“அந்த செங்கல்வராயனை மணந்து கொண்டால் போர் நடக்காது தான். எந்த துயரமும் இல்லை தான். எந்த உயிரும் போகாது தான். என் நாடும் என் நாட்டு மக்களும் இன்னல்கள் இன்றி வாழ்வார்கள் தான். ஆனால் என் நிலைமை. என் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பார்த்தீர்களா? எவனோ ஒரு ராஜாவுக்கு அந்த புறத்தில் மட்டும் சுகம் கொடுக்கும் சாதாரண பெண்ணாக மாறி போவேனே? தங்கள் பாசத்திற்குரிய இளவரசி அப்படி அடிமையான வாழ்வை தான் வாழ வேண்டும் என்று நீங்களும் நினைக்கிறீர்களா மக்களே?”
….
“நான் இந்த தேசத்தில், தங்க தேரில் பவனி வரும் போது கூட, ஒரு அன்னையாய் என் அருகில் வந்து கொஞ்சுவீர்களே, சகோதர சகோதரிகளாய் என்னுடன் உரையாடுவீர்களே, என்னுடைய தகப்பனை போல எனக்கு பாதுகாப்பை கொடுப்பீர்களே. இப்போது உங்களுக்காக நான் என் மனதை கொன்று போடும் ஒரு வாழ்க்கையை ஏற்க வேண்டுமா? அதை தான் தாங்கள் அனைவரும் எதிர்பார்கிறீர்களா?”
கூட்டத்தில் இல்லை இல்லை என்று சத்தம் கேட்டது. அதில் வான்மதி மனதும் சிறிது குளிர்ந்தது
அவள் பேச்சில் இடை புகுந்த அமைச்சர் “அம்மாடி குழந்தை, உன் மனதில் உள்ள பயத்தை தாங்கள் அனைவரும் அறிவோம். அந்த செங்கல்வராயனுக்கு பல மனைவிகள் உண்டு தான். நான் இல்லையென்று கூற வில்லை. அதனால் நீ அவனுக்கு மணமாலை சூட்டினால் கண்டிப்பாக இளைய ராணியாக தான் செல்ல வேண்டும். ஆனால் அது பெரிய பிரச்சனை அல்ல மகளே. உனக்கு வேறு மணாளனை பார்க்கிறோம். பல இளவரசர்கள் இன்னும் முடி சூடாமல் இருக்கிறார்கள். தினமும் உன் அழகை கண்டு உனக்கு மாலையிட ஓலை வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் எவரையாவது நீ மணந்து கொண்டால் போர் நடக்கும் தான். ஆனால் நீ மணந்து கொண்டிருக்கும் நாட்டில் இருந்து செங்கல்வராயனை எதிர்க்க உதவி கிடைக்கும். நமது இழப்பும் குறைவாக இருக்குமே அம்மா”, என்றார்.
“தாம் எம் தந்தைக்கு நிகரானவர் அமைச்சரே. தங்கள் எண்ணம் உங்களுக்கு உகந்ததாக தான் தெரியும். நான் விரும்புவது ஒரு சாம்ராஜ்யத்தின் பட்டது ராணி பதவிக்காக அல்ல. எவனொருவன் எனக்கு மாலையிடுகிறானோ அந்த மன்னவனின் இதய சாம்ராஜ்யத்தில் நான் ஒருத்தி மட்டும் ராணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அரண்மனையில் மட்டும் அல்ல, அவனுடைய இதயத்தை ஆளும் ராணியாக நான் மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் இளவரசர்கள் என்னை ராணியாக ஏற்று கொண்டாலும் அடுத்த அரசியல் காரணத்துக்காக வேறொரு நாட்டின் இளவரசியை மணந்து இளையராணியாக ஆக்கி கொள்ளாமல் இருப்பார்களா? கூறுங்கள் அமைச்சரே. எனக்கு மட்டும் உரியவராக என்னவர் இருப்பாரா?”
அவர் அப்படியே தலை குனிந்து கொண்டார்.
“என்ன அமைச்சரே தங்கள் சிரம் தாழ்ந்து விட்டது? பதில் கூறுங்கள். ஹ உங்களால கூற முடியாது அல்லவா? ஏன் என்றால் உங்களுக்கே பல மனைவிகள் உண்டே. இந்த சாம்ராஜ்யத்தில் மட்டும் அல்ல, நமது பக்கத்தில் இருக்கும் அனைத்து சாம்ராஜ்யத்திலும் இதே கதை தான். அப்படி வாழ நான் விரும்ப வில்லை. அந்த ராமனை தினமும் தொழுபவள் நான். நான் அந்த ராமனை மணாளனாக ஆக்கி கொள்ள எண்ண வில்லை. ஆனால் அந்த ராமனை போல் ஒருவன் வந்தால் மட்டுமே என் கரம் அவனுக்கு மாலை சூட்டும். இது தான் என் முடிவு”
“வான்மதி. இது தவறு. நாட்டின் சூழ்நிலையை நீ புரிந்து கொள்”, என்று கூறினாள் அருந்ததிதேவி.
“மன்னித்து விடுங்கள் மகாராணி. என் மனதுக்கு உகந்ததை மட்டும் தான் என்னால் செய்ய இயலும். இந்த மக்களுக்காக இப்போதே என் உயிரை கொடுக்குறேன். ஆனால் என் மரியாதையை அல்ல. ராஜ வம்சத்தில் இருப்பவர்கள் போரை எதிர் கொள்ள வேண்டியது மரபு. வீரர்கள் போர்க்கோலம் பூண்டு போர்க்களம் செல்வதும் மரபு. நீங்கள் போரினால் விளையும் தீங்கை எண்ணி என்னை பலிகொடுக்க எண்ணுகிறீர்கள். என்னை சுயநலவாதியாகவே எண்ணி கொள்ளுங்கள். எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஆனால் இதை செய்ய என்னால் இயலாது”
….
“என்னை மட்டும் ராணியாக எண்ணுபவனுக்காக, என் மனதை மயக்கும் மணாளனுக்காக காலம் முழுவதும் காத்திருக்க எண்ணினேன். நான் ஒருத்தி உயிருடன் இருந்தால் தானே, என்னை இப்படி குற்றவாளி போல விசாரிப்பீர்கள். இதுவே நான் இல்லாமல் போனால் எப்படியும் போர் புரிவீர்கள் தானே. இப்போதே இந்த வான்மதியின் உடல் இம்மண்ணை விட்டு போகட்டும்”, என்று சொல்லி கொண்டே அருகில் இருந்த வீரனின் கையில் இருந்த வாளை கையில் பிடுங்கி கொண்டாள்.
அவளுடைய உணர்ச்சிகரமாக பேச்சில் தன்னை மறந்து நின்றிருந்த வீரன் வாளை அவள் பிடுங்கியதை கூட உணராமல் பேபே என்று விழித்து கொண்டிருந்தான். மொத்த சபையும் ஸ்தம்பித்தது.
“இப்படி காவல் பணி புரிபவன் பொறுப்பு இல்லாமல் வாய் பார்த்து கொண்டிருக்கலாமா?”, என்று அவன் மனதே அவனை கடிந்து கொண்டது. அதை அவன் வாங்க முற்படும் போது, அவள் கழுத்தில் அதை வைத்தவள் அவளை தடுக்க வந்தவர்களைப் பார்த்து “பின்னே நகருங்கள் வீரரே”, என்று உறுமினாள்.
“அம்மாடி வான்மதி”, என்று எழுந்து விட்டார் மகாராஜா. “அங்கேயே நில்லுங்கள் தந்தையே. அருகில் எவரும் வர கூடாது. தாங்கள் ஒவ்வொரு முறை திருமணத்தை பற்றி பேசும் போதெல்லாம் நான் என் முடிவை கூறி விட்டேன். ஆனால் தாங்கள் செவிமடுக்க வில்லை. இன்று சபையோர் முன்னிலையில் கேட்டுவிட்டீர்கள். என்னால் உங்களுடன் தர்க்கம் புரிய முடிய வில்லை. நாள் ஆக ஆக திருமணம் என்ற சொல்லே எனக்கு கசப்பாக இருக்கிறது”
….
“பெண்களை வெறும் போதை பொருளாக மட்டும் பார்க்கும் இந்த சமூகத்தில் நான் வாழ விரும்ப வில்லை. ஒன்று நீங்கள் போர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து என்னையும் வாளேந்தி போருக்கு செல்ல கட்டளை இடுங்கள். என் கரங்களில் உள்ள வாள், இருவரையாவது வெட்டி வீழ்த்தும். அப்படி இல்லை என்றால், இப்போதே இவ்வாழ்வை முடித்து கொள்கிறேன்”
“அவ்வாறு கூறாதே வான்மதி. அவசரத்தில் முடிவு செய்யாதே”
“நீங்கள் இந்த சாம்ராஜ்யத்தின் மன்னர். இந்த அபலை மக்களின் இறைவன். போருக்கு அஞ்சாத நெஞ்சம் கொண்டவர். எதிரிக்கு கூட இறங்கும் மென்மையான மனம் கொண்டவர். ஒவ்வொரு நாளும் உம்மை எதிர்த்து பேச என் நெஞ்சம் கனக்கிறது மகாராஜா. ஆனால் இவ்வளவு உயர்ந்த குணம் கொண்ட நீர் நல்ல மணாளனாக உள்ளீரா? மகாராஜாவை பற்றி விமர்சிக்க எனக்கு வயதோ, தகுதியோ கிடையாது தான். இதை கூறுவதுக்காக அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். இதை கூறுவதுக்காக என் தலையை துண்டித்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்”
…..
“என் அன்னையை காதல் கொண்டு தான் தாங்கள் மணந்தீர்கள் மகாராஜா. இங்கே மகாராணியாக அன்னையும் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்கள். நானும் இளவரசியாக இருக்கிறேன். மேக வேந்தனும் இளவரசனாக தேரில் பவனி வருகிறான். ஆனால் நீங்கள் அரசியல் காரணங்களுக்காக மணந்து கொண்டிருக்கும் மனைவிகளையும், அவர்கள் பிள்ளைகளையும் பாருங்கள். ராஜாவின் மனைவி, ராஜாவின் பிள்ளைகள் என்ற பெயரை தவிர வேற எதுவுமே அவர்களுக்கு கிடைத்ததில்லை. உங்களின் இளைய ராணிகள், திருமணத்துக்கு முதல் நாள் உங்களை கண்டதாக தான் இருக்கும். ஒவ்வொரு முறை உங்களை காண அவர்கள் எப்படி ஏங்கி இருப்பார்கள்? தன் தகப்பனின் மடிகளில் தவழ என் சகோதர, சகோதரிகள் எப்படி கனவு கண்டிருப்பார்கள்”
அவள் பேச்சில் மகாராஜாவின் சிரமே கவிழ்ந்தது.
“இதை எல்லாம் தாங்கள் யோசித்தது உண்டா மகாராஜா? நீங்கள் மட்டும் இல்லை. எந்த மகாராஜாவும் யோசித்தது இல்லை. உங்களை கண்டு இப்போது சாதாரண குடிகளும் பல பெண்களை மணக்கும் முறையை பின் பற்ற ஆரம்பித்து விட்டார்கள். உங்களுக்கு என்ன, நாட்டில் எந்த போரும், சீர்கேடும் நடக்க கூடாது. உடனே எதிரி நாட்டையோ, இல்லை உதவி கோர வேற நாட்டையோ நட்பு நாடாக ஆக்கி கொள்கிறீர்கள். இவ்வளவு செய்யும் நீங்கள் ஒன்றை யோசித்தது உண்டா மகாராஜா?”
….
“நீங்கள் ஒவ்வொரு தேசத்தின் இளவரசியை மணந்து கொண்டு வரும் போதும், ஆரத்தி எடுத்து வரவேற்கும் மகாராணியின் வதனத்தில் எத்தனை சோகம் குடி கொள்ளும் என்று. அவர்கள் மனதில் ரத்தம் கசிவதை அறிந்திருக்கீர்களா? ஒவ்வொரு முறையும் தாங்கள் வேறு ராணிகளின் அந்தபுரத்துக்கு செல்லும் போதும் அவர்கள் தவிக்கும் தவிப்பு தெரியுமா? இங்கே இப்படி ஒரு ஜீவன் துடிக்கும் என்று அறியாமல் பலராணிகளை, மணந்து பிள்ளைகளையும் பெறுகிறீர்கள். அந்த இளையராணிகளின் நிலைமையும் அதை விட கொடுமை. உரிமையான கணவனை கூட சொந்தம் கொண்டாடாத படி ஒதுங்கி வாழ்கிறார்கள்”
….
“எனக்கு ஒரு மகாராஜாவின் சிம்மாசனத்தின் மேலும், தங்க தேரில் பவனி போவதிலும் விருப்பம் துளி கூட இல்லை. இந்த ஆபரணம், பட்டாடை, சொகுசான பஞ்சு மெத்தை எதிலும் பற்று இல்லை. எனக்கு என் ராமன் காட்டில் நடந்தால் கூட அவனுடன் இருப்பது தான் அரண்மனை. அவன் நெஞ்சம் தான் எனது சிம்மாசனம். அவன் கை பிடித்து உலா போவது தான் எனக்கு தேர் உலா. சாதாரண உடையை உடுத்தி ராமர் பின்னே சென்ற சீதையை போல தான் இந்த வான்மதி வாழ்வாள்”
….
“பல ராணிகளில் ஒரு ராணியாகவோ, பல இளையராணிகளின் பொறாமையோடு வாழும் ஒரு மகாராணியாகவோ வாழ வேண்டிய சூழ்நிலை இந்த வான்மதிக்கு ஒரு நாளும் வர கூடாது. என் மணாளன் எனக்கு மட்டுமே. தாங்களே முடிவெடுங்கள் மகாராஜா. ஒரு நாளும் வான்மதி அந்த அவலத்தை தாங்கி கொள்ள மாட்டாள். ராணியை இழந்து இருந்த வேளையில் கூட, அவள் சிலையை வைத்து பூஜித்த என் ராமனே எனக்கு பெரியவன். ஒன்று அப்படி பட்டவனுக்கு மாலை இட இந்த நாட்டின் இளவரசியாக மட்டும் காத்திருக்கிறேன். அப்படி இல்லையா, இந்த உயிரையும், உடலையும் அந்த கடவுளிடம் திருப்பி அனுப்பி விடுகிறேன். இந்த வாள் அதற்கு உதவும். முடிவு தங்கள் கையில் மகாராஜா”, என்று முடித்த வான்மதியின் முகம் கோபத்திலும், கண்கள் அழுகையிலும் சிவந்து இருந்தது.
அனைவருமே அடுத்து என்ன? என்று திக் பிரம்மை பிடித்து நின்று விட்டார்கள். அருந்ததி தேவியின் மனது செல்ல மகளின் நிலையை கண்டு ரத்த கண்ணீர் வடித்தது. தனக்காக அல்லவா தன்னுடைய செல்ல மகள் இவ்வளவு பேசுகிறாள்.