Advertisement

ஒன்னரை வருடங்களுக்கு முன்பு……
அன்று காலையில் எழும் போதே யாழினிக்கு லேசாக தலை சுற்றுவது போலவே இருந்தது.
கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி இப்படி தான் மயக்கம், அதோடு காது வேறு அவ்வப்போது அடைத்து கொள்வது என்று உடல் உபாதைகள், அவளை பாடாய் படுத்தி கொண்டிருக்கிறது.
உறக்கம் கலைந்து யாழினி உடனே எழாமல், சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு, தலை சுற்றல் ஓர் அளவுக்கு சரியானதும் எழுந்து மணியை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.
கடிகாரம் நேரம் எட்டு என காட்ட,
“அலாரம் ஏன் அடிக்கவில்லை”
என்று யோசனையுடன் அதை எடுத்து பார்த்தவளுக்கு, அதில் பழுது இருப்பது போல தெரியவில்லை.
மேற்கொண்டு அதை சோதிக்க நேரம் இல்லாததால், அவசரமாக குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.
குளித்து முடித்து வந்தவளின் கை, தன் அறையில் இருக்கும் நவீன ஒலியமைப்பை (Music System) இயக்கி விட, தலை வார ஆரம்பித்தாள்.
கண்ணாடி முன் நின்றிருந்தவளுக்கு, தான் இயக்கிய பாடலின் ஓசையே கேட்காமல் போக,
“எல்லா எலெக்ட்ரானிக் கேஜட்ஸ்கும் இன்னைக்கு என்ன ஆச்சு, இப்படி பழி வாங்குது”
என்றவள் ஒரு வேளை, ஒலி குறைவாக இருக்கிறதோ என்று தொலையியக்கியை (Remote) எடுத்து ஒலியின் அளவை கூட்டினாள்.
ஒலியின் அளவு கூடுவாதாக ஒலியமைப்பின் திரை காட்டியதே தவிர, பாடல் மட்டும் அவளுக்கு கேட்கவே வில்லை.
கடுப்பில் அதை நிறுத்தியவள், ஒரு பாடலை முணுமுணுத்தபடி துள்ளலுடன் கீழே இறங்கி சென்றாள்.
யாழினி இப்படி தான். இசை அவளின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் என்பதாலோ என்னவோ, அவள் இருக்கும் இடத்தில் எப்போதும் ஏதாவது பாடல் பின்னணியில் ஓடி கொண்டே இருக்கும்.
அவளின் மனநிலைக்கு ஏற்ற படி பாடல் மாறும் தவிர, பாடலோ, இசையோ இல்லாமல் அவள் இருக்கவே மாட்டாள்.
கீழே வந்த யாழினி ஓடி சென்று தந்தையை ஒரு முறை அணைத்துவிட்டு, தமதாமாக வந்தற்கு தன் அலாரத்தை காரண கர்த்தாவாக்கி விட்டு, இருந்த பசியில் உணவு உண்ண அமர்ந்தாள்.
அவளுக்கு உணவு பரிமாறிய லீலாவதி,
“ஏன் யாழினி, காலையில் பாட்டை அவ்ளோ சத்தமா அலற விட்ட”
என்று கேட்க, யாழினியோ பதிலே சொல்லாமல் உணவில் கவனமாக இருக்க, கடுப்பான லீலாவதி கரண்டியால் அவளின் கையில் ஒரு தட்டு தட்டினார்.
அந்த வலியில் முகத்தை சுளித்து யாழினி, அவரை நிமிர்ந்து பார்த்து,
“அம்மா எதுக்கு இப்போ என்னை அடிச்சீங்க, வாயால கூப்பிட்டா ஆகாத”
என்று சலித்து கொள்ள, அவளை முறைத்த லீலாவதி,
“ஏண்டி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இருந்துட்டு, வாயால கூப்பிட்டா ஆகாதுன்னு பதில் கேள்வி வேறயா”
என்று கோவப்பட, அவரை இப்போது கடுப்புடன் பார்த்த யாழினி,
“அம்மா எதுக்கு வாய்க்குள்ளே முணுமுணுக்குறீங்க, சத்தமா தான் பேசுங்களேன்”
என்று சொல்ல, கோவம் துளிர்விட லீலாவதி,
“ஏண்டி இதுவே உனக்கு முணுமுணுக்குற மாதிரி இருக்கா, நான் இன்னும் கொஞ்சம் சத்தமா பேசுனா பக்கத்து வீட்டு காரங்க எல்லாம் என்னவோ ஏதோணு நம்ப வாசலுக்கு வந்துதுடுவாங்க”
என்று முகத்தை தோளில் இடித்து கொள்ள, யாழினியோ அப்பாவிடம்,
“அப்பா பாருங்கப்பா”
என்று அம்மாவை பற்றி புகார் சொல்ல, லீலாவதியோ தன் கணவரிடம்,
“எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான்”
என்று கணவரை சாட, சிரிப்புடன் தன் மகளின் தலையில் கைவைத்த ரவிச்சந்திரன்,
“போதும் யாழிமா விளையாட்டு, இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்படியே பண்ணா அம்மா அழுதுடுவா, அம்மா பாவம் இல்ல விட்டுடலாம்”
என்று யாழினி அவ்வப்போது செய்யும் குறும்பு என்று நினைத்தே கணவன், மனைவி இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
ஆனால் இப்போது இருக்கையில் இருந்து எழுந்த யாழினி,
“அப்பா நீங்களும் அம்மாக்கு சப்பார்ட் அஹ, சத்தமா பேசுங்க, நீங்க பேசுறது ஒண்ணுமே எனக்கு கேட்கலை”
என்று சொல்ல, மகளின் முகத்தை பார்த்தவர்களுக்கு அவள் விளையாட வில்லை என்பது தாமதமாக விளங்க, அவள் சொல்லிய செய்தியில் அவர்கள் உறைந்து நின்றனர்.
யாழினியின் கையை பிடித்த லீலாவதி,
“போதும் யாழினி நிறுத்து உன்னோட விளையாட்டை”
என்று முகத்தில் அப்பிய பயத்துடன் சொல்ல, அவரின் முகத்தை பார்த்ததும் ஏதோ சரியில்லை என்று மட்டும் யாழினிக்கு புரிய, அவள் கண்ணீர் குரலில்,
“நிஜமாவே நீங்க பேசுறது எனக்கு கேட்கலை அம்மா”
என்றவளுக்கு காலையில் இருந்து நடந்தது எல்லாம் கண்முன்னே ஓட பதட்டத்துடன்,
“அம்மா எனக்கு என்னமோ ஆயிடுச்சிமா, எனக்கு எதுவுமே கேட்க மாட்டுது”
என்று அழ ஆரம்பிக்க, ரவிச்சந்திரனுக்கும், லீலாவதிக்கும் மகள் சொல்வதை என்னவென்று எடுத்து கொள்வது என்று புரியவில்லை.
லீலாவதியும் அழ தயாராக, இருவரையும் மகிழுந்தில் ஏற சொல்லிய ரவிச்சந்திரன்,
தாங்கள் வரும் செய்தியையும், யாழினியின் நிலமையையும் கைப்பேசியில் தன் நண்பருக்கு தெரிவித்தார்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவரான மனோகருக்கும், அப்போது யாழினி நிலைமையின் தீவிரம் புரியாமல் நண்பனிடம்,
“நீ டென்ஷன் ஆகாத, ஒன்னும் பெரிய ப்ரோப்ளேமா இருக்காது, நீங்க வாங்க, நான் இங்கே எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்”
என்று சொல்ல, அவர் சொன்னதையே பிடித்து கொண்ட ரவிச்சந்திரன்,
“எதுவும் பெரிய பிரச்சனையா இருக்காது”
“யாழிமாக்கு ஒன்னும் ஆகாது”
என்று மனதுக்குள் உருப்போட்டபடியே அமர்ந்திருந்தார். தன்னை சுற்றி இருந்த அமைதியை அப்போது தான் உணர ஆரம்பித்தாள் யாழினி.
அது அவளை மிரட்ட, தன் இரண்டு கையால் காதை குடைந்தவள்,
“ஏன் இவ்ளோ சைலண்ட் அஹ இருக்கு, இது இது எனக்கு பிடிக்கல, பயமா இருக்கு அப்பா”
என்று கதறியவள், அருகில் அமர்ந்து இருந்த அன்னையிடம்,
“டிரைவர் கிட்ட சொல்லி எதாவது பாட்டு போட சொல்லுங்கம்மா, இல்ல இல்ல வேண்டாம், நீங்க என் கிட்ட பேசிகிட்டாவாது வாங்களேன்”
என்று அழ, அவளின் நிலையை பார்த்த பெற்றோர் இருவரும் இரத்த கண்ணீர் வடிக்காதது ஒன்று தான் குறை.
இப்படி யாழினியின் கதறலுடன் ஒருவழியாக அவர்கள் மருத்துவமனை வந்து சேர்ந்திருக்க, மனோகர் மருத்துவ குழுவுடன் தயராக இருந்தார்.
கலங்கி இருந்த நண்பனை பார்த்தவர்,
“பயப்படாத ரவி, ஒன்னும் பெருசா இருக்காது, நான் அவளை செக்-அப்கு கூட்டிகிட்டு போறேன்”
என்றவர் அவளின் கையை பிடித்து அழைத்து செல்ல, இழுத்து பிடித்த நம்பிக்கையுடன் இருக்கையில் அமர்ந்தார்கள் கணவனும், மனைவியும்.
தனக்கு என்ன நடந்தது என்று புரியாமல், பயத்தில் மிரண்டு அழுது கொண்டே இருந்த பத்தொன்பது யாழினியை சமாதானப்படுத்துவது தான் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
அதுவும் யாழினி சுத்தமாக கேட்கும் திறனை இழந்து இருக்க, ஒரு பெரிய பலகையில், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும், அப்போது தான் அவளின் நிலையை சரி செய்ய முடியும் என்று எழுதி அரைமணி நேரம் போராடி தான் அவளுக்கு புரிய வைக்க முடிந்தது.
அதுவும் அவர்கள் அவளின் கேட்கும் திறனை எப்படியும் மீட்டு விடாலாம் என்று நம்பிக்கை தரும் விதமாக சொல்லியிருக்க, அந்த நம்பிக்கையில் அவள் அமைதியானாள்.
முதல் கட்டமாக எந்த அவளுக்கு அவள் கேட்கும் திறனை இழந்து இருக்கிறாள் என்று ஒலி சோதனை செய்ய, அவள் கிட்டத்தட்ட தொன்னூறு சதவீதம் கேட்கும் திறனை இழந்திருந்தாள்.
அடுத்து எதனால் இப்படி ஆனது என்று காரணத்தை கண்டறிய, கிட்டத்தட்ட இருக்கும் எல்லா சோதனைகளையும் செய்தனர் யாழினிக்கு.
சோதனையின் முடிவுகள் அளித்த தகவலில், அவளின் கேட்கும் திறனை மீட்கும் அனைத்து வாய்ப்பையும், தாங்கள் இழந்து விட்டது மருத்துவர்களுக்கு தெளிவாக புரிந்தது.
யாழினியின் பெற்றோரை தனது அறைக்கு அழைத்த மனோகர், யாழினியை பார்த்த மருத்துவரும் உடன் இருக்க, மெதுவாக அவர்களிடம்,
“ரவி நான் சொல்ல போறதை எமோஷனல் ஆகாம பொறுமையா கேளு”
என்று ஆரம்பிக்க, அதிலே இதுவரை இருந்த நம்பிக்கை எல்லாம் ஆட்டம் காண, மிரட்சியுடன் இருவரும் அவரை பார்க்க, அவரோ,
“யாழினி இதுக்கு முன்னாடி மயக்கம், காது அடைக்குற மாதிரி, இல்ல காது சரியா கேட்காத மாதிரி இருக்குன்னு சொல்லி இருக்காளா”
என்று கேட்க, இருவரும் மலங்க மலங்க விழித்தனரே ஒழிய பதிலே பேசவில்லை. அவர்களை பார்க்க மனோகருக்கு நிரம்பவும் பாவமாக இருந்தது.
மகளையே உலகமாக நினைக்கும் இவர்களுக்கு, தான் சொல்லப்போகும் செய்தி நிட்சயம் பேரிடியாக தான் இருக்க போகிறது என்பது அவருக்கு புரிந்தது.
இருந்தும் கடமையை செய்ய வேண்டும் அல்லவா அவர், அதனால்,
“யாழினிக்கு AIEDனு ஒரு ரேர் டிசீஸ் வந்து இருக்கு, நான் முன்னாடி கேட்டது எல்லாம் அதோட சிம்டம்ஸ் தான், அப்போவே ஒரு வேளை செக் பண்ணி இருந்தா இந்த அளவுக்கு போகாம தடுத்து இருக்கலாம்”
என்று சொல்ல, மனோகர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட இருவருக்கும் புரியவில்லை.
மனோகர் பேசவே இல்லாதது போல ரவிச்சந்திரன் அவரிடம்,
“யாழிமாக்கு திரும்ப காது கேட்கும் தானே”
என்று தனது உயிரே அவரின் பதிலில் தான் இருப்பது போன்ற முகபாவத்துடன் மனோகரை, அவரின் பதிலுக்காக பார்த்தார்.
அவரை இரக்கத்துடன் பார்த்த மனோகர்,
“ஹ்ம்ம் இல்ல ரவி, யாழினி அந்த ஸ்டேஜ் எல்லாம் அஹ தாண்டிட்டா, நாம கொஞ்சம் முன்னாடி இதை கண்டுபிடிச்சி இருந்தா கூட தடுத்து இருக்கலாம்”
என்று சொல்ல, அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் எழுந்த ரவிச்சந்திரன் நேராக மகளின் அறைக்கு தான் ஓடினார்.
யாழினியோ மருந்தின் உதவியால் உறங்கி கொண்டிருக்க, அவளை பார்த்ததும் அவரின் கண்ணீர் உடைப்பெடுக்க,
“நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், எதுக்கு என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை, அய்யோ”
என்று தலையில் அடித்து கொண்டு அழ, பின்னோடு வந்த மனோகர் அவரை வெளியில் அழைத்து செல்ல முயன்றபடி,
“யாழினி தூங்குறா, அவளை டிஸ்டர்ப் பண்ணாத ரவி, வெளியில் வா”
என்று சொல்ல, இன்னும் கதறிய ரவிச்சந்திரனோ,
“நான் எப்படி அழுதாலும், அது தான் என் பொண்ணுக்கு கேட்க போறது இல்லையே”
என்று கதற, லீலாவதியோ பிரம்மை பிடித்தவர் போல, இன்னமும் மனோகரின் அறையில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்து இருந்தார்.
“நீங்களே இப்படி உடைஞ்சி போயிட்டா யாழினிக்கு யார் ஆறுதல் சொல்லுவா”
என்று மனோகர் பேசி பேசியே கணவன், மனைவி இருவரையும் தேற்றினார். யாழினி கண் விழித்ததும் மனோகரே அவளிடம் விஷயத்தை எழுதி காட்டினர்.
முதலில் தான் கேட்ட செய்தியை புரிந்து கொள்ள முடியாமல் அவரை வெறித்து பார்த்த யாழினிக்கு, மெதுவாக தன் நிலை புரிய அப்படி ஒரு அழுகை.
அதை பார்க்கும் போது மனோகருக்கே மனது வலித்த போது, பெற்றோரின் நிலைமையை சொல்ல வேண்டியது இல்லை.
சில மருந்து மாத்திரைகளை மட்டும் பேருக்கு மருத்துவர்கள் எழுதி கொடுக்க, யாழினியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.
வீட்டிற்கு வந்த புதிதில், அடிக்கடி யாழினி,
“எனக்கு இந்த அமைதி பிடிக்கல, எதாவது பண்ணுங்க அப்பா, அம்மா”
என்று அலறுவாள், கதறுவாள். அவளின் நிலையை பார்த்து பெற்றோர் இருவரால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்ததே தவிர, அவளின் வலியை போக்கும் மார்க்கம் தான் அவர்களுக்கு தெரியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சுற்றி இருந்த அமைதியில், ஒன்ற ஆரம்பித்தாள் யாழினி.
தன் குரலே தனக்கு கேட்காதால், பேசுவதும் பாரமாக இருக்க, பேசுவதை நிறுத்தினாள்.
தன்னை பார்த்து, பார்த்து பெற்றோர் கண்ணீர் வடிக்க, அவர்களின் கண் முன்னால் செல்வதை தவிர்த்து, தன் அறையின் தனிமையில் முடங்கினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக உதடுகளின் அசைவை கொண்டு, முன்னால் நிற்பவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
அதுவும் அவர்கள் நிறுத்தி நிதானமாக பேசினால் மட்டுமே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
தன் உயிராக நினைத்து போற்றிய இசையை தொடர முடியாத நிலை, அவளை வெகு ஆழமாக தாக்கியது.
தன்னுடன் உரையாடுபவர்கள் சாதாரண வேகத்தில் பேசினாலே, தான் அதை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறி, பதில் சொல்ல திணற வேண்டும் என்பதாலே, வெளியாட்களை பார்ப்பதையே அவள் வெறுத்தாள்.
அதற்காக தன் நிலையை வெளியில் சொல்லி, மற்றவர்களின் இரக்க பார்வையை எதிர்கொள்ளவும் அவள் பிரியப்படவில்லை.
திடீரென இப்படி நடக்கும் போது எல்லாருக்கும் நிட்சயம் அதிர்ச்சியாக தான் இருக்கும்.
ஆனால் முதற்கட்ட அதிர்ச்சி நீங்கியதும், யாழினியை தேற்ற அவளின் பெற்றோர் நெருங்குவதற்குள், அவள் துவண்டு தன் கூட்டில் அடைந்து விட்டாள்.
கொஞ்சம் முயற்சி செய்து இருந்தால் யாழினியை கொஞ்சமேனும் தேற்றி இருக்கலாமோ என்னவோ….
ஆனால் ஏற்கனவே ஓய்ந்து போயிருந்த மகளை அவர்கள் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவோ, காயப்படுத்தவோ விரும்பாமல் அவளின் விருப்பத்திற்கு விட்டு விட, அது தான் பிசகாகி போனது.
தன் வாழ்நாளின் மோசமான நாட்களை புரட்டி பார்த்து கொண்டிருந்த யாழினி, அன்று அனுபவித்த வலியை இன்றும் உணர்ந்தாள்.
தன் தலையை குலுக்கி அந்த நாட்களை யாழினி விரட்டவும், அவளின் வீடு வரவும் சரியாக இருந்தது.
வண்டியின் முன் பக்கம் இறங்கிய இளவளவனின் அருகில் சென்ற யாழினி, தான் என்ன கேட்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் அவனிடம்,
“கண்ணா நாளைக்கு, நம்ப குழந்தைக்கும் என்ன மாதிரியே ஆகிட்டா என்ன பண்றது”
என்று கேட்க, அந்த கேள்வியை எதிர்கொண்ட இளவளவனின் நிலையை விளக்கவும் வேண்டுமா என்ன.
மோகனம் இசைக்கும்………………

Advertisement