Advertisement

ஆதவன் உட்சி வானில் உல்லாசமாய் உலா வந்தப்படி, உலகத்து மக்களை தன் வெப்பத்தால் தகித்து கொண்டிருந்த நண்பகல் வேளை அது.
பொல்லா கதிரவனின் ஒளிக்கற்றைகள் தீண்டா வண்ணம், அந்த பெரிய அறையின் சாரளங்கள், கனமான திரைசீலைகளால் கவனமாக மூடப்பட்டிருந்தன.
அதிகமாக குளிரூட்டப்பட்ட அந்த அறையில், வழவழப்பான போர்வை இதமாக மேனியை தழுவி இருக்க, பஞ்சணையில் சுருண்டு, சுகமாக உறங்கி கொண்டிருந்தான் இளவளவன்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவனின் முகத்தில், கோடென விரவியது மெல்லிய முறுவல் ஒன்று.ஏதோ இனிமையான கனவு கண்டு கொண்டிருக்க வேண்டும்.
தாயின் ஆசைக்காக உள்ளூரில் இளங்கலை படித்தவன், தந்தையின் விருப்பத்திற்காக முதுகலை படிக்க இலண்டன் சென்றிருந்தான் .
தேர்வுகள் முடிந்த கையோடு, சிறு பொழுதையும் வீணாக்காமல், வீணாக்க விரும்பாமல், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கிளம்பி, நேற்று இரவு தான், தாயகம் திரும்பி இருந்தான் இளவளவன்.
தாயின் கண்ணீரோடு கூடிய அரவணைப்பில் சில மணிகள்…
தந்தையின் உணர்வு பூர்வமான அணைப்பில் சில மணிகள்….
என பெற்றோரோடு பல மணிகள் செலவழித்து, பேச ஆயிரம் கதைகள் இருந்த போதிலும், உடல் ஓய்வுக்கு கெஞ்ச, மனமே இல்லாமல் தான் மாடியேறி தனது அறைக்கு வந்து இருந்தான்.
தாயகம் திரும்பும் ஆசையில் செய்த அதிகப்படி வேலை, நீண்ட நேர விமான பயணம் மற்றும் நேர மாற்றம் காரணமாக, இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இளவளவன்.
காலையில் விடிந்தத்தில் இருந்து, சொர்க்கவாசல் திறக்க காத்திருக்கும் பக்தை போல, தன் மகனின் அறைக்கதவு எப்போது திறக்கும் என, கதவையே பார்த்தபடி பரப்பரப்புடன் இருந்தார் அபிராமி அம்மையார்.
வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு, மாடியில் இருக்கும் மகனின் அறைமீது கண் வைத்தப்படி இருக்கும் தன் சகதர்மினியை, ஓர கண்ணால் கவனித்தப்படி தான் இருந்தார் ஆவுடையப்பர்.
அவரின் அலைப்புறுதலை ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்,
“என்ன அபி, என்ன ஆச்சு, ஏன் இப்படி ரெஸ்லஸ் அஹ இருக்க”
என தன் மடிக்கணினியில் இருந்த பார்வையை, தன் மனைவியின் முகத்தில் நிலைக்க விட்டப்படி சாவகாசமாக கேட்க, அபிராமி அம்மையாரோ,
“உ..ங்…க..ளை.”
என்று தன்னவர் ஒன்றும் அறியாதவர் போல் கேட்ட கேள்வியில் பல்லை கடித்தப்படி, அவரை ஏகத்துக்கும் முறைத்தவர்,
“சொன்னதை எல்லாம் மறந்துட்டீங்களா, இளா கிட்ட எவ்ளோ முக்கியமான விஷயம் பேசணும், டென்ஷன் இல்லாம எப்படி இருக்கும்”
என்று அங்கலாய்க்க, தன் மனைவியை யோசனையுடன் பார்த்த ஆவுடையப்பர்,
“என்ன அபி, இளா நேத்து தானே வந்தான், இன்னைக்கே பேசணுமா என்ன, ஒரு இரண்டு நாள் போகட்டுமே”
என்று தனிவாக மனைவியிடம் சொன்னவருக்கோ, இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை பற்றி மகனுக்கு சிறு குறிப்பேனும் கொடுக்கும் எண்ணம்.
தன் கணவர் சொல்லுவதில் உள்ள நியாயம் புரிந்த போதிலும், இயலாமையுடன் அவரை பார்த்த அபிராமி அம்மையார்,
“இந்த விஷயத்தில் இளாவோட முடிவு தெரிஞ்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்ங்க, ஏற்கனவே இதை நேரில் தான் அவன் கிட்ட பேசணும்னு மூணு மாசம் தள்ளி போட்டாச்சி, இனிமே என்னால வெய்ட் பண்ண முடியாது”
என்று சொல்ல, அவரின் மனப்போராட்டம் புரிந்த ஆவுடையப்பரும், அவரின் கையை ஆதரவாக தட்டி கொடுத்தார்.
அவருக்கு ஒரு புன்னகையை பதிலாக தந்த அபிராமி அம்மையார், மீண்டும் தன் பார்வையை மாடியில் நிலைக்கவிட்டார்.
தன் மனைவியிடம் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஆவுடையப்பருக்கும் அவர்களின் மகனின் பதிலை தெரிந்து கொண்டால் பரவாயில்லை என்ற எண்ணம் தான்.
பெற்றோரின் மனவோட்டதையோ, மனப்போராட்டதையோ அறியாத இளவளவன் அவர்களை இன்னும் சில மணிநேரம் காக்க வைத்த பிறகே, மனம் இறங்கி, படியிறங்கி கீழே வந்தான்.
அவன் வந்தவுடன், அவனின் கையை பிடித்து உணவு உண்ண தான் முதலில் அழைத்து சென்றார் அபிராமி அம்மையார்.
மகனுக்கு பிடித்த உணவுகளாக பார்த்து பார்த்து தானே சமைத்ததை, தன் கையால் பரிமாறி, மகன் வயிறார உண்ணும் அழகை, தன் கண்களிலும் நிரப்பி கொண்டு இருந்தார்.
பெற்றோர் இருவருக்கும் இரத்த அழுத்தம் இருப்பதால், நேரத்திற்கு உணவை எடுத்து கொள்ள வேண்டும் என்பது இளவளவனின் கட்டளை.
மகனின் பேச்சை மீறி அவனுக்காகவே என்றாலும் உண்ணாமல் காத்திருந்தால், அவனின் கோவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே இருவரும் வழக்கமான நேரத்திற்கு உணவை முடித்து, மாத்திரையும் உண்டு இருந்தனர்.
உணவை முடித்து விட்டு, இளவளவன் வரவேற்பறையில் வந்து அமர, அவனுடனே வந்து அவனின் அருகில் அமர்ந்து கொண்டார் அபிராமி அம்மையார்.
இளவளவன் ஆர்வமாக அவனின் கல்லூரி கலாட்டக்களை பற்றி பேச ஆரம்பித்தவன், சிறிது நேரத்திலே பெற்றோரின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.
பேசுவதை நிறுத்திவிட்டு, அவர்களை பொய்யாக முறைத்தவன்,
“என்ன மாதாஜி ஏதோ தீவிரமான யோசனையில் இருக்க மாதிரி இருக்கு, என்ன விஷயம்”
என்று அவனே பேச்சை ஆரம்பிக்க, தங்கள் மகனின் புரிதல் கண்டு உள்ளுக்குள் மெச்சி கொண்ட ஆவுடையப்பர் புன்னகையுடன்,
“அது ஒன்னும் இளா, நீ வெளிநாட்டுல இருந்து வரும் போது எதாவது ஒரு பெண்ணை கூட்டிகிட்டு வந்துடுவியோனு உங்க அம்மாக்கு பயம்”
என்று கிண்டல் பேச்சு மூலம் மனதின் மனதை அறிய எண்ணி மெதுவாக விஷயத்தை ஆரம்பிக்க, இளவளவனும் புன்னகையுடன்,
“நானும் எவ்ளோ ட்ரை பண்ணேன்ப்பா, ஒன்னும் செட் ஆகல”
என்று உதட்டை பிதுக்க, மகனின் பதிலில் அட்டகாசமாக சிரித்த ஆவுடையப்பர் தன் மனைவியை பார்த்து,
“பாரு நான் அப்போவே சொன்னேன் இல்ல, உன்னோட பையன் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டானு, நீ தான் தேவையில்லாம பயந்துட்ட”
என்று மகனை வார, இவ்வளவு நேரம் கொண்டிருந்த சுணக்கம், பதற்றம் எல்லாம் மறைய, மகனை சொன்னதும் சிலிர்த்து கொண்ட அபிராமி அம்மையாரோ,
“என்னது சரிப்பட்டு வர மாட்டானா, என் பிள்ளை சொக்க தங்கம், சரிப்பட்டு வர மாட்டானாம் இல்ல சரிப்பட்டு”
என தன் கணவரை நொடித்து கொண்டவர், தொடர்ந்து,
“உங்களை மாதிரி, அத்தை மக, மாமன் மகனு, ஊருக்குள்ள ஒருத்தரை விடாம எல்லார் கிட்டயும் கடலை போட்டா தான், அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வருவானு சொல்விங்களா”
என கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இவர்களின் திருமணத்திற்கு முன்பு தன் முறைப்பெண்களோடு பேசியதை பற்றி என்றோ ஒரு நாள் தான் கணவர் கூறியதை நினைவு கூர்ந்து, நெற்றி கண்ணை திறந்தார்.
இரண்டு வருடம் இந்த மாதிரி சின்ன சின்ன சண்டைகளை பார்க்கும் வாய்ப்பை இழந்து இருந்த இளவளவனோ, உற்சாகமே வடிவாக, இவர்களின் சண்டையை பார்த்தபடி சிரிப்புடன் அமர்ந்து இருந்தான்.
மனைவியின் கவலையை போக்க என தான் விளையாட்டாக சொல்லியது வினையமாக மாறியது கண்டு விழி பிதுங்கினார் ஆவுடையப்பர. 
இன்னும் சற்று நேரம், இப்படியே நிலைமை நீண்டால், தன் நிலைமை கவலைக்கிடமாகி விடும் அபாயம் இருப்பதால் சுதாரித்து கொண்ட ஆவுடையப்பர்,
“இளா இந்த வீடியோவை பாரேன்”
என்று தான் மனைவி பேசவே இல்லை என்பது போல பாவித்து, மடிக்கணிணியின் பக்கம் இருவரின் கவனத்தையும் ஒரு சேர திருப்பினார்.
திடிரென தந்தை ஏதோ காணொளியை பார்க்க சொல்லவும், ஏதோ தாயிடம் இருந்து தப்பிக்கும் மார்க்கம் போல, என்று அசட்டையுடன் மடிக்கணினியை பார்த்தவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
திரையில் அடர் சிவப்பு நிறத்தில், கருநீல வண்ணத்தில் பார்டர் கொண்ட புடவை அணிந்து, தன் சுருள் குழல்களை பிரயத்தனபட்டு  பின்னலிடட்டு, அதில் மல்லிகை சூடி, நடுநாயகமாக அமர்ந்து பாடி கொண்டிருந்தாள் மங்கை ஒருத்தி.
அது அப்பெண்ணின் பாட்டுகச்சேரியின்முழு காணொளி போலும். ஆனால் ஆவுடையப்ர் இயக்கிய போது அந்த பெண், தன்னை மறந்து கண்களை மூடி, “சின்னசிறு கிளியே கண்ணம்மா” என்று உருகி கொண்டிருந்தாள்.
அவளின் முகம், அது காட்டிய பாவனைகள், அவளின் குரல், அதில் இருந்த இலயிப்பு தன்மை என முற்று முழுதாக தலைகுப்புற அவளில் விழுந்து இருந்தான் இளவளவன்.
அந்த பாட்டு முடிந்ததும், ஆவுடையப்பர் காணொளியை நிறுத்த, அதை கூட உணராமல் திரையில் தெரிந்த பிம்பத்தில் தன்னை தொலைத்து அமர்ந்து இருந்தான் இளவளவன்.
“உலகில் நூற்றில், நாற்பத்தியெட்டு சதவீத ஆண்கள், முதற் பார்வையில் காதல் வயப்படுகிறார்களாம்”
என்று ஒரு ஆய்வின் முடிவை படித்தபோது, தான் கேலியாக சிரித்தது, அசர்ந்தப்பமாக நினைவுக்கு வந்தது இளவளவனுக்கு.
இன்று தானும் அவர்களில் ஒருவனாக மாறியதை நினைக்கும் மாத்திரம் குபீரென சிரிக்க தோன்ற, அதேநேரம் இளவளவனின் மூளையில், ஒரு மின்னல் தெறித்தது.
அந்த மின்னல், முக்கிய தகவல் ஒன்றை அவனுக்கு உணர்த்த, தான் புரிந்து கொண்டது சரியா என்ற ஆர்வத்தில், திரையில் தெரிந்த பிம்பத்தில் எதையோ, இல்லை யாரையோ தேட ஆரம்பித்தான் அவன்.
தேடியதை அவன் கண்டு கொண்ட கணம், அவனின் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் “யாழினி” என்ற பெயரை உரக்க சொல்ல ஆரம்பித்தது.
அவனின் மூளை அது யார் என்று உணரும் முன்பே, அவனின் இதயம் அது யார் என்று உணர்ந்து, அவனவளிடம் சென்று தஞ்சம் அடைந்திருக்கிறது.
உடல் முழுவதும் ஒரு தித்திப்பான பரவசம் ஊற்றெடுக்க, “யாழினி” என்று அவளின் பெயரை உச்சரித்தான் இளவளவன்.
இவ்வளவு நேரம் தங்களின் புதல்வனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த இருவரும், அவன் அவளின் பெயரை உச்சரித்த கணம், ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறி கொண்டனர்.
அதை எல்லாம் கவனிக்காத இளவளவனோ, தான் உணர்ந்ததை உறுதிப்படுத்தி கொள்ளும் ஆவலில், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அன்னையை நோக்கி,
“ம்மா, இ…து..இ…து யாழினி தானே”
என்று கண்களில் “இல்லை என்று மட்டும் சொல்லிவிடாதிர்கள்” என்று இறைஞ்சலுடன் கேட்க, மகனின் தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்தவர்,
“ஆமா இளா, யாழினி தான், அவளை பத்தி தான் உன் கிட்ட பேசணும்”
என்று தாங்கள் அறிந்தவற்றை எல்லாம், ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தார்.
அப்பெண் யாழினி என்றதும் ஊற்றெடுத்த உற்சாகம் எல்லாம், தொடர்ந்து அன்னை சொன்னதை கேட்டதும் இருந்த இடம் தெரியாமல் போக, உணர்வுகள் தொலைத்த முகத்தோடு மீதியை உள்வாங்கி கொண்டிருந்தான் இளவளவன்.
அதே நேரம் அங்கு யாழினியின் வீட்டில் வரவேற்பறையில் அமர்ந்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தனர் ரவிச்சந்திரன், லீலாவதி தம்பதியினர்.
“இசைத்துறையில் இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு”
என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், முப்பது நிமிடங்கள் யாழினியின் வசமாகி இருந்தது.
இருபத்தியொரு வயதான யாழினி குரலின் இனிமை, இசையின் மீதான அவளின் காதல், இசையில் அவளின் ஞானம், இதுவரை அவள் வாங்கி இருக்கும் விருதுகள் என நீண்டு கொண்டிருந்தது அந்த நிகழ்ச்சி.
மகிழ்ச்சியான அந்நாட்களில் நினைவில், கண்களில் ஏக்கத்தோடு, தன் கணவன் அருகில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார் லீலாவதி.
நிகழ்ச்சியின் நிறைவு பகுதியாக, யாழினி கச்சேரி செய்வதை நிறுத்தியதற்காக அவளின் நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் வருத்தங்கள், ஆதங்கள் பதிவிடப்பட்டு இருந்தன.
யாழினியின் குரலை மீண்டும் கச்சேரியில் கேட்கும் நாளுக்காக பலரும் காத்திருப்பதாக சொல்லி நிகழ்ச்சியை முடித்து இருந்தனர்.
யாழினி கச்சேரி செய்வதை நிறுத்தி, கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்கள் ஆன நிலையில், இன்னும் கூட அவளை கச்சேரிக்கு கேட்டு அழைப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கிறன.
யாழினி கச்சேரி செய்வதை நிறுத்தியதற்கான உண்மை காரணம் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை, தெரிவிக்கவும் யாழினி பிரியப்படவில்லை.
யாழினியின் பெற்றோர் நினைவில், அந்த நாள் நினைவுகள் விஸ்வரூபம் எடுக்க, யாழினி அன்று அழுத அழுகை கண் முன் காட்சியாக விரிந்தது.
அந்நாள் நினைவில் யாழினியின் தாயார் கண்ணில் கண்ணீர் வழிந்தது என்றால், மகளையே உலகமாக நினைக்கும் அவளின் தந்தைக்கோ இடது கையில் சுருக்கென வலித்தது.
மெதுவாக ஆரம்பித்த அந்த வலி, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இடது பக்கம் நெஞ்சு வரை தாங்க முடியாத வலியாக மாறி முன்னேற, அதிகமாக வேர்க்க ஆரம்பித்தது அவருக்கு.
வலியின் வேதனையில் அவர் முனக, தன் சிந்தனையில் இருந்து வெளிவந்த லீவாவதி, தன் கணவரின் நிலை கண்டு மிரண்டு,
“என்னங்க என்ன ஆச்சு”
என்று பதற, அவரின் சத்தம் கேட்டு வேளையாட்கள் ஓடி வந்தனர். அவர்களின் உதவியோடு, வலியில் முனகி கொண்டிருந்த தன் கணவரை, காரில் ஏற்றி, மருத்துவமனை நோக்கி செலுத்த பணித்தார் லீலாவதி.
தன் மீது உயிரே வைத்திருக்கும் தந்தை அரை மயக்கமானதோ, தாயார் அழுகையுடன் துணையின்றி தனியாக மருத்துவமனை சென்று இருப்பதோ அறியாமல், தன் அறையில் தூக்க மாத்திரை உதவியுடன், ஆழ்ந்த உறக்கத்தின் வசம் இருந்தாள் யாழினி.
மோகனம் இசைக்கும்……….

Advertisement