Advertisement

       என்றும் போல் அன்றும் கல்லூரி முடிந்து தங்கள் கார் வருவதற்காக கல்லூரி வாயிலில் நின்றிருந்தனர் அனுக்ஷ்ராவும் ரித்திகாவும்.
     அந்த நேரம் பக்கத்து கல்லூரி மாணவன் ஒருவன் அவர்களிடம் வந்தான். வந்தவன் “அ.. அக்கா! அக்கா! ஒரு நிமிஷம்” என்றான் தயக்கமாக. அனுக்ஷ்ரா திரும்பி பார்த்து என்னவென கேட்டாள்.
     அவன் திரும்பி அவனை அனுப்பிய மாணவர்களை பார்க்க “ம்ம்.. சொல்லு” என்று அங்கிருந்தே ஊக்கப்படுத்தினார்கள் அவர்கள்.
     அந்த மாணவனை காண சிறு வயதாக தெரிய, அவனின் பதட்டம் சொல்லாமல் சொல்லியது அவன்‌ முதலாம் ஆண்டு மாணவன் என்று.
     “அது வந்து அக்கா… அது” என்று இழுத்தவனிடம், “என்ன தம்பி என்ன வேனும். எதுக்கு கூப்பிட்ட?” என்றாள் அனு. “அக்கா நான் பக்கத்து காலேஜ் க்கா.
     பர்ஸ்ட் இயர்‌. ஊருக்கு புதுசு. இன்னைக்கு தான் ஜாயின் பண்ணுனேன். அந்த அண்ணாலாம் காலைல என்கிட்ட ரேகிங் செஞ்சாங்க” என்று ஒரு குழுவாக தள்ளி நின்றிருந்த மாணவர்களை காட்டினான்.
     அனு அங்கே திரும்பி பார்க்கையில் அந்த மாணவர்கள் குழுவின் எல்லோரின் பார்வையும் இங்கே தான். மீண்டும் தன் அருகில் இருந்த மாணவனை பார்த்தாள்.
      “அப்போ ஒரு சார் வரவும் என்னை விட்டுட்டாங்க. ஆனால் இப்ப கிளாஸ் முடிஞ்சு வரப்ப மறுபடியும் நான் அவங்ககிட்டயே மாட்டிக்கிட்டேன். காலைலக்கும் சேத்து வச்சு இப்ப ரொம்ப கிண்டல் பண்ணுனாங்க.
     அப்புறம் வெளிய கூட்டிட்டு வந்தாங்க. அப்ப நீங்க நிக்கிறத பாத்த உடனே உங்ககிட்ட பேச சொன்னாங்க” என்றவன் இப்போது மிகவும் தயங்கினான்.
     ஓரளவு சூழலை புரிந்த அனு அந்த மாணவனையும் பார்க்க பாவமாக இருக்கவே “சரி பேசிட்டேன்னு போய் சொல்லிரு” என்றாள். இவ்வளவு நேரம் பேசியதை தூரத்தில் இருந்து அந்த மாணவர்களும் பார்த்துக் கொண்டு தானே உள்ளனர்.
     எனவே இவன் சென்று கூறினால் விட்டு விடுவர் என நம்பினாள். அது மட்டும் அன்றி பக்கத்தில் நின்றிருந்த ரித்து வேறு அந்த மாணவன் வரவுமே பயத்தில் அனுவின் கைகளை பற்றிக் கொண்டாள்.
      ஆனால் அப்போதும் அவன் தயங்கி நிற்கவே “அதான் சொல்லிட்டேன்ல தம்பி. நீ ஏன் இன்னும் இங்க நிக்கிற போ” என்றாள் அனு சற்று அழுத்தமாக.
      ஏனெனில் அனுவையும் ரித்துவையும் அழைத்து செல்ல எந்த நேரமும் அவர்கள் கார் வந்துவிட கூடும். எனவே அவனை முடிந்த மட்டும் வேகமாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த நினைத்தாள்.
     ஆனால் அந்த மாணவன் இன்னும் பயந்தவாறு “அக்கா அது… அது. இந்த ரோஸ உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க க்கா. சாரி க்கா. இதை மட்டும் நீங்க வாங்கிங்க.
     அப்புறம் தூக்கி போட்டாக்கூட ஓகே. பிளீஸ் இப்ப வாங்கிங்க க்கா. நான் போறேன்” என்றான் இரைஞ்சலாக. அவனை முடிந்த மட்டும் முறைத்த அனு “ஒழுங்கா அதை தூக்கி போட்டுட்டு போ” என்றாள் மிரட்டலாக.
     இந்த நேரம் பார்த்து சரியாக அவர்கள் முன் வந்து நின்றது அனு மற்றும் ரித்துவிற்கான கார்.‌ ஆனால் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் இருந்ததோ விஸ்வநாதன்.
     ஏற்கனவே அந்த மாணவனின் செய்கையில் பயந்திருந்த ரித்துவிற்கு இப்போது கண்களில் நீரே வந்து விட்டது. அனுவிற்கும் உள்ளுக்குள் ரயில் வண்டி ஓடும் சத்தம் தான்.
     இன்று வீட்டிற்கு சென்ற பின் என்ன ஆகப்போகிறதோ என எண்ணுகையில் இதயமே வெளியே வந்து விழும் போல் ஆனது. அதுவும் விஸ்வநாதன் இவர்களை திரும்பி பார்த்த பார்வையில் இருந்த உக்கிரம் சொல்லாமல் சொல்லியது இங்கு நடந்ததை அவர் பார்த்து விட்டாரென.
      வீட்டிற்கு சென்ற உடன் என்னவாகுமோ என இப்போதே பயம் பிடித்தது இருவருக்கும். “ம்ம்.. ஏறுங்க” என்ற விஸ்வநாதனின் குரலே அவர்களுக்கு வரப்போகும் நிலையை தெரியப்படுத்தியது.
     வீட்டிற்கு உள்ளே நுழைந்தது முதல் சோஃபாவில் அமர்ந்து கொண்ட விஸ்வநாதன் முன் இருவரும் நடுங்கியபடி நின்றிருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என்ன ஆயிற்றோ என பதைபதைத்து பார்த்திருந்தனர்.
     அனுவிற்கு கோபமாக வந்தது. ‘யாரோ சில மாணவர்கள் தங்கள் ஜூனியரை ரேகிங் செய்ய தன்னிடம் பேச சொன்னதில் பிரச்சினை தனக்கு தான்’ என அவர்களை மனதில் திட்டிவிட்டு விஸ்வநாதன் என்ன சொல்வாரோ என விழியில் நீர் தேங்க பார்த்திருந்தாள்.
     நீண்ட மௌனத்திற்கு பின் தன் மனைவி மீனாட்சியை அழைத்து “உன் பொண்ண உள்ள கூட்டிட்டு போ. அவ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும். இனிமே வீட்டிலேயே இருக்கட்டும்.
     சீக்கிரம் அவளுக்கு ஒரு முடிவு எடுக்கிறேன்” என்றார். இதை கேட்டு கண்ணில் தேங்கிய நீர் அவள் கண்ணத்தில் இறங்கியது. உடனே தன் தந்தையின் அருகே சென்றவள்
     “அப்பா பிளீஸ் நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் அதை கேக்குறேன்” என்றவள் அவர் பதில் கூறும் முன் நடந்தவற்றை ஒருவாறு சொல்லி முடித்தாள்.
     அப்போதும் அவர் நிலை மாறாது அமர்ந்திருக்கவே “அப்பா நிஜமா நான் ஒன்னுமே பண்ணல. என்னை நம்புங்க ப்பா பிளீஸ்” என கெஞ்சினாள். “ப்பா இந்த ஒரு வருஷம் தான் ப்பா நான் பி.ஜி முடிச்சிடறேன்‌.
     காலேஜ் மட்டும் போக வேண்டாம்னு சொல்லாதீங்க ப்பா. நான் நீங்க என்ன சொன்னாலும் அதை மீறி எதுவும் பண்ண மாட்டேன். இனிமே கார் வந்துருச்சான்னு உள்ள இருந்தே பாத்துட்டு வெளிய வரேன் ப்பா.
     காலேஜ்க்கு மட்டும் அனுப்புங்க ப்பா” என்று அழுது தீர்த்தாள். பார்த்திருந்த அனைவருக்கும் அனுவை கண்டு கண்ணீர் வந்தது.
     அவள் கூறியதில் இருந்து தவறு அவள் மேல் இல்லை என புரிந்தது. ஆனால் இதை விஸ்வநாதனிடம் பேச தான் எல்லோருக்கும் பயமாக இருந்தது.
     அந்த பயத்தையும் மீறி “என்னங்க அதான் ஷரா இவ்ளோ சொல்றாளே. இந்த ஒரு வருஷம் மட்டும் அவ படிப்பை முடிக்கட்டுமே. அவ தான் நீங்க என்ன சொன்னாலும் அதை கேக்குறேன்னு சொல்றால்ல.
     கொஞ்சம் கோபப்படாம யோசிச்சு பாருங்க” என்றார் மீனாட்சி உள்ளுக்குள் பயந்துக் கொண்டே. இங்கே வசுந்தராவோ ‘அண்ணா என்னால தான் இப்படி ஆகிட்டாங்க.
     நான் செஞ்ச தப்புக்கு பாவம் சின்ன பொண்ணுங்க இவங்க தண்டனை அனுபவிக்கிராங்க. எப்படி இருந்த அண்ணனை இப்படி மாத்திட்டனே’ என உள்ளுக்குள் மறுகி கொண்டிருந்தார்.
     அனைவரும் அங்கே விஸ்வநாதன் என்ன சொல்ல போகிறாரோ என பார்த்திருக்க ஒன்றும் சொல்லாது தன் அறைக்குள் சென்று மறைந்தார் அவர்.
     இங்கே அன்னையுடன் தன் அறைக்கு வந்த அனுவிற்கு இன்னும் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே தான் இருந்தது.
     “அம்மா நான் அப்படி என்ன ம்மா தப்பு செஞ்சேன். அப்பா ஏன் ம்மா என்னை எப்பவும் நம்ப மாட்டேங்குறாரு. நான் செய்யாத தப்புக்கு எதுக்கு எனக்கு தண்டனை தராரு?” என்றவள் மனதில் பல நாட்கள் எழும் கேள்வியை கேட்டு தேம்பி தேம்பி அழுதாள்.
     மீனாட்சிக்கு அனைத்தும் புரிந்தது. ஏன் அவர் மனதிலும் அதே கேள்வி தான். அவர்க்கும் கணவர் இப்போது செய்ததில் சிறிதும் உடன்படிக்கை இல்லை.
     என்ன ஒன்று அனு வாய் விட்டு கேட்டு விட்டாள். அவர் மனதின் உள்ளேயே கேட்டு கொண்டார். ஆனால் இதை விஸ்வநாதனிடம் கேட்பதற்கு மட்டும் இருவருக்கும் என்றும் தைரியம் வந்ததில்லை. இனி வரப்போவதும் இல்லை போல்.
—————————————————-
     “ஏய் ஆதி! என்னடி அதிசயம் இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்து கிளாஸ்ல உக்காந்துட்டு இருக்க? வாட்ஸ் த மேட்டர்” என்று வரும்போதே பட்டாசாய் பொறிந்து கொண்டு வந்தாள் தோழி சந்தியா.
     “நந்திங் சந்து. இன்னைக்கு என் அபி அத்தான் சீக்கிரம் கிளம்பிடாரு எதோ வொர்க் இருக்குன்னு. அதான் என்னையும் இழுத்துட்டு வந்துட்டார்” என்றாள் சலிப்பான குரலில்.
     “ஹோ.. உன் அத்தானுக்கு வொர்க்கா. அதான் இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் வந்தாச்சா” என்றாள் சீண்டலாக. அபியோடு ஆதியை வைத்து எப்போதும் கிண்டல் செய்வது சந்தியா தான்.
     அதுவும் ஒரு முறை ஆதிராவின் வீட்டிற்கு சென்ற நேரம், ஆதிரா விக்கியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அபியின் பொறாமை பார்வையை கண்ட சந்தியா அதிலிருந்து நன்கு ஓட்டி தள்ளுவாள்.
     ஆனால் அபியின் பார்வையை சந்தியா உணர்ந்த அளவு ஆதிரா உணரவில்லை. அவன் அக்கறையாக பார்த்து கொள்வதில் அவனின் பாசத்தை உணர்ந்தவள் அவன் காதலை உணரவில்லை.
     அபி அதை உணர்த்தி விடுவான் என எண்ணிய சந்தியாவும் அவளிடம் கிண்டலோடு நிறுத்திக் கொள்வாள்.
     இப்போது ‘இவ ஆரம்பிச்சா நிறுத்த மாட்டா’ என எண்ணிய ஆதிரா பேச்சை மாற்றும் விதமாக “சரி நீ என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட. பிரேக் பாஸ்ட் சாப்பிட்டியா இல்லை பட்டிணியா வந்தியா?” என்றாள்.
     “ஓஓ… ஓகே ஓகே பேச்சை மாத்துற. சரி விடு. இன்னைக்கு ஹாஸ்டல்ல உப்மா டி” என சந்தியா முகத்தை சுளித்து சொல்லும் போதே “அதானால தான் மேடம் விழுந்து அடிச்சு ஓடி வந்துட்டீங்களோ” என்றாள் கிண்டலாக.
     அதற்கு “ம்ம்.. ம்” என எல்லா புறமும் சந்தியா பாவமாக தலையை ஆட்ட “சரி வா கேன்டீன் போலாம்” என ஆதிரா சொல்ல இருவரும் வகுப்பை விட்டு வெளியேறினர்.
     இதையெல்லாம் ஜன்னலின் வழி பார்த்திருந்த இரு கண்கள் ஆதிராவை மட்டும் ரசனையாக பார்த்து வைத்தது. அந்த கண்களுக்கு செந்தகாரன் ஆதிராவின் அனாட்டமி வகுப்பு எடுக்கும் ஆசிரியர் விஷ்ணு என்பவனே.
     இந்த ஆண்டு தன் படிப்பை முடித்தவுடன் இந்த கல்லூரியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். வந்த முதல் நாளே ஆதிரை ஒரு மரத்தடியில் அவள் நண்பர்கள் உடன் பார்த்திருந்தான்.
     அது அவள் மாணவர்களை ரேகிங் செய்துக் கொண்டிருந்த நேரம். அவள் கிண்டல் செய்ததை விட இவளை கிண்டல் செய்து கிளம்பியவர்கள் அநேகம்.
     அதில் அவளின் வெகுளி தனமும், அவளின் சிரிப்பும் அவனை வெகுவாக ஈர்த்து விட்டது. இதில் அவனுக்கே ஆச்சரியம் என்னவென்றால் அவன் ஆதிராவின் வகுப்பிற்கு சென்றது தான்.
     காலையில் பார்த்த அந்த நிமிடம் முதல் ஆதிராவை பிடித்துவிட்டது. இப்போது வகுப்பில் அவள் இருக்கவும் அவள் தனக்கு தான் என மனத்திற்குள் முடிவே செய்தான்.
     ஆனால் இது தற்செயலான ஒரு விஷயம் என எண்ண மறந்தான். மற்ற மாணவர்கள் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளாது இருந்து விடுவான்.
     ஆனால் தனியே எங்கேனும் அவளை பார்க்க நேர்ந்தால் நின்று சில நிமிடம் ரசித்து விட்டே செல்வதை வழக்கமாக்கி கொண்டான். இன்றும் அப்படியே‌.
     ஆனால் இதை எதையும் அறியாத ஆதிராவோ அங்கே தோழியுடன் அந்த கேன்டீன் பூரியை ரசித்து ருசித்து அதை பாராட்டியபடி உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள்.
     ஆதிராவை உயிரென எண்ணி அவள் தன்னுடைய வாழ்வில் வர யாரும் தடை விதிக்க போவதில்லை என எண்ணிக் கொண்டிருக்கும் அபிமன்யு இப்படி ஒருவன் தங்களுக்கு இடையில் வருவான் என்பதை அறியாது தன் வேலையில் மூழ்கி இருந்தான்.
-மீண்டும் வருவான்

Advertisement