Advertisement

யாழினியின் குரல் செவியை தீண்டியதும், இளவளவனை பெரிதும் தாக்கியது, அந்த குரலில் இழையோடிய வருத்தம் தான்.
அதற்கு ஏற்றாற்போல், யாழினி தேர்ந்தெடுத்து பாடிய அந்த திரைப்பட பாடல் வரிகளிலும் சோகம் வழிந்தோடியது.
யாழினி அந்த நிகழ்விற்கு பிறகு பாடவேயில்லை என்று ரவிச்சந்திரன் சொன்னது சட்டென்று உரைக்க, வேக வேகமாக தன் கைப்பேசியை தேடினான் இளவளவன்.
பஞ்சணையில் சமத்தாக அமர்ந்திருந்த கைப்பேசியை விரைந்து கைப்பற்றியவன்,
சாளரத்தின் வெளியே இன்னும் குரல் தெளிவாக கேட்கும் என்ற எண்ணத்தில், தான் திறந்து வைத்திருந்த சாளரத்தை நெருங்கினான்.
ஒரு பக்க சுவற்றில் மூன்றில் இரண்டு பங்கு, கம்பிகள் எதுவும் இல்லாமல், வெறும் கண்ணாடி கதவு மட்டுமே கொண்டு, பிரெஞ்ச் முறையில் அமைக்கப்பட்டிருந்த சாளரம் அது.
பாடலை பதிவு செய்யும் ஆர்வத்தில், இளவளவன் அவனையும் அறியாமல், ஒரு கால் அறையின் உள்ளேயேயும், ஒரு கால் தோட்டத்தின் பக்கம் இருக்கும் படியாகவும், சாளரத்தில் மீது அமர்ந்தான்.
இடையில் ஒரு நிமிடம் யாழினி பாடுவதை நிறுத்த, பாடலை பதிவு செய்யும் முனைப்பில் இருந்த இளவளவனோ,
“என்ன ஆச்சு, ஏன் நிறுத்திட்டா”
என்ற யோசனையுடன், என்னவென்று அறியும் ஆவலில், அமர்ந்திருக்கும் விதத்தை மறந்து, தோட்டத்தின் பக்கம் வெளியே தலையை நீட்டினான் இளவளவன்.
அடுத்த நிமிடம் அவன் உடல்நிலையின் சமநிலை பாதிக்கப்பட, புவி ஈர்ப்பு விசையின் பயனாய், “அய்யோ அம்மா” என்ற அலறலுடன், பொத்தென்று தோட்டத்தில் விழுந்தான்.
விழுந்தவன், ஆடையில் இருந்த தூசை தட்டி விட்டபடி, யாரேனும் இருக்கிறார்களா என்று சுற்றும், முற்றும் பார்த்தவன், யாரும் இல்லை என்றதும்,
“நல்ல வேளை யாரும் பார்க்கல”
என்ற அல்ப சந்தோஷத்துடன் எழுந்திருக்க முயல, எசகு பிசகாக விழுந்ததினால், உண்டான வலியில் சிறிதாக முனகினான்.
இது எல்லாமே சில நிமிடங்களில் மின்னல் விரைவில் நடந்தேறியிருக்க, மேலே யாழினியோ கைகளை கட்டிக்கொண்டு, கண் மூடி மோன நிலையில் இருந்தாள்.
இளவளவன் விழுந்து எழுந்த சத்தமோ, சலசலப்பபோ எதுவும் யாழினியின் செவியை சென்றடையவே இல்லை. அவளோ சாவகாசமாக மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பாட ஆரம்பித்தாள்.
முனகியபடி எழுந்திருக்க முயன்ற இளவளவன், யாழினியின் எதிர்பாரா கானத்தில் திடுக்கிட்டு, நிலை தடுமாறி மீண்டும் கீழே விழுந்து வைத்தான்.
“அம்மே” என்று அலற தொடங்கியவன், சுதாரித்து சத்தம் வராமல் தான் வாயை கைவைத்து மூடி கொள்ள, அங்கு யாழினியோ தொடர்ந்து பாடி கொண்டிருந்தாள்.
“இது நியாயமா.
மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா”
கடைசி வரியை பாடும் போது, யாழினி உணர்ச்சிவசப்பட, அவளின் குரல் அழுகையில் கமர, அதை உணர்ந்த இளவளவனோ கோவத்தில்,
“இப்போ என்ன ஆகிடுச்சின்னு, இவ இப்படி ஊ, ஊன்னு அழுது கிட்டு இருக்கா”
என்று பல்லை கடிக்க, அவனையும் அறியாமல், அவனின் இடது கண்ணீரில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்தோடியது.
கண்ணீர் கன்னம் தொட, அதை அப்போது தான் உணர்ந்த இளவளவனுக்கோ, தன்னை அழுக வைத்ததற்கும் சேர்த்து, அவளின் மீது கோவம் தான் வந்தது.
குரல் கம்ம, தன் பாடலை யாழினி அதோடு நிறுத்த, அடுத்த சில நிமிடங்களில் எல்லாம், சாளரத்தின் கதவை மூடும் சத்தம் கேட்டது.
கோவம், இயலாமை, வருத்தம் என்று பல உணர்ச்சிகளின் பிடியில், தன்னை மறந்து விழுந்த இடத்திலே அமர்ந்திருந்த இளவளவன், சில பல நிமிடங்களுக்கு பிறகே சுயஉணர்வு பெற்று எழுந்தான்.
தன் பக்கத்தில் தன்னை போலவே விழுந்து கிடந்த, கைப்பேசியையும் மறக்காமல் சேர்த்து எடுத்து கொண்டான்.
பின்பு தவ்வி, தாவி என பல குரங்கு சேட்டைகளை செய்து, சாளரத்தின் வழியாகவே, தன் அறைக்குள் சென்றான்.
மறுநாள் காலை யாழினியின் அறைக்கு ஒரு சிறிய பெண் உணவு கொண்டு செல்வதை பார்த்தான் இளவளவன்.
“யார் இது”
என்ற கேள்வி எழ, அந்த பெண் திரும்பி வந்து, நேராக சமையலறைக்கு செல்ல, யோசனையுடன் தானும் சமையலறைக்கு
“ராஜிக்கா”
என்று சமையல்கார பெண்மணியை அழைத்து கொண்டே உள்ளே சென்றான். இவனை பார்த்ததும் அவர்,
“சொல்லுங்க தம்பி”
என்று மரியாதையுடன் கேட்க, அந்த பெண்ணோ இவர்கள் இருவரையும் “பே” வென பார்த்தப் படி நிற்க, அவளை கவனிகாதவன் போல இளவளவன்,
“ராஜிக்கா நேத்து அங்கிளுக்கு குதிரைவாலி அரிசில சாதம் செஞ்சிங்க இல்ல, இன்னைக்கு திணை அரிசி சரியா”
என்று கேட்க, அவன் சம்மதமாக தலையசைத்ததும், தொடர்ந்து,
“அப்புறம் பொரியல் கேரட், பீன்ஸ் ரெண்டுமே பண்ணிடுங்க, குழம்பு உங்க சாய்ஸ், ஆனா எண்ணெய் அதிகமா யூஸ் பண்ணாதீங்க”
என்று மடமடவென சொல்ல, அவரோ சம்மதமாக தலையை அசைக்க, எதையோ யோசித்தவன் தொடர்ந்து,
“ஹான் அக்கா, அப்புறம் யாழினிக்கும் இதே மெனுவையே இனிமே கொடுத்துடுங்க”
என்று சொல்ல அவரோ, இவ்வளவு நேரம் இளவளவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த லீலாவதியை தான், என்ன செய்வதென்ற கேள்வியுடன் பார்த்தார்.
தனக்கு எதுவும் பதில் சொல்லாமல், தனக்கு பின்னால் அவரின் பார்வை செல்ல, அவனும் பின்னால் திரும்பி பார்த்தான்.
தன் அத்தையை பார்த்ததும் இளவளவன் புன்னகைக்க, அவரோ பாவமான முகபாவத்துடன் அவனை நோக்கி வந்தவர்,
“ஏன் கண்ணா, அவருக்கு தான் உடம்பு சரியில்லை, நீ என்னையும் சேர்த்து டையட் இருக்க சொன்ன, அதுகூட பரவாயில்லை, ஆனா இப்போ யாழினியுமா”
என்று கேட்க, அவரை தீர்க்கமாக பார்த்த இளவளவன்,
“உங்களுக்கு என்ன இளமை திரும்புதுன்னு நினைப்பா அத்… ஹக்கும் ஆண்ட்டி”
என்றவன், கண்டிப்பான குரலில்,
“இனிமே மார்னிங் கம்பு, கேழ்வரகு அடை, லன்ச்கு வரகு, சாமை, திணை, குதிரைவாலினு இதுல எதாவது ஒரு அரிசியில் தான் சாப்பாடு”
என்றவன் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“நையிட்டுக்கு வெறும் இட்லி தான், அதுபோக நிறைய புருட்ஸ், நட்ஸ் எல்லாம் சாப்பிடணும், எண்ணெய்ல நீந்துற பூரி, பஜ்ஜி, வடை இதை எல்லாம் நினைச்சி கூட பார்க்காதீங்க”
என்று சொல்ல, லீலாவதிக்கோ அவன் சொன்ன உணவு பட்டியலில் கண்களில் கண்ணீர் வரும் போல இருக்க, அவனை அருகில் அழைத்தவர்,
“ஏன் கண்ணா, நாங்க உன்னை டையட்டீசியன்னு ஒரு பேச்சுக்கு சொன்னது உன் ஆழ் மனசுல போய் பதிஞ்சிடுச்சோ, புரிஞ்சிக்கோ கண்ணா, நீ நிஜமான டையட்டீசியன் கிடையாது”
என்று சொல்ல, அவர் சொன்ன தோரணையில் சிரிப்பு வரும் போல இருக்க, அதை மறைத்த இளவளவன், கோவம் போல கண்களை உருட்டி,
“என்ன கிண்டலா, அப்பா, அம்மா எல்லாம் இந்த டையட்ல தான் ரொம்ப நாளா இருக்காங்க, அவங்க எவ்ளோ ஹெல்தியா இருக்காங்க பாருங்க”
என்று சொல்ல, அவரோ மனதிற்குள் அபிராமியையும், தன் அண்ணனை நினைத்தும் வருத்தப்பட்டவர், வெளியில் அவனிடம்,
“கண்ணா, கண்ணா எனக்கு பூரி, கிழங்கு ரொம்ப பிடிக்கும்டா, பிப்டீன் டேஸ் ஒன்ஸ் மட்டுமாவது பூரி சாப்பிட விடுடா”
என்று கேட்க, இளவளவனோ தலையை மறுப்பாக அசைக்க, லீலாவதியோ,
“சரி அப்போ மந்தலி ஒன்ஸ் ஓக்கே வா”
என்று கேட்க, இதற்கும் அவன் மறுப்பாக தலையசையத்த படி வெளியே செல்ல, லீலாவதியும் சிறு பிள்ளை என, அவனிடம் பேரம் பேசியபடி அவனுடன் நடந்தார்.
இதை எல்லாம் திறந்து வாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்த அப்பெண்ணோ,
“மா, அது யாரு”
என்று வெளியே சென்று கொண்டிருந்த இளவளவனை காட்டி, தன் அன்னை ராஜியிடம் கேட்க, அவர் பதில் சொல்லும் முன்பு முந்தி கொண்டவள் மீண்டும்,
“உனக்கு திடீர்ன்னு இவ்ளோ பெ…ரி…ய தம்பி எங்க இருந்து குதிச்சாங்க”
என்று முன்பு இளவளவன், தன் தாயை அக்கா என்று விளித்ததை குறிப்பிட்டு கேட்க, ராஜியோ,
“ஐயாவுக்கு உடம்பு சரியில்லை இல்லை, அவரோட சாப்பாட்டை கவனிச்சிக்க வந்து இருக்கு அந்த தம்பி”
என்று சொல்ல, சமைக்கதான் ஆள் வைக்கிறார்கள் என்றால், என்ன சமைக்க வேண்டும் என்று சொல்ல கூட ஆளா, என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அம்முவுக்கோ ஏக ஆச்சர்யம்.
அவர்கள் சென்ற திசையை பார்த்தபடி, தன் அன்னையிடம்,
“அப்போ அந்த திடீர் தம்பியும், உன்ன மாதிரியே இங்க வேலை செய்றவங்க தானா”
என்று கொஞ்சம் கோவம் துளிர்விட்ட குரலில் கேட்டு வைத்தாள்.
தான் இங்கு வரும் போது எல்லாம், பாசத்துடன் பேசும் லீலாவதி அம்மா, இன்று அந்த புதியவனுடன் பேசியதில் தன்னை கவனிக்காத கடுப்பு அந்த சின்ன பெண்ணுக்கு.
தன் மகளை கண்களில் எச்சரிக்கையுடன் பார்த்த ராஜியோ, கண்டிப்பு குரலில்,
“வேலை செய்றவர் அது இதுன்னு அந்த தம்பி கிட்ட எதாவது மரியாதை குறைவா பேசி வைக்காத, அவரு ஐயாவோட பிரின்ட் பையனாம், ஐயாக்காக வந்து இருக்காறாம், புரியுதா”
என்று தான் அறிந்த தகவலை மகளுக்கும் சொல்ல, அம்முவோ,
“சரி, சரி”
என்று மண்டையை மட்டும் தான் உருட்டி வைத்தாள். அவளுக்கு என்ன புரிந்தது என்று எல்லாம் ராஜிக்கு தெரியவில்லை.
விடுமுறை நாட்களில், வீட்டில் மகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், பெண் பிள்ளை என்ற ஒரே காரணத்தால், தனியே விடவும் மனமின்றி, ராஜி மகளை இங்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
யாழினி அறையில் அடையும் முன்பு வரை, அம்மு “அக்கா, அக்கா” என்று அவளின் பின்பு தான் சுற்றி கொண்டிருப்பாள்.
ராஜி இங்கு வேலைப்பார்க்கும் இந்த பத்து வருடத்தில், இந்த வீட்டில் இருப்பவர்கள், அம்முவை சமையல்காரரின் மகள் போல என்றுமே நடத்தியது கிடையாது.
அம்மு மீது கொண்ட பாசத்தில், அவளின் படிப்பு செலவை கூட ரவிச்சந்திரன் தான் ஏற்று கொண்டிருக்கிறார்.
இன்றைய அம்முவின் கோவத்தின் காரணம் கூட அவருக்கு புரிந்து தான் இருந்தது.
லீலாவதி அவளை கவனிக்கவில்லை, இல்லையென்றால் நிட்சயம் அவளுடன் பேசி இருப்பார் தான்.
ஆனால் அம்மு அவர் பேசவில்லை என்று வருந்துவது தான் ராஜிக்கு உவப்பாக இல்லை.
தாங்கள் உழைக்கும் வர்க்கம், அவர்கள் தங்களுடன் நன்றாக உரையாடுவதால், தாங்கள் தங்களின் நிலையை மறக்க கூடாது என்ற எண்ணம் அவருக்கு.
பாவம் உலகம் அறியாத சிறுபெண்ணான அம்முவுக்கு தான், இந்த உலக நியதிகள் எல்லாம் தெரிந்திருக்கவில்லை.
இப்படி மகளின் சிந்தனையுடனே மதிய உணவு தயார் செய்த ராஜி, யாழினியின் அறைக்கு எடுத்து செல்ல உணவை, தட்டில் எடுத்து வைத்தவர், அம்முவை அழைத்தார்.
ஒரு பெருமூச்சுடன் மகளின் கையில் உணவு தட்டை வைத்தவர்,
“அங்க போய் தேவையில்லாம எதுவும் பேசி வைக்க கூடாது, அவங்களை தொந்தரவு பண்ணாம, இதை வச்சிட்டு வந்துடனும் என்ன”
என்று கேட்க, அம்முவோ பலமாக மண்டையை ஆட்டி வைத்தாள். இதுவும் கூட அம்முவின் வேண்டுகோள் தான். இந்த சாக்கில் யாழினியை பார்க்கும் ஆவல் அவளுக்கு.
கையில் தட்டுடன் மாடியேறிய அம்முவோ,
“அம்மா சொன்ன மாதிரி சும்மா எல்லாம் வர கூடாது, அக்கா கூட ரெண்டு வார்த்தையாவது பேசணும், பச் அக்கா தான் பதில் பேச மாட்டாங்க, அவங்களை பேச வைக்க என்ன பண்றது”
என்ற தன் சிறிய மூளையை அற்புதமான யோசனையை அருளும்படி வேண்டிகொண்டே படியேறியவள், தன் பக்கத்தில் நிழலாட திரும்பி பார்த்தாள்.
தன்னுடன் இணையாக படியேறிய இளவளவனை முறைத்து பார்த்தவள்,
“என்ன”
என்று மிரட்டலாக கேட்க, அந்த சிறிய உருவத்தில் இருந்து’கீச் கீச்’ என்று வந்த மிரட்டல் குரல், இளவளவனுக்கு சுவாரஸ்யமாக இருக்க, அதற்கு பயந்தவள் போல பாவ்லா காட்டியவன்,
“ஒன்னும் இல்ல, யாழினியை”
என்று மென்று விழுங்க, அவனின் நடிப்பை உண்மை என்று நம்பிய அம்முவோ, அவனை மிதப்பாக பார்த்தபடி,
“அக்காக்கு புதுசா யாரையும் பார்க்க பிடிக்காது”
என்று தலையை சிலுப்பியபடி அறிவிக்க, தன் முகத்தில் வியப்பை ஏகத்துக்கும் காட்டிய இளவளவன்,
“உங்களுக்கு யாழினியை ரொம்ப தெரியுமோ”
என்று கேட்க, அம்முவோ மிக பெருமையாக,
“ஆமா என்னோட நாலு வயசுல இருந்து எனக்கு அக்காவை தெரியும், அக்காவுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா”
என்று சொல்ல, அதற்குள் அவர்கள் மேலே யாழினியின் அறைக்கு வந்து இருந்தனர்.
இளவளவனின் பவ்யத்தை பார்த்து மகிழ்ந்த அம்மு, அவனுக்கு உதவுன் எண்ணம் கொண்டு,
“நீங்க இங்கேயே நில்லுங்க, நான் அக்க கிட்ட உங்களை பார்க்க சம்மதமானு கேட்டுட்டு வரேன்”
என்றபடி உள்ளே செல்ல, வாயில் புன்னகையுடன் நின்ற இளவளவனுக்கு, அந்த சிறு பெண்ணுக்கு, அவனின் யாழினி மீது வெகு பாசம், என்று மட்டும் நன்கு விளங்கியது.
சற்று நேரத்திற்கு எல்லாம் தலையை தொங்க போட்டு கொண்டு வெளியே அம்மு வர, அவளின் கையில் இருந்த தட்டை திறந்து பார்த்தான் அவன்.
யாழினிக்காக அனுப்பப்பட்ட காலை உணவு, அவளால் தீண்டக்கூட படாமல் அவனை பார்த்து பல்லிலிக்க, அம்மு, அவனை தடுக்க முயன்றதையும் மீறி, கோவத்துடன் யாழினியின் அறைக்குள் நுழைந்தான் இளவளவன்.
மோகனம் இசைக்கும்……

Advertisement