Advertisement

கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு மதியம் உறங்கி இருக்க, எழும் போதே புத்துணர்வுடன் தான் எழுந்தாள் யாழினி.
மனது ஒரு வித அமைதியில் திளைத்திருக்க, சாளரத்தின் அருகே வந்து, கைகளை கட்டி கொண்டு தோட்டத்தை வெறுமனே பார்த்தபடி நின்றிருந்தால் யாழினி.
சிறிது நேரத்திற்கு பிறகு, அறையின் உள்ளே செல்ல நினைத்து, திரும்பியவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் இளவளவன்.
அதுவும் இளவளவன் கைப்பேசியில் யாருடனே பேசிக்கொண்டிருக்க, யாழினிக்கு அவன் என்ன பேசுகிறான் என்பதை தெரிந்து கொள்வதில் எல்லாம் கவனம் செல்லவேயில்லை.
அவளின் கண்கள், கவனம் என எல்லாமே, தோட்டத்தில் செடியின் அருகே நின்றிருந்த இளவளவன் முகத்தில் தான் நிலைத்திருந்தது.
பாசம், குறும்பு, புன்னகை பின்பு பவ்யம் என்று இளவளவன் முகம் காட்டும் வர்ணஜாலங்களை தான், தன்னை மறந்து வியப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் யாழினி.
அப்போது அம்மு வந்து, கோவமாக ஏதோ அவனிடம் பேசுவதும், அதற்கு அவன் ஏதோ சொல்லுவதும், தோட்டத்தில் ஒளிர்ந்த மின்விளக்கின் ஒளியில் யாழினியின் கண்களுக்கு காணக்கிடைத்தது.
பின்பு ராஜி சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டப்படி நிற்பதும், போர் முழக்கம் செய்த அம்மு, நாடக பாணியில் பாட்டு பாடி அவனுடன் சமரசம் ஆவதும், என எல்லாவற்றையும் பார்த்தப்படி நின்றிருந்தால் யாழினி.
அம்முவும், அவளின் அம்மாவும் சிரிப்புடன் இளவளவனிடம் விடைபெற்று செல்லுவதையும், கோவத்துடனே பார்த்திருந்தால் யாழினி.
தன்னிடம் இன்று அவன் பேசியிருந்த விதத்தில், அவனின் குணமே இப்படி தான் போலும், என்று தான் நினைத்திருந்தால் யாழினி.
ஆனால் இப்போது இந்த கொஞ்ச நேரத்தில் அவனின் முகத்தில் தாண்டவமாடிய உணர்வுகளை பார்க்கும் போது,
“ஒருவேளை என்னை தான் அவனுக்கு பிடிக்கவில்லையோ”
என்ற எண்ணம் உதிக்க, மனது கொஞ்சம் சுணக்கம் கொள்ள தான் செய்தது.
பின்பு தன் தலையை சிலிப்பி கொண்டவள்,
“அவனுக்கு என்ன பிடிச்சா என்ன, பிடிக்கலன்னா என்ன, நான் ஏன் பீல் பண்ணனும், போடா நான் ஒன்னும் பீல் எல்லாம் பண்ணல”
என்று வீட்டிற்குள் செல்லும் அவனின் முதுகை பார்த்து வீம்புடன் சொல்லி விட்டு, தன் அறைக்குள்ளே சென்று விட்டாள்.
இதில் யாழினி அறியாத ஒன்றும், இளவளவன் சாதித்த ஒன்றும் இருந்தது.
மதியத்தில் இருந்து இளவளவன் மீது இருந்த கோவத்தில், அன்று முழுவதும் அவனை திட்டி கொண்டிருந்ததில், யாழினி வேறு எதை பற்றியும் யோசிக்கவே இல்லை.
தன் கடந்த காலத்தை, தான் இழந்ததாக நினைப்பதை பற்றி மீண்டும், மீண்டும் யோசித்து, தன் காயத்தை இரணப்படுத்தி கொள்ளவும் இல்லை.
மறுநாள் யாழினி எழுந்து, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வரும் போதே, அவளின் காலை உணவு மேசையின் மீது தயராக இருந்தது.
அசுவராசியதுடன் அதை திறந்து பார்த்தவளுக்கு, தட்டில் வீற்றிருந்த கம்பு அடையும், சட்னியும், உணவு வகை தானா என்பதே சந்தேகமாக இருந்தது.
வேறு வழி இல்லாமல் ஒரு வாய் எடுத்து வைத்தவளுக்கு, அதன் சுவை ஒன்றும் பிரமாதமாக இருப்பதாகவும் தோன்றவில்லை.
உண்ணாமல் வைத்துவிடலாம் என்றாலும், நேற்று இளவளவன் சொல்லி சென்ற வார்த்தைகள் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளென உறுத்தியது.
மூன்று வேளை உணவு உண்பதே இன்றைய நிலையில் யாழினிக்கு வெறுப்பாக இருக்க, பழக்கம் இல்லாத உணவு, இன்னும் அவளை வெறுப்பேற்றி பார்த்தது.
கஷ்டப்பட்டு உணவை விழுங்கி முடித்தவள் நேரத்தை தான் முதலில் பார்த்தாள். மனமோ,
“இந்நேரம் லன்ச் சமைக்க ஆரம்பிச்சி இருப்பாங்களா”
என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது.
காலையில் உண்டே உணவு வயிருக்குள் கல் போல கிடக்க, மதியம் உண்ண முடியும் என்ற ஒரு சதவீதம் கூட யாழினிக்கு நம்பிக்கையில்லை.
உணவு வேண்டாம் என்றால், அதை சொல்ல கீழே தான் செல்ல வேண்டும் என்பதும் உறைக்க, யாழினிக்கோ ஏக தயக்கம்.
ஏனோ யாருடைய பரிதாப பார்வையும், தன் மீது விழுவதை, அவள் விரும்பவில்லை.
அதே சமயம் நேற்றைய மதிய உணவு கண் முன்னே வர, கதவை நோக்கி செல்வதும், பின்பு திரும்புவதுமாகவே, அலைக்கழிப்புடனே இருந்தாள் யாழினி.
இதிலே அரைமணி நேரம் கரைந்துவிட, இதற்கு மேல் தாமதித்தால் மதிய உணவையும் கட்டாயம் உண்ண வேண்டியிருக்கும் என மூளை அபாயத்தை அறிவுறுத்தியது.
வேறு வழியே இல்லாமல், ஒரு பெருமூச்செடுத்தவள், படி இறங்கி கீழே சென்றால் யாழினி.
அதே நேரம் சமையலைறையில் பின் வாசல் அருகில் தோட்டத்தில் நின்று, அம்முவும், இளவளவனும் எதையோ தீவிரமாக பேசி கொண்டிருந்தனர்.
கீழே வந்தவுடன் சுற்றும் முற்றும் மருண்ட பார்வை பார்த்த யாழினி, வேலையாட்களோ, வீட்டு ஆட்களோ யாரும் கண்ணில் படாமல் போக, சற்று ஆசுவாசமனாள்.
பின்பு விரைந்து சமையலறை நோக்கி சென்றவள், ராஜி அங்கு இல்லாமல் போக, என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே விழித்து கொண்டிருந்தாள்.
அப்போது ராஜி வெளியில் இருந்து உள்ளே வர, வாசலையே பார்த்து கொண்டிருந்த யாழினி, அவருக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல்,
“அக்கா, லன்ச் செய்ய ஆரம்பிச்சிட்டிங்களா”
என்று நேரடியாக கேட்க, யாழினி குரல் கேட்டு, பின் பக்கம் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்து கொண்டனர்.
பின்பு தான் யாழினி கேட்ட கேள்வி உறைக்க, அதற்கு என்றும் புரிய, ராஜி பதில் அளிக்கும் முன்பு, அவரை தடுக்க நினைத்து, அவசர அவசரமாக பின் பக்க வாசலை நெருங்கினார்கள்.
அந்த அவசரத்தில் வழியில் இருந்த பூந்தொட்டியில் இளவளவன் காலை இடித்து கொண்டு,
“அய்யோ அம்மா”
என்று அலற, அவனை அதிருப்தியுடன் திரும்பி பார்த்த அம்மு,
“ஷ்ஷ்ஷ்….சத்தம் வராம கத்துங்க”
என்று வாயில் விரலை வைத்து அவனை எச்சரிக்க, வலியில் அம்முவை உறுத்து பார்த்த இளவளவனோ,
“எது சத்தம் வரமா கத்தனுமா, போமா அங்கிட்டு, வலி உயிர் போகுது”
என்று அவளிடம் வழக்கத்தடித்தபடி, தாங்கி, தாங்கி முடிந்த அளவு வேகமாக வந்து, புற்றில் இருந்து வெளிப்படும் சர்ப்பம் போல, இருவரும் தலையை நீட்டி சமையலைறையின் உள்ளே பார்த்தனர்.
யாழினியை சமையலறையில் எதிர்பார்க்காத ராஜி அதிர்ச்சியில் நிற்க, பின்னாடி இருந்து வந்த சத்தத்தில், தன்னை சுதாரித்து கொண்டவர், அவளின் கேள்வியில் மகிழ்ந்து,
“இல்லை யாழினிமா, உங்களுக்கு எதாவது வேணுமா சொல்லுங்க, செஞ்சி தரேன்”
என்று அவள் ஏதேனும் குறிப்பிட்ட உணவை கேட்க தான் வந்து இருக்கிறாளோ என்ற எண்ணத்தில் கேட்க, எட்டி பார்த்த பாம்புகள் இரண்டும் தலையிலே அடித்து கொண்டது.
யாழினிக்கு பின்புறம் அவர்கள் இருவரின் பாவனையை பார்த்த ராஜி, குழப்பத்துடன் அவர்களை பார்க்க, யாழினியோ,
“அது எல்லாம் இல்லை ராஜிக்கா, எனக்கு சேர்த்து லன்ச் செய்யாதிங்கன்னு சொல்ல தான் வந்தேன், வரேன்”
என்று தனது அறைக்கு சென்றால் தான் நிம்மதியாக மூச்சு விட முடியும் என்பது போல, புயல் வேகத்தில் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
யாழினி சமையலறையில் இருந்து சென்றதும், உள்ளே வந்த இருவரும் ராஜியை முறைக்க, அவரோ தன் மகளிடம்,
“என்னடி”
என்று அவர்கள் இருவரின் செய்கைகளுக்கான காரணம் புரியாமல் கேட்க, அம்முவோ அவருக்கு தெளிவாக எதுவும் சொல்லாமல்,
“போமா உன்னால எல்லாமே கெட்டு போச்சு”
என்று சலித்து கொள்ள மட்டும் செய்ய, ஏதோ யோசித்த இளவளவன் அம்முவிடம்,
“பரவாயில்லை விடு அம்மு, இவ்ளோ நாளுக்கு அப்புறம் உன்னோட அக்கா அவ ரூம்ல இருந்து வெளியே வந்து இருக்கா இல்ல, இதுவும் ஒரு வகையில் முன்னேற்றம் தான்”
என்றவன்,
“அக்கா நீங்க வழக்கம் போல யாழினிக்கும் சேர்த்தே குக் பண்ணுங்க, அம்மு நீ என் கூட வா”
முன்பாதியை ராஜியை பார்த்து உரைத்தவன், பின்பு அம்முவை அழைத்துவிட்டு, சமையலறையில் இருந்து வெளியே வந்தான்.
இடித்து கொண்ட விரலில் இன்னும் சற்று வலி இருக்க, வரவேற்பரையின் நீள் இருக்கையில் வந்து இளவளவன் அமர, அம்முவும் பின்னோடு வந்து அமர்ந்தாள்.
அடுத்த ஒரு மணி நேரமும், இளவளவன் ஒரு யோசனை சொன்னால், அதை அம்மு வேண்டாம் என்பதும், அம்மு யோசனை சொன்னால், அதை அவன் வேண்டாம் என்பதுமாகவே சென்றது.
கடைசியாக இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தவுடன், அம்முவை பார்த்த இளவளவன்,
“இங்க பாரு அம்மு, ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்துடுடாத புரியுதா”
என்று தீவிரமான குரலில் சொல்ல, அம்முவோ,
“அது எல்லாம் எனக்கு சுஜூபி, நான் பார்த்துகிறேன் விடுங்க”
என்று சொல்ல, அவளின் தலையில் மெல்ல தட்டிய இளவளவன்,
“ஹான் அப்புறம் படப்படனு பட்டாசு மாதிரி வெடிக்காத புரியுதா, நிறுத்தி நிதானமா பேசு, உன்னோட டென்ஷன்லயே யாழினி கண்டுபிடிச்சிட போறா “
என்று அவளுக்கு சில குறிப்புகளும் கொடுத்தவன், அம்முவை சற்று நேரம் கழித்து மேலே செல்ல சொல்லிவிட்டு, தனது அத்தை, மாமா அறையை நோக்கி சென்றான்.
கதவை தட்டிவிட்டு இளவளவன் காத்திருக்க, கதவை லீலாவதி திறந்தவுடன்,
“உள்ள வரலாமா அத்தை”
என்று அவன் சிரிப்புடன் அனுமதி கேட்க, அவரோ,
“இது என்ன கேள்வி, வாடா கண்ணா”
என்று அவனின் கை பிடித்து உள்ளே அழைத்து செல்ல, சாய்நாற்காலியில் அமர்ந்து இருந்த ரவிச்சந்திரனும், நிமிர்ந்து அமர்ந்து, அவனை பார்த்து புன்னகை செய்தார்.
எந்த விளக்கவுரையும், முகவுரையும் சொல்லாமல் நேரடியாக ரவிச்சந்திரனிடம் நெருங்கிய இளவளவன், அவரின் முகத்தை இப்படியும் அப்படியாக திருப்பி பார்த்தான்.
பின்பு அதிருப்தியுடன் அவரிடம்,
“என்ன மாமா கொஞ்சம் கூட தாடி இல்லாம கிளீன் ஷேவ் பண்ணி இருக்கீங்க”
என்று கேட்க, அவனை புரியாமல் பார்த்த அவரோ,
“நீங்க தானே மாப்பிள்ளை, தினமும் கிளீன் ஷேவ் பண்ணி, பார்க்க நீட் அஹ பிரெஷ் அஹ இருக்கணும், பேஷண்ட் மாதிரி டல் அஹ இருக்க கூடாதுன்னு சொன்னிங்க”
என்று சொல்ல, தன் தலையில் மானசீகமாக அடித்து கொண்தான் இளவளவன்.
பின்பு சமாளிப்பாக தன் அத்தனை பற்களையும் காட்டி சிரித்த படி,
“ஆமா நான் தான் சொன்ன இல்ல, மறந்து போயிட்டேன் மாமா”
என்றபடி குறுக்கும் நெடுக்கும் இரண்டு முறை நடந்தவன், மீண்டும் அவரை நெருங்கி,
“மாமா இருமல் பிரச்சனை இருக்கா உங்களுக்கு”
என்று கேட்க, அவனை வித்தியாசமாக பார்த்த பெரியவர்கள் இருவரில் லீலாவதி தன் வாய் திறந்து,
“அது எல்லாம் இல்லை இளா”
என்று சொல்ல, முகம் சுருங்கிய இளவளவன் உடனே,
“மாமா உங்ககிட்ட கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி இருக்கா”
என்று மீண்டும் சம்பந்தமே இல்லாமல் கேட்க, லீலாவதிக்கு அவனை கேள்வியுடன் பார்க்க, ரவிச்சந்திரனோ பாவமாக,
“எனக்கு கண்ணு நல்லா தெரியுது மாப்பிள்ளை, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இது வரைக்கும் வரலையே”
என்று ஏதோ கண் நன்றாக இருப்பது பெரிய தவறு என்பது போன்ற பாவனையில் சொல்ல, இளவளவனோ,
“அய்யோ அப்போ இதுவும் போச்சா”
என்று வாய்விட்டே சொன்னவன், தன் தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான்.
இளவளவனின் பின்னந்தலையில் ஒரு தட்டு, தட்டிய லீலாவதி,
“என்ன கண்ணா, ஏன் இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி கிட்டு இருக்க, என்ன விஷயம்னு சொன்னா தானே எங்களுக்கு புரியும்”
என்று கேட்க, அவரை பார்த்து புன்னகைத்தவன்,
“இன்னைக்கு மதியம் நம்ப கூட ஒரு வி.ஐ.பி லன்ச்கு ஜாயின் பண்ண போறாங்க”
என்று சொல்ல, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட கணவனும், மனைவியும், புரியாமல் அவனை பார்க்க,
“இன்னைக்கு யாழினி நம்ப கூட சாப்பிடுவானு நினைக்கிறேன் மாமா”
என்று தெளிவாக அவர்களுக்கு புரியும்படி சொல்ல, பெரியவர்கள் இருவரின் கண்களும் எதிர்பாரா ஆனந்தத்தை அப்பட்டமாக காட்டியது.
மிகுந்த மகிழ்ச்சியில் கண்களில் சுரந்த கண்ணீரை புடவை தலைப்பில் லீலாவதி ஒற்றி எடுக்க, ரவிச்சந்திரனோ தான் கேட்டதை மீண்டும் உறுதி செய்து கொள்ள விழைந்து,
“நி..ஜ.. ஹக்கும் நிஜமாவா மாப்பிள்ளை”
என்று கேட்க, இளவளவன் அவர்களின் மகிழ்ச்சியை உள் வாங்கியபடி “ஆமாம்” என்று தலையசைக்க, அவனின் மனமோ,
“எந்த அளவுக்கு அவங்க யாழியை மிஸ் பண்ணி இருந்தா, இந்த சின்ன விஷயத்திற்கு இவ்ளோ எமோஷ்னல் ஆவாங்க, அப்படி என்ன அவளுக்கு பிடிவாதம்”
என்று தன் மனதுக்குகந்தவளை வறுத்தெடுத்த, அவனுக்கு தெரிந்திருக்க வில்லை, யாழினி அறையில் அடைந்து கிடைக்க, அவளின் பெற்றோர்களும் ஒரு காரணம் என்று.
இளவளவனின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் விதமாக லீலாவதி அவனிடம்,
“சரி யாழினி சாப்பிட வரதுக்கும், நீ இவ்ளோ நேரம் கேட்டதுக்கு என்ன சம்பந்தம் கண்ணா”
என்று அவன் கேட்ட கேள்விகளை நினைவு கூர்ந்து கேட்க, இளவளவனோ வெகு சாதாரணமாக,
“இல்ல அத்தை, லேசா தாடி, கண்ணாடி, அதை அப்போ தூக்கி கண்ணை துடைக்கனும், அப்புறம் அப்போ லொக்கு லொக்குனு இரும்பனும், அப்போ தானே உடம்பு சரி இல்லாதவங்கன்னு தெரியும்”
என்று சொல்ல, ரவிசந்திரனின் உடல்நிலையை யாழினிக்கு உணர்த்த இளவளவன் நினைக்கிறன் என்பது மூத்த தம்பதிகளுக்கு நன்கு புரிந்தது.
தலையை இடவலமாக அசைத்த ரவிச்சந்திரனோ அவனிடம்,
“இப்போ நான் நல்லா தானே இருக்கேன், யாழிமாக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா, யாழினிக்கு எதுவும் சொல்ல வேண்டாமே மாப்பிள்ளை”
என்று இறைஞ்சலுடன் சொல்ல, லீலாவதியும் அதே எண்ணத்துடன் அவனை பார்க்க, இளவளவனோ,
“இல்லை மாமா, வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருக்கா, யாழினியை இப்படியே விட்டா வேலைக்காகது, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா தான் சரியா வரும்”
என்று ஒரு தீர்மானத்துடன் சொன்னவன், பெரியவர்கள் முகத்தில் இருந்த கவலையில், ஆதரவாக ஒரு புன்னகையை சூடி கொண்டவன்,
“யாழினியை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும், அவளுக்கு கெட்டது நான் செய்வனா”
என்று சொல்ல, பெரியவர்கள் இருவருக்கும் இளவளவன் மீது நம்பிக்கை இருந்த போதிலும், தங்களின் மகள் எங்கேனும் காயப்பட்டு விடுவாளோ என்ற பயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மோகனம் இசைக்கும்………

Advertisement