Advertisement

     ஹர்ஷவர்தன் அறைக்கு சென்றவன் குளித்து வந்துவிட்டு செய்த முதல் வேலை விக்ரம் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தது தான்.
     இல்லையென்றால் அவனின் அத்தையின் முகம் வாடிவிடுமே. அவன் அத்தை முகம் லேசாக மாறினாலும் அவனால் தாங்க முடியாததே அதன் காரணம்.
     பின்னே அன்னை இல்லா இவர்கள் இருவரையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் சொந்த பிள்ளைகளுக்கு மேலாக கவனித்து கொள்கிறாரே. எனவே தன் கைப்பேசியை எடுத்தான்.
     அதில் இருந்த புகைப்படத்தை தொட்டவன் தன் முன்னே திரையில் விரிந்த முகத்தை பார்த்ததும் அவனின் மனதை ஒரு நிமிடம் ஏதோ ஒன்று ஈர்த்தது.
     அந்த பெண்ணின் கண்கள் தான் அது. பார்த்தவுடன் ‘எப்பா எவ்ளோ பெரிய கண்ணு..?’ என்று தான் நினைத்தான். ஆம் அவள் கண்கள் இயல்பிலே சற்று பெரியதாக இருந்தது. ஆனால் அதுவும் அவளின் அழகை உயர்த்தி தான் காட்டி சென்றது.
     அந்த கண்களின் வசீகரத்தில் சில நிமிடம் அந்த கண்ணை மட்டுமே பார்த்தான் ஹர்ஷா‌. அதை அவனே உணராது போனது தான் அவன் விதியோ?
     அதன்பின் அந்த பெண்ணின் முழு முகத்தை காண அதில் இருந்த சாந்தமான சிறு முறுவலை பார்த்தான். அதை கண்டு இந்த படங்களில், கதைகளில் வருவது போல் எந்த பல்ப்பும் அவன் மனதின் உள்ளே இப்போது எரியவில்லை.
     ஆனால் மனதில் ‘அமைதியான பொண்ணா இருப்பா போல‌. நம்ம ஃபேமிலிக்கு செட் ஆவான்னு‌ தான் தோனுது‌. அழகா இருக்கா. இல்ல இல்ல ரொம்ப அழகா இருக்கா…’ என தன் போக்கில் நினைத்தவள் தன் கையை பார்த்தான்.
     ‘ம்ஹீம் அவ பக்கத்துல நாம கொஞ்சம் கலர் கம்மியா தான் தெரிவோம் போலையே’ என எண்ணியவன் தன் எண்ணம் போகும் திசையை கண்டு
     ‘ஹோ.. என்ன ஹர்ஷா இது சின்ன பசங்க மாதிரி கலர்லா பாக்குற. அந்த பொண்ணு கேரக்டர் தான் முக்கியம். அது தான் அவளோட அழக சொல்லனும். அவளோட கலர் இல்ல ம்ம்..’ என தன் தலையிலே கொட்டி கொண்டான்.
     ‘ஆனால் அவள் முகத்தை கண்ட போது ஸ்பெஷலாக மனதினுள் எதுவும் தோன்றவில்லையே ஏன்’ என எண்ணியவன் பின் ‘சரி பழக பழக பிடித்துவிடும் போல’ என்று எண்ணி கொண்டான்.
     ‘பலர் தங்கள் வாழ்க்கையின் பயணத்தில் இப்படி தானே முதலில் புகைப்படத்தில் அறிமுகமாகி பின் பழகி பார்த்து வாழ்வில் ஒன்றாய் பயணம் செய்கிறார்கள்!!’ என எண்ணிய ஹர்ஷாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
     ஆனால் ஹர்ஷா அந்த பெண்ணின் கண்ணை பார்க்கையிலே அந்த கண்களில் தன்னை தொலைந்து விட்டதை எப்போது உணர்வானோ என எண்ணிய விதியும்
     “ஆனா இவன் இவ்ளோ டியூப் லைட்டா இருக்கக் கூடாது” என இவனை கிண்டல் செய்து நின்றது. அதன்பின் அவளின் பையோ-டேட்டாவை எடுத்து அதில் இருக்கும் அவள் பெயரை பார்த்தான்.
     அந்த பெயர் அவனிற்கு சட்டென பிடித்து விட்டது. “அனுக்ஷ்ரா” தானும் ஒரு முறை மனதினுள் மெதுவாக சொல்லி பார்த்தவன் மகிழ்வுடன் தன் அத்தையை காண சென்றவன்.
      “ம்ம். அனு ஸ்வீட் நேம். ஹர்ஷவர்தன் – அனுக்ஷ்ரா வாவ் நைஸ், சௌன்ட்ஸ் கிரேட்” என சொல்லி பார்த்தவன் பார்வதியை காண சென்றான்.
     அவன் மெத்தையில் விட்டு சென்ற கைப்பேசியில் அனுக்ஷ்ரா அழகாய் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
     அவன் கீழே செல்லும் நேரம் தான் அபியும் அம்முவும் வந்தனர். இருவரும் கைக் கோர்த்துக் கொண்டு வரும் தோற்றம் ஹர்ஷாவிற்கு என்றும் இல்லாது இன்று வேறுப்பட்டு தெரிந்தது.
     எப்போதும் ஆர்ப்பாட்டமாக வரும் அம்முவோ இன்று அமைதியே உருவாக வர, அபியின் முகமோ மகிழ்ச்சியை தத்தெடுத்து இருந்தது.
     அதே போல் இருவரின் முகமும் ஒரு வித பொலிவுடன் இருக்கவே இருவரையும் ஊன்றி பார்த்திருந்தான் ஹர்ஷா.
    உள்ளே வந்த அபி ஹர்ஷா ஹாலில் தங்களையே பார்த்தபடி நின்றதை கண்டு சற்று திடுகிட்டாலும் அவள் கையை ஆறுதலாக அழுத்தியே விட்டான்.
     ஹர்ஷாவை பார்த்த அம்மு திருதிருவென விழித்தாள். பின் அபியின் ஆறுதலான செய்கையில் மெல்ல தன் அறைக்கு சென்று விட்டாள்.
     இதையெல்லாம் பார்த்த ஹர்ஷா எதுவும் சொல்லாது சோஃபாவில் சென்று அமர்ந்து விட்டான். அபியும் அமைதியாக அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
     அவனை பார்த்தவாறே “அத்தை” என்றான் ஹர்ஷா. அவனின் ஒரே சொல் பார்வதியின் காதை எப்படி தான் எட்டியதோ “சொல்லு ஹர்ஷா குட்டி” என்று வந்துவிட்டார்.
     அவன் “என்ன அத்தை ஒரே சௌன்ட்க்கு வந்துட்டீங்க. எங்க இருந்தீங்க” என்றான் ஆச்சரியமாக. “இங்க பூஜை ரூம்ல தான் குட்டி இருந்தேன். அதை விடு.
     நீ சொல்லு அந்த போட்டோ பாத்துட்டியா டா. பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா?” என்றார் ஆர்வமாக. ஒரு நிமிடம் அனுவின் கண்கள் அவன் சிந்தையை நிறைத்தது.
     அதற்குள் பார்வதி பொறுமையை இழந்தவர் “ஹர்ஷா ஹர்ஷா குட்டி” என்று சில முறை அழைத்து விட்டார். அதன் பின்னே கனவில் இருந்து விழித்தது போல “ஹான் சொல்லுங்க அத்தை” என்றான்.
     அவன் பதிலில் விசித்திரமாக அவனை பார்த்த பார்வதி “என்ன ஹர்ஷா குட்டி என்ன சொல்ல சொல்ற. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா” என்றார்.
     அதன்பின் தான் பார்வதி கேட்டது நியாபகம் வர “அது அத்தை எனக்கு ஓகே தான். வீட்ல உங்க எல்லாத்துக்கும் ஓகேன்னா புரசீட் பண்ணுங்க அத்தை” என்று முடித்துவிட்டான்.
     அவன் மனசாட்சியோ ” நீ அவளோட முழு பெயரை அனு என சுருக்கி அழைக்கவே தொடங்கிவிட்டு இப்போது என்ன வீட்ல இருக்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகேன்ற” என கேள்வி எழுப்ப
     ‘நீ கம்முன்னு கிட’ என அதை துரத்தியவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
     இப்போது ஆயிரம் தாமரை மலர்கள் மலர்ந்தது போல் பார்வதியின் முகம் விகசித்தது. இந்த செய்தியை அண்ணன் தந்தையிடம் சொல்ல அந்த வயதிலும் சிட்டாக பறந்து சென்றார் பார்வதி.
     ஹர்ஷாவும் தனதறைக்கு அவன் கைப்பேசியை தேடி சென்றுவிட்டான். ஆனால் அருகே இருந்த அபி தான் ஆ.. வென வாயை பிளந்து அமர்ந்திருந்தான்.
     ‘அந்த பெண்ணை பத்தி பேசியதும் அண்ணா முகம் என்ன இப்படி குளோ ஆகுது. அப்போ கண்பார்மா அவங்க தான் என் அண்ணி போலையே.
     வாவ்!! அப்போ சீக்கிரமே அண்ணா மேரேஜ். யாஹூ…’ என மனதில் எண்ணியவன் இங்கு நடந்ததை அம்முவிடம் பகிர்ந்து கொள்ள வேகமாக சென்றான்.
     விஸ்வநாதன் வசுந்தரா மற்றும் கணபதியை அவர் அறையில் வைத்து திட்டிக் கொண்டிருக்க எப்போதும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் இவர்கள் இருவரும் இன்று எதிர்த்துப் பேசினர்.
     “முடியாது ண்ணா. உனக்கு அது என்ன நாள்ன்னு தெரியும்ல. எல்லா வருஷமும் நாங்க அந்த நாள் ஊருக்கு போவோம்னும் தெரியுமே.
     அப்புறம் ஏண்ணா இப்ப போக வேணாம்னு சொல்ற” என்றார் தவிப்பாக. இப்போது சட்டென தன் குரலை கடுமையான தொனியில் இருந்து பாசமான தொனிக்கு மாற்றியவர்
     “என்ன வசும்மா இது. இவ்ளோ வருஷம் ஆகியும் அதை உங்களால மறக்க முடியலையா. உங்க லைப் இப்ப ஸ்மூத்தா தானே போய்கிட்டு இருக்கு.
      அதை மறந்துட்டு நிம்மதியா வாழ வேண்டியது தானே. இன்னும் ஏன் இப்படி இருக்கீங்க” என்றார்.
     இவ்வளவு நேரம் விஸ்வநாதன் பேச்சில் கோபமான கணபதி இப்போது பேச ஆரம்பித்தார். “மறந்துட்டு வாழ்றதா. எதை மறந்துட்டு வாழுன்னு சொல்லிட்டு இருக்கீங்க.
     எங்க இழப்பு எவ்ளோ பெருசுனு உங்களுக்கு தெரியும்ல. அப்புறம் எப்படி உங்காள இப்படி பேச முடியுது.
     அதுக்காக தான் இவ்வளவு வருஷமா நாங்க எங்க ஊருல இருக்க கோயில்க்கு போய் தானம் தர்மம்னு செஞ்சு எங்க மனச ஆத்திக்கிறோம்.‌ அது பொறுக்கலையா உங்களுக்கு.
     இவ்ளோ நாள் நீங்க எங்கள எவ்ளோ ஜாடமாடையா பேசி இருப்பீங்க. எங்க பையன விட்டு பேச வச்சீங்க. எங்களுக்கு அது புரியாம இல்லை.
     ஆனா எல்லா புரிஞ்சும் தெரிஞ்சும் நாங்க அமைதியா போனது உங்க மேல உள்ள பயத்தினால‌ ஒன்னும் இல்லை. ஏன் எனக்கு உங்க மேல என்னைக்கும் பயம் இருந்ததும் இல்லை.
     நாங்க செஞ்ச பெரிய தப்பு இல்ல பாவம்னு சொல்லனும். அதனால‌ எங்க மனச கொன்னுட்டு இருந்த குற்ற உணர்ச்சி இதுக்காக மட்டும் தான் அமைதியா போனோம்.
     அதோட வசுந்தராவும் பொறுத்து போக சொன்னதால தான் அமைதியா போய்கிட்டு இருக்கேன்‌. நீங்க உங்க லிமிட்ல இனிமே நின்னுக்கோங்க.
     இது எங்க பர்ஸ்னல். இன்னும் சொல்ல போனா இது எங்க குடும்ப விஷயம். அதுல நீங்க தலையிடாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது” என்று நீளமாக பேசி முடித்தவர் வசுந்தராவை கண்டு வா என்பது போல் தலை அசைத்து சென்றார்.
     வசுந்தராவும் கண்களில் நீரோடு கணபதியின் பின்னே அமைதியாக சென்றார். கணபதியின் இந்த அவதாரத்தை பார்த்திருந்த விஸ்வநாதனுக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
     இன்று வரை அவர் மீது உள்ள பயத்தினால் தான் கணபதி அமைதியாக செல்வதாக எண்ணியிருந்தார் விஸ்வநாதன்.
     ஆனால் அப்படி எதுவும் இல்லை உன் மீது பயம் கொள்ள எனக்கு என்ன இருக்கிறது என சொல்லாமல் சொல்லி சென்று விட்டார் கணபதி.
     இங்கிருந்து சென்ற கண்பதி வசுந்தராவை அழைத்து கொண்டு தன் சொந்த ஊரான கோயம்புத்தூரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்.
     இதை கேள்விப்பட்ட விஸ்வநாதன் இனி கணபதியிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். அதுவும் கணபதி இவரிடம் சொல்லாமல் ஊர் சென்றது அவர் எண்ணத்தை உறுதி செய்தது.
     அங்கே தன் சொந்த ஊரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கணபதி மற்றும் வசுந்தராவின் மனதில் பழைய நினைவுகளே வந்து சென்றன.
     பழைய நினைவுகள் என்றும் சுகத்தை மட்டும் தருவதில்லையே சுமையையும் சேர்த்தே கொண்டு வருகிறதே. என்ன செய்ய.
     இவ்வளவு நேரம் ஒன்றாக பயணம் செய்யும் இவர்கள் இருவரும் பேசாமல் அமைதியாக தான் பயணித்து கொண்டிருந்தனர்.
     ஆனால் இவர்கள் மனம் அதற்கு நேர் மாறாக பல நினைவுகளில் தத்தளித்துக் கொண்டு தான் இருந்தது. இத்தனை வருடம் மாறாத தங்கள் சோகம் திடீரென இப்போது மாறவா போகிறது என எண்ணிக் கொண்டனர்.
     பின் சரி விதி நமக்கு இன்னும் என்னவெல்லாம் தர காத்திருக்கிறதோ அதன்படி அதை அனுபவித்து செல்வோம் என எண்ணி தங்கள் மனதை எப்போதும் போல் இப்போதும் தேற்றிக் கொள்ள இவர்கள் போகும் இடமும் வந்தே விட்டது‌.

Advertisement