Advertisement

யாழினி அறையின் உள்ளே செல்ல முயன்ற இளவளவனை, அம்மு,
“என்ன நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க, நில்லுங்க, நில்லுங்கனு சொல்றேன் இல்ல”
“நீங்க ஐயா பிரின்ட் பையன் அஹ இருக்கலாம், அதுக்காக எங்க வேணா போவீங்களா”
“இது மட்டும் ஐயாக்கு தெரிஞ்சுது, ஐயாவே உங்களை திட்டுவாறு சொல்லிட்டேன்”
என்ற தனக்கு தெரிந்த முறையில் என்னவென்னவோ சொல்லி அவனை தடுக்க முயன்றாள்.
ஆனால் இன்று எப்படியும் தன்னவளை பார்த்துவிடும் எண்ணத்தில் இருந்த இளவளவனோ, அம்மு வேறு யாரிடமோ பேசும் பாவனையில், எதையும் கண்டுகொள்ளாமல், யாழினியின் அறைக்குள் நுழைந்தான்.
இளவளவன் பெரிய வரவேற்பறையை கடந்து, சிறிய உணவு உண்ணும் மேசை இருக்கும் இடத்திற்கு செல்ல, அதே நேரம் யாழினி தனது படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தாள்.
தொளதொளவென ஒரு மேல் சட்டை, அதே நிறத்தில் முழுக்கால் சட்டை அணிந்து, தன் சுருள் கேசத்தை ஏனோதானோவென்று சுருட்டி போடப்பட்ட கொண்டையுடன், இளவளவன் முன்பு வந்து நின்றாள்.
யாழினியின் சொல் பேச்சு கேட்காத பொல்லாத முடி கற்றைகள், ஒன்றிரண்டு அவளின் கன்னம் உரசி, வெள்ளை உடையில் அவள் நின்ற தோற்றம், அவனின் மனதில் அழியா ஓவியம் தான்.
ஆனால் அது இளவளவனுக்கு மகிழ்ச்சியை தருவதற்கு பதில், பெரும் அதிர்ச்சியை தான் தந்தது.
கழுத்து எலும்பு எல்லாம் தெரிய, தான் காணொளியில் பார்த்ததை விட இளைத்து, நயனங்களில் உயிர்ப்பை தொலைத்து, தன்முன் நின்ற இந்த யாழினியை அவனுக்கு பிடிக்கவே இல்லை.
யாழினியோ, இளவளவனின் முகத்தில் பிரதிபலித்த உணர்வுகளை இன்னதென்று புரிந்து கொள்ள முடியாமல், அவனை குழப்பதுடன் பார்த்தபடி நின்றாள்.
சொற்ப நிமிடத்தில் தன்னை சுதாரித்து கொண்ட இளவளவனோ, தன்னவளை அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை அடக்கி, முகத்தில் முழுக்க முழுக்க கோவத்தை பூசி கொண்டு,
“காசு இருந்தா, என்ன வேணா பண்ணலாம்னு நினைப்பா உங்களுக்கு”
என்று அவளின் கண்ணோடு கண் நோக்கி, ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக கேட்க, யாழினியோ மொழி புரிந்தும் அதன் அர்த்தம் புரியாமல் முழிக்க,
“உலக மொத்த மக்கள் தொகையில் சாப்பாடு இல்லாம மட்டும் ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் பேர் இறக்குறாங்க தெரியுமா, அதுல பத்தாயிரம் பேரு அப்பாவி குழந்தைகள்”
என்று அடுத்த ‘ரமணா’வாக அவதாரம் எடுத்து புள்ளி விவரங்களை புட்டு புட்டு வைக்க, யாழினியோ இன்னும் அதே ‘பே’ பார்வை தான்.
கோவப்படுவது ஒன்றே தன் கடமை என்பது போல, இல்லாத கோவத்தை இழுத்து பிடித்து, தொடர்ந்த இளவளவன்,
“நீங்க கோடி கோடியா பணம் வச்சி இருக்கிற பணக்காரங்களா இருந்துட்டு போங்க, ஆனா அதுக்காக இப்படி தான் சாப்பாட்டை வீணாக்குவீங்களா”
என்று அம்மு கையில் இருந்த காலை உணவை சுட்டி காட்டி முகத்தில் தண்டவமாடிய கோவத்திலும், நிதானமாக கேட்டான்.
அப்போது தான் யாழினிக்கு, இவ்வளவு நேரம் இளவளவன் பேசியதற்கும், அவனுடைய கோவத்திற்குமான காரணம் புரிந்தது.
வாழ்க்கையில் எதன் மீதாவது பற்றும் இருக்கும் பட்சத்தில் தானே, அதை கடைசி வரை, பற்றி இருப்பதற்காக உடலை பேணி காக்க தோன்றும்.
ஆனால் யாழினிக்கோ, எதன் மீதும் பிடிப்பு இல்லா நிலை. அதனால் அவளுக்கு உணவும் உட்செல்ல வில்லை.
அதோடு இந்த புதியவன், தான் பணம் இருக்கும் காரணத்தினால், உணவை அலட்சியப் படுத்துவதாக நினைப்பதாக தான் புரிந்தது அவளுக்கு.
அந்த புதியவனுக்கு தன்னை விளக்கும் விதமாக யாழினி பேச நினைக்க, அதற்குள் இளவளவனே மீண்டும்,
“சாப்பிடறதும், சாப்பிடமா இப்படி நூல் கட்டி பறக்கவிடுற பட்டம் கணக்கா இருக்கிறதும் உங்க இஷ்டம்”
என்றவன் அவளின் மெலிந்த உடலை ஒரு முறை பார்த்துவிட்டு, மீண்டும்,
“உங்களுக்கு சாப்பாடு வேண்டாம்னா முன்னாடியே சொல்லிடுங்க, இப்படி வீணாக்காதீங்க”
என்று கண்டிப்புடன், அவளின் மீது துளிக் கூட தனக்கு அக்கறை இல்லை, உணவு வீணாகுவது தான், தன் ஒரே கவலை எனும் விதமாக பேசி வைத்தான்.
அந்த புதியவன் தன்னை தவறாக நினைப்பது பிடிக்காமல், தன்னை புரிய வைக்க நினைத்தவள், அடுத்து அவன் பேசிய பேச்சில் அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டு விட்டாள்.
இளவளவனை போல முதல் பார்வையில் என்று இல்லாமல், இவ்வளவு நேரம் உரையாடிய பிறகும் கூட, யாழினியால் அவனை இனம் கண்டுகொள்ள முடியவில்லை.
இளவளவனை அறிந்து கொண்ட அவளின் ஆழ் மனதின் வருடலை, மருத்து போய் அவளின் வெளி மனது உணரவேயில்லை.
ஆனால் அவனின் கோவம், அவனின் அக்கறை இல்லா பேச்சு, என்று எல்லாம் யாழினியை எங்கோ சென்று தாக்க மட்டும் தவறவில்லை.
தன்னை சுற்றி இருந்தவர்களின் பாசத்திற்கு மட்டுமே பழக்கப்பட்டு இருந்த யாழினிக்கு, இதுவரை யாரும் தன்னிடம் இப்படி கோபப்பட்டதாக கூட நினைவு இல்லை.
ஒருவேளை அதனால் தான், இந்த புதியவனின் கோவம் தன்னை பாதிக்கிறதோ, என்று தனக்கு தானே ஒரு காரணம் கற்பித்து கொண்ட யாழினினுக்கு அப்போது தான்,
“தன்னிடம் கோவப்பட இவன் யார், தன்னை கேள்வி கேட்க இந்த புதியவனுக்கு என்ன உரிமை இருக்கிறது”
என்ற கேள்வியும், அதை தொடர்ந்து கோபமும் உதயமாக, தன் முன் நின்ற புதியவனை உறுத்து விழித்த யாழினி,
“இதை எல்லாம் கேட்க நீங்க யாரு”
என்று, யாரென்றே அறியா ஒருவன், தன் அறையில் தன் அனுமதியின்றி நுழைந்தவுடன் கேட்க வேண்டிய அடிப்படை கேள்வியை, அவன் இவ்வளவு பேசிய பிறகு கேட்டு வைத்தாள்.
முதல் முறையாக யாழினி பேசியதும், அது கோவமாக என்ற போதும், அந்த குரலை கேட்டு இளக தொடங்கிய முகத்தை கஷ்டப்பட்டு கடினப்படுத்தி,
“சாப்பாட்டை வீணாக்காதீங்கனு சொல்ல பசியோடு அருமை தெரிஞ்சவங்களா இருந்தா போதும், உங்களுக்கு மாமாவோ மச்சானாவோ இருக்கணும்னு அவசியம் இல்லை”
என்றவன், அதோடு பேச்சு முடித்தது என்பது போல வெளியே செல்ல, திரும்பி ஒரு அடி எடுத்து வைத்தவன், யாழினியின் குரலில் அப்படியே நின்றான்.
யாழினியோ இளவளவனின் பேச்சில் ஏறிய கோவத்தில், அவனிடம் நேராக பேச விரும்பாமல், இவ்வளவு நேரம் இளவளவன் பேசிய பேச்சில் கோபத்துடன் நின்றிருந்த அம்முவிடம்,
“அம்மு, சாப்பாடை எடுத்துக்கிட்டு போ, எனக்கு வேண்டாம்”
என்று சொல்ல, அம்முவோ யாழினி தன்னிடம் பேசியதில் மகிழவா அல்லது உணவு வேண்டாம் என்றதில் வருத்தப்படவா என்று புரியாமல் நின்றாள்.
திரும்பி நின்றிருந்த இளவளவனுக்கோ, “தான் வீணாக்க கூடாது” என்று சொன்ன கோவத்தில் தான், இப்போதே உணவை எடுத்து சொல்ல சொல்கிறாள் என்று நன்கு புரிந்தது.
அவளின் குரலில் இருந்த பிடிவாதத்திலும், அவளின் சிறுபிள்ளை தனமான கோவத்திலும், முதலில் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
ஆனால் அவள் காலையும் உணவு எடுத்துக் கொள்ளவில்லை, இப்போதும் உணவு வேண்டாம் என்று சொல்லுவதும் அப்போது தான் உறைக்க,
“உங்களுக்கும் சேர்த்து சமைச்சதுக்கு அப்புறம் வேண்டாம்னு சொன்னா, அந்த சாப்பாடு எப்படியும் வீண் தான்”
என்று முதல் முறையாக உண்மையான கோவத்தில் பல்லை கடித்தபடி அவளை பார்த்து சொன்னவன், மீண்டும் உணவை முன்னிறுத்தியே பேசி வைத்தான்.
எந்த விதத்திலும், அவள் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படையாக காண்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் இளவளவன்.
இளவளவன் பேச, பேச யாழினி முகம் கோவத்தில் சிவக்க, அதை இரசிக்க துடித்த மனதிற்கு கடிவாளமிட்டவன், தொடர்ந்து,
“உங்களுக்கு வேண்டாம்னா எப்படியும் இந்த சாப்பாட்டை கீழ தான் போடணும், அந்த புண்ணிய காரியத்தை நீங்க உங்க திரு கரங்களாலே பண்ணிடுங்க”
என்றவன், அடுத்து யாழினி எதுவும் பேசும் முன், அம்முவிடம்,
“இங்க என்ன வேடிக்கை பார்த்துகிட்டு நிக்கிற, வா போகலாம்”
என்று சொல்லிவிட்டு கிட்டத்தட்ட ஓட, அம்முவோ திரும்பி, திரும்பி யாழினியை பார்த்தபடியே இளவளவனின் பின் சென்றாள்.
எதுவோ துரத்துவது போல வேக, வேகமாக படியிறங்கி, கடைசி படி வந்த பிறகு தான், இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளிவிட்டு, ஆசுவாசமானாவன்,
“அப்பா கோவமா இருக்கிற மாதிரி நடிக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு”
என்று கடைசியில் தான் உண்மையில் கோவமானதை கூட உணராமல் புலம்பியவன், தொடர்ந்து,
“அதுவும் நான் எதுக்கு கோவப்படுறேனு புரியாம, அந்த பெரிய கண்ணை உருட்டி, உருட்டி பார்க்கும் போது, அப்படியே அள்ளி அணைச்சிக்கிட்டா என்னனு கேட்குற இந்த மனசை கட்டுப்படுத்துறது குஷ்டமா இருக்கே ஆண்டவா”
என்று தன் நிலையை நினைத்து நொந்து கொண்டவன், பின்பு தன் தலையை குலுக்கி கொண்டு,
“ஸ்டெடியா இரு இளா, இனிமே இதே மாதிரி தான், அவ கிட்ட முழு நேரம் வம்புக்கு நிக்கிற மாதிரி இருக்கும், ஸ்டெடி மேன் ஸ்டெடி”
என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன்,
“நீயும் ஆதரவா பேசுனா, அவ அவளோட கூட்டில் இருந்து வெளிய வரவே மாட்டா”
என்று யாழினியின் நிலையை தன் மனதில் பதிய வைத்து கொண்டவனுக்கு அப்போது தான் வேறு ஒன்று உரைக்க,
“நான் உன்னை பர்ஸ்ட் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன், ஆனா உனக்கு என்ன அடையாளம் தெரியவே இல்லை இல்ல, போடி”
என்று கருவி கொண்டவன், அடுத்த நிமிடமே,
“பச், இதுவும் நல்லதுக்கு தான் விடு இளா, அவ மட்டும் உன்னை கண்டு பிடிச்சி இருந்தா, எல்லா பிளானுமே சொதப்பி இருக்கும், இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சி அவளை பின்னாடி பார்த்துப்போம்”
என்று தன்னை தானே தேற்றி கொண்டு,
“இப்போதைக்கு நம்பளால முடிஞ்ச வரைக்கும் யாழினியோட கோவத்தை தூண்டி, நமக்கு தேவையானதை அவகிட்டு இருந்து சாதிச்சுக்கனும்”
என்று வாய்விட்டு சொன்ன இளவளவனுக்கு, அப்போதும் தன் முன் கோவத்தில் சிவந்து நின்ற யாழினியின் பிம்பமே, மகண் முன் வர சிலிர்த்து கொண்டான்.
இளவளவன், யாழினியை பற்றிய எண்ணங்களில் மூழ்கி சிரித்து கொண்டு இருக்க, அப்போது தான் கடைசி படியில் இருந்த அம்மு, இவன் கடைசியாக சொன்னதை மட்டும் கேட்டுவிட்டு,
“அப்போ இருந்தே எனக்கு உங்க மேல சந்தேகம் தான், சொல்லுங்க உங்களுக்கு தேவையான என்னத்தை யாழினி அக்கா கிட்ட இருந்து சாதிச்சிக்க போறீங்க, இங்க என்ன பிளானோட வந்து இருக்கீங்க”
என்று தன் கீச்சு கீச்சு குரலில் அவனை மிரட்ட, தன் யோசனையில் இருந்து வெளிவந்த இளவளவனுக்கோ, அம்முவின் முகத்தை பார்த்ததும், சிரிப்பு தான் வந்தது.
இளவளவன் அம்முவுக்கு பதில் அளிக்க வாயை திறக்க, அதற்குள் எப்போது, எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், திடிரென பிரசன்னமான ராஜி, அம்முவின் முதுகில் படபடவென சில பல அடிகளை போட்டார்.
யாழினி அறைக்கு சென்று இவ்வளவு நேரம் ஆகியும், இன்னும் அம்மு வராததால், அவளை தேடி வந்த ராஜியின் செவிகளில், அவள் இளவளவனை கேட்ட கேள்விகள் திவ்யமாக விழுந்து வைத்தன.
இளவளவனின் பின்புறம் இருந்த ராஜிக்கு, அவனின் முகபாவம் தெரியாமல் போக, அவன் கோவப்பட்டு தன் மகளை எதுவும் சொல்லிவிடும் முன்,
முந்திக்கொண்டு தானே அம்முவை அடித்துவிட்டார்.
எதிர்பாராமல் கிடைத்த அடியில் அம்மு அலற, அதற்கும் சேர்த்து ஒரு அடி போட்டவர்,
“வாயை மூடுடி, அதிகபிரசங்கி தனமா பேசாத, பேசாதனு சொன்னா கேட்குறியா, தம்பி கிட்ட மன்னிப்பு கேளு”
என்று படபடவென பொரிந்து தள்ள, ராஜியின் அதிரடியில் மிரண்டு போய் நின்ற இளவளவன், அவர் பேசவும் தன்னை சுதாரித்து கொண்டு அவரிடம்,
“அய்யோ அக்கா, அது எல்லாம் ஒன்னும் வேண்டாம்,  சின்ன பொண்ணு தானே, அவ விளையாட்டு தனமா பேசுனதை எல்லாம் நான் தப்பா எடுத்துக்கல”
என்று அம்முக்காக பரிந்து பேச, அவரோ அவனுக்கு நன்றியுடன் கூடிய ஒரு புன்னகையை சிந்தி விட்டு, அம்முவின் கையை பிடித்து இழுத்து சென்றார்.
அம்முவோ தன் அம்மா, அடித்த அடிகளுக்கு எல்லாம் கலங்காமல், போகும் போது, இளவளவனை பார்த்து முறைத்து விட்டு செல்ல, குழம்பி போன இவனோ,
“இந்தக் பொண்ணுக்கு சப்போர்ட் அஹ தானே பேசுனேன், அப்புறம் ஏன் சந்திரமுகி மாதிரி முறைசிச்சிட்டு போகுது”
என்று யோசித்தபடி தனது அறைக்கு செல்ல, மேலே யாழினியோ, தன் முன் இருந்த உணவு தட்டை முறைத்து பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
மோகனம் இசைக்கும்………

Advertisement