Advertisement

தன் வீட்டில் உரிமையாய், வெகு இயல்பாய் ஓடியாடி விளையாடி கொண்டிருந்த அந்த புதியவனை பார்க்க பார்க்க, ஒரு பக்கம் கோவம் என்றால், மறுபக்கம் என்னவென்றே புரியாத உணர்வும் கிளர்ந்து கொண்டிருந்தது யாழினிக்கு.
அவனை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த தன் அன்னையை கடுப்புடன் பார்த்தவள்,
“அம்மா, கேட்கணும்னு நினைச்சேன், அது யாரு”
என்று இளவளவனை சுட்டி காட்டி கேட்க, லீலாவதி உற்சாகமே உருவாக,
“உனக்கு தெரியலையா, நம்ப இளாடாமா, முன்னாடி “
என்று உண்மை உறவை சொல்ல ஆரம்பிக்க, அவரை எச்சரிக்கும் விதமாக ரவிச்சந்திரன் தொண்டையை செருமினார்.
கணவனின் எச்சரிக்கையில் சுதாரித்து கொண்ட லீலாவதி,
“அது வந்து, வந்து, அப்பாவோட டையட்டீசியன்டா, வீட்டோட தங்கி அப்பாவோட புட் ஹாபீட் அஹ மானிட்டர் பண்ணிக்கிட்டு இருக்காரு”
என்று அவள் கேட்ட கேள்வியோடு, இளவளவன் இங்கு தான் தங்கி இருக்கிறான் என்ற செய்தியையும் சேர்த்து சொல்ல,
“ஓ”
என்று ராகம் போட்டப்படி, இளவளவனை ஒரு பார்வை பார்த்த யாழினி, மீண்டும் தன் தாயிடம்,
“பார்த்தா அப்படி தெரியலையேமா, வேலை பார்க்க வந்த இடம்னு கொஞ்சம் கூட அடக்க, ஒடுக்கம் இல்லாம, பயம் இல்லாம, தையா தக்கானு குரங்கு மாதிரி இங்குட்டும் அங்கிட்டும் தவ்வி கிட்டு”
என்று மகா கடுப்புடன் சொல்ல, தன் மகள் பேசிய தினுசில், நீண்ட நாட்களுக்கு பிறகு ரவிச்சந்திரன்
வாய் விட்டு சிரித்தார்.
தன் கணவனையும், மகளையும் ஒரு முறை முறைத்த லீலாவதி,
“அப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேச கூடாது யாழினி, உன்னை விட வயசுல பெரியவங்க, அதோட நமக்கு உதவி பண்ண வந்து இருக்காங்க, வேலை பார்க்க வரலடா”
என்று சிறிது கோவத்துடன் ஆரம்பித்தவர், அதை தொடர முடியாமல் மென்மையுடனே சொல்லி முடித்தார்.
அதேநேரம் அவளின் தலையை வருடிவிட்ட ரவிச்சந்திரனும்,
“இளா என்னோட பிரின்ட் பையன்மா, பாரின்ல படிச்சிட்டு, ரெண்டு வருஷம் கழிச்சி வந்த பையன் கூட இருக்கணும்னு அவங்களுக்கும் எவ்ளோ ஆசை இருக்கும், இருந்தாலும் நமக்காக, எனக்காக அனுப்பி இருக்காங்கடா”
என்று யாழினியின் குரலில் இருந்த கடுப்பை போக்கும் விதமாக, விளக்கு விளக்கு என்று விளக்க, யாழினியோ பதிலுக்கு மண்டையை மட்டும் உருட்டி வைத்தாள்.
தட்டில் விழுந்த உணவை, வேறு வழி இல்லாமல் விழுங்கி வைத்த யாழினி, தந்தையை அவரின் அறையில் விட்டுவிட்டு,
“எ..ன..க்..கு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்குப்பா, நான் என் ரூம்க்கு போகட்டுமா???”
என்று வெகுவான தயக்கத்துடன் சொன்னவள், ரவிச்சந்திரன் சம்மதமாக தலையசைத்ததும், விடு விடுவென வெளியேறி விட்டாள்.
தன் செல்ல மகள் சென்ற வழியை ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்த ரவிச்சந்திரனுக்கு, மகளுடன் இன்னும் சற்று நேரம் செலவழிக்க ஆசை தான்.
ஆனால் ஆசை மகளின், நெருப்பில் மேல் நிற்பது போன்ற அசௌகர்யமான பாவனையை பார்த்த பிறகு, அதை அவரால் வாய்விட்டும் கேட்க முடியவில்லை.
ஒரு பெருமூச்சை வெளியிட்டவர்,
“இத்தனை நாள் கழிச்சி, யாழினிமா நாளு வார்த்தை பேசி இருக்கா, கூட உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கா, அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்கோ ரவி”
என்று தன்னை தானே தேற்றி கொண்டவர்,
“பழைய மாதிரி பாட்டு கச்சேரினு இல்லனாலும், கலகலப்பா இருந்தா மட்டும் போதும், ஈஸ்வரா எங்க பொண்ணை எங்களுக்கு திருப்பி கொடுத்துடுப்பா”
என்று வாய்விட்டே தன் இஷ்ட தெய்வத்திடம் வேண்டி கொண்ட ரவிச்சந்திரனின் கண்கள் பணித்தது.
இளவரசியாக தான் வலம் வந்த வீட்டில், இன்று ஏனோ யாழினியால், இயல்பாகவே இருக்க முடியவில்லை.
யாருரடைய அனுதாப பார்வையும், ஏளன பார்வையும் எதிர் கொள்ளாமல், தன் அறையில் சென்று முடங்கி கொள்ள வேண்டும் என்பதாக தான் இருந்தது, அவளின் எண்ணம் முழுக்க.
அப்போது தான் உணவு மேசையில் உணவு உண்ண அமர்ந்த இளவளவனும், அவனுக்கு பரிமாறி கொண்டிருந்த லீலாவதியும் அவசர அவசரமாக மாடியேறும் யாழினியை பார்த்தனர்.
லீலாவதி கவலையுடன் பார்த்தார் என்றால், இளவளவனோ யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான்.
யாழினி இரவு உணவு வேண்டாம் என்று, மாலை சிற்றுண்டி எடுத்து சென்ற அம்முவிடம் சொல்லி அனுப்பிவிட்டாள்.
அடுத்த நிமிடம் இளவளவனின் முன்பு நின்ற அம்மு,
“அக்கா நைட்டுக்கு சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டாங்க”
என்று உரைத்து விட்டு, அவனின் பதிலுக்காக, அவனின் முகத்தையே பார்த்தபடி நின்றாள்.
முன்பு போல எதாவது செய்வான் அல்லது சொல்லுவான் என்று அம்மு காத்திருக்க இளவளவனோ,
“ஓ, சரி விடு அம்மு”
என்று சாதரணமாக சொல்லிவிட்டு செல்ல, அம்மு தான், புதிய அண்ணனை புரிந்து கொள்ள முடியாமல், ‘பே பே’ வென விழித்து கொண்டு நின்றிருந்தாள்.
பலத்த சிந்தனைகளுடனே இரவு உணவை முடித்த இளவளவன், நேராக தனது அறைக்கு தான் சென்றான்.
தன் மடிக்கணினியை எடுத்து சற்று நேரம் குடைந்தவன், அதில் தான் தேடியது கிடைத்ததும், அதை விரலியில் (Pendrive) பதிவேற்றி கொண்டான்.
பின்பு யாழினி அறைக்கு செல்வதற்காக மாடியருகே வந்தவன், தன் முன்னால் இருந்த படிகளை பார்த்து, ஒரு பெருமூச்சு விட்டபடி,
“இந்த படியேறும் போது எல்லாம், ஏதோ மலையேறுற மாதிரியே ஒரு பீலிங்”
என்று வடிவேல் பாணியில் சலித்து கொள்ள, அவனின் மனசாட்சி,
“அதுவும் இப்போ படியேறது, ஏதோ மூட்டையை முன்னால் தூக்கிட்டு ஏறுற மாதிரி இருக்கு”
என்று சலிப்பை இன்னும் விசிறி விட, நன்றாக உண்டதால் சற்றே புடைத்து இருந்த தன் வயிறை ஒரு முறை குனிந்து பார்த்து கொண்டவன்,
“நீ எனக்கு சப்போர்ட் பண்றியா, இல்ல கிண்டல் பண்றியா”
என்று மனசாட்சியுடன் மல்லுக்கு நிற்க, சுதாரித்து கொண்ட மனசாட்சி அவனுக்கு ஆதரவாக,
“இத்தனை தடவை இந்த படியேறதுக்கு, இதே மாதிரி கோவில் படியேறி இருந்தா போற காலத்துக்கு புண்ணியமாவது கிடைச்சிருக்கும்”
என்று அவனை ஒட்டியே பேச, இளவளவனோ ஒரு புன்னகையுடன்,
“கோவில் படியேறுனா புண்ணியம் கிடைக்கும், ஆனா இந்த படியேறுனா தானே யாழினி கிடைப்பா”
என்று சொல்ல, தலையை முட்டி கொள்ள சுவரை தேடிய அவனின் மனசாட்சி,
“திருத்த முடியாதுடா, உங்களை எல்லாம் திருத்தவே முடியாது”
என்று சொல்லி விடைப்பெற, இளவளவனும் அறையை அடைந்து இருந்தான்.
கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, வரவேற்பரையில் அமர்ந்திருந்த யாழினியின் சிந்தை முழுக்க அவள் கையில் இருந்த காகிதத்தில் இருக்க, எழுதுக்கோலால் எதையோ தீட்டி கொண்டிருந்தாள்.
சாளரத்தின் வழியே ஊடுருவிய நிலவொளி யாழினியை தேவமங்கையாக ஒளிர செய்வது போல தோற்ற மயக்கம் இளவளவனுக்கு.
செங்காந்தள் விரலில் குடி கொண்டிருந்த எழுதுக்கோல்…
காகிதத்தில் முன்னும் பின்னும் கபடி ஆடி கொண்டிருந்த அவளின் பெரிய நயனங்கள்…
மதியம் அவன் கிண்டல் செய்த சுருள் கேசம், அவனவளின் கன்னத்தோடு உறவாடி, அவளுக்கு ஒரு தனி சோபையை கொடுத்து கொண்டிருந்தது……
கனவு உலகில் சஞ்சரிப்பவன் போல, அவனவளில் இலயித்து, அவளையே பார்த்தப்படி, அசைவில்லாமல் நின்றான் இளவளவன்.
தன்னை வருடம் தலைவனின் பார்வையை உணர்ந்தது போல, சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் யாழினி.
அகப்பட்டு கொண்ட திருடன் போல ஒரு நிமிடம் திருதிருவென விழித்த இளவளவன், தன் மன உணர்வுகளை அவளுக்கு காட்ட விரும்பாமல் கதவு பக்கம் திரும்பி கொண்டான்.
தான் வந்த வேலையையும் மறந்து, வெளியே செல்ல நினைத்து கதவில் இளவளவன் கைவைக்க, பின்னிருந்து யாழினி,
“என்ன”
என்று சோர்வான குரலில் கேட்க, அதுவே அவனுக்கு அவன் வந்த காரியத்தை நினைவுறுத்த, கண்களை மூடி சில நொடிகளில் தன்னை சமன் படுத்தி கொண்டான் இளவளவன்.
பின்பு திரும்பி அவளை பார்த்தவன், இயல்பு போல,
“இங்க ஹோம் தியேட்டர் இருக்காமே அப்படியா”
என்று தெரியாதவன் போல கேட்க, எதற்கு என்று புரியாத போதும், அவனின் கேள்விக்கு பதிலாக,
“ம்ம்ம்ம்”
என்று மட்டும் யாழினி பதில் சொல்ல, அவளின் முன்னால் வந்து நின்ற இளவளவன் அவளின் முன்பு விரலியை நீட்டி,
“இதுல இருக்கிற விடியோவை பார்க்கணும், எனக்கு கொஞ்சம் கனெக்ட் பண்ணி கொடுக்கிறியா”
என்று உதவி என்ற தோரணையில் கேட்க, மறுக்கதான் வாய் திறந்ததால் யாழினி.
ஆனால் மதியம் தந்தை சொல்லியது எல்லாம் நினைவு வர, தங்களுக்கு உதவ வந்தவனின் சிறிய கோரிக்கையை நிராகரிக்க முடியாமல், எழுந்து அந்த அறையை நோக்கி நடந்தாள்.
இளவளவன் கொண்டு வந்த விரலியை இணைத்து, அதில் இருந்த காணொளியை ஓட விட்ட யாழினி, வெளியே செல்ல போக, இளவளவன்,
“சவுண்ட் எப்படி வைக்கணும்”
“சப்-டைட்டில் எப்படி ஆன் பண்ணுறது”
இப்படி, அப்படி என்று ஒன்றும் இல்லாத கேள்விகளாக ஆயிரம் கேட்க, யாழினிக்கு பொறுமை இருக்கவா, போகவா, என்று சதிராடி கொண்டிருந்தது.
ஒரு வழியாக இளவளவன் கேட்ட அனைத்தையும் சொல்லி விட்டு, யாழினி வெளியே செல்ல போக, அவளின் முன்பு வந்து சிறு பிள்ளை போல பவ்யமாக நின்ற அவன்,
“வீடியோ பார்க்கும் போது வேற எதாவது டவுட் வந்தா என்ன பண்றது, சின்ன வீடியோ தான் முடியுற வரைக்கும் இங்கேயே இரேன்”
என்று சொல்ல, யாழினி பதிலே சொல்லாமல், அவனை கடந்து வெளியே போக, மீண்டும் அவளின் முன்பு போய் நின்றவன்,
“உன்னோட அப்பாவுக்கு ஏன் அட்டாக் வந்ததுன்னு தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா உள்ள வா”
என்று முகத்தை இறுக்கமாக வைத்தபடி சொல்லியவன், அவளுக்கு முன்னால் அறையின் உள்ளே சென்று விட்டான்.
இளவளவனின் வார்த்தையில், அது சொல்லிய செய்தியில் முகம் வெளிறிப்போன யாழினி, அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம் அமைதியாக உள்ளே வந்து அமர்ந்தாள்.
தனக்கு இரண்டு இருக்கை தள்ளி, பயத்துடன் அமர்ந்து இருக்கும் யாழினியை பார்த்தவன், மின்விளக்கை அணைத்துவிட்டு, காணொளியை இயக்கியனான்.
காணொளி ஓட ஆரம்பித்ததும், அதன் சாராம்சம் புரிந்த யாழினி ஏக்கத்தோடு அதை பார்க்க, இளவளவனோ கண்ணெடுக்காமல் மங்கையை தான் பார்த்து கொண்டிருந்தான்.
அவளின் முகம் காட்டும் பாவனைகளை கவனமாக உள்வாங்கியவன், திரையின் பக்கம் கண்ணை திருப்பவே இல்லை.
அவன் கேட்ட ஆங்கில துணை உரை (Subtitle) பயனற்று காணொளியில் அடியில் ஓடி கொண்டிருக்க, அவனோ தன் கருத்து, கவனம் என அனைத்தையும் தன் தலைவியின் வசம் ஒப்புவித்தபடி அமர்ந்து இருந்தான்.
காணொளி முடிந்ததும், மின் விளக்கை ஒளிர விட்ட இளவளவன், மனம் கனக்க, முயன்று முகத்தை பாறையாக வைத்துக்கொண்டு,
“இந்த டாக்குமெண்ட்ரி பார்த்துகிட்டு இருக்கும் போது தான் உன்னோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்”
என்று சொல்ல, கண்களில் கண்ணீர் வழிய, சிலையென அவனை பாவமாக ஏறிட்டு பார்த்தாள் யாழினி.
தன்னவளின் அந்த பார்வையில், அவளின் பாவனையில் என சர்வமும் நடுங்கியது இளவளவனுக்கு.
‘இது எல்லாம் அவளுக்காக தான்’
‘அவளுடைய நல்லதுக்காக தான்’
என்று மீண்டும், மீண்டும் மனதிற்குள் சொல்லி கொண்டவன், குரலில் நடுக்கத்துடன் யாழினியிடம்,
“உன்னை பத்தின கவலை தான் அவரோட இந்த நிலைமைக்கு காரணம், நீ இப்படி வெளி உலகத்தையே பார்க்காம இந்த ரூம்க்குள்ளவே அடைஞ்சி இருக்கிறது தான் காரணம்”
என்று ஒரு வழியாக சொல்ல நினைத்ததை சொல்லி நிறுத்த, அவனின் அந்த வார்த்தையில் முற்றும் உடைந்த யாழினி,
“என்னை பார்க்கும் போது எல்லாம் அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க, என்னை நினைச்சி நினைச்சி அழறாங்கனு தானே, நான் இங்கேயே இருக்க ஆரம்பிச்சேன்”
என்று வாய்விட்டு சொல்லி அழ, அதை கேட்ட இளவளவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
தங்கள் மகள் எதிர்பாராத நிகழ்வை, இழப்பை சந்தித்த போது, அவளுக்கு தைரியம் சொல்லாமல், அவள் முன்பே அழுது வைத்த பெரியவர்களை குற்றம் சொல்வதா???
அல்லது
தன்னால் தான், தன்னை பார்க்க பார்க்கத்தான் அவர்களுக்கு வருத்தம் என்று சிறுபிள்ளை போல நினைத்து அறையில் ஒடுங்கி கொண்ட யாழினியை குற்றம் சொல்வதா????
தன் யோசனையில் மூழ்கியவனுக்கு, அப்போது தான் ஒன்று உரைக்க,
“ஆமா அப்போ யாழிக்கு என்ன ஒரு நைன்ட்டின் இயர் இருக்குமா, சின்ன பொண்ணு தானே அவ, அவளுக்கு தெரிஞ்ச மாதிரி யோசிச்சி இருக்கா”
என்று தனக்கு தானே சொல்லி கொண்ட இளவளவன்,
“நான் அந்த நேரம் உன்னோட இருந்து இருக்கணும் யாழி, உன்னை கண்டு பிடிக்க ட்ரை பண்ணாம, ஏதோ ஒரு பிடிவாதத்தோடு இருந்ததுட்டேன், சாரிடா யாழி வெரி சாரி”
என்று இயலாமையுடன் மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கேட்டவன், இருக்கையில் அமர்ந்து இருந்த, அவளின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.
தன் முன்னால் அமர்ந்து, இளவளவன் மொழிந்த சொற்களை கேட்ட மங்கையோ, அவனை கண்களில் இயலாமையும், நம்பிக்கையும் சரிசமமாக போட்டியிட, குளம் கட்டிய கண்களோடு பார்த்தாள்.
மோகனம் இசைக்கும்…………

Advertisement