வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 9 2 11756 இன்று, ரத்தினத்திடமிருந்து அழைப்பு வந்தது.. சாகம்பரிக்கு. மித்ரனை பள்ளியில் விட்டுவிட்டு, அவங்கே சென்றாள், சஹா. சுகுமாரிக்கு மகனின் நினைவில் எப்போதும் போல.. BP இறங்கியிருந்தது. சஹாவை கண்டதும் சுகுமாரி பேச தொடங்கிவிட்டார். ‘கௌரி பேசவேயில்லை இரண்டு வாரம் ஆகிற்று.. என்ன கோவம்ன்னு தெரியலை.. கல்யாணம் செய்துக்கன்னு சொல்றேன்.. அதனாலதான் அவன் பேசமாட்டேன்கிறான்’ என புலம்பத் தொடங்கிவிட்டார். ரத்தினமும் “என்னமோ என் நம்பரிலிருந்தும்.. கூப்பிட்டு பார்த்துட்டா.. அவன் எடுக்கவேயில்லை.. என்ன ஆச்சோன்னு பயம் போல” என்றார் கவலையான குரலில். சாகம்பரி “நம்பர் கொடுங்க அங்கிள்” என கௌரியின் நம்பர் வாங்கி அழைத்தாள். ரத்தினம் உறங்கும் மனைவியை பார்க்க சென்றார். முதல் அழைப்பை ஏற்கவில்லை. இரண்டாம்முறை இவளும் அழைக்கவில்லை. ஆனால், பத்துநிமிடம் சென்று அவனே அழைத்தான்.. இவள் எண்ணுக்கு.. சாகம்பரி எடுக்குவும் “ஹலோ..” என்றான். சாகம்பரிக்கு நேரில் கேட்பதை விட அவனின் குரல் போனில் நன்றாக இருப்பதாக எண்ணிக் கொண்டே “ஹலோ, நான் சஹா.. இங்க அன்னூரிலிருந்து..” என்றாள். கௌரி “ஹோ.. சாகம்பரி. ம்.. சொல்லுங்க” என்றான் உற்சாகமாக. எதோ குரலே தெம்பாக உற்சாகமாக வந்தது போல இருந்தது பெண்ணவளுக்கும். சாகம்பரி “என் பேர் எல்லாம் ஞாபகம் இருக்கு..” என்றாள். கௌரி “ம்.. டிர்ப்ரென்ட்டான நேம்.. அதான்” என்றான். சஹா என்ன சொல்லுவது என தெரியவில்லை.. “அஹ, நான் உங்கள் வீட்டில்தான் இருக்கேன்” என்றாள். கௌரி “ஓகே.. “ என்றான். சஹா “என்ன ஒகே.. உங்க அம்மாகிட்ட போன் பேசலையா.. இப்போ அவங்களுக்கு.. உடம்பு சரியில்லை, அதான் நான் வந்திருக்கேன்.” என்றாள். கௌரி “டாக்டர் மெடிசன் கொடுத்திருப்பாங்கதானே.. அதை கொடுங்க, இல்லை, எப்போதும் போல ஸ்ட்ரெஸ் அப்படின்னா.. நீங்கதான் இருக்கீங்களே.. அம்மா சொல்லியிருக்காங்க.. உங்ககிட்ட பேசினால் சரியாகிடும்ன்னு..” என்றான். சஹா “ம்…” என்றாள் கோவமாக. கௌரி “சாகம்பரி என்னங்க பதிலே பேசமாடீங்கிறீங்க.. என்கிட்டே எந்த மருந்தும் இல்லை” என்றான் புன்னகை குரலில். சஹா “ம்கூம்.. உங்களுக்கு தெரியலை, அவங்களுக்கு உங்களை பற்றின கவலைதான். நீங்க ஒரு தரம் பேசிடுங்க.. கொஞ்சம் அவங்க சரியாகிடுவாங்க. ஜஸ்ட் ரிக்ஃவஸ்ட் தான், அப்புறம் உங்க இஷ்ட்டம்..” என்றவள் “வைச்சிடுறேன்..” என்றாள். எதிர்முனையில் இருப்பவனின் பதிலை எதிர்பார்க்கவில்லை போல.. அப்படியே கட் செய்துவிட்டாள். கௌரிக்கு சட்டென மழை நின்ற நிலம் போல ஆனது.. அவனின் மனம். ஏனென்றே தெரியாமல் அவளின் அழைப்பு.. அவனின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்திருந்தது.. அது சட்டென மறைந்து போனது, அவள் பதில் கேட்டக்காமல் வைத்ததில். போனை கீழே வைத்தவன், தன் நெற்றி புருவத்தை இரு பெருவிரலாலும்.. நீவிக் கொண்டு நிமிர்ந்தான். என்னமோ மீண்டும் முகம் இறுகி போனது.. கெளரிசங்கர்க்கு, வேலைகள் அவனை இழுத்துக் கொண்டது. சாகம்பரி, ரத்தினத்தோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் சென்று.. சுகுமாரி எழுந்து வந்தார்.. முகம் தெளிவாக இருந்தது. சுகுமாரி “என்ன ம்மா, மித்து எப்படி இருக்கான்” என இயல்பாக பேச தொடங்கினார். சாகம்பரியும், பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் கொடுத்த இஞ்சி டீயை குடித்துவிட்டு கிளம்பினாள். !@!@!@!@!@!@!@!@!@! மித்ரன், பள்ளியிலிருந்து வந்துவிட்டான். இப்போதெல்லாம் அவன் சஹாவை “ம்மா.. மாம்” என அழைத்து பழகியிருக்கிறான். சஹா அவனுக்கு ஹோம்வொர்க் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மித்ரன் “மாம்.. நீ மிஸ்’சா” என்றான், R என்ற எழுத்தை திருப்பி எழுதி இருந்தான், அதை சஹா மாற்றி எழுத சொல்லவும் இந்த கேள்வியை கேட்டான். சஹா “ஆமாம், மிஸ் தான். சரியா எழுது கேள்வியா கேட்டால்.. எப்படி அங்க மனசு பதியும். ஒழுங்கா எழுது.” என்றாள் அதட்டல் குரலில். பிருந்தாவிற்கு, மித்ரன் மாம் என அழைக்க தொடங்கியது முதல், சஹாவை முறைக்கத் தொடங்கிவிட்டார்.. “ஏற்கனேவே, உன் வாழ்க்கையை கெடுத்துட்டமோன்னு இருக்கு.. இதில் இவனை நீ இன்னமும் கவனிக்க கவனிக்க.. எனக்கு இன்னும் பயம்தான் ஏறுது. என்னமோ போ..” என்றார் வேதனையான குரலில், இன்றும். சஹா மித்ரனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் “சும்மா, ஏதாவது பேசிகிட்டே இருக்காத ம்மா” என குழந்தைக்கு தெரியாமல் எச்சரித்துவிட்டு கை கழுவ உள்ளே சென்றாள். இப்படிதான் நாட்கள் நகருகிறது அவர்களுக்கு. மித்ரனை உறங்கவைக்க உள்ளே கூட்டி சென்றாள்.. மித்ரன் இப்போதெல்லாம் அவளின் மடியில்தான் தலை வைத்து உறங்குவது.. என்னமோ அம்மா என அழைக்க தொடங்கியது முதல்.. அவன் அதிகமாக அவளிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கிறான். அவளும் முன்போல மிரட்டுவதில்.. அதட்டுவதில்லை.. இவன்தான் என் வாழ்வின் ப்ரதானம் என உணர்ந்தபின்.. அவன் குறையில்லாமல் வளரட்டும் என எண்ணிக் கொண்டாள் பெண். அதனால், ஏதும் சொல்லுவதில்லை அதிகமாக அவனை தனக்குள் சார்ந்திருக்க பழகிக் கொண்டாள் சஹா. இப்போது அவனுக்கு நேற்று பார்த்த ஸ்பைடர் படத்தின் கதையை ஆக்ஷனோடு சொல்லிக் கொண்டிருந்தாள் சஹா.. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மித்ரன் ஒருகட்டத்தில்.. தானும் அந்த படத்தின் நாயகன் போல.. விரல்களை நீட்டி விளையாட தொடங்கவும்.. சஹா “மித்து, போதும். நீ தூங்கு” என அவனின் தலை கோத தொடங்கினாள். மித்ரனும் ஏதும் பேசாமல் உறங்க தொடங்கினான். மனதில்.. இருவேறு உணர்வுகள் பெண்ணுக்கு, குழந்தை நன்றாக வளர வேண்டுமே என.. அத்தோடு, பெற்றோரும் நிம்மதியாக இருக்க வேண்டுமே என. ஆனால், வாழ்க்கைதான் எல்லாவாற்றையும் கொடுக்காதே என எண்ணிக் கொண்டே குழந்தையின் தலை கோதிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவளின் போனில் அழைப்பு மணி ஒலித்தது. சஹா, எடுத்து பார்க்க எதோ எண்கள் மின்னியது.. யார் என யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ” என்றாள். கெளரிசங்கர் “ஹலோ, நான் கௌரி “ என்றான். சஹா, காதில் வைத்திருந்த போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு.. “ம்.. சொல்லுங்க கௌரி சர் “ என்றாள். கௌரி “அம்மாகிட்ட பேசிட்டேன்.. சொன்னாங்களா ” என்றான். சஹா முகம் கிண்டல் சிரிப்பில் மின்ன “ஹம்.. ஓகே.. விழா எடுத்துடுவோம்” என்றாள். கௌரி “என்ன.. என்ன சொன்னீங்க” என்றான். சஹா “ஒண்ணுமில்ல, செலேப்ரடே பண்ணிடலாம்ன்னு சொன்னேன்” என்றாள் சிரிப்பினுடே. கௌரி “இல்ல, இப்போவும் சண்டைதான். “ என்றான். சஹாவிற்கு இதை சொல்லவும் என்னமோ போலானது அதுக்கு நான் என்ன செய்யணும்.. எனத்தோன்ற அமைதியாக இருந்தாள். கெளரிக்கு இவள் பேசாமல் இருக்கவும் “ஹலோ, டிஸ்டர்ப் பண்றேனா” என்றான், கொஞ்சம் டென்ஷ னான குரலில். சஹாவிற்கு மீண்டும் என்னமோ போலாக “இல்ல இல்ல.. சொல்லுங்க” என்றாள். கௌரி “எனக்கு கல்யாணம் என்ற ஒரு விஷயத்தில் இண்டரஸ்ட் இல்ல.. ஆனால், எங்க அம்மா அதையே திரும்ப திரும்ப சொல்றாங்க.. உங்ககிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியலை.. நீங்க அவங்ககிட்ட கொஞ்சம் புரிய வைங்களேன்.. எனக்கு இதில் விருப்பமில்லைன்னு.. ம்.. ஒரு பிரென்ட்டா.. என்னை மீன் பண்ணிக்கிட்டு.. அவங்களுக்கு புரியறமாதிரி சொல்லுங்களேன்.. ப்ளீஸ்..” என்றான். சஹா அவனின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தாள்.. எனவே, அவனை மறுத்து பேச முடியவில்லை அமைதியானாள். கௌரி “ஹலோ” என்றான் மீண்டும் அவளின் அமைதியில். சஹா “இருக்கேன்.. கௌரி” என்றாள். கெளரிக்கு அவளின் இயல்பான அழைப்பு ஒரு மாதிரில் சாரலாக குளிர்ந்தது.. சட்டென. சஹா தொடர்ந்தாள் “நான் எப்படி சொல்றது..ங்க, இது உங்கள் பாமிலி விஷயம் இல்லையா? நான் பேசினால் நல்லா இருக்காதில்ல..” என்றாள். கௌரி, இப்போது தன் பிரச்னையை மறந்து போனான்.. அவளின் ‘ங்க’ என்ற அழுத்தமான வார்த்தை ஒரு அதிர்வாக அவனுள் சென்றது.. முன்போல குரலில் வேகமில்லாமல் “அஹ.. நீங்க எங்க அம்மாக்கும் எனக்கும், பிரென்ட்.. அதான் உங்ககிட்ட சொல்றேன்.. என்னை புரிஞ்சிக்கவே இல்லை அவங்க” என்றான் தடுமாற்றமான குரலில். அவனுக்கே தன் குரலின்.. இறங்கிய த்வனி புரியவில்லை. ஆனால், அதற்கு மீறி.. அவளிடம் குரல் உசத்தி பேச முடியவில்லை.. எனவே, தடுமாறினான். சஹா “ம்.. அப்படிதான் சிலசமயம் யாராவது நம்மை புரிந்துக்க மாட்டாங்களான்னு தோணும். ஆனால், அப்படி ஏதும் நடக்காது.” என்றாள் ஒருமாதிரி குரலில், பின் சுதாரித்து “நான் எப்படி சொல்லுவேன்.. அது சரியாக இருக்காதில்ல.. நீங்களே பொறுமையா பேசுங்க கௌரி.. சாரி” என தயங்கிய குரலில் சொன்னால் பெண். கௌரி “ம்.. பேசமாடீங்க.. நீங்க சொன்னால் அம்மா கேட்ப்பாங்கன்னு சொன்னேன்” என்றான் விடாமல். சஹா “இல்ல.. இல்ல.. அப்படி இல்ல” என்றாள். கௌரி “ஓகே புரியுது. இவ்வளோ நேரம் என்னுடைய கோரிக்கையை கேட்டதுக்கே தேங்க்ஸ். என்ன பண்றான் குட்டி பையன்” என்றான். சஹா “தூங்கிட்டான்..” என்றாள் இதமான குரலில், பின் “நீங்க எப்படி இருக்கீங்க” என்றாள். கௌரிக்கு மீண்டும் சாரல் “ம்.. கொஞ்ச நேரத்தில் ஒரு மீட்டிங் இருக்கு.. அதற்குள் உங்ககிட்ட பேசிடலாம்ன்னு கூப்பிட்டேன்.. உங்களுக்கு ஒன்னும் கஷ்ட்டமில்லையே” என கேட்டு, இருவரும் பொதுவாக குசலம் விசாரித்துவிட்டு தங்களின் பேச்சை முடித்துக் கொண்டனர்.