Advertisement

     வண்டுகள் ரீங்காரம் இடும் இரவு நேரம். அந்நேரம் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டகவே அந்த கும்மிருட்டில் அந்த பெண்னை துலாவிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
     நீண்ட நேரமான அவனின் தேடலுக்கு விடை தான் கிட்டவில்லை. “யாரு… யாருங்க? நீங்க எங்க இருக்கீங்க?” என்று சத்தம் வந்த திசையை நோக்கி கேட்டான்.
     இவனுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் சத்தம் மட்டும் அதிகரித்தது. சத்தம் வந்த திசையை நோக்கி முன்னேற முயன்றான் ஹர்ஷா. ஆனால் சத்தம் எந்த திசையில் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது என அவனால் கணிக்க முடியவில்லை.
     பின் குத்துமதிப்பாக ஒரு திசையை நோக்கி சென்றான். அங்கே ஒரு வீடு மட்டும் இருந்தது. ‌அதுவும் நன்கு இருளில் மூழ்கி இருந்தது. அந்த வீட்டை அடைந்து கதவை திறக்கவுமே விளக்குகள் ஒளிர்ந்தது.
     ஆனால் அந்த வீட்டின் ஆடம்பரம் அவன் மனதின் உள்ளே ஏதோ செய்தது. அங்கிருந்த அறை ஒன்றில் இருந்து தான் அந்த சத்தம் வந்துக் கொண்டிருந்தது.
     இப்போது மற்றதை விட்டு ஹர்ஷா வேகமாக அந்த அறையின் கதவை நோக்கி சென்றான். கதவு ஹர்ஷா கையை வைத்து தள்ளவும் அது திறந்து கொண்டது.
     எனவே எளிதில் உள்ளே சென்று விட்டான். ஆனால் உள்ளே அவன் கண்ட காட்சி அவனின் ரத்தத்தை உறைய வைப்பது போல் இருந்தது.
     அங்கே அவன் கண்டதோ ஒரு பெண் கதற கதற அவள் கையில் இருக்கும் குழந்தையை பிடுங்கி ஒருவன் சுவற்றில் அடிக்க செல்லும் காட்சி தான்.
     அப்போது தான் பிறந்த அந்த குழந்தையின் மீது இருந்த ரத்தம் கூட காயாததை பார்த்தும் யார் இப்படி ஒரு காரியம் செய்வது என கோபமடைந்த ஹர்ஷா அங்கே செல்ல துணிய அப்போது அங்கே வந்தார் ராஜசேகர்.
     அவன் தந்தையை அங்கே திடீரென கண்ட ஹர்ஷா திகைக்க ராஜசேகர் அக்குழந்தையை அந்த நபரிடம் இருந்து கைப்பற்றி அழகாய் அரவணைத்தார்.
     அதை ஹர்ஷா புன்னகையுடன் பார்த்திருக்க அந்த நபர் இப்போது ஹர்ஷாவை பார்த்துவிட்டான் போல். இப்போது அந்த நபரின் குறி ஹர்ஷா மீது பாய்ந்தது.
     ஹர்ஷா சுதாரிக்கும் முன்னே அந்த நபர் ஹர்ஷாவை நோக்கி கத்தியை வீச, அது அவன் வயிற்றில் பாய்ந்த நொடி வியர்த்து போய் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தான்‌.
     அவன் மனது வேகமாக அடித்து கொண்டது. அவன் கைப்பேசியை எடுத்து மணியை பார்க்க அது ஒன்று என காட்ட “சே கனவா! நிஜமா நடந்த மாதிரியே இருக்கு. என்ன இது இப்படி ஒரு கனவு.
     ஒருவேளை நேத்து பர்த் டேக்கு நைட்டு இருட்டில‌ போன எபக்ட்டா இருக்குமா?” என்று பலவாறு யோசித்தவன் “ஆனா இந்த கனவு ரொம்ப பயங்கரமா வித்யாசமா இருந்தது.
     இடையில அப்பா கூட வராங்க. ஒன்னும் புரியலயே” என்று தண்ணீரை எடுத்து குடித்து வைத்தான். அதன் மூலம் தன் மனதை சற்று சமாதானம் செய்ய முயன்றான்.
     ஆனால் அவன் அறியவில்லை இந்த பிறந்தநாள் தான் அவன் வாழ்வில் இனி இவ்வளவு மகிழ்ச்சியுடன் கொண்டாட போகும் பிறந்தநாள் என.
     அதை உணர்த்த தான் இந்த கனவும் வந்து சென்றதோ? இதுவும் விதி தனது விளையாட்டு என அமைதியாக பார்த்துக் கொண்டது.
     மனதை கொஞ்சம் சமன் செய்ய “இது சாதாரண கனவு! வெறும் கனவு தான். இதை பத்தி ரொம்ப யோசிக்காம இருப்பது தான் நல்லது” என மீண்டும் மீண்டும் மனதில் இதை நிறுத்தி மனதை சமன் செய்ய முயன்று அதில் வெற்றியும் கண்டான்.
     பார்வதி அவர் அறை, சமையல் அறை, பூஜை அறை என காலையில் இருந்து பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தார்‌. காரணம் இன்று ஞாயிறு ஹர்ஷாவிற்கு பெண் பார்க்க குறிக்கப்பட்ட நாள்.
     அதற்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு, காலை உணவை செய்ய வேலை ஆட்களை ஏவிக் கொண்டு, தானும் தயாராக என காலையில் இருந்தே வேலையில் மும்முரமாக இருந்தார்.
     அதே நேரம் மாடியில் ஒரு கண்ணையும் வைத்திருந்தார். ஏனெனில் குடும்பத்தில் ஹர்ஷாவை தவிர்த்து மற்ற அனைவரும் கீழே வந்து தேனீர் அருந்து விட்டு பெண் வீடு செல்ல கிளம்ப சென்று விட்டனர்.
     ஆனால் காலை எட்டு மணி ஆகியும் ஹர்ஷா கீழே வரவில்லை. எனவே சிறிது பதற்றம் கூட பார்வதியின் மனதில் ஏற்ப்பட்டது.
     அறை மணி நேரம் கடந்து தயாராகி வந்த விக்ரமை கண்ட பார்வதி “விக்ரம் கொஞ்சம் இங்க வாடா” என்றார் பதட்டமாக. அவரின் பதட்ட முகம் கண்ட விக்ரம் யோசனையுடன் அவரை நெறுங்கினான்.
     மேலேயே பார்வையை வைத்திருந்த பார்வதி “விக்ரம் ஹர்ஷா காலைல இருந்து இன்னும் கீழ வரவே இல்லை டா. தூக்கிட்டு இருக்கானா என்னன்னு ஒன்னும் புரியல.
     நீ போய் கொஞ்சம் ஹர்ஷா என்ன செய்றானு பாருடா. லேட் ஆகுது பொண்ணு வீட்டுக்கு போகனும்ல. என்னன்னு பாருடா” என்று அனுப்பினார்.
     பார்வதி கூறியதை கேட்ட விக்ரம் ‘என்ன ஆச்சு ஹர்ஷா இவ்ளோ நேரம் தூங்குற ஆள் இல்லையே. உடம்பு ஏதும் சரியில்லையா’ என்ற யோசனையில் தான் ஹர்ஷாவின் அறையை அடைந்தான்.
     இரவு கண்ட கனவின் தாக்கத்தால் மனதை ஒருவாறு சமாதானம் செய்தாலும் ஹர்ஷாவின் தூக்கம் தூர சென்றிருந்தது. வெகு நேரம் சென்றே அவனை தூக்கம் தழுவ மணி எட்டு ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தான்.
     ஹர்ஷாவின் அறையில் விக்ரம் கண்டதும் நிம்மதியாக உறங்கும் ஹர்ஷாவை தான். அவன் கழுத்தில் கை வைத்து உடல் நிலை நன்றாக இருப்பதை முதலில் உறுதி செய்த விக்ரம் ஹர்ஷாவை எழுப்பலானான்.
     விக்ரம் எழுப்பிய பின் எழுந்த ஹர்ஷா தூக்க கலக்கத்தில் விக்ரமை புரியாது பார்த்து வைத்தான். “சுத்தம்! தூக்கம் இன்னும் தெளியலை போலையே” என முணுமுணுத்த விக்ரம்,
     “என்ன மச்சான்! இன்னும் தூக்கம் போகலை போல” என்று கிண்டலாக இழுத்தவன் “இன்னைக்கு சண்டே உனக்கு பொண்ணு பார்க்க போறோம் அது நியாபகம் இருக்கா?
     நீ என்னடா இப்படி தூங்கற. உன் அருமை அத்தை வேற புல்லா ரெடி ஆகிட்டு கீழ வீட்டையே ரெண்டாக்கிட்டு இருக்காங்க. நீ எப்படா கீழ‌ வருவேன்னு மாடியவே முறச்சு முறச்சு பாக்குறாங்க.
     ஆனா நீ இன்னும் பெட்ட விட்டு எந்திரிக்காம இருக்க. என்ன பொண்ணு பார்க்க வர ஐடியா எதாச்சும் இருக்கா இல்லையா?” என்று நீளமாக பேசி முடித்தான்.
     விக்ரம் பேசிய பின்னே இன்றைய நாள் ஞாயிறு என நினைவு வர வேகமாக மணியை பார்த்தான். அது எட்டு நாற்பதை கடந்து கொண்டிருக்க வேகவேகமாக குளிக்க ஓடினான். அதன் பின் எல்லாம் ஜெட் வேகம் தான்.
     பத்தே நிமிடங்களில் வெளியே வந்த ஹர்ஷா விக்ரம் என்ற ஒருவன் அங்கே இருப்பதை கண்டு கொள்ளாது எந்த உடையை போட என அவன் அலமாரியில் தலையை விட்டு ஆராய தொடங்கினான்‌.
     மேலும் பத்து நிமிடங்கள் கடந்தது. நேரம் சென்றுக் கொண்டே தான் இருந்ததே தவிர ஹர்ஷா அலமாரியை விட்டு நகரவில்லை. பார்த்து பார்த்து கடுப்பான விக்ரம்
      “என்னடா அந்த அலமாரில புதையல் எதுவும் இருக்கா. இப்படி தேடிட்டு இருக்க?” என்றான் நக்கலாக. அதையெல்லாம் கிஞ்சித்தும் காதில் வாங்காத ஹர்ஷா தன் கைகளில் சில உடைகளை அள்ளி வந்து மெத்தையில் கிடத்தினான்.
      பின் ஒவ்வொரு சட்டையையும் எடுத்து தனக்கு எது பொருத்தமாக இருக்கிறது என வைத்து வைத்து பார்க்க துவங்கினான். அடுத்த ஐந்து நிமிடம் கடந்தும் ஹர்ஷா ஒன்றை கூட தேர்வு செய்யவில்லை.
     இதை கண்டு விக்ரமின் பொறுமை காற்றில் பறக்க “ஹலோ மிஸ்டர். ஹர்ஷவர்தன் என்ன பண்றீங்க” என்றான் கேள்வியாக.‌ பதில் வரவில்லை என்றதும் “கிரேட் இன்சல்ட் விக்ரம். கிரேட் இன்சல்ட்‌.
     திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறானே” என நொந்தபடி அவனை இழுத்து தன்னை பார்க்க செய்தான். உடையை தேர்ந்தெடுக்கும் போது நந்தியாக தனக்கு குறுக்கே வந்த விக்ரமை முறைத்த ஹர்ஷா “என்னடா?” என்றான் கடுப்பாக.
     “அடேய் எப்பா.. எவ்ளோ கோபம் வருது. எல்லாம் என் நேரம்” என சத்தமாக புலம்பியவன் “சரி சொல்லுங்க சார் சட்டைய லைனா வச்சு என்ன ஆராய்ச்சி செஞ்சுட்டு இருக்கீங்க” என்றான் கிண்டலாக.
     அதற்கு “பார்த்தா தெரியலையா. பொண்ணு பார்க்க போக நல்ல டிரஸா போட வேண்டாமா. அதான் நல்லா சட்டை எதுன்னு பாக்குறேன்” என்றவன் மீண்டும் திரும்பி தன் சட்டை ஆராய்ச்சியை தொடர்ந்தான்.
     “ம்ம் நீ நடத்து ராஜா! நடத்து” என்றுவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான். சில நிமிடங்களில் இரண்டு சட்டைகளை கையில் எடுத்த ஹர்ஷா விக்ரமிடம் “விக்ரம் இதுல எந்த ஷர்ட் நல்லா இருக்கு மச்சான்?” என்றான்.
     இரண்டு சட்டைகளையும் மாறி மாறி பார்த்தவன் “ம்ம்… இந்த புளு ஷர்ட் ஓகே தான். பட் இந்த கிரே ஷர்ட் நல்லா இருக்கு டா. இது ஓகே” என்றான் ஒரு சட்டையை காட்டி.
     ஹர்ஷா அந்த சட்டையை ஒரு பார்வை பார்த்தவன் அதை வைத்து விட்டு “இந்த புளு ஷர்ட் ஓகே. சரி மச்சான் நீ கீழ‌ போ. நான் ரெடியாகி வந்தரேன்” என்று விக்ரமை செல்ல சொன்னான்.
     ஹர்ஷாவின் பதிலில் கடுப்பின் உச்சியை அடைந்தான் விக்ரம். “ஏன்டா உனக்கே இது ஓவரா தெரியலை. இப்படி பண்றதுக்கு ஏன்டா என்கிட்ட கேட்ட” என்று ஆதங்கபட அவன் பேசியது காதில் விழாதது போல் விக்ரமை வெளியே தள்ளி கதவை அடைத்தான்.
     கதவை ஒரு தட்டு தட்டி “உன்னை போய் எழுப்பி விட வந்தேன் பாரு. என் புத்திய சொல்லனும். அப்படியே தூங்குடா மகனேன்னு விட்டுட்டு போயிருக்கனும்.
     நல்லா வச்சு செய்றீங்க டா காலைலையே” என புலம்பிக் கொண்டே படிகளில் இறங்கி சென்றான்.
     கீழே வந்து சேர்ந்த விக்ரமுக்கு வேலைகளும் வந்து சேர்ந்தது. பார்வதி ஹர்ஷாவின் நிலையை அறிந்த பின் “இந்தா டா இந்த பைய கொண்டு போய் கார்ல வச்சிட்டு வா” என்று அனுப்பினார்.
     பின் இதை செய் அதை செய் என பார்வதி வேலை ஏவ “எம்மா என்ன எல்லா வேலையையும் என் தலைல கட்டுற. இங்க பாரு வேத்து ஊத்துது.
     பொண்ணு பார்க்க போறப்ப கொஞ்சமாச்சும் பிரஸ்ஸா போக வேண்டாமா” என்றான் ஆதங்கமாக. அவனை ஒருமாதிரி பார்த்த பார்வதி “உனக்காடா பொண்ணு பார்க்க போறோம்.
     ஹர்ஷா குட்டிக்கு தானே. போடா போய் பொழப்ப பாரு. வந்துட்டான்” என நொடித்துக் கொண்டு சென்றார். போகும் பார்வதியை கண்டு “மம்மி உன் டைரில குறிச்சு வச்சுக்க.
     எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப நானும் இப்படி சீன போடல என் பேரு விக்ரம் இல்ல இல்ல இல்ல” என தலையை ஆட்டி ஆட்டி பேச பார்த்திருந்த அனைவரும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
     இவ்வளவு அலப்பறைகளுடன் பெண் பார்க்க அனைவரும் கிளம்ப மாப்பிள்ளை ஹர்ஷா இன்றி தான் பெண்னை காண கிளம்ப போகிறோம் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
-மீண்டும் வருவான்

Advertisement