“ஆம் சுதமன். நாளை நீ வேறு போரில் கலந்து கொள்ள முடியாது. சரி உன்னை யார் இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கியது. உன்னை பின்னால் இருந்து கோழை போல் கழுத்தில் தாக்கி இருக்கிறானே யார் அவன்? அவனை கொன்றே தீர வேண்டும்”, என்றான் நரேந்திரவர்மன்.
“என் முதுகுக்கு குறி வைத்து ஈட்டி எரிந்தது அந்த வல்லவரையன் தான் நரேந்திரா”
“அவனா? அவனை நாளை ஒரு கை பார்த்து விடுகிறேன். பின்னால் இருந்து தாக்கிய அவனை புறமுதுகு காட்டி ஓட செய்ய வில்லை என்றால் நான் நரேந்திரவர்மன் அல்ல. நீ ஓய்வெடு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அடுத்த நாள் சூரிய கதிர் பூமியில் விழுவதற்கு முன்னே இரண்டு படையினரும் போர் களத்தில் அணி வகுத்து விட்டார்கள்.
சூரியனும் தன் ஒளியை இப்புவியில் பாச்சினான். “இப்போதும் ஒன்றும் ஆகி விட வில்லை செங்கல்வராயா. இப்போதே உன் நாட்டிற்கு திரும்பி சென்று விடு. உன்னால் எம் படையை வெற்றி கொள்ள முடியாது. வீணாக தோல்வியை தழுவாதே”, என்று எச்சரிக்கை விடுத்தார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“நான் தோல்வியை தழுவ போறேனா? அதையும் பொறுத்திருந்து பார்ப்போம். இந்திரவர்மரின் மகன் நரேந்திரவர்மன் படையுடன் சேர்ந்து விட்டோம் என்று மமதையில் கூறுகிறீரா? எங்கே அந்த வீராதி வீரன்? என் முன்னிலையில் போரிட துணிவில்லாமல் மறைந்து யுத்தம் புரிகிறானா?”, என்று எகத்தாளமாக கேட்டான் செங்கல்வராயன்.
அப்போது வலது பக்கம் இருந்து கம்பீரமாக சீறி பாய்ந்து வந்தான் நரேந்திரவர்மன்.
வாசுதேவரின் ரதத்தின் அருகே தன் புரவியை நிறுத்தியவன் “தாங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் வீராதி வீரன் தான் செங்கல்வராயரே. தங்களை கண்டு நான் பயம் கொள்கிறேனா? என்னை கண்டு அந்த பயமே பயந்து பின் வாங்கும். என்னை பற்றிய புகழ் எட்டு திக்கும் பரவி இருக்கும் போது தாங்கள் மட்டும் அறியாமல் இருப்பது விந்தை தான்”, என்று புன்னகையுடன் கூறினான் நரேந்திரவர்மன்.
“நரேந்திரவர்மா நான் என்று உனக்கு தெரியாதா? நான் உன் உறவினன். உன் தந்தை எனக்கு மாமன் முறை. அப்படி இருக்கும் போது என்னுடைய எதிரிகளுடன் சேர்ந்து என்னை எதிர்த்து போரிடுவது சரியாகுமா?”
“தாங்கள் உறவினராக நடந்து கொள்ளாத பட்சத்தில் அனைத்தும் சரி செங்கல்வராயரே”
“எது சரி? உன் படையை பின் வழியாக கொண்டு வந்து நிறுத்தியது மட்டும் சரியா? இது நியாயமாகுமா?”
“நான் பயந்து ஒன்றும் பின் பக்கம் வந்து நிறுத்த வில்லை. தாங்கள் வரும் வழியில் வந்து நிறுத்தினால் எப்படி நான் முன் வழியே வந்து நிறுத்த முடியும்? அது மட்டும் அல்லாமல் நியாய படி போரிடுவதை பற்றி நீர் பேசுவது வியப்பான விசயம் தான்”
“நரேந்திரவர்மா”
“கத்தாதீர்கள் செங்கல்வராயரே. தங்களுடைய படை மட்டும் தான் இப்போது போரிட வந்திருக்கிறதா? தங்களுடைய மைத்துனன் படையும் சேர்த்து கொண்டு தானே வந்திருக்கிறீர்கள்?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“இது எப்படி இவனுக்கு தெரியும்?”, என்று செங்கல்வராயனும் “இவனுக்கு தெரியாதது எதுவுமே இருக்காது”, என்று வாசுதேவச்சக்கரவர்த்தியும் நினைத்து கொண்டார்கள்.
“அது மட்டும் அல்ல செங்கல்வராயரே. தாங்கள் நேர் வழியில் யுத்தம் செய்ய இங்கு வர வில்லை. பேடி தனமான காரியங்களை செய்து யுத்தம் புரிய தான் வந்திருக்கிறீர்கள். அதனால் தங்களிடம் தர்ம படி போரிடுவதை விட அதர்ம படி போரிட்டால் கூட தவறு இல்லை”, என்றான் நரேந்திரவர்மன்.
“நரேந்திரவர்மா வார்த்தையை அடக்கி பேசு. இல்லை என்றால் என் வாளுக்கு நீ பதில் கூற வேண்டும்”, என்று கர்ச்சித்தான் செங்கல்வராயன்.
“ஹா ஹா, முதலில் என் வாளுக்கு தாங்கள் பதில் கூறுங்கள். வெற்றி நிச்சயம் என்று கற்பனை கோட்டை கட்டி இருக்கிறீர்களா? உங்களின் வெற்றி மமதைக்கு காரணத்தை நான் கூறட்டுமா? யார் அங்கே? அவனை இழுத்து வாருங்கள்”, என்று உத்தரவிட்டான் நரேந்திரவர்மன்.
இரு வீரர்கள் காண்டவனை யுத்த களத்துக்கு இழுத்து வந்தார்கள். வல்லவரையனும் செங்கல்வராயனும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டார்கள்.
“என்ன செங்கல்வராயரே? அதிர்ச்சியாக இருக்கிறதா? இவனை வைத்து தானே உணவில் விசம் கலந்து வெற்றி கொள்ள நினைத்தீர்கள். தங்களுடைய வெற்றி இப்போது எப்படி சின்னா பின்னமாக போகிறது என்று பாருங்கள்”, என்று கூறி கொண்டே தன்னுடைய வாளை எடுத்து காண்டவனின் தலையை துண்டித்தான். அவன் தலை மட்டும் செங்கல்வராயன் பக்கம் சென்று விழுந்தது. உடல் இங்கே துடித்து துடித்து மண்ணில் சாய்ந்தது.
அனைவரும் அதிர்ச்சியானார்கள். “தங்கள் நாட்டு வீரரை தங்களுடைய அனுமதி இல்லாமல் தண்டித்தது தவறு தான். என்னை மன்னித்து விடுங்கள் மகாராஜா. ஆனால் நேற்று தாங்கள் எனக்கு உரிமை இருக்கிறது என்று கூறியதால் தான் நான் இப்போது இதை செய்தேன். தவறுக்கு மன்னிப்பளிக்கலாம் மகாராஜா. ஆனா துரோகத்துக்கு இந்த நரேந்திரவர்மனிடம் மன்னிப்பே கிடையாது”, என்றான் நரேந்திரவர்மன்.
“தக்க தண்டனை தான் வழங்கி இருக்கிறீர்கள் இளவரசே. இதில் தவறாக நினைக்க எதுவும் இல்லை. யுத்தத்தை துவங்கலாம்”
“அப்படியே ஆகட்டும் மகாராஜா. போர் முரசை அறையுங்கள். எதிரிகளின் தலை மண்ணில், வீழ்ந்து போகட்டும்”, என்று கட்டளை இட்டான் நரேந்திரவர்மன்.
செங்கல்வராயனுக்கு காண்டவனின் தலையை பார்த்ததுமே நடுக்கம் வந்து விட்டது. தான் தோற்பது உறுதி என்று தோன்றி விட்டது. வல்லவரையனை பார்த்தான்.
அவனும் “நம் முயற்சியை அவன் எப்படி முறியடித்தான் என்று நான் அறியேன் தமையனாரே. என்னை மன்னித்து விடுங்கள்”, என்றான்.
“இப்போது என்ன செய்வது வல்லவரையா? போரில் நாம் தோற்பது உறுதி”
“எதிர்மறையாக எண்ணவேண்டாம் மகாராஜா. அவன் யுத்தத்தை துடங்கி விட்டான். நாமும் துவங்க வேண்டும்”
“சரி துவங்க சொல்”, என்று ஆணை இட்டான். அதன் படி அவன் புறமும் முரசறைய பட்டது. அதன் பின் நேற்று போல் யுத்தம் மூண்டது. மறுபடியும் வீரர்கள் வீரமாக போரிட்டார்கள்.
செங்கல்வராயனும், வாசுதேவரும் போரிட்டார்கள். ஆனால் சிறிது நேரத்திலே வாசு தேவர் சோர்ந்து போனார். அப்போது முன்னே வந்து செங்கல்வராயனுடன் சண்டை புரிந்தான் நரேந்திரவர்மன்.
இப்போது செங்கல்வராயன் சோர்வடையும் போது வல்லவரையன் அவனுடைய உதவிக்கு வந்தான்.
ஏற்கனவே தன்னுடைய நண்பனை இந்த கதிக்கு ஆளான வல்லவரையனை ஒரு கை பார்க்க வேண்டும் என்று இருந்த நரேந்திரவர்மனும், வல்லவரையனை நிர்கதியாக ஓட விட்டான்.
கடைசியில் அன்று சூரியன் நடு வானுக்கு வரும் முன்னரே செங்கல்வராயன் படை புறமுதுகிட்டு தெறித்து ஓடியது. எல்லை வரை அவர்களை துரத்தி விட்டார்கள் வீரர்கள்.
யுத்தமும் நிறுத்த பட்டது. மகாராஜா மற்றும் நரேந்திரவர்மன் படை வெற்றியை கொண்டாடியது. ஏராளமான முழக்கங்கள் கேட்டன.
வெற்றியோடு நாடு திரும்பினார்கள். அரண்மனையே கோலாகலமாக அலங்கரிக்க பட்டிருந்தது. வீதி எங்கும் தோரணங்கள் தொங்க விட பட்டிருந்தன.
வீரர்களுக்கு வெற்றி திலக மிட அவரவர் வீட்டில் பெண்கள் ஆரற்றி கரைத்து காத்து கொண்டிருந்தார்கள்.
அரண்மனையில் பல ராணிகளுக்கு மத்தியில் முதல் ஆளாய் ஆரற்றி தட்டுடன் நின்றாள் அருந்ததி தேவி.
அருந்ததி தேவி அருகில் நின்றால் தான் நரேந்திரவர்மனை காண முடியும் என்ற கனவோடு அருந்ததி அருகில் நின்று கொண்டாள் வான்மதி.
அவள் முகம் இன்பத்தில் பூரித்திருந்தது. அவளுடையவனுக்காக காத்திருந்தாள். போர்க்களத்தில் இருந்து கிளம்பும் போது நரேந்திரவர்மனுக்கு நன்றி கூறினார் வாசுதேவச்சக்கரவர்த்தி.
“நன்றி கூறி அந்நிய படுத்த வேண்டாம் மகாராஜா. நாங்கள் எங்கள் நாட்டிற்கு கிளம்புகிறோம்”, என்று அறிவித்தான் நரேந்திரவர்மன்.
“எங்கள் தேசத்தையே எங்களுக்கு மீட்டு கொடுத்த தங்களுக்கும், தங்களுடைய வீரர்களுக்கும் விருந்தளிக்காமல் வெறும் கையோடு அனுப்பினால் வெற்றி பெற்ற மகிழ்ச்சி எவ்வாறு இருக்கும் இளவரசே? நீங்கள் அனைவரும் நாங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள தான் வேண்டும்”, என்றார் மகாராஜா.
தன்னவளை காண கிடைக்கும் வாய்ப்பை அவன் மட்டும் நழுவ விடுவானா என்ன? உடனே மண்டையை ஆட்டி “சரி. தங்கள் விருப்ப படி நடக்கட்டும்”, என்று கூறி விட்டான்.
பட்டத்து யானை அலங்கரிக்க பட்டு நாட்டின் எல்லையில் நிறுத்த பட்டிருந்தது. அதன் அருகில் வந்ததும் மகாராஜா அதன் மீது தாவி ஏறி கொண்டார். அவருக்கு ஒரு புறம் நரேந்திரவர்மன் அவனுடைய புரவியிலும், மற்றொரு பக்கம் சுதமன் மற்றொரு புரவியிலும் பவனி வந்தார்கள்.
அரண்மனை வாயிலுக்கு வந்ததும் முன்னே வந்து ஆரற்றி சுற்றினாள் பட்டத்து ராணி அருந்ததி தேவி.
நரேந்திரவர்மனின் கண்கள் சுற்றி நடக்கும் எந்த கொண்டாட்டத்தையும் கவனிக்காமல் தன்னவளை தேடின. வான்மதியை கண்டதும் அவன் முகம் ஒளிர்ந்தது. இவன் பார்வையை கண்டதும் அவள் முகம் நாணத்தில் தலை கவிழ்ந்ததும் தன்னையே மறந்தான் நரேந்திரவர்மன்.
இந்த காதல் நாடகத்தை கண்டு கொண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டான் சுதமன். அவனுக்கும் “இருவரும் பொருத்தமான ஜோடி”, என்ற எண்ணம் தான் தோன்றியது.
மகாராஜாவுக்கு திலகமிட்ட அருந்ததி அடுத்து தாய் ஸ்தானத்தில் இருந்து நரேந்திரவர்மனுக்கும், சுதமனுக்கும் திலகமிட்டாள்.
அவர்கள் மீது பூக்களை தூவினார்கள் பெண்கள். “மகாராஜா வாசுதேவச்சக்கரவர்த்தி வாழ்க. மேலை நாட்டின் இளவரசர் நரேந்திரவர்மன் வாழ்க”, என்ற முழக்கங்கள் கேட்டன.