனியாக ஒரு வீட்டில் இருக்கிறான். எப்போதாவது இவர்கள் வீட்டுக்கு வருவான். வரும் போதெல்லாம் அழகு மீனா உடல் நடுங்க தான் செய்யும். அவனால் இன்று நேற்று இல்லை அவளுக்கு விவரம் தெரியாத வயதில் இருந்தே அந்த கொடுமையை மட்டும் தான் அனுபவிக்கிறாள்.
சிறு வயதில் சித்தப்பா என்று ஆசையாக அவனிடம் செல்வாள். அவனும் அவளை தூக்கி பாசமாக பார்த்துக் கொள்வான். அவள் கேட்க வில்லை என்றாலும் ஏதாவது வாங்கிக் கொடுப்பான். ஆனால் விவரம் புரிய புரிய தான் அவன் அவளுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.
அவளை கண்ட இடங்களில் தொடுவது, தேவையில்லாமல் முத்தம் கொடுப்பது என்பது என எல்லாம் செய்தான். அது பாலியல் வன்கொடுமை என்று சொன்னது கூட சங்கரி தான். அது புரிந்து அவள் விலக அவனோ விட வேண்டுமே. யாரும் வீட்டில் இல்லை என்றால் அவன் அட்டகாசம் அதிகமாக இருக்கும்.
ஒரு முறை அன்னையிடம் அதை சொல்ல அதற்கு அவள் வாங்கிய அறை இன்னும் அவளுக்கு நினைவு இருக்கிறது. அவள் சொன்னதை வடிவு நம்பவே இல்லை.
ஒரு நாள் தந்தை மட்டும் வீட்டில் இருக்கும் போது அவரிடமாவது சொல்லலாம் என்று எண்ணி அருகில் சென்றாள்.
அவர் மகளே என்று கொஞ்ச மாட்டார். அதே நேரம் வடிவு அளவுக்கு அடிக்கவும் மாட்டார். ஏதாவது வேண்டுமா என்று அவளிடம் கேட்கவும் மாட்டார். அவரும் வசுவிடம் ஒரு மாதிரி அவளிடம் ஒரு மாதிரி நடப்பது அவளுக்கு தெரியும் தான். அதனால் தயக்கத்துடன் “அப்பா”, என்றாள்.
“என்ன?”, என்று பட்டென்று வந்தது அவரது குரல்.
“உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
அதற்கு என்ன என்று கூட கேட்காமல் ஒரு பார்வை பார்த்தார்.
“காசி சித்தப்பா என்.. என் கிட்ட… ஒரு மாதிரி.. பயமா இருக்கு பா. தப்பா நடந்துக்குறாங்க”
“என் தம்பி அப்படி எல்லாம் இல்லை. எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். பொண்ணுங்களே அவனுக்கு பிடிக்காது. கல்யாணம் கூட பண்ணாம வாழ்ந்துட்டு இருக்கான். அவனைப் போய் தப்பு சொல்லுவியா? உன் மாமா கிட்டயோ தாத்தா கிட்டயோ சொல்லி குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிறாத. போ, போய் படிக்கிற வேலையைப் பாரு”, என்று சொல்ல வேறு வழியில்லாமல் தனக்குள் அந்த விஷயத்தை புதைத்துக் கொண்டாள்.
சங்கரியை அப்போது அதிகம் தேடினாள். அவளும் இல்லை. அடுத்த ஒரு வருடத்தில் அவர் தாத்தாவும் இறந்து விட அதன் தொடர்ச்சியாக ஒரு ஆக்ஸிடென்ட்டில் அவளது மாமாவும் இந்த உலகை விட்டு சென்று விட்டார். தனக்கு பிடித்தவர்கள் எல்லாம் தன்னை விட்டுச் சென்று விடுவார்கள் என்று அப்போது தான் அவளுக்கு புரிந்தது. யார் மீதும் அன்பு வைக்கவே பயமாக இருந்தது.
கல்லூரி படிப்பில் சேர்ந்த போது தான் வசு வீட்டை விட்டு ஓடிச் சென்றது. வசுவும் அவளை ஒரு தங்கையாக கூட நினைக்க மாட்டாள். அவளுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்து வந்த நாட்களில் காசி வீட்டுக்கு வந்தாலே தந்தையின் அறைக்குள் சென்று கதவடைத்து விட்டு இருந்து கொள்வாள். துரைசாமி இல்லாத நேரம் தான் அவன் வருவான். அவர் வருவதற்குள் சென்று விடுவான் என்பதால் அவள் ஒளிந்து கொள்வாள்.
அப்படியும் ஒரு நாள் அவன் கையில் அவள் சிக்கி விட அவன் அவளைக் கண்டு புன்னகைக்க “முன்னாடி மாதிரி ஏதாவது நடந்தா எனக்கு ஒரு போலீஸ் பிரண்ட் இருக்காங்க. அவங்க கிட்ட சொல்லுவேன்”, என்று தைரியமாக சொல்லி விட்டாள்.