Advertisement

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த யாழினியின் கண்களில் அந்நாட்களின் நினைவில் மெல்லிய நீர்ப்படலம்.
தன் சிறு வயதில் நடந்தவற்றில், கசப்பான நிகழ்வுகளை பற்றி, பெற்றோர் வெகு அரிதாய் பேசும் போது, கேட்டு அறிந்தது தான்.
ஆனால் அடிக்கடி இவர்கள் புதுவையில் இருந்த நாட்களும், அபி அத்தையும், மாமாவும், கண்ணாவும் இவர்களின் பேச்சில் இடம் பெறுவார்கள்.
பல இனிமையான நிகழ்வுகளை பற்றி பேசும் அந்த உரையாடல் எப்போதும், ‘இப்போது அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லையே’ என்ற வாசகத்துடனே தான் நிறைவு பெரும்.
ஆரம்ப காலத்தில் ரவிச்சந்திரனும் அவர்களை தேட செய்தார் தான். ஆனால் அன்றைய வசதிகளை வைத்து அவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.
யாழினி ஓர் அளவுக்கு நன்றாக வளர்ந்த பிறகு, அவர்களை பற்றி பேசும் போது,
“இப்போ தேடினால், அவங்களை ஈசியா கண்டு பிடிக்கலாம், ட்ரை பண்ணுங்களேன் அப்பா”
என்று சொல்ல அவளின் வாய் எல்லாம் பரப்பரக்கும், ஆனால் ஏதோ ஒன்று அவளை அதை செல்லவிடாமல் தடுக்கும்.
அந்த ஒன்று என்னவென்று, யாழினி இதுவரை அறியவேயில்லை.
இன்று அதை எல்லாம் நினைத்தபடி சாளரத்தின் அருகே நின்றிருந்த யாழினியின் மனம், ‘அந்த இம்சை’ இங்கு வந்ததில் இருந்து நடந்தவற்றை எல்லாம் மீண்டும் ஒருமுறை ஓட்டி பார்த்தாள்.
அன்று அவளுக்கு புரியாத பலதும், இன்று ‘அந்த இம்சை’ கண்ணாவாக இருப்பானோ என்ற கோணத்தில் யோசித்து பார்க்கும் போது, தெளிவாக புரிவது போல இருந்தது.
வெளியாட்கள் யாருமே வர அனுமதிக்கப்படாத தனது அறைக்கு, நினைத்த போது எல்லாம் அவன் வந்து சென்றது………
அதுவும் இல்லாமல், தன்னை மற்றவர்களை ஒரு சொல் சொல்ல விடாத பெற்றோர், இவன் தன்னை கண்டிப்பதை அறிந்தும் அமைதியாய் இருந்தது………
தன் சிகை அலங்காரம் முதற்கொண்டு, தன் அறை வரை, தன் விருப்பம், அவ்வளவு ஏன் அனுமதி கூட கேட்காமல் அவனே, அவன் விருப்பத்திற்கு முழுதாக மாற்றியமைத்தது…………
அப்பாவின் உணவு பழக்கத்தை சரி செய்ய வந்தாக சொல்லப்பட்டவன், அப்பாவை விட தன்னில் அதிகம் கவனம் செலுத்தியது, அதையும் தான் உணராத விதம் அரங்கேற்றியது………
என்று இத்தனை நாளில் இன்று தெளிவாக யோசித்தவளுக்கு, தன்னிடம் அவன் பேசியது எல்லாம் கடினமாக இருந்த போதிலும், அதனால் தான் தன்னில் இத்தகைய மாற்றம் என்பதும் தெளிவாக உரைத்தது.
அதோடு அன்று பெற்றோர் அறையில், கிட்டத்தட்ட தன்னை அணைத்து ஆறுதல் கூறியது………
என்று அன்று தான் முழுதாக உணராத நிகழ்வை இன்று நினைவு கூர்ந்தவளுக்கு, கன்னம் எல்லாம் சூடாவது போல இருந்தது.
அதை அன்று தான் வெகு இயல்பாக ஏற்று கொண்டதன் காரணமும், இப்போது புரிந்தார் போல இருந்தது………
இதற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல, அன்று இரவு முழுக்க இருவரும் ஒன்றாக வேலை பார்த்தது.
என்னத்தான் வரவேற்பறைஎன்ற போதும், நண்பனின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு ஆடவனுடன், தன்னை வேலை பார்க்க, பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு புரிந்தது.
அந்த ஆடவன் கண்ணனாக இல்லாத பட்சத்தில், மேற்கூறிய எதுவுமே சாத்தியம் இல்லை என்பதும் வெகு தாமதமாக புரிந்து தொலைத்து யாழினிக்கு.
அவனின் செயல் எதற்கும் தந்தை மறுப்பு சொல்லாததும், தாய் அவனிடம் காட்டும் பாசமும், தன் வீடு போல வெகு உரிமையாய் அவன் உலா வந்ததும், எதனால் என்றும் புரிந்தது.
அதோடு அன்று தான் ‘கண்ணா தான் ஸ்வீட்’ என்று சொல்லும் போது, அவன் குரும்புடன், ‘அப்போ நானும் தான் ஸ்வீட்’ என்று சொன்னதற்கான அர்த்தமும் விளங்கியது யாழினிக்கு.
இந்த வீட்டில் இளவளவனாக உலா வந்தவன் தான், தன் கண்ணா என்று புரிந்த நொடி, யாழினிக்கு அப்படி ஒரு அழுகை.
மிகுதியான மகிழ்ச்சியில் அழுதாலா………
அல்லது,
அன்று அவனை பார்க்காமலே சென்று விட்ட குற்ற உணர்ச்சியில் அழுதாலா………
இல்லை,
இத்தனை நாளாக தன் கண்ணா, தன்னுடனே இருந்தும், அவனை தான் உணரவில்லையே என்று நினைத்து அழுதாலா
அல்லது
இன்றைய தன் நிலையை நினைத்து அழுதாலா என்பது அவளுக்கு வெளிச்சம்.
நின்றிருந்த யாழினி அப்படியே கால்களை மடித்து, தரையில் அமர்ந்து, ஆற்றுவார், தேற்றுவார் யாருமின்றி அப்படி ஒரு அழுகை அழுதாள்.
அவனை முதல் முறை பார்க்கும் போதே, அவன் தன்னை தவறாக நினைப்பது பிடிக்காமல், யாரென்றே அறியாத அவனிடம் தன்னை விளக்க நினைத்தது……
தன்னை தவிர்த்து மற்றவருடன் அவன் சிரித்து பேசும் போது, அதை கண்டு அவனை திட்டி தீர்த்தது……
இத்தனை நாட்களில் பெற்றோரிடம் கூட தன் காயத்தை வெளிக்காட்டாத தான், அவனிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டது………
முன்பொழுதும் அவனை திட்டிக்கொண்டே இருந்த போதிலும், தோட்டகார தாத்தாவை போல, எந்த வித வித்தியாசமும் இல்லாமல், தன்னிடம் பழகும் அவனின் இயல்பை சிலாகித்தது……………
ஒரு நாள் அவனை காணா விட்டாலும், மனமும், கண்ணும் அவனின் தரிசனம் காண வேண்டி தவம் கிடந்தது………
என தன் மனம் முன்பே குறிப்பு காட்டியதை எல்லாம் உணராமல் மட்டியாய் இருந்ததை நினைத்து அழுதாள் யாழினி.
பருவ வயதின் தொடக்கத்தில் பார்த்த நெடு நெடுவென ஒல்லியாய் இருந்த கண்ணாவுக்கும், வாட்ட சாட்டமாய் வளர்ந்து நிற்கும் இளவளவனுக்கும் தோற்றத்தில், பருவம் தந்திருந்த பெரிய மாற்றமும் விளங்கியது.
அதோடு அவனின் வெளிநாட்டு வாசமும், தன் தாக்கத்தை, நடை, உடை, சிகை அலங்காரம் என்று அவனுள் புகுத்தி இருக்க, நிரம்ப மாறியிருந்தான் அவன்.
அதனால் தான் என்னவோ, உருவத்தை வைத்து, தன்னால் அவனை இத்தனை நாட்களில், அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று தோன்றியது யாழினிக்கு.
நீண்ட நேரமாக அழுது கரைந்த யாழினிக்கு, இளவளவன் தான் கண்ணா என்பதை, எல்லாரும் தன்னிடம் ஏன் உரைக்கவில்லை, என்ற கேள்வி மண்டையில் உதிக்க, விசுக்கென நிமிர்ந்து அமர்ந்தாள்.
வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு, மசமசத்து போயிருந்த மூளையை தட்டி எழுப்பி எவ்வளவு யோசித்தும், தன்னிடம் ஏன் மறைக்க வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும், அவளுக்கு பதில் கிடைக்கவே இல்லை.
ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், இல்லையென்றால் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிய, அவர்களாக சொல்லும் வரை,தான் தெரிந்து கொண்டதாக காட்டி கொள்ள வேண்டாம் என்ற முடிவு எடுத்தாள் யாழினி.
தான் தான் கண்ணா என்று அறிந்தால் யாழினி தன்னிடம் அழுது தஞ்சம் அடைவாள், தன்னுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்க மாட்டாள், தன்னுடைய கூட்டில் இருந்து வெளி வர மாட்டாள் என்பது தான் இளவளவனின் எண்ணமாக இருந்தது.
ஆனால் இன்று தன் கண்ணா வந்து விட்டான் என்று அறிந்ததும், யாழினிக்கு மனதில் அப்படி ஒரு நிம்மதி.
இனி எல்லாம் அவன் பார்த்து கொள்வான், தான் எதற்கும், எதை நினைத்தும் கலங்க வேண்டாம் என்பதாக ஓர் ஆசுவாசம்.
பாசத்தை கொட்டி வளர்க்கும் பெற்றோரிடம், அவர்களை காயப்படுத்தும் என்பதால் பகிர முடியாத தன் வலிகளை, பயங்களை தன்னை புரிந்து கொள்ளும், தன் கண்ணாவிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆனந்தம்.
கண்களை துடைத்து கொண்டு எழுந்த யாழினி, கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களுக்கு பிறகு, இலகுவான மனதுடன் உறங்க சென்றாள்.
யாழினி தான் செய்கையின் பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று இளவளவன் எதிர்பார்த்திருக்க, அவனே எதிர்பாராமல் அவன் யாரென்றே அவனவள் உணர்ந்திருந்தாள்.
இது எல்லாம் எதுவும் அறியாத இளவளவனோ, தன்னவளை போல தனது அறையில் சாளரத்தின் அருகே தான் நின்று கொண்டிருந்தான்.
மகன் திடிரென வந்ததில், பெற்றோர் இருவருக்கும், மகிழ்ச்சியோடு சேர்த்து, என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்த மகனின் தெளிவில்லாத முகமும், ஏதோ சரியில்லை என்பதையே கட்டியம் கூறிய போதும், அவனிடம் நேரடியாக என்னவென்று அவர்கள் கேட்கவில்லை.
அவனால் தீர்வு காண முடியாமல், தங்களின் அறிவுரை தேவைப்படும் போது, அவனே வாய் திறப்பான் என்பது அபிராமி அம்மையாரின் எண்ணம்.
இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, மகனின் முகம் தெளியாவிட்டால், என்னவென்று விசாரிக்க வேண்டும் என்பது ஆவுடையப்பரின் எண்ணம்.
இப்படியாக இருவரும் இளவளவனிடம் எதுவும் கேட்காமல், அவனுக்கு பிடித்த உணவு வகைகளை அபிராமி அம்மையார் செய்து கொடுத்தார்.
ஆவுடையப்பரோ தங்கள் நட்சத்திர விடுதியின், தற்போதைய செயல்பாடுகள் குறித்து அவனுடன் உரையாடினார்.
பகல் முழுவதும் பெற்றோருடன் செலவழித்ததில் மனதின் ஓரம் முடங்கியிருந்த, தன்னவளின் நினைவுகள் எல்லாம் இரவின் தனிமையில் பேயாட்டம் போட்டது இளவளவனுக்கு.
யோசனையுடன் நடைப்பயின்ற இளவளவனின் கண்கள், இதற்சியாக வானில் தனியே உலா வந்து கொண்டிருந்த மதியை பார்த்தது.
நிலவை பார்த்த இளவளவனின் மனம் அவனையும் அறியாமல்,
“புல் மூனா இருந்து இருந்தா, இன்னும் நல்ல அழகா இருந்து இருக்கும்”
என்று எண்ணமிட, அவனின் மனசாட்சியோ,
“ஏன் இப்படி கரைஞ்சி இருக்கிற பிறைநிலாவை உனக்கு பிடிக்கலயா”
என்று கேட்க, இளவளவனோ,
“அப்படி எல்லாம் இல்லை, எனக்கு நிலாவை பிடிக்கும், பௌர்ணமி நிலாவை ரொம்ப பிடிக்கும் அவ்வளவு தான்”
என்று ஏதோ யோசனையில் சொல்ல, அவனின் மனசாட்சியோ,
“நீ முழுசா இருக்கிற நிலவை தான் பிடிக்கும்ன்னு சொன்னதை கேட்டா, இப்போ இருக்கிற நிலா கஷ்டபடும் இல்ல”
என்று வருத்தத்துடன் சொல்ல, மறுப்பாக தலையசைத்த அவனோ,
“இதுல வருத்தப்பட என்ன இருக்கு, எப்படி இருந்தாலும் அது நிலா தானே, எந்த உருவத்தில் இருக்கிற நிலாவை பிடிச்சாலும், மொத்தமா பார்த்தா எனக்கு நிலாவை பிடிக்கும், அது தானே முக்கியம்”
என்று சொன்னவனின் முகம், சட்டென்று நிலவை விட பிரகாசமாக ஒளிர்ந்தது.
இப்போது நான் சொல்லியது அல்லவா தன் குழப்பத்திற்கும், வருத்ததிற்குமான விடை.
தனக்கு பிறைநிலவை விட முழு நிலவை பிடிப்பது போல, யாழினிக்கு அன்றைய கண்ணாவை பிடிக்கிறது.
இந்த பிறைநிலா தான் முழுநிலாவாக உருமாற்றம் கொள்கிறது என்று அறிந்த நான், நிலவை எப்போதும், எல்லா நிலையிலும் நேசிக்கிறேன்.
ஆனால் இளாவின் கடந்த காலம் தான் கண்ணா என்று அறியாத யாழினிக்கு, கண்ணனை மட்டும் பிடிக்கிறது.
நாளை இந்த இளாவின் செயலுக்கான காரணம் எல்லாம் உணரும் போது, கண்ணாவையும், அவனின் பிம்பமான இந்த இளாவையும் அவளுக்கு பிடிக்கும்.
யாழினிக்கு அந்த கண்ணாவை பிடித்தாலும், இந்த இளாவை பிடித்தாலும், மொத்தத்தில் அவளுக்கு பிடிப்பது தன்னை மட்டுமே அல்லவா…
இதில் இந்த நிலவை போல, நானும் வருத்தப்பட ஒன்றும் இல்லை தானே. எது தன்னை அவள் வெறுத்து விடுவாளோ என்று எண்ண வைத்தது.
தன்னவள் மீது தான் வைத்திருக்கும் அதிகபடியான காதல் தான் இப்படியெல்லாம், என்னை எனக்கே எதிரியாக கிறுக்கு தனமாக யோசிக்க வைக்கிறதோ, என்று நீண்டது இளவளவனின் சிந்தனை.
அன்றும் சரி, இன்றும் சரி அவள் விஷயத்தில் தான் ஏன் இப்படி சிறுபிள்ளை போல, சட்டென்று கோவித்து கொள்கிறோம் என்றும் அவனுக்கு புரியவில்லை.
தேவையில்லாததை எல்லாம் யோசித்து, தூக்கத்தை தொலைத்து, தன்னை தானே வருத்தி கொண்டு, கிளம்பி வந்ததை நினைக்கும் போது, அவனுக்கே சிரிப்பு வந்தது.
மனதில் இருந்த பாரம் எல்லாம் இறகாகி இலகுவாகி விட, நிம்மதியான, தெளிவான முகத்துடன் உறங்க சென்றான் இளவளவன்.
இருவருமே நிர்மலமான மனதுடன் உறங்க, இனி வரும் விடியல் எல்லாம் அவர்களுக்கு வசந்ததை தரும் என்று நம்புவோம்.
மோகனம் இசைக்கும்………………

Advertisement