“என்னவாயிற்று இளவரசே? தாங்கள் இன்னும் தூங்க செல்ல வில்லையா?”, என்று கேட்டார் மகாராஜா.

“ஒரு செய்தி தங்களிடம் உரைக்க வேண்டும் மகாராஜா”

“இந்த நேரத்திலா? சரி கூறுங்கள் என்னவாயிற்று இளவரசே? எதாவது பிரச்சனையா?”

“ஆம் மகாராஜா, தங்களின் சமையல்காரன் மீது எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது”, என்று ஆரம்பித்து காண்டவன், வல்லவரையனை சென்று பார்த்தது அனைத்தையும் கூறினான்.

“இப்படி பட்ட துரோகிகள் இருப்பதால் தான் பல சாம்ராஜ்யங்கள் சிதைந்து போய் விட்டன.  செங்கல்வராயன் சூழ்ச்சி செய்து படையை வெல்ல நினைக்கிறான் என்று இந்திர வர்மர் கூறியதற்கான அர்த்தம் இப்போது தெரிகிறது இளவரசே. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அவனை கொன்று விடலாமா?”

“பொறுமையாக இருங்கள் மகாராஜா. இது வரை அவன் எதுவும் செய்ய வில்லை. நாளை போரை நிறுத்துவதற்காக தான் எதாவது செய்வான். அதை அறிந்து நாம் தடுத்து விட்டால் போதும். அந்த செங்கல்வராயனுக்கு தோற்று விடுவோமோ என்ற பயம் வந்து விட்டது. அதனால் தான் இப்படி பட்ட வழியை நாடுகிறான். தங்களுடைய வீரரை விசாரிக்க எனக்கு அனுமதி கிடையாது. அதனால் தாங்கள் தான் அவனை விசாரித்து அந்த சூழ்ச்சியை அறிய இயலும்”

“தங்களுக்கும் எவரையும் விசாரிக்க  அனுமதி உண்டு இளவரசே. வாருங்கள் அவனை முதலில் விசாரிப்போம்”, என்று முன்னே நடந்தார். நரேந்திரவர்மனும், சூரனும் அவருடன் சென்றார்கள்.

காலையில் எழுந்து செய்ய வேண்டிய வேலையை யோசித்து கொண்டே அடுப்பை அணைத்து விட்டு படுக்க தயாரானான் காண்டவன்.

அப்போது அவன் முன்னே மூவரும் போய் நின்றார்கள். அவர்களுக்கு உண்மை அறியும் என்று தெரியாததால் காண்டவனும் “வாருங்கள் மகாராஜா. என்ன இந்த நேரம்? எதாவது வேண்டுமா?”, என்று பணிவுடன் கேட்டான்.

“ஹ்ம்ம் அதை பிறகு பார்க்கலாம். ஆமாம் நீ இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாய் காண்டவா?”, என்று கேட்டார் மகாராஜா.

“இல்லை சிறிது வேலை எல்லாம் இருந்தது. அதை இப்போது தான் முடித்தேன்”

“சரி காலை உனக்கு என்ன பணி இருக்கிறது?”

“மகாராஜா எதனால் இப்படி விசாரிக்கிறார்?”, என்று நினைத்து கொண்டு “காலை நம் வீரர்களுக்கு உணவு சமைக்க வேண்டும். அது ஒன்று தான் மகாராஜா”, என்று வினவினான்.

“சரி உணவு சமைத்து வீரர்களுக்கு பரிமாறுவதுக்கு முன் அதில் என்ன கலக்க திட்ட மிட்டாய்?”

“மகாராஜா?”, என்று அதிர்ச்சியாக அழைத்த காண்டவனின் உடல் வியர்த்து விறுவிறுத்து போனது.

“சொல் காண்டவா? என்ன உன் திட்டம்?”

“மகாராஜா நான் ஒன்றும் அறியேன்”

“இதை என்னை நம்ப சொல்கிறாயா?”

“என்னை நம்புங்கள் மகாராஜா. நான் எதையும் கலக்க போவதில்லை. என்னை பற்றி யாரோ தங்களிடம் பொய்யாக கூறி இருக்கிறார்கள்”

“கூறியது நான் தான் காண்டவா. நான் என்றுமே பொய் உரைக்க மாட்டேன்”, என்றான் நரேந்திரவர்மன்.

“இல்லை பொய் தான் மகாராஜா. இந்த இளவரசர் தங்களிடம் என்னை பற்றி பொய் கூறி இருக்கிறார். இந்த இளவரசர் நல்லவர் இல்லை. எத்தனை வருடங்களாக அரண்மனையில் சமையல் காரனாக இருக்கிறேன். நான் அப்படி செய்வேனா? இந்த இளவரசர் தான் நம் தேசத்தின் மீது இச்சை கொண்டு தங்களுக்கு உதவுவது போல கை பற்ற நினைக்கிறார்”, என்று காண்டவன்  கூறும் போதே மகாராஜாவின் கரம் இடியென அவன் கன்னத்தை பதம் பார்த்தது.

“ஐயோ”, என்ற அலறலுடன் கீழே விழுந்தான் காண்டவன்.  “யார் மீது பழி போடுகிறாய். இளவரசர் நரேந்திரவர்மன் இந்திரவர்மரின் வம்சம். ஒரு போதும் பொய் அறியாதவர்கள். இப்போது உண்மையை கூற வில்லை எனில் உன் தலை கொய்ய படும். நீ வல்லவரையுனுடன் பேசியது அனைத்தையும் பார்த்த சாட்சி இருக்கிறது. நீ உரைக்கிறாயா? இல்லை உன் கழுத்தை என் வாள் கொண்டு வெட்டட்டுமா?”, என்று கேட்டார் மகாராஜா.

“என்னை மன்னித்து விடுங்கள் மகாராஜா. பொற்காசுக்கு ஆசை பட்டு இப்படி செய்து விட்டேன்”, என்று கூறி கொண்டே மகாராஜா காலில் விழுந்தான் காண்டவன்.

“உன்னை நம்பி கொடுத்திருக்கும் பணியை கேவல படுத்தி பொற்காசின் மேல் இச்சை கொண்டாயா? அதை என்னிடம் கேட்டிருந்தால் பிச்சை போட்டிருப்பேனே. இதற்காக எதிரியுடன் சேர்ந்து துரோகம் செய்ய இருந்தாயே. சரி கூறு. என்ன உங்கள் திட்டம்?”

“காலை உணவில் மயக்க மருந்தை கலக்க சொன்னான் அந்த வல்லவரையன்”, என்று குற்றவுணர்வோடு சொன்னான் காண்டவன்.

“எங்கே அந்த மருந்து?”

“இதோ”, என்று இடுப்பில் இருந்து எடுத்து கொடுத்தான் காண்டவன்.

அதை வாங்கி பார்த்த நரேந்திரவர்மன் அதிர்ச்சியானான். “மகாராஜா இது மயக்க மருந்து அல்ல. இது நாக பாம்பில் இருந்து எடுக்க பட்ட விஷம்”, என்றான்.

“என்ன கூறுகிறீர்கள் இளவரசே?”, என்று அதிர்ச்சியாக கேட்டார் மகாராஜா.

“ஆம் மகாராஜா. இது நாக பாம்பின் விஷம் தான். எனக்கு என்னுடைய குரு கற்று தந்திருக்கிறார். இவன் தங்களுடைய வீரர்களை கொலை செய்ய தான் முயற்சி செய்திருக்கிறான். அப்படி மட்டும் நடந்திருந்தால், என்ன ஆகி இருக்கும்?”, என்றான் நரேந்திரவர்மன்.

“ஐயோ, என்னை மன்னித்து விடுங்கள் மகாராஜா. நான் பிள்ளை குட்டி காரன். தெரியாமல் தவறு செய்து விட்டேன்”, என்று மண்டியிட்டு கதறினான் காண்டவன்.

“என்னுடைய படையையே அழிக்க நினைத்த உன்னை மன்னித்தால் அதை விட குற்றம் வேறேதும் இல்லை. உனக்கு மட்டும் தான் பிள்ளைகள் இருக்கிறார்களா? நம் படை வீரர்களுக்கு இல்லையா? தங்கள் குடும்பத்தையே மறந்து நாட்டுக்காக உயிரை கொடுத்து போரிடுகிறார்களே? அவர்கள் உயிரை எடுக்க உனக்கு எப்படி மனது வந்தது? யாரங்கே? இவனை கைது செய்யுங்கள்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா.

இருவர் வந்து அவனை பிடித்து கொண்டார்கள்.

“இனி தவறு எதுவும் நடக்காது தானே இளவரசே?”, என்று கேட்டார் மகாராஜா.

“ஆம் மகாராஜா. இனி எதுவும் நடக்காது. இந்த சூரன் மட்டும் சரியான நேரத்தில் உண்மையை கூற வில்லையெனில் நாம் மிக பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருந்திருக்கும்”, என்று கூறி இருவரும் சூரனிடம் நன்றியை பகிர்ந்து அவனை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார்கள்.

“இருந்தாலும் நாளை தங்கள் படையினருக்கும் சேர்த்து என் படையில் இருந்தே உணவு கொடுக்க சொல்லட்டுமா? எனக்கு அதுவே சரி என்று தோன்றுகிறது”, என்றான் நரேந்திரவர்மன்.

“அப்படியே ஆகட்டும் இளவரசே. நாளை விடியல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். நீங்கள்  சென்று ஓய்வெடுங்கள்”

“அப்படியே ஆகட்டும் மகாராஜா. தங்களுடைய காயம் குணமாகி விட்டது அல்லவா?”

“ஆம் இளவரசே. இப்போது வலி கூட குறைந்து விட்டது”

“நல்லது. சரி சென்று ஓய்வெடுங்கள். நான் என் கூடாரத்துக்கு செல்கிறேன்”, என்று சென்ற நரேந்திரவர்மனின் மனதில் மறுபடியும் சுதமன் நினைவு வந்தது.

வேகமாக அவனை காண சென்றான். அப்போது அங்கிருந்த வைத்தியர்  “சேனாதிபதிக்கு மயக்கம் தெளிந்து விட்டது இளவரசே. இப்போது அவர் நன்றாக உள்ளார். ஆனால் சில நாள்கள் அவர் ஓய்வில் தான் இருக்க வேண்டும். தாங்கள் சென்று காணுங்கள்”, என்று கூறி விட்டு சென்று விட்டார்.

ஆவலுடன் உள்ளே சென்று பார்த்த நரேந்திரவர்மன் அன்பாக சுதமனை பார்த்தான். அவன் அருகில் அமர்ந்து சுதமனின் கைகளை பிடித்து கொண்டான்.

நரேந்திரவர்மனின் தொடுகையில் கண் விழித்த சுதமன் கனிவாக நரேந்திரவர்மனை கண்டான்.

“நான் உன்னை விட்டு சென்று விடுவேனோ என்று பயந்து விட்டாயா நரேந்திரா?”, என்று முணங்களாக கேட்டான் சுதமன்.

ஆம் என்னும் விதமாய் தலை அசைத்த நரேந்திரவர்மனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“அப்படி எல்லாம் உன்னை விட்டு சென்று விடமாட்டேன் நண்பா. இப்போதே நான் வானுலகம் சென்று விட்டால் உன் குழந்தைகளை எல்லாம் யார் வளர்ப்பது? நீ தான் என்னை காப்பாற்றி விட்டாயே? பின் ஏன் உன் முகத்தில் கவலை இருக்கிறது?”, என்று சிரித்தான் சுதமன்.

“உன்னை காப்பாற்றியது நான் அல்ல சுதமன்”

“நீ தான் என்னை காப்பாற்றியது. எனக்கு தெரியுமே. நீ என்னை தூக்கி செல்லும் போது நான் நினைவுடன் தானே இருந்தேன்”

“இல்லை. அதற்கு முன் உன்னை என் கண்ணில் காட்டியதே இதோ உன் கையில் உள்ள சலங்கை தான். இந்த ஒலி சத்தத்தை வைத்து தான் உன்னை நான் கண்டறிந்தேன். போர் முடிந்து நம் நாடு சென்றதும் முதலில் இந்த சலங்கைக்கு சொந்த காரியை கண்டறிந்து உனக்கு மணம் முடித்து வைத்த பின்னர் தான் மறுவேலை”

“அது அவ்வளவு எளிதல்ல நரேந்திரா. அவள் என்னை மணக்க சம்மதிக்க மாட்டாள்”, என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்த சுதமன் “அதை எல்லாம் பிறகு பார்க்கலாம். நீ சென்று ஓய்வெடு. நாளைக்கு போரிட வேண்டுமே”, என்றான்.