கண்ணாடி பேழைக்குள் பொதிந்து விரிந்திருக்கும் நவீன பாரினில் நுழைந்த என்னை என் எண்ணங்களை ஆட்கொண்டிருப்பது அவனே! இதே கட்டிடத்திற்கு தான் ஒரு மாதமாய் அவனும் வருகிறான். வேலை செய்கிறான். அப்படியே கிளம்பியும் விடுகிறான். அன்று அப்படி பேசிவிட்டு சென்றவன் பின் என்புறம் திரும்புவது கூட இல்லை. அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்.
அவனின் இச்செயலுக்கு என்ன அர்த்தம்? சட்டையைப் பிடித்து அவனைக் கேட்டு விடும் வேகம் இருந்தாலும் நானே விழைந்து போய் கேட்பதா என்ற எண்ணம் ஒருபுறம் என்றாலும் அவன் என்னை கண்டுகொண்டால் என்ன? கண்டு கொள்ளாவிட்டால் என்ன? ஏன் நான் அவனைப் பற்றி எண்ண வேண்டும் என்ற உணர்வும் ஒரு புறம் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறதே.
எது எப்படி என்றாலும் அவனும் என்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வது சிறு சலனத்தை ஏற்படுத்துதே…
சலனம் இல்லை என்று ஒதுக்க முயன்றாலும் அதெல்லாம் பொய் என்று என் மனமே என்னிடம் வாதிடும் போது அவன் என்னை பாதிக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ளத் தானே வேணும். ம்கூம்! அவன் பாதிக்கவில்லை அவனின் பேச்சு பாதிக்கிறது.
அந்த பாதிப்பின் பலனாய் இதயம் சட்டென வேகமெடுக்க, சில நாட்களாய் வழக்கமாகி இருக்கும் பழக்கம் பரவசமாக்கியது.
மணி ஒன்பதரை. அவன் வழக்கமாய் அலுவலகத்திற்கு வரும் நேரம். இன்னும் சில நொடிகளே அவனின் கேப் வந்துவிடும். அவனும் வந்துவிடுவான்.
இன்று என்ன நிற சட்டையில் வருவான்?
சட்டையா இல்லை டீ ஷர்ட்டா?
சட்டையை விட டீ ஷர்ட் அவனுக்கு எடுப்பாய் இருக்கும். ம்க்கும் எவ்வளவு முயன்றாலும் அவன் தோற்றத்தின் மீது செல்லும் கவனத்தை திசை மாற்ற முடிவதில்லை.
சிகை. அடங்காது பறக்கும் என்ற என் எண்ணத்திற்கு மாறாய் படிய சீவிய சிகை அவ்வளவாய் களைந்து நான் பார்த்ததில்லை.
கையில் ஒரு ஸ்மார்ட் வாட்ச் காலில் ஸ்னீக்கர்ஸ்.
ஆடம்பரமின்றி நேர்த்தியாய் திருப்தியாய் இருந்தது அவன் தோற்றம்.
“என்ன உங்களுக்கு புடிச்ச டீ சர்ட் போட்டுட்டு வந்திருக்கேனா இன்னைக்கு?” அக்சஸ் கார்டை காட்டி உள்ளே நுழைந்தவன் எப்பொழுதும் போல் அவன் இடத்திற்குச் செல்லாது என் முன் வந்து நின்று கேள்வி எழுப்ப,
ஐயே எப்படி தெரிஞ்சுது அவனுக்கு? நான் நினைக்கிறது எல்லாம் என் மூஞ்சுல எழுதி ஒட்டி இருக்கா என்ன?
“உங்க முகம் கண்ணாடி மாதிரி. என்ன நினைக்கிறீங்களோ அது அப்படியே முகத்துல பிரதிபலிச்சிடுது.”
நான் கேளாது இருந்த கேள்வியின் பதிலை அவன் தர, எங்கு சென்று என் முகத்தை மறைக்க என்ற தேடல் எஞ்சியது என்னிடத்தில்.
அவனோ, “உங்களை தொந்தரவு செய்யக்கூடாதுனு தான் நான் அமைதியா இருந்தேன். பட் வீ நீட் அ காஃபி டேட். இன்னைக்கு ஈவினிங் நம்ம ஆபீஸ் கேன்டீன்ல மீட் பண்ணலாம்.” என்றதும் வந்ததே எனக்கு கோபம்,
“உங்களை தான் நினைச்சிட்டு இருக்கேன்னு சொல்லி வழிய மாட்டேன். நாம ரெண்டு பேரும் பேசி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் சொன்னேன்.” அவன் கொஞ்சம் தணிந்து பேசவும் என் மனம் தளர்வதை உணர முடிந்தது.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நீங்க உங்க வேலையைப் பாருங்க, நான் என் வேலையைப் பாக்குறேன்.” என்ற என்னை மீண்டும் கடுப்பேத்தியது அவனது பேச்சு.
“உங்ககூட பேசுறதே வேஸ்ட்.” என்று நான் அங்கிருந்து நகர, என்னை அவன் பின் தொடர்கிறானா என்ற ஆவல் உள்மனதை விழித்தெழ வைத்தது. நல்ல வேலையாக அவன் பின் தொடர்ந்து என்னை மேலும் கடுப்பாக்கவில்லை.
“ஹேய் ஏன் காலையிலேயே உர்ருனு இருக்க?” என் டீமில் இருக்கும் மற்றொருவள் கேள்வி எழுப்ப, ‘உங்க முகம் கண்ணாடி மாதிரி. என்ன நினைக்கிறீங்களோ அது அப்படியே முகத்துல பிரதிபலிச்சிடுது’ என்று அவன் கூறியது தான் நினைவில் வந்தது. அவன் சொல்வது போலவா என் அகம் அனைத்தையும் பிரதிபலிக்கிறது?
“உன்னைத்தான் கேட்டேன்பா… எதுவும் பிரச்சனை இல்லையே.” என்று அவள் கரிசனம் காட்ட, எண்ணங்களை உதறி, “அதெல்லாம் ஒன்னும் இல்லை. குட் மார்னிங்.” என்று என் மேசையில் அமர எண்ணங்களில் வண்ணம் பூசியதும் அவனே.
மாலை காபி டேட்டாம் அவனே முடிவு செய்து தெரிவிக்கிறான். அதற்குச் செல்வதா வேண்டாமா? சென்றால் இதோடு இது முடியுமா இல்லை தொடருமா? செல்லாமல் இருந்தால்?…
மனம் நிலையாய் இல்லாது கவனம் சிதறிக் கிடக்க, கீபோர்டை என்ன தட்டு தட்டினாலும் எர்ரர் என்றே காட்டியது மானிட்டர். ஷ்… அந்த எர்ரரை சரி செய்தால் மீண்டும் ஒரு எர்ரர் வரிசையில் நின்றது.
தலையில் கை வைத்து விட்டேன். என்னை அவன் இவ்வளவு பாதிக்கிறானா? மீண்டும் கீபோர்ட் என் விரல்களிடம் சரமாரியாய் அடிகள் வாங்கியது. அப்போதும் திருந்தவில்லை அந்த எர்ரர்கள்.
“ஒரு காபி குடிச்சிட்டு வேலை பாருபா… ரொம்ப நேரமா நீயும் அதோட போராடிட்டு இருக்க. மனசு சரியில்லைன்னா ஒரு வேலையும் ஓடாது. எதையோ போட்டு யோசிச்சிட்டு தண்டனையை கீபோர்டுக்கு குடுத்துட்டு இருக்க. என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்ட, சோ ப்ளீஸ் டேக் எ காஃபி பிரேக்.” என்ற என் கொலிக்கின் பேச்சை கேட்டு அவள் சொல்வதும் சரிதான் என்று அங்கிருந்து நகர்ந்தேன்.
கால்கள் தன்னால் அலுவலகத்தில் என் பிடித்த இடமான ஓய்வறைக்கு அழைத்துச் சென்றது. போகும் வழியில் ஒரு கோப்பை காபியும் என்னோடு ஒட்டிக்கொள்ள, அக்கடான்னு அங்கிருந்த ஷோபாவில் சரிந்தேன்.
ஷப்பா ஆபீசில் நம் வசதிக்கு ஏற்ற மாதிரி இருக்கும் லாஞ் எல்லாம் வரம். ஆனால் தற்சமயம் அந்த வரத்தை முழுமையாய் அனுபவிக்க முடியா வண்ணம் மீண்டும் கவனம் அவன் புறம்தான்… அவன் சொல்லிச் சென்ற காபி டேட்டில் தான்… அதற்குச் செல்வதா வேண்டாமா என்பதில் தான்… இந்த நினைப்பை எப்படித்தான் விரட்டுவது?
உள்ளம் உணர்வுகளில் உரச, உவந்து எந்த முடிவும் எடுக்க முடியவில்லையே. யாரையும் ஆலோசிக்கவும் விருப்பம் வரவில்லை. அதோட ஆலோசித்து பழக்கமில்லைனு தான் சொல்லணும்.
சரியோ தவறோ என் முடிவுகளை நானே எடுத்துதான் பழக்கம். இந்த பழக்கத்தை தொடர்வதா இல்லை யாரிடமாவது கலந்து பேசுவோமா? சில நேரங்களில் உணர்வுகளின் பகிரல் கூட பக்கபலமாய் இருக்கும். என்ன செய்ய என்று யோசித்து யோசித்து மதியமே ஆகிவிட்டதை உணர்த்தவென வந்தாள் என் கொலிக்.
“ஏதோ பெரிய பிரச்சனை உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நினைக்குறேன். இல்லைனா நீ இப்படியெல்லாம் இருக்குற ஆளே இல்லை. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்னு உன் மனசு சொல்றதை தானே கேட்ப… இப்போவும் அதையே செய்…” பிரச்சனை என்னவென்று பகிரவில்லை என்றாலும் அவள் உதிர்த்தவை மனசை உடனே சமன்படுத்தியது.
“தாங்க்ஸ்… ஐ பீல் பெட்டர் நவ்.” இக்கட்டில் மாட்டும் போது விடுபட வைக்க நாலைந்து நல்ல உள்ளங்கள் இருந்தால் போதும் போல. நான் கேளாமலேயே உதவி விட்டாளே… அதற்கான நன்றி நவிழ்ந்து விட்டு அவளுடனே அங்கிருந்து நகர்ந்தேன் அவனைக் காணும் முடிவுடன்.
அவனுடன் பேசிய பிறகாவது என் குழப்பங்கள் தீருமா என்ற ஆவலுடன் மாலை வரைக் காத்திருந்து கேன்டீன் செல்ல, அங்கு ஒரு மூலையில் அவன் அமர்ந்திருந்தான். தாமதியாது நான் அடிகளை எடுத்து வைத்து அவனை நெருங்க,
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே
பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே…
என்ற பாட்டு அவன் கைபேசியில் இருந்து சற்று சத்தமாய் ஒலிக்க, பல்லை கடித்து அப்படியே நின்றுவிட்டேன்.
என்னை கடுப்பேற்றாமல் இவனால் இருக்க முடியாதா? இப்படியான பாட்டெல்லாம் இப்போது தேவையா என்ன? நான் நிற்பதை கவனித்தவன் உடனே எழுந்து,
“அய்யய்யோ மறுபடி நீங்க என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. ஏன்தான் இப்படியெல்லாம் டைமிங் மிஸ் ஆகி சொதப்பலா நடக்குதுன்னு தெரில. பட் நீங்க இதை நம்பித்தான் ஆகணும். நான் ரேண்டமா தான் சாங்ஸ் கேட்டுட்டு இருந்தேன்.” என்று அவன் நீட்டி முழக்க அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஹெட்போன் பளிச்சென என் கண்ணில் சிக்கியது.
“என்னனென்ன கதையெல்லாம் கட்டுறீங்க… ரோக் மாதிரி பிஹேவ் பண்ணி என்னை இன்சல்ட் செய்ய காத்திட்டு இருக்கீங்களா? இல்லை இதுதான் மாடர்ன் ஸ்ட்டாக்கிங்கா?” என்று அவனிடம் கத்தினாலும் மனக்கண் அந்நேரம் கேன்டீனில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களில் யாருடைய பார்வையும் எங்கள் புறம் இருக்கிறதா என்று நொடிப்பொழுதில் நோட்டமிட்டு மீண்டது.
“ஷப்பா உடனே குதிக்காதீங்க… என் ஹெட்போன்ல சார்ஜ் இல்லைங்க.” என்றவன் சட்டென தன் கழுத்தில் இருந்ததை கழற்றி என்னிடம் நீட்டி, “வேணும்னா நீங்களே செக் பண்ணி பாருங்க…”
முறைப்புடன் இரண்டடி பின்னெடுத்து வைத்தேன், “எனக்கு வேற வேலை இல்லைனு நினைச்சீங்களா?”
“ஓகே கூல்! பேசனும்னு வந்துடீங்கல்ல… உட்காருங்க ப்ளீஸ்…” என்று அவன் ஒரு நாற்காலியை இழுத்துவிட்டு கண்ணசைத்தான்.
இவனுக்கும் எனக்கும் இடையில் எப்போதும் முட்டலும் மோதலும் தான் இருக்கப்போகிறது. இதில் பேச என்ன இருக்கிறது?
“இவ்வளவு தூரம் வந்துட்டு யோசிக்காதீங்க… ப்ளீஸ் டேக் யுவர் சீட்.” என்று அவன் தலையசைக்க,
திரும்பி சென்று விடலாம் என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கி விட்டு அவன் இழுத்துவிட்ட நாற்காலியில் அமர்ந்தேன்.
“சொல்லுங்க என்ன பேசணும்?”
“எப்போதும் இப்படி கட் அன்ட் ரைட்டா தான் பேசுவீங்களா? இல்லை என் மேல இருக்குற காண்டுல இப்படி பேசுறீங்களா?” எப்போதும் என்னை பற்றி தெரிந்தவன் போல் பேசுபவன் இன்று புரியாது கேள்வி எழுப்ப கர்வம் எழுந்தது என்னுள்.
“உங்களுக்குத்தான் என் முகத்தை பார்த்தாலே எல்லாமே தெரியுமே… தெரியலையா என்ன?” என்று எகத்தாளாமாய் நான் விழி உயர்த்த,
அவன் விழிகளில் சட்டென ஒரு மாற்றம், “தெரியுதே… நமக்குள்ள இருக்கறதை பேசி தெளிவாக்கிக்கணும்னு ஒரு ஆர்வம் இருந்தாலும் உங்க ஈகோ அதை தடுக்குது. அதை அப்படியே என் மேல காட்டுறீங்க.”
“நம்மக்குள்ள என்ன இருக்கு?”
“அதை பத்தி பேசலாம்னு தான் உங்களை கூப்பிட்டேன் பட் நீங்க தான் டைம் வேஸ்ட் பண்றீங்க.”
என்ன கொழுப்பு இருக்கனும் இவனுக்கு. இவனே தேவையில்லாத ஈர வெங்காயம் எல்லாம் பேசி நேரத்தை வளத்திட்டு என்னை சொல்றான் இப்போ…
“இங்க பாருங்க முதல்லேந்தே உங்க பேச்சு உங்களோட ஆர்வக்கோளாறு எதுவுமே எனக்கு பிடிக்கல.” என்று நான் பேசிக்கொண்டிருக்கும் போதே,
“முதல் தடவையே பிடிக்கணும்னு அவசியம் இல்லை.” என்றான் முந்திக்கொண்டு.
“ஷ்… இதுதான் என்னை எரிச்சல் ஆக்குது. எதிர்ல இருக்கிறவங்களை நீங்க கன்சிடர் பண்றதே இல்லை. நீங்கபாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுறீங்க.” என்றேன் நான் பொறுமையாய்.
இதெல்லாம் இவனிடம் நான் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்ற சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும், மனதில் இருப்பவற்றை முறையானவனிடம் சொல்லிவிடுவது என் மன நலத்திற்கு நல்லது என்றே பட்டது. அப்படியாவது அவன் என்னை என் அகத்தை தொந்தரவு செய்யாமல் இருப்பான் என்ற நம்பிக்கை.
“நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் ஏத்துக்கிறேன். பட் நீங்க ஏன் உங்களுக்கு பிடிக்காத என்னோட ஒரு பக்கத்தை மட்டும் பாக்குறீங்க. கொஞ்சம் வேற கோணத்திலும் பாருங்களேன்… மே பீ உங்களுக்கும் ‘X- factor’ தோணலாம்.” என்று அவன் சொல்லியதற்கு என் தலை ஆமோதிப்பாய் அசையும் முன் சுதாரித்து நிறுத்தி, இறுக்கத்துடன் சிரமப்பட்டு அமரும்படி ஆகிற்று.