“பாரு, வானு… வந்துட்டிங்களா…” ஓடி வந்து தோழிகளைக் கட்டிக் கொண்டாள் கல்பனா. நிச்சயதார்த்த விழாவுக்குப் புறப்படுவதற்குத் தயாராய் நின்றவளின் கையைப் புன்னகையுடன் பற்றிக் கொள்ள “சரி, ரெண்டு பேரும் முதல்ல சாப்பிட்டு வாங்க… நீங்கதான் எனக்கு அலங்காரம் பண்ணனும், அம்மா, இவங்களை அழைச்சிட்டுப் போங்க…” என்றாள் அன்னையிடம்.
“வாங்கம்மா, காலைல நேரமா வீட்டுல இருந்து கிளம்பிருப்பிங்க, பசிக்கும்… சாப்பிட்டு வந்து நீங்களே அவளைத் தயார் பண்ணுங்க… உங்களைப் பார்த்ததும் அவளுக்கு சந்தோசம் ஆகிடுச்சு…” சொன்னவர் அவர்களை உணவு மேஜையில் அமர்த்தி காலை டிபனைப் பரிமாற, பசியில் கபகபத்த வயிறுக்கு அந்த இட்லியும், பொங்கலும் தேவாமிர்தமாய் இறங்க சீக்கிரமே சாப்பிட்டு எழுந்தவர்கள் கல்பனாவிடம் வந்தனர்.
“ஹேய்… நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்…”
“ம்ம்… எப்படியோ மாமா கிட்ட சொல்லி அத்தையை சரிக்கட்டி கிளம்பினேன், வானுவும் வரலேன்னா என்னை விட்டிருக்க மாட்டாங்க…” என்றாள் பாரதி.
“ஓ… பாரு, நீ தான் நம்ம குரூப்ல ரொம்ப அழகா சேலை கட்டுவ, எனக்கு நீயே கட்டி விடேன்…” என்றாள் கல்பனா.
“ம்ம்… சரி கல்ப்ஸ்…” சொன்னவள் அவள் நீட்டிய கருஞ்சிவப்பு நிற சாமுத்ரிகா பட்டினை தோழியின் உடலில் சுற்றி சின்ன சின்னதாய் மடிப்பெடுத்து பின் குத்தி அழகாய் கட்டி விட்டாள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த வான்மதி மெச்சுதலாய் நோக்கினாள்.
“சூப்பர்டி, எப்படி தான் இவ்ளோ அழகா சேலை மடிப்பை எடுக்கறியோ, உனக்கு ரொம்பப் பொறுமை…”
“ஹாஹா, பொறுமை, எருமை எல்லாம் கிடையாது… சேலை கட்ட கொஞ்சம் ரசனையும் இருந்தாப் போதும், வானு… எல்லாமே ஒரு ஆர்வம் தான், எந்த விஷயத்தையும் ஆர்வத்தோட செய்தா நல்லாருக்கும் தானே…” என்றாள் பாரதி புன்னகையுடன்.
“ம்ம்… என்னமோ போ, எங்களுக்கெல்லாம் சேலை கட்டுறது என்னவோ யுத்தத்துக்குப் போறது போல இருக்கு, சுரிதார் தான் ஈசி…” வான்மதி சொல்ல புன்னகைத்தாள் பாரதி.
கல்பனா புறப்பட்டு முடிந்ததும் அவர்களும் சுரிதாரிலிருந்து புடவைக்கு மாறி நிச்சயத்துக்குத் தயாராயினர்.
நிச்சயத்துக்கு வீட்டுக்கு அருகில் உள்ள சின்ன ஹால் ஒன்றில் ஏற்பாடு செய்திருக்கவே உறவினர்களும், நட்புகளும் அங்கே வந்திருக்க வீட்டிலிருந்து ஒரு வேன், மற்றும் காரில் இங்கே உள்ளவர்கள் கிளம்பினர்.
ஹாலில் பாரதியும், வான்மதியும் கல்பனாவின் அன்னையுடன் மாடி அறையில் பேசிக் கொண்டிருக்க, ஒரு பெண்மணி பரபரப்புடன் வந்து, “மாப்பிள்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க…” என அறிவிப்பு செய்யவும் கல்பனாவின் அன்னையிடமும் பரபரப்பு தொற்றிக் கொள்ள அவர் அப்பெண்மணியுடன் அவர்களை வரவேற்க சென்றார்.
கல்பனா நாணத்துடன் அமர்ந்திருக்க, “கல்ப்ஸ், மாப்பிள்ள வந்துட்டார்னதும் உன் முகத்துல என்ன, ஒரு வெட்கப் பூ பூத்திருக்கு…” தோழியைக் கிண்டல் செய்த பாரதி, “மாப்பிள்ள போட்டோல நல்லா இருந்தார், எதுக்கும் நேர்ல எப்படி இருக்கார்னு பார்த்துட்டு வர்றோம்…” சொன்னவள் வான்மதியுடன் மாடியில் நின்று கீழே கவனிக்க மாப்பிள்ளை வீட்டினர் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
“ம்ம்… மாப்பிள்ள நம்ம கல்ப்ஸ்க்கு பொருத்தமா தான் இருக்கார்…” என்றவளின் பார்வை சட்டென்று திகைப்பானது.
“இ..இவரா…?” என்றவளின் பார்வை ஒரே இடத்தில் நிலைத்திருப்பதைக் கண்ட வான்மதியும் கீழே பார்க்க, ரிஷி, சூர்யாவைக் கண்டவள் முகம் சுருங்கியது.
“அட, இந்த தண்ணிப் பார்ட்டி மாபிள்ளைக்கு பிரண்டா… அச்சோ, அப்ப கல்ப்ஸ் மாப்பிள்ளையும் டிரிங்க்ஸ் பண்ணுவாரோ…?” அவள் கவலையுடன் சொல்ல,
“வானு, ஒருத்தர் குடிச்சா அவர் நண்பர்கள் எல்லாரும் குடிக்கனும்னு இல்லை… அதும் இவர் அன்னைக்கு என்ன கஷ்டத்துக்குக் குடிச்சாரோ…?” என்றவளின் வார்த்தை வான்மதிக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவும், தோழியை உன்னிப்பாய் நோக்க, அவளது பார்வையோ ரிஷியில் நிலைத்து நிற்பதைக் கண்டவள் திகைத்தாள்.
“பாரு… உனக்கு என்னடி ஆச்சு…? காரணம் எதுவா இருந்தாலும் குடிக்கிறது தப்பு தானே, எதுக்கு அவனுக்கு நீ எப்பவும் சப்போர்ட் பண்ணற… அதும் இல்லாம அன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல நம்மகிட்ட பேசினதைக் கேட்டு எல்லாரும் வேடிக்கை பார்த்தாங்களே, அதை மறந்துட்டியா…?”
“எதையும் மறக்கலை வானு, ஆ…ஆனா…” என்றவள் ஏதோ சொல்ல முடியாமல் தயங்க, புரியாமல் பார்த்தாள் வான்மதி.
“என்ன ஆனா… சொல்லு, இந்த முதல் பார்வைல லவ்னு சொல்லுவாங்களே, அதுபோல எதையும் உளறப் போறியா…”
“அச்சோ, அப்படிலாம் இல்ல… நீ எதுக்கு ஓவரா கற்பனை பண்ணற… அன்னைக்கு அவர் என்கிட்ட பேசினப்ப அந்தக் கண்ணுல ஒரு அடிபட்ட வலி இருந்துச்சு, நிறைய ஏக்கம் இருந்துச்சு… அதை இப்ப யோசிச்சாலும் என் மனசு என்னவோ ஆகுது… அவரோட உடல் குறை மனசை ரொம்ப வேதனைப்படுத்துதுன்னு எனக்குத் தோணுது, இந்தக் குடி கூட அதுக்கான நிவாரணியா நினைக்கிறாரோ, என்னவோ…” என்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் வான்மதி.
“அதுக்காக…? நீ என்னடி சொல்ல வர்ற…”
தோழியின் தோளைப் பிடித்து அழுத்திய பாரதி, “நான் எதையும் சொல்ல வரலை, அவரை ஏனோ எனக்குத் தப்பா நினைக்கத் தோணலைன்னு சொல்ல வந்தேன், வேற ஒண்ணும் இல்ல… வா, கல்ப்ஸ் வெயிட் பண்ணுவா…” என்றவள் இவளின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல வான்மதியின் மூளை அந்த சமாதானத்தை ஏற்க மறுத்தது.
சிறிது நேரத்தில் முகூர்த்த நேரம் நெருங்க அலங்காரம் செய்யப்பட்ட சின்ன மேடை மீது இரு வீட்டாரும் அமர்ந்து நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசித்தனர். வீட்டுப் பெரியவர்கள் அங்கே இருந்ததால் பாரதியும், வான்மதியும் மேடைக்கு முன்னில் போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மணமகன் சதீஷ் கல்பனாவின் கையில் மோதிரத்தைப் போட சதீஷின் அன்னை மருமகளுக்குத் தங்க வளையல் அணிவித்தார்.
அனைவருக்கும் சாக்கலேட் கொடுக்க எடுத்துக் கொண்ட பாரதியின் கண்கள் அவளையும் மீறி ரிஷியைத் தேட அவனையும் மற்ற நண்பர்களையும் காணவில்லை. நிகழ்ச்சி நல்லபடியாய் முடிய இரு வீட்டாரின் முக்கிய சொந்தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். கல்பனா சதீஷுக்கு தனது தோழிகளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“கல்யாணம் முடிஞ்சதும் எங்க கல்ப்ஸயும் பெங்களூரு கூட்டிட்டுப் போயிருவீங்களா…” வான்மதி கேட்க,
“ஆமா, அவளை இங்கே விட்டுட்டு நான் அங்கே தனியா இருக்கறதுக்கு எதுக்குக் கல்யாணம் பண்ணனும்…” சதீஷ் புன்னகையுடன் கேட்டு இவர்களை அசடு வழிய வைத்தான்.
“இதோ கூட்டிட்டு வரேன்…” சொன்னவன் சில நிமிடங்களில் திரும்ப சூர்யா இன்னும் சில நண்பர்கள் இருந்தனர். கல்பனாவின் அருகே நின்ற பாரதி, வான்மதியைக் கண்டதும் சூர்யாவின் முகத்தில் திகைப்பு தெரிந்தது.
“அது… அவன் ஸ்டேஜுக்கு வரலைன்னு சொல்லிட்டான்…” சூர்யா தயக்கமாய் சொல்ல, “அவன் நமக்கு எவ்ளோ பண்ணிருக்கான், அவனைத்தான் மெயினா என் வுட்பிக்கு அறிமுகப்படுத்தணும், அவனும் வந்தா எல்லாரும் ஒண்ணா போட்டோ எடுத்துக்கலாம்ல…” என்றான் சதீஷ்.
“அதுக்கில்லடா சதீஷ்… அவனைப் பத்தி உனக்குத் தெரியும்ல, எல்லார் முன்னாடியும் காலை இழுத்துட்டு நடந்து வர சங்கடப்படறான்…” சூர்யா தயக்கத்துடன் நண்பனிடம் சொல்ல பாரதியின் முகத்தில் சட்டென்று ஒரு வேதனை மின்னி மறைந்ததைக் கவனித்தான்.
“ம்ம்… அவன் இல்லாம எப்படி குரூப் போட்டோ எடுக்கிறது… எப்படியாச்சும் அவனைக் கன்வின்ஸ் பண்ணி அழைச்சிட்டு வா…” எனவும், “சரி… கால் பண்ணறேன்…” என்ற சூர்யா, சதீஷ் அவன் ஸ்டேஜுக்கு வராததால் மிகவும் சங்கடப் படுகிறான் என்று சொல்லி வரச் சொல்லி வற்புறுத்த ரிஷி சம்மதித்தான்.
“நான் போயி அவனை அழைச்சிட்டு வரேன்…” சொன்ன ரகு ரிஷியுடன் உள்ளே வந்தான். காலை சாய்த்து அவன் நடந்து வருவதைக் கண்டதும் சிலரின் பரிதாபப் பார்வையும், கேலிப் பார்வையும் அவன் மீது படிவதைக் கண்டாள் பாரதி.
ஸ்டேஜில் ஏற சற்றுத் தடுமாறியவனை சூர்யாவும், ரகுவும் இரு புறமும் இருந்து தாங்கிக் கொண்டனர். சதீஷ் வேகமாய் சென்று நண்பனை அணைத்துக் கொண்டு கல்பனாவிடம் அழைத்து வந்தான்.
“கல்பனா, இதான் ரிஷி…”
ம்ம்… வணக்கம் அண்ணா, உங்களைப் பத்தி இவர் போன்ல நிறைய சொல்லிருக்கார்… உங்க செட்டுல யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் உங்களைத் தான் தேடுவாங்களாமே… இவருக்கும் நிறைய விஷயங்கள்ல சப்போர்ட்டா இருந்தீங்கன்னு சொன்னார், ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…” என்றவளை நோக்கிப் புன்னகைத்த ரிஷியின் கன்னத்தில் விழுந்த குழியில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த பாரதி சுருண்டு விழாத குறைதான். அத்தனை வசீகரமாய் இதழோடு கண்களும் சேர்ந்து சிரிக்க புன்னகைத்தான் ரிஷி.
பாரதியின் விழிகள் ரிஷியின் முகத்திலேயே படிந்திருக்க, இவளைக் கண்டு ‘ஹலோ’ என்றவன் முகத்தில் அவளைத் தெரிந்த எந்த பாவமும் தெரியாததால் பாரதி குழம்பினாள். ஆனால் ரிஷியின் அருகே இருந்த சூர்யா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அனைவரும் ஒன்றாய் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு ஸ்டேஜில் இருந்து இறங்கினர். ரிஷி நண்பர்களுடன் ஒதுக்கமாய் நின்று பேசிக் கொண்டிருக்க அடிக்கொருதரம் அவஸ்தையோடு அவனைத் தேடிய விழிகளின் காரணத்தை பாரதியால் யோசிக்க முடியவில்லை. எல்லாம் நல்லபடியாய் முடிந்து மதிய உணவு முடிந்து இருவீட்டாரும் கிளம்பினர்.
“பாரு, என் ஆபீஸுக்கு சாயந்திரம் நாலு மணிக்குப் போகலாம்…” கல்பனா சொல்ல தலையாட்டினாள் பாரதி. உடை மாற்றி சற்று ஓய்வெடுத்துக் கொண்டு மூவரும் கல்பனாவின் அலுவலகத்திற்குக் கிளம்பினர்.
“பஸ்ல போகலாமா, ஆட்டோவா…” வான்மதி கேட்க, “பஸ் போதும், வானு…” பாரதி சொல்ல பேருந்தில் ஏறினர். இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கினர்.
“இங்கிருந்து பத்து நிமிஷம் நடக்கணும், என் ஆபீசுக்கு…” கல்பனா சொல்ல மூவரும் உற்சாகத்துடன் பேசியபடியே நடந்தனர். இளம் மாலையில் சூரியனின் வெம்மை குறையத் தொடங்க இதமான காலநிலையை ரசித்தபடி நடக்க, வழியில் ஒரு பெரிய பள்ளி முன் பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காய் பெற்றோர் வண்டிகளில் காத்திருந்தனர்.
அந்த இடம் வாகன நெரிசல் காரணமாய் கூட்டம் அதிகமாய் இருக்க அவர்களை விலக்கி கடந்து நடக்க, சட்டென்று ஒரு கார் கிறீச்சிட்டு நிற்கும் சத்தமும், ஒரு பெண்ணின் அலறலும் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினர்.
ஒரு இளம் பெண் சாலையில் கார் முன் விழுந்து கிடக்க ஓடிச் சென்று அவளைத் தூக்க முயன்றாள் பாரதி. அப்பெண்ணின் கால் முட்டி சாலையில் உராய்ந்ததில் ரத்தம் வரத் தொடங்க, அவளைத் தூக்க முயன்ற பாரதியின் கையைப் பற்றி மறு கையால் தனது ஊன்றுகோலை தாங்கி வலியோடு எழுந்து நின்றாள் கால் ஊனமான அப்பெண்.
அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட காரிலிருந்து இறங்க சொல்லி சிலர் சத்தம் போட வேகமாய் கார்க்கதவைத் திறந்து இறங்கிய பெண்மணியின் முகத்தில் அத்தனை கோபமும், ஆங்காரமும் கொட்டிக் கிடந்தது. சிறிது கூட குற்றவுணர்வே இல்லாமல் அப்பெண்ணிடம் வந்தவள், “யூ இடியட், நீ சாகறதுக்கு என் வண்டி தான் கிடைச்சதா…?” என கேட்டுக் கொண்டே அவளை ஓங்கி அறையப் போக நடப்பதை சுதாரித்த பாரதி சட்டென்று அவள் கையைப் பற்றித் தடுத்தாள்.
“கார்ல அந்தப் பொண்ணை இடிச்சு விழ வச்சிட்டு அதுக்கு ஒரு சாரி கூட சொல்லாம எதுக்காக அடிக்கப் போறீங்க…”
“அதானே, கால் முடியாத பொண்ணு, பாவம்…! கீழ விழுந்து கால்ல ரத்தம் வருது, ஹாஸ்பிடல் கூட்டிப் போகாம அடிக்கப் போறீங்க, முதல்ல சாரி சொல்லுங்க…” கூட்டத்தில் யாரோ சத்தம் போட அப்பெண்மணியின் முகம் மதிய நேர சூரியனாய் கோபத்தில் ஜொலித்தது.
“நான் எதுக்கு சாரி சொல்லணும், நான் சரியா தான் வந்தேன்… அவ தான் வண்டி வர்றது கவனிக்காம கிராஸ் பண்ணினா… பிராடுங்க, பணம் பறிக்கிறதுக்கு வேண்டி புதுசு புதுசா கண்டு பிடிக்குதுங்க…”
வான்மதியும், கல்பனாவும் அவள் காலில் உள்ள காயத்தைப் பார்த்துக் கொண்டிருக்க அப்பெண்மணி ஆங்காரமாய் கத்தினாள்.
“ஏய், எதுக்கு இப்படி டிராமா போட்டு ஆளைக் கூட்டற… உனக்குப் பணம் தான வேணும், எவ்ளோன்னு சொல்லு… கொடுத்துத் தொலையறேன், தேவை இல்லாம என் டைம் வேஸ்ட் பண்ணிட்டு…” கடுப்புடன் அவள் வார்த்தைகளைத் துப்ப கேட்டு நின்ற பாரதியின் முகம் கோபத்தில் சிவந்தது.
“ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமப் பேசறீங்க, கால் முடியாத பொண்ணு தடுமாறி உங்க கார் முன்னாடி விழுந்துட்டா, அதுக்காக மனிதாபிமானம் இல்லாமப் பேசாதீங்க… பாவம், கால்ல ரத்தம் வழிய நிக்குற பொண்ணைப் பார்த்து இப்படிப் பேசறீங்க… பணம் என்னங்க, பணம்…! மனசு அதைவிட முக்கியம் இல்லையா…?” என்றவளைக் கோபத்துடன் பார்த்தவள்,
“ஓஹோ, அந்த மனசை வச்சுகிட்டு ஒருவேளை சோறு திங்க முடியுமா…? பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்லை, எவ்ளோ வேணும்னு சொல்லு நான் கிளம்பனும்…”
“மேடம், உங்ககிட்ட நிறைய பணம் இருக்கலாம்… அதுக்காக அதைத் திங்க முடியாது, கொஞ்சமாச்சும் மனுஷங்களை மதிக்கப் பழகிக்குங்க…” பாரதி சொல்ல அப்பெண்மணிக்கு கோபம் இன்னும் அதிகமானது.
“ஏய், என்ன…? நீயும் இந்தக் களவானிக்கு கூட்டா… இப்படில்லாம் பேசி இன்னும் அதிகமா பணம் பறிக்கப் பார்க்கறிங்களா… இந்த கங்காவுக்கு கிளாஸ் எடுக்கிற அளவுக்கு நீ பெரிய ஆளா…? இந்தா, இதுக்காகத் தானே இப்படிப் பேசிட்டு இருக்க… வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ணு…” என்றவள் கொத்தாய் பாகில் இருந்து சில ஐநூறுகளை எடுத்து கீழே விழுந்த பெண்ணிடம் நீட்ட, வாங்க மறுத்தவள் பேசத் தொடங்கினாள்.
“அக்கா, தப்பு என்மேல தான்… கொஞ்சம் அவசரப்பட்டு கார் வந்ததை கவனிக்காம வந்துட்டேன்… எனக்காக பேசி எதுக்கு நீங்க சண்டை போட்டுக்கறிங்க, எனக்குப் பணம் எல்லாம் வேண்டாம், அவங்க போகட்டும் விடுங்க…” என்றாள்.
“பார்த்திங்களா, இந்தப் பொண்ணு பேசினதை… அவகிட்ட பணம் இல்லாம இருக்கலாம், ஆனாலும், நல்ல மனசு இருக்கு… எல்லாரும் உங்களைப் போல பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்கன்னு மட்டும் கேவலமா நினைச்சுடாதிங்க, நீ வாம்மா…” என்ற பாரதி தோழிகளுடன் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு ஓரமாய் நடந்து செல்ல கங்காவின் கண்கள் கோபத்தில் சிவந்து வெளியே தெறித்து விடுவது போல் இருந்தது.
சொன்னவள் அதற்கு மேல் அங்கே நிற்காமல் காரை எடுத்துக் கொண்டு லேடீஸ் கிளப்புக்குக் கிளம்பினாள். பிசினஸில் சாதனை படைத்ததைப் பாராட்டி கிளப்பில் சிறந்த பிசினஸ் வுமன் அவார்டு கொடுப்பதற்காய் அவளுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காகப் புறப்பட்டு வந்தவள் நடுவில் நடந்த களேபரத்தில் எரிச்சலுடன் கிளம்பினாள்.
வள்ளலாக வேண்டாம்
இல்லாமை கண்டு என்றும்
எள்ளல் கொள்ளாதீர்கள்…
அன்பிற்கு பஞ்சமில்லா
மனதிற்கு தான் இறைவின்
என்றும் வஞ்சம் செய்கிறான்…
குணத்தின் நிறைவு என்றும்
பணத்தில் கிடைப்பதில்லை…
Enter
Kalai
வள்ளலாக வேண்டாம் ஏழையை கண்டு எள்ளல் கொள்ளாதீர்கள் அன்பிற்கு பஞ்சாமில்லா மனதிற்க்கு தான் இறைவன் என்றும் வஞ்சம் கொள்கிறான்