Advertisement

     நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆதிராவிற்கு கல்லூரி துவங்கி ஐந்து மாதங்கள் நிறைவுற்றது. அதே போல் விஷ்ணு மனதில் ஆதிரா மீது தோன்றிய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே சென்றது.
     அவனின் பார்வை மாற்றங்கள், ஆதிராவிடம் நடந்து கொள்ளும் முறையை கண்டு வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் விஷ்ணுவின் நோக்கம் புரிந்தது ஆதிராவை தவிர.
     இன்றும் வகுப்பு முடிந்த பின் ஆதிராவை பார்வையால் வருடி செல்லும் விஷ்ணுவை கண்ட சந்தியா ஆதியை திரும்பி பார்த்தாள். அவள் வழக்கம் போல் எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த வேளைக்கான புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
     இதை கண்டு ஆதியின் தலையில் நான்கு குட்டு வைத்தால் என்ன என எண்ணிய சந்தியா, அதை விடுத்து வழமை போல் இது குறித்து ஆதியிடம் பேச துவங்கினாள்.
     “ஆதி உனக்கு ஏன் புரியலை. அந்த புரபசர் பார்வையே சரி இல்ல டி‌‌. புரிஞ்சிக்கோ. அவர் கிட்ட உனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லன்னு சொல்லிடு டி” என்று எப்போதும் போல் அன்றும் புலம்பினாள் சந்தியா.
     அதற்கு “உலறாத சந்து. நம்ம சார் ஒன்னும் அப்படி இல்ல. என் கிட்ட சப்ஜெக்ட் விஷயத்தை தவிர வேற எதுவும் பேசக் கூட மாட்டாரு. நீங்க எல்லாரும் தான் தேவை இல்லாம வொர்ரி பண்ணிகிறீங்க” என்ற அதிரா
     “கூல் சந்து! வா செமஸ்டர் வருது படிக்க நிறைய போர்சன் இருக்கு. அதை கம்ப்லீட் பண்ணலாம். எங்க ஹர்ஷா அத்தான் வேற நான் மார்க் கம்மியா வாங்கினா, என்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிருவாரு” என்று தன் போக்கில் புலம்பி புத்தகத்தை எடுத்தாள்‌.
     ‘இவள் அபி அண்ணாவோட காதலையே கண்டு பிடிக்கல. இதுல இவ விஷ்ணு சார் பார்வையோட மீனிங் கண்டுபிடிச்சிருந்தா தான் ஆச்சரியப்படனும்’ என எண்ணிய சந்தியா
     ‘பேசாம அபி அண்ணாட்ட சொல்லி விடலாமா?’ என்று ஒரு நொடி யோசித்தாள். பின் ‘அதான் இப்ப எந்த பிராப்லமும் இல்லையே. அபி அண்ணாக்கிட்ட சொல்லி புதுசா சண்டைய கிளப்பி விட வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்தாள்.
      “ஹே சந்து! இன்னும் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க” என்ற ஆதிராவின் குரலில் தெளிந்தவள் “ஹான் ஒன்னும் இல்லை. வா படிக்கலாம்” என்றாள். அதன் பின் தோழிகள் இருவரும் தங்கள் பாடத்தில் கவனம் செலுத்த துவங்கினர்.
     இப்படியாக நாட்கள் செல்ல பரிட்சை நாட்களும் வந்தது. ஆதிரா ஹர்ஷா மற்றும் அபியின் சிறு உதவிகளோடு தன் பாடங்களை திறம்பட படித்து பரிட்சையிலும் நன்றாகவே எழுதி வந்தாள்.
     “ஹே சந்து! இந்த எக்சாம் எப்படி எழுதுன?” என்று ஆர்ப்பாட்டமாக கேட்டுக் கொண்டே சந்தியாவை நோக்கி வந்தாள் ஆதிரா. அதற்கு “ம்ம் ஏதோ எழுதியிருக்கேன்.
     ஓகே தான் டா‌. நீ எப்படி எழுதின?” என்ற சந்தியா அவள் பதில் சொல்லும் முன்னே “உனக்கு என்ன கவலை. அதான் ரெண்டு இன்டலிஜன்ட் டாக்டர்ஸ் வீட்ல இருக்காங்க.
     அவங்க உனக்கு சொல்லி தராங்க. நீயும் எப்பவும் எக்சாம்ல நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடுற. என் நிலைமை தான் சொல்ற மாதிரி இல்ல. போ போ” என தன் போக்கில் பேசிய சந்தியாவை தன் புறம் திருப்பினாள் ஆதி.
     “ஹே..ஏ.. என்ன சந்து பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. அத்தான் இரண்டு பேரும் என்னோட டௌட்ஸ் கிளியர் பண்ணுவாங்க அவ்ளோ தான். இதுக்கு போய் நீ பீல் பண்ற.
     ஏன் உங்க அம்மா கூட டாக்டர் தான். நீயும் தான் டௌட் கேளேன். யார் வேண்டாம்னு சொல்றாங்க” என சந்தியாவை கிண்டல் செய்யும் விதமாக முடித்தாள் ஆதி.
     அதற்கு சந்தியா “அப்படியே கேட்டுட்டாலும் எங்க அம்மா கிட்ட போடி” என்று சந்தியா கூறும் போது அவர்களுடன் விக்கியும் வந்து சேர்ந்தான். சந்தியாவின் தாய் கொஞ்சம் கண்டிப்பானவர்.
     அதனால் அவள் தன் தாயிடம் பேசவே தயங்கும் ரகம். பேச்செல்லாம் கல்லூரியில் அதுவும் ஆதிரா மற்றும் விக்கியிடம் மட்டுமே. அதுவும் ஆதிராவின் துறுதுறு குணமும், அவள் வீட்டு சூழல் சந்தியாவிற்கு மிகவும் பிடிக்கும்.
     சந்தியாவிற்கு ஆதியிடம் நட்பு கொள்ள இதுவும் ஒரு காரணம் ஆகும். எனவே தான் தன் அம்மாவை பற்றி ஆதி கூறியவுடன் இப்படி கூறினாள்.
     விக்கி வந்த உடன் அவனையும் சேர்த்து கிண்டல் அடிக்க ஆர்மபித்த ஆதியிடம் “அம்மா தாயே! எக்சாம்-ங்குற  பெரிய போர இப்பதான் முடிச்சிட்டு வந்துருக்கேன்.
     தயவு செஞ்சு என்னை பேசி பேசியே டயார்ட் ஆக்காம வாங்க. வீட்டப் பாத்து போவோம்” என  பாவமாக சொன்ன விக்கியை பேசியே இன்னும் களைப்படைய செய்தனர் தோழிகள்.
      பின் மூவரும் சிரிப்புடன் பேசிக் கொண்டே தேர்வு நடைபெற்ற கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர். ஆதியை அழைத்து செல்ல அபியும் அருகிலேயே தன் வண்டியுடன் காத்துக் கொண்டிருந்தான்.
     அதே நேரம் விஷ்ணுவும் ‘இவ்வளவு நாட்கள் பொருத்தது போதும்’ என தன் மனதிலிருந்த காதலை சொல்ல ஆதிராவை நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்தான்.
    அருணாசலம் மருத்துவமனை. ஹர்ஷா கடைசியாக அந்த மூன்றாம் தளத்தில் ரௌண்ட்சை முடித்து விட்டு தன் அறைக்கு சென்று அமர்ந்தான்.
     அவன் உட்கார்ந்த பின் தன் முன்னே இருந்த திரையை ரிமோட் மூலம் இயக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரம் என்னையும் பார் என அழைத்தது அவனின் கைப்பேசி. அழைத்தது வேறு யாரும் இல்லை ஹர்ஷாவின் அருமை அத்தை மகன் விக்ரம் தான்.
    விக்ரமின் அழைப்பு என்றவுடனே ஹர்ஷாவிற்கு என்ன விஷயம் என புரிந்து விட்டது. ‘இன்னைக்கு யாரோ! ம்.ஹீம்…’ என பெருமூச்சு எழுந்தது.
     ஹர்ஷா போனை எடுத்து உடன் அவன் பேசும் முன்னே “ஹர்ஷா நான் ஒரு போட்டோ அனுப்புறேன். உனக்கு ஓகே வான்னு பாத்து சொல்லு” என்றான்.
     அதற்கு “என்னடா இது. நான் தான் யாரா இருந்தாலும் ஓகே நம்ம ஃபேமிலிக்கு செட் ஆனா போதும்னு சொல்லிட்டனே. அப்புறம் என்ன. அத்தைக்கு, வீட்ல இருக்க உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எனக்கும் ஓகே டா” என்றான்.
     “என்ன ஹர்ஷா இப்படி பேசுற. உனக்கு பிடிச்சா தானே மேல மூவ் பண்ண முடியும். நீ தானே வாழ போற. அப்ப நீதானே பாத்து சொல்லனும். சீக்கிரம் பாத்து சொல்லுடா” என்றான் நியாயமாக.
     சட்டென குதூகலமான குரலுக்கு தாவிய ஹர்ஷா “என்னடா விக்ரம். என்னைவிட நீதான் என்னோட மேரேஜ்ல இவ்ளோ இன்ட்ரஸ்ட் காட்டுற.
     என் மேரேஜ் முடிஞ்சா தான் உன் ரூட் கிளியர் ஆகும்னு ரொம்ப தீவிரமா இறங்கீட்டியோ?” என்றான் கிண்டலாக. அதற்கு காரணமும் உண்டு.
     அன்று கோமதி வந்து சென்ற பின் தன் வேலையை ஆரம்பித்து விட்டார் பார்வதி. வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தவர் ஹர்ஷாவின் திருமண விஷயத்தை எடுத்தார்.
   ஹர்ஷாவின் வயதும் இன்னும் சில மாதங்களில் முப்பதை நெருங்க இருப்பதும் பார்வதியின் இந்த முடிவிற்கு ஊக்கம் சேர்த்து சென்றது.
     கோமதி மூக்கில் விரல் வைக்கும் அளவில் பெண்ணை பார்த்து, ஹர்ஷாவின் திருமணத்தை நடத்த திட்டமிட்டார்.
     அதன் தாக்கம் அன்றே தரகரையும் வரவைத்து விட்டார். அன்று வந்திருந்த நபரை பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை.
     பின் அவர் பெண் பார்க்கும் தரகர் என தெரியவர அதிர்ந்து தான் போனான் தன் அத்தையின் வேகம் கண்டு. முழுமூச்சாக அன்று பெண் தேடும் வேட்டையில் இறங்கியவர் தான் பார்வதி.
     இன்று ஐந்து மாதங்கள் முடிந்த பின்னும் அதே வேகத்துடன் ஹர்ஷாவிற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். பல வசதியான வீட்டு பெண்களின் வரன்கள், நிறைய படித்த பெண்களின் வரன்கள் என பல ஜாதகங்கள் வந்தன.
     ஆனால் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் ‘அது இப்படி, இது அப்படி’ என ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து கொண்டிருக்கிறார் பார்வதி.
    அவரிடம் இது குறித்து கேட்டால் “ஹர்ஷாவிற்கு இவள் சுத்தமாக பொருந்த மாட்டாள். என் ஹர்ஷா குட்டி இருக்க இருப்புக்கு எவ்ளோ லட்சனமான பொண்ணா பாக்கனும்” என்பார்.
     இவரின் அலுச்சாட்டியங்களை காணும் ஹர்ஷாவிற்கு ‘ஹையோ’ என்றானது. ஆனால் பார்வதியின் தூய்மையான அன்பை காணும் போது தன் அன்னைக்கு மேல் தான் தெரிந்தார்.
     அன்றிலிருந்து ஹர்ஷாவிடம் பெண்ணின் புகைப்படங்கள் காட்டி சம்மதம் பெற வேண்டிய பெரும் பொருப்பு விக்ரம் தலைமையில் விழுந்தது.
     எனவே ஒவ்வொரு முறையும் விக்ரம் தவறாது கூறும் இதே வரிகளுக்கு ஹர்ஷாவும் சலிக்காது கிண்டல் அடிப்பான். ஆனாலும் தன் வீட்டில் வரப்போகும் முதல் திருமணத்தை ஆவலாக வரவேற்க விக்ரமும் தன் அன்னையோடு சேர்ந்து இறங்கிவிட்டான்.
     இதையெல்லாம் எண்ணி பார்த்த ஹர்ஷாவின் இரண்டு நிமிட அமைதியை பொறுக்காமல் “ஹர்ஷா… அடேய் ஹர்ஷவர்தனா….” என்னும் விக்ரமின் அலறல் மீட்டது.
     “ப்ச் என்னடா” என்றான் சலிப்புடன். “என்ன என்னடா. இவ்ளோ நேரம் என்ன கதையா சொல்லிட்டு இருந்தேன். என்ன பெத்த ஆத்தா, அதான் உன் அருமை அத்தை உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்காங்க.
     அலசு அலசுன்னு அலசி ஆராஞ்சு இந்த பொண்ணு தான் உனக்குன்னு அடிச்சு சொல்லுராங்க. அப்புறம் என்னோட வருங்கால தங்கச்சி இந்த பொண்ணு தான்னு என அடி மனசும் ஆழமா சொல்லுது மச்சான்.
    சோ நீ என்ன பண்ற. இப்ப நான் அனுப்புற போட்டவ பாத்து உனக்கு புடிச்சிருக்கான்னு சொல்லுடா. என்ன ஓகேவா” என்றான் நீளமாக.
     விக்ரம் கூறியதை சிரிப்புடன் கேட்டிருந்த ஹர்ஷா “சரி அனுப்பு. பாக்குறேன்” என்றான் கடைசியாக. “இதை ஆரம்பத்திலேயே சொல்றதுக்கு என்னடா. இவ்ளோ நேரம் என் தொண்ட தண்ணி வத்தரு அளவுக்கு கத்த விடுற” என புலம்பியபடி அழைப்பை வைத்தான்.
     கைப்பேசியை வைத்தவுடன் வாட்சப்பில் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது. ‘தீயா வேலை செய்றான் போலையே’ என விக்ரமை எண்ணி சிரிப்புடன் போனை எடுத்த ஹர்ஷா,
     அதே நேரம் தன் கண்முன்னே தெரிந்த பெரிய திரையில் கண்ட காட்சியில் அவனின் கோபம் சுர்ரென மேலே ஏறியது. விக்ரம் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை கூட காணாது அவன் சிந்தையை கலைத்த விஷயத்தை நோக்கி அவன் கால்களும் வேகமாக முன்னேறியது.

Advertisement