Advertisement

என்ன செய்வது என்று அயராது யோசித்த இளவளவனின் சிந்தனையில், அழகான யோசனை ஒன்று உதயமானது.
யோசனையை செயல்படுத்த என்று தயங்கி இருக்கிறான் இளவளவன், உடனே யாழினியின் அறையை நோக்கி படையெடுத்து விட்டான்.
காலையிலேயே தனது அறைக்கு வந்த இளவளவனை பார்த்த யாழினிக்கோ,
“இப்போ என்ன”
என்று ஆயசமாக இருக்க, இளவளவன் அவளிடம்,
“அங்கிள் கடைக்கு போய் மாச கணக்குல ஆகுது, வீட்டுல உட்கார்ந்து கணக்கு, வழக்கு மட்டும் பார்த்தா ஆச்சா”
என்று அடுத்த விஷயத்திற்கு அடிப்போட, இதற்கு எல்லாம் இத்தனை நாட்களில் பழகி இருந்த யாழினியோ,
“என்ன செய்யணும்னு இந்நேரம் நீ முடிவு பண்ணி இருப்ப, என்னன்னு அதையும் நீயே சொல்லிடு ராசா”
என்று அவனின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்க, அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தபடியே இளவளவன்,
“நீ எல்லா கடைக்கும் ஒரு விசிட் போயிட்டு வந்துடு, ஓனர் வர போக இருந்தா தானே, வேலை பார்க்கிறவங்களுக்கும் வேலையில் ஒரு பயபக்தி இருக்கும்”
என்று சொல்ல, யாழினியோ எந்த மறுப்பும் சொல்லாமல்,
“ஹ்ம்ம் சரி”
என்று உடனே ஒப்பு கொண்டு விட்டாள். பின்னே மறுத்து மட்டும் என்ன ப்ரோஜனம்.
கடைசியில் அவன் நினைத்ததை தான் தன்னை செய்ய வைக்க போகிறான், இதற்கு எதற்கு பேசி நேரத்தை விரையமாக்க வேண்டும் என்ற அளவுக்கு தேறி இருந்தாள் யாழினி.
இவளை சம்மதிக்க வைக்க, என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று தான் ஒத்திகை பார்த்து வந்திருக்க, இவள் இப்படி எளிதாக ஒப்பு கொள்ளவும், அவளை சந்தேகமாக பார்த்தவன்,
“நிஜமாவா சொல்ற”
என்று கேட்க, ஆமாம் என்று தலையசைத்த யாழினி, ஓவிய அறைக்குள் சென்று மறைந்து விட்டாள்.
செல்லும் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தவன், காரணம் என்னவானாலும் அவள் ஒப்பு கொண்ட மகிழ்ச்சியில் லீலாவதியை தேடி கீழே சென்றான்.
உணவு மேசையில் ஏதோ வேலையாக இருந்தவரிடம் சென்று எந்த முகவுரையும் இல்லாமல்,
“ஆமா அத்தை யாழினி கிட்ட ஆபிஸ் வியர் எல்லாம் இருக்கு இல்ல”
என்று கேட்க, திடீரென முன்தோன்றி, தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் அவன் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ளவே, ஒரு நிமிடம் பிடித்தது அவருக்கு.
தாடையில் கை வைத்து யோசித்தவர், நினைவடுக்கில் யாழினியின் துணி அலமாரியை அலசி பார்த்தவராக,
“யாழி கிட்ட இருக்கிற சுடி, சாரீ எல்லாமே பட்டு தான் கண்ணா”
என்று சொல்ல, இளவளவன்,
“காட்டன்ல எதுவும் ட்ரெஸ் இல்லையா”
என்று விடாமல் கேட்க, மீண்டும் விட்டத்தை பார்த்து யோசித்த அவரோ,
“கொஞ்சம் இருக்கும் கண்ணா, ஆனா அது எல்லாம் காலேஜ் யூஸ்காக வாங்குனது, சொல்ல சொல்ல கேட்காம அதை எல்லாம் ரொம்ப சிம்பிளா தான் எடுத்தா யாழி”
என்று சொல்ல, ‘ஆள் பாதி ஆடை பாதி என்பதில்’ முழு நம்பிக்கை கொண்ட இளவளவனுக்கு, யாழினியை அப்படி சாதாரண உடையில், கடைக்கு அழைத்து செல்ல விருப்பம் இல்லை.
என்ன செய்வது என்று யோசித்தவன்,
“அத்தை யாழினியை ஷாப்பிங் கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா”
என்று அவரிடம் அனுமதி கேட்க, அவரோ,
“அவ வரதா இருந்தா தாராளமா கூட்டிகிட்டு போ கண்ணா, எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்லை”
என்று சொல்ல விட, அன்று விடுமுறை என்பதால் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து வீட்டிற்கு வந்த அம்முவையும், உடன் அழைத்து கொண்டு மூவரும் வெளியே கிளம்பினார்கள்.
புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல, யாழினிக்கு அங்கு தான் கண் திறப்பு ஏற்பட போகிறது என்று அப்போது அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை தான்.
மகிழுந்தில் முன்னால் அமர்ந்திருந்த இளவளவனின் கண்கள், பின்னால் அம்முவுடன் அமர்ந்திருந்த யாழினியை அவன் அறியாமல் அவ்வபோது தீண்டியபடியே இருந்தது.
தான் சொல்லுவதை எல்லாம் மறுக்காமல் செய்யும், இந்த யாழினியை பார்த்த இளவளவனின் மனம்,
“முன்னாடி எல்லாம் இவ இப்படி கிடையாதே, நான் என்ன சொன்னாலும் என் கூட சண்டைக்கு இல்ல நிப்பா, இப்போ என்ன டோட்டல் சரண்டரா இருக்கு”
என்று சிந்திக்க, பின்னால் அம்முவோ தன் பிரிய அக்காவுடன் வெளியே செல்லும் ஆர்வத்தில், வாய் ஓயாமல் பேசிய படியே வந்தாள்.
அதை பார்த்த இளவளவனுக்கு அம்முவிடம் வம்பு வளர்க்க ஆசை துளிர்க்க,
“ஆமா நீ இப்படி தகரடப்பால நண்டை விட்ட மாதிரி, லோடலோடன்னு பேசுனா அவளுக்கு என்ன புரியும், நீ சொன்ன ஒன்னே ஒன்னை அவளை திருப்பி சொல்ல சொல்லு பார்ப்போம்”
என்று பின்னால் திரும்பி யாழினியை சுட்டி காட்டி சொல்ல, அதை அப்படியே நம்பிய அம்முவின் முகம், உடனே சின்னதாகி போனது.
இளவளவனை முறைத்த யாழினி, அம்முவிடம்,
“அது எல்லாம் ஒன்னும் இல்லடா அம்மு, நீ ஒன்னும் அவ்ளோ ஸ்பீடா எல்லாம் பேசலை”
என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தியவள், அவள் இவ்வளவு நேரம் பேசியதில் இருந்து இரண்டு வரியையும் சொன்னாள்.
முகம் முழுக்க விரிந்த புன்னகையுடன் இளவளவனை நோக்கி அம்மு வக்களம் காட்ட, யாழினியை பொய்யாய் முறைத்து விட்டு, முன்னால் திரும்பி விட்டான் அவன்.
அவனின் செயலில் யாழினிக்கு புன்னகை அரும்ப, மீண்டும் பேச ஆரம்பித்த அம்மு, பேரங்காடியை நெருங்கும் வரை பேசி கொண்டே தான் வந்தாள்.
வெளியே செல்கிறோம் என்று மட்டும் தான் இளவளவன் யாழினியிடம் சொல்லி இருந்தான்.
பேரங்காடியை பார்த்ததும் யாழினியின் புருவம் கேள்வியாய் உயர, பதில் சொல்லாமல் தோள்களை மட்டும் குலுக்கியவன், முன்னே செல்ல, இருவரும் அவனை பின்தொடர்ந்தனர்.
யாழினி அணிந்திருந்த வெகு சுமாரான உடையை பார்த்த இளவளவனுக்கு, கடைக்கு கிளம்பியது நல்லது என்று தான் தோன்றியது.
இது மாதிரி உடையில் சென்றால், கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட, யாரும் அவள் தான் கடையின் உரிமையாளர் என்று நம்ப மாட்டார்கள், என்பது அவனின் எண்ணம்.
எதுவும் இலக்கே இல்லாதவன் போல, நான்கு மாடியை கொண்ட அந்த பேரங்காடி முழுவதும் ஒரு முறை நடந்தான் அவன்.
அம்மு ஆவென்று வாயை பிளந்து, அங்கு இருந்த கடைகளை வேடிக்கை பார்த்த படி நடக்க, யாழினியோ அசுவாரஸ்யமாக உடன் நடந்தாள்.
ஒரு வழியாக இரண்டாம் தளத்தில் இருந்த புகழ்பெற்ற பெண்கள் ஆடையகத்திற்குள் நுழைந்த தன்னை கேள்வியாய் பார்த்த யாழினியிடம்,
“ஆபிஸ் போக யூஸ் பண்ற மாதிரி ட்ரெஸ் எடுத்துக்கோ”
என்று சொல்ல, நாளைய கடைக்கு விஜயம் செய்வதால் தான், இந்த ஏற்பாடு என்று புரிய, அவளும் துணிகளை பார்க்க ஆரம்பித்தாள்.
அம்மு ஆசையாய் ஓடி ஓடி,
“அக்கா உங்களுக்கு இந்த ட்ரெஸ் நல்லா இருக்கும்”
“இந்த கலர் சூப்பர் அஹ இருக்கும்”
என்று எடுத்து வந்து கொடுக்க, அதை புன்னகையுடன் பார்த்த இளவளவன், சிறுமியர் பிரிவுக்கு சென்று, அம்முக்கு உடையை பார்க்க ஆரம்பித்தான்.
தனக்கு பிடித்த விதத்தில் நான்கு, ஐந்து உடைகளை கைகளில் அள்ளி கொண்டு வந்தவன், அவற்றை அம்முவின் முன்காட்டி,
“அம்மு இதுல எது எல்லாம் நல்லா இருக்கு”
என்று கேட்க, யாருக்கோ என்று நினைத்த அம்முவும், அழகாக தேர்ந்தெடுத்து கொடுக்க, அவற்றை எல்லாம் அவளுக்காக வாங்கி விட்டான் அவன்.
இதற்குள் யாழினியும் அவளுக்கு தேவையான உடையை தேர்வு செய்து இருக்க, அவற்றை பார்த்த இளவளவனின் புருவம் மெச்சுதலாக உயரவும், யாழினிக்கும் திருப்தி.
அதன் பின்னர் இவர்கள் வாங்கியவற்றை உடன் வந்த ஓட்டுனரிடம் மகிழுந்தில் வைத்து விட்டு வர சொல்லி, மூன்றாம் மாடியில் இருந்த உணவு கடைக்குள் நுழைந்தனர்.
இருவருக்கும் வேண்டியதை கேட்டு வாங்கி கொடுத்த இளவளவன், தன் பிரிய உணவையும் வாங்கி கொண்டு அமர, அவர்களுக்கு இரண்டு இருக்கை தாண்டி, ஏதோ பெண் அலறும் சத்தம்.
அந்த சத்தத்தில் இளவளவன் என்னமோ ஏதோ என்று எழுந்து பார்க்க, அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்த யாழினியும், அவனின் முகத்தில் இருந்த பதட்டத்தில் திரும்பி பார்த்தாள்.
அங்கு இளம்பெண்கள் நால்வர் அமர்ந்து இருக்க, அவர்களுக்கு முன்பு ஒருவன் கத்தி ஒன்றை காட்டி ஏதோ சொல்லி கொண்டிருக்க, அந்த பெண்கள் அலறிய சத்தத்தில் தான் இளவளவன் அங்கு பார்த்தது.
சூழ்நிலையை புரிந்து கொண்ட இளவளவன் கதாநாயகன் அல்லவா, தவறை தட்டி கேட்க, தப்பு செய்பவனை புரட்டி எடுக்க சொல்லி உடலில் உள்ள அத்தனை அணுவும் பரபரத்தது அவனுக்கு.
அடி மேல் அடி வைத்து, ஸ்லோ மோஷனில் கெத்தாக நடக்க, அதற்குள் அங்கு பொத்தென்று ஒரு சத்தம்.
அந்த உணவகத்தில் இருந்த ஆண்கள், பெண்கள் என அத்தனை பேரும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, யாழினி மின்னல் விரைவில் இயங்கி இருந்தாள்.
இருக்கையில் இருந்து எழுந்தவள், தனக்கு முதுகு காட்டிய படி, தன்னை யாரும் தாக்க கூடும் என்ற எண்ணம் சிறிதுமின்றி பெண்களின் மீது கவனத்தை வைத்திருந்த அந்த ஆசாமியின் பின்பக்க முட்டியில், ஓங்கி ஒரு உதை விட்டாள்.
எதிர்பாராமல் விழுந்த அடியில், அவன் கால்கள் மமடங்க, அவன் தடுமாறி முன்னால் விழ, அந்த சந்தரப்பத்தை பயன்படுத்தி, அவனின் கையை பிடித்து திருக, ‘கிளிங்’ என்ற சத்ததுடன் கீழே விழுந்தது கத்தி.
“இங்க நான் தானே ஹீரோ, அப்போ ஸீன் படி இதை நான் இல்லை பண்ணி இருக்கணும்”
என்று இளவளவன் குழம்ப, அதற்குள் சுதாரித்து கீழே விழுந்த ஆசாமி எழ முயற்சிக்க, சுதாரித்த இளவளவன், அவளின் உதவிக்கு ஓடினான்.
அதற்குள் பேரங்காடியின் காவலர்களும் கண்காணிப்பு கேமிராவின் மூலம் இங்கு நடந்ததை பார்த்து விரைந்து வந்திருக்க, அந்த ஆசாமியை அவர்களிடம் ஒப்படைத்தார்கள் இருவரும்.
சுற்றி நின்ற அனைவரின் பார்வையும் யாழினி மீது வியப்பாக, பெருமையாக, பீதியாக படிய, இளவளவனோ அவளுக்கு எதுவும் காயம் இல்லை என்பதை தான் முதலில் உறுதி செய்து கொண்டான்.
யாழினியின் கையை பிடித்து கொண்ட அந்த நான்கு பெண்களில் ஒருத்தி,
“தேங்கஸ்ங்க, நீங்க மட்டும் வரலையின்னா, இந்நேரம் என்ன நடந்து இருக்கும்னு என்னால யோசிக்க கூட முடியல”
என்று சற்று முன்பு நிகழ்ந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து வெளிப்படாமல் கண்ணீருடன் பேச, ஆறுதலாக அப்பெண்ணின் தோளில் தட்டிய யாழினியோ,
“இட்ஸ் ஓகே”
என்று புன்னகையுடன் சொல்லி நகர, அம்முவோ பயத்தில் யாழினியை கையை இறுக்கி பிடித்தபடி, மௌனியாய் வந்தாள்.
அவர்கள் வாங்கிய உணவு தீண்டபடாமலே கிடக்க, மேற்கொண்டு அங்காடியை சுற்றி பார்க்கும் மனநிலையும் மூவருக்கும் சுத்தமாக இல்லை.
அம்முவின் முகத்தை பார்த்த இளவளவனுக்கு பாவமாக இருக்க, அவளை சகஜமாக்கும் பொருட்டு,
“ஐஸ் கிரீம் சாப்பிட்டு போகலாமா அம்மு”
என்று ஆசை காட்ட, அவளோ,
“இல்ல, இல்ல வேண்டாம், நாம வீட்டுக்கு போகலாம்”
என்று அதையே திரும்ப திரும்ப சொல்ல, அவளின் பயம் புரிந்தவனாக இளவளவனும் சம்மதிக்க, மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
செல்லும் போது இருந்த சூழ்நிலை திரும்பி வரும் போது முற்றிலும் மாறி இருக்க, மகிழுந்தில் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.
வீட்டிற்கு வந்தவுடன் அம்மு இறங்கி உள்ளே ஓட, அவளை பின்பற்றி உள்ளே செல்ல முயன்ற யாழினியை தடுத்த இளவளவன்,
“அங்க அவ்ளோ பேரு கண்ணு இருந்தும் குருடா, காது இருந்தும் செவிடா அந்த பிரச்சனையை வேடிக்கை மட்டும் பார்த்துகிட்டு இருக்கும் போது, டக்குனு இறங்கி ஹெல்ப் பண்ண பத்தியா உனக்கு பெரிய சலியூட்”
என்று அவளின் செயலின் சிலாகித்த இளவளவன் இராணுவ முறையில் வணக்கம் வைத்தவன்,
“ஆனா எல்லா தடவையும் இப்படி யோசிக்காம இறங்காத, அங்க கார்ட்ஸ் சரியான டைம்க்கு வரலைன்னா, நானும் ஹெல்ப்கு இல்லைனா, உனக்கு தான் ஆபத்தா முடிஞ்சி இருக்கும், புரியுதா”
என்று சொல்ல, ஏதோ யோசனையில் இருந்த யாழினி பெயருக்கு தலையாட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
சற்று முன்பு இளவளவன் சொன்ன
‘கண்ணு இருந்தும் குருடா, காது இருந்தும் செவிடா’
என்ற வாசகமே யாழினியின் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தது.
‘எல்லாம் நல்லா இருந்தும் சும்மா வேடிக்கை பார்த்த அவங்களை விட, குறை இருந்தும் தட்டி கேட்ட நான் எந்த விதத்தில் அவங்களை விட குறைந்து போயிட்டேன்’
‘இப்படி எப்போதும் தன்னை பத்தி மட்டுமே சுய நலமா யோசிக்கிற மக்கள் தானே சமுதாயம்’
‘இப்படிப்பட்ட சமுதாயம் என்னை தாழ்வா, கிண்டலா, கேலியா பார்க்கும்னு பயந்தா, நான் இத்தனை நாள் இந்த அறைக்குள் அடைஞ்சி கிடந்தேன்’
‘முதல்ல அவங்க எல்லாம் எனக்கு யாரு, அவங்க என்னை பத்தி நினைக்கிறதை பத்தி எல்லாம் நான் ஏன் கவலைப்படணும்’
‘என்ன பண்ணாலும், எப்படி இருந்தாலும் கிரிட்டிஸஸை பண்ண தான் போறாங்க, ஹெல்ப் பண்ண போறது இல்லை, அப்படிப்பட்ட சமுதாயத்துகாக என்னோட வாழ்க்கையை நான் ஏன் வாழாம இருக்கணும்’
என்று நீண்ட யோசனையின் பயனாய், அவள் செய்த தவறு நடு மண்டையில் நச்சென்று உரைக்க, யாழினியின் அகத்தின் இருந்த இருளும் விலக ஆரம்பித்தது.
மோகனம் இசைக்கும்………………

Advertisement