“தங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தையே பற்றி உரைக்கவே நான் இங்கு வந்தேன் இளவரசி”, என்றாள் விசாலம்.
“அது தானே பார்த்தேன். என்னை பார்க்கவா நீ வர போகிறாய்? போ விசாலம்”
“கோபித்து கொள்ளாதீர்கள் இளவரசி. நீங்களோ பகல் வேளைகளில் நந்தவனத்தில் குடி புகுந்து விடுகிறீர்கள். இரவில் தங்களை காண என்னை என் வீட்டில் விட மறுக்கிறார்கள். நான் என்ன செய்வேன்?”
“சரி சரி, நீ விசயத்தை கூறு விசாலம்”
“எனக்கு, திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது இளவரசி”
“நீ மெய் தான் உரைக்கிறாயா விசாலம்?”
“ஆம் இளவரசி”
“மாப்பிள்ளை யார்? என்ன செய்கிறார்?”
“அவரும் என் அப்பா போலவே புரோகிதராம்”
“நல்லது. சரி நீ அவரை கண்டாயா?”
“நான் எங்கே அவரை காண்பது? மொத்தமாக அவர்கள் குடும்பத்தில் இருந்து பத்து பேர் வந்தார்கள். ஆண்களே ஐந்து பேர். அதில் யார் மாப்பிள்ளை என்று கூட என்னிடம் கூற வில்லை. இன்னும் பத்து நாள்கள் கழித்து திருமணம் என்றார்கள். அரை மனதாக மண்டையை ஆட்டி விட்டு வந்தேன். ஆனால் இப்போது எனக்கு திருமணத்தில் பரிபூரண சம்மதம்”
“என்ன கூறுகிறாய் விசாலம்? திடீரென்று உன் மனம் மாற காரணம் என்ன?”
“தாங்கள் தான் இளவரசி”
“நானா? நான் என்ன செய்தேன்?”
“தங்களுடைய காதல் தான் காரணம். தங்கள் மனதை திருடிய இளவரசரின் நாடும், எனக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளையின் நாடும் ஒன்றே. நீங்களும் எனக்கு பிறகு அங்கேயே மணம் முடித்து வந்து விடுவீர்கள். அதன் பின்னும் நாம் ஒன்றாக இருக்கலாமே. அதனால் தான்”
“விசாலம்”, என்று கூவி கொண்டே அவளை அணைத்து கொண்டாள் வான்மதி.
அதன் பின் இருவரும் மாற்றி மாற்றி கேலி பேசி கொண்டிருந்தார்கள்.
அங்கே வான்மதியின் நினைவுகளுடன் சென்ற நரேந்திரவர்மனோ அனைவரிடமும் கூறி கொண்டு போரை பற்றிய வழிமுறைகளை மற்றொரு முறை நினைவு படுத்தி விட்டு தன் பெரிய தந்தையுடன் கிளம்பி விட்டான்.
வராக சித்தரும், நரேந்திரவர்மனும் அரண்மனைக்கு வெளியே சென்றதுமே அவர்கள் வந்த புரவிகள் அங்கே பயணத்துக்கு தயாராக இருந்தன.
ஒரு புரவியில் குதித்தேறிய வராக சித்தர் “கொஞ்சம் கனவு காண்பதை குறைத்து விட்டு பத்திரமாக வா மகனே. நான் முன்னே செல்கிறேன்”, என்று கூறி விட்டு சென்று விட்டார்.
“என் தேவி வசிக்கும் கோட்டை”, என்று நினைத்து கொண்டே தலையை திருப்பி பார்த்தான். “அவளுக்கு கால் சரியாக இருந்தால் இந்நேரம் அரண்மனை மேலே இருந்து என்னை பார்வையிட்டு கொண்டிருப்பாள்”, என்று நினைத்து கொண்டு அவனுடைய புரவியை பார்த்தான்.
அந்த அழகான வெண்ணிற புரவியோ அவனை முறைத்து கொண்டு நின்றது. அதை பார்த்தவனுக்கு இதழ்களில் புன்னகை விரிந்தது.
இரண்டு நாள்கள் அதை காணாமல் அவன் இருந்ததால் அவன் மீது அது கோபமாக உள்ளதை உணர்ந்து கொண்டான். பிறந்ததில் இருந்தே அவனுடனே இருக்கும் அதன் மன நிலை அறிய மாட்டானா என்ன? அது பிறந்த உடனே அதற்கு தன் பெயர் போலவே வர்மா என்று பெயர் வைத்து விட்டான்.
மெதுவாக அதன் அருகே சென்று அதன் தோள் மீது தன் கை வைத்து வருடினான். அது கோபத்தில் சிலுப்பி கொண்டது.
“உனக்கு என் மீது கோபமா வர்மா?”, என்று மென்மையாக வினவினான்.
அது ஆம் என்னும் விதமாய் தலை அசைத்தது.
“உனக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால் நீ தான் இந்த உலகில் அதிசயம் வர்மா. என்னை மன்னித்து விடு வர்மா. உன்னை பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு அரண்மனைக்கு வந்த உடனே அவளை கண்டு நான் நானாக இல்லை. என் சித்தத்தை கலக்கி விட்டாள் அவள். அவள் நினைப்பில் நான் உன்னையே மறந்து போனேன். என்னை மன்னித்து விடு சகோதரா. ஆனாலும் அதன் பின் உன்னை சரியாக கவனிக்கும் படி கூறினேன் தானே?”, என்று கூறி கொண்டே அந்த புரவியின் மீது தலை வைத்தான்.
அதுவும் அவனை மன்னித்ததன் அடையாளமாக அதன் முகத்தை அவன் தலையில் வைத்தது.
“சரி தந்தை சென்று நாழிகை ஆகி விட்டது. நாமும் செல்லலாமா? நீ தயாராக இருக்கிறாயா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
அது கிளம்பலாம் என்னும் விதமாய் காலை அசைத்தது. அதன் மீது தாவி அமர்ந்தவன் வர்மனின் கடிவாளத்தை பற்றி கொண்டான்.
“செல்”, என்று அவன் கட்டளை இட்டதும் அதுவும் நகர்ந்தது. ஆனால் அவன் காட்டிய வழியில் செல்லாமல் திரும்பி நின்று விட்டது.
“என்ன வர்மா, நீ செல்லாமல் இப்படி நின்று விட்டாய்?”, என்று குழப்பத்துடன் நரேந்திரவர்மன் கேட்கும் போது அது ஒரு விதமான ஒலி எழுப்பி அரண்மனை மாளிகையை காட்டியது.
குழப்பமாக மேலே பார்த்தவனின் கண்கள் ஒளிர்ந்தது. அங்கே விசாலம் உதவியுடன் நின்று அவனையே பார்த்து கொண்டிருந்தாள் வான்மதி.
இங்கே இருந்தே அவளுக்கு கை ஆட்டினான். அவளும் பதில் செய்கை செய்தவுடன் அவனுடைய புரவியை தட்டி கொடுத்தான். அதுவும் தலையை திருப்பி கொண்டு அவன் காட்டிய பாதையில் சீறி பாய்ந்தது.
புரவியில் செல்லும் அந்த வீரனின் மனது அவனிடமே இல்லை. அவன் மனம் முழுவதும் வான்மதியே இருந்தாள். பெண் என்னும் மாய மோகினி என்று அவளை பற்றி நினைத்து கொண்டவனுக்கு மேலும் அவளுடன் இருப்பது போல கற்பனை விரிந்தது. தன் எஜமானனின் மனதை அறிந்தது போல அந்த புரவியும் அவன் வழி காட்டாமலே சரியான பாதையில் சென்றது.
இந்த முறை பயணம் செய்த களைப்பே இல்லாமல் தன்னுடைய அரண்மனைக்கு சென்றான் நரேந்திரவர்மன். நீராடி, பட்டாடை புனைந்து, அங்கிருந்த வாளை தன் இடுப்பில் செருகி கொண்டிருக்கும் போது அங்கு வந்தார் பாண்டிமா தேவி, நரேந்திரவர்மனின் அன்னை. அவளை பார்த்ததும் நரேந்திரவர்மன் முகம் மலர்ந்தது.
“எப்படி இருக்கிறீர்கள் அன்னையே? என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்”, என்று கூறி கொண்டே அவள் காலில் விழுந்தான்.
“நீண்ட ஆயுளுடன் இருப்பாய் மகனே. எழுந்திரு. உன்னை கண்ணால் காண வில்லையே என்ற கவலையை தவிர வேறு எந்த கவலையும் இன்றி ஆனந்தமாக இருக்கிறேன். போன காரியம் வெற்றி தானே நரேந்திரா?”
“ஆம் அன்னையே. வாசுதேவச்சக்கரவர்த்திக்கு வெகு மகிழ்ச்சி”
“நல்லது. சரி மகாராஜா உன்னை அரண்மனைக்கு வர சொன்னார்”
“இதோ, அங்கு தான் தாயாராகி கொண்டிருந்தேன். நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் வருகிறேன் அன்னையே”, என்று அவன் கூறியதும் பாண்டிமா தேவி சென்று விட்டாள்.
அங்கே அவை கூடி இருந்தது. அனைவரும் அரண்மனை வாயிலையே பார்த்து கொண்டிருந்தார்கள் அவன் வரவுக்காக.
“மகாராஜா இந்திரவர்மனின் சீமந்த புத்திரன், மேலை நாட்டின் இளவரசர் வந்து கொண்டிருக்கிறார்”, என்ற அறிவிப்பினை தொடர்ந்து உள்ளே நுழைந்தான் நரேந்திரவர்மன்.
அவன் உள்ளே நுழைந்ததும் அந்த இடமே அதிரும் படி அவன் புகழ் பாட பட்டது. அதை ஒற்றை கை அணைப்பில் தடுத்தவன் முன்னேறி நடந்தான்.
“மகாராஜாவுக்கும், மகாராணிக்கும் என்னுடைய வந்தனங்கள்”, என்று கூறி கொண்டே அவர்களின் கால்களில் விழுந்தவன் அவர்கள் ஆசிர்வதித்ததும், அங்கே புண் சிரிப்புடன் அமர்ந்திருந்த வராக சித்தரின் கால்களிலும் விழுந்து வணங்கி பின் அவையோரை பார்த்து வணங்கி விட்டு அவனுடைய ஆசனத்தின் முன்பு போய் நின்றான்.
அங்கிருந்த அனைவரும் அவனையே ஆவலாக பார்த்து கொண்டிருந்தார்கள். அங்கிருக்கும் முதியவர்கள் அவனை தன் பிள்ளையாக பாவித்து அவனை நோக்கினார்கள். ஆண்கள் சகோதரனாக நினைத்து அவனை நோக்கினார்கள். கன்னி பெண்கள் கனவு நாயகனை கண்டதை போல பார்த்தார்கள். ஆனால் ஒரு பெண்ணின் விழிகள் மட்டும் அவனையே காதலாக நோக்கின. அவன் தனக்கே வேண்டும் என்ற ஆர்வம் அந்த பெண்ணின் விழிகளில் மின்னின.
இது எவற்றையும் அறியாமல், மகாராஜாவின் கேள்வி கணைகளுக்காக தயாராக நின்றான் நரேந்திரவர்மன்.
“போன காரியம் என்னவாயிற்று நரேந்திரா?”, என்று கம்பீரமாக கேள்வி எழுப்பினார் இந்திரவர்மன்.
“அனைத்தும் சுபம் மகாராஜா. நிலைமையை கண்டு அவர்களே குழம்பி கொண்டு தான் இருந்தார்கள். அப்போது தங்கள் உதவி கிடைக்கும் என்று நான் உரைத்தவுடன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு நன்றி உரைக்க சொன்னார் வாசுதேவச்சக்கரவர்த்தி”
“நல்லது. அப்போது நம் படையும் போருக்கு ஆயத்தமாக வேண்டும் தானே?”
“ஆம் மகாராஜா. செங்கல்வராயன் படை எப்போது அவன் கோட்டையை விட்டு நகர்கிறது என்று ஒற்றர் மூலம் தெரிய வருகிறதோ அப்போதே நம் படையும் நகர்ந்தாக வேண்டும். இங்கிருந்து வாசுதேவச்சக்கரவர்த்திக்கு புறா தூது அனுப்பி விட்டால் அவரும் படையை அங்கே நிறுத்தி விடுவார்”
“அப்படியே ஆகட்டும். வேறு எதுவும் குளறு படிகள் நடக்கத்தால்லவா?”
“அல்ல மகாராஜா. கண்டிப்பாக நமக்கு வெற்றி கிட்டும். செங்கல்வராயனின் படை ஒன்று தோற்று போகும். அப்படி இல்லை என்றால் பாதி போரில் திரும்பி செல்லும்”
“சரி படையை தயார் செய். படை தளபதியாக நீ தான் படையை வழி நடத்தி செல்ல வேண்டும். இது தான் நீ இளவரசனாக இருந்து செய்யும் கடைசி போர்”
“மகாராஜா”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் நரேந்திரவர்மன்.
“என்ன அச்சம் கொள்கிறாய். எனக்கோ வயதாகி விட்டதல்லவா? இனி நீ தானே அரியணையில் அமர வேண்டும்? அதனால் உன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய போகிறேன்”, என்று அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் மகாராஜா.
வராக சித்தரை பார்த்தவன் காப்பாற்றுங்கள் என்னும் விதமாய் சைகை செய்தான். அவரோ ஒரு விதமான சிரிப்பை உதிர்த்தார்.
அதை பார்த்தவனுக்கு “சரி தான் பெரிய தந்தை மகாராஜாவிடம் வான்மதி பற்றி பற்ற வைத்து விட்டார் “, என்று நினைத்து கொண்டவன் தயக்கத்துடன் மகாராஜாவையும், ராணியையும் பார்த்தான்.
அவனை பார்த்து புன்னகைத்தார்கள் இருவரும். அதில் அவன் மனது சாந்தி அடைந்தது.
“கூடிய விரைவில் உங்கள் இளவரசனான நரேந்திரவர்மனுக்கு திருமணம் நடக்க விருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். பெண் யார் என்பதை செங்கல்வராயனுடன் நடக்க இருக்கும் போருக்கு பின் தெரிவிக்கிறேன். சபை கலையலாம்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா.
“மாமன்னர் வாழ்க, சக்கரவர்த்தி வாழ்க, இளவரசர் வாழ்க”, என்று கோஷங்களை மக்கள் எழுப்பினார்கள்.
மகாராஜா அறிவித்த செய்தியை கேட்டதும் அவனையே காதலாக பார்த்து கொண்டிருந்தவளின் கண்கள் நீரை பொழிந்தது. நரேந்திரவர்மனின் திருமண செய்தியை ஏற்று கொள்ள முடியாமல் அவள் உயிரும் துடித்தது. அந்த வலி தாங்க முடியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதை யாரும் காண கூடாது என்று நினைத்து கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள் அவள்.