Advertisement

யாழினியின் உறக்கம் அன்று மாலையில் இருந்து, அடுத்த நாள் காலை வரையிலும் நீள, அவளின் பொழுது விடிந்த பிறகும் கூட, அவளின் அப்பாவின் நிலை அவளை சென்றடையவே இல்லை.
அங்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட ரவிச்சந்திரனோ, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அந்த அறையின் எதிரில், சுவரில் சாய்ந்து நின்றிருந்த லீலாவதியோ, சிகிச்சை பிரிவின் வாசலையே வெறித்தபடி நின்றிருந்தார்.
மருத்துவர் வந்து,
“உங்கள் கணவர் பூரண நலம்”
என்று சொல்லும் கணத்திற்காக, உயிரை கண்களில் தேக்கி வைத்து கொண்டு காத்திருந்தார் லீலாவதி.
யாரையேனும் துணைக்கு அழைக்க வேண்டும் என்பதோ, தன் கையில் சுத்தமாக பணம் இல்லை என்பதோ, தன்னுடன் வந்த ஓட்டுநர் துணையாக தள்ளி நிற்பதோ, அவரின் கருத்தில் பதியவே இல்லை.
இப்படி அப்படியுமாய் நரகமாய் கழிந்த சில மணி நேரத்திற்கு பிறகு, வெளியில் வந்த தலைமை மருத்துவரும், ரவி சந்திரனும் நண்பருமான மனோகரன்,
“மைல்டு அட்டாக் லீலாவதி, இப்போ நல்லா இருக்கான்”
என்று சொல்ல, லீலாவதியோ “மைல்டு அட்டாக்” என்ற வார்த்தையிலே திகைத்து நின்று விட்டார்.
கணவரையும், மகளையும் மட்டுமே அச்சாக கொண்டு சுழலும் அழகிய சிறிய உலகம் அவருடையது.
இன்று திடிரென கணவர் பேச்சு, மூச்சின்றி சயனித்திருக்க, என்ன செய்வது, என்ன கேட்பது, என்ன சொல்வது என்று புரியாத நிலை.
மனதை வருத்தும் துன்பம் கொடியது என்றால், அதை தனந்தனியாக எதிர்கொள்ள நேர்வது, அதை விட கொடியது.
லீலாவதியின் திகைத்த நிலமை மனதை கனக்க செய்ய, மனோகரன் கரிசனதுடன்,
“என் கூட வாமா லீலாவதி”
என்று தனது அறைக்கு அழைத்து சென்றவர், முதலில் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.
இன்னமும் பதற்றத்தில் நடுங்கிய கையால் பிரயத்தனபட்டு, அந்த கண்ணாடி குவளையை பிடித்து, வெகு சிரமத்துடன் நீரை பருகினார் லீலாவதி.
அவர் அருந்தி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவரான அவர்,
“ரவிக்கு இப்போ ஒரு பிரச்சனையும் இல்ல, அவன் நல்லா இருக்கான், இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும், அவனுக்கு கான்ஷியஸ் வந்ததும் நீ போய் பார்க்கலாம்”
என்று மீண்டும் ஒருமுறை அவரின் கணவனின் நலத்தை நிறுத்தி நிதானமாக, அதேநேரம்சற்று அழுத்தமாக சொன்னார்.
தான் சொல்லியதை, லீலாவதி புரிந்து கொள்ள சிறிது காலாவகசம் கொடுத்தவர், தொடர்ந்து,
“பிஸினஸ்ல ரீசெண்ட் அஹ எதும் பிராப்ளமா, அதான் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி……”
என்று முடிக்காமல் இழுக்க, கணவரின் மனஅழுத்தம் தான் இந்த நிலைக்கு காரணம் என்பதில் லீலாவதி இரண்டாவது முறையாக திகைத்து பார்க்க, மீண்டும் அவரே பொறுமையாக,
“லாஸ்ட் இயர் ஹெல்த் செக்-அப்கு வரும் போது கூட நல்லா தானே இருந்தான், என்ன பிரச்சனைமா அவனுக்கு”
என்று காரணத்தை அறிய முற்பட்டு வினவ, சட்டென கண்களில் திரண்ட கண்ணீருடன் அவரை பார்த்த லீலாவதி,
“அவருக்கு யாழினி பத்தின கவலை தான் டாக்டர்”
என்று மென்குரலில் சொல்ல, ஏற்கனவே யாழினியின் நிலை அறிந்து இருந்த அவர், ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
அவருக்கும் அந்நாள் நினைவு போலும்.
அன்று யாழினியை இந்த மருத்துவமனைக்கு தானே தம்பதியினர் அழைத்து வந்து இருந்தனர்.
சிறகொடிந்த சிறு பறவையென அன்று யாழினி கதறியது, அவருக்கு இன்றும் நினைவில் இருக்கிறதே.
இயலாமையின் வெளிப்படையாய் ஒரு பெரு மூச்சை வெளியிட்டவர், லீலாவதியை பார்த்து,
“யாழினி எப்படி இருக்கா”
என்று கேட்க, மிகுதியாக உற்பத்தியான கண்ணீரை, புடவை தலைப்பில் துடைத்து கொண்ட அவரோ,
“யாழினி ரூம் அஹ விட்டு வெளிய வரதே இல்லை டாக்டர், இந்த ஒன்னரை வருஷத்துல அதிகபட்சம் நாலு தடவை ரூம் அஹ விட்டு வெளிய வந்து இருப்பா அவ்ளோ தான்”
என்று சொல்ல, யோசனையுடன் அவரை பார்த்த மருத்துவரோ,
“நம்ப ஹாஸ்பிட்டல சைக்காட்ரிஸ்ட் கிட்ட வேணா அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கலாமா”
என்று ஒருவேளை மனது விட்டு பேசினால், யாழினியின் மனநிலையில் மாற்றம் இருக்குமோ என்று நம்பிக்கையில் கேட்க, லீலாவதியோ பதறி,
“அது எல்லாம் வேண்டாம் டாக்டர்”
என்று தடுக்க, மருத்துவரால் லீலாவதியின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
இருபத்தியோராம் நூற்றாண்டு என்ற போதிலும், இன்றளவும் மனநல மருத்துவரை அணுக, மக்கள் மனதில் ஏக தயக்கம் தானே.
எங்கே மனநல மருத்துவரை அணுகினாலே, “பைத்தியம்” என்ற பட்டம் கொடுத்து விடுவார்களோ என்ற பயம், மக்களிடம் இருக்கிறது தானே.
அதுவும் தன் சிறுபெண்ணுக்கு எனும் போது, ஒரு தாயாக சமுதாயத்தை பற்றிய அவரின் பயம், அவருக்கு நன்கு புரிந்தது.
ஏற்கனவே நொந்து போய் இருக்கும் அவரை, இதற்குமேல் இந்த நிலையில் கட்டாயப்படுத்த மனோகரனும் விரும்பவில்லை.
எனினும் ரவிச்சந்திரன் உடல்நிலை சரியான பிறகு, இதைப்பற்றி நண்பனிடம் பேச வேண்டும் என்று குறித்து கொண்டார்.
நேரம் இரவை நெருங்கி கொண்டிருக்க, நிலைமையை விளக்கும் விதமாக,
“ரவி இன்னைக்கு நையிட் அப்சர்வேஷன்ல இருக்கிறது பெட்டர்மா, நீ அவன் விழிச்சதும் பார்த்துட்டு வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வரியா”
என, அவரின் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்து இருந்த போதிலும் கேட்க, அவர் நினைத்த மாதிரியே லீலாவதியும்,
“இல்ல, இல்ல டாக்டர் நான் வீட்டுக்கு எல்லாம் போகல, இங்க ஹாஸ்பிடலயே இருக்கேன்”
என்று சொல்ல, அவர் இங்கு மருத்துவமனையில் தனினையில் இருக்க வேண்டுமே என்று கவலையுற்ற மனோகரன்,
“தனியா எப்படி இருப்பீங்க, துணைக்கு யாரையாவது வர சொல்றிங்களா, இல்லனா என்னோட வைப் அஹ வேணா வர சொல்லட்டுமா”
என்று நண்பனின் குடும்பம் மீது கொண்ட அக்கறையில் கேட்க, லீலாவதியோ,
“இல்ல வேண்டாம் டாக்டர், அவங்களுக்கு எதுக்கு சிரமம், நான் பார்த்துகிறேன்”
என்றவர், மீண்டும் ஒருமுறை கணவனின் நலத்தை உறுதி செய்து கொண்டு வெளியே வந்தார்.
அவசரத்தில் கையோடு எடுத்து வந்திருந்த, கைபேசியை எடுத்து ஆவுடையப்பருக்கு தான் அழைத்தார்.
“அண்ணா”
என்று ஆரம்பித்தவருக்கு அப்படி ஒரு அழுகை. இவரின் அழுகையில் அந்த பக்கம் ஆவுடையப்பர் பதற, அவரிடம் இருந்து கைப்பேசியை பறித்தார் அபிராமி அம்மையார்.
லீலாவதியின் அழுகையால் பாதிக்கப்படாமல், பதற்றப்படாமல், கொஞ்சம் மிரட்டலாக பேசி, அவரின் அழுகையை மட்டுப்படுத்தி, அவரிடம் இருந்து விஷயத்தை வாங்கி இருந்தார் அபிராமி அம்மையார்.
ரவிச்சந்திரனுக்கு உணவு எல்லாம் மருத்துவமனையில் தான் என்பதால், லீலாவதிக்கு மட்டும் எளிதில் செரிக்க கூடிய உணவு மற்றும் குடிக்க சூடாக தேநீர் என வேலையாட்களை தயாரிக்க பணித்தார் அபிராமி.
அதற்குள் ஆவுடையப்பரையும், இளவளவனையும் உடைமாற்றி தயாராக சொன்னவர், பெரிய தொகை ஒன்றையும், முன்னேற்பாடாக எடுத்து கொண்டார்.
அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் ஓட்டுநர் மகிழுந்தை எடுக்க, மூவரும் மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர்.
ஆவுடையப்பர் கடைசியாக ரவிச்சந்திரனை பார்த்தபோதே, அவர் சோர்ந்து இருந்ததை குறிப்பிட்டு வருத்தப்பட, முன்னால் அமர்ந்து இருந்த இளவளவனின் எண்ணம் முழுக்க யாழினி தான்.
யாழினியை பற்றி அவனின் தாயார் சொன்ன தகவல்கள் எல்லாம் திரைப்படம் போல கண் முன் ஓடியது.
ஒரு பக்கம் அவள் மீது அளவுக்கு அதிகமான காதல் இருந்த போதிலும், இன்னொரு பக்கம் கொஞ்சம் கோபமும் கழன்றது.
இப்படி இருவேறு மனநிலையில் இளவளவன் மருத்துவமனை வந்து சேர, அங்கு லீலாவதியோ, நிராதரவாக அந்த பெரிய வராண்டாவில் தன்னந்தனியே
நின்றிருந்தார்.
அவரின் நிலை கண்டு இளவளவன் திகைத்து பின்தங்கிய, அதற்குள் அவனின் பெற்றோர் லீலாவதியை நெருங்கி இருந்தனர்.
அபிராமியை கண்டதும் அவரின் தோளில் சாய்ந்து லீலாவதி அழுது ஆறுதல் தேட, ஆண்கள் இருவரும் அமைதியாக நின்றனர்.
இதற்குள் ரவிச்சந்திரனின் நலத்தை மருத்துவரிடம் நேரில் கேட்டு உறுதி செய்து கொண்டு, சிகிச்சைக்கான தொகையையும் செலுத்திவிட்டு வந்தான் இளவளவன்.
இவர்களை பார்த்ததும் கொஞ்சம் தெம்பு பிறக்க, ஓரளவு இயல்புக்கு திரும்பி, கண்ணீர் குறைந்ததும் தான் இளவளவனை கவனித்தார் லீலாவதி.
அவனை கண்டதும், அவரின் கண்கள் அன்பை பொழிய, அவனின் அருகில் சென்று, பாசத்துடன் அவனின் தலையை தடவி கொடுத்தவர்,
“எவ்ளோ பெரியவனா வளர்ந்துட்டடா கண்ணா”
என, அன்று போல் இன்றும், அவரின் பாசத்தில் இளவளவன் உருகி தான் போய்விட்டான்.
அவரை பார்த்து மென்மையாக சிரித்தவன், அழுது, அழுது சோர்ந்து போய் நின்றிருந்த லீலாவதியை அருகில் இருந்த இருக்கையில் கைபிடித்து அமர வைத்தான்.
இளவளவனிடம் ஆர்வமாக பேச நினைத்து வாயை திறந்தவரை, தன் வாயில் கைவைத்து “மூச்” என்று கண்களை உருட்டி அமைதியாய் இருக்க சொல்ல, அவனின் செய்கையில் இத்தனை நேரத்தில் லீலாவதியின் முகத்தில் புன்னகையின் சாயல்.
பின்பு தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த, தேநீரை கோப்பையில் வார்த்து அவரிடம் குடிக்க கொடுத்தான்.
அவரோ மறுப்பாக தலையசைக்க, இளவளவனோ அவரின் மறுப்பை எல்லாம் பொருட்படுத்தாமல், கோப்பையை கையில் திணித்தான்.
இளவளவனின் கண்கள் காட்டிய கண்டிப்போ அல்லது அவனின் குடும்பம் அங்கு இருப்பதால் விரவிய மெல்லிய தைரியமோ, கோப்பையை வாயில் வைத்தார் லீலாவதி.
இடைவிடா அழுகையில் வறண்டு போய் இருந்த தொண்டைக்கு, அந்த இளம்சூடான பானம் இதமாக இருக்க, அமைதியாக குடிக்க ஆரம்பித்தார்.
அவர் அதை அருந்திய இடை வெளியில், இவருடன் இத்தனை நேரம் துணைக்கு நின்றுந்த அவரின் மகிழுந்து ஓட்டுனருக்கு நன்றி சொல்லி, அவரை வீட்டிற்கு செல்ல சொல்லி அனுப்பி வைத்தான் இளவளவன்.
லீலாவதி தேநீர் அருந்தி முடிக்கவும், “ரவிச்சந்திரன் கண்விழித்து விட்டார்” என செவிலியர் வந்து சொல்லவும் சரியாக இருந்தது.
ரவிச்சந்திரன் இருப்பது தீவிர சிகிச்சை பிரிவு என்பதால், முதலில் லீலாவதி சென்று பார்த்து கண்ணை துடைத்தபடி வர, அவரை தொடர்ந்து ஆவுடையப்பர் மட்டும் பார்த்துவிட்டு வந்தார்.
கணவனின் நலத்தை கண்களால் கண்டு உறுதி செய்த பிறகு, பெருமளவு இயல்பு திரும்பி இருந்தார் லீலாவதி.
மருத்துவமனையில் தங்க, ஒரு அறை கொடுத்து இருக்க, இரவு தான் லீலாவதிக்கு துணை இருப்பதாக உரைத்து, தன் பெற்றோரை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் இளவளவன்.
கொண்டு வந்திருந்த உணவை லீலாவதியை, அதட்டி உருட்டி உண்ண வைத்து, இளவளவனும் உண்டதை உறுதி செய்த பிறகே அபிராமி, ஆவுடையப்பர் தம்பதியினர் வீட்டிற்கு கிளம்பினர்.
இரவு முழுவதும் தீவிர சிகிச்சை பிரிவின் வெளியிலே காவல் இருக்க சித்தம் கொண்டது போல, அமர்ந்து இருந்தார் லீலாவதி.
தான் இங்கு இருப்பதாக சொல்லி, அவருடன் போராடி, சிலமணி நேரமாவது ஓய்வெடுக்குமாறு சொல்லி, அறைக்கு அனுப்பி வைத்தான் இளவளவன்.
ரவிச்சந்திரனின் உடல் இரவு முழுவதும் சீராக இருக்க, அடுத்தநாள் காலை, அவரை தீவிர சிகிக்சை பிரிவில் இருந்து, சாதாரண பிரிவிற்கு மாற்றினர்.
மருத்துவரை சந்தித்து, அவரின் நிலையை தெளிவாக அறிந்து கொண்ட இளவளவன், உடல் முழுவதும் ஒரு முறை பரிசோதனையும் செய்ய பணித்தான்.
எல்லா உடல் சார்ந்த ஆய்வுகளும் முடிந்து, எல்லாம் சீராக இருப்பதாக சொல்லி, அன்று இரவு அவரை வீட்டிற்கு செல்ல மருத்துவர்கள் அனுமதி வழங்கினர்.
மனதை அலைக்கழிக்காமல், சத்தான ஆகாரம் உட்கொள்ள சொல்லி, சில நாட்களுக்கு மருந்துகளும் எழுதி கொடுத்தனர்.
பெரிய மகிழுந்தை இளவளவன் ஓட்ட, ஆவுடையப்பர், அபிராமி தம்பதி சகிதம், ரவிச்சந்திரன், லீலாவதி தம்பதியினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ரவிச்சந்திரனை ஓய்வு எடுக்க சொல்லி அவரின் அறையின் விட்டுவிட்டு வெளியே வந்த இளவளவன், வீட்டை சுற்றி கண்களை ஓட்டினான்.
அந்த பெரிய வீட்டின் வரவேற்பரையை, யாழினியின் புகைப்படங்கள் தான் அலங்கரித்து இருந்தன.
அவள் எட்டு வயதில் தன் தோழியரோடு பட்டுபாவடை சட்டையில் மேடையில் அமர்ந்து பாடுவதில் ஆரம்பித்து, நடுநாயகமாக புடவையில் அமர்ந்து பாடுவது வரை முழுக்க, முழுக்க யாழினி தான்.
அவற்றை எல்லாம் நிதானமாக பார்வையிட்டு கொண்டிருந்த அவனின் சிந்தனை முழுக்க யாழினி தான்.
சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு, பெற்றோரோடு கிளம்பிய இளவளவன், அடுத்த இரண்டு நாட்கள் தீவிர சிந்தனையின் வசம் தான்.
தான் ஒரு முடிவுக்கு வந்ததும், பெரியவர்கள் நால்வரிடமும் தன் எண்ணத்தை சொல்ல, இருவர்,
“இது எல்லாம் சரியாக வருமா???”
என்று யோசனையுடன் பார்க்க, மற்ற இருவரோ,
“எல்லாம் சரியாகி விடுமா???”
என்று கண்களில் நம்பிக்கையை தேக்கி வைத்து அவனை பார்த்தனர்.
மோகனம் இசைக்கும்……………

Advertisement