Advertisement

பெரியவர்களின் அறையில், தன் மாமனுக்கு துணைக்கு என்று சென்ற இளவளவன், நடுசாமம் வரையிலும் தன் கைபேசியை தான் குடைந்த படி இருந்தான்.
அவன் பேசி வந்த விசயத்தில் யாழினியின் முடிவு என்னவாக இருக்கும், என்பதில் அவனுக்கு துளியும் சந்தேகம் இல்லை.
அதனால் கைபேசியில் சேகரித்த தகவல்களை தொகுத்து, அதில் நாளை தான் செய்ய வேண்டியவற்றை எல்லாம் தனியாக மனதுக்குள் வரிசைப்படுத்திக் கொண்டான் இளவளவன்.
நாளைய பொன் விடியலை, தன்னவளின் நல் வாழ்க்கைக்கான சிறப்பான ஆரம்பமாக மாற்ற பேராசையும், பேரவாவும் கொண்டான் இசையரசியின் இம்சையரசன்.
தன்னவளை பற்றிய எண்ணங்களில் மூழ்கி இருந்தவனின் கையில் இருந்த கைப்பேசி நழுவ, அவனும் அமர்ந்திருந்த நீள் இருக்கையிலே, உறக்கத்துள் நழுவி இருந்தான்.
காலையில் எழுந்த இளவளவன் மணியை பார்க்க, அதுவோ ஏழு என காட்டியது.
தன் தலையிலே ஒரு முறை தட்டி கொண்டவன், கடகடவென தனது அறைக்கு சென்று, குளித்து தயாராகி, மாடிக்கு சென்றான்.
தன் அபிமான நடிகரின் திரைப்படத்திற்கு, முதல் காட்சிக்கு அடித்து பிடித்து, நலுங்கி, நசுங்கி, சீட்டு வாங்கி, திரையரங்கின் கதவு திறக்க காத்திருக்கும் சமாளியன் என பிரகாசமான முகத்துடன் நின்றான் இளவளவன்.
கண்ணை கசக்கி கொண்டே கதவை திறந்த லீலாவதி, வெளியில் நின்ற இளவளவனை எதிர் பார்க்காதவர்,
“என்ன கண்ணா, இவ்ளோ காலையில இங்க நின்னுகிட்டு இருக்க, யாழி, யாழினி இன்னும் தூங்கி கிட்டு தான் இருக்காடா”
என்று முதலில் அவனின் காலை விஜயத்துக்கான காரணத்தை கேட்டவர், ஒருவேளை மகளிடம் எதேனும் கேட்க வந்திருப்பானோ, என்று எண்ணி பின் பாதியையும் சேர்த்து சொன்னார்.
இளவளவனோ அவரின் கேள்விக்கு பதில் அளிக்காமல்,
“அத்தை நையிட் யாழினி ஏதாவது உங்க கிட்ட சொன்னலா”
என்று தங்களின் உரையாடலை பற்றி, அவளின் முடிவை பற்றி எதாவது யாழினி பேசினாலா என்று அறிந்து கொள்ள வேண்டி கேட்க,
“எதைப்பத்தி யாழி சொன்னாலானு கேட்குற கண்ணா”
என்று தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் இளவளவன் கேட்ட கேள்வி தந்த குழப்பத்த்தில், பதில் கேள்வி கேட்டு வைத்தார்.
யாழினி, தன் தாயிடம் எதை பற்றியுமே பேசவில்லை என்று இளவளவனுக்கு புரிய, முழு பரபரப்புடன் இருந்த அவனோ,
“சரி அதை விடுங்க அத்தை, நீங்க பஸ்ட் போய் குளிச்சிட்டு ரெடியாகி வாங்க, உங்களுக்கு ஒரு முக்கியமான வேலை வச்சி இருக்கேன்”
என்றவன், அவரின் கையை பிடித்து கிட்டத்தட்ட இழுத்து கொண்டு சென்றவன்,
“கண்ணா என்னடா”
என்று கேட்ட லீலாவதிக்கு எந்த பதிலும் அளிக்காமல், அவரை அவரின் அறையின் உள்ளே அழைத்து சென்று விட்டான்.
அவரின் வருகைக்காக காத்திருந்தவன் அவர் வந்ததும், அவருடன் நடந்த படியே,
“நல்லெண்ணெய் இருக்கு இல்ல அத்தை வீட்டுல”
என்று கேட்டபடியே அவரை சமையலறைக்கு அழைத்து வந்திருக்க, லீலாவதியோ எதுவும் சொல்லாமல், சென்று எண்ணெய் பாட்டிலை எடுத்து அவனிடம் காட்டினார்.
கையை கட்டி கொண்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்ட இளவளவன் அவரிடம்,
“நீங்க யாழினியை இன்னைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க போறீங்க”
என்று அவருக்காக தான் வைத்திருந்த வேலையை சொல்ல, ஏதோ நினைவில் புன்னகை சிந்திய லீலாவதி,
“முன்னாடி எல்லாம் வாரம் தவறாம இதை எல்லாம் பண்ணுவேன், அப்போ எல்லாம் அவ முடி எவ்ளோ அடர்த்தியா இருக்கும் தெரியுமா”
என்று சற்றே உணர்ச்சிவசப்பட்டு சொல்ல, இளவளவனோ மனதிற்குள்
“இப்போவே அவ முடி அமேசான் காடு மாதிரி தான் இருக்கு, இதை விட அடர்த்தியானா, என்னால கற்பனை கூட பண்ண முடியலையே ஆண்டவா”
என்று வாயில் கைவைத்து வியக்க, லீலாவதியோ இவனை கவனிக்காமல், த கை வேலையில் கவனமாக இருந்தார்.
ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் ஒன்றிரண்டு மிளகு, வரமிளகாய், பூண்டு போட்டு, மிதமான சூட்டில் அடுப்பில் வைத்தார்.
அவரின் பக்கத்தில் நின்று, அவரின் செய்கையை எல்லாம் இளவளவன் அமைதியாக பார்த்து கொண்டிருக்க, லீலாவதி,
“ஆமா என்ன கண்ணா, திடீர்னு எண்ணெய் குளியல் எல்லாம்”
என்று இளவளவனின் செயல் காரணத்தை அறிய வேண்டி கேட்க, யோசிக்காமல் இளவளவனும்,
“அது ஒன்னும் இல்ல அத்தை, மைல்டு ஹீட் ஆயில்ல ஹெட்க்கு மசாஜ் பண்ணா, ஸ்ட்ரெஸ் எல்லாம் குறையுமாம் அதான்”
என்று சொல்ல, லீலாவதியின் முகம் லேசாக வாடியது. அதை கவனித்த இளவளவன் சம்பந்தமே இல்லாமல்,
“துபாய்ல இருக்கிற எண்ணெய் கிணறு எல்லாம் என்ன விலை இருக்கும் அத்தை”
என்று குறும்பாக கேட்க, அப்பாவியாக இமைத்தட்டிய லீலாவதியோ,
“ஏன் இளா, நீ வாங்கலாம்னு இருக்கியா என்ன, நான் வேணா உங்க மாமா கிட்ட என்ன விலை வருதுன்னு விசாரிக்க சொல்லட்டுமா”
என்று கேட்க, அவரின் கேள்வியில் இளவளவனுக்கு தான் தலை சுற்றும் போல் இருந்தது.
பின்னே எண்ணெய் கிணறு எல்லாம் துபாய் அரசாங்க சொத்து. அதை உரிமை கொண்டாட வேண்டுமானால், இவன் அரசுவாரிசாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், விலைக்கு வாங்குவது என்பது எல்லாம் முடியாத காரியம்.
வேண்டுமானால் கொஞ்ச காலத்திற்கு குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம். அதற்கும் பில்லியன், மில்லியனில் பணம் வேண்டும்.
இவன் ஒன்று நினைத்து கேட்க, அதற்கு அவர் சொல்லிய பதிலில் திகைத்தவன், சமாளிப்பாக,
“இல்லை அத்தை, யாழினி முடிக்கு கிண்ணத்துல, சரி ஒரு சின்ன குண்டால எண்ணெய் எடுத்தா கூட பரவாயில்லை, நீங்க மனசாட்சியே இல்லாமல் இம்மா பெரிய அண்டால எடுக்குறீங்க”
என்று ஏற்ற இறக்கத்துடன் சொல்ல, லீலாவதி அவனை முறையோ முறை என்று முறைக்க, அந்த பார்வையை எல்லாம் கிஞ்சித்தும் மதிக்காத அவனோ தொடர்ந்து,
“வாரா வாரம் இவ்ளோ எண்ணெய் வாங்கி கொடுக்க எல்லாம் எனக்கு கட்டுபடியாகாது, அதான் மொத்தமா துபாய்ல ஒரு எண்ணெய் கிணறு வாங்கலாம்னு பார்க்கிறேன்”
என்று நீட்டி முழக்க, லீலாவதியோ அவன் சொல்லிய கடைசி வரியை பிடித்து கொண்டு,
“நம்ப ஊருல எல்லம் செக்குல தானே எண்ணெய் ஆடுவாங்க, துபாய்ல எல்லாம் கப்பி போட்ட கிணத்தில இருந்து வாலியில இழுப்பாங்களா கண்ணா”
என்று கேட்க, இளவளவனோ,
“எது கப்பி போட்ட கிணத்தில, வாலியில இழுக்கிறதா”
என்று நெஞ்சை பிடிக்க, அவனின் முக பாவத்தை பார்த்து, அடக்கமாட்டாமல் லீலாவதி வாய் விட்டு சிரிக்க, அவர் தன்னை கிண்டல் செய்து கொண்டு இருப்பதை, அப்போது தான் உணர்ந்தான் இளவளவன்.
சிறுபிள்ளை போல ஒரு காலை தரையில் ஓங்கி ஒரு உதைத்தவன்,
“அத்தை இவ்ளோ நேரம் என்ன வச்சி காமெடி பண்ணிக்கிட்டு இருந்தீங்களா நீங்க”
என, பொங்கி வந்த சிரிப்புடன் அவனின் காதை திருகிய லீலாவதி,
“என்னோட பொண்ணை கிண்டல் பண்ணும் போது மட்டும் இனிக்குது, நான் உன்னை பண்ணா கசக்குதா”
என்று கேட்க, தன் அத்தை தன்னை கண்டு கொண்டதில் திருட்டு முழி முழித்த இளவளவன், அருகில் இருந்த எண்ணெய் கிண்ணத்தை பார்த்ததும்,
“அத்தை எண்ணெய் வெதுவெதுப்பா இருக்கணும், இப்படியே நின்னு பேசிக்கிட்டு இருந்தா, அது ஆறி அவலா போய்டும் வாங்க, வாங்க”
என்று அவரை யாழினியின் அறைக்கு அழைத்து சென்று வரவேற்பறையில் இவன் நின்று விட, அவரோ யாழினியை எழுப்பி, சாதாரண உடை மாற்றி வெளியில் வர சொல்லிவிட்டு வந்தார்.
மறுபேச்சே இல்லாமல் வந்தவளுக்கு, இளவளவனை பார்த்ததும், அவன் நேற்று பேசிய பேச்சுக்கு நினைவுக்கு வர, அவனை முறைத்து பார்த்து வைத்தாள்.
யாழினியை ஒரு நாற்காலியில் அமர வைத்த லீலாவதி, அவளின் வழக்கமான உச்சி கொண்டயை பிரித்து, முடியை அவிழ்த்து விட, இளவளவன் சுற்றும், முற்றும் எதையோ தேட ஆரம்பித்தான்.
அவனின் வித்தியாசமான செய்கையில், அவனை லேசான புன்னகையுடன் பார்த்த லீலாவதி,
“என்ன இளா”
என்று சிரிப்புடனே கேட்க, அவனோ குறும்புடன்,
“இல்லை எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அந்த கூட்டை பிரிக்கிறீங்களோ, உள்ள இருந்து பாம்போ இல்ல பறவையா வந்தா என்ன பண்றது, அதான் ஒரு சேப்டிக்கு கம்போ கட்டையோ இருக்கானு தேடுறேன்”
என்று சொல்ல, லீலாவதி சிரிப்புடன் ஆள்காட்டி விரலை காட்டி அவனை மிரட்ட, கண்ணாடியில் அவனை பார்த்து கொண்டிருந்த யாழினியோ கோவத்தில் பல்லை கடித்து கொண்டிருந்தாள்.
பின்பு லீலாவதி, யாழினியின் தலையில் எண்ணெய் வைத்து அரக்கி விட்டு, அதை சற்று நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அவரே முடியை அலசியும் விட்டார் லீலாவதி.
எண்ணெய் குளியல் முடித்து உடை மாற்றி வெளியே வந்த யாழினிக்கு, உடல் காற்றில் பறப்பது போல, வெகு இலகுவாக, சுகமாக இருந்தது.
எண்ணெய் தேய்க்க ஆரம்பிக்கும் போதே, அங்கு இருந்து நழுவி எங்கோ சென்றிருந்த இளவளவன், யாழினி குளித்து முடித்து வரவும், கையில் கத்திரிக்கோலுடன் வந்து சேர்ந்தான்.
யாழினியை இருக்கையில் அமர செய்து, துவலையால் அவளின் தலையை துவட்டி கொண்டிருந்த லீலாவதி, அவனையும், அவன் கையில் இருந்த கத்திரிக்கோலையும் மாறி மாறி பார்த்தார்.
அவரின் பார்வையே ‘இப்போ என்ன’ என்று கேள்வி கேட்க, இளவளவனோ அசராமல்,
“யாழினி முடியை கட் பண்ண போறேன்”
என்று சொல்ல, லீலாவதியோ அவன் நுனி முடியை தான் நறுக்க போகிறான் போல என்று எண்ணி, தன் கையால் நுனி முடியை கோதி எடுக்க, அவனோ, யாழினியின் தோள் அருகே கத்திரியை கொண்டு சென்றான்.
அதை பார்த்த லீலாவதிக்கு மூச்சே நின்று விடும் போல இருக்க, பதறி அவனை தடுத்தவர்,
“இளா, இளா என்ன பண்ற”
என்று கேட்க, அவனோ,
“யாழினி எப்போ பாரு கொண்டை தானே போட்டுக்கிட்டு இருக்கா, அதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய முடி, பேசாம ஹேர் அஹ ஷார்ட் அஹ கட் பண்ணிடலாம்”
என்று சொல்ல, லீலாவதியோ,
“அதுக்குன்னு இவ்ளோ முடியை கட் பண்ணாதடா, வேணா இவ்ளோ கட் பண்ணுவோமா”
என்று முதுகு வரை அளவு காட்ட, அவன் மறுக்க, அவர் இன்னும் கொஞ்சம் உயர்த்தி அளவு காட்ட என இப்படியே சென்று கொண்டிருந்தது.
தனக்கு இருப்பக்கம் நின்ற இருவரின் வாயையும் இப்படியும், அப்படியும் திரும்பி, திருப்பி பார்த்தபடி இருந்த யாழினியோ,
“அடேய் முடியோட ஓனர் நான்டா, என்ன கேட்காம, நீங்க ரெண்டு பேரும் என்ன டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க”
என்று கடுப்பான நேரம், லீலாவதி உறுதியாக இளவளவனிடம்,
“அவ்ளோ ஷார்ட் அஹ கட் பண்ண எல்லாம் நான் சம்மதிக்கவே மாட்டேன்”
என்று முறுக்கி கொண்டார். பின்பு அவரும் எவ்வளவோ இறங்கி வந்தும் இளவளவன் தன் பிடியிலே நிற்க, கடுப்பாகி அவரும் இறங்கி வந்த படிகளை ஏறி மீண்டும், தன் பிடிக்கே சென்று விட்டார்.
ஒரு முடிவுக்கு வராமலே இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நிற்க, பளிச்சென ஒரு யுக்தி உதித்தது இளவளவனுக்கு.
அதன் படி இளவளவன் படிப்படியாக சொல்ல, லீலாவதி அதை செயல்படுத்தலானார்.
முதலில் யாழினி முடியை சிக்கெடுத்தார். பின்பு அவளை குனிய சொல்லி, பேயை போல, அவளின் ஈர முடியை மொத்தமாக முன்னால் தூக்கி போட்டு, முன் பக்கம் ஒரு குதிரை வால் போட்டார்.
பின் முடியின் அடியில் சுண்டு விரல் அளவு விட்டு மேலே, ஒரு பேண்டை போட்டார். பேண்டிற்கு கீழே உள்ள முடியை சமமாக நறுக்கினார் லீலாவதி.
தான் சொல்லியபடி நுனி முடியை மட்டும் நறுக்கியத்தில் அவருக்கு ஏக குஷி.
ஆனால் அது எல்லாம், யாழினியின் முடியை மீண்டும் பின்னால் எடுத்து போட்டு பார்க்கும் வரை தான்.
யாழினியின் முடியில் இருந்த படிக்கட்டை பார்த்தவர், இளவளவனை கண்களால் எரிக்க, அவனோ சாதாரணமாக,
“இதுக்கு பேரு ஸ்டெப் கட், பார்லர் எல்லாம் இதுக்கு எவ்ளோ சார்ஜ் பண்றாங்க தெரியுமா”
என்று கேட்க, அவனின் தலையில் கொட்ட துடித்த கையை அடக்கி கொண்டவர், கண்ணாடியில் முடியை பார்த்து கொண்டிருந்த யாழினியிடம்,
“நீ போய் ட்ரையர் எடுத்து கிட்டு வா, அம்மா இன்னைக்கு சாம்பிராணி போட மறந்துட்டேன்”
என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பியவர், இளவளவனின் தலையில் ஒரு கொட்டு கொட்டி,
“அழகா இருந்த என் பொண்ணு முடிய ஏன்டா இப்படி அலங்கோலமா ஆக்கின”
என்று கேட்க, இளவளவனோ,
“நியூ ஹேர் ஸ்டைல் மாத்துறது, ஹேர் கலரிங் பண்றது எல்லாம் நமக்கே நம்மளை ஒரு புது கோணத்துல காட்டுமாம், அது ஒரு பாசிட்டிவிட்டியை கொடுக்குமாம்”
என்று சொல்ல, புரிந்தும் புரியாமலும் தலையாட்டி வைத்தார் லீலாவதி. அதற்குள் யாழினி வந்துவிட, அவளின் முடியை உலர்த்தினார் அவர்.
அவரின் பாணியில், முடியில் இருந்த முதல் படிக்கட்டை மட்டும் எடுத்து கிளிப் போட்ட லீலாவதி, மீதி முடியை விரித்து விட்டார்.
நறுக்கிய முடியை பின்னலும் போட முடியாது, அள்ளி கொண்டையும் போட முடியாது. இதை தான் எதிர்பார்த்த இளவளவன், உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.
இவ்வளவுக்கும் யாழினி வாய் திறந்து எதுவுமே பேசவில்லை. ஏற்கனவே தன்னால் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை.
அந்த எண்ணம் அவளை வெகுவாக தாக்கி இருக்க, இப்போது தாயின் செயல் எதுவானாலும், அதை தடுக்கவோ, தவிர்க்கவோ அவள் விரும்பவில்லை.
லீலாவதி தன் கணவனின் தேவையை கவனிக்க என கீழே இறங்கி செல்ல, இளவளவனும், யாழினியும் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தனர்.
தொண்டையை செருமி கொண்ட இளவளவன், அவளிடம்,
“அப்புறம் என்ன கீழ போகலாம் தானே”
என்று அவளின் முடிவு இது தான் என்ற உறுதியாக அறிந்தவன் போலவே கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்த யாழினி, அவனை தாண்டி முன்னால் நடக்க, அவனும் உடன் நடக்க ஆரம்பித்தான்.
இருவரும் மாடி படியில் இறங்கி கொண்டிருக்க, கீழே இருந்தவர்கள் பேசி கொண்டிருப்பது காதில் விழுந்ததும், இளவளவன் பதட்டத்துடன் யாழினியை திரும்பி பார்க்க, அவளோ உணர்ச்சிகள் ஏதும் இன்றி, வெறுமையாக அவனை பார்த்தாள்.
மோகனம் இசைக்கும்…………

Advertisement