Advertisement

யாழினி அறையில் இருந்து வந்திருந்த இளவளவனின் எண்ணம் முழுக்க தன் கையில் இருந்த விரலியிலும், அதில் தான் சேமித்திருந்த தகவலை சுற்றியும் தான் ஓடி இருந்தது.
இன்று யாழினியின் அறையில் மாற்றம் செய்து கொண்டிருக்கும் போது, பாதி வேலை முடிந்திருந்த போது அம்முவும் வந்து, அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
இளவளவனும் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க, அம்முவோ மகாராணி தோரணையில்,
“இதை இங்க வச்சா தான் நல்லா இருக்கும், எந்த லூசு அங்க வைக்க சொன்னது”
“இங்க என்ன மாரியம்மன் கோவில்க்கு புது ப்ராஞ் ஓபன் பண்ண போறீங்களா, இந்த கலர்ல ஸ்க்ரீன் போடுறீங்க,
என்று அவர்கள் செய்வது அனைத்தையும் குற்றம் சொல்லி கொண்டு,
“இந்த சோபாவை அங்க வைங்க”
“இந்த டிபாய்யை இங்க வைங்க”
என்று அவர்களை வேலை ஏவி கொண்டுமே இருந்தாள்.
இளவளவன் இல்லாமல் இருந்து இருந்தால், மற்றவர்கள் அம்முவை கடிந்து பேசியிருக்க கூடும்.
அவர்களை பொறுத்தவரை, அவளும் அவர்களை போல, இங்கு வேலை செய்யும் ஜெயாவின் மகள், அவ்வளவு தான்.
ஆனால் தங்கள் முதலாளியையே ஆட்டி வைக்கும் இந்த இளவளவனே, அவளின் அரட்டலை எல்லாம் புன்னகையுடன் பார்த்திருக்க, அவர்களும் வாயை மூடி இருக்க வேண்டிய நிலை.
இப்படியாக வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்க, யாழினியின் ஓவிய அறையில் திரைசீலை, இருக்கையின் உறைகள் எல்லாம் மாற்றி கொண்டிருக்கும் போது, அம்மு யாழினியின் கணினியை உயிர்ப்பித்து, என்னவோ செய்து கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த இளவளவன், அவளின் தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு,
“சாப்பிடுற பொருள் இல்லமா அது, எதுக்கு அதை இந்த உருட்டு உருட்டி கிட்டு இருக்க”
என்று கிண்டலுடன் கேட்க, அவன் கொட்டிய தலையை தடவி விட்டு கொண்ட அம்மு, சுணங்கி கொண்டே,
“அது எனக்கும் தெரியும் அறைவேக்காடு அண்ணா, அன்னைக்கு அக்கா இதுல தான் உட்கார்ந்து, ஏதோ பண்ணிகிட்டு இருந்தாங்க, அதான் என்னவா இருக்கும்னு……………”
என்று பேசி கொண்டே செல்ல, முதலில் அறைவேக்காடு என்பதில் கடுப்பாகி, பின் அண்ணன் என்ற வார்த்தையில் குளிர்ந்து போனான் இளவளவன்.
ஆனால் அம்மு சொல்லிய பிற்பாதி செய்தியில், எதையோ யோசித்தவனாக அம்மு பேசி முடிக்கும் முன்பே,
“நீ கொஞ்சம் இப்படி வா அம்மு”
என்று அவளின் பேச்சை இடைவெட்டி, அவளை விலக்கி நிறுத்தியவன், கணினி முன் அமர்ந்து எதை, எதையோ தட்டினான்.
சிறப்பாக எதுவும் இல்லாமல் போக, லேசாக முகம் சுண்ட எழுந்திருக்க போனவனின் கவனத்தை கவர்ந்தது ஒரு செயலி.
அதை திறந்து பார்த்தவனுக்கு அவனின் கண்களையே நம்ப முடியவில்லை.
இத்தனை நாட்களாக யாழினி, வெறுமனே அறையில் அடைந்து கிடக்கிறாள் என, அவன் உட்பட அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் அவளோ தன் பிரியமான இசையில் கழிக்க முடியா நேரத்தை எல்லாம், இதில் செலுத்தி இருக்கிறாள்.
அப்போது தான் இளவளவனுக்கு, யாழினி இந்த படிப்பை அவளே விரும்பி தேர்ந்தெடுத்தாள், என்று லீலாவதி சொன்னதும் நினைவுக்கு வந்தது.
ஆனால் அப்போது எது யாழினியை செலுத்தியதோ, விருப்பட்ட பாடம் என்ற போதிலும், இளங்கலையோ, முதுகலையோ எடுக்காமல், பட்டயப் படிப்பை (Diplomo) தேர்ந்தெடுத்திருந்தாள்.
அதனால் தான் இன்று அவளிடம் பட்டம் என்று ஒன்று இருக்கிறது. அதை நினைத்து ஒரு பெருமூச்சு விட்டவன், அம்முவை தன்னுடைய அறைக்கு அனுப்பி, அங்கிருந்து விரலியை எடுத்து வர சொன்னான்.
அதேநேரம் இணையத்தில், எப்படி அந்த செயலியில் இருந்து, விரலியில் நகல் எடுக்க வேண்டும் என்று பார்த்தவன், யாழினியின் கணினியில் இருந்ததை, தன் விரலியில் நகல் எடுத்து கொண்டான்.
தன் செயலை எல்லாம் தன்னருகில் நின்று புரியாமல் பார்த்து கொண்டிருந்த அம்முவை, வெகு குதூகலத்துடன் பார்த்தவன்,
“தேங்க்யூ சோ மச் அம்மு குட்டி”
என்று அவளின் தலையை கலைத்து விட, அதில் கடுப்பாகி அவள் துரத்த, வேலை செய்தவர்கள் நின்று இவர்களை வேடிக்கை பார்த்தது எல்லாம் தனி கதை.
நகல் எடுக்கும் அவசரத்தில் முன்னர் கவனித்து பார்க்காமல் இருந்து இருக்க, இப்போது மீண்டும், விரலியை மடிக்கணினியில் இணைத்து, நிதானமாக எல்லாவற்றையும் பார்வையிட ஆரம்பித்தான் இளவளவன்.
அப்போது தான் மெல்லிய குரலில் யாழினி பாடும் ஓசை கேட்டது அவனுக்கு.
பார்த்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்தவன், கைப்பேசியை எடுத்து கொண்டு சாளரத்தை நெருங்கினான்.
அன்று தான் விழுந்து புதையல் எடுத்தது எல்லாம் கண் முன் படமாக ஓட, கவனமாக சாளரத்தின் மேல் அமர்ந்து, தன்னவளின் இனிய குரலை பதிவு செய்தான்.
‘கடவுள் தந்த அழகிய வாழ்க்கை’
என்று பாட ஆரம்பித்த யாழினியின் குரலில், எதையோ நினைத்து ஏங்கும் பாவம்.
அந்த பாடல் முழுக்க தன்னம்பிக்கை நிறைந்த வரிகள் தான் என்ற போதும், அதை பாடியவளின் குரலில் தான் அது மருந்துக்கும் இல்லை.
‘வாழ்க்கை எதுவரை அழைக்கிறதோ, அது வரை நாமும் சென்றிடுவோமே’
என்ற வரிகளை தான் உணர்ந்து வருத்தம் இழையோட பாடினாள் யாழினி. அந்த பாடலில் வருவது போலவே, அந்த வரியில் நிறுத்தியும் விட்டாள்.
கீழே பாட்டை கேட்டு கொண்டிருந்த இளவளவனுக்கும், அந்த பாடலில் வரும் நடிகரை போல தொடர்ந்து பாட ஆசை தான்.
பாட வாயையும் திறந்து விட்டான் தான், ஆனால், தான் பாடினால், கழுதைகள் கதவை தட்டும் என்பது நடுமண்டையில் நச்சென்று உரைக்க, அப்படியே வாயை இறுக்கி மூடி கொண்டான்.
அன்று போல இன்றும் யாழினி குரலில் சோகம் தான். ஆனால் இன்று அவள் உணர்ந்து பாடிய வரிகள் இளவளவனுக்கு ஒரு தெம்பை தந்தது.
எல்லாம் வெறுத்து இருந்தவள், இன்று தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், வாழ்க்கையின் ஓட்டத்தோடு பயணிக்க தயாராகி விட்டாளே.
இதுவே ஒரு முன்னேற்றம் தானே.
யாழினியின் பாடலும், அவளின் அறையில் சேகரித்த தகவலும், இளவளவனுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத நம்பிக்கை ஒளியை ஏற்ற, அவன் நிம்மதியாக உறங்க சென்று விட்டான்.
ஆனால் உறக்கம் வராமல் வெகு நேரம் புரண்டு படுத்த யாழினி, தூக்க மாத்திரையின் உதவியை நாடி செல்ல, அவள் வைத்த இடத்தில் மாத்திரை இல்லை.
இது யாருடைய வேலையாய் இருக்கும் என்பது துளியும் சந்தேகம் இல்லாமல்
புரிந்த யாழினிக்கு, அந்த அர்த்த இராத்திரியில் கோவத்தில் பல்லை கடிப்பதை தவிர வேறு வழியில்லை.
“இம்சை, இம்சை”
என்று அவனை வெகுவாக திட்டிக்கொண்டே சென்று படுக்கையில் விழுந்தவள், எப்போது உறங்கினால் என்று அவளே அறியவில்லை.
பின்பு பின்காலை பொழுது யாழினி எழுந்து கிளம்பி கீழே செல்ல, ரவிச்சந்திரன் உணவு மேசையில், முகத்தில் ஒருவித பதட்டத்துடனும், எதிர்பார்ப்புடனும் இவளுக்காக காத்திருந்தார்.
உடல்நிலை சரியில்லாதவர் சரியான நேரத்திற்கு உணவு உண்டு, மாத்திரை எடுக்காமல் தனக்காக காத்திருப்பதில் துளிர்விட்ட குற்றவுணர்வில் அவரை நெருங்கிய யாழினி,
“சாரிப்பா நயிட் தூங்க லேட் ஆகிடுச்சு”
என்று மன்னிப்பு வேண்ட, உணவு பரிமாறி ஆரம்பித்த லீலாவதி,
“அதனால் என்னடா பரவாயில்லை, நானும் எவ்ளோ சொன்னேன், அவ பொறுமையா தூங்கி எழுந்து வரட்டும் நீங்க சாப்பிடுங்கனு, எங்க உங்க அப்பா கேட்டா தானே”
என்று அவரும் அவர் பங்குக்கு ரவிச்சந்திரனை வைது வைக்க, அவரோ எதையும் காதில் வாங்காமல், புன்னகை முகத்துடனும், பாசத்துடனும் மகளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார்.
முகம் முழுக்க புன்னகையுடன் இருக்கும் தந்தையை பார்த்த யாழினிக்கு, அவரின் பதற்றத்திற்கான காரணம் புரிந்து தான் இருந்தது.
தன்னுடைய ஒரு நாள் விஜயம், ஒரே நாளோடு முடிந்து விடுமோ என்ற அவரின் கவலையும், பயமும் புரிந்தது.
தன்னை காணும் போது எல்லாம் பெற்றோர் வருந்துவது பிடிக்காமல், தான் தனித்திருக்க, தன் முடிவால் அவர்களை அதிகம் வருத்தி இருக்கிறோம் என்று தமாதமாகவே புரிந்தது யாழினிக்கு.
குற்றவுணர்வு, வருத்தம், தன்னிரக்கம் என பல வகையான உணர்வுகளில் இருந்த யாழினி, முயன்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு, அவளின் தாயிடம்,
“அம்மா நாளையில் இருந்து, நீங்களே வந்து என்னை ஏழு மணிக்கு எல்லாம் எழுப்பி விட்டுடுங்க என்ன”
என்று சொல்ல, ‘நீயே’ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த லீலாவதி சட்டென்று சுதாரித்தவராக, பின்பு
“சரிடா, எப்படி டான்னு வந்து எழுப்பிடுறேனு மட்டும் பாரு”
என்று சிரிப்புடன் சொல்ல, பின்பு அவர்கள் மூவரும் சின்ன, சின்ன பேச்சுகளுடன் உண்டு முடித்தனர்.
அன்றைய நாளும் யாழினிக்கு அவளின் வழக்கம் போல பெற்றோருடன் கழிய, அவள் அன்றும் இளவளவனை எங்கும் பார்க்கவில்லை.
ஆனால் யாழினி அறியாத ஒன்று, அவள் கீழே இறங்கி வரும் முன்னரே ரவிச்சந்திரனுடன் சில விஷயங்களை கேட்டு, பேசி தெளிவுப்படுத்தி கொண்டவன், வேலை இருப்பதாக சொல்லி வெளியே சென்று விட்டான்.
யாழினியின் வேலையை எடுத்துக்கொண்டு தான், ரவிச்சந்திரன் சொன்னவர்களை பார்க்க சென்றிருந்தான் இளவளவன்.
ரவிச்சந்திரன் ஏற்கனவே கைப்பேசியில் அழைத்து இளவளவனின் வரவு பற்றி சொல்லியிருக்க, அங்கு இளவளவனுக்கு சிறப்பான கவனிப்பு.
அதோடு யாழினியின் வேலைப்பாடுகள் மிகவும் தனித்துவமாக இருப்பதாக சொல்லி அவர்கள் உண்மையான வியப்புடன் புகழ, தன்னையே பாராட்டியது போல, அப்படி ஒரு பூரிப்பு இளவளவனுக்கு.
முன் அனுவபவம் இல்லாததால் யாழினி செய்திருந்த சில தவறுகளை சுட்டி காட்டி, அவற்றை சரி செய்யும் வழிகளையும் அவர்கள் சொல்ல, அதை எல்லாம் கவனமாக குறித்து கொண்டான் இளவளவன்.
சென்ற வேலையை முடித்து விட்டு இளவளவன் வீட்டிற்கு திரும்ப, இரவாகி விட்டது.
நேற்று முழுக்கவும் தன்னவனுடன் சிறிது நேரம் கூட பேச முடியவில்லை. இன்றும் வேலையாக வெளியே சென்றாகி விட்டது.
என்ன காரணம் சொல்லி அவளை சென்று பார்ப்பது என்ற இளவளவன் யோசிக்க, சரியாக தன் பெற்றோரின் அறையில் இருந்து வெளியே வந்தாள் யாழினி.
தன்னவளை பார்த்தும் இளவளவனின் அகம் பூவாய் மலர, யாழினியோ அவனை பார்த்ததும், அவனிடம் சண்டையிடும் நோக்கில்,
“யாரை கேட்டு என்னோட ரூம்ல எல்லா பொருளையும் மாத்தி வச்ச”
என்று காலையில் தன் அறை மாறியிருந்த விதத்தில் ஆச்சர்யம் மட்டுமே பட்ட போதும், அவனிடம் அதிருப்தி போலவே காட்டி கொண்டாள்
தன் மனதுக்கினியவளை பார்த்ததிலே மகிழ்ந்து இருந்தவனுக்கு, அவளே வந்து பேச வாய்ப்பளிக்க கசக்கவா போகிறது.
தன் குதூகலத்தை எல்லாம் வெளிக்காட்டாதவன், அவளிடம் எப்போதும் பேசும் அதே அலட்சிய தோரணையிலே,
“யாரை கேட்கணும்னு சொல்ற”
என்று கேட்க, பல்லை கடித்த யாழினி,
“ரூம் என்னோடது, என் கிட்ட கேட்டு இருக்கணும்”
என்று வீம்புடன் சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“வீடு உங்க அப்பவோடது தானே, அவர் கிட்ட சொல்லிட்டு தான் பண்ணேன்”
என்று ஒரேடியாக சொல்ல, தந்தையை இழுத்ததும் அமைதியான யாழினி, பின்பு வேறு ஏதோ நினைவு வந்தவளாக,
“என்னோட ஸ்லீப்பிங் பில்ஸ் எங்க”
என்று நேற்று தான் உறங்க முடியாமல் பட்ட அவஸ்தையை நினைத்து கேட்க, அவனோ வெகு வெகு அலட்சியமாக,
“அதை அப்போவே நான் தூக்கி போட்டுட்டேனே”
என்று சொல்ல, கடுப்பின் உச்சிக்கு சென்ற யாழினி,
“யாரு உன்னை என்னோட பொருளை எல்லாம் டச் பண்ண சொன்னது, நேத்து தூங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா”
என்று ஏதோ தனக்கு உறக்கம் வராதது அவனின் குற்றம் என்பது போல பேசி வைக்க, தன் தோரணையை சற்றும் மாற்றி கொள்ளாத இளவளவனோ,
“ப்பூ, இவ்ளோ தானா, கண் இமை இருக்கு இல்ல, அது டையர்ட் ஆகி அதுவே தானே மூடுற வரைக்கும் கண்ணை வேகமாக திறந்து திறந்து மூடு”
என்று சொல்ல, யாழினியோ தான் திட்டியதற்கும், இவன் பேசுவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் பார்க்க அவனோ தொடர்ந்து,
“தானா மூடுற கண்ணை நல்லா திறந்து வச்சி விட்டத்தை பார்த்து நூறுல இருந்து தலைகீழா எண்ணு, கண்ணு டையர்ட் ஆகி இருக்கிறதால சீக்கிரமா தூங்கிடுவ, ஒருவேளை அப்பவும் தூக்கம் வரலைன்னா, அடுத்து இருநூறுல இருந்து எண்ண ஆரம்பி என்ன”
என்று வழக்கம் போல, தன் பாணியில் ஒரு தீர்வு சொன்னவள், உபரி தகவல் போல,
“இந்த வயசுலையே ஸ்லீப்பிங் பில் எடுத்தா அதுக்கு அடிக்ட் ஆகிடுவா, அதை கண்டினுயூ அஹ எடுத்தா நரம்பு தளர்ச்சி எல்லாம் வருமாம், அப்புறம் உன் இஷ்டம்”
என்றவன், அவள் திரும்ப பேசும் முன்னர், இல்லை இல்லை திட்டும் முன்னர்,
“அப்புறம் உன்னோட மாடி போர்ஷன் முழுக்க நிறைய இன்டோர் பிளாண்ட் எல்லாம் வச்சி இருக்கேன், தினமும் அதுக்கு எல்லாம் மறக்காம தண்ணீர் ஊத்து, வாடிப் போக விட்டுடுடாத, ஹான் அப்புறம் பிஷ்க்கும் புட் போடு என்ன, குட் நைட்”
என்றவன் அவன் பதிலளிக்கும் முன்பு, நிற்காமல் தனது அறைக்கு ஓடியே விட்டான்.
மோகனம் இசைக்கும்……………

Advertisement