Advertisement

      காலையின் பரபரப்பிலும் அந்த இல்லம் அமைதியை தத்தெடுத்து இருந்தது. காரணம் அந்த வீட்டின் தலைவர் விஸ்வநாதன் நடு ஹாலில் அமர்ந்திருந்தது தான்.
     அவருக்கு முன் அவரின் மகள் அனுக்ஷ்ரா மற்றும் அவரின் தங்கை மகள் ரித்திகா இருவரும் கையை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.
     ஏதேனும் தவறு செய்து விட்டு திட்டுவாங்கிக் கொண்டு நிற்கிறார்கள் என எண்ணினால் அது தவறு. இன்று ரித்திகா தன்னுடைய கல்லூரியின் முதல் வருடத்தின் முதல் வகுப்பில் அடி எடுத்து வைக்கிறாள்.
     அதை கொண்டே அவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் கட்டளைகள் நீண்டு கொண்டிருந்தது. கல்லூரியில் சேர போவது ரித்திகா தானே. எதற்கு இரு பெண்களையும் நிற்க வைத்து பேசுகிறார் விஸ்வநாதன் என உங்கள் மனதில் கேள்வி பிறக்கும்.
     அதை அறிய விஸ்வநாதன் குடும்பத்தை பற்றிய சிறு குறிப்பு அவசியம். ராகவன் ஒரு தொழில் அதிபர். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் விஸ்வநாதன் மற்றும் இளைய மகள் வசுந்தரா.
     விஸ்வநாதன் அவரின் மனைவி மீனாட்சி. இவர்களின் ஒரே மகள் அனுக்ஷ்ரா. வசுந்தரா இவரின் கணவர் கணபதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண். பெரியவன் ஆதர்ஷ் மற்றும் இரண்டாவது பெண் ரித்திகா.
     அண்ணன் தங்கை இருவரும் அருகருகே உள்ள வீட்டில் தான் வசித்து வருகின்றனர். ராகவன் தன் இரு பிள்ளைகளுக்கும் அருகருகே வீடுகளை கட்டி கொடுத்திருந்தார்.
     எதில் ஒற்றுமையோ இல்லையோ ஆனால் இந்த வீட்டில் உள்ளவர்களின் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அது அனைவருக்கும் விஸ்வநாதன் மீதுள்ள பயமே.
     ராகவன் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் விஸ்வநாதன் என்றால் சற்று பயம் தான். இதற்கு பெரியோர் இட்ட பெயர் மரியாதை என்றால் வீட்டின் சிறியவர்கள் இட்ட பெயர் பயம்.
     விஸ்வநாதன் தன் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அவர் சொல்லை மட்டும் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
     பிள்ளைகளிடம் கண்டிப்பை காட்டுகிறேன் என அதிகமாக தன் அதிகாரத்தை செலுத்துகிறார் என்பதை அவர் அறிவாரா? அதுவும் அவர் மட்டுமே அறிந்தது.
     கல்லூரியில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ரித்திகாவிற்கு பாடம் நடத்தி முடிக்கையில் அரை மணி நேரம் முடிந்திருந்தது.
     “என்ன ரித்தி நான் சொல்றது புரியுதுல்ல” என்று கடைசியாக கேட்டதும் விட்டால் போதுமென தலையை ஆட்டி வைத்தாள் ரித்திகா.
     “ஷரா அவளை பத்திரமா பாத்துக்கோ.  அப்புறம் ரெண்டு பேரும் போனமா படிச்சமா வந்தமான்னு இருக்கனும். தேவையில்லாத வேலைலா பாக்க கூடாது” என தன் தங்கையையும் அவர் கணவரையும் ஒரு பார்வை பார்த்து பின் அவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
     அவர் பார்வையை பார்த்த வசுந்தரா தன் தலையை குனிந்து வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். தன் மனைவியின் வேதனை முகத்தை கண்டு தன் வேதனையை விழுங்கிய கணபதி வசுந்தராவின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்.
      இது போல் அடிக்கடி வீட்டில் நடக்கும் என்பதால் நடந்த நிகழ்வுகளை சாதாரணமாக பார்த்து வைத்தனர் வீட்டினர்.
     பின் காரில் ஏறி அமர்ந்த ரித்திகா அனுக்ஷ்ராவிடம் வழக்கம் போல் புலம்ப துவங்கினாள். “வர வர நம்ம ஹிட்லர் டார்ச்சர் எல்லையை கடந்துட்டு இருக்கு ஷரா க்கா.
     இப்ப எதுக்கு இவர் இவ்ளோ லெக்சர் எடுத்தாரு. நாம போறது லேடிஸ் காலேஜ் தானே க்கா. அதுக்கே இப்படியா‌.
      எஞ்சினியரிங் எடுக்குறேன்னு சொன்னேன். மார்க் இருந்தும் இந்த காலேஜில தான் படிக்கனும்னு மாமா சொல்லிட்டாரு. என்னால முடியல க்கா.
     அம்மா அப்பாவும் எதுவும் சொல்லல க்கா. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா ஆதர்ஷ மட்டும் அவன் ஆசைப்பட்டத படிக்க ஓகே சொல்லிட்டாரு மாமா” என்ற ரித்திகாவிற்கு தன் சிரிப்பை தந்து அவள் தலையை கோத
     “க்கா நீ ஞானியாவே மாறிட்ட போல. எப்படி க்கா இப்படி. அவர் இவ்ளோ பேசியும் சிரிக்கிற. நான் கூட பரவாயில்லை. நீ என்ன விட நல்ல மார்க் எடுத்திருந்த, உன்னையும் ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் சேர்த்தாரு‌.
     உனக்கு கஷ்டமாவே இல்லையா?” என்று முகத்தை பாவமாக வைத்து கேட்டாள் ரித்திகா.
     “ரித்து எனக்கு பழகிருச்சு டா. உனக்கும் பழகிரும் பாரேன்‌. அப்புறம் எஞ்சினியரிங்க விட பேசிக் சைன்ஸ் படிச்சாவே இஸ்ரோல நுழையலாம். நீ பெரிய சைன்டிஸ்ட் ஆகலாம். நல்ல ஸ்கோப் இருக்கு.
      அதான் உன்னையும் பிசிக்ஸ் குரூப் எடுக்க சொன்னேன். அப்புறம் நம்ம காலேஜ் ரொம்பவே நல்ல காலேஜ் டா. உனக்கு கண்டிப்பா பிடிக்கும் பாரேன்” என தன் தங்கையின் சைன்டிஸ்ட் ஆகும் கனவை கொண்டு பேசவும் மகிழ்ந்து போனாள் ரித்து.
     “ஆனா அக்கா நீ ஏன் பிசிக்ஸ் எடுத்த‌? உன்னோட டிரீம் டாக்டர் தானே” என கேட்டாள் ரித்து. அதில் அனுக்ஷ்ராவிற்கு தன் சிறு வயது முதல் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை தந்தையிடம் சொன்ன போது
      “அதுலாம் ஒன்னும் வேணாம். நீ நான் சொல்ற காலேஜ்ல எதாவது எடுத்து படி போதும்” என்று அவர் கூறிய இந்த வரிகள் அவளை இங்கு கொண்டு வந்தது.
      அதே நேரம் தன் அத்தை மகன் ஆதர்ஷ் அவ்வளவு குறைந்த மதிப்பெண் எடுத்தும் அவன் ஆசைப்பட்ட படிப்பை டொனேஷன் கொடுத்து சேர்த்தும் நினைவு வந்தது.
     தன் தந்தை சொல்லை மீற முடியாது தன் ஆசையை விட்டு இளநிலை இயற்பியலை தேர்வு செய்தாள் அனு. இப்போது முதுநிலை இரண்டாம் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கிறாள்.
     தன் மனதை மறைக்க “அதை விடு. இன்னைக்கு பர்ஸ்ட் டே காலேஜ். பிரஷ்ஷர்ஸ் டே பங்சன் எல்லாம் வைப்பாங்க. நல்லா எஞ்சாய் பண்ணனும். ஓகே!
      அப்புறம் புதுசு புதுசா நிறைய பிரண்ட்ஸ் பிடி. ஜாலியா இரு. ஹேவ் ஃபன் டா ரித்தி” என்று அவள் மனதை திசை திருப்பினாள் முயன்றாள் அனுக்ஷ்ரா.
      தன் மாமனின் பேச்சில் துவண்டிருந்த மனதை இப்போது சரி செய்து கொண்டாள் ரித்து. இப்படியே ஒரு வழியாக இருவரும் கல்லூரிக்கு சென்றனர்.
___________________________________________
     அந்த நீண்ட காரிடோரில் வேகவேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. அன்று வழக்கம் போல் மருத்துவமனை வந்தான் ஹர்ஷா. சிறிது நேரத்தில் தன்னுடைய நோயாளிகளை பரிசோதிக்க துவங்கினான்.
     அப்போது அவன் அறைக்கு வேகமாக வந்த செவிலி ஒருவர் “டாக்டர் அந்த சூசைட் அடெம்ப்ட் கேஸ் கொஞ்சம் பிராப்லம் பண்றாங்க. சீப் டாக்டர் இல்லை. அதான் உங்கள கூப்பிட வந்தேன்.
     சீக்கிரம் வாங்க டாக்டர்” என்றார் பதட்டமாக. தன் தந்தையும் இல்லை என்பதால் ஹர்ஷா என்னவோ ஏதோ என பதறி அந்த அறை நோக்கி இப்போது சென்று கொண்டிருக்கிறான்.
     “என்ன விடுங்க நான் சாகனும். நான் சாகனும்!!! என்னை ஏன் காப்பாத்துனீங்க….” என்ற அந்த பெண்ணின் சத்தம் அறை கதவை திறந்த ஹர்ஷாவின் காதிலும் விழுந்தது.
     உள்ளே வந்தவன் கண்டதோ, அந்த பெண் தன் இரு பக்கங்களிலும் அவள் கையை பிடித்து நின்றிருந்த அவளின் பெற்றோரின் பிடியில் இருந்து வெளிவர திமிறிக்கொண்டு கத்துவதை தான்.
     பக்கத்தில் இன்னொரு செவிலியும் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்துக் கொண்டிருந்தார். ஆனால் எதற்கும் அந்த பெண் சாந்தமாக வில்லை.
     அப்போது திடீரென “ஸ்டாப் இட். ஐ சே ஸ்டாப் இட்!!” என்று வந்த ஹர்ஷாவின் கர்ஜனையான குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் அந்த பெண். அவளின் வேகத்தை குறைக்கவே அவன் தன் குரலை உயர்த்தியது‌. அது வேலை செய்வவே,
     “என்ன பிராப்லம் மா உங்களுக்கு? என்னாச்சு? ஏன் சாகறேன்னு சொல்றீங்க” என்றான் சட்டென மாறிய சாந்தமான குரலில். கேட்டுக் கொண்டே அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான் ஹர்ஷா.
     அப்படி கத்தியவன் இப்படி அமைதியாக பேசவும் அந்த பெண் பயந்த பார்வை பார்த்தாள் ஹர்ஷாவை. “ம்ஹூம்!!” என தன் மூச்சை இழுத்து விட்ட ஹர்ஷா,
     “உங்க பேர் என்ன மா?” என்று மெதுவாக ஆரம்பித்தான் ஹர்ஷா. ஏதோ சொல்ல வந்த அந்த பெண்ணின் பெற்றோரிடம் வேண்டாம் என்பதாய் தலை அசைத்தவன், தன் கையை பார்த்து குனிந்து அமர்ந்த அந்த பெண்ணை தான் பார்த்திருந்தான்.
     “ஷாலினி” என அந்த பெண் இப்போது தன் வாயை அசைத்தாள். அது வரை ஹர்ஷாவும் எதுவும் பேசவில்லை யாரையும் பேசவும் விடவில்லை. அவள் பேசிய பின்னே பேச ஆரம்பித்தான்.
     “ம்ம் ஷாலினி! நைஸ் நேம்‌. உங்கள நேத்து காப்பாத்தின டாக்டர் நான் தான். சோ நீங்க எதுக்கு சாகப்போனிங்கன்ற ரீசன் என்கிட்ட சொல்லலாம். அன்ட் ஏன் இப்போ இப்படி பண்றீங்கனு சொல்லாம்.
      இன்பாக்ட் ஐ நவ் ஹேவ் ரைட்ஸ் டூ நோ ஆஸ் ஐ சேவ்ட் யூ ரைட்‌. கரெக்ட் தானே” என பொதுவாக கேட்டவன் “ஓகே சொல்லுங்க ஷாலினி. எதுக்கு நீங்க சாகனும்” என வினவினான் அவளை கூர்மையாக பார்த்தபடி.
     சுற்றி இருந்தவர்களும் அவளையே தான் பார்த்திருந்தனர். அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை சொல்ல தூண்டியது போலும். “அவன் பேர் வருண்” என ஆரம்பித்தாள்.
      “என் கிளாஸ் மேட் தான். பர்ஸ்ட் அவன் தான் என் பின்னாடியே வந்தான். லவ் புரபோஸ் செஞ்சான். என் பிரண்ட்ஸ்லா அவனோட என்னை சேர்த்து கிண்டல் செய்வாங்க.
      ஆரம்பத்தில எனக்கு கோபமா வந்துச்சு. நான் பர்ஸ்ட் ஒத்துக்கல. ஆனா அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அது பிடிக்கவும் ஆரம்பிச்சிது.
      நானும் அவன் லவ்வ கொஞ்ச நாள்ல அக்சப்ட் பண்ணிட்டேன். அதுல அவனுக்கு அவ்ளோ சந்தோஷம். என்னை அப்படி சுத்தி சுத்தி வருவான் டாக்டர் ” என்னும் போது அவள் முகம் அவ்வளவு மென்மையை தத்தெடுத்தது.
     அவளின் முகத்தை கண்ட ஹர்ஷாவிற்கு பிரச்சினை வேறு வழியில் பயணித்து உள்ளதோ என்ற சந்தேகம் இங்கே ஆரம்பித்தது. எனவே அவளை தொந்தரவு செய்யாது மேலும் கவனித்தான்‌.
     “எல்லா லவ்வர்ஸ் மாதிரியும் நாங்களும் பார்க் பீச்னு எப்பயாவது கொஞ்சம் ஊர் சுத்துவோம்‌. அப்பக்கூட என் கையை மட்டும் தான் பிடிச்சுக்கிட்டு நடப்பான்.
     அவ்ளோ லவ்னு சொல்வான். அன்ட் என்னை தப்பா பாக்க கூட மாட்டான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன் டாக்டர். அப்ப தான் அது நடந்துச்சு” என்றாள் தயக்கமாக தன் பெற்றோரை பார்த்து.
     ‘இவ சொல்றத பார்த்தா அந்த பையனையும் குறை சொல்ல மாட்டா போல. அப்ப ஏன் இப்படி செஞ்சா?’ என அவள் பெற்றோரும் அவளை பார்த்தனர்.
      இப்போது ஹர்ஷா ஓரளவு முடிவு செய்து விட்டான் பிரச்சினை அந்த பையனை கொண்டு இல்லை என்று. அதை நிருபிப்பது போல் தான் அந்த பெண் கூறிய நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவள் வாக்குமூலமாக வந்தன.

Advertisement