Advertisement

      அருணாசலம் மருத்துவமனை என்றும் போல் தனக்கே உரித்தான  பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
      அந்த இரவு நேரத்தில் அந்த தளத்தில் இருந்த ஐ.சி.யுவின் முன்பு ஒரு பெண் தடதடக்கும் நெஞ்சோடு அமர்ந்துக் கொண்டிருந்தார்.
     வாயில் ஏதோ ஸ்லோகம் சொல்லி கொண்டு இடைவிடாத பிரார்த்தனையுடன் அமர்ந்திருந்தார் என்பதை பார்க்கும் போதே தெரிந்தது.
      அந்த ஐ.சி.யூவின் உள்ளே அவர் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைப்பெற்றுக் கொண்டிருந்ததே அவரின் இந்நிலைக்கு காரணம் எனலாம்.
     என்ன தான் சிறிதளவு பயம் இருந்தாலும், மனதில் தைரியம் அதிகமாக இருந்தது அப்பெண்ணிற்கு. ஏனெனில் அப்பெண்ணின் கணவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருப்பது இந்த நகரின் தலை சிறந்த இதய நிபுணர்களிள் ஒருவர்.
     இந்த மருத்துவரிடம் வந்துவிட்டால் நிச்சயம் உயிரை காப்பாற்றி விடுவார் என்று ஏக நம்பிக்கை உள்ளது மக்கள் மத்தியில். அதுவும் அவர் முகத்தில் இருக்கும் அந்த சாந்த புன்னகையே அவரை அனைவருக்கும் பிடிக்க வைக்க போதுமானதாக இருந்தது.
     அவ்வளவு புகழ் பெற்ற அந்த மருத்துவர் வேறு யாரும் இல்லை, அருணாசல குடும்பத்தின் மூத்த வாரிசு மற்றும் ராஜசேகரின் மூத்த மகன் ஹர்ஷவர்தன் அருணாசலம்.
     இப்போது நான்கு மணி நேர பைபாஸ் அறுவை சிகிச்சையை கவனத்துடன் முடித்த ஹர்ஷா அந்த ஐ.சி.யூவில் இருந்து வெளியில் வந்தான். அவன் வெளியே வரவும் அந்த பெண்மணியும் அவனை நோக்கி வந்தார்.
     “டாக்டர் என் ஹஸ்பண்ட் இப்ப எப்படி இருக்காரு. அவர்.. அவருக்கு எதுவும் இல்லையே?” என்று தவிப்புடன் வினவிய அந்த பெண்ணிடம்
     “டோன்ட் வொர்ரி மா. ஆப்ரேஷன் சக்சஸ். உங்க ஹஸ்பண்ட் இப்ப சேஃபா இருக்கார். இன்னும் சில மணி நேரத்தில கண்ணு முழிச்சிருவார்‌. அப்ப நீங்க அவரை பார்க்கலாம்.
     அன்ட் இன்னும் டூ டேஸ்ல நார்மல் வார்ட் ஷிப்ட் பண்ணிருவோம். சோ நீங்க தைரியமா இருங்க” என தன் அக்மார்க் புன்னகையுடன் சொல்லி தலை அசைத்து சென்றான்.
      ஹர்ஷாவின் வார்த்தைகளோடு அவனோட புன்னகையும் அந்த பெண்ணிற்கு அபரிமிதமான நம்பிக்கையை அளித்தது என்றால் மிகையில்லை.
     “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். உங்கள எங்க லைஃப்ல மறக்க மாட்டோம்” என்று அந்த பெண்ணும் அவர் கணவரை காப்பாற்றிய ஹர்ஷாவிற்கு நன்றி செலுத்திக் கொண்டே மகிழ்வுடன் ஐ.சி.யூவின் முன் சென்று தன் கணவரை பார்த்தார் நிம்மதியுடன்.
     ஒரு ஆப்பரேஷன் முடிந்த எந்த களைப்பையும் முகத்தில் காட்டாது தன் அறைக்கு வந்த ஹர்ஷாவிற்கு மனம் எப்போதும் போல் நிம்மதியை சுமந்திருந்தது.
     ஒவ்வொரு நாளும் ஒரு உயிரை காப்பாற்றுவதில் ஹர்ஷா தன் மகிழ்ச்சியை கண்டான். பண்ணிரெண்டாம் வகுப்பை முடித்த உடன் தன் தந்தையை பின்பற்றி மருத்துவம் பயின்ற ஹர்ஷா;
     தன் முதுகலைப் பட்டத்தை வெளிநாடு சென்று படித்தான். பின் தற்போது மூன்று ஆண்டுகளாக அருணாசலம் மருத்துவமனையில் தன் பணியை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறான்.
     அதிலும் அவன் இதய அறுவை சிகிச்சைகள் செய்ய துவங்கிய பின் அவனுக்கு ஏறு முகம் தான். நல்ல கைராசி உள்ள மருத்துவர் என்று பெயரும் கிட்டியது.
     எவ்வளவு தான் வாழ்வில் மேலே சென்றாலும் அவன் என்றும் அதே ஹர்ஷவர்தனாக அவனின் குடும்பத்தினருக்கு. அவனின் பலம் ஏன் பலவீனம் இரண்டும் அவன் குடும்பம் தான்.
     தன் அறைக்கு சென்ற ஹர்ஷா தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான். தன் பொருட்களை எடுத்து அந்த நீண்ட நடைபாதையில் மருத்துவமனையின் வாயிலை நோக்கி சென்றான்.
     அந்த நேரம் அவசரமாக வந்த ஆம்புலன்சில் இருந்து ஒரு இளம் பெண்ணை மருத்துவமனை உள்ளே அழைத்து வந்தனர்.
     ஹர்ஷா வெளியே செல்லும் முன் அவனை தடுப்பது போல் வந்த செவிலி பெண் ஒருவர் “டாக்டர் ஒரு எமர்ஜென்சி. கொஞ்சம் வரீங்களா” என்றார் பரபரப்பாக.
     அந்த பதற்றம் தனக்கு தொற்றியது போல் வேகமாக அந்த செவிலியை தொடர்ந்த ஹர்ஷா “டாக்டர் அகிலன் இல்லையா?” என்றான். ஏனெனில் அன்று இரவு நேர பணியில் இருந்தது டாக்டர் அகிலன் என்பவரே.
     “அகிலன் டாக்டர் இன்னொரு கேஸ் பார்த்துட்டு இருக்காரு டாக்டர். மத்த டாக்டர்ஸ்ம் இப்ப அவைலபில் இல்லை. அதான் உங்கள இங்க பார்க்கவும் வந்தேன் டாக்டர்” என்றார் அந்த செவிலியும் ஹர்ஷாவை பின்தொடர்ந்தவாறு.
     அந்த நோயாளி ஒரு இளம் பெண்‌. அவளை பார்த்து சென்ற ஹர்ஷா “என்ன கேஸ்?” என்று அந்த பெண்ணை நெருங்கினான்.
     அதற்கு செவிலிப் பெண் “சூசைட் அட்டெம்ப்ட் டாக்டர்” என்றார் தயக்கத்துடன். அவரை கூர்ந்து பார்த்தவன் மேலை சொல்லுமாறு தலை அசைத்தான்.
     “அது.. அது இந்த பொண்ண ஒரு பையன் ஏமாத்திடானாம் டாக்டர். பொண்ணு இப்ப பிரக்னென்ட். ஆனா அந்த பையன் வேணாம்னு போய்ட்டான் போல. அதான் சூசைட் டிரை பண்ணி இருக்கா டாக்டர்” என்று தனக்கு தெரிந்த தகவலை ஹர்ஷாவிடம் தயங்கி தயங்கி பகிர்ந்தார் அந்த செவிலி.
      கேட்ட ஹர்ஷாவிற்கு கோபம் தாறுமாறாக ஏறியது. ஏனெனில் ஹர்ஷவர்தன் ஒழுக்கத்தை தன் உயிரை விட மேலாக கருதுபவன்.
     ஒழுக்கம் தவறும் சிறு தவறை கூட வன்மையாக கண்டிப்பான். அதே போல் தன் மருத்துவமனையிலும் எல்லோரும் அந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஹர்ஷாவின் உத்தரவு.
     அதை மீறினால் கடுமையான தண்டனையும் அவனிடம் இருந்து வந்துவிடும். அதனால் தான் இன்றும் அருணாசலம் மருத்துவமனை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது.
     தன் கோபத்தை சட்டென்று கட்டுப்படுத்திய ஹர்ஷா தற்போது உதவி தேவைப்படும் பெண்ணிற்கு மருத்துவம் பார்க்க துவங்கினான்.‌ அந்த பெண்ணிற்கு சிகிச்சையை கொடுத்து காப்பாற்றியவன் அரை மணி நேரம் சென்று வெளியே வந்துவிட்டான்.
     அந்த பெண்ணின் பெற்றோரிடம் அவளின் நலத்தை ஒரு இறுக்கத்துடன் சொல்லினான் ஹர்ஷா. அதற்கு அந்த பொண்ணின் பெற்றோர் “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.
     அப்புறம் என் பொண்ணு வயித்துல வளர்ர குழந்தைய அழிச்சிருங்க. இல்லைனா எங்க பொண்ணு லைஃப் தான் பாதிக்கும்” என்றனர் தயக்கமாக. இவ்வளவு நேரமும் தன் பொறுமையை பிடித்து வைத்திருந்த ஹர்ஷா
     “என்ன பேரன்ட்ஸ் நீங்க. உங்க பொண்ணு ஒரு பையன் கூட இந்த அளவு போற வரைக்கும் விட்டுருகீங்க. இப்ப ஈசியா குழந்தைய அபார்ட் பண்ண சொல்றீங்க.
     உங்க பொண்ணும் அந்த பையனும் செஞ்ச தப்புக்கு அந்த குழந்தைக்கு தண்டனை தர மாதிரி அதை சாகடிக்க நினைக்கிறீங்க. என்ன மனுஷங்க நீங்க” என்றவன் ஒரு பெருமூச்சினை விட்டு தன்னை சாந்தப்படுத்தி
     “இது கண்டிப்பா போலீஸ் கேஸ் தான். ஹாஸ்பிடல்ல இருந்தே இன்பார்ம் பண்ணிருவோம். மீதிய காலைல வந்து பேசிக்கிறேன்.
     அப்புறம் அபார்ட் பண்றது பத்தி இனிமேல் என்கிட்ட பேசக்கூடாது” என்று கடுமையாக கூறினான்.
     பின் அந்த பெண் செய்த செயலுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் என நினைத்து “சாரி உங்க பொண்ணு இப்படி செஞ்சதுக்கு உங்களை பிளேம் பண்ணிட்டேன்” என அத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் ஹர்ஷா.
     அந்த பெண்ணின் பெற்றோருக்கு வருத்தமாக இருந்தாலும், அவன் கூறிய உண்மை புத்தியில் உரைக்க தங்கள் பெண் தங்களுக்கு இவ்வளவு பெரிய அவமானத்தை தேடி தந்ததை எண்ணி தலை குனிந்து நின்றனர்.
     பெரும்பாலும் சமூகத்தில் பிள்ளைகள் அது ஆணோ பெண்ணோ செய்யும் நல்லதும் கெட்டதும் பெற்றோரின் வளர்ப்பை கண்டே காணப்படும்.
     இதில் சரியான விழிப்புணர்வு இன்றி தவறான பாதைக்கு செல்லும் பிள்ளைகளை விட, வயது வேகத்தில் தவறை செய்து விட்டு, பின்பே வருந்தும் பிள்ளைகள் அதிகம்.
     ஆனால் அதை அவர்கள் உணரும் போது காலம் கடந்து விடுகிறது என்பது தான் உண்மை. இங்கே பிள்ளைகள் தவறினாலும் முதலில் குற்றம் சாட்டப்படுவது பெற்றோர் என்பதே வேதனையான உண்மை.
____________________________________________
     இரவு ஒரு மணி. மருத்துவமனையில் இருந்து கிளம்பிய ஹர்ஷவர்தன் இப்போது தன் இல்லத்தை வந்தடைந்தான். அந்த இரவு நேரத்தில் வீட்டில் உள்ள யாருக்கும் தொந்தரவு தராதவாறு தன்னிடம் உள்ள சாவியை கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்தான்.
     ஹர்ஷா எப்போதும் இப்படி தான். அவன் அறுவை சிகிச்சை முடிந்து வரும் போது சில நாட்கள் நடுநிசி ஆகிவிடும். எனவே அவன் எப்போதும் தன்னிடம் வீட்டின் சாவி ஒன்றை வைத்திருப்பான்.
     பின் அவன் தன் அறைக்கு செல்லும் போது ஏதோ ஒரு உருவம் மெல்ல மாடியின் ஹாலில் உள்ள பால்கனியில் இருந்து உள்ளே குதிப்பது அந்த இருட்டிலும் தெளிவாக தெரிந்தது.
     அந்த உருவம் ஒரு அறையை நோக்கி நகர்ந்து சென்றது. அதை பார்த்ததும் திக்கென்றது ஹர்ஷாவிற்கு. பின் சுதாரித்தவன் ‘யாருடா இது இந்த நேரத்தில நம்ம வீட்டுக்குள்ளையே குதிக்கிறது.
     ஒருவேளை திருடனா இருக்குமோ?” என யோசித்து கொண்டே அந்த உருவத்தை நோக்கி சென்றான் ஹர்ஷா. இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த உருவம் தன் பக்கம் யாராவது வருகிறார்களா என அருகே பார்த்து கொண்டே முன்னேறியது.
     அந்த உருவத்தின் செய்கைகளை ஊன்றி கவனித்தப்படி ஹர்ஷாவும் பின்னே சென்றான். அந்த உருவம் அந்த குறிப்பிட்ட அறையின் கதவின் கைப்பிடியை திருகவும் ஹர்ஷா வந்துவிட்டான்.
     அந்த உருவத்தின் கையை தன் புறம் பிடித்து இழுத்தான். இவ்வளவு நேரம் யாரிடமும் மாட்டாது வந்த அந்த உருவம் இப்போது யாரோ தன் கையை பிடித்து இழுக்கவும், திடுக்கிட்டு திரும்பியது.
     தன்னை கண்டு கொண்டது ஹர்ஷா என அறிந்த அந்த உருவத்திற்கு கைக் கால்கள் எல்லாம் உதற துவங்கி விட்டது.
     அந்த உருவம் திரும்பியதும் அது யார் என சட்டென கண்டுக் கொண்ட ஹர்ஷாவிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.
     மருத்துவமனையில் இருந்து ஏற்கனவே கோபத்தில் வந்த ஹர்ஷாவின் கோபம் இப்போது எரிமலையானது. ஏனெனில் ஹர்ஷாவிற்கு பொதுவாக கோபம் வராது.
     அப்படி வந்தால் சுலபத்தில் போகவும் செய்யாது. வார்த்தைகள்  கொண்டு படுத்தி எடுக்க வெல்லலாம் மாட்டான். அதே சமயம் அவன் ஆயுதமான அமைதியை தத்தெடுத்து விடுவான்.
     அதிலும் அவன் மூத்த அத்தை கோமதி சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்ட போது கோபத்தில் அவர்களை ஒதுக்கியவன் தான்.
     இன்றும் அவன் அவர்கள் குடும்பத்தில் யாரிடமும் பேசாமல் இருக்கிறான். வீட்டில் யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. “என்னால பேச முடியாது. வேனும்னா உங்க பொண்ணுக்கிட்ட நீங்க பேசிக்கங்க தாத்தா” என்றுவிட்டான்.
     அவனை மாற்ற முடியாத குடும்பத்தினர் அதன் பின்னர் தாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கோமதியிடம் பேசுவதை குறைத்து கொண்டனர்.
     பத்து வருடமாக கோமதியுடன் அவர்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கின்றனர் குடும்பத்தினர். எனவே தான் அந்த உருவத்திற்கும் இதயம் தொண்டை குழிக்கு வந்துவிட்டது.
     இப்போது தன் முன் ருத்ர மூர்த்தியாக தன் முன் நிற்கும் ஹர்ஷவர்தனை பார்த்தது அந்த உருவம்‌.
     அந்த நபரை தரதரவென இழுத்து கீழே வரவேற்பு அறைக்கு இழுத்து வந்து நிறுத்தினான். பின் அந்த நேரத்திலும் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தான் ஹர்ஷா.
     அந்த நபருக்கு முகம் எல்லாம் வேர்த்து விட்டது. ஹர்ஷாவின் குரலுக்கு மொத்த குடும்பமும் அந்நேரம் கூடிவிட்டது. ‘எப்படி சமாளிக்க போறோம்’ என அந்த உருவமும் கையை பிசைந்து கொண்டு நின்றது.

Advertisement