சாந்தா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் அவளை பார்த்து கொண்டார்கள். அவர்களுக்கு சாந்தா செல்ல குழந்தை. அவள் பூப்பெய்திய போது, தான் முதல் முறை நரேந்திரவர்மனை கண்டாள்.
அவளுக்கு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து சடங்கு செய்து முற்றத்தில் அமர வைத்திருந்தார்கள். அனைவரும் வந்து அவளுக்கு குங்குமம் இட்டு வாழ்த்தி சென்றார்கள்.
அப்போது மகாராஜாவின் அன்னையான நீலாதேவியுடன், நரேந்திரவர்மன் மற்றும் அவன் தோழர்கள் தேசத்தை பார்வை இட்டு கொண்டே வந்தனர்.
பாட்டியும், பேரனும் வந்து கொண்டிருக்கும் போது தான் இந்த நிகழ்ச்சியை கண்டார்கள். உடனே நீலாதேவியும் சாந்தா அருகில் வந்தாள். வந்து இவளுக்கு திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தாள் நீலாதேவி. அப்போது தலை நிமிர்ந்து பார்த்த சாந்தா கண்ணில் விழுந்தான் நரேந்திரவர்மன்.
அழகில் சுந்தரனான அவனுடைய முகம் அவள் மனதில் பதிந்து விட்டது. ஆனால் அந்த வயதில் அவள் மனதில் எதுவும் தோன்றவில்லை தான். ஆனால் மற்றொரு முறை அரண்மனை தோப்பில் மாங்காய் பறிக்க தோழிகளுடன் சென்ற போது அவளை மட்டும் விட்டு விட்டு ஓடி விட்டார்கள்.
கால் மரத்தில் சிராய்த்து விட்டதால் அவர்களுடன் அவளால் ஓட இயல வில்லை. என்ன செய்ய என்று நினைக்கும் போது தான் நரேந்திரவர்மன் அவனுடைய நண்பர்களுடன் அங்கு வந்தான். பயத்துடன் அவர்களை பார்த்தாள் சாந்தா.
பயத்துடன் நடுங்கி கொண்டிருந்தவள் அருகில் வந்தவன் “பார்த்து இறங்க கூடாதா? இனி நீ மரம் ஏற வேண்டாம். காவல் காரனிடம் சொன்னால் அவன் பறித்து தருவான் சரியா?”, என்று கூறி கொண்டே அவளுக்கு மருந்து இட்டவன் “பார்த்து வீட்டுக்கு செல்”, என்று கூறி விட்டு சென்று விட்டான்.
அவன் போன திசையையே பார்த்த படி இருந்தாள் சாந்தா.
கருணை மனம் கொண்டு அவன் செய்த செயல் அவள் மனதில் கல்வெட்டாக பதிந்து போனது. அன்பு காட்ட ஒருவரும் இல்லாமல் வளர்ந்தவள் அவனுடைய இந்த செய்கையில் கவர பட்டாள்.
அன்றில் இருந்து அவனை திருட்டு தனமாக ரசிப்பது அவளது வேலையானது. அவனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் முதல் ஆளாக சென்று விடுவாள்.
ஆனால் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அறியாமல், வான்மதி தேவியை பற்றிய கனவில் இருந்தான் நரேந்திரவர்மன்.
வான்மதியும் அவ்வாறே அவன் நினைவில் இருந்தாள். ஆனால் சாந்தோவோ நரேந்திரவர்மனின் திருமணத்தை எண்ணி கலங்கி கொண்டிருந்தாள். சாக கூட எண்ணி விட்டாள். ஆனால் “செத்து விட்டால் இளவரசரை எப்படி காண்பது?”, என்று எண்ணி அந்த முடிவை கை விட்டாள்.
ஆனாலும் இந்த கவலையே அவள் உயிரை அரித்தது. தினம் தினம் அவன் நினைவில் கண்ணீரில் கரைந்தாள். அவனை மணக்க போகும், முகம் தெரியாத பெண்ணை நினைத்து பொறாமை கொண்டாள் சாந்தா. இவளைப் பற்றி வான்மதி அறிந்தால்????
வான்மதியோ அவனையே நினைத்து தனக்குள் சிரித்து கொண்டாள். “அவன் கையில் சிக்கினால் என்னவெல்லாம் செய்கிறான்?”, என்று நினைத்து புன்னகைத்தவள் தன் மேனியைப் பார்த்தாள்.
“இங்கே எல்லாம் கை வைக்க வந்தானே? சரியான கள்ளன். அவன் சரியே இல்லை. மொத்தமாக என்னையே சுருட்டி விடுகிறான்”, என்று வாய் விட்டு புலம்பி கொண்டே புன்னகைத்து கொண்டாள்.
அவளுடைய சகோதரன் மேகவேந்தனோ அவள் அக்காவை நினைத்து கவலை கொண்டு “அவளுக்கு மோகினி பிசாசு பிடித்திருக்கிறது”, என்று தன் அன்னையிடம் போட்டு கொடுத்தான்.
நரேந்திரவர்மனோ இரவானால் கனவில் சஞ்சரிப்பதும், சூரியன் உதித்ததும் போரில் கவனம் செலுத்துவதுமாக இருந்தான்.
இப்படி இருக்கும் போது, தான் வான்மதியின் தோழி, விசாலத்தின் திருமணமும் வந்தது. மாப்பிள்ளை வீட்டினர் சார்பில் சாந்தாவும் பெண்ணழைக்க வான்மதியின் நாட்டுக்கு வந்தாள்.
தோழியை மணக்கோலத்தில் காண வான்மதியும் திருமணத்துக்கு சென்றாள். திருமணத்துக்கென்ற அலங்காரத்தில் வந்த வான்மதியை பார்த்ததும் வியந்து போனாள் சாந்தா. அப்படி ஒரு அழகியை அவள் கண்டதில்லை. “இளவரசரை மணக்க இருக்கும் இளவரசியும் இவ்வாறு தானே இருப்பாள்?”, என்று அவள் தான் நரேந்திரவர்மனின் காதலி என்று அறியாமலே எண்ணி கொண்டாள் சாந்தா.
விசாலம் திருமணம் முடிந்த பிறகு அவளை அதிக பரிசுகளுடன் அனுப்பி வைத்தாள் வான்மதி. “தாங்களும் விரைவாக இளவரசரை மணமுடித்து அங்கே வரவேண்டும் இளவரசி. தங்கள் வருகைக்காக காத்திருப்பேன்”, என்றாள் விசாலம்.
“கூடிய விரைவில் வருவேன் விசாலம். இப்போது என்னை பற்றிய கவலையை விட்டுவிட்டு ஓரக்கண்ணால் உன்னையே பார்த்து கொண்டிருக்கும் உன்னவரை கவனி. சந்தோசமாக சென்று வா”, என்று அனுப்பி வைத்தாள் வான்மதி.
விசாலம் நரேந்திரவர்மனுடைய நாட்டுக்கு சென்று ஒரு வாரத்தில் பக்கத்து வீடான சாந்தாவுடன் தோழமை கொண்டு விட்டாள்.
சாந்தாவும், விசாலத்துடன் நன்கு ஒட்டி கொண்டாள். அப்போது தான் சாந்தாவை கவனித்தாள் விசாலம். முகம் முழுவதும் புன்னகையுடன் உலவும் சாந்தா தனிமை கிடைத்தால் எதோ கவலையில் ஆள்வதை கண்டு கொண்டாள். அதை நேரடியாக அவளிடம் கேட்டும் விட்டாள்.
மனதில் இருக்கும் கவலையை வெளியே சொன்னால் மனதுக்கு இதமாக இருக்கும் என்று எண்ணி அனைத்தையும் விசாலத்திடம் ஒப்பித்து விட்டாள். இப்போது விசாலம் மனதில் கவலை சூழ்ந்தது அந்த அறியா பெண்ணை நினைத்து.
கூடவே “இதை வான்மதியிடமும் கூறி விட வேண்டும்”, என்று நினைத்து கொண்டு “இங்கே பார் சாந்தா, நாம் அனைவரும் சாதாரண மக்கள். ஆனால் இளவரசரோ அந்த பெரிய கோட்டையில் இருப்பவர். அவர் நம்மிடம் சாதாரண மனிதர் போல் உரையாடலாம். நட்பு கொள்ளலாம். ஆனால் அதை உரிமையாக எடுத்து கொண்டு அவருடன் வாழ நினைப்பது முட்டாள் தனம். எங்கள் நாட்டின் இளவரசி, வான்மதி எனக்கு சினேகிதி தான். என்னை வா போ என்று தான் அழைக்க சொல்லுவார்கள். ஆனால் அவர் என்னதான் சிநேகிதியாக இருந்தாலும் என்னால் அப்படி அழைக்க முடியாது. அது தான் நம் நிலைமை. நீ கானல் நீரை கண்டு வற்றாத நதி என்று நினைத்து வாழ்க்கை முழுவதும் இளைப்பாற நினைக்கிறாய். உன் கனவு பலிக்காது சாந்தா. கவலையை விடு. உனக்கான மணாளன் உன்னை தேடி வருவான். வீணாக மனதை வருத்தி கொள்ளாதே”, என்று ஆறுதல் கூறினாள் விசாலம்.
சாந்தாவும் “மறக்க முயற்சி செய்கிறேன்”, என்று கூறினாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் நரேந்திரவர்மன். அப்போது ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி கேட்டது நரேந்திரவர்மனுக்கு.
கண்களை திறந்து பார்த்தான். அறை முழுவதும் இருட்டு சூழ்ந்திருந்தது.
அங்கு ஓரத்தில் இருந்த விளக்கை ஏற்றி விட்டு திரும்பும் போது அவன் முன் அந்த உருவம் நின்றிருந்தது.
அதை கண்டு ஒரு புண் சிரிப்புடன் விலகி நடந்தான் நரேந்திரவர்மன்.
“நான் உன்னை அஞ்ச வைக்க இவ்வாறு வந்தால் நீ அச்சம் கொள்ளாமல் செல்கிறாய். இது சரி அல்ல நண்பனே”, என்றது அந்த உருவம்.
“ஜல் ஜல் என்ற ஒலியுடன் வந்தால் அது என் நண்பன் என்று எனக்கு தெரியாதா?”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.
“எவ்வாறு என்னை கண்டு பிடித்தாய் தோழனே?”, என்று கேட்டான் சுதமன்.
“இதை கண்டு பிடிக்க என்ன கடினம்? பெண் பிள்ளை போல சலங்கையோடு திரிவது நீ தான் என்று தெரியாதா எனக்கு? சரி சரி அதை பிறகு பேசி கொள்ளலாம். நீ வந்துவிட்டாய். அப்படி என்றால் நாம் போருக்கு தயாராக வேண்டும் அப்படி தானே?”
“ஆம் நரேந்திரா. நாளை இரவு செங்கல்வராயன் படை கிளம்புகிறது”
“நல்ல வேலை செய்தாய் சுதமன். அதனால் தான் இந்த வேலைக்கு என் உயிர் நண்பனான உன்னை அனுப்பினேன். சரி விடிந்ததும் நாம் தயாராக வேண்டும். நீ சிறிது ஓய்வு எடுத்து கொள். உனக்கு தான் அதிக அலைச்சல்”
“அதை விடு நரேந்திரா. போர் வீரனுக்கு ஏது ஓய்வு? சரி வேறு எதுவோ விஷயம் கேள்வி பட்டேன்”
“என்ன?”
“உனக்கு பெண் பார்த்து விட்டார்களாமே? யார் அந்த இளவரசி?”
“பெண் அவர்கள் பார்க்க வில்லை. நானே பார்த்து கொண்டேன். என் மாமனாரின் நாட்டை காப்பாற்ற தான் நாம் போருக்கு செல்ல வேண்டும்”, என்று கூறி கொண்டே அங்கிருந்த ஓலையை எடுத்து எழுத்தாணியை கொண்டு எதையோ எழுதியவன் வெளியே மாடத்தில் இருந்த மரகத புறா காலில் கட்டி அதன் தலையில் தடவி கொடுத்தான். அடுத்த நொடி அது சிறகடித்து பறந்தது.
“அப்படியா சங்கதி? இந்த விலாவரியான கதையை கேட்க கூட இப்போது நாழிகை இல்லையே. தூது போன இடத்தில் நீ தொலைந்து போனாயா நண்பா?”, என்று புன்னகையுடன் கேட்டான் சுதமன்.
“நீ வருத்தம் கொள்ளாதே. நாம் போருக்கு பின் விலாவாரியாக உரையாடலாம்”
“அப்படியே ஆகட்டும் இளவரசரே. நான் சென்று வருகிறேன்”
“என்னை இளவரசர் என்று நீ அழைத்தாயானால் என் வாள் உன் கழுத்தை துண்டிக்கும்”
“ஐயோ, வேண்டாம் வேண்டாம். உன்னை வா போ என்றே அழைக்கிறேன். நான் என் காதலியுடன் நெடுங்காலம் வாழ வேண்டும்”, என்று போலி பணிவுடன் உரைதான் சுதமன்.