காதல் என்று வந்துவிட்டால் அரசன் என்ன? ஆண்டி என்ன? அனைவருமே அறிவற்றவர்களாகி விடுகிறார்கள். இவன் மட்டும் விதி விலக்கா என்ன?
“என் மீது அவளுக்கு மயக்கமோ காதலோ வர வில்லை என்றால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அவள் மனதில் யாரோ இருக்க வேண்டும். ஆம் மங்கையர் அயலாரை ஆசையாக பார்ப்பது இல்லை என்றால் அந்த மங்கையின் மனம் கவர்ந்த வேறு ஒருவன் இருக்க வேண்டும். வான்மதியின் மனதிலும் எவனோ ஒருவன் இருக்க வேண்டும். அதனால் தான் நான் அவள் மனதில் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை வெளியே சொல்ல முடியாமல் தான் ராமர், சீதை என்று கதை கூறி இருக்கிறாள். இல்லை அது கதை அல்லாமலும் இருக்கலாம். நிஜமாவே அந்த ராமாவதாரமாக எவனோ ஒருவன் இருக்கிறான். இவள் மட்டுமே உலகம் என்று இவள் மீது மையல் கொண்டிருக்கிறான். அவன் மீது இவளும் காதல் கொண்டு விட்டாள் போல? ஆனால் இவளை போல் ஒரு பெண் கிடைத்தால் அவன் ஏன் வேறு பெண்ணை தேட போகிறான்? கொடுத்து வைத்தவன் அவன்”, என்று நினைத்து அந்த முகம் தெரியாதவனின் மேல் பொறாமை வந்தது அவனுக்கு.
“அதை அறியாவிட்டால் என்னால் சாதாரணமாக துயில் கொள்ள இயலாது. அதை அறிந்தே ஆக வேண்டும். அந்த முகம் தெரியாதவன் எவெரென்று அறியாவிட்டால் என்னால் எதிலும் கவனம் செலுத்த இயலாது. அதை கேட்டே ஆக வேண்டும்”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.
அவளோ இடையில் கை வைத்து அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
அவளுடைய அந்த முறைப்பை கூட ரசித்தான். அவளுடைய அழகை அங்குலம் அங்குலமாக ரசிக்க சொல்லி மனதை அடக்கி விட்டு அவள் முகத்தில் பார்வையை பதித்தான்.
ஆனால் அவள் முகத்தில் துளி கூட கோபம் இல்லாமல், முறைப்பு மட்டும் இருந்தது. அவளுடைய அந்த செய்கை அவனை வெகுவாக கவர்ந்தது. அவன் முகத்தில் புன்சிரிப்பு படர்ந்தது.
“தாங்கள் ஏன் என்னை சினத்துடன் நோக்குகிறீர்கள் இளவரசி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“தங்கள் செய்கையை கண்டு சினத்துடன் நோக்கமால் மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டுமா வீரரே?”
“நீ மட்டும் எனக்கு மாலை இட்டால் பிறவி பலனை அடைந்து விடுவேனே பெண்ணே”, என்று நினைத்து கொண்டு “நான் தங்களுக்கு சினமூட்டும் எந்த செயலையும் செய்ய வில்லையே இளவரசி”, என்றான்.
“அது தானே என் சினத்தின் காரணமும். தாங்கள் வந்த காரியத்தை மறந்து கனவில் சஞ்சரித்துள்ளீர்களே? எந்த செயலையும் செய்ய காணோமே. என் தந்தை நந்தவனத்துக்கு வேலி இட அனுப்பி வைத்தால் தாங்கள் என் பேச்சை கூட செவி மடுக்க காணோமே”
“மன்னியுங்கள் இளவரசி. வேலியை பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன்”
“அப்படியா? நல்லது. சரி தங்கள் சிந்தித்ததை கூறுங்கள் பார்க்கலாம்”
“அது… அது..”, என்று ஆரம்பித்து அசட்டு சிரிப்பை உதிர்த்தான் நரேந்திரவர்மன்.
“தங்களின் அசட்டு சிரிப்பை நிறுத்தி விட்டு வேலையை செய்யலாமா?”
“உத்தரவு இளவரசி”
“வாருங்கள் செல்லலாம். இங்கே மாற்றங்கள் எதுவும் தேவை இல்லை. நந்தவனத்தில் பின் பக்கம் தான் தாங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அங்கே செல்லலாம்”
அவளுடன் நந்தவனத்தில் நடை பயில்வது அவனுக்கு சொர்க்கத்தில் உலாவது போல இருந்தது.
அவளுடைய மிரட்டலையும், தன்னை வேலி இட வந்தவன் என்று நினைத்து அவள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் நினைத்து சிரித்தவன் அவளுடன் நடந்தான்.
“இல்லை தாங்கள், ராமர் போல் ஒரு மணாளன் கிடைத்தால் மட்டுமே மணந்து கொள்வேன் என்று உரைத்தீர்களே. அப்படி ஒருவர் இந்த பிரபஞ்சத்தில் உள்ளாரா இளவரசி?”
“ஒரு ஆண் மகனாக இருந்து கொண்டு தங்களுக்கு இப்படி பட்ட வினாக்கள் தானே தோன்றும் வீரரே. எல்லா ஆண் மகன்களும் ஒன்று போல் தான் உள்ளீர்கள். தாங்கள் எத்தனை விவாகம் செய்ய உத்தேசித்துள்ளீர்கள் வீரரே”
“அப்படி எதுவும் எண்ணம் இல்லை இளவரசி”
“தங்கள் பதில் நம்பும் படி இல்லை வீரரே”
“உண்மை தான் இளவரசி. இன்னும் திருமணத்தை பற்றி சிந்திக்க வில்லை”
“ஓ”
“ஆம் இளவரசி. சரி நீங்கள் என் வினாவிற்கு விடை அளியுங்கள். ஒரு விவாகம் மட்டும் புரியும் மனிதன் இருக்கிறானா என்ன? தாங்களோ அரச குமாரி. ஒரு அரச குமாரரை தான் விவாகம் செய்ய வேண்டும். ஆனால் அரசரின் சூழ்நிலை பல விவாகம் புரிவது. ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலாவது, அவன் காதலினால் ஒரு விவாகம் மட்டும் புரியலாம். ஆனால் தாங்கள் சாதாரண குடிமகனை மணக்க இயலாது. என்னுடைய சந்தேகத்தால் இப்படி கேட்டேன் இளவரசி. என் கேள்வி அதிக படியாக இருந்தால் மன்னியுங்கள்”
“அப்படி அல்ல வீரரே. தங்களிடம் உரையாடுவது ஒரு நண்பனிடம் பேசுவது போல தோன்றுகிறது. இப்போது என் பதிலை கூறுகிறேன். இந்த பிரபஞ்சத்தில் அப்படி ஒருவன் என்னை தேடி வருவான். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வரலாற்றில் அதிக பெண்மணிகள் ராஜகுமாரரை மனக்காமல் சாதாரண வீரர்களை மணந்த நிகழ்வு நடந்திருக்கிறது வீரரே. அதனால் ஒரு சாதாரண குடிமகன் என்னை மட்டும் சீதையாக நினைத்தால் அவனே எனக்கு ராமன்”
அவள் பதிலில் அவன் மனதில் மகிழ்ச்சி பூக்கள் பூத்தன. “வான்மதி அரச வாழ்வை பெரிதாக எண்ண வில்லை”, என்று நினைத்து நிம்மதியானான். ஆனால் அவனுக்கு அவள் மனம் கவர்ந்தவன் யாரென்று தெரிய வேண்டுமே. அதனால் பேச்சை வளர்த்தான்.
“அப்படியா? அது எப்படி இளவரசி, மகாராஜா தங்களை சாதாரண குடிமகனுக்கு மனம் முடிக்க ஒத்து கொள்வார்?”
“கண்டிப்பாக ஒத்து கொள்வார். அவருக்கு நான் என்றால் உயிர். என்னை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை கூற மாட்டார். ஆனால் அப்படியே அவர் ஒத்து கொள்ளாவிட்டாலும் காலம் முழுக்க அவனுடைய நினைவில் வாழ்வேன்”
“என்ன? திருமணத்தை துறந்து ஒரு வாழ்வா?”
“ஆம் வீரரே. ஒருவனை மனதில் நினைத்து விட்டால் அவனை அன்றி வேறு எவரையும் என்னால் எண்ண இயலாது”
“தங்களுடைய பேச்சை கேட்ட பின்னர் எனக்கு ஒன்று புரிகிறது இளவரசி”
“என்ன வீரரே?”
“தங்களை மட்டும் சீதையாக என்னும் ஒரு ராமனை நீங்க கண்டு விட்டிர்கள் தானே? அதனால் தான் இப்படி முழுமனதாக உரைக்கிறீர்கள். தங்கள் மனம் கவர்ந்தவர் யார்? யாரென்று தெரிந்தால் அவரிடம் நானும் கொஞ்சம் காதலை கற்று கொள்வேன்”, என்று சிரித்து கொண்டே கேட்டாலும் அவன் மனது பயங்கரமாக தடுமாறியது.
“ஆம் ஒருவனை கண்டு கொண்டேன் என்று சொல்வாளோ?”, என்று நினைத்து அவன் நெஞ்சம் பதைத்து.
அவளுடைய பதிலுக்காக ஆவலாக அவளை பார்த்தான் நரேந்திரவர்மன்.
அவனை பார்த்து வெண்பற்கள் தெரிய சிரித்தாள் வான்மதி.
“அப்படி ஒரு ராமனை நான் இன்னும் காண வில்லை வீரரே. அப்படி பட்டவருக்காக தான் காத்திருக்கிறேன்”, என்று சொல்லி அவன் நெஞ்சில் பாலை வார்த்தாள் வான்மதி.
ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவனிடம்.
“ஆச்சர்யமாக இருக்கிறதே. அப்படி என்றால் தாங்கள் இதுவரை யார் மீதும் மையல் கொள்ள வில்லையா? மென்மையான குணமுள்ளவர்கள் அவர்கள் மனதுக்கினியவர்களை கண்டால் மயங்கி நிற்பார்களே? தாங்கள் மனம் கவர்ந்தவர் தங்கள் கண் முன் வரவில்லையா?”
“வர வில்லை வீரரே. அப்படியே வந்தாலும் அவரை பார்த்த உடனே என் மனதில் காதல் பூக்காது”
ஆச்சர்யமாக அவளை பார்த்தான் நரேந்திர வர்மன்.
“என்ன வீரரே, விழிக்கிறீர்கள்? நான் உண்மையை தான் உரைத்தேன். என் மனம் கவர்ந்தவன் என் கண் முன் வந்து, நான் அவன் அழகிலோ, அவன் குணத்திலோ கவர பட்டு காதல் கொண்டுவிட்டேன் என்று வையுங்கள் நாளை எதாவது ஒரு காரணத்தால் அவனை கை பிடிக்க இயலவில்லை என்றால் என் மனது புண்படுமே. அதனால்….”
அவள் பதிலில் அவனுக்கு பர பரப்பு வந்து விட்டது. “அதனால் தான் அவள் என்னை ஆழ்ந்த பார்வை பார்க்க வில்லையா?”, என்று நினைத்து நிம்மதி வந்திருந்தது.
அவளை போலவே அவனும் “அதனால்…”, என்று இழுத்தான்.
“எவன் ஒருவன் என் மீது நான் மட்டுமே அவன் மனைவி என்று சத்தியம் செய்கிறானோ அவனிடமே என் மனம் மயங்கும்”, என்று சிரித்தாள் வான்மதி.
பல ராஜ்யங்களை வெற்றி வாகை சூடும் போது கொண்டிராத மகிழ்ச்சியை இப்போது பெற்றான் நரேந்திரவர்மன்.
அவளுடைய தலையில் கை வைத்து “நான் உனக்காகவே படைக்க பட்டவன் தேவி. உன்னை அல்லாமல் எவரையும் என்னால் மனைவியாக எண்ண இயலாது”, என்று சத்தியம் செய்து அவளை அள்ளி அணைக்க அவன் உடல் பர பரத்தது. முயன்று தன்னை அடக்கி கொண்டான் நரேந்திரவர்மன்.
“தங்களை மணக்க இருப்பவர் கொடுத்து வைத்தவர் இளவரசி”
“இல்லை வீரரே, என்னுடைய எதிர்பார்ப்பு படி நான் அவரை மணந்தேன் என்றால் நான் தான் பாக்கியசாலி”
“ஏன் அப்படி கூறுகிறீர்கள் இளவரசி?”
“சூழ்ச்சி, வஞ்சகம் என்று இருக்கும் இந்த சூழ்நிலையில் அவனுக்கு வேறு பெண்களை திருமணம் செய்ய வாய்ப்பு வரும். சில நேரம் கட்டாயம் கூட வரும். ஆனா எந்த சூழ்நிலையிலும் அவன் மனம் மாறாமல் என்னை மட்டும் மனைவியாக நினைத்து காதல் கொண்டால் அதை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்? அப்படி பட்டவன் கிடைத்தால் அவனை பூஜை செய்யமாட்டார்களா பெண்கள்?”
“ஆம் ஆம்”
“இருப்பதில் கொடுமை என்ன தெரியுமா வீரரே? தன்னுடைய கணவனை மற்றொருவரிடம் விட்டு கொடுப்பது. பெண்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவருக்கு விட்டு கொடுக்கலாம். ஆனால் கணவனை விட்டு கொடுப்பவள் இந்த உலகத்தில் சபிக்க பட்டவள். உடலையும், உள்ளத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த ஒருவனை, அதே உறவில் மற்றவளோடு சேர்த்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் போது வரும் வேதனை அவளை உயிரோடு கொளுத்தும் போது கூட வராது. என் அன்னை ஒரு காலத்தில் மற்றொரு தேசத்தின் இளவரசி. என் தந்தையுடனான திருமணத்துக்கு பின் இந்த நாட்டின் மகாராணி. அவருடைய கண்ணசைவுக்கு பலர் சேவகம் செய்கிறார்கள். அன்னையின் கட்டளைக்கு பலர் காத்திருக்கிறார்கள். ஏன் என் தந்தையே மகாராணிக்கு மரியாதை செலுத்த தான் வேண்டும். அவரும் என் அன்னையிடம் அரசியலில் ஆலோசனை கேட்கத் தான் செய்கிறார்”
….
“மகாராஜாவுக்கு எப்படி செல்வாக்கு இருக்கிறதோ, அதே அளவு என் அன்னைக்கும் இருக்கிறது. அவருக்கு இந்த தேசமே சொந்தம். விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் என் அன்னைக்கு சொந்தம். ஆனால் பல நேரம் என் அன்னையின் கண்களில் குடி கொண்டிருக்கும் கவலை என்னை அதிகமாக யோசிக்க வைத்தது. முன்னர் அதற்கான விடையை நான் அறியேன். அறிந்த போதோ என் மனம் வெகுவாக காய பட்டது. அதன் பின்னர் தான் இந்த முடிவு”
“மகாராஜாவின் நிலை அப்படி இளவரசி”
“ஹ்ம்ம், இதை ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் அவருக்கு எந்த வித இன்னல்களும் இல்லை. தேசத்தையும், தேசத்து மக்களையும் காப்பாற்ற எத்தனை விவாகம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மகாராணியின் நிலை? என்னை பொறுத்தவரை அனைத்து மகாராணிகளும் துர்பாக்கியவாதிகள் தான். இன்னொரு வேடிக்கை அறிவீர்களா வீரரே?”
“கூறுங்கள் இளவரசி”
“நேற்று முன் தினம் தான் என் தந்தையின் கடைசி ராணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது”
“ஆம் அறிவேன். இதில் என்ன வேடிக்கை இளவரசி?”
“தங்களுக்கு புரிய வில்லையா? முன் தினம் புது தகப்பனாக மாறிய என் தந்தை, இன்று எனக்கு திருமணம் செய்விக்க வாக்குவாதம் செய்தார்? எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?”
“ஹா ஹா, ஆம் ஆம் வேடிக்கை தான்”
“கேட்கும் நமக்கு வேடிக்கை வீரரே. ஆனால் என் அன்னை நிம்மதியாக உறங்கி நான் கண்டதே இல்லை. அந்த அளவு அவர்கள் மனதில் கவலை மேகம் சூழ்ந்துள்ளது”
“ஆம் ஆம் மகாராணி வஞ்சிக்க பட்டவர்”
“இப்போது புரிகிறதா? நான் ஏன் ராமனை தேடுகிறேன் என்று?”
“புரிகிறது இளவரசி. தங்களுடைய ராமனை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள்”
“ஹா ஹா, சரி தான். நாம் பேசிய படியே இந்த எல்லைக்கு வந்துவிட்டோம். இங்கு தான் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் வீரரே”
“உத்தரவு இளவரசி”, என்று அழைப்பதற்கு பதில் “உத்தரவு தேவி”, என்று அழைத்து விட்டு அவளை பார்த்து விழித்தான் நரேந்திரவர்மன்.
கணவன், மனைவியை தேவி என்று அழைப்பது தான் வழக்கம். ஆனால் அவன் தேவி என்று அழைத்ததும் அவனை திடுக்கிட்டு பார்த்தாள் வான்மதிதேவி.
“மனதினுள் நினைத்தது வெளி வந்து விட்டதே? இப்போது என்ன சொல்லி சமாளிப்பேன்”, என்று யோசித்தான் நரேந்திரவர்மன்.