“உன் பேர்ல வீடு இருந்தா என்னைக்கா இருந்தாலும் உன் புருஷன் வாங்கிக்குவான் டா. என் பேர்ல இருந்தா எப்பனாலும் இது உனக்கு தானே? உன் அக்கா வீடு கட்ட அவளுக்கு பணம் கொடித்துட்டோம். அதனால இது என் பேர்ல இருக்கட்டும். எனக்கு அப்புறமா உனக்கு தான்”, என்று சொல்லி தான் அவளை சம்மதிக்க வைத்தார் துரைசாமி.

            அவளும் தந்தை பெயரில் இருக்கட்டும் என்று தான் எல்லாம் செய்தாள். ஆனால் கிரகபிரவேஷம் முடிந்த மறு வாரமே அது அன்னை பெயருக்கு மாறியது அவளுக்கு ஒரு வருடம் கழித்து தான் தெரிந்தது.

            அப்போதும் அக்கா வேறு வீடு கட்டி விட்டதால் இந்த வீடு தனக்கு தான் என்று எண்ணி தான் இங்கே எவ்வளவு பிரச்சனை அவமானம் வந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாள்.

            அதை விட அவள் இங்கே இருக்க இன்னொரு காரணம் கணவன் கை விட்ட நிலையில் இந்த ஊரில் பெண்களுக்கு பாதுகாப்பு அன்னை வீடு தானே? அந்த நினைப்பில் தால் அவள் இங்கே இருந்தது.

            ஆனால் இன்று அந்த பாதுகாப்பு கிடைக்காது என்பதற்கு சாட்சி அவள் நெற்றியில் வழியும் ரத்தம். இப்போது அவர்களே வெளியவும் போக சொல்லி விட்டார்கள். இனி இங்கே இருக்க வேண்டுமா என்று இருந்தது.

            அப்போதும் போக மனதில்லாமல் “என்ன வெளிய போகனுமா? நான் வேலைக்கு போறேன். ஈஸியா போயிருவேன். ஆனா மாச செலவுக்குன்னு என் கிட்ட தான் வரணும். அப்ப ஒத்த ரூபாய் தர மாட்டேன்”, என்றாள் மீனா.

            “அந்த பணத்தை எப்படி எப்படி எல்லாம் சம்பாதிக்கிறேன்னு இன்னும் எனக்கு சந்தேகம் இருக்க தான் செய்யுது. இனி உன் கிட்ட வந்து நின்னா சொல்லு. என் மக தான் முக்கியம். அவளுக்கு ஒரு வாய் சோறு போடாத நீ எல்லாம் இங்க இருக்க கூடாது”, என்று சொல்ல தந்தையைப் பார்த்தாள்.

அவர் வேறு எங்கோ பார்க்க “நீங்களே சொல்லிட்டீங்க. இனி ஏன் இங்க இருக்க போறேன். இனியாவது போய் நிம்மதியா இருக்க போறேன். நீ என்ன வேணா நினைச்சிக்கோ. எவன் கூட வேணா நினைச்சிக்கோ”, என்றவள் அவசரமாக உள்ளே சென்று தன்னுடைய பையை எடுத்து தனக்கு தேவையானதை எடுத்து வைத்து கிளம்பி விட்டாள்.

            வசுந்தராவுக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது. வீட்டு செலவும் சரி பிள்ளைகள் செலவும் சரி அவள் பார்த்துக் கொள்வாள். இப்போது அவள் இல்லை என்றால் அவள் அன்னை வேறு அவளிடம் பணம் கேட்பாளே? என்று எண்ணி அவள் கணவனைப் பார்க்க “உங்க அம்மா கிட்ட சொல்லி அவளை நிறுத்த சொல்லு வசு. இல்லைன்னா நமக்கு தான் கஷ்டம்”, என்றான் அந்த உத்தமனும்.

            “அம்மா”, என்று வசுந்தரா அழைக்க “நீ பிள்ளைகளைக் கூட்டிட்டு உள்ள வா, வங்க மாப்பிள்ளை. நானே உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடுறேன்”, என்று சொல்லி உள்ளே சென்று  விட்டாள். வேறு வழி இல்லாமல் வசுந்தரா குடும்பம் உள்ளே செல்ல ஒரு தோள் பை மற்றும் ஒரு கை பையுடன் வெளியே வந்தாள்  அழகு மீனா.

            மற்றவர்கள் அவளை பார்த்த படி இருக்க அவளோ திரும்பி அவள் தந்தையை பார்த்தாள். “நிம்மதியா இப்ப உங்களுக்கு? என்னோட உழைப்பு இந்த வீட்ல இருக்கு. திருடிட்டீங்கள்ல? ஆனா உங்க மேல தப்பு இல்லை. உங்களைப் பத்தி தெரிஞ்சும் முட்டாளா இருந்த என் மேல தான் தப்பு. நான் போறேன். இனி அது இதுன்னு ஃபோன் வந்தாலும் சத்தியமா எடுக்க மாட்டேன். செத்தா மட்டும் சொல்லி விடச் சொல்லுங்க”, என்றாள்.

            அவள் பேகைத் தூக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பிக்க மற்ற கூட்டமும் அவரவர் வீட்டுக்கு செல்ல ஆண்கள் மூவரும் திகைத்த படி நின்றார்கள்.

            தாமரைக்கு ஏனோ இது தன்னால் தானோ என்று குற்ற உணர்வாக இருந்தது.

            “டேய் மாப்பிள்ளை அந்த பொண்ணு வீட்டை விட்டு கிளம்பிருச்சு டா”, என்றான்.

            “ஆமா டா, இன்னைக்கு இப்படி நடக்கும்ன்னு நானும் எதிர் பாக்கலை. அவ இந்த வீட்ல இருந்து போறது நல்லது தான். ஆனா எங்க போவானு தெரியலையே?”, என்று ராஜன் புலம்ப “வா டா அவங்க கிட்ட பேசலாம்”, என்றான் தாமரை.

            அதே போல அவர்கள் மூவரும் அவள் அருகே சென்று வண்டியை நிறுத்த முதலில் ஆள் தெரியாமல் மிரண்டவள் அவர்கள் மூவரையும் கண்டு ஆசுவாசமாக மூச்சு விட்டாள்.

            “என்ன மா இப்படி பண்ணிட்ட? கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம்ல? சரி ரத்தம் வந்துட்டே இருக்கு. முதல்ல ஆஸ்பத்திரி போகலாம்”, என்றான் ராஜன்.

            “இல்லை அண்ணா, உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

            “அட ஒண்ணும் இல்லை. நீ வண்டில ஏறு”, என்று சொன்னதும் மூவரையும் ஒரு பார்வை பார்த்தவள் ராஜன் பின்னால் ஏறிக் கொள்ள மருத்துவமனை நோக்கி வண்டி சென்றது.

            வேறு ஒரு மருத்துவமனையில் பர்ஸ்ட் எய்டு மீண்டும் செய்து விட்டு ஒரு ஹோட்டலில் அமர்ந்திருந்தார்கள்.

            மூன்று இட்லியை வாங்கி அவளுக்கு கொடுத்து உண்ண சொன்னான். நேற்று இரவு சாப்பிட்டது, பின் தாமரை வாங்கிக் கொடுத்த ஜூஸ். இது மட்டும் தான் அவள் உண்டது. அதனால் அவள் உணவை மறுக்காமல் உண்ண ஆரம்பிக்க மற்றவர்களும் சாப்பிட்டார்கள்.

            “சாரிங்க, எல்லாம் என்னால தான்”, என்றான் தாமரை.

            “இதுல உங்களால எதுவுமே இல்லைங்க. நீங்க நல்லது தான் பண்ணிங்க, இது நான் வாங்கிட்டு வந்த வரம். நீங்க பண்ணாம யார் பண்ணிருந்தாலும் இதை தான் அவங்க பேசிருப்பாங்க, என் குடும்பத்தை பத்தி ராஜன் அண்ணா கிட்ட கேளுங்க அப்ப தெரியும்”

            “இனி என்ன பண்ண போற மீனா?”,  என்று கேட்டான் ராஜன்.

            “நான் வேணா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?”, என்று அவசரமாக கேட்டான் தாமரை.

            அவனை மூவரும் திகைப்பாக பார்க்க “நீங்க கேட்டதே போதும். அப்படி எல்லாம் எங்கயும் என்னால போயிற முடியாது”, என்றாள்.

            “என் வீட்ல அம்மா தங்கச்சிங்க இருக்காங்க. பயப்பட வேண்டாங்க”

            “எனக்கு உங்க குடும்பத்தை நினைச்சோ உங்களை நினைச்சோ பயம் இல்லை. இந்த சமுதாயத்தை நினைச்சு பயம். நான் வேலை பாக்குற சென்டர் பக்கத்துல ஒரு ஹாஸ்டல் இருக்கு. அங்க ஏற்கனவே கேட்டு வச்சிருந்தேன். மாசம் அஞ்சாயிரம்னு சொன்னதுனால தான் போகவா வேண்டாமானு யோசிச்சேன். இப்ப வேற வழி இல்லை. போய் தான் ஆகணும். ஆனா அமெளண்ட் எடுக்க முடியலை. என் ஃபோன் என்னவோ ஆகிருச்சு, என்ன பண்ண?”, என்று கேட்டாள்.

            “இப்போதைக்கு பணம் என் கிட்ட இருக்கு, நான் எடுத்து தரேன். போன் சரியானதும் நீங்க கொடுங்க”, என்றான் தாமரை.

            “அது.. அதெல்லாம் வேண்டாம்,. ஏற்கனவே ஆஸ்பத்திரிக்கு நீங்க தான் கொடுத்தீங்க”

            “திருப்பி கொடுக்க தானே மா போற? ஃபோன் சரி பண்ண இப்பவே கொடுத்துறலாம். சரி ஆனதும் தாமரை பணத்தை கொடுத்துரு”, என்று ராஜன் சொல்ல சரி என்றாள். அவளுக்கும் வேறு வழி இல்லையே.

            ஹாஸ்டலில் விடும் போது ராஜன் மட்டுமே அவளுடன் சென்றான். தாமரை பணத்தை மட்டும் எடுத்து கொடுத்து விட்டான். மூன்று ஆண்கள் ஒன்றாக சென்றால் அவர்கள் ஏதாவது நினைக்க வாய்ப்பு இருக்கிறதே? அதனால் தான்.

            அவளை அங்கே சேர்த்து விட்டு வீட்டுக்கு வர தாமரைக்கு மணி பதினொன்று ஆகியது, தங்கைகள் இருவரும் உறங்கி இருக்க தந்தையும் தாயும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

            “என்ன டா இவ்வளவு நேரம்”, என்று கேட்டாள் வசந்தா.

            “ஒரு பிரச்சனை மா. அன்னைக்கு சொன்னேன்ல அந்த பொண்ணுக்கு”

            “பொறுமையா பேசுவோம். நீ முதல்ல சாப்பிட்டியா?”

            “ம்ம்”

“அப்ப முகம் கழுவிட்டு வா”, என்று சொல்ல சரி என்று சொல்லி சென்றவன் குளித்து விட்டே வந்தான், வந்தவன் கையில் கருப்பு காபியை கொடுத்து குடிக்க சொன்னவள் “இப்ப என்ன பிரச்சனைன்னு சொல்லு”, என்று கேட்டாள்.

            அனைத்தையும் சொல்லி முடித்தவன் அமைதியாக இருந்தான். அதைக் கேட்டு அவர்களுக்கும் நெஞ்சம் கனத்து தான் போனது. அவள் கதையைக் கேட்டு பாவமாக எண்ணினார்கள் அழகு மீனாவை.

தொடரும்..