Advertisement

தன் முன்பு தட்டில் மூடி இருந்த உணவையே, பேசிய அந்த புதியவன் மேல் கிளர்ந்த கோவத்தில் முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் யாழினி.
“என்னை எவ்வளவு பேசிட்டான், அதுக்காகவே இந்த சாப்பாட்டை சாப்பிட கூடாது”
என்று வாய்விட்டு சொன்னவள், எழுந்து தனது அறையை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தவள்,
“அவன் யாரு எனக்கு, அவன் சொன்னா நான் கேட்கணுமா, முடியாது நான் சாப்பிட மாட்டேன்”
என்றவளுக்கு சற்று முன்பு கோவத்துடன் பேசி சென்றவனின் முகம் நினைவுக்கு வர, வீம்புடன் தலையை சிலுப்பி கொண்டு, மீண்டும் திரும்பி உணவு மேசைக்கே வந்து,
“என்னோட அப்பா சம்பாதிக்கிறாரு, என் காசு, நான் இப்படி தான் வீணாக்குவேன், உனக்கு என்ன வந்துச்சு”
என்று இளவளவனை திட்டி கொண்டே, அவன் மீது இருந்த கோவத்தில் உணவை கீழே கொட்டிவிட எண்ணம் கொண்டு தட்டை கையில் எடுத்தாள்.
உணவு தட்டு குப்பை தொட்டியை பாதி நெருங்கி இருந்த நேரம், அவன் சொல்லி சென்ற “பத்தாயிரம் குழந்தைகளின் மரணம்” என்ற வார்த்தை நினைவுக்கு வர, அவளின் கைகள் அப்படியே அந்தந்தரத்தில் நின்றது.
யாழினியின் நியாய மனது விழித்து கொள்ள,
“அவன் மேல இருக்கிற கோவத்தில் எதுக்கு சாப்பாடை வீணாக்கனும்”
என்று கேள்வி கேட்க, தன் தலையை குலுக்கி கொண்டு, தட்டை மீண்டும் மேசையின் மீதே வைத்த யாழினியின் மனது,
“உன்னால அந்த பத்தாயிரம் குழந்தைகள் பசியை போக்க முடியாது தான், ஆனா குறைந்தபட்சம் உணவை வீணாக்காமல் இருக்கலாம் இல்ல”
என்று குரல் கொடுக்க, இத்தனை நாள் தான் உணவை புறக்கணித்ததை நினைக்கும் போது, சொல்லாமல் கொள்ளாமல் குற்ற உணர்ச்சி அவளை தொற்றி கொண்டது.
அந்த குற்ற உணர்ச்சிக்கும் சேர்த்து, மனது அந்த புதியவனையே குற்றம் சொல்ல,
“ஆ…ஆ…ஆ…ஆ, கொல்றானே”
என்று அவன் சொல்லியபடி செய்ய வேண்டி இருக்கிறதே என்ற, தன் இயலாமையில் உறுமி விட்டு, உணவை மூடி இருந்த தட்டை திறந்தவளின் முகமோ ஏக குழப்பத்தில்.
முன்பு எல்லாம் யாழினிக்கு பிடித்த உணவுகள் என்று சிலது இருந்தாலும், பாரபட்சம் இன்றி எல்லா உணவையும் எடுத்து கொள்வாள்.
ஆனால் கடந்த ஒன்னரை வருடங்கள் அவள் உண்பதே அரிதாக, உண்ணும் போது அவள் நிறைய உண்ணட்டும் என்ற எண்ணத்தில், எப்போதும் அவளுக்கு பிடித்த உணவு வகைகள் தான் தட்டில் இருக்கும்.
குதிரைவாலி அரிசியில் செய்த சாதம் சற்று குழைந்து இருக்க, காரகுழம்பு ஒரு கிண்ணத்திலும், இரண்டு கிண்ணங்களில் பொரியலும், உபரியாக ஒரு வாழைப்பழமும் இருந்தது.
“மதியம் எதுக்கு வெண்பொங்கல் செஞ்சி இருக்காங்க, அதுவும் சாம்பார் வைக்காமல், காரகுழம்பு வச்சி இருக்காங்க, இது என்னடா ஒரு மார்க்கமான காம்பினேஷன் அஹ இருக்கு”
என்று குதிரைவாலி சாதத்தை, முன் பின் பார்த்தே இராத யாழினி, அதை பொங்கல் என்று நினைத்து, பேய் முழி முழித்து கொண்டிருந்தாள்.
எப்படியும் சாப்பிட்டு தான் ஆக வேண்டும் என்பது புரிய, ஒரு பெரு மூச்சை வெளிவிட்டவள்,
“காமான் யாழினி, உன்னால முடியும்”
என்று ஏதோ சண்டைக்கு போவது போல, தன் முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டு, ‘அந்த பொங்கலில்’ காரகுழம்பை சேர்த்து, ஒரு வாய் எடுத்து வைத்தாள்.
உணவின் சுவை வித்தியாசமாக இருந்த போதிலும், சாப்பிடும் படியாகவே இருக்க, அது பொங்கல் இல்லை என்றும் புரிந்தது.
அந்த உணவு என்னவென்று கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே தட்டில் இருந்த உணவுகள், அவளின் வயிறுக்கு இடம் பெயர, நிரம்ப நாட்களுக்கு பிறகு, தான் அறியாமலே, தன் வயிறார உண்டாள் யாழினி.
உண்ட உணவு சிறிது நேரத்திற்கு எல்லாம் அதன் வேலையை காட்ட, உறக்கம் கண்ணை சுழற்றியது.
தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்த யாழினி,
“கடைசியாக என்னைக்கு இப்படி தூக்க மாத்திரை இல்லாம தூங்குனோம்”
என்று யோசித்தபடியே, ஆழ்ந்த உறக்கத்திற்குள் நழுவினாள்.
இத்தனை நாள் இருந்த யாழினியின் இறுக்கம், இன்று இளவளவனின் மீதான கோவத்தின் காரணமாக சற்று தளர்ந்து, அவனுடன் இயல்பாக வார்த்தையாடியது, அவளை கொஞ்சம் இளகி இருந்தது.
மாலை உணவு தட்டை ராஜி வந்து எடுத்து சென்றதோ, கீழே காத்திருந்த இளவளவன், காலி தட்டை பார்த்து துள்ளி குதித்ததோ யாழினி அறியாள்.
அன்று மாலை, தோட்டத்தில் உலவியப்படி, தன் கைப்பேசியில் தன் அப்பாவுக்கு அழைத்துவிட்டு, அவர் எடுப்பதற்காக காத்திருந்தான் இளவளவன்.
ஆவுடையப்பர் அழைப்பை ஏற்றதும், இருவரும், இருவரின் நலன்களை விசாரித்த பிறகு, சுவாரசியமான குரலில் ஆவுடையப்பர்,
“அப்புறம் இளா, போன காரியம் என்ன ஆச்சு”
என்று கேட்க, இளவளவனோ குரலில் சோகத்தை கொட்டி,
“எங்கப்பா, இந்த ஒரு வாரத்தில் உங்க மருமகளை பார்க்கவே முடியல, இளவரசி உப்பரிகையில் இருந்து கீழ இறங்கி வரவே இல்லை”
என்று சொல்ல, அந்த பக்கம் பொங்கி எழுந்த ஆவுடையப்பரோ,
“இப்படி சொல்லவா தம்பி, உங்க அம்மா, அத்தைன்னு எல்லாரையும் சமாளிச்சி, உன்னை அங்க அனுப்பி வச்சேன்”
என்றவர், இளவளவன் பேச வாய்ப்பே கொடுக்காமல்,
“அன்னைக்கு நீ அங்க போய் தங்கணும்னு சொல்லும் போது, நான் சரின்னு சொன்னா, உங்க அம்மா வேண்டாம் சொல்லுவானு தானே, நான் முந்திக்கிட்டு வேண்டாம்னு சொன்னேன்”
என்று அன்றைய தன் எண்ணத்தை விளக்கி சொல்ல, அவரை பற்றி அறிந்திருந்த இளவளவனோ சத்தம் வராமல் இங்கு சிரிக்க, அவரோ,
“வாய்ப்புகாக காத்திருக்கிறவன் முட்டாள், வாய்ப்பை உருவாக்கிறவன் தான் புத்திசாலி”
என்று உணர்ச்சிவசப்பட்டு பேசி கொண்டே போக, மெல்லிய சிரிப்புடன் இளவளவன்,
“நான் உங்க பையன் இல்ல, அதனால் கண்டிப்பா புத்திசாலி தான், இன்னைக்கு தான் அதிரடியா யாழினி ரூம்கு போய் அவளை பார்த்துட்டு, அவளை ஒரு வழியாக்கிட்டு வந்தேன்”
என்று, தான் ஏதோ அரும் பெரும் காரியத்தை சாதித்தது போல ஏக பெருமையுடன் சொல்ல, அந்த பக்கம் இருந்த ஆவுடையப்பரோ மகிழ்ச்சியுடன்,
“பின்ன என்னோட பையனா சும்மாவா, சரி என்ன நடந்தது முழுசா சொல்லு கேட்போம்”
என்று கேட்க, இளவளவனும் தன் எண்ணங்களை மட்டும் தவிர்த்து நடந்ததை எல்லாம் சொல்ல,
“பார்த்து தம்பி, யாழிமா கிட்ட ரொம்ப ஹார்ஷ் அஹ நடந்துக்காத, ரொம்ப கோவப்படாத சரியா”
என்று மாமன் பாசத்தில் உருக்கமாக சொல்ல, அவரின் யாழினி மீதான பாசம் தான் அறிந்த ஒன்று தான் என்பதால், அவரை சமாதானபடுத்தும் விதமாக,
“அப்பா நீங்க கவலைப்படாதிங்க, நான் பார்த்துகிறேன்”
என்று சொல்ல, எப்படியும் தங்கள் மகன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கையில், தன் இயல்புக்கு திரும்பிய ஆவுடையப்பர்,
“எதாவது டிப்ஸ் வேணும்னா அப்பா கிட்ட தயங்காம கேளு இளா கண்ணா, நான் எல்லாம் அந்த காலத்தில”
என்று வெகு பெருமையாக ஆரம்பிக்கவும், அவருக்கு பின்னாடி அபிராமி அம்மையார்,
“எதுக்கு டிப்ஸ், என் பையனும் உங்களை மாதிரி கெட்டு போறதுக்கா”
என்று கிண்டல் குரலில் கேட்பது, இங்கு இளவளவனுக்கு தெளிவாக கேட்டது.
இப்போது தன் அப்பாவின் முகம் எப்படி இருக்கும் என்று யோசித்த இளவளவனனோ, வெடித்து எழுந்த சிரிப்பை கட்டுப்படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்தப்படி இருந்தான்.
தன் சரிபாதி பின்னால் நின்றதை கூட உணராமல் மகனிடம் பேசிய தன்னை நொந்து கொண்ட ஆவுடையப்பர், ஒரு சமாளிப்பு புன்னகையை சிந்தியபடி,
“இந்தா அபி, இளா உன்னை தான் கேட்டுகிட்டு இருந்தான் நீ பேசு, எனக்கு ஆபீஸ் கால் ஒன்னு பேச வேண்டியது இருக்கு, நான் போறேன்”
என்று அபிராமியிடம் கைப்பேசியை கொடுத்து விட்டு நழுவி விட, தன் தாயிடம் கொஞ்ச நேரம் உரையாடி விட்டு அழைப்பை துண்டித்தான் இளவளவன்.
அவன் பேசி முடித்து திரும்ப, அவன் முன் கைகளை கட்டியபடி அம்மு நின்று கொண்டிருந்தாள்.
“சொல்லுங்க, நீங்க என்ன பிளானோடு இங்க வந்து இருக்கீங்க”
என்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, தன் கீச்சு கீச்சு குரலில், அவனை மிரட்ட முயன்றபடி கேட்டாள் அம்மு.
தன் முன் நின்று தன்னை மிரட்டும் அவளை சிரிப்புடன் பார்த்தவனுக்கு, அப்போது தான் அவளின் பெயர் கூட தனக்கு தெரியாது என்பது உறைக்க,
“ஆமா உன்னோட பேரு என்ன”
என்று கேட்க, அவனை முறைத்து கொண்டே மிடுக்காக,
“அம்மு, உங்க பேரு என்ன”
என்று தன் பெயரை சொன்னவள், அவனின் பெயரை கேட்க, அவனும் சிரிப்புடன்,
“இளவளவன்”
என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள, அவனின் பெயரை ஓர் முறை சொல்லி பார்த்த அம்மு, தான் அவனிடம் முன்னால் கேட்ட கேள்வியின் தொடர்ச்சியாக,
“ஆமா அக்கா கிட்ட எதுக்கு அப்படி கோவமா பேசுனீங்க ஹான், அவங்க எவ்ளோ பாவம் தெரியுமா”
என்று பொரிந்து தள்ள,
“யாழினிக்காக எத்தனை பேரு தான் சப்போர்டுக்கு வருவீங்க”
என்று நினைத்து தனக்குள் சிரித்து கொண்ட இளவளவன், வெளியில்,
“நீ இப்படி பாவம் பார்த்துக்கிட்டே இருந்தா, கடைசி வரைக்கும் உன்னோட அக்கா இப்படியே தான் இருப்பா பரவாயில்லையா”
என்று கேட்க, அம்மு அவனை புரியாமல் பார்க்க, தொடர்ந்த இளவளவன்,
“நீயும், நானும் சேர்ந்தா உன்னோட அக்காவை பழைய மாதிரி மாற்றலாம், என்ன சொல்ற”
என்று அவளையும் தன்னோடு கூட்டு சேர்த்து கேட்க, அம்முவோ ஆர்வமே உருவாக,
“அக்கா பழைய மாதிரி, என் கிட்ட நல்லா பேசுவாங்களா”
என்று அது மட்டும் தான் தனக்கு தேவை என்பது போல பேச, அவளின் வெள்ளந்தியான பாசத்தை நினைத்து புன்னகையுடன் இளவளவன் தலையசைக்க, அம்முவோ,
“ஹைய்யா”
என்று துள்ளி குதித்தவளுக்கு, யாழினி, இன்று இளவளவன் பேசியதால் தான் உணவை முழுவதும் உண்டால் என்பதும் புரிய, அதுவே அம்முவுக்கு அவன் மீது, ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.
தன் அக்காவுக்கு இவனால் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையில், அவனிடம் இயல்பாக அதே நேரம் ஆவலுடன்,
“ஆமா உங்களை நான் எப்படி கூப்பிடறது”
என்று புதிய சந்தேகம் ஒன்றை கேட்க, உற்சாக பந்தென குதித்து கொண்டிருந்த அம்முவை பார்த்த இளவளவன்,
“அண்ணானு கூப்பிடுறியா”
என்று அவளை தன் குட்டி தங்கையாக அல்லாமல், வேறு எப்படியும் நினைக்க முடியாமல் கேட்க, அம்முவோ துடுக்குடன்,
“நீங்க என்னோட அம்மாவை அக்கான்னு கூப்பிடிங்க இல்ல, அப்போ நான் உங்களை மாமான்னு தானே கூப்பிடனும்”
என்று எந்த விகல்பமும் இல்லாமல் கேட்க, அதை கேட்டு இளவளவனோ கண்களில் குறும்பு புன்னகையுடன், குரலில் பதற்றத்தை கொண்டு வந்து,
“அய்யோ ராஜிக்கா, அம்மு தெரியமா பேசிட்டா, அவளை திரும்பவும் அடிச்சிடாதீங்க”
என்று அம்முவுக்கு பின்னால் பார்த்து சொல்ல, மதியம் வாங்கிய அடியின் நினைவில் அம்மு அலறியபடி,
“அம்மா நான் சும்மா விளையாட்டுக்கு தான்மா கேட்டேன், அவரை நான் அண்ணானே கூப்பிடுறேன்மா, அடிக்காதமா”
என்று திரும்பியவள், தனக்கு பின்னால் யாரும் இல்லாமல் போக, அவனை முறைக்க, இப்போது இளவளவனுக்கு பின்னால் நின்று அவளை முறைத்து கொண்டிருந்தார் ராஜி.
“இந்த அம்மா ரஜினி பேன் அஹ இருக்கும் போல, எப்போ வருது, எப்படி வருதுன்னு தெரியல, ஆனா சரியா தப்பான நேரத்துக்கு வந்துடுது”
என்று உள்ளுக்குள் அவரை வறுத்ததெடுத்தவள், வெளியில் பாவமாக முகத்தை வைத்து கொள்ள, ராஜியோ,
“ஏண்டி கொஞ்சமாவது அடங்குறியா நீ, அவரு என் வயசுக்கு மரியாதை கொடுத்து அக்கான்னு கூப்பிட்டா, நீ மாமானு கூப்பிடுவியா, ஒழுங்கா அண்ணானு கூப்பிடு”
என்று அவளின் காதை திருகியப்படி அதட்ட, இளவளவனோ,
“ராஜிக்கா எதுக்கு சும்மா சும்மா அம்முவை அடிச்சிக்கிட்டு இருக்கீங்க, விடுங்க முதல்ல, விடுங்க”
என்று அவரிடம் இருந்து அம்முவை விடுவிடுத்து தன்னருகில் நிறுத்தி கொண்டவன், அம்முவிடம்,
“என்ன மாமானு கூப்பிட கிட்டத்தட்ட உன்னை மாதிரியே ஒரு குட்டி பாப்பா இருக்கா, ஆனா”
என்று யாழினியை மனதில் வைத்து சொன்னவன், உடனே முகத்தை சோகமாக வைத்து கொண்டு,
“ஆனா அண்ணானு கூப்பிட தான் யாருமே இல்லை, நீயாவது என்னை உன்னோட அண்ணானு ஏத்துக்குவியா”
என்று நடிகர் திலகம் போல, முகத்தில் நவரசத்தையும் காட்டி கேட்க, ராஜியோ மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தார்.
மதியமும் சரி, இப்பவும் சரி அம்முவுக்காக ராஜியிடம் பரிந்து பேசிய இளவளவனுக்கு, யாழினியும் இதையே தான், எப்போதும் செய்வாள் என்று தெரிந்திருக்கவில்லை.
ஆனால் அம்முவுக்கோ, தன்னை ஒரே மாதிரி பார்த்து கொள்ளும் யாழினியை அக்கா என்று அழைக்கும் போது, இளவளவனை அண்ணா என்று அழைப்பதில் ஏக விருப்பம் தான்.
இருந்த போதிலும், இப்படி திரும்பி, அப்படி திரும்பி என்று ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்த அம்மு, பின்பு ஏதோ போனால் போகிறது என்ற தோரணையில்,
“சரி நீங்க இவ்ளோ கெஞ்சி கேட்குறதுனால், உங்களை அண்ணானா தத்து எடுத்துகிறேன் சரியா”
என்று சொல்ல, இளவளவன் ஆனந்த மிகுதியில் கண்களை துடைத்து கொள்வது போன்று பாவனையுடன்,
“அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ”
என்று பாட, அம்முவோ அந்த பழைய பாட்டு தெரியாமல் முழித்து, தனக்கு தெரியாத பாடலை பாடியதற்காக அவனை முறைத்து, பின்பு ராஜியிடம் அடுத்த வரியை அவசரமாக, அவசரமாக கேட்டு,
“அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ”
என்று பாட, இருவரும் அதோடு நிறுத்தாமல்,
“அண்ணா”
“தங்கச்சி”
என்று பாசமழை வேறு பொழிய, ராஜியோ அவர்கள் இருவரின் செயலில் சிரித்து கொண்டிருக்க, யாழினியோ மேலிருந்து இளவளவனை முறைத்து கொண்டிருந்தாள்.
மோகனம் இசைக்கும்………

Advertisement