Advertisement

இருக்கையில் அமர்ந்து இருந்த யாழினியின் உயரத்திற்கு, தன் கால்களை மடித்து, முட்டி போட்டு அமர்ந்த இளவளவன், தன் ஆள் காட்டி விரலால், அவளின் தாடையை நிமிர்த்தினான்.
யாழினியின் தலையை வருட துடித்த தன் கையை இளவளவன் தன் கட்டுப்பாட்டில் நிறுத்த, அவனின் கட்டுப்பாட்டை மீறி அவனின் முகம் ஏகத்துக்கும் இளகியது.
யாழினியின் கண்கள் இன்னும் கண்ணீரை சொரிந்தபடியே இருக்க, கட்டை விரலால் கன்னத்தில் உறவாடிய கண்ணீரை துடைத்து விட்டவன்,
“கண்ணுல ஊற்று எதாவது வெட்டி வச்சி இருக்கியா என்ன, அழுகை வற்றவே வற்றாது போல”
என்று கிண்டல் மொழியில் பேசி, அவளின் கண்ணீருக்கு, கோவம் என்னும் அணைக்கட்ட முனைந்தான் அவன்.
அதேநேரம் அவளின் கன்னத்தில் இருந்த தன் கையை அவள் கவனிக்கும் முன்பு விளக்கியும் கொண்டான்.
இளவளவனின் யுக்தி வேலை செய்ய, யாழினி கண்ணீர் தேங்கிய கண்களுடன் அவனை தீயாய் முறைக்க, இப்போது அவன் நிரப்பவும் சாதாரணமான குரலில்,
“நீ நினைச்சா அங்கிளை சீக்கிரமா சரி பண்ணவும் முடியும்”
என்று சொல்லி நிறுத்தினான். அவனின் கூற்றில் யாழினி ஒரு எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, தொடர்ந்த அவன்,
“நீ இப்படி இந்த ரூம்லையே வனவாசம் இல்லாமல், உன்னோட அப்பா கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணு, அது தான் அவருக்கான பெஸ்ட் மெடிசன்”
என்று வாகாக வலையை விரிக்க, யாழினியோ அதில் காலை வைக்கிறோம் என்பதை அறியாமல், மகிழ்ச்சியுடன்,
“நிஜமாவா”
என்று ஒரு நிமிடம் பிரகாசத்துடன் ஒளி வீசிய முகத்துடன் கேட்டவள், அடுத்த நிமிடமே ஒளி குன்ற தலையை குனிந்து கொண்டு,
“கீ……கீ..ழே வந்தா எல்லாரும் இருப்பாங்க, என்னை அய்யோ பாவம்னு சொல்லுவாங்க, எனக்கு யாரோட அனுதாபமும், கரிசனையும் வேண்டாம், எனக்கு அது பிடிக்கவும், பிடிக்கல”
என்று தன்னை பிரம்பிப்புடன் பார்த்த கண்கள், இப்போது பார்க்கும் விதத்தை குறிப்பிட்டு, அது தன் மனதில் தரும் வலியை, சின்ன குரலில் சொன்னாள் யாழினி.
குனிந்து இருந்த யாழினியின் தலையை பார்த்த இளவளவனோ மனதிற்குள்,
“அதுக்கு அவங்க முன்னாடி சிறப்பா வாழ்ந்து காட்டணும், இப்படி பிடிக்கல பிடிக்கலனு சொல்லிக்கிட்டே இருந்துட்டா ஆச்சா”
என்று யாழினியின் மீது குறைபட்ட கொண்டவனின் இன்னொரு மனமோ,
“எல்லாமே சொல்லுறது ஈஸி இளா, அதை பேஸ் பண்றவங்களுக்கு தான் அதோட வலி தெரியும்”
என்று யாழினியின் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல, அதில் உள்ள உண்மையை உணர்ந்த இளவளவனும்,
“ஆனா அதுக்காக அப்படியே விடவும் முடியாது இல்ல, என்னோட யாழி இதை எல்லாம் கடந்து வருவா, நான் வர வைப்பேன், அவளுக்கும் எல்லார் மாதிரி, அழகான வாழ்க்கை காத்திருக்குனு புரிய வைப்பேன்”
என்று மனதோடு சூளுரைத்து கொண்டான்.
இப்படி சிந்தனையில் இளவளவன் அமைதியாக நிற்க, தலையை உயர்த்தி அவனை பார்த்த, யாழினியின் கண்களோ, மீண்டும் கலங்கி இருந்தது.
அவளின் கண்ணீரின் காரணம் புரிந்தும், அதை தெரிந்து கொண்டவன் போல காட்டி கொள்ளாத இளவளவன், முன்பு யாழினி சொன்னதற்கு பதிலாக,
“நாம வேணா நம்ப வீட்டுல வெளி ஆட்கள், வேலையாட்கள் யாரும் வர கூடாதுன்னு தடை போட்டுடுவோம்”
“ஆமா வேலை காரங்களை எல்லாம் வர வேண்டாம்னு சொல்லிட்டா, வேலை எல்லாம் யாரு செய்யுறது???”
என்று யோசிப்பவன் போல பாவனை செய்தவன், தன்னை முறைத்து கொண்டிருந்த யாழினியை பார்த்து,
“நான் வெட்டியா தானே இருக்கேன் நானே செய்யுறேன், சொல்றியா யாழினி, அதுவும் சரிதான், சம்பளம் கொடுக்கிற காசு மிச்சம்”
என்றவன் தொடர்ந்து,
“ஹான் அப்புறம் நீ வீட்டை விட்டு வெளிய போன, நீ போற இடம், போற வழி எல்லாம், மக்கள் நடமாட தடை உத்தரவு போட்டுடுவோம்”
என்று வெகு நக்கலாக சொன்னவன்,
“சி.எம் பொண்ணா இருந்தா கூட இதை எல்லாம் பண்ண அவருக்கு பவர் இருக்கானு தெரியல, நீ வேற வெறும் பி.எம் ஓட பொண்ணு தான்”
என்றவன் யாழினி எதுவும் கேட்காத போதே, தான் சொல்லியதை விளக்கமாக,
“அதான்மா பாவப்பட்ட மனுஷன்”
என்று விளக்க, யாழினியோ எரிமலையின் சீற்றத்துடன் அமர்ந்து இருந்தாள்.
முதலில் இளவளவன் ஆரம்பிக்கும் போது,
“நல்ல ஐடியாவா இருக்கே, சர்வன்ட்ஸ் யாரும் இல்லைனா பிரீயா கீழே போகலாம் இல்ல”
என்று யோசித்த யாழினிக்கு, அடுத்துடுத்து அவன் பேசிய பேச்சில் தான், அவன் தன்னை வைத்து கிண்டல் செய்கிறான் என்பதே புரிந்தது.
யாழினியின் முகத்தை பார்த்து, தன் கிண்டலை கைவிட்ட இளவளவன், தீவிரமான முகத்துடன்,
“இங்க பாரு யாழினி, அடுத்தவங்க பார்வையையோ, இல்ல நம்மை பற்றிய அவங்க எண்ணத்தையோ நம்மால் கட்டு படுத்த முடியாது”
என்று சொல்லி, தான் சொல்லியதை அவள் புரிந்து கொள்ள சிறு இடைவெளி விட்டவன், பின்பு,
“நம்ப கண்ணு என்ன பார்க்கணும், காது எதை கேட்கணும்னு மட்டும் தான் நாம முடிவு பண்ண முடியும், அடுத்தவங்களை நாம மாற்ற நினைக்கிறது முட்டாள் தனம், நீ உன்னை தான் மாத்திகிறது தான் புத்திசாலித்தனம்”
என்று சற்று கடுமையுடன் சொல்ல, யாழினியோ தன் முகத்தில் வலியும், விருப்பமின்மையும் சரிபாரியாக விரவி இருக்க, இயலா தன்மையுடன் தான் நின்றாள்.
அவளின் முகத்தை பார்த்தே, அகத்தை படித்த இளவளவன், தன் தோள்களை அசால்ட்டாக குலுக்கி விட்டு,
“இது உன்னோட அப்பாக்காக, அவரோட ஹெல்த்க்காக, மத்தவங்க முக்கியமா, இல்ல உன்னோட அப்பா முக்கியமானு நீ தான் முடிவு பண்ணனும், பால் இஸ் ஆன் யூவர் கோர்ட்”
என்று சொன்னவன், யாழினியின் முகம் யோசனையை காட்டவும், அந்த அறையை விட்டு வெளியே வந்து, தன் கைபேசியில் இருந்து லீலாவதிக்கு அழைத்தான்.
ஒரே வீட்டில் இருந்து கொண்டு இளவளவன் அழைக்கவும், அதுவும் இரவு நேரம் என்பதால் என்னவோ ஏதோ என்று எண்ணி,
“என்ன கண்ணா, என்ன ஆச்சு”
என்று அழைப்பை எடுத்ததும் ‘ஹெலோ’ என்று சொல்லாமல் பதற,
“அத்தை, அத்தை ஒன்னும் இல்ல, உங்களை இன்னைக்கு யாழினி கூட தூங்க சொல்லலாம்ன்னு தான் கூப்பிட்டேன்”
என்று அழைத்த காரணத்தை சொல்ல, மருமகன் பேச்சை மீறா அத்தையாய் லீலாவதி, ஏன், எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல்,
“சரி கண்ணா”
என்று உடனே ஒப்பு கொண்டவருக்கு, பிற்பாடு தான், தன் சரிபாதியின் நினைவு வர,
“மாமாவை எப்படி கண்ணா தனியா விடுறது”
என்று அவரின் உடல்நிலை குறித்த கவலையுடன் வினவ, இளவளவனோ,
“இன்னைக்கு நான் மாமா கூட தங்கிக்கறேன் அத்தை, நீங்க மேல வாங்க”
என்றவன் அழைப்பை துண்டித்து திரும்ப, தனக்கு பின்னால் யாழினி நின்று கொண்டிருப்பாள் என்று எதிர்பார்க்காதவன்,
“அய்யோ அம்மா, இப்படித்தான் சின்ன சத்தம் கூடமா இல்லமா பின்னாடி வந்து நிக்கிறதா, நான் எங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன்மா”
என்று பொரிந்தவன், பயத்தில் நெஞ்சில் கை வைத்து கொள்ள, யாழினியோ அவனை சந்தேகமாக பார்த்து வைத்தாள்.
“இந்நேரம், இங்கு நின்று கொண்டு, யாரோடு கைப்பேசியில் பேசுகிறான்”
என்பதாக தான் இருந்தது யாழினியின் எண்ணம். இருந்த போதிலும், அதை வாய்விட்டு கேட்க விரும்பாமல், தன் புருவங்களை உயர்த்தி,
“என்ன”
என்று மட்டும் பொதுவாக கேட்டு வைக்க, அவளை பின்பற்றி இளவளவனும், தன் புருவத்தை உயர்த்தி,
“என்ன என்ன”
என்று கேட்க, அதற்குள் லீலாவதி வந்து விட்டார். இது இளவளவனின் ஏற்பாடு என்பது புரிய, இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள், தனது அறைக்குள் சென்று விட்டாள்.
செல்லும் யாழினியை பார்த்து வக்களம் காட்டிய இளவளவன் தன் அத்தையிடம்,
“இன்னைக்கு யாழினி கொஞ்சம் டிஸ்டப் அஹ இருப்பானு நினைக்கிறேன், அதான் உங்களை வர சொன்னேன் அத்தை”
என்றவனுக்கு, தந்தையின் நிலைக்கு தான், தான் காரணம் என்று தன்னை தானே யாழினி வருத்திக் கொள்ளவளோ என்ற எண்ணம்.
அவள் காயப்படுவாள் என்று தெரிந்தே தான் இளவளவன், யாழினியிடம் அப்படி பேசினால் என்றாலும், அவளின் மன காயத்திற்கு மருந்திடவும் மறக்கவில்லை அவன்.
தாயின் அருகாமையை, அரவணைப்பை விட, சிறந்த மருந்து உலகில் உண்டா என்ன……
என்ன நடந்தது என்று அறியாத போதும், ஏதோ யாழினி கஷ்டப்படும்படி இளவளவன் பேசி இருக்கிறான் என்பது மட்டும் புரிய, அதுவும் அவளின் நலனுக்காக தான் இருக்கும் என்பதும் தெரிய,
“கண்ணா, அவ என்னோட பொண்ணுடா, நான் பார்த்துகிறேன், நீ போய் கவலைப்படாம தூங்கு போ”
என்று அவனின் தோளில் தட்டி சமாதானம் செய்தவர், மகளை தொடர்ந்து அவளின் அறைக்கு சென்று விட்டார்.
கீழே இறங்கி சென்ற இளவளவன், முதலில் சமையலறைக்கு சென்று ஒரு குவளை குளிர்ந்த நீரை பருகிவிட்டு, பின்பு பெரியவர்களின் அறைக்கு சென்றான், மாமனின் துணைக்காக.
ரவிச்சந்திரன் ஏற்கனவே மாத்திரையின் உதவியால் உறங்கி கொண்டிருக்க, நீள் இருக்கையில் அமர்ந்த இளவளவனுக்கு, சற்று முன்பு யாழினியுடன் நிகழ்ந்த உரையாடலே ஓடி கொண்டிருந்தது.
பேச வேண்டும் என்று நினைத்து இருந்ததில், பாதியை கூட இளவளவனால், யாழினியின் முகத்தை பார்த்து பேச முடியவில்லை.
அவனின் அத்தை தனிமையில், மருத்துவமனையில் நின்று இருந்ததை எல்லாம் குறிப்பிட்டு, யாழினியை திட்ட நினைத்திருந்தான் அவன்.
ஆனால் எங்கு அவளின் கண்ணீரும், சிறு பிள்ளை தனமான பேச்சையும் கேட்ட பிறகு, அவனால் அவளிடம், அப்படியெல்லாம் கடுமையாக பேசவிட முடியவில்லையே.
ஒரு பெருமூச்சை வெளியிட்ட இளவளவனின் மனதின் ஓரம், அவனின் ஏக்கம் இரணமாக இருக்க,
“ஏன் யாழி, இன்னமும் நான் யாருன்னு உனக்கு தெரியலையா”
என்று மனதோடு கேட்க கொள்ள, சரியாக ஆஜரான அவனின் மனசாட்சி,
“எப்படி தெரியும், இல்ல எப்படி தெரியும்ன்னு கேட்குறேன்”
என்று மகா கடுப்பாகசலித்து கொள்ள, இளவளவனோ புரியாமல்,
“சின்ன வயசை விட, இப்போ நல்லா அழகா, அம்சமா இருக்கேன், அதனால் தான் அடையாளம் தெரியலைன்னு சொல்லுறியா”
என்று தன் உருவத்தில் பெருத்த மாற்றம் இருக்கோ என்று யோசிக்க, மனசாட்சியோ,
“எப்படிடா நான் இருக்கும் போதே, இப்படி ஒரு பொய்யை அசரமா சொல்ற, சரி அதை விடு, நீ அப்போ எல்லாம் அவ என்ன சொன்னாலும், செஞ்சாலும் ‘ஈஈஈஈ’ எருமை மாடு மாதிரி பல்லை காட்டி கிட்டே இருப்ப”
என்று நினைவு படுத்த, அந்நாட்கள் நினைவில் புன்னகை புரிந்த இளவளவன்,
“அப்போ இப்போ”
என்று கேட்க, மனசாட்சி உண்மை விளம்பியாக,
“அவளை பார்க்கும் போது எல்லாம் திட்டுற, புல்டாக் மாதிரி புல் டைம் அவ கூட பையிட்க்கு நிக்கிற, அப்புறம் எப்படி அவளுக்கு ரெண்டு பேரும், ஒன்னு தானு தோணும்”
என்று யாழினிக்கு ஆதரவாக பேச, இளவளவன்,
“எல்லாம் அவளுக்காக தானே”
என்று தன் செயலை நியாயப்படுத்த, மனசாட்சியோ விடாமல்,
“அது அவளுக்கு தெரியாது இல்ல”
என்று சொல்ல, இளவளவன் இதில் சமாதனமாகி அமைதியாய் இருக்க, அவனின் பதிலுக்காக காத்திருந்த அவனின் மனசாட்சியார், அவனின் அமைதியில்,
“இனி இவன் பேச மாட்டேன் போலவே”
என்று அவரும், அவனுள் ஐக்கியமாகி விட்டார். அங்கு தாயின் அரவணைப்பில் இருந்த யாழினி, இளவளவன் சொல்லி சென்றதை பற்றித்தான் யோசித்து கொண்டிருந்தாள்.
“நாளைக்கு கீழே போகனுமா??? எல்லாரையும் பேஸ் பண்ணனுமா??? அந்த இளா சொன்ன மாதிரி, மத்தவங்க பார்வையை கண்டுக்காம என்னால் கடந்து போக முடியுமா????”
என்பதாக தான் இருந்தது யாழினியின் எண்ணம் முழுக்க. அதேநேரம் கீழே செல்வதை தவிர, தனக்கு வேறு வழியில்லை என்பதும் புரிந்தது அவளுக்கு.
தந்தைக்கு தான் உடன் இருந்தால் உடல் நிலை முன்னேறும் என்று சொன்னாலே, தான் அதை செய்ய தான் விழைவோம் என்பதில் யாழினிக்கு சந்தேகம் இல்லை.
இதில் தந்தையின் நிலைக்கு தான் தான் காரணம் என்று அறிந்த பிறகு, எப்படி யாழினியால் இளா சொன்னதை செய்ய மாட்டேன் என்று மறுக்க முடியும்.
ஆனால்……
இந்த ஆனால் தான் யாழினியை வெகுவாக தாக்கியது.
எப்படி யோசித்தாலும், தனக்கு வலிக்கும் என்றாலும் கூட, தந்தையின் உடல் நிலை சீராகுவது தான் அதிமுக்கியம் என்பதாக தான், எண்ண முடிந்தது யாழினியால்.
கடைசியில் மற்றவரிடம் எல்லாம் சிரிக்க சிரிக்க பேசி, தன்னை மட்டும், பார்க்கும் போது எல்லாம் திட்டி கொண்டே இருப்பவனின் பேச்சை கேட்க வேண்டி இருக்கிறதே என்பதே, யாழினிக்கு பெரும் வறுத்தம்.
அதேநேரம் அவன் சொல்லுவது அனைத்தும் சரியாக வேறு இருந்து தொலைக்க, அவனை எதிர்த்து பேச முடியாதது வேறு, யாழினியை இன்னும் வெறுப்பேற்றியது.
“பேரு வச்சி இருக்காங்க பாரு, இளவாம், இளா, இம்சைன்னு வச்சி இருக்கலாம்”
என்று பெயர் சூட்டி, இருபத்திமூன்று வருடங்களுக்கு பிறகு, பெயரையும், பெயர் வைத்தவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் யாழினி.
இப்படி இளவளவனை மனதுக்குள் கருவி கொண்டே இருந்தவள், தன் தாய் சீரான தாளத்ததோடு முதுகில் தட்டி கொடுக்க, சீக்கிரமே உறங்கி விட்டாள்.
இளவளவனை மூச்சு விடாமல் திட்டியவளுக்கு தெரியவில்லை, அவனிடம் தான், தான் உள்ள கிடங்கை திறக்கிறோம் என.
இளவளவனும் இன்னும் உணரவில்லை, தன்னிடம் தான், யாழினி அவளின் வலி, வெறுப்பு, விருப்பை எல்லாம் பகிர்ந்து கொள்கிறாள் என.
யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாள் அழகாக விடிய,  ஒரே நாளை யாழினியும், இளவளவனும் இருவேறுபட்ட மனநிலையில் எதிர்கொண்டனர்.
மோகனம் இசைக்கும்…………

Advertisement