Advertisement

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நடந்த வழக்கு ஒரு நாள் முடிவுக்கு வந்தது. நியாத்தின் பக்கம், ரவிச்சந்திரனின் பக்கம் வழக்கு தீர்ப்பானது.
பெரியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்க, சிரியவர்களோ பிரிவை எண்ணி கலங்கி கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் முறைகள் எல்லாம் முடிந்தவுடன், ஒரு நல்ல நாளில் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர் யாழினி குடும்பத்தினர்.
என்றோ ஒரு நாள் யாழினி இரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசையாய் சொல்லியிருக்க, புதுவையில் இருந்து சிதம்பரம் செல்ல இரயிலில் முன்பதிவு செய்தார் ரவிச்சந்திரன்.
பிரிவை பற்றி பெரிதாக தெரியாத போதும், இனி தினமும் கண்ணாவை பார்க்க முடியாது என்பதே, பத்து வயது யாழினிக்கு பெரும் கவலையாய் போயிற்று.
தனக்கும் வருத்தம் இருந்த போதிலும், பெரியவன் என்ற முறையில், அடிக்கடி தான் ஊருக்கு வந்து அவளை பார்ப்பதாக சொல்லி, பொறுப்பாக யாழினியை தேற்றினான், பன்னிரண்டு வயது இளவளவன்.
ஒரு வழியாக ரவிச்சந்திரன் குடும்பம் கிளப்பும் நாளும் விடிந்தது. யாழினிக்காக பரிசு வாங்கி வருவதாக மட்டும் சொல்லி, தன் சைக்கிளில் கிளப்பி சென்றான் இளவளவன்.
தாங்கள் கிளம்ப நேரம் நெருங்க, நெருங்க வாசலுக்கும், வீட்டுக்கும் பதட்டதோடு நடக்க ஆரம்பித்தாள் யாழினி.
அவர்கள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்துவிட, இன்னும் இளவளவன் வந்தபாடில்லை.
யாழினிக்கு கண்களில் கண்ணீர் நிறைய, எல்லாரும் எவ்ளோ சமாதானம் சொல்லியும், அவள் அமைதி அடையும் வழியை காணோம்.
செல்லும் இடத்தை சொல்லாமல் சென்ற மகனை நினைத்து பல்லை கடித்த ஆவுடையப்பர், அவனை தேடி தன் வேலையாட்கள் சிலரையும் அனுப்பி வைத்தார்.
செல்ல மருமகளின் கண்ணீர், அவருக்கு இனிக்குமா என்ன???
அவருக்கே அப்படி என்றால், மகளின் கண்ணீரை காண சகிக்காத ரவிச்சந்திரனோ, இரயிலை தவற விட்டாலும் பரவாயில்லை, மகளின் அழுகை நின்றால் போதும் என்ற முடிவில் அவளிடம்,
“அழாத யாழிமா, நாம கண்ணா வந்ததும் பார்த்துட்டு, பாய் சொல்லிட்டே ஊருக்கு போகலாம் என்ன”
என்று மகளை அணைத்து ஆறுதல் சொல்ல, லீலாவதியோ, அழும் மகளையும், அவளை கணவர் சமாதானபடுத்தும் அழகில், இருவரையும் முறையோ, முறையென்று முறைத்து கொண்டிருந்தார்.
அதுவரை அமைதியாய் இருந்த அபிராமி, சூழ்நிலையை கையில் எடுத்தவராக, யாழினியை தன் மடியில் அமர்த்தி, அவளின் கண்ணீரை துடைத்தவர்,
“யாழிமா, நீங்க அங்க போனாலும், நாங்க மூணு பேரும் உங்களை பார்க்க, அடிக்கடி அங்க வருவோம், ஸ்கூல் லீவ் விட்டா நீங்க இங்க வர போறீங்க, அப்புறம் எதுக்கு இப்படி அழுகை”
என்று அதையும், இதையும் சொல்லி சமாதானப்படுத்த, ஒரு வழியாக யாழினியின் அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டதே, தவிர முழுதாக நின்றபாடில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மருமகளை மகிழுந்தில் ஏற்றிய ஆவுடையப்பர், தானும் ஏறி உட்கார்ந்து, நண்பனுக்கு ஏறும் மாறு கண்ணை காட்ட, ஒரு வழியாக அவர்கள் அனைவரையும் சுமந்து கொண்டு கிளம்பியது, அந்த மகிழுந்து.
அவர்கள் கிளம்பிய பல நிமிடங்கள் கழித்தே திரும்பி வந்த இளவளவனுக்கோ, யாழினி சென்று விட்டாள் என்பதில், அப்படியொரு அதிர்ச்சி.
செல்லும் இடத்தை சொல்லாமல் சென்ற மகனை கண்டிக்க தயராக இருந்த அபிராமியோ, மகனின் பாவத்தில் சற்று இரக்கப்பட்டவராக, முதலில் அவனை சமாதானப்படுத்த எண்ணினார்.
யாழினி அவனுக்காக காத்திருந்ததையும், அழுததையும், தாங்கள் அனைவரும் சேர்ந்து அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததையும் விரிவாக சொன்னார்.
ஆனால் தாய் சொன்ன எந்த சமாதானமும், இளவளவனின் செவியை சென்று அடையவேயில்லை, அதை அப்போது அபிராமியும் உணரவேயில்லை.
கோவம், சோகம், ஏமாற்றம் என பலவகை உணர்வுகள் முகத்தில் தாண்டவமாட, எதுவுமே பேசாமல், கையில் இறுக்கி பிடித்த பரிசு பொருளுடன், தன் அறைக்குள் சென்று விட்டான்.
செல்லும் மகனை பார்த்த அபிராமியோ, யாழினி மீது மகன் கொண்ட பாசத்தை அறிந்தவர் அல்லவா, அதனால் அவனை தொந்தரவு செய்யாமல், அவனே சிறிது நேரத்தில் சரியாகி விடுவான் என்று விட்டு விட்டார்.
பருவ வயதில் தொடக்கத்தில் இருந்த இளவளவனுக்கோ,
“நான் அவளுக்காக பரிசு வாங்க சென்றிருக்க, அவளோ தன்னை பார்க்காமல், தனக்காக காத்திருக்காமல் சென்று விட்டாள்”
என்பது ஒரு பெரிய காயமாக, அவன் இளம் மனதில் ஆழமாக பதிந்து போயிற்று.
அந்த வயதிலே இளவளவனுக்கு யாழினி மீது காதல் என்று சொல்வது எல்லாம் அபத்தம். அது ஒரு வகையான உரிமை நிறைந்த பாசம் அவ்வளவே.
அந்த உரிமை தந்த கோவத்தில், தன் சிறுபிள்ளை தனமான கோவத்தில்,
“நீ தானே எனக்காக வெயிட் பண்ணாம போன, நீயா எப்போ என்ன பார்க்க வரியோ அப்போ தான், நான் உன்கிட்ட பேசுவேன், நானா உன்னை இனி பார்க்க வரவே மாட்டேன்”
என்று முடிவெடுத்தவன், பெரியவன் ஆன பின்னும், யாழினி விஷயத்தில் தான் எடுத்த முடிவை இளவளவன் மாற்றி கொள்ளவேயில்லை.
அவ்வப்போது யாழினியின் நினைவு இளவளவனுக்கு வரத்தான் செய்யும். ஆனால் தன் காயம் தந்த வலியால், தன் முடிவில் உறுதியாய் இருந்தவன், அவளை தேடவேயில்லை, தேட முற்படவுமில்லை.
யாழினியாக தான் முதலில் தன்னை தேடி வர வேண்டும் என்ற ஒரு சிறுபிள்ளை தனமான பிடிவாதம். அவள் மீது அவன் கொண்ட அளவில்லா பாசத்தால், விளைந்த பிடிவாதம் அது.
சிறுபிள்ளை தனம் என்று தெரிந்திருந்த போதிலும், அவன் அதை மாற்றி கொள்ள விரும்பவில்லை.
ஆனால் இத்தனை காலம் கடந்து யாழினியை காணொளியில் பார்த்ததும், அவளே தன்னை தேடி வந்ததாக நினைத்த இளவளவனுக்கு, அப்படி ஒரு ஆனந்தம்.
ஆனால் அதேநேரம் அவளை இனம் கண்டு கொண்ட நொடி, அவளின் மீது வெகுகாலம் இருந்த பாசம் எல்லாம், ஒரே வினாடியில் காதலாக மாறிய மாயம் எல்லாம், இளவளவனே எதிர்பார்க்காதது.
இளவளவனின் கோவம், ஏமாற்றம், அவனின் முடிவு என எதுவும் அறியாமல், விசும்பலுடன் சொந்த ஊரை நோக்கி பயணித்த யாழினிக்கோ, அங்கு ஒரு பெரிய அபாயம் காத்து கொண்டிருந்தது.
சிதம்பரத்தில் பெயர் பெற்ற கவரிங் மற்றும் தங்க நகைக்கடையை ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக நடத்தி வந்தனர்.
சொந்த ஊருக்கு வந்ததும், இத்தனை ஆண்டுகள் பூட்டி இருந்த வீட்டை சுத்தம் செய்து, மீண்டும் தங்கள் நகை கடையை புது பொலிவுடன் திறந்தார் ரவிச்சந்திரன்.
எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது போல தான் இருந்தது, திடிரென ஒருநாள் யாழினி காணாமல் போகும் வரை.
தங்களுக்கு தெரிந்த எல்லா இடத்திலும் தேடி கலைத்து, அழும் மனைவியை சமாதான படுத்தும் வழி தெரியாமல், மதானும் கண் கலங்கி, கடைசியில் காவல்துறையினரிடம் தஞ்சமடைந்தார், ரவிச்சந்திரன்.
ஒரு நாள் முழுக்க காவல்துறை நடத்திய தீவிர விசாரணையிலும், தேடுதல் வேட்டையிலும், சொத்து வழக்கில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த கோவத்தில், யாழினியின் பெரியப்பாவே அவளை கடத்தியது அம்பலாமானது.
மகளை காணாமல் தவித்த ரவிச்சந்திரனுக்கு, சொந்தமே சொத்துக்காக செய்த செயல், அவரின் வேர் வரை சென்று தாக்க பெரிதும் ஆடிபோனார் மனிதர்.
எந்த நம்பிக்கையில் பரம்பரை சொத்துக்ளை தன் தாத்தா, தன் அப்பாவிடம் ஒப்படைத்தாரோ, அதையே உடைக்க தீர்மானித்தார் ரவிச்சந்திரன்.
ஆம் மகளா, குடும்ப கவுரம், சொத்துக்காளா என்று பார்க்கும் போது, மகளின் தட்டே தாழ்ந்தது அவரின் தராசில்.
பெரிய வீட்டை மட்டும் விட்டுவிட்டு, மீதி அனைத்து சொத்துகளையும் ரகசியமாக, நம்பிக்கையான நண்பரிடம் விற்றார் ரவிச்சந்திரன்.
இதே ஊரில் இருந்து கொண்டு, எந்த நேரம் என்ன நடக்குமோ என்று உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ அவர் தயாராக இல்லை.
தன்னை குறி வைத்திருந்தால் கூட எதிர்த்து நின்றிருப்பார் ரவிச்சந்திரன். ஆனால் அன்று மகளை மீட்ட போது, கை, கால்களை கட்டபட்டு, இருட்டு அறையில் மகள் இருந்த தோற்றம், அவரை அடியோடு சாய்த்தது.
மயக்க மருந்தினாலும், பசியினாலும் யாழினி மயங்கி இருக்க, இருட்டு அறையினாலோ, கட்டி வைத்திருந்ததினாலோ, அவள் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்பது மட்டுமே ஆறுதலான விஷயம்.
ஊரை விட்டு செல்வது என்று முடிவு எடுத்த ரவிச்சந்திரனுக்கு எங்கு செல்வது என்று பெரும் யோசனை.
வழக்கின் போது அவர் புதுவையில் இருந்ததை அவரின் பங்காளி அறிவார், இப்போது இவர் இங்கு இருந்து மறைந்தால், அவர்கள் முதலில் தேடும் இடமாக புதுவையாக தான் இருக்கும்.
அதனால் அவர் மீண்டும் புதுவை செல்ல விரும்பவில்லை. பழி, பாவத்துக்கு அஞ்சாத இந்த பாதகர்களின் விஷயத்தில், நண்பனை இழுத்து விட ரவிச்சந்திரன் விரும்பவில்லை.
எனவே பலதும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர், சென்னைக்கு செல்வதென முடிவு செய்தார்.
தனக்கு தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என யாரும் அங்கு இல்லை, அதோடு அவ்வளவு பெரிய சென்னை பட்டினத்தில் தன்னை எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது என்பதால் அந்த முடிவை எடுத்தார் அவர்.
வீட்டிற்கு பலமான காவலை போட்டுவிட்டு, தான் மட்டும் ஒரு முறை சென்னை சென்று, தங்குவதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டு வந்தார் ரவிச்சந்திரன்.
அவர்களுக்கு சந்தேகம் வராமல், சொத்துகளை விற்ற செய்தி அவர்களை அடையும் முன்பு, பணத்துடனும், குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு விட்டார் ரவிச்சந்திரன்.
தன்னை இப்படி ஏதோ திருடன் போல, பெரும் பெயருடன் வாழந்த சொந்த ஊரை விட்டு, யாருக்கும் தெரியாமல் செல்லும் நிலைக்கு தள்ளிய சொந்தங்களை, அவர் பெரிதும் வெறுத்தார்.
அன்று ஊரை விட்டு வந்ததோடு சரி, இன்றளவும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவோ, அவர்களோடு உறவாடவோ அவர் விரும்பவேவில்லை.
வெளியாட்களின் பார்வைக்கு வீட்டையும் விற்று விட்டது போல தோற்றம் செய்து, மீதி சொத்துகளை வாங்கிய நண்பரின் வேலையாட்களை வைத்தே, இன்று வரை வீட்டை பாதுகாத்து வருகிறார் ரவிச்சந்திரன்.
சென்னை பட்டினம் வந்து, தனக்கு நன்கு தெரிந்த, தங்களின் பரம்பரை தொழிலான நகைக்கடை வைக்கவே உத்தேசித்தார் அவர்.
பராம்பரிய சொத்துகளை காப்பாற்றா முடியாத தன் வேதனையை, பரம்பரை தொழிலை செய்து தீர்த்து கொள்ள நினைத்தார் ரவிச்சந்திரன்.
கையில் பணத்திற்கும் குறைவில்லாமல் இருக்க, நல்ல இடத்தில் அந்த காலத்திலே ஓர் அளவுக்கு பெரிய நகை கடையையே திறந்தார் ரவிச்சந்திரன்.
ஓர் அளவுக்கு நிலைமை திடப்படும் வரையிலும் ரவிச்சந்திரனால் வேறு எதைப்பற்றியும் யோசிக்க முடியாவில்லை.
எல்லாம் ஓர் அளவுக்கு சரியானதும், சற்றே நிம்மதியாக மூச்சு விட ஆரம்பித்ததும், இதுவரை நடந்த எல்லாவற்றையும் நண்பனிடம் பகிரவும், தங்களின் புதிய முகவரியை கொடுக்கவும், நண்பனை தொடர்பு கொண்டவருக்கு பெரும் ஏமாற்றமே.
ரவிச்சந்திரன், ஆவுடையப்பரின் குடும்பத்தை புதுவையில் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர்களும் சென்னையில் தான் இருந்தனர், ஆனால் இரண்டு குடும்பங்களுமே அதை அப்போது அறியவில்லை.
ஆவுடையப்பர் புதுவையில் கடற்கரையோரம் உயர்தர தங்கும் விடுதியோடு இணைந்த, உணவகம் ஒன்றை நடத்தி வந்தார்.
புதுவையில் விஜயம் செய்யும் வெளிநாட்டவரை மையமாக கொண்டு இயங்கிய விடுதிக்கு, மக்கள் மத்தியில் நல்ல பெயரும் இருந்தது.
ரவிச்சந்திரன் குடும்பத்தை போதாதா காலம் சிதம்பரத்தில் வாட்டி எடுத்த போது, இங்கு ஆவுடையப்பர் குடும்பத்திற்கும் அதே நிலை தான்.
ஆவுடையப்பரின் விடுதியில் தங்கி இருந்த ஒருவர் தற்கொலை செய்து கொள்ள, விசாரணை அது இதுவென்று பெரிதும் அலைக்கழிக்கபட்டார் ஆவுடையப்பர்.
ஒரு வழியாக வழக்கை பிரச்சனை இல்லாமல் முடித்து திரும்பி பார்த்தால், இந்த வழக்கால் விடுதியின் பெயர், புகழ் என எல்லாம் மொத்தமாக ஆட்டம் கண்டுவிட்டது.
வருமானமும் கணிசமாக குறைய ஆரம்பிக்க, ஆவுடையப்பர் என்ன செய்வது என்று தெரியாமல், புரியாமல் பெரிதும் தவித்து போனார்.
வழக்கை முடிக்க முடிந்த அவரால், அதன் காரணமாக மக்கள் மத்தியில் எழுந்த வதந்திகளையோ, பயத்தையோ களைய முடியவில்லை.
தன்னால் ஆன மட்டும் முயன்று, முடியாமல் ஆவுடையப்பர் துவண்டு உட்கார, அபிராமி அம்மையார் தான் ஓர் உபாயம் சொன்னார்.
நீண்ட நாட்களாகவே, இவர்களின் விடுதி இருக்கும் இடத்தில் சொகுசு பங்களா கட்ட ஆசைகொண்டு, ஒரு பணக்காரர் இவர்களிடம் இடத்தை கேட்டு கொண்டிருந்தார்.
நிலைமையை பயன்படுத்தி அவர் தொகையை குறைக்க கூடும் என்ற போதும், அவரிடம் விடுதியை விற்றுவிட சொன்னார் அபிராமி அம்மையார்.
இது மாதிரியான தொழிலில் ஒரு முறை இப்படி கருப்பு புள்ளி விழுந்து விட்டால், மறுபடியும் நிமிர்வது என்பது குதிரை கொம்பு தான்.
எனவே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு, நிலமை கை மீறும் முன்பு, பிரச்சனையை சுமுகமாக முடிக்க முயன்றார் அவர்.
இரண்டு, மூன்று நாட்கள் தீவிரமாக யோசித்த ஆவுடையப்பருக்கும் அதுவே நல்ல யோசனையாக பட அவரும் அதற்கு ஒப்பு கொண்டார்.
விடுதியை விற்க முடிவு செய்தவுடன், பெரிய பூதாகரமான கேள்வியாக முன் நின்று மிரட்டியது, அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி.
மீண்டும் வேறு பெயரில், புதுமையாக விடுதி ஒன்றை கட்டி, மீண்டும் கொடிகட்டி பறக்க நினைத்த ஆவுடையப்பர், தீயாக இடம் பார்க்க ஆரம்பித்தார்.
ஆனால் மனதில் வெற்றி தீ எரிந்து கொண்டிருந்த ஆவுடையப்பருக்கு, புதுவையில் பார்த்த இடங்களில் எதுவுமே திருப்தியாக இருக்க வில்லை.
சிறு சிறு குறைகள் இருந்த இடத்தை கூட பரவாயில்லை, என்று சமரசம் செய்து கொள்ளவும் அவர் தயாராக இல்லை.
அப்போது ஒரு நாள் நண்பர் ஒருவர், சென்னையில் ஒருவேலையாக செல்ல, துணைக்கு ஆவுடையப்பரையும் அழைத்தார்.
புதுவையில் இருந்து சென்னை செல்லும் கடற்கரை சாலை, ஆவுடையப்பரை பெரிதும் கவர்ந்தது.
விடுதி ஒன்றை இந்த மாதிரி கடற்கரையில் கட்டினால், அது பெரிய அளவில் வெற்றி அடையும் என்று அவரின் உள்ளுணர்வு கூக்குரலிட்டது.
அதை புறக்கணிக்காதவர், நண்பருக்கு துணையாக வந்த வேலையோடு, விடுத்திகென இடத்தை பார்த்து தேர்வு செய்து விட்டே, புதுவைக்கு திரும்பினார்.
ஆவுடையப்பருக்கு அப்போது இருந்த எண்ணம் எல்லாம், எப்படியாவது மீண்டும் தொழிலில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் தான்.
இதை சரியாக புரிந்து கொண்ட அவரின் மனைவியாரும், தங்கள் வேரை விட்டு அகல வேண்டும் என்பது வருத்தம் தான் என்ற போதும், அதை துளியும் கணவரிடம் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
அபிராமியும் ஒப்புக்கொண்ட பிறகு, என்ன தடை இருக்க போகிறது. வெகு ஜோராக சென்னை கடற்கரை சாலையில், விடுதி கட்டடமாக எழும்ப ஆரம்பித்தது.
இங்கும் அங்கும் ஆவுடையப்பர் அலைய முடியாததால், தொழிலை தொடர்ந்து அவர்களின் குடும்பமும் சென்னைக்கு குடி பெயர்ந்தது.
நண்பனின் சிதம்பரம் முகவரி தான் தெரியுமே, எல்லாம் சரியானதும் தொடர்பு கொள்வோம் என்று ஆவுடையப்பர் நினைக்க, இதையே தான் ரவிச்சந்திரனும் நினைத்தார்.
ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயன்ற போது, சொல்லி வைத்தார் போல, அந்த நபர் அந்த முகவரியில் இல்லை, எங்கு சென்றார்கள் என்பதும் தெரியவில்லை என்ற தகவலே இருவருக்கும் பதிலாக கிடைத்தது.
அதன் பின்னர் எதிர்பாராமல் ஒரு நாள், பல கிளைகளை கொண்ட தங்கள் நகைக்கடையின் முக்கியஸ்தர்கள் கூட்டம் நடைபெற்ற நட்சத்திர விடுதியில், அதை மேற்பார்வையிட வந்த ஆவுடையப்பரை, ரவிச்சந்திரன் சந்தித்தது எல்லாம் விதியின் விந்தையே.
மோகனம் இசைக்கும்……………

Advertisement