Advertisement

ஐந்து வருடங்களுக்கு பிறகு…
     “டேய் மகனே சொல்ற போச்சு கேளுடா ஓடாத. என்னால முடியலை”
     கத்தி கொண்டே தன் மகனின் பின்னே ஓடிக் கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவன் வார்த்தையை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் குடுகுடுவென ஓடிக் கொண்டிருந்தான் அவன் அருமை புதல்வன்.
     விக்ரம் சங்கவியின் மகன் சைரேஷ், இரண்டு வயது சிறுவன். விக்ரமின் கையில் சிக்காமல் ஓடி அவனுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். எல்லாம் எதற்கு சைரேஷை ஒரு டம்ளர் பாலை குடிக்க வைப்பதற்கு தான்.
     அது என்னவோ சைரேஷ் விக்ரமின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்க, அவன் செயல்களிலும் விக்ரமை கொண்டே பிறந்து விட்டான். தன் தந்தை விக்ரமை தினமும் காலை ஓட்ட பந்தயம் ஓட விடுவதில் தவறுவதில்லை.
     வீட்டில் பொதுவாக அனைவரின் சொல்ப்பேச்சையும் கேட்கும் சைரேஷ், விக்ரமை மட்டும் டீலில் விட்டுவிடுவது விந்தையே. சைரேஷ் மாடிப்படியின் அருகே ஓடி செல்லும் நேரம் “சைரு” என்று ஒரு குரல் கேட்க அப்படியே நின்று விட்டான் பையன்.
     “ஏன் சைரு குட்டி அப்பாவ இப்படி ஓட வைக்கிற. பாவம் தானே அவன். ஒழுங்கா பாலை குடிடா குட்டி”
     ஹர்ஷாவின் குரல் தான் அது‌‌. அவன் குரல் கேட்ட மறுநிமிடம் அவனுக்கு என்ன புரிந்ததோ உடனே அந்த பாலை வாங்கி ஒரு மூச்சில் குடித்து விட்டான். சைரேஷுக்கு அவனின் ஹர்ஷா மாமா என்றால் உயிர் என்றே சொல்லலாம்.
     “சைரு” என தற்போது இன்னொரு குரல் கேட்க ஆர்ப்பரித்து கொண்டு ஓடினான் சிறுவன்‌. அது வேறு யாரும் அல்ல ஹர்ஷா அனுக்ஷ்ராவின் நான்கு வயது தவப்புதல்வன் சைத்தன்யா.
     எப்படி ஹர்ஷா விக்ரம் நண்பர்களாக இருந்தார்களோ அதே போல் தற்போது அவர்களின் பிள்ளைகளும் நண்பர்களாக வளர்கின்றனர்.
     “சைத்து கண்ணா இந்தா பால் குடி” சங்கவி சைத்துவிடம் பாலை நீட்ட அவன் சமத்தாக வாங்கி குடித்தான்.
     “என் செல்லக்குட்டிடா நீ. இவனும் தான் இருக்கானே தினமும் என்னை ரேஸ் ஓட விட்டுட்டு. இவனால நான் ஐஞ்சு கிலோ குறஞ்சிட்டேன்” சலித்துக் கொண்டே அவனை தூக்கி முத்தமிட்டான் விக்ரம்.
     அருணாசலம் இல்லம் தற்போது அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து விட்டது‌. சைத்தன்யா மற்றும் சைரேஷ் இருவரின் துள்ளலில் அந்த வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
     “அப்புறம் மச்சான் உன் டெல்லி டிரிப் எப்படி போச்சு. அம்மு என்ன பண்றா?”
     “அது நல்லாவே போச்சு மச்சான். இந்த பில்டிங்கையும் நம்ம கம்பெனியவே கட்டி தர சொல்லிட்டாங்கடா‌. பிசினஸ் டீல் சக்சஸ். அப்புறம் அம்மு அவளுக்கு என்ன ரொம்ப ரொம்ப நல்லா இருக்கா. முன்ன இருந்த மாதிரி சின்ன புள்ளையா இல்லாம நல்லா மெச்சூர் ஆகிட்டா”
     ஹர்ஷாவின் கேள்விக்கு விக்ரம் பதில் சொல்லும் நேரம் “அபிப்பா! மாமா!” என சைத்து மற்றும் சைரு கத்தியபடி வாசலுக்கு ஓட
     “வந்துட்டான் டா. என் தங்கச்சிய பத்தி பேசுனா எப்படி தான் இவன் மூக்கு வேர்க்குமோ” என்ற விக்ரமின் உதறலான குரலே சொல்லியது வந்தது யாரென. “செல்லக்குட்டிஸ்” ஓடி வந்த இருவரையும் வாரி அணைத்து கொண்டான் அபிமன்யு.
     “குட் மார்னிங் அண்ணா அத்தான்” என இருவருக்கும் பொதுவாக அபி வணக்கம் சொல்ல விக்ரம் “குட் மார்னிங்” என்க,
     “வெரி குட் மார்னிங் டா அபி. உன் ஆப்பரேஷன் என்ன ஆச்சு?” என்று கேட்டான் ஹர்ஷா.
     “சக்சஸ் ண்ணா” ஒரே வார்த்தையில் சொன்னான் அபி. அதில் புன்னகைத்த ஹர்ஷா “கங்கிராட்ஸ் அபி” என்றான் மனதார.
     இந்த அறுவை சிகிச்சை அபியின் முதல் அருவை சிகிச்சை அல்ல. இருந்தாலும் ஹர்ஷா அவனை எப்போதும் உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பான்.
     அபி தன் படிப்பை முடித்து அவன் அண்ணனுடன் மருத்துவமனைக்கு மூன்று வருடமாய் சென்றுக் கொணடிருக்கிறான். அதுவும் அபி நியூராலஜி பிரிவை எடுத்து படித்திருந்ததில் அவனுக்கு நிறைய அனுபவம் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.
     ஹர்ஷா எப்படி இதய மருத்துவத்தில் பெயர் வாங்கி இருக்கிறானோ அதே போல் அபியும் நரம்பியலில் நன்றாகவே பெயர் வாங்க துவங்கியுள்ளான்.
     அதே நேரம் தன் இளநிலை மருத்துவத்தை சென்னையில் முடித்த அம்மு தன்னுடைய முதுநிலை படிப்பை டெல்லியில் தான் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடிக்க, அபியோ முடியவே முடியாது என்று நிலையாய் நின்றான்.
     விக்ரம் தன் தங்கைக்கு ஆதரவாக நிற்க, அவனிடமும் சண்டைக்கு சென்றான் அபி. அவன் அம்முவிற்காக தன் படிப்பை சென்னையில் முடித்திருக்க
     இன்று அம்முவோ தன் படிப்பிற்கு டெல்லி செல்ல வேண்டும் என்று கூற கடுப்பின் உச்சியில் இருந்தான் அபி. அதன்பின் ஹர்ஷா தான் அபியை பேசியே சரிக்கட்டி அவளை படிக்க டெல்லி அனுப்பி வைத்தான்.
     அம்மு இப்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு பிடித்தது போல் குழந்தைகள் நலப் பிரிவையே தேர்வு செய்து படிக்கிறாள்.
     குடும்பத்தினர் அனைவருக்கும் அம்முவின் இந்த சுயமான முடிவு மகிழ்ச்சியையே தர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றுவது நம் அபிமன்யுவே.
     போதாதற்கு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே தங்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என அம்மு முடிவாக சொல்லிவிட, அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் முழுதாக இருக்க அபியின் நிலையை சொல்லவும் வேண்டுமா.
     எனவே அந்த கோபம் கடுப்பு எல்லாவற்றையும் மறக்க தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி உழைத்து வருகிறான் அபி. அதுக்கு இன்றைக்கு நடந்த அறுவை சிகிச்சையும் ஒரு சான்று.
     ஆம் மூளையில் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அபி முடித்து வந்துள்ளான். அதை எண்ணி அவன் தந்தையும் அண்ணனும் மனதிற்குள் பெருமிதபட்டு அமர்ந்திருந்தனர்‌.
     “ஓகே அபி நீ போய் ரெஸ்ட் எடு. நைட் புல்லா ஆப்ரேஷன் செஞ்சதுல டயர்டா இருப்ப” என்று ஹர்ஷா சொன்னபின் மெதுவாக தன் அறையை நோக்கி நகர்ந்து சென்றான் அபி.
     “சரி மச்சான் நானும் போய் ஹாஸ்பிடல் கிளம்பறேன்” என்ற ஹர்ஷா தன் அறைக்குள் சென்று விட்டான். அங்கே அனு அவர்கள் மகனை பள்ளிக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
     ஹர்ஷாவின் மகன் அவனை போல் சமர்த்தாக பள்ளிக்கு கிளம்பிவிட்டான். “செல்லக்குட்டி கிளம்பியாச்சா. சரி கீழ இருங்க அப்பா ரெடி ஆகிட்டு வந்திடுறேன்” ஹர்ஷா சைத்துவை தூக்கி கொஞ்சவும் அவன் கீழே ஓடி விட்டான்.
     ஹர்ஷா திரும்பவும் “ஹர்ஷா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என அனு மெதுவாக அவனிடம் பேச்சை துவங்கினாள்‌.
     “என்னடி” என ஹர்ஷா கேட்கவும்
     “ஹர்ஷா‌ பெரிய மாமா இறந்த நாள் வருது. வருஷா வருஷம் இப்போ நாம அத்தைக்கும் பெரிய மாமாக்கும் திதி தரோம். ஆனா இந்த வருஷமாவது வசுந்தரா அத்தைக் கூட அந்த வீட்டுக்கு போய்ட்டு வரலாமே”
     அனு சொல்லிவிட்டு ஹர்ஷா முகத்தையே பார்க்க அவன் முகம் ஏதோ போல் ஆனது. என்ன தான் அவன் பிறப்பின் ரகசியம் அவன் அறிந்து மூன்று வருடங்கள் ஓடி இருந்தாலும் அதன் தாக்கம் இன்றுவரை ஹர்ஷாவை தொடருகிறது.
     வசுந்தராவிடம் ஹர்ஷா நல்ல முறையில் பேசியே உறவை வளர்த்து வந்தாலும், அது எல்லாம் அவன் வீட்டினர் கூறிய ஒற்றை வார்த்தைக்காக தான்.
     வசுந்தரா மனதில் அவர் இறப்பதற்குள் ஒரு நாளாவது அவர் காதல் கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டில் அவர் மகனுடன் இருக்க வேண்டும் என்பது பேராசையாகவே இருக்கிறது.
     இன்னும் சொல்ல போனால் இது சாதாரண ஒரு பெண்ணின் நியாயமான ஆசை தான். ஆனால் வசுந்தராவின் வாழ்வில் நடந்த இன்னலின் காரணமாக இது அவருக்கு பேராசையாகவே இருந்து வருகிறது.
     கடந்து ஐந்து ஆண்டுகளாக கணபதி ராம் ஆயுள் தண்டனை கிடைத்து சிறையில் இருக்க அது எதுவும் வசுந்தராவை பாதிக்கவில்லை.
     அவர் சென்று கணபதியையும் பார்க்கவில்லை. சிறையில் இருந்த கணபதிக்கு மனதளவில் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. அதோடு தன் வாழ்நாளை சிறையில் கழித்து வருகிறார் அவர்.
     எல்லாவற்றும் தனக்கு முடிந்துவிட்டது என்றிருந்த வசுந்தராவிற்கு ஹர்ஷாவுடன் அந்த வீட்டில் ஒரு நாள் தங்க மட்டும் ஆசை இருந்தது.
     எனவே அவனிடம் இதை கேட்டு பார்த்தார். ஆனால் அதை எல்லாம் அவர் நோகாது மறுத்து வந்தான் ஹர்ஷா.
     தற்போது ராஜாராமின் நினைவு நாளிலாவது அந்த வீட்டில் ஒரு நாள் தன்னுடன் தங்க சம்மதிப்பானா ஹர்ஷா என்று அனுவின் மூலம் பேச முயல்கிறார் வசுந்தரா.
     “அனு ஹாஸ்பிடல்ல வொர்க் நிறைய இருக்குமா. அதோட திதி தானே எப்பவும் போல ஒரு நல்ல நாள் பார்த்து இங்கையே தந்திடுவோம். இன்னும் எதுக்கு கோயம்புத்தூர் வரைக்கும் போகனும்”
     ஹர்ஷா நாசுக்காக மறுத்து கிளம்ப பார்க்க “எதை நினைச்சு நீங்க இப்படி ஓடுறீங்க ஹர்ஷா. எனக்கு புரியல” என அனு அவனை நிறுத்தினாள்.
     “என்ன எதுக்காக நான் ஓடனும். எனக்கு ஹாஸ்பிடல்க்கு டைம் ஆச்சு. அதான் கிளம்பிட்டு இருக்கேன்‌. நீ எது பேசுறதா இருந்தாலும் ஈவ்னிங் நான் வந்ததுக்கு அப்புறம் வந்து பேசு”
     ஹர்ஷா கடகடவென பேசி வெளியே செல்ல திரும்ப, அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள்.
     “ஹர்ஷா ஏன் இப்படி நடந்துக்குறீங்க. மத்த எல்லா விஷயத்தையும் மெச்சூர்டா நடந்துக்குற நீங்க ஏன் இந்த விஷயம்னு வரப்ப இவ்ளோ சைல்டிஸா நடந்துக்கிறீங்க.
     நீங்க உண்மைய விட்டு எவ்ளோ தூரம் விலகி போனாலும் நடந்த உண்மைய மாத்த முடியாதுபா. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க. நடந்த விஷயத்துக்கு நீங்க எந்த விதத்திலையும் பொறுப்பில்லை. அதனால எல்லாத்தையும் யோசிச்சு பாருங்க. அதோட வசுந்தரா அத்தை கேட்டதை பத்தியும் கொஞ்சம் கண்சிடர் பண்ணுங்க.
     அப்பா தரதா சொன்ன சொத்து எல்லாத்தையும் வேண்டாம்னு சொன்னீங்க. அதை நான் எதுவும் சொல்லலை. பிகாஸ் அது உங்க விருப்பம். ஆனா வசுந்தரா அத்தை ஒரே ஒரு நாள் தானே உங்களோட கேக்குறாங்க. அதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க”
     அனு தன் மனதில் தோன்றியதை எல்லாம் கூறிவிட்டு இதற்கு மேல் அவன் இஷ்டம் என அமைதியாக நகர்ந்து விட்டாள்.
     அனு பேசியதை நினைத்துக் கொண்டே ஹர்ஷா மருத்துவமனை சென்று சேர்ந்தான். அன்றைய நாள் முழுவதும் வேலை பார்த்தாலும் வசுந்தராவை குறித்த எண்ணம் அவன் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.
     “அண்ணா போலாமா” ஹர்ஷா யோசனையில் இருக்கும் போது அபி வந்து அழைக்க அவனோடு சேர்ந்து கிளம்பினான்.
     “என்ன ண்ணா ஏதோ யோசைனை பண்ணிட்டு இருக்க. எதாவது முக்கியமான விஷயமா” அபி வண்டியை ஓட்டிய படி கேட்க இல்லை என தலை அசைத்தான் ஹர்ஷா. அதன்பின் அபியும் எதுவும் கேட்கவில்லை.
     “அனு என்னம்மா காலேஜ்ல இருந்து வந்துட்டியா” என தன் அறைக்குள் நுழைந்த உடனே ஹர்ஷா அனுவிடம் பேச ஆரம்பித்தான். அனு தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறாள். எனவே அவ்வாறு கேட்டவாறு வந்தான்.
     “ஹான் இப்போ தான் ஹர்ஷா” என்ற அனுவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் ஹர்ஷா. அவன் செய்கையில் புன்னகைத்த அனு “என்ன ஹர்ஷா சார் இன்னைக்கு வந்த உடனே பொண்டாட்டிய தேடி ஓடி வந்திட்டீங்க” என்றாள்.
     “ஏன் நான் என் பொண்டாட்டிய தானே தேடி வந்தேன். அப்புறம் என்னடி” என்று ஹர்ஷா தன் அணைப்பை தளர்த்தி அவளை அழைத்து சென்று அமர்ந்து கொண்டான்.
     அவன் யோசனை முகத்தை பார்த்த அனு “என்னாச்சு ப்பா. எதை பத்தி இவ்ளோ டீப்பா திங்க் பண்றீங்க” என கேட்க
     “நீ காலைல சொன்னதை நினைச்சு தான் அனு. நீ சொன்னதை ஏன் செய்யக் கூடாதுனு தோனுது. அவங்க மனசை தெரிஞ்சே கஷ்டப்படுத்தறோமோன்னு ரொம்ப கில்டா இருக்கு. அதான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
     ஹர்ஷா தான் யோசித்ததை தீர்க்கமாக கூற அனு மகிழ்வுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
     அதன்பின் அதை தன் வீட்டு ஆட்களிடம் பகிர்ந்து அனைவரும் சேர்ந்து கிளம்பலாம் என அனைவரையும் கிளப்பி விட்டான் ஹர்ஷா. இன்னும் ஒரு வாரத்தில் திதி இருக்க அம்முவும் வந்திருக்க அவளையும் சேர்த்தே அழைத்து சென்றனர்.

Advertisement